அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


“வரலாற்றுப் பட்டினத்தில் வறுமை வாழ்கிறது“

25.9.61 அன்று பொன்னேரி வட்டம் பழவேற்காட்டில் அண்ணா அவர்களுக்கு
மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழவேற்காட்டிலிருந்தும் அதைச் சூழ்ந்த பத்து மீனவர் குப்பங்களிலிருந்தும் வெள்ளம்போல் மக்கள் திரண்டு வந்து அண்ணா அவர்களை வரவேற்றனர்.

நெய்தல் நிலச் செழிப்பைக் கூறும் பழவேற்காட்டிற்கு அண்ணா வந்ததும் மீனவ நண்பர்கள், கழகக் கொடிகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் அண்ணாவை அமரவைத்து மேளவாத்தியங்களுடன் சுற்றிலும் படகுகள் சூழ்ந்துவரக் கோட்டைக் குப்பத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கோட்டைக் குப்பத்தில் கத்தி, சிலம்பம் மற்றும் புலிவேட விளையாட்டுகளுடன், அண்ணாவை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

கோட்டைக்குப்பம் மீனவப் பொதுமக்கள் சார்பில் திரு.நாராயண (செட்டியார்) அவர்கள், அண்ணாவுக்கு வரவேற்பு இதழ் வாசித்தளித்தார். பின்ர் அண்ணா அவர்களிடம் கோட்டைக் குப்பம் மீனவர் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.50 தரப்பட்டது.

அண்ணா பதில்

“கோட்டைக்குப்பம் மக்களாகிய நீங்கள் 10 ஆண்டுக்காலமாக என்னை எதிர்பார்த்திருந்ததாகத் தலைவர் கூறினார். நீங்கள் எனக்கு இப்பெரும வரவேற்பைத் தந்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.“

“காங்கிரசின் 14 ஆண்டுக்கால ஆட்சியில் உங்கள் வாழ்வு உயர்ந்ததா என்றால் இல்லை“.

“வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இப்பகுதி இன்று பாழடைந்து கிடக்கிறது. கடற்கரையோரப் பட்டினங்களில் செல்வ வளத்தை உயர்த்த வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் வற்புறுத்தியக் கொண்டேயிருக்கிறேன். காரணம் நிலம், சுரங்கம் ஆகிய வளங்களைக் காட்டிலும் கடல் வளம் அருமையானது. நிலத்திற்குத் தொல்லைப்பட்டு நீர் பாய்ச்சினால் அறுவடை கிடைக்கும், சுரங்கத்தை உயிரை விட்டுத் தோண்டினால் தான் பலன் கிடைக்கும். ஆனால், கடலிலே இயற்கையான மேகம் நீர் பெய்கிறது – வளமான மீனும் முத்தும் விளைகின்றன. ஆகவே கடல் தரும் வளத்தை அனுபவிக்க மீன்பிடித் துறைகளை விரிவுபடுத்த வேண்டும்.

மேல்நாடுகளைப் போன்று விசைப்படகுகளையும் அரசாங்கம் உங்களுக்கு வாங்கித் தந்தால் இன்னும் ஏராளமான ஆழ்கடல் மீன்களைப் பிடிக்கலாம். ஏனென்றால் மீன் வெறும் உணவு மட்டுமல்ல, அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்ல மருந்தாகும், ‘நியூபவுண்ட்லந்த்‘ என்னும் நாடு ‘காட்‘ மீனின் எண்ணெயைத் தயாரித்தே வாழவில்லையா? நாம் ஏன் ஷார்க் !சுறா) லிவர் ஆயில் தயாரித்து அனுப்பக் கூடாதா? இதைச் செய்ய காமராசர் அரசாங்கத்துக்கு வக்கில்லை – வகையில்லை.

ஊறுகாய்ப் பானைக்குப் போய்விடும்

“மீனவப் பெருஙகுடி மக்களாகிய உங்களிடம் நான் ஒரு உறுதியைத்தான் தரமுடியும். வரும் நவம்பரில் சென்னைச் சட்டமன்றத்தில் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட நகல் பற்றிய விவாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது உங்கள் பழவேற்காடு பற்றி ஆழ்கடல் அபிவிருத்தித் திட்டம், மீன்பிடித் திட்டம் பற்றி நான் நிச்சயம் குறிப்பிடுவேன். இதைச் செய்ய அதுபற்றிய விவாதம் சென்னைச் சட்டமன்றத்தில் நடைபெறும் போது, மீனவ நண்பர்களும் துணைக்கு வந்து கோட்டை முன் குரல்எழுப்பினால், அமைச்சர்கள் முன் உங்களைக் காட்டி இதைப் பற்றி வற்புறுத்த முடியும். இப்போது நீங்கள் தூங்கிவிட்டால், அடுத்த நூற்றாண்டுக்கு இத்திட்டம் ஊறுகாய்ப் பானைக்குச் சென்றுவிடும்.

“நண்பர்களே உங்கள் பரிதாப நிலையை அடுத்த பிப்ரவரியில் ஓட்டு கேட்க வரும் மாட்டுப் பெட்டிக்காரர்கள் உணர மாட்டார்கள். தக்க முறையில் அவர்களுக்கு உணர்த்த ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.“

“பழவேற்காடு ஊராட்சி மன்ற வரவேற்பு“

பின்னர்க் கோட்டைக்குப்பக்கத்திலிருந்து அண்ணா அவர்கள் ஊர்வலமாகப் பழவேற்காடு ஊராட்சி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அங்கே ஊராட்சி மன்றச் சார்பில் ப.வா. சுப்பிரமணியம் அவர்களும் உறுப்பினர்களும் கூடியிருந்த வரவேற்றார்கள். ஊராட்சி உறுப்பினர் பி.செல்வராஜ் வரவேற்பு மடல் வாசித்தளித்தார்.

அண்ணா அவர்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

“எழுச்சியுடன் வாழ்ந்து வீழ்ச்சியுற்ற நம் வரலாற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு பழவேற்காடு. ‘இங்கே குடிக்கக் கூட உவர்ப்பில்லாத நல்ல தண்ணீர் வசதி செய்யப்படவில்லை‘ என்று கூறியுள்ளீர்கள். இத்திட்டம் பற்றி நீங்கள் இதுவரை பன்முறை வற்புறுத்தியும் இந்த அரசின் சிவப்பு நாடாத் திட்டத்தால் உங்கள் கோரிக்கை தூங்கிக் கொண்டிருக்கிறது. நானும் உங்கள் ஊரின் குடிநீர் வசதி பற்றிக் குறிப்பிட்டு வற்புறுத்துவேன். எனக்கு வரவேற்பளித்த நல்ல உள்ளம் படைத்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.“

பொதுக்கூட்டம்

பின்னர்ப் பொதுக்கூட்ட மேடைக்கு அண்ணா அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு திரு.வா.சு.இராமதாஸ் தலைமையில் கூட்டம் துவங்கியது. இரவு 10 மணியாகியும் மக்கள் வெள்ளம் ஆர்வத்தோடு அமர்ந்திருந்தது.

“இப்போது பாரதபுத்திரர்கள் ஆட்சியில் அன்று இருந்ததைக் காட்டிலும் பல கோடி ரூபாய் கடன் என்றால், இந்தக் கடன்கார ஆட்சியில் இன்னும் எத்தனை நாள் இணைந்திருப்பது? ஆனால், இப்போது இருக்கும்தபால் தந்தி, இரயில் வசதிகளும் வெள்ளைக்காரன் ஏற்படுத்தியதுதானே. அவன் காலத்தில் கடன் பளு இருந்ததா? ஆகவே டில்லியின் பிணைப்பிலிருந்து நாம் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

இரா. சு.சு.மணி பேச்சு

“போலீஸ் அமைச்சர் பக்தவச்சலம் பச்சைப் புளுகை அவிழ்க்கிறார். ‘மின்சாரம் கிராமத்திற்கு வேண்டாம் என்று தடுக்கும் திருடர் கூட்டம் தி.மு.க. என்று சொல்கிறார். இப்படித் தி.மு.கழகம் சொல்லியிருக்குமா என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும்“.

பின்னர்ப் பேசிய சட்டக்கல்லூரித் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் கா.வேழவேந்தன், பி.ஏ.பேசுகையில் குறி்ப்பிட்டதாவது.

“நாம் இரு அரசுகளாலும் வரி செலுத்தி மொட்டையடிக்கப் படுகிறோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், செங்கோட்டையும் பல்வேறு வகையில் போட்டியிட்டு வரி போட்டு நம்மைச் சுரண்டுகின்றன. ஆனால் பாழடைந்து கிடக்கும் பழவேற்காட்டில் ஒரு இரசாயன உப்புத் தொழிலுக்கு வழியுண்டா? இவவ்ளவு வேண்டாம் – உப்புத் தண்ணீரைத்தானே நீங்கள் இவர்கள் ஆட்சியில் குடிக்க வேண்டியுள்ளது? ஆகவே நண்பர்களே! அதிகாரமே இல்லாத காமராசருக்கு அதிகாரம் பெற்றுத் தருவதே திராவிட நாட்டுத் தத்துவமாகும்.“

பின்னர்க் காஞ்சி சி.வி., இராசகோபால் அவர்கள் பேசுகையில் கூறியதாகவது –
“மாட்டுப் பெட்டிக்கு ஓட்டு போட்டு, “பனியா‘க்களுக்கு வால் பிடிக்க வேண்டியுள்ளது. ‘ஆகா‘ அப்படியா உள்ளது பார்க்கிறோம். பார்க்கிறோம் என்கிறார்கள்.“

“வடக்கே பாலை சோலையாகிறது. இங்குச் சோலையான பழவேற்காடு பாலையாகிறது இதை மாற்றிய தீரவேண்டும்.“

அண்ணா வழி முன்னேற்ற வழி

பின்னர்ச் செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர் சி.வி.எம்.அண்ணாமலை பேசுகையில் ‘அண்ணாவின் வழியே திராவிடத்தின் முன்னேற்ற வழி‘ என்று விளக்கிப் பேசினார்.

பின், அண்ணா அவர்கள் பேச எழுந்ததும், ஏராளமான மாலைகளும் கைத்தறியாடைகளும் அணிவிக்கப்பட்டன.

பழவைத் தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ.65 அளிக்கப்பட்டது.

ஆந்திரா எல்லைக்கருகில் உள்ள நக்கத்துரவு கிராமத்தைச் சேர்ந்த தி.மு.கழகத்தார் ரூ.34.34 அளித்தனர். மற்றும் பல தோழர்கள் நிதியளித்தனர்.

பின்னர் அண்ணா அவர்கள் பேசியதாவது –
எனக்குமுன் சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகள் நடத்தியது கண்டு எனக்குப் புல்லரிக்கிறது. உங்களைப் போன்ற மறவர் எனக்குத் துணையாக இருக்கும்போது எனக்கு வேறு என்ன குறை?

“படித்தவனும், பணக்காரனும், வெள்ளையன் காலத்திலும் நன்மை பெற்றனர். ஆனால் உங்களைப் போன்ற ஏழைப் பாட்டாளி மக்களுக்கு வழி பிறந்ததா?“

கோடிக்கணக்கிலே ஐந்தாண்டுத் திட்டத்தின் பெயரால் காங்கிரசு செலவழிக்கிறார்களாம். ஆனால் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்த 14 ஆண்டுக் காலத்தில் என்ன வாழ்க்கைத் தரம் உங்களுக்கு உயர்ந்தது?“

வறுமைவாழ் நகரம்

“நண்பர் வேழவேந்தன் கூறியபடி வளமார் வரலாற்றுப் பட்டினமான இதை வறுமைவாழ் நகரமாக ஆக்கிய பெருமை இந்தக் காந்தியவாதி களுக்கே உரியது“.

“அவர்களுக்கு மனமிருந்தால் இங்கே படகு கட்டும் தொழில் ஏற்படுத்தலாம். ஆழ்கடல் மீன்பிடித் துறைகளை ஏற்படுத்தலாம். கிளிஞ்சல்களைக் கொண்டு சிமெண்டுதொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். ஆனால் செய்தார்களா? டெல்லிக்கு மனமில்லை. சென்னை அரசுக்குச் செய்ய மார்க்கமில்லை. ஆகவே இந்த ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

இரவு 11.30 மணியளவில் திரு.பி.கே.அதாதுமணி, செங்கல்வராயன், குப்புசாமி, கோவிந்தன் ஆகிய கழகத் தோழர்கள் கூடியிருந்த விருந்தளித்து அண்ணாவுடன் இரவு 1.00 மணிவரை கழகப் பணிபற்றிக் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.

(நம்நாடு - 2.10.61)