அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வறுமை நீங்க திட்டம் தேவை

சென்னை 34 ஆவது வட்டத் தமிழ்வளர்ச்சி மன்றம் சார்பில் 16.5.60 இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசியதாவது:
இந்த வட்டத்தில் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதை ஓராண்டுக் காலமாக நல்ல முறையில் நடத்தி இன்று ஆண்டு விழா கொண்டாடும் நண்பர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்த வட்டாரத்தில் நல்ல பணியாற்றியவரும் இங்கே இருக்கின்ற ஆர்வமுற்ற கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் இந்த வட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றி வரும் இரா.சடகோபம் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற வகையில் நன்கொடையாக வாங்கிய சைக்கிள் வண்டியை என் மூலமாக அவருக்கு அளிக்கவேண்டுமென்று தெரிவித்துள்ளனர். இதற்காக நான் அவர்கள் அத்தனைப் பேரையும் பாராட்டுகிறேன். தோழர் சடகோபன் அவர்கள் இந்தச் சைக்கிள் வண்டியை வட்ட மக்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் பயந்படுத்துவாரென நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது நண்பர்கள் மாநகராட்சி மன்றத்தில் நல்ல பல பணிகளைச் செய்து காட்டி மக்களுடைய நல்ல நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இதற்கு ஒரு முக்கியமான சான்று அவர்களைப் பற்றி மற்றவர்கள் குறை சொல்லிப் பேசுவதிலிருந்து தெரிகிறது.

மாற்றார்கள் கண்டு மருளத்தக்க வகையில்...
அப்படிப்பட்ட வகையிலும் மாற்றார்கள் கண்டு மருளத்தக்க வகையிலும் மக்கள் பார்த்து மகிழத்தக்க வகையிலும், பெரிய மதிப்போடு அவர்கள் நல்ல தொண்டாற்றுகிறார்கள். இவர்களிடத்தில் நல்ல ஆர்வமும், நன்றி காட்டுகிற தன்மையும், நிச்சயமாக இருக்கின்றன. ஆனால், அவர்களில் பல பேர்கள் இளைஞர்கள். மேயராகப் பணியாற்றுகின்ற அப்துல்காதர் அவர்களும் இளைஞராக இருக்கின்ற காரணத்தால் செயலாற்றுக்கின்ற திறமையும் பெற்றிருக்கின்றார். திறமையுடன் செயலாற்றுகின்ற வகையில் மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். ஆகையினால், அவர்களுக்கு ஓரளவுக்கு வருத்த மேற்படுகிறது. இவர்களைக் கேலி செய்வது மட்டுமல்லாமல் கழகத்திலுள்ள எல்லா நண்பர்களையும் பொதுவாகக் கழகத்தையும் தாறுமாறாகப் பேசுகிறார்கள் என்பதில் ஆத்திரம் அடைகிறார்கள்.

இழிவுக்கு இழிவா?
சில இடங்களில் நாமும் திருப்பிப் பேசிப் பதில் தரவேண்டும் என்ற எண்ணம் அவர்களில் பல பேருக்கு ஏற்படுவதாகவும், அதை நான் தடுப்பதாகவும் எனது நண்பர் வில்வம் அவர்கள் எடுத்துச் சொன்னது மிகவும் உண்மை. நான் கட்டுப்படுத்துவதும், தடுத்து நிறுத்துவதும் எனக்கு வருத்தம் தரவில்லை என்பது பொருளல்ல, அவர்களும் இழிவாகப் பேசி நாமும் அதே மொழியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அதற்குப் பிறகு அரசியல் மேடை நாற்றம் அடிக்கிற இடமாக மாறிவிடும். இதில் யாராவது ஒருவர் தாழ்ந்து போகவேண்டும் தாங்கிக்கொள்ள வேண்டும். அப்படி தாங்கிக் கொள்பவர்களாக தாழ்ந்து போகிறவர்களாக நாம் இருந்தால்தான் நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியத்தில் வெற்றி பெறமுடியும். ஆகையினால், நம்முடைய கழகத் தோழர்கள் மனமுடைந்து போகக் கூடாது. திருப்பித் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாமும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஆகவே நாம், நாட்டு மக்கள் பார்த்துப் பாராட்டுகின்ற தன்மையில், மற்றவர்கள் பார்த்துப் பாடம் பெறத்தக்க வகையில் காரியமாற்ற வேண்டும்.

ஏழைகளுக்குப் பலன் பெற்றுத் தருக
நண்பர் சடகோபன் அவர்கள் இந்த ஆட்சியாளர்கள் செய்கிற கொடுமைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி இந்த வட்டத்து மக்கள் குறைகளைப் போக்க இவர் என்னென்ன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை விரிவாகச் சொன்னார்.

பக்தர்கள் ஒவ்வொரு கோவிலாகச் சென்று கற்பூரத்தைக் கொளுத்தி அந்தந்தக் கடவுள்களை வேண்டி, வேண்டிய வரத்தைக் கொஞ்சம் பெறுகின்றதைப் போல நண்பர் சடகோபனும் ஒவ்வொரு அதிகாரிகளிடத்திலேயும் சென்று வட்டத்தின் குறைகளை எடுத்துச் சொல்லிக் குறைகளைப் போக்க முயலுகிறார். அந்த அளவுக்கு ஏழை மக்களின் நலன்களுக்காக அவர் எத்தனைப் படிக்கட்டுகள் ஏறி இறங்கியிருக்கக் கூடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டியிருக்கிறது. எனவே இவர்கள் ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி இன்னும் பல பலன்களை ஏழை மக்களுக்குப் பெற்றுத்தர வேண்டுமென்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

நான் இங்கே வந்து கொண்டிருக்கையில் இந்தப் பகுதியில் இருந்த வீடுகளெல்லாம் இரண்டு அடுக்குமாடி, மூன்றடுக்கு மாடிகளாக இருந்ததைப் பார்த்து இந்த வட்டம் சீமான்கள் நிறைந்த பகுதி போலும் என்று முதலில் நான் எண்ணிக் கொண்டேன். ஆனால், இங்கே நண்பர் சடகோபன் பேசுகின்ற போது இந்த வட்டாரத்தில் 4000 குடிசைகள் இருக்கின்றன என்று எடுத்துச் சொன்னார். சென்னை மாநிலத்தின் தலைநகராகிய சென்னை நகரம்தான் அழகான நகரம் என்றும், இந்த அளவிலே அழகான நகரம் உலகத்தில் இல்லை என்றும், இதைப்போல நீண்ட கடற்கரை வேறு நகரத்தில் இல்லையென்றும், ஒரு புறத்தில் பார்த்தால் கண்ணைக் கவரத்தக்க, பார்த்தால் பாராட்டத்தக்க மற்றவர்கள் பார்த்துப் பரவசப்படத்தக்க அழகு சாலைகளும் இருக்கின்றன-என்றும், பெருந்தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் இந்த வட்டத்தில் மட்டும் 4000 குடிசைகள் இருக்கின்றன. இது சென்னை நகரத்தின் எழிலுக்கும் பெருமைக்கும் உகந்ததல்ல.

நல்ல திட்டம் நாட்டுக்குத் தேவை!
காங்கிரசு ஆட்சியாளர்கள் நான் சொல்லுகிற இந்த வாசகத்தைக் கேட்டவுடன் “அண்ணாதுரை சொல்லுகிறார். அதனால்தான் நாங்கள் குடிசைகளை அப்புறப்படுத்துகிறோம் என்று சொல்லுவார்கள். ஆனால், அதனை நான் இந்த நிலைமைக்காகச் சொல்லவில்லை.

விரலில் சொறி, சிரங்கு ஏற்பட்டால் விரலை வெட்டிவிட வேண்டுமென்பதல்ல, சொறி சிரங்கு போக உங்களுக்கு மருந்து தர வேண்டும். அதைப்போல இந்தப் பகுதியில் வாழும் மக்களின் தாழ்நிலையை-வறுமை நிலையைப் போகுவதற்கு நல்ல திட்டம் நாட்டுக்குத் தேவை.

குடிசைகளில் சில பேரும் மாடி வீடுகளில் சிலபேரும் இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு மாடி வீட்டில்தான் இருக்க விருப்பம் என்றும் இந்தக் குடிசையில் பிறந்தவர்களுக்கு குடிசையில் இருக்கத்தான் விருப்பம் என்றும் பொருளல்ல.

போக மாட்டோம் என்பது சரியா?
குடிசைகளை அகற்றினால் அவர்களுக்கு வேறு இடங்களில் வீடு கட்டித் தாருங்கள்-என்று நாம் சொல்லுகிறோம். வேறு இடங்களும் தருகிறோம். சென்னைக்கு 8 மைலுக்கு அப்பால் புதிதாக வீடுகள் கட்டியிருக்கிறோம். அங்கே போய் இருக்கட்டும் என்று அவர்கள் தாராளமாகச் சொல்லுகிறார்கள்.

இதை அந்த இடத்தில் பிறந்தவர்கள் என்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்ளும் கனம் கக்கன் சொல்லுகிறார். அரிசன மக்கள் முன்னேற்றத்தில்தான் எனக்கு அக்கறை அதிகம் என்று சொல்லும் அமைச்சர் வெங்கட்ராமன் சொல்லுகிறார். முதலமைச்சாராக இருக்கும் காமராசரும் சொல்லுகிறார். நகரத்திற்கு நடுவிலே அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் குடிசைகளை நாங்கள் அப்புறப்படுத்திவிட்டு அவர்களுக்குத் தண்டையார்பேட்டை, மாதவரம், விருகம்பாக்கம், ஆலந்தூர், தாம்பரம் போன்ற இடங்களில் வீடுகள் கட்டித் தருகிறோம். அங்கே போய் இருக்கட்டும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். “போக மாட்டோம்” என்று இவர்கள் சொல்லுகிறார்கள். இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறார்களே, இது சரியா? என்று அவர்கள் ஆயாசப்படுகிறார்கள்.

இது நடக்கிற காரியமல்ல!
இப்பொழுது போலீசாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குடிசைகளைப் பிரித்தெறிகிறார்கள். குடிசைகளைப் பிரிக்கிற நேரத்தில் அதிகாரிகளும், அமைச்சர்களும், பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் அந்தக் கொடுமை தெரியவரும். குடிசையில் வாழுகிற ஏழை மக்கள் வைத்துக் கொண்டிருக்கின்ற தட்டு முட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்து வெளியில் எறிந்து விட்டுப் போகச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? பணக்காரர்கள் ஒரு அறையில் காற்று வராவிட்டால் வேறு ஒரு அறையில் போய்ச் சன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு சுகமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் போவதற்கு இடமில்லை. நாங்கள்தான் இடம் கொடுக்கிறோமே, தண்டையார்பேட்டைக்குப் பக்கத்தில் ஏன் அந்த இடத்தில் இவர்கள் குடிசை போட்டுக் கொண்டு இருப்பதுதானே என்கிறார்கள்.

நான் உதாரணத்திற்குச் சொல்லுவேன், சென்னை நகரத்தின் மையம் என்று சொல்லப்படும் கொத்தவால்சாவடியில் கைவண்டி இழுப்பவர்களுக்கும் கூடை சுமப்பவர்களுக்கும் கூலி வேலை செய்பவர்களுக்கும் தண்டையார் பேட்டையில் இடம் கொடுப்பதனால் எவர்தான் அங்கேபோய் இருப்பார்கள். இது நடக்கிற காரியமல்ல.

மக்களின் கதி என்னாவது?
ஏதோ தமது அமைச்சர்களெல்லாம் எண்ணிக்கொண்டிருப்பது லூர்தம்மையார் எங்கோ இருந்து கொண்டு கோட்டைக்கு வரவில்லையா என்பதுதான். அவர்கள் கோட்டைக்கு வருவதென்றால் வீட்டைவிட்டு அவர்கள் வெளியே வந்ததும் மெருகு குலையாத கார் கதவைத் திறந்து கொண்டு டிரைவர் நிற்கிறார். காரில் ஏறியதும் டிரைவர் “போகலாமா”? என்று பேச்சால் அல்ல-சைகையால் கேட்க இவர்களும் “போகலாம்” என்று பேச்சால் அல்ல-சைகையால் சொல்லுகிறார்கள். பிறகு கோட்டைக்கு வருகிறார்கள். அதைப் போல கூலிவேலை செய்கிற மக்கள் எப்படி வருவார்கள். அவர்கள் பஸ்களில் வந்தாலே அவர்களுடைய கூலியில் பாதிபோய்விடுமே. பிறகு எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்?

எனவே, நம்முடைய ஆட்சியாளர்கள் ஒரு பெரிய திட்டத்தை ஏற்க வேண்டும். சென்னை நகரத்தை அழகுபடுத்தக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், இங்குள்ள குடிசைகள் என்னாவது? இந்த மக்களின் கதி என்னாவது?

எந்தெந்த இடத்தில் தொழில் நடக்கிறதோ அந்தந்த இடங்களில் வீட்டு வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.

மாநகராட்சி கையில் பொறுப்பை விடுங்கள்!
யாராவது ஒருவர் ஆலை ஆரம்பிக்கிறார் என்றால் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அங்கேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஒரு குறிப்பு சட்டப் பிரிவில் இருந்திருக்குமேயானால், தொழில் நடக்கிற இடத்தைச் சுற்றி நம்முடைய தோழர்கள் குடியிருக்க வசதி ஏற்பட்டிருக்கும். அப்படி செய்யாததால் எந்த இடத்தில் பார்த்தாலும் குடிசைகள் இருக்கின்றன. இந்த இடங்களைச் சர்க்கார் விலைக்கு வாங்கி ஏழை மக்களுக்கு வீடுகட்டிக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது நகரத்தில் சில காலி இடங்கள் “சேட்” டுகளுக்கும், சில தனிப்பட்டவர்களுக்கும், கலெக்டர் நிர்வாகத்திலும் இருக்கின்றன.

இதனையெல்லாம் சர்க்கார் விலைக்கு வாங்கிக் குடியிருப்புக்கு வசதி செய்ய இயலாவிட்டால் மாநகராட்சிக்காவது இந்த அதிகாரத்தைக் கொடுத்து அதன் மூலமாகக் காலி இடங்களையெல்லாம் கைப்பற்றினால்தான் இந்தக் குடிசைப் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல பரிகாரம் கிடைக்கும். இதை ஆட்சியாளர்கள் செய்ய முன் வரவேண்டும்.

அவர்கள் பெண்களல்ல-சீமாட்டிகள்!
இந்த வட்டத்தில் மட்டும் 4000 குடிசை வாழ் மக்கள் இருக்கிறார்களென்றால், இவர்கள் அத்தனைப் பேரும் இங்கேயே பிறந்து வளர்தவர்களல்ல, பெரும்பாலோர் கிராமத்திலிருந்து இங்கே பிழைப்பைத் தேடி வந்தவர்கள். கிராமத்தில் விவசாயம் செய்ய வசதி இல்லாமல் செய்வதற்குத் தொழிலும் இல்லாததால் இங்கு வந்தவர்கள். நீங்கள் சென்னையில் கடற்கரையில் வேர்க்கடலை, பட்டாணி விற்பவர்களைப் பார்த்து நீங்கள் எந்த ஊர்? என்று கேட்டால், இந்த உண்மை தெரியவரும். அவர்கள் பெரும்பாலோர் தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் இன்னும் சிலபேர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றும் பலர் மதுரை மாவட்ட்ததைச் சேர்ந்தவர்கள், அதே போல வடஆற்காடு, சேலம் மாவட்டத்தில் இருந்தும் இங்கு வந்திருக்கிறார்கள்.

காங்கிரசு அமைச்சர்கள் பேசுகின்ற கூட்டத்திற்குத் தாய்மார்கள் வரமாட்டார்கள். அப்படி வந்திருப்பவர்கள் சிலபேர் மேடையில் இருப்பார்கள். அவர்கள் உருவத்தில்தான் பெண்களே தவிர உள்ளத்தில் ஆண்களைவிட அதிக அலட்சிய மனப்பான்மை படைத்த நாகரிக உணர்ச்சியைப் பெற்றவர்கள், ஏனென்றால், அவர்கள் சீமாட்டிகள்.

டில்லியில்தான் போய் முடிகிறது
நமது கூட்டத்திற்கு இங்கே வந்திருக்கிற தாய்மார்களெல்லாம் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்களிடத்தில் இருப்பதெல்லாம் உழைப்பு, நேர்மை, நாணயம், அவர்கள் வட்டிப் பணத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. வாடகைப் பணத்தை நம்பிப் பிழைப்பவர்களல்ல. இப்படிப்பட்டவர்கள் ஏன் நகரத்திற்கு வந்தார்கள்? கிராமத்தில் தொழில் இல்லை. ஆகையினால் பிழைக்க மார்க்கம் இல்லை, எனவே இங்கு வந்தார்கள்.

தொழிலை யார் ஏற்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் தானே ஏற்படுத்த வேண்டும்? ஏன் ஏற்படுத்தவில்லையென்றால் தொழிற்சாலை ஏற்படுத்துகிற அதிகாரம் இவர்களுக்கு இல்லை. ஆகையினால் தான் குடிசையில் ஆரம்பித்தாலும், டில்லியில்தான் போய் முடிகிறது. இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாததாலே இவர்களால் எதையும் செய்யமுடியவில்லை. இந்தத் தடை நீக்கப்படவேண்டும்.

மரப்பொந்தினுள் வசித்துவரும் சின்னஞ்சிறிய பறவை இரைதேடுவதற்காக வெளியே சென்றிருக்கிறது. அந்தச் சமயத்தில் ஒரு பெரிய பறவை அந்தப் பொந்தினுள் புகுந்து உட்கார்ந்து கொண்டு தனது நீண்ட மூக்கை நீட்டிக் கொண்டிருக்கிறது. இரை தேடிப்போன பறவை திரும்பிக் கூட்டுக்குள் நுழையும்போது அந்தப் பெரிய பறவை தனது நீண்ட மூக்கினால் சிறிய பறவையைக் குத்தி உனக்கு இங்கே இடமில்லை என்பதைப் போல குத்தி விரட்டுகிறது. அந்தச் சிறிய பறவை கீச், கீச் எனச் கூச்சலிட்டு அங்கேயே வட்டமிடும்.

இதற்கு என்ன பொருள்? நான் மூக்கினாலே மரத்தைக் குடைந்து இந்தப் பொந்திலே வாழ்ந்து வருகிறேன். இது என்னுடைய இடம், நான் இரை தேடத்தான் போயிருந்தேன். அந்தக் காரணத்தால் இந்த இடம் உனக்குச் சொந்தமாகி விட்டது என்பதைப் போல் கத்தி அது வட்டமிடுகிறது. எப்படியிருந்தாலும் இப்பொழுது நான் இங்கே இருக்கிறேன். உனக்கு இடமில்லை போ என்கிறது அந்தப் பெரிய பறவை!

சிறிய பறவை-தமிழ்ப் பறவை
நான் சொன்ன இந்தக் குருவிக் காட்சியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு சிறிய பறவை-தமிழ்ப்பறவை. உள்ளே இருப்பது ஏக பாரதம்-ஏக இந்தியா என்ற பெரிய பறவை. இந்தப் பெரிய பறவை தமிழ்ப் பறவையைப் பார்த்து, இந்தப் பெரியமரத்தில் எவ்வளவோ கிளைகள் இருக்கின்றனவே அதில் எங்காவது போய் உட்கார்ந்துகொள் என்கிறது.

இந்தப் பெரிய ஏகாதிபத்தியம் நம்முடைய வாழ்விற்கு இடமளிக்காமல் இருக்கிறது. சிறிய பறவையைப் போல நாம் சப்தம் போடுகிறோம்.

அவர்கள் சொல்லுகிறார்கள், எப்பொழுது பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கிறார்களே, உலகத்தில் நடப்பவைகளைப் பேசமாட்டோம் என்கிறார்களே-என்று! இதைப் பேசுகிற நேரத்தில் அதைப் பேசச் சொன்னாலும் பேச முடியும் அது நமக்குத் தெரியாது என்பதல்ல, தேவையில்லை என்பதால்தான், நாம் குருஷ்சேவ் 1935 இல் எப்படி இருந்தார். 1945 இல், 1950 இல், 1955 இல் எப்படி இருந்தார். 1960 இல் எப்படி இருக்கிறார். 1965 இல் எப்படி இருப்பார் என்பதையெல்லாம் நம்மால் சொல்லமுடியும்.

மூன்றும் இருந்தால் தொழில் நடக்கும்!
ஆனால், இப்பொழுது எங்களுக்கென்று ஒன்றும் இல்லை. எங்களைக் காப்பாற்றத் தக்க அதிகாரம் வைத்துக்கொண்டிருக்கிற அமைச்சர்கள் இன்றைய தினம் இங்கே இல்லை! மேலும் இங்குத் தொழில் நடத்த வேண்டுமென்றால் பெரும் பணம் வேண்டும். இரண்டாவதாக மூலப்பொருள் வேண்டும். மூன்றாவதாக மூலப்பொருள்களை வைத்துக்கொண்டு பெரிய அளவில் பணத்தைப் போட்டுத் தொழில் ஆரம்பித்தால் அதைச்சரியாக நடத்துவதற்கு இயந்திரம் வேண்டும். இந்த மூன்றும் இருந்தால்தான் தொழில் நடத்த முடியும்.

உரலில் நெல் குத்துவதற்கு என்னென்ன வேண்டும்? நெல், வேண்டும், உலக்கையும் உரலும் வேண்டும் அத்துடன் கையில் வலிவும் வேண்டும்.

நெல் தான் மூலப்பொருள், உரல் உலக்கைதான் இயந்திரம் வலிவுதான் பணம்.

நெல் இங்கே விலைகிறது, ஆனால் அது போகுமிடம் வேறாக இருக்கிறது. இயந்திரம் வாங்கும் அதிகாரம் இந்த அமைச்சர்களுக்கு இல்லை. மூலதனம் போட பணம் இல்லை காரணம் பெரிய பேங்குகளெல்லாம் வடக்கே இருக்கின்றன, அவர்கள் தாரளமாகக் கடன் கொடுக்கிறார்கள்.

தொழில் தொடங்க வக்கில்லை-வழியில்லை!
ஆகவே, முதலில் உரலும், உலக்கையும் வாங்கும் அதிகாரம் நமக்கு வேண்டும். அப்பொழுதுதான் நமக்குக் கிடைக்கும். கனிப்பொருள்களைக் கொண்டு தொழில் ஆரம்பிக்க முடியும்.

நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரியை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். சேலத்து இரும்பைப் பயன்படுத்தலாம்.

இப்பொழுது காகிதத் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க இந்தச் சர்க்காருக்கு வக்கில்லை. வழியில்லை. இதைத் தனிப்பட்ட சேஷசாயி கம்பெனிக்கு விட்டுவிட்டார்கள். இதைச் சட்டசபையிலே அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஆகவே இதற்கெல்லாம் பரிகாரமானதுதான் திராவிட நாடு திராவிடருக்கே என்ற திட்டம் அமைச்சர்கள் நம்மைத் தாக்கிப் பேசுகிறார்கள் என்று தோழர்கள் வருத்தப்பட்டார்கள். நமது சென்னை அமைச்சர்களிடத்தில் எனக்கிருக்கின்ற கோபத்தைவிடப் பரிதாப உணர்ச்சிதான் அதிகம்.

அதோ பார் இதோ பார் என்றால்?
இதைத் தாய்மார்களிடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மார்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தேர் திருவிழா பார்க்கச் செல்வார்கள். குழந்தைகள் அங்கே விற்கப்படும் கிலுகிலுப்பை கேட்கும். ஆனால், தாய்மார்களிடம் காசு இருக்காது. அதனால் அந்தத் தாய் அந்தக் குழந்தையின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்கு அந்தக் குழந்தையிடம் அதோ பார் தேர் என்று சொல்லுவார்கள். அந்தக் குழந்தை மீண்டும் பிடிவாதம் பிடித்தால் பக்கத்தில் இருப்பவர்கள், என்னம்மா குழந்தை அழுகிறதே, ஒரு கிலுகிலுப்பைதான் வாங்கி கொடுக்கக் கூடாதா என“பார்கள்?

பணம் இருந்தால் அப்பொழுதே அதனை வாங்கித் தரும் தாய்மார்கள் அப்பொழுதே அதனைக் குழந்தை உடைத்து விட்டாலும் சலித்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் பணம் இல்லை, முந்தானையில் முடிச்சு இல்லை. அந்த நேரத்தில் பக்கத்தில் கணவன் இருந்தால் போயும் போயும் இந்தப்பிள்ளையைப் பெற்றாயே என்பான். உடனே அந்தத் தாய் போயும் போயும் உங்களைத் தேர்ந்தெடுத்தேனே என்பார்கள். குழந்தை அழ ஆரம்பித்துக் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும்.

குப்பியை விட்டு சுப்பியிடம் தருகிறார்
அதைப்போல், குழந்தைகளாகிய நமது கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்காகக் காமராசர் அதோபார் பக்ராநங்கல், இதோ பிலாய், ரூர்கேலா என்று காண்பிக்கிறார்.

இப்படி இவர்கள் நடந்து கொள்ளும் அளவுக்குப் பணம் இல்லையா என்றால் இருக்கிறது, அதை வீட்டுக்காரியாகிய குப்பியிடம் கொடுக்காமல் கோடி வீட்டுச் சுப்பியிடம் கொடுத்து வருகிறார்கள்? இதைப் புத்திசாலிப் பிள்ளையாக இருந்தால் அம்மாவிடம் போய்ப் பணத்தையெல்லாம் கோடி வீட்டு சுப்பியிடம் அப்பா கொடுத்துவிடுகிறார் என்று சொல்லும். உடனே தாயும் கணவனைப் பார்த்து, இருந்தால் என்னோடு இருங்கள், இல்லையேல் அவளோடு வாழுங்கள் என்பார்கள்.

அதைப்போலத்தான் காமராசர் குப்பியைப் பட்டினிப் போட்டுவிட்டு மத்தியச் சர்க்காராகிய சுப்பியிடம் வரிப்பணத்தையெல்லாம் தந்துவிடுகிறார். இதைத்தான் நாம் வேண்டாம் என்கிறோம்.
நாம் இப்பொழுது உலகத்தின் கவனத்தை ஈர்த்து உள்ளோம். காரணம் மாநகராட்சி மன்றம் நமது கையில் இருப்பதுதான் இதனால் அடுத்த தேர்தலில் நாம் எத்தனை பேர் சட்டசபைக்கு வருகிறோம் என்பதை அக்கறையோடு உலகநாடு கவனிக்கும்.

வியர்வை சிந்தி வெற்றி பெற வேண்டும்!
நாம் ஆரம்பத்தில் இவ்வளவு வளர்ச்சியை அடைவோம் என்று எண்ணியதில்லை. நமது கழகம் இளைஞர்கள் நிரம்பியது. இவர்கள் எவ்வளவு திறமையாகப் பணியாற்றுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் ஆத்திரத்திற்கும் ஆட்படுவார்கள். எனக்கே கூட சில நேரங்களில் கவலை ஏற்படுவதுண்டு. ஆனால், நமது தோழர்கள் வாலிபப் பருவத்திலும் அளவு மீறிய பொறுமையைக் கையாளுகிறார்கள். அதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கே 45 வயதுக்குமேல்தான் இந்தப் பொறுமை ஏற்பட்டது. எனக்கு நாளுக்கு நாள் இந்த இலட்சியம் வளர்ந்து கொண்டே வருகிறது நாம் இரத்தம் சிந்தாமல் வியர்வை சிந்தியே போராட்டம் இல்லாமல் அறிவின் துணைகொண்டு மக்களின் சத்தியாக்கிரக உணர்ச்சியினால் நமது இலட்சியத்தை அடையவேண“டும். இதற்கு நீங்கள் பெரிதும் ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 18,19.5.60)