அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘வீட்டிற்கும் சிறைச்சாலைக்கும் வேறுபாடு காணாதவர்கள் நாம்‘

அறிஞர் அண்ணாவின் சூளுரை

“இந்தப் பரிசுகளை எனக்களித்தது பெரிதல்ல, இதைவிட மகத்தான சக்தி வாய்ந்த பரிசு ஒன்றை நீங்கள் எனக்கு அளித்தாக வேண்டும்.

“உங்களது கண்ணீரை எனது கல்லறையின் மீது நீங்கள் சிந்துவீர்களேயானால் அது எனக்கத் தரும் பெரும் பரிசாகும்.

“உங்களையெல்லாம் நம்பித்தான் நான் அரசாங்கத்தின் அறைகூவலை ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரையில் வீட்டிற்கும் சிறைச் சாலைக்கும் வேறுபாடு ஏதும் கிடையாது.

“இன்று நீங்கள் எனக்கு அளித்துள்ள இந்த யாழை என்னுடைய வீட்டில் வைத்து மனைவி மக்கள் புடைசூழ மீட்டிக் கொண்டா இருக்கப் போகிறேன்? நிச்சயமாக இல்லை. அந்த அனுபவங்கள் எல்லாம் விடுதலை வீரர்களைப் பொறுத்தவரையில் கற்பனையாகவே இருந்து அழிந்து போய்விடக் கூடியவைகளே!

சிறையில்தான் பிறந்த நாள்

“இந்த ஆண்டு தஞ்சையில் என் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள், நானும் உடன் இருக்கிறேன் – அடுத்த ஆண்டு என் பிறந்தநாளை எந்தச் சிறைச் சாலையிலாவது கொண்டாடுவதாக இருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று அண்ணா அவர்கள், தஞ்சையில் நடந்த தம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமக்களிக்கப்பட்ட பரிசுகளை பெற்றுக் கொண்டு நன்றியுரை கூறுகையில் குறிப்பிட்டார்கள்.

(நம்நாடு - 16.9.61)