அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘வெற்றி பெற்றவர் உருவில் நான் இருப்பேன்‘

கழகத் தோழர்களுக்கு அண்ணா கனிவுரை

ஆளும் கட்சியினர் கையாண்ட முறைகள், வீசிய கருவிகள் எத்தனை மோசமானவைகள் என்பதைக் காட்டி, இத்தோல்வி என் தோல்வி அல்ல‘ என்று வாதாட நான் முற்படவில்லை, நானே அந்த வாதத்தைச் சரியானது என்று கொள்ளவில்லை.

அச்சம், ஆசாபாசம் ஆகியவைகளால், அலைக்கழிக்கப்படாத உள்ளம், குடியாட்சியில் உள்ள மக்களுக்கு வேண்டும்.

என் தோல்வி, அப்படிப்பட்ட மக்களின் தொகை குறைவு என்பதைக் காட்டுகிறது.

குடியாட்சி மாண்பு!

குடியாட்சி மாண்புடன் இருக்கவேண்டுமானால், அச்சம் தயை தாட்சண்யத்துக்காகக் கொள்கை இழந்திடாத பண்பு மக்களிடம் மிகுந்திருக்க வேண்டும், இன்று நிலைமை அவ்விதம் இல்லை.

“நாம்தான் அந்தப் பண்பு வளர்ந்திடச் செய்ய வேண்டும். என் தோல்வி காட்டும் பாடம்அதுதான்“ என்று அண்ணா அவர்கள், கழகத் தோழர்களுக்கு வழங்கியுள்ள கருத்து மிக்கக் கனிவுரையில் தெள்ளத் தெளிவுறக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளின் முழுவிவரமாவது

என்பால் மாறா அன்பும், கழகத்திடம் தளராத பற்றும் கொண்டுள்ள தோழர்களே! தோல்வி கேட்டும், அது போன்ற அதிர்ச்சி தரத்தக்க வேறு சிலரின் தோல்வி பற்றிய செய்தி கேட்டும், எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறேன். உள்ம் உடைய இடம் கொடுக்கக்கூடாது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கழகக் காரிய மாற்றப் புறப்படுங்கள்.

பெருமச்செறவதை நிறுத்திக் கொண்டு முன்னிலும், அதிக ஆர்வம் காட்டி பணிபுரியுங்கள்!

இந்தத் தேர்தலில் என்னைத் தோற்கடிக்க ஆளும் கட்சியனிரும் அவர்தம் ஆதரவாளர்க்ளும் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்தனர் – முறைகளைப் பயன்படுத்தினர் என்பது நாடறிந்த உண்மையாகும்.

என் தோல்வியால் கழகம் கலையாது!

என் தோல்விதான் அவர்களுக்கு இன்னும் சில காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும், வாய்ப்பு அளிக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டு, திட்டமிட்டுப் பணியாற்றினார்கள் – வெற்றி பெற்றார்கள். அதிலே அவர்கள் பெருமைப்படலாம். புதிய நம்பிக்கைகூட ஏற்படக் கூடும்.

ஆனால், அவர்களின் கணக்கு தவறு, என் தோல்வியுடன் கழகம் கலைந்தது என்று எண்ணுகிறார்களே – அதுதான் அவர்களின் தவறான கணக்கு!

நான் சட்டசபையிலிருந்து கொண்டு பணியாற்றுவதைத் தடுக்க மட்டுமே இந்தத் தோல்வி பயன்படும்!

என்னைத்தானே தவிர, கழகத்தை அல்ல! கழகத் தோழர்கள், என் தோல்வியால் மனம் வேதனைப்பட்ட நிலையில் உள்ளனர் என்றாலம, என்னால் ஆறுதல் அளிக்கப்பட்டு, சட்டசபை செல்கிறார்கள், செம்மையாகச் செயலாற்றுவார்கள்.

வாகை சூடியோர் உருவில் இருப்பேன்!

அவர்களின் எண்ணத்திலும் பேச்சிலும் நான் இருக்கிறேன், எனவே பெரியதோர் கஷ்டம் கழகத்துக்கு ஏற்பட்டுவிடவில்லை.

ஆண்டுக்கு நூறு நாட்கள் கூடிடும் சட்டசபையில் நான் இடம் பெற முடியாதபடி செய்துவிட்னர், என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் உங்களைச் சந்திக்கும் இடம் – சட்டசபைகளை உருவாக்கும் பேரவை அங்கு எனக்குள்ள அலுவல் – ஆகியவை இவர்களால் தடுக்கப்பட முடியாதவை.

இந்தத் தோல்வியும் என்னை அந்தப் பணியிலிருந்து விலகச் செய்யக் கூடாது, மாறாக, அந்தப் பணி மேலும் மும்முரமாக நடைபெறும்!

ஆளும் கட்சியினர் கையாண்ட முறைகள் வீசிய கருவிகள் எத்தனை மோசமானவைகள் என்பதைக் காட்ட ‘இத்தோல்வி என் தோல்வி அல்ல‘ என்று வாதாட நான் முற்பட வில்லை. நானே அந்த வாதத்தைச் சரியானது என்று கொள்ளவில்லை.

அச்சம், ஆசாபாசம் ஆகியவைகளால், அலைக்கழிக்கப்படாத உள்ளம், குடியாட்சியில் உள்ள மக்களுக்கு வேண்டும்.

என்னை எதிர்த்தவர் திருப்பதி பெருமாள்!

என் தோல், அப்படிப்பட்ட மக்களின் தொகை குறைவு என்பதைக் காட்டுகிறது.

குடியாட்சி மாண்புடன் இருக்கவேண்டுமானால், அச்சம், தயைதாட்சண்யத்துக்காகக் கொள்கை இழந்திடாத பண்பு மக்களிடம் மிகுந்திருக்க வேண்டும், இன்றுநிலைமை அவ்விதம் இல்லை.

‘நாம்தான் அந்தப் பண்பு வளர்ந்திடச் செய்ய வேண்டும். என் தோல்வி காட்டும் பாடம் அதுதான்!

மக்களை மிரட்டியும் மயக்கியும் வாக்குகள் பறிக்கப்பட்டது – உண்மை! பணம் தாராளமாகப் படை எடுத்தது – உண்மை! நான் காஞ்சிபுரத்தில் பேசியுள்ளபடி, ‘என்னுடன் வெங்கடேசப் பெருமாள்‘ போட்டிப்போட முன்வந்துவிட்டார்! ஆனாலும், அந்த நிலைமையைம் மீறி வெற்றி கிடைத்தால்தான் உண்மையான வெற்றியாகும்.

எந்தக் கருத்தைக் கொண்டோ அதற்கு வயப்பட்டோ என் தொகுதி மக்கள் என்னை ஆதரிக்க மறுத்துவிட்டார்கள், என்றாலும், மீண்டும் அவர்களின் நல்லெண்ணெத்தையும், ஆதரவையும் பெறுவதற்கே நான் பணியாற்றிவர இருக்கிறேன்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை இந்த நேரத்திலும் நினைவுப்படுத்துகிறேன்.

என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுடன் ஆளும் கட்சியினருக்கு, என்னுடன் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்களை வீழ்த்திவிடவேண்டும் என்பதுதான் திட்டம்!

அதன்படியே சட்டமன்றத்தில் அரும்பணியாற்றிய நமது தோழர்கள் பலரைத் தோற்கடித்து விட்டார்கள்.

எனினும் அதிக எண்ணிக்கையுடன், அரும்பணியாற்றிடக் கூடிய அறிவாற்றல் படைத்து நமது கழகத் தோழர்கள் சட்டமனற்ம் செல்கிறார்கள்.

எனவே, என் தோல்வி காரணமாகத் தி.மு.கழகச் சட்டமன்றப் பணி குந்தகப்பட்டுவிடாது – குறைந்து போகாது! பல இடங்களிலே நமக்குக் கிடைத்த வெற்றியால் ஏற்படக்கூடிய களிப்புணர்ச்சியை என் தோல்வி மூட்டிவிட்ட கசப்புணர்ச்சி பாழாக்குவதை உணருகிறேன்.

எனவேதான், வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நேரிட்டு விட்ட தோல்விகளை மறந்துவிடுங்கள்.

கண்கலங்கி நிற்காதீர்கள்!

வெற்றிபெற்று வருகிறது கழகம்! நாட்டு மக்களின் பேராதரவு வளர்ந்து வருகிறது!

இது சாதாரணமானதல்ல – அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

‘இதை எண்ணி மகிழ்ச்சியடையுங்கள் – பெருமைப்படுங்கள் – புதிய உற்சாகத்துடன் பணியாற்றுங்கள்‘.

(நம்நாடு - 27-2-62)