“வெள்ளம் வந்துவிட்டதற்குக்கூட
நாங்கள் என்ன செய்ய முடியும்? இதற்காக யார், யார்மீது நொந்து
கொள்வது? என்று அரசினர் கேட்கக் கூடும். அரசாங்கத்தின் மீது
குறை கூறுவதற்காகவே நான் காரணம் தேடி அலையவில்லை. பல இடங்களில்
ஆற்றுப்படுக்கை களில், மக்கள் விவசாயம் செய்கின்றனர். இப்படுக்கைகள்
உயர்ந்து விட்டதன் காரணமாக ஆற்று நீர் கரையைச் சுலபத்தில்
அறுத்துக் கொண்டு வெளியேறுகிறது.
“கரைகளைப் பழுது பார்த்து
உயர்த்துவது, ஆற்றுப் படுக்கைகளைத் தூர் வாரியெடுப்பது,
கால்வாய்களை ஆழப்படுத்தி வைப்பது ஆகிய காரியங்களை நிறைவேற்றி
வைக்காத காரணத்தினாலேயே இவ்வளவு பெரிய வெள்ளமும் அதன் காரணமாக
ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து தவிக்கவும்,
பயிர் நிலங்கள் நாசமாகவுமான நிலை ஏற்பட்டது என்று நான் இந்த
அரசின் மீது பகிரஙக்மாகக் குற்றம் சாட்டுகிறேன்“ என்று அண்ணா
அவர்கள் நேற்று மாலை சென்னை 13ஆவது வட்டம் என்.எஸ்.கே. நினைவு
மன்றச் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகையில்
கூறினார்.
மராமத்துப் பணி செய்க
மேலும் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
இந்த அரசாங்கத்தினர், ‘நாங்கள் பத்து இலட்சம் செலவழித்தோம்
– பதினைந்து இலட்சம் செலவழித்தோம் என்று ஆண்டுதோறும் கணக்குக்
கூறுகிறார்கள். நான் உதராணத்திற்காக ரூ.10, 15 இலட்சம் என்று
குறிப்பிட்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னால், பத்து ரூபாய்
செலவில் செய்து முடிக்கப்பட்ட காரியத்திற்குத் தற்பொழுது
ரூ.50 இலட்சம் செலவழித்தால்தன் முடியும். அந்த அளவுக்கு
நாட்டில் விலைவாசிகள் உயர்ந்துள்ளது. ஆகவே, அதற்குத் தக்கபடி
செலவுத் தொகையை உயர்த்தி, சரியான முறையில் செலவழித்திருக்க
வேண்டும்.
“சென்னை அரசின் மராமத்துத்
துறையினர், இவ் வெள்ளத்தின் மூலம் நல்ல படிப்பினைப் பெற்று,
இனிமேலாவது ஆற்றங்கரைகளை நல்ல முறையில் உயர்த்தவும், ஆற்றுப்
படுகைகளின் மேடிட்ட பகுதிகளைத் தூர் எடுத்துக் கால்வாய்களை
முறையோடு செய்யவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.“
100 ரூபாய் அளவில்தான் பேசுவேன்
அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசியதாவது:
“நீங்கள் மழையின் காரணமாகச் சிரமப்பட்டுக் கொண்டு நிற்கிறீர்கள்,
நான் அலுப்பின் காரணமாகச் சிரமப்படுகிறேன். இப்படிப்பட்ட
நிலையில் நான் பேசினாலும், அதனால் தகுந்த பலனும் ஏற்படாது.
இந்நிலையில், நான் சில நிமிடமே உங்களிடையே இரண்டொரு கருத்துக்களை
விளக்கிப் பேசிவிட்டு விடைபெற விரும்புகிறேன்.
“இக்கூட்டம், முன்பே நடைபெற
ஏற்பாடாகி, இடையில் பொது மாநாட்டின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டு,
இன்றைய தினம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தைப் பற்றி எனக்கு
நேற்றைய தினம்தான் நினைவு வந்தது. நான்க நாட்கள் மாநாட்டில்
கலந்து கொள்ளவும் அதற்குப் பிறகு வெள்ளச் சேதங்களைப் பார்வையிடவும்
சென்று விட்டு, நேற்றைய தினம்தான் காஞ்சிபுரத்திற்குப் திரும்பி
வந்தேன். இவ்வளவு அலுவல்களுக்கிடையே நான் மிகவும் அலுத்து
வந்திருக்கிறேன். இதைக் கருதியோ என்னவோ இயற்கை தன்னுடைய
செயலால் எனக்குத் துணைபுரிகிறது போலும்( நீங்களும் என்னிடத்தில்,
அதிக வேலை வாங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள்
தேர்தல் நிதியாக என்னிடம் அளித்திருப்பது ரூ.100 தான். ஆகவே,
அதற்குரிய அளவில்தான் நான் பேசுவதாக இருக்கிறேன்.
மாநாட்டுச் சிறப்பு
“நம்முடைய மாநாடு, சமீபத்தில்தான்
திருப்பரங்குன்றத்தில் நடந்து முடிந்தது. நான்கு நாள் மாநாட்டில்,
உங்களில் பலர் வந்து நேரடியாகவே கலந்து கொண்டிருக்கக் கூடும்
மற்றும் பலர், பொருட் செலவு கருதியோ அல்லது வேறு வேலைத்
தொல்லைகளினாலோ நேரில் வர முடியாமல் இருந்திருக்கக்கூடும்.
அப்படி வரமுடியாமல் போனவர்களுக்காக நான் மாநாடு சிறப்புப்
பற்றி சிலபல கருத்துகளை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களைக்
கழகம் வளர்ந்துள்ள இடங்கள் என்று கூறமுடியாது. மதுரை மாவட்டம்,
திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மூன்று
மாவட்டங்களையும் கொண்ட பகுதிகளைத்தான் ‘தென்பாண்டி நாடு’
என்று கூறுவர். தென்பாண்டி மண்டலத்தின் சிறப்பை எடுத்துக்
காட்டிடும் வகையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.
புதிய தெம்பு – புதிய நம்பிக்கை
மதுரைக்கும் – திருப்பரங்குன்றத்துக்கும்
இடையில் நமது தோழர்கள், உணவுக்கு ஓய்வுபெறச் சென்று வந்தனர்.
இப்படிச் சென்று வந்த தோழர்களின் போக்குவரத்தைச் சமாளிக்க
மதுரை டி.வி.எஸ். பஸ் நிறுவனத்தினர் இடைவிடாது பஸ்களை நிமிடக்
கணக்கில் விட்டுக் கொண்டு இருந்தனர். அவர்கள் 80 பஸ்களை
விட்டும், போக்குவரத்தைச் சமாளிக்க இயலவில்லை. அந்த அளவுக்குப்
போக்குவரத்து இடைவிடாது நடைபெற்றது.
திருப்பரங்குன்றம், முருகன்
திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திருத்தலம் என்று பக்தர்கள்
கூறுவர். அந்த இடத்தில் சத்திரங்கள் ஏராளமாக உண்டு. அந்த
சத்திரங்களில் நமது தோழர்கள் இடம் பிடித்தும்கூட, மற்றும்
பல இடங்களிலும் இடம்பிடிக்க வேண்டியதாயிற்று. தோழர்களின்
உற்சாகமான பேச்சும், அவர்களின் ஆர்வமும் நமக்குப் புதிய
தெம்பை அளிப்பதாக இருந்தன. துணைவிமாரை அழைத்துக் கொண்டு
வந்த கணவரும், மகனை அழைத்து வந்த தந்தையும், தந்தையை அழைத்து
வந்த தனயனும், தங்கள் குழந்தைகளை இடுப்பிலே சுமந்து கொண்டு
உற்சாகத்தோடு நடைபோட்டுக் கொண்டு தாய்மார்களும் வந்த காட்சிகளைக்
கண்டவர்கள்தான் அறிவர். காணாதவர்களுக்குச் சொன்னால் மலைப்பாக
இருக்கும். நான்கு நாட்கள் மாநாட்டில் காவல் இருந்த போலீஸ்காரர்கள்,
மிகத் திறமையுடன் பணியாற்றினார்கள்.
காலை எட்டு மணிக்குக்கூட,
ஏதோ அரைமணி நேரம் பேச்சைக் கேட்டு விட்டுச் சென்று விடலாம்
என்ற நிலை அல்ல, காலையில் தோழர்கள் கூடினால், அதே இடத்தில்
உணவு, உறக்கம் எல்லாம் முடித்தக் கொண்டு கண்காட்சி, நாடகம்
என்று கண்டுகளித்துப் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கொண்டனர்.
‘அங்கும் வளரும்‘ என்ற நம்பிக்கை
நமக்குண்டு!
‘இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து
கொண்டுதானே திராவிட நாட்டைப் பற்றிப் பேசுகின்றனர்?‘ என்று
என்ன காரணத்தாலோ சலிப்புக் கொண்ட தோழர்கள் சிலர் பேசுகின்றனர்.
அவர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தால், அங்குத் தமிழ்ப் பேச்சாளர்களோடு
போட்டிப்போடும் அளவுக்குத் தெலுங்கு – மலையாளம் – கன்னடப்
பேச்சாளர்கள் இருந்ததைத் கண்டிருப்பார்கள். நானே மயங்கும்
அளவுக்கு அவர்கள் பேசினார்கள். நாம் எந்த அளவுக்கு உற்சாகத்தோடு
– நம்பிக்கையோடு பேசுகிறோமோ அந்த அளவுக்குப் பேசினார்கள்.
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தல் தி.மு.கழகம்
வளர்ந்துள்ள அளவுக்கு அங்கும் வளரும் என்ற நம்பிக்கையோடு
மாநாட்டை – விட்டுப் பிரிந்தோம்.
கேரளத்தின் குரல்
கேரளத்திலிருந்து வந்து மாநாட்டில்
கலந்து கொண்டு பேசிய மாணவத் தோழர் சில்வர்ஸ்டர் என்கிற தோழர்
– அவர் அங்கு தொழிற்சங்க இயக்கத்தில் பங்கேற்றுப் பணியாற்றுபவர்
– பேசுகையில், 1962இல் நீங்கள் தமிழ் நாட்டு அரசைக் கைப்பற்றினால்
நாங்கள் 1967 பொதுத் தேர்தலில் கேரளத்தைக் கைப்பற்றுவோம்.
எங்களுக்கு ஐந்து ஆண்டு தவணையே போதும் என்றார். நீங்கள்
முதலில் செய்து காட்டுங்கள். நாங்கள் அதையே செய்து காட்டுகிறோம்
என்றார்.
கர்நாடகத்தின் குரல்
அண்ணாதுரையத் தமிழ்நாட்டிலேயே
வைத்துக் கொள்ளுகிறீர்கள். ஆறுமாதக் காலம் கர்நாடகத்திற்கு
அனுப்பி வையுங்கள். நாங்கள் கழகத்தை எந்த அளவுக்கு வளர்த்து
காட்டுகிறோம் என்பதைப் பிறகு பாருங்கள் என்று மாநாட்டில்
பேசிய கன்னடத் தோழர் குறிப்பிட்டார்.
ஆந்திரத்தின் குரல் ஐதராபாத்தில்
தி.மு.கழகக் கிளை துவங்கப்பட்ட இருக்கிறது. அதற்கு நீங்கள்
வருகை தரவேண்டும் என்று ஆந்திரத் தோழர்கள் அன்பழைப்பு விடுத்தனர்.
சவூதி அரேபியா வாழ் தமிழர்களின்
உணர்வு!
நம்முடைய மாநாடு நடைபெற்ற
நேரத்தில், சவூதி அரேபியாவில் வாழுகின்ற தமிழ்த் தோழர்கள்
மாநாட்டில் கலந்து கொண்டு, தேர்தல் நிதியாக ரூ.10 அளித்தனர்.
சவூதி அரேபியா எங்கே? மதுரை வைகை நதி எங்கே? அவர்களையும்
நம்மையும் இணைத்து வைக்கும் வளர்ச்சியை அங்கு கண்டோம்.
மாநாடு – ஒரு வாரம்
மாநாட்டிலே, எந்தத் தோழரும்
அதிக நேரம் பேச முடியவில்லை. சாதாரணமாக மனோகரனைப் பேசச்
சொன்னால் அவர் இரண்டு மணி நேரமாவது பேசுவார், அன்பழகன் அதே
போன்று ஒன்றரைமணி நேரம் – இரண்டு மணி நேரம் பேசக் கூடியவர்.
திருவண்ணாமலை தோழர் சண்முகம் இதே அளவு பேசக்கூடியவர். இப்படிபட்டவர்கௌல்லாம்
மாநாட்டில் பத்து நிமிடம் பதினைந்து நிமிட நேரம் பேச அவகாசம்
கிடைத்தது. அந்த அளவுக்குத் தீர்மானங்கள் நிறைவேறவும், அவற்றை
விளக்கி நம்முடைய தோழர்கள் பேசவும் வேண்டியிருந்தது. இனிமேல்
மாநாடு நடத்த வேண்டுமென்றால் ஒருவாரக் காலமாவது வேண்டும்
என்ற எண்ணத்தில் திரும்பி வந்தோம்.
அந்த அளவுக்கு நம்மிடையே பேசுவோர்.
எண்ணிக்கையும் கேட்பவர்கள் எண்ணிக்கையும் பெருகியிருக்கின்றன.
எதனையோ கூறி ஊரை ஏமாற்றுவதா?
இந்த நேரத்தில், வெள்ளைத்தைப்
பற்றிக் கேள்விப் பட்டோம். மிக்க மன வேதனைப்பட்டோம். ‘இந்த
நேரத்திலா மாநாடு?‘ என்று சிலர் கேட்டனர். இப்படிக் கேட்டவர்கள்
தான், மதுரை மாநகரில் யானை முன்னே செல்ல – குதிரைகள் பக்கங்களில்
செல்ல அலங்காரம் சய்து, ஆடம்பாரமாகக் காமராசரின் 59ஆவது
தின விழாவை விமரிசையாகக் கொண்டாடினார்.
அவர்கள் தங்கள் காரியத்தைப்
பார்த்துக் கொண்டனர். ஆனால், நாம் நம் காரியத்தைப் பார்க்க
போகும் போதுதான், வெள்ளம் அவர்கள் கண்ணுக்குத் தென்படுகிறது.
வெள்ளம் வந்தவுடன் இவர்களென்ன
கையை வைத்து அடைத்தனரா? ஆளுக்கொரு கூடை மண்ணெடுத்துப் போட்டு
அணை கட்டினரா? அதையே கூறி ஊரை ஏமாற்ற வேண்டாம்.
சென்னையில், கூவம் ஆறு ஓடுகிறது.
இதை ஆறு என்று கூடச் சொல்ல முடியாது. இதில் மழையின் காரணமாக
நீர் வந்தபோது, கரை ஓரத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு வாழ்ந்த
மக்கள்பட்ட வேதனையை நாம் பார்த்தோம்.
காவிரியில், பண்டைத் தமிழர்கள்
கல்லணையைக் கட்டினர். காவிரியில் மட்டுமல்ல வெள்ளம். வெண்ணாறு,
குடமுருட்டி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில்கூட வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாற்றுப் படுகைகளில் தூர் வாராது கரைகள் உயர்த்தப்படாத
காரணத்தால் வெள்ளத்தின் சேதம் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.
அக்கரையில் மணமகன் – இக்கரையில்
மணமகள்!
திருக்காட்டுப்பள்ளியில் வெள்ள
நீர் புகுந்துவிட்ட காரணத்தால், அப்பகுதி மக்கள் பூதீலூரில்
கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தனர். அம்மக்களைப் பார்க்க
பரிதாபமாக இருந்தது. விட்டுவிட்டு வந்த இடத்தில் வீடு என்ன
கதியாற்றோ, விட்டு வந்த சாமான்கள் என்ன வாயினவோ என்று கவலைப்பட்டுக்
கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் நான் ஒரு காட்சியைக் கண்டேன்.
பூதலூர்ச் சாலையில் ஒரு டிரங்கு
பெட்டியின் மீது ஒரு பெண் அமர்ந்து கொண்டிருந்தாள். அப்பெண்
அழகாக தலைவாரி, பூச்சூடி உடுத்தி இருந்தாள், விடிந்தால்
திருமணம் என்ற நிலையில், ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டபடியால்
அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள குடும்பத்தோடு வந்துவிட்டனர்.
அந்தக் கரையில் மணமகன் ஊர், ஆற்றைக் கடந்து மணமகன் வரவேண்டும்.
ஆகவே திருமணம் நின்றுவிட்டது.
சோழ மன்னர்கள் கீர்த்தி நிலைத்துள்ளதற்க
அறிகுறி!
காவிரியும், கொள்ளிடமும் பிரிகின்ற
இடத்தில் திருச்சிக்கு அருகில் சோழமன்னர்கள் காலத்தில் கல்லணையைக்
கட்டி வைத்தனர். இரும்பு இல்லாத காலத்தில் சிமெண்டு இல்லாத
காலத்தில் காங்கிரீட் இல்லாத காலத்தில் வெறும் கல்லை மட்டுமே
கொண்டு கட்டப்பட்டுள்ளது அந்த அணை. ‘கொள்ளிடம்‘ என்று பெயர்
வந்தது எப்படியெனில், கொள் இடம் என்பது கொள்ளிடம் என்று
ஆகிவிட்டது. அதாவது காவிரியில் நீர் அதிகம் வந்தால், அதன்
மிகுதி நீரைக் கொள்ளுகின்ற காரணத்தால் அதற்கக் கொள்ளிடம்
என்று பெயர் வந்தது.. அப்படிப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள
கல்லணையில் ஒரு செங்கல்கூட பெயரவில்லை.
சோழ மன்னர்கள் விட்டுச் சென்ற
பெயரைப்போல அவர்கள் கீர்த்தியை போல் அது நிலைத்துள்ளது.
ஆட்சியைப் போலவே கரையும் அமைந்தது
அதற்குப் பக்கத்திலேதான் நம்முடைய
காங்கிரசு ஆட்சியினர் மண் கூரையிட்டுள்ளனர். அந்தப் பகுதியில்
தான் ஆயிரம் அடி நீளம் உடைப்பெடுத்துள்ளது. காங்கிரசு ஆட்சியினர்
நம்மைப் பராமரிப்பது போலவே, அவர்கள் கரையும் ஊரைப் பராமரித்துள்ளது.
இந்த இடத்தில், நீர் ஒரு பெரிய
சமுத்திரம்போல் காட்சியளிக்கிறது. அங்கு பெங்களூரைச் சார்ந்த
பட்டாள வீரர்கள், உடைப்பை அடைக்கும் வேலையைச் செய்து வருகின்றனர்.
நாங்கள் அப்பகதிக்குச் சென்றவுடன், என்னை எப்படியோ அவர்கள்
அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களில் ‘நெல்லை மாவட்ட மாநாடு
கோயில்பட்டியில் நடைபெற்றபோது உங்களுடைய பேச்சைக் கேட்டேன்,
அதற்குப்பிறகு கேட்கவில்லை‘ என்றார்.
எங்கு நோக்கினும் நீர்
திருவாரூருக்கு அருகில், ‘ஓடம்
போக்கி‘ என்றோர் ஆறு இருக்கிறது. ஒரு காலத்தில் அவ்வாற்றில்
ஓடம் மூலம் போக்குவரத்து நடந்து வந்த காரணத்தால் ‘ஓடம் போக்கி‘
என்ற பெயரால் அந்த ஆறு அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில்
‘ஓடம் போகி‘ என்றாகிவிட்டது. இது மிக ஆழமான ஆறாகும். இங்கு
வெள்ளம் அதிகமாகி, எங்கு நோக்கினும் நீராகக் காட்சியளிக்கிறது.
இந்த ஆற்றைக் கடக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கட்டுமரம்
ஏற்பாடு செய்து எங்களை ஏற்றிவிட்டார். அந்த சப்-இன்ஸ்பெக்டர்
அன்பழகனிடம் படித்த மாணவராம். இரவு ஒன்பது மணிக்குக் கட்டுமரத்தில்
நானும் அன்பழகனும் தஞ்சை மாவட்டச் செயலாளர் நாராயணசாமியும்
சென்றோம். எனக்கு நீந்தத் தெரியாது. ஆனால் பக்கத்தில் இருந்த
நாராயணசாமி, பயப்படாதீர்கள் அண்ணா, நான் பார்த்துக் கொள்கிறேன்‘
என்றார். அன்பழகனும் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்‘ என்றார்.
நாராயணசாமி கனமானவர். அன்பழகன் ஒல்லியானவர். ஒரு பக்கத்தில்
கனமும், மறுபக்கத்தில் இலேசான ஆள் மற்றொரு பக்கத்திலும்
அமருவதே ஆபத்து, ஆக இவர்கள் மிகவும் சிரமப்பட்டு என்னை அக்கரைக்கு
அழைத்துச் சென்றனர். அங்கு மணல் மூட்டைகளை நிரப்பி வெள்ளைத்தை
அடைத்துக் கொண்டு இருந்தனர். இவ்வுடைப்பை அடைத்தால்தான்
திருவாரூர் தப்பும், இல்லையேல் திருவாரூர் நகருக்கு ஆபத்து
ஏற்படும் என்றஅபாய நிலை இருந்தது. வெள்ள நீர் வேறு வழியாக
எப்படியோ திருவாரூருக்குள் புகுந்துவிட்டது.
மண்மேடு – அதிக விளைச்சல்
தஞ்சை அரசலாற்றில் வெள்ளம்
ஏற்படுத்திய உடைப்பினால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்
மண் அடித்துவிட்டுள்ளன. இதனால், விவசாயம் பாதித்துவிடுமோ
என்று அங்குள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால், அமைச்சர்
வெங்கட்ராமன் ‘கலைப்படாதீர்கள்‘ நல்ல விளைச்சல் விளையும்‘
என்று கூறுகிறார். மண் மேடிட்டுப் போன நிலங்களிலிருந்து
மண்ணை எடுத்துப் போடுவதற்கு ஆகும் செலவில் நிலமே வாங்கிவிடலாம்
அந்த அளவுக்கு அதிகச் செலவு ஆகும்.
ஆனால், யார் யார் தங்கள் கண்களைக்
கொண்டு எப்படி எப்படிப் பார்க்கிறார்களோ அப்படி அப்படித்தான்
அப்பொருள்களும் தோன்றும் போலும்( என்னுடைய கண்களுக்கு மணல்
மேடிட்டுப் போயுள்ளது தெரிந்தது, ஆனால் அமைச்சரின் கண்ணுக்கோ
அதிக விளைச்சலைப் பற்றித் தெரிகிறது.
இதைப் போன்றே என்னுடன் வந்த
ஒரு தோழர், ‘ஏன் அண்ணா, இப்பொழுது மீன் நிறைய கிடைக்குமல்லவா?‘
என்று கேட்டார். இப்படிப்பட்டவர்கள் எங்கும் இருப்பர் போலும்(
(நம்நாடு - 21.6.61, 8.8.61)