அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வள்ளுவர் குறளை வையகமெல்லாம் பரவச் செய்வீர்!

சென்னை பி.29

திருவள்ளுவர் திருவுருவப்பட வெளியீட்டு விழா நேற்று மாலை 3 மணியளவில் தேனாம்பேட்டை காங்கிரஸ் பொருட்காட்சித் திறந்தவெளி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திரு.பி.என்.கோவிந்தசாமி குழுவினர் நாதஸ்வர இசையுடன் விழா துவங்கிற்று.

விழாவிற்குப் பேராசிரியர் டாக்டர் அ.சிதம்பரநாதன் எம்.ஏ., எம்.எல்.சி. தலைமை வகித்தார்.

டாக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள், விழாக்குழுவினரின் சார்பில் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில் தாம் என்றும் அடையாத மகிழ்ச்சியை இன்று அடைவதாகவும், இதற்குத் தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள், கட்சி வேறுபாடு இல்லாமல், திருவள்ளுவரின் பெயரால் ஒன்றுகூடி இருப்பதே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

தலைவர் முன்னுரையில் திருக்குறள் எத்துணைச் சிறப்புடையது என்பதையும் பிறநாட்டுப் பேரறிஞர்கள் திருக்குறளுக்கு எந்த வகையில் மரியாதை காட்டுகின்றார்கள் என்பதனையும் விளக்கிப் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில் திருவள்ளுவருக்கு உருவம் அமைத்துத் தந்த திரு.வேணுகோபால் (சர்மா) அவர்களைப் புகழ்ந்து பாராட்டினார்.

உலகறிந்துகொள்ளும் வாய்ப்பு கல்வி அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் திருவள்ளுவரை உலகம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்படத்திறப்பினால் ஏற்படுகிறது என்றும் திருவள்ளுவரைப் பின்பற்றுதல் வேண்டுமென்றும் குறிப்பிட்டு ஓவியரைப் புகழ்ந்து பாராட்டினார்.

அறிஞர் பெருமக்கள் பலர் அளித்த கருத்துத் தொகுப்பாகிய விழாச் சிறப்ப மலரினை வெளியிட்டுத் திரு.குன்றக்குடி அடிகளார் பேசுகையில், ஓவியரைப் பாராட்டியும், திருக்குறளை ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரைகட்டாயப் பாடமாக்க மத்தியப்பேரரசும், மாநில அரசும் முன்வருதல் வேண்டுமென்றும் திருக்குறளை உலகமொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து உலக நாடுகளில் அதன் சிறப்பும் உண்மையும், பயன்தரும் வகையில் அமைய மத்தியப்பேரரசு இதற்கெனப் பெரும் பொருள் ஒதுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அடுத்துப் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் திருக்குறள் சிறப்பு குறித்தும், தமிழின் பெருமை குறித்தும் அழகுபட விளக்கினார்.

பின், டாக்டர் மோனிகா பெல்டன் அம்மையார் பேசுகையில், திருவள்ளுவரை ஒத்த புலமை படைத்தவர்கள் இதுவரை உலகத்தில் தோன்றவில்லை என்றும், திருக்குறளின் மொழிபெயர்ப்பு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றும் அறிஞர் பெருமக்கள் இனி, திருத்திச் சிறப்பான முறையில் அமைத்து உலகுக்கு அளிக்க வேண்டுமென்றும் திருக்குறளின் மே“மையினை வெளிநாட்டுக்கும் போய்த் தான் பரப்பப் போவதாகவும் குறிப்பிட்டார்.

அறிவைப் பின்பற்ற வேண்டும்
அடுத்துத் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் திருவள்ளுவரின் அறிவுத் திறனைப் பாராட்டியும், மக்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் எடுத்துக்காட்டுகளுடன் பேசி, திருவள்ளுவருக்கு உருவம் அமைத்த ஓவியர் திரு.வேணுகோபால் (சர்மா) அவர்களையும் பாராட்டிப் பேசினார்.

பின் தோழர் கண்ணதாசன் அவர்கள் பேசுகையில் ஓவியரைப் பாராட்டியும் திருவள்ளுவர் வகுத்துக் காட்டிய அரசியல்தான் நமக்கு வேண்டும் என்றும், இப்பொழுது அது போன்ற அரசு இல்லையென்றும், வருங்காலத்தில் சிறப்பான அரசு அமைவதற்குத் திருவள்ளுவரின் துணைகொண்டு நாம் பெரிதும் முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்துத் தோழர் மு.கருணாநிதி எம்.எல்.ஏ. அவர்கள் பேசுகையில் ஓவியரைப் பாராட்டியும் திருவள்ளுவர் வாழ்ந்து காட்டிய இல்லற நெறியினை நாமும் பின்பற்றுதல் வேண்டுமென்றும் குறிப்பிட்டுப் பல குறள்களைச்சுட்டிக்காட்டித் தெளிவுபட விளக்கினார்.

திருக்குறள் உணர மூன்று வழிஇறுதியாக மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே அண்ணா அவர்கள் எழுந்து பேசினார்கள்.

அண்ணா அவர்கள் பேசுகையில் திருக்குறளின் மேன்மை பற்றியும் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் விடுமுறை நாள் ஒந்றினை அமைத்துக்கொடுத்தல் வேண்டும் என்றும், திருக்குறளில் உள்ள கருத்து மூன்று விதமாக இருப்பதால் அதில் திருவள்ளுவர் சிலவற்றை அறுதியிட்டு முடிவாகச் சொல்லியிருப்பதையும், “இþøச்செய்” என்று வேண்டிக்கொள்வதையும் “இதனால் இப்படிப்பட்ட நன்மை உண்டாகும். அதனால் அதைச் செய்” எ“நறும் மூன்று பிரிவாகக் காட்டியுள்ளதைப் புலவர்கள் வகைப்படுத்தித் தொகுத்து மக்களுக்கு அளித்தல் வேண்டுமென்றும், திருவள்ளுவரின் நெறியை அரசியலை அறியாத நாட்டினர் இப்பொழுது திருவள்ளுவர் காட்டிய உட்கருத்தை உணர்ந்து அவ்வகையில் முன்னேறி வருகிறார்கள் என்றும், மக்களின் வாழ்க்கை நிலையை, பண்பைக் கெடுத்த ஓர் இயக்கம் கூடாது என்பதனையும், நாம் எப்படி இருந்தவர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பதனையும், திருவள்ளுவர் காலத்தில் இல்லாத சாதிக்கொடுமை இப்பொழுது எப்படி வந்தது என்பதனை திருக்குறளுக்குப் பின்தோன்றிய சமய நூல்களால் கற்பனை அதிகம் கலந்தவைகளால் உண்மைப் பொருள் மறக்கப்பட்டு விட்டன. என்பதனையும் நாம் எண்ணி இருத்ததை இழந்த நாம் மீண்டும் அதை அடையப் பாடுபடுதல் வேண்டும். எல்லாம் இருக்கட்டும் என்று சொல்லும் நிலையை நீக்க வேண்டும். இதுதான் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்குத் திருக்குறளை ஆய்தறிதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

(நம்மாடு - 29.2.54
)