அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வழக்கு மன்றத்தில் - அறிஞர் அண்ணா!

தி.மு.க. தலைவர்கள் ஐவர்களின் வழக்கு, நேற்று நான்காவது நாளாக நடந்தது, தலைவர்கள் ஐவரும் தங்கள் வாக்கு மூலங்களை வழக்கு மன்றத்தில் தொடுத்தனர்.

அந்த வாக்குமூலங்களில் கட்சிக் கொள்கைகளைத் தெளிவாக விளக்கி, செய்யப்பட்ட போராட்டங்களின் நோக்கங்கள் பற்றி விளக்கங்கள் தந்து, தாங்கள் நியாயப்படி குற்றவாளிகள் அல்லர் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

வாக்கு மூலங்கள் கொடுக்கப்பட்ட பொழுது, தலைவர்களை மாஜிஸ்திரேட் சில கேள்விகள் கேட்டார். தலைவர்களும் அதற்குப் பதிலளித்து, குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.

தோழர் அண்ணாதுரை அவர்கள் தன்னுடைய வாக்கு மூலத்தைச் சமர்ப்பித்த பிறகு, மாஜிஸ்திரேட் கீழ்க்கண்டவாறு கேள்விகள் கேட்டார்.

மாஜிஸ்திரேட் – வாக்குமூலத்தின் நோக்கம் வேண்டு மென்பதற்காகத்தான். ஆனால், தாங்கள் எனக்குச் சம்பந்த மில்லாததையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அண்ணாதுரை – நாட்டிற்கு என்னுடைய வாக்குமூலம் தெரிய வேண்டும்.

மாஜிஸ்திரேட் – என்னுடைய பொறுப்பு, குற்றம், செய்யப்பட்டதா இல்லையா என்பதுதான். மற்றவை பற்றி எனக்கு ஒன்றும் சம்பந்தமில்லை.

பிறகு, அண்ணாதுரை அவர்களை மாஜிஸ்திரேட் சில கேள்விகள் கேட்டார்.

மாஜிஸ்திரேட் – ஜூலை 13இல் செயற்குழுக் கூட்டம் இருந்ததா?

அண்ணாதுரை ஆம்.

மாஜிஸ்திரேட் – அந்தச் சமயத்தில் மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

அண்ணாதுரை – இரண்டாவது, மூன்றாவது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாஜிஸ்திரேட் டால்மியாபுரம் தூத்துக்குடி, பேசின்பிரிட்ஜ் முதலிய இடங்களில் ரயில்களை நிறுத்தியதும், தியாகராய நகரில் ஊர்வலம் உங்களின் தூண்டுதலின்படி நடந்ததுவென்று சாட்சிகள் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள்.

அண்ணாதுரை – அத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

மாஜிஸ்திரேட் – நான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைக் பற்றிக் கேட்கவில்லை, ரயில்கள் நிறுத்தப்பட்டது. 13ந்தேதி செயற்குழுவின் தீர்மானங்களின்படிதான் என்பதை ஒத்துக் கொள்கிறீரா என்று கேட்கிறேன்.

அண்ணாதுரை – ஆம்.

மாஜிஸ்திரேட் – அவைகள் தீர்மானங்களின் படி நிகழ்ந்தவையே.

அண்ணாதுரை – ஆம்.

மாஜிஸ்திரேட் – தியாகராயநகர் ஊர்வலம் பற்றி.

அண்ணாதுரை – அவைகள் இயற்கையாக விளைந்தவை, தீர்மானங்களின் பலன் அல்ல, அங்கு என்ன நடந்தது என்பது எனக்கத் தெரியாது.

மாஜிஸ்திரேட் – தாங்களோ, செயற்குழுவோ – ஊர்வலம் செல்வதை விரும்பவில்லை.

அண்ணாதுரை – இல்லை, செயற்குழு, மறியல் செய்யும்படி மட்டும்தான் கேட்டுக் கொண்டது.

மாஜிஸ்திரேட் – தாங்கள், அவர்களை நகர போலீஸ் விதித்திருக்கம் 41-வது சட்டத்தை மீறச் சொன்னீர்களா, என்பதை அறிய விரும்புகிறேன்.

அண்ணாதுரை – அந்தக் கேள்விக்கே இடமில்லை மறியலைப் பற்றி மட்டுமே நாங்கள் சிந்தித்தோம், நாங்கள் போலீஸ் உத்தரவு இருக்குமென்று நினைக்கவில்லை. எனவே, அதை மீறுவது பற்றியும் சிந்திக்கவேயில்லை.

மாஜிஸ்திரேட் – ஊர்வலங்களுக்கு தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தலைமை வகித்துச் சென்றது, தீர்மானத்தின் படி என்று சொல்கிறீர்களோ?

அண்ணாதுரை – அது அப்படி இருக்க முடியாது.

மாஜிஸ்திரேட் – 41ஆவது சட்டம் அமுலில் இருந்ததைத் தாங்கள் அறிவீரா?

அண்ணாதுரை – உண்மையில், நான் அறியேன். செயற்குழு ஜூலை 8இல் நடந்த வேண்டிய ஊர்வலங்கள் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றியது. அதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், ஊர்வலம் நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். நாங்கள் 13ஆம் தேதியே கைது செய்யப்பட்படியால் 14ந்தேதி என்ன நடந்தது என்பது, எங்களுக்குத் தெரியாது.

மாஜிஸ்திரேட் – நீங்கள் கைதான உடனோ அல்லது சற்றுப் பிறகோ – நீங்கள் யோசனைகள் சொன்னதாகத் தெரிகிறதே.

அண்ணாதுரை – நான் வாயால் சொன்னவை, அவற்றை எழுத்து மூலமாக மாற்றினார்கள்.

மாஜிஸ்திரேட் – அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சரியானவையா?

அண்ணாதுரை – ஆம், கருத்துக்கள் நான் சொன்னவையே ஆனால், அத்தனை வார்த்தைகளில் சொல்லவில்லை.

(நம்நாடு - 12-8-1953)