உழைப்பாளர் கட்சித் தலைவர்
தோழர் எஸ்.எஸ். ராமசாமி அவர்களின் அறிக்கை கண்டு மிகமிக
அகமிக மகிழ்ந்தேன். கடந்த பொதுத் தேர்தலின் போது, காங்கிரஸ்
பாசத்தை முறியடித்துக் காட்டியப் பெருமைக்குரியதாக விளங்கிய
உழைப்பாளர் கட்சியைத் செயலற்றதாக்கிவிட, சில காங்கிரஸ் தலைவர்கள்
தீட்டிய நயவஞ்சகத் திட்டம், இந்த அறிக்கையால் தவிடு பொடியாகிறது.
தோழர், எஸ்.எஸ்.ராமசாமி ‘உழைப்பாளர் கட்சி, காங்கிரஸ் சர்வாதிகாரத்தைச்
சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் – எதிர்த்துப் போராடும்,
என்று உறுதி அளித்திருப்பது கண்டு, திராவிட முன்னேற்றக்
கழகம் மகிழ்ச்சி அடைவது போலவே, எல்லா முற்போக்குக் கட்சிகளும்
களிப்புறும் என்பது திண்ணம்.
விருத்தாசலத்தில் தேர்தல்
நடைபெற இருக்கும் இந்தச் சமயத்தில் இந்த விளக்க அறிக்கை
வெளிவந்திருப்பது, காங்கிரசை முறியடிக்கப் பணியாற்றும் எல்லா
ஜனநாயகவாதிகளுக்கம் புதியதோர் நம்பிக்கையும், ஆர்வத்தையும்
தரும் – பொது மக்களுக்குப் பேரார்வம் பிறக்கும் என்பது நிச்சயம்.
திராவிடத்தைத் தத்தளிக்கச்
செய்யும் அக்கிரமங்கள் சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்றது,
நேர்மை உள்ளம் படைத்த எவரும் மறக்கமாட்டார்கள். பறவைகளைச்
சுட்டுக் கொல்வதைப் போல, காங்கிரசாட்சி பத்து தோழர்களைச்
சுட்டுக் கொன்றிருக்கிறது.
கேட்டது வாழ்வு! கிடைத்ததோ
சாவு!!
மகனை இழந்து வயிறு எரிந்து
கதறும்தாய்மாரின் கண்ணீரைக் கவனிக்க மறுக்கும் கன்னெஞ்சர்களே,
காங்கிரசை ிஎதர்த்துப் பேசுபவர் – காங்கிரசின் போக்கைக்
கண்டிக்கத் தயங்கார்.
கேட்டது வாழ்வு! கிடைத்ததோ
சாவு!! என்று திராவிடம் தேம்பிக் கொண்டிருக்கிறது.
காலிழந்தும் கரமிழந்தும் அவதிக்கு
ஆளானோர் உள்ளனர் – இந்த இருக்கிறது காங்கிரஸ் ஆட்சியில்.
ஆறு ஆயிரம் திராவிட இயக்கத்
தோழர்களைச் சிறையிலே தள்ளி இருக்கிறது காங்கிரசாட்சி.
இதுவா ‘தர்ம ராஜ்யம்‘?
தடியடியும் கண்ணீர் புகைக்
குண்டும் காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டு, காலிகள் சிலர்
புது கிராமத்தில் நடத்திய செயல்களைத் திராவிட இயக்கத்தின்
மீது பழி சுமத்தியும் வருகிறது காங்கிரசாட்சி.
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டிருக்கும்
ஆட்சி, துணிவாகப் பொதுமக்களை ‘ஓட்டு‘ தரும்படியும் கேட்கிறது.
மிரட்டலாம் – மயக்கலாம் –
மித்ரபேதம் செய்யலாம் – பணத்தை வாரி இறைக்கலாம், பசப்பலாம்,
பத்திரிகைகள் மூலம் கயிறு திரிக்கலாம், அரசியல் சூது அத்தனையும்
செய்யலாம் என்று துணிவுடன் தேர்தலில் ஈடுபடுகிறது.
இத்தகைய கட்டத்தில் தெளிவும்,
அறிவும் கொண்ட அறிக்கையைத் தோழர் எஸ்.எஸ். ராமசாமி வெளியிட்டது
காண மிக மகிழ்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம்,
இந்த அறிக்கை கண்டு மட்டுமல்ல, பொதுவாகவே உழைப்பாளர் கட்சியுடன்
உறவு கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகச்
சார்பாகச் சட்டசபையில் உழைப்பாளர் கட்சி வாதாடியது, இந்த
உறவை மேலும் வலுவுடையதாக்கி இருக்கிறது.
ஆணவப் போக்குக்குப் பாடம்
விருத்தாச்சலம் தேர்தலில்
உழைப்பாளர் கட்சிக்கும் பொது மக்கள் பேராதரவு காட்டி, வெற்றி
பெற்றுத் தருவது, இன்றைய ஆட்சி முறையின் ஆணவப் போக்குக்குத்
தக்க பாடம் தருவதாக அமையும்.
வழக்கு, தொல்லை பலவும், என்னையும்,
இயக்கத் தோழர்கள் பலரையும் மும்மரமாக வேலை வாங்கி வருவதால்,
தேர்தல் வேலையைக் கவனிக்க இயலவில்லை, எனினும், திராவிடர்களின்
ஒத்துழைப்பும், ஆதரவும் உழைப்பாளர் கட்சிக்குக் கிடைக்கும்
என்று உறுதியாக நம்புகிறேன். தில்லுமுல்லுகள் நடைபெறாது
இருக்குமானால், உழைப்பாளர் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்
என்பது உறுதி.
வெற்றி காண வேண்டும்!
ஆத்திரம் அமைகிறது, பிறகு
உள்ள சென்னைச் சட்டசபையில், உழைப்பாளர் கட்சியின் முக்கியத்துவம்
இப்போது உள்ளதை விட அதிகமாகப் போகிறது – பொறுப்பும் வளரப்
போகிறது.
அந்த நேரத்தில், காங்கிரஸ்
பாசிசத்தை வீழ்த்தும் பணியில் உழைப்பாளர் கட்சி பெரும் பங்கு
ஏற்றுக் கொள்ள வேண்டும் – திராவிட முன்னேற்றக் கழகம் இதுபோது,
உழைப்பாளர் கட்சிக்கு உறுதுணையாக நிற்கும். இன்று சூழ்ந்துள்ள
அரசியல் இருளை நீக்கி, இன்பத் திராவிடத்தின் இதயப் புண்ணைப்
போக்கி, ஜனநாயதகத்தை வெற்றி பெறச் செய்யும் வீரமான பணியில்
மும்முரமாக ஈடுபட்டு, வெற்றி காண வேண்டும் என்ற என் ஆசையை
எடுத்துக் கூறி, தோழர் எஸ்.எஸ்.ராமசாமி அவர்களை, அவருடைய
அறிக்கை கண்டு பாராட்டுகிறேன்.
(நம்நாடு - 11-8-1953)