அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


விடுதலை இயக்கத்தை அழித்ததாக வரலாறில்லை

நாட்டு விடுதலை கேட்போர்களைப் பார்த்து, ‘சுட்டுத் தள்ளுவோம்‘ என்றால் ‘சுடத் தெரிந்தவர்களே சுடுங்கள்‘ சாத் தெரிந்த நாங்கள், சாகிறோம் என்று, அண்ணா அவர்கள், கடந்த 5.5.62 அன்று போளூரில் நடைபெற்ற தி.மு.க. வெற்றி விழாப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டடார்கள்.

அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் சுருக்கம் வருமாறு :

போளூர் நகரத் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற – பாராளுமன்றம் உறுப்பினர்களைப் பாராட்டி நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன் – பூரிப்படைகிறேன்.

இத்தகைய விழாவை ஏற்பாடு செய்ததன் மூலம் வடாற்காடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய அரும் பணிகளை எடுத்துக் காட்டுகிறீர்கள், பாராட்டைப் பெறுகிறீர்கள் மக்கள் நன் மதிப்பைப் பெற வேண்டிய வழிவகைகளை அறிந்து பணியாற்ற வேண்டுகிறேன்.

வாக்காள நண்பர்களுக்கு நன்றி!

போளூர்த் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள கேசவனார் அவர்கள், நிர்வாக அனுபவத்தோடு சட்டமன்றம் செல்கிறார்கள். அவர், நம் இயக்கத்தில் இந்த அளவு ஈடுபாடு கொள்வார்கள் என்று நான் எண்ணியதில்லை, ஆனால், மன உறுதிமிக்கவர் என்பதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் உறுதி அவரிடம் இருக்கிறது. அவரது வெற்றிக்கு அரும்பாடுபட்டுப் பெரும் பணியாற்றிய அருமைத் தோழர்களுக்கும் வாக்காள நண்பர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்தத் தொகுதியிலே பாராளுமன்றத்திற்கு வெற்றி பெற்றுள்ள நண்பர் தர்மலிங்கம் சென்ற முறை நல்ல முறையில் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர். அவரை இந்த முறையும் தேர்ந்தெடுத்திருப்பதால் சென்ற முறையை விட மிக நல்ல முறையில் பணியாற்றுவார் என உறுதி கூறிக் கொள்கிறேன்.

கிராமத்துத் தோழர் ஒருவர் மனுவைக் கொடுக்கும்போது குறைகளைச் சொன்னார். தொகுதியின் குறைபாடுகளை நமது எம்.எல்.ஏ.க்கள் தீர்த்து வைப்பார்கள்.

ஆம்பூரைச் சேர்ந்த நண்பர் சம்பங்கி அடக்கக் குணம் உள்ளவர், நண்பர்களிடம் இனிமையாகப் பேசி எதையும் சாதித்துக் கொள்ளும் திறமை படைத்தவர். இராணிப்பேட்டையில் முஸ்லீம்களோடு மட்டுமல்லாமல் தமிழர்களோடும் நன் மதிப்புக் கொண்டவர்.

ஆம்பூரில் பிறந்த சம்பங்கி விரிஞ்சிபுரம் தொகுதியில் வாகை சூடியுள்ளார்.

தமிழ்ப் புலவர் கோவிந்தன்!

செய்யாறு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள புலவர் கோவிந்தன் அவர்கள் நல்ல தமிழ்ப்புலவர், சிறந்த ஆராய்ச்சியாளர். அவர் எழுதிய ஏடுகள் நாட்டில் உள்ள நல்லவர்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன. அவர் தமிழுக்கும் தமிழ்ப் புலவர்கட்கும் தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்ற தன்னையே அர்ப்பணித்தவர்.

வந்தவாசித் தொகுதியில் வெற்றி பெற்ற நண்பர் முத்துலிங்கம் பழங்குடி மக்களிலே ஒருவராகப்பிறந்து அவர்களின் விடுதலைக்காக அல்லும் பகலும அரும்பாடுபட்டு வருபவர்.

துரிஞ்சாபுரம் தொகுதியிலே வெற்றி பெற்ற நண்பர் முருகையன் அமைதியே உருவானவர். அமைதியே உருவானவர் மட்டுமல்ல – பொறுமையும், உறுதியும் உடையவர். எனவேதான், சென்ற தேர்தலில் வெற்றிபெற இயலாமற் போனாலும் உறுதியாக அந்தத் தொகுதியில் உழைத்துத இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறார். முருகையன் வெற்றி நிச்சயம் என்பதை அறிந்து கொண்ட அமைச்சர் மாணிக்கவேலர், இவரிடம் சிக்கிக்கொள்ளாமல் சுலபத்தில் யாரிடமும் அகப்பட்டுக் கொள்கிற சேத்துப்பட்டு நடராசனிடம் இந்தத் தொகுதியை ஒப்படைத்துவிட்டார்.

அரக்கோணம் தொகுதியில் நண்பர் இராமசாமி வெற்றி பெற்றது வடாற்காடு மாவட்டத்திற்கே மிகப்பெருமை நண்பர் இராமசாமியை, பெருமை தானாகத் தேடி வந்தடைந்தது. தேர்தலுக்கு முன்பு இராமசாமி என்னை வந்து காணும் போதெல்லாம், ‘இவரை நிறுத்துங்கள், அவரை நிறுத்ததுங்கள் இவரை நிறுத்தினால் வெற்றி நிச்சயம், அவரை நிறுத்தினால்வெற்றி சுலபம்‘ என்று சொல்லுவார். நான் ஒவ்வொரு தடவையும், ‘பார்க்கலாம், பார்க்கலாம்‘ என்று அனுப்பி விடுவேன்.

உங்கள் வெற்றி எங்கள் வெற்றி

கிராமத்து மக்களாகிய உங்களுக்கு உளுவை மீனைப் பற்றி மிக நன்றாகத் தெரியும் உளுவை மீன் கைக்குச் சுலபத்தில் கிட்டாது, ஆனால், கிட்டினால் ருசி அதிகம் 15 ஆண்டுக்காலமாக என்னிடம் சிக்காமல் இருந்த நண்பர் இராமசாமி இக்கட்டில் சிக்கிக் கொண்டு, இறுதியில், ‘நிற்கிறேன்‘ என ஒப்புக் கொண்டார். ‘கூட்டுறவுத் துறையே நம் வீட்டுத் திண்ணையில் உள்ளது‘ என்று எண்ணிக் கொண்ட முன்னாள் துணை சபாநாயகர் பக்தவத்சலம் நாயுடுவைத் தோற்கடித்தார்.

நண்பர் தர்மலிங்கம் ‘எங்கள் மாவட்டத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் என்பார் அவர் கண்களில் குறும்புப்பார்வை இருக்கும் – உங்கள் மாவட்டம் எப்படி அண்ணா?‘ என்று கேட்பது போல் அப்பார்வை இருக்கும். நான் நடிகனும் கூட என்பதால், எனக்கு ஓரளவு அவர் பார்வை புரியும்.

எனக்கிருக்கிற வருத்தமெல்லாம் ‘வடாற்காடு மாவட்டத்தில் நாம் பிறக்காமல் போனோமே‘ என்பதுதான். நான் இங்கே பிறந்திருந்தால் பதினொரு பேரோடு பன்னிரண்டாவது நபராக என்னையும் அனுப்பியிருப்பீர்கள். இருந்தாலும் செங்கற்பட்டு மாவட்டமும், வடாற்காடு மாவட்டமும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு அன்றுமுதல் இன்று வரை உறவு முறையில் இருந்து இருக்கின்றன. எனவே, உங்கள், வெற்றியை எங்கள் வெற்றியாகக் கருதுகிறோம்.

மாவட்ட மாநாடும் மாநில மாநாடும்!

வடாற்காடு மாவட்டம் அரிய வெற்றி தேடித் தந்திருக்கிற காரணத்தால் நண்பர் ஏ.கே.வேலன் அவர்கள் ‘சுற்றுலா‘ கோப்பை ஒன்றைப் பரிசளிக்க இருக்கிறார். அந்தக் கோப்பையை அடுத்த முறையும் நாங்களே வைத்துக் கொள்வோம்‘ என்று சொல்லி இப்பொழுதே அதற்கு ஆயத்தம் செய்வதாகவும் நண்பர் தர்மலிங்கம் என்னிடம் சொன்னார். இத்தகைய பெரும வெற்றியைத் தேடித் தந்த இந்த மாவட்டத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் வடாற்காடு மாவட்ட மாநாடு வாணியம்பாடியில் ஜூன் மாதம் நடைபெறும்.

‘மாவட்ட மாநாடு மட்டுமல்ல – மாநில மாநாடும் கூட வடாற்காடு மாவட்டத்திலே தான் நடைபெற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் என்ற முறையில் – உங்கள் எம்.பி. என்னைக் கேட்டுக் கொண்டார். இதுவரையில் நான் அவருக்குப் பதில் சொல்லவில்லை, இப்பொழுது அவருக்கும் சொல்லுவேன் – உங்களுக்கும் சொல்லுவேன், மாநில மாநாடும் இங்கு நடத்திப் பார்க்கலாம்.

கழகத்திலே குறைத்துக் கணக்குப் போடுபவன் நான்தான், அந்த நிலையிலுள்ள நானே, ’80 இடங்கள்‘ வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், 50 இடங்கள்தான் கிடைத்தன.

அச்சத்தோடும் ஆயாசத்தோடும்....

கழகத்தைவிடத் தாங்களே பெரியவர்கள் என்று நினைத்துக் சிந்தையைக் குழப்பினார்கள் சிலர், ‘அவர் இருப்பாரா, அவர் போவாரா?‘ என்று உட்குழப்பத்திலே நமக்கு இரண்டு வருடங்கள் வீணாயின. இதையறிந்த அமைச்சர்கள் வடநாட்டுத் தலைவர்களைப் பார்த்து, இந்தக் கட்சியை ஒழித்துக் கட்டி விடுவோம் என்றார்கள். அண்ணாதுரை பக்கத்தில் இருப்பவர்களில் சுலபத்தில் வருபவர்களை இழுத்துவிட்டால் கழகம் கலகலக்கும் என்று மனப்பால் குடித்தார்கள்! நாமும், நாள்தோறும், பத்திரிகையைப் பயத்தோடு பிரித்துப் பதறிப் பதறிப் படித்து, அதில் வெளிவந்த இல்லாத பொல்லாத செய்திகளையெல்லாம் கண்டு கலங்கி அச்சப்பட்டுக் கொண்டும், ஆயாசப்பட்டுக் கொண்டு இருந்தோம்.

இந்தத் தொகுதியில் சென்ற முறை வெற்றி பெற்ற களம்பூர் அண்ணாமலை, ‘இந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும் எல்லாம் எனக்குத்தான் தெரியும்‘ என்றார்! தம்பிகளிலேயே அருமைத் தம்பி,‘ என்று நான் பாராட்டிய சம்பத், அண்ணாதுரை அரசியலுக்குத் தகுதியில்லை! அவரால் ஒரு பயனும் இல்லை என்றார்!‘ ‘நான் ஒழிக்க நினைத்ததை என் மகனே ஒழித்துவிட்டான்‘ என்று பெரியார் கூறினார்!

‘கழகத்தை நாங்கள் ஒழிக்க முயன்றோம், ஆனால், அதுவே கரைகிறது‘ என்று கம்யூனிஸ்டுகள் மகிழ்ந்தார்கள்!

இடுப்பு வலி எவ்வளவு தெரியுமா?

குழந்தை பிறப்பது – சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவுவது போல – என்றால், அதில் மகிழ்ச்சி இருக்காது, ஆனால் கருவுற்ற தாய்க்கு இடுப்பு வலிகண்டு மருத்துவச்சி ஆசுவாசப்படுத்தி, டாக்டர் பார்த்து மருந்து கொடுத்து, ‘நான்காவது குழந்தைதான்‘ என்றாலும் முதல் குழந்தையைவிடத் தொல்லை அதிகம்‘ என்று மற்றவர்கள் இரக்கப்பட்டுக் கூறிய பிறகு குழந்தை பிறந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்று எண்ணிப் பாருங்கள். அதைப் போல, இந்த 50 குழந்தைகளைப் பெறுவதற்குப் பட்ட இடுப்புவலி எவ்வளவு தெரியுமா?

மருத்துவச்சி வேலைப்பார்க்க வேண்டியவர்களே குழந்தையின் கழுத்தை நெறித்தார்கள், நான் வேறுயாரையும் சொல்லவில்லை – சம்பத்தைத்தான் சொல்கிறேன் – இவ்வளவுக்கும் பிறகு நமக்கு 50 இடங்கள். குற்றுயிராக்கப்பட்டிருந்த கழகத்திற்கு 50 இடங்களென்றால் மகிழ்வு பொங்காதா?

சம்பத் பிரிந்தபோது பத்திரிகையிலே ஒரு படம் போட்டார்கள், அதிலே பசு ஒன்றைப் போட்டு, தலையை அவர்கள் இழுப்பது போலவும், வாலை நான் இழுப்பது போலவும் சித்திரித்திருந்தார்கள். தலைப்பக்கம் இழுத்தவர்கள் பிழைக்கவில்லை, வால்பக்கம் இழுத்ததால் 50 தலைகள் முளைத்தன!

இல்லாதவர்களின் இதயக் குமுறல் தி.மு.க.!

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? ‘முன்னேற்றக் கழகம் யார் போனாலும் இருக்கக் கூடிய உயிர்ச் சக்தி பொருந்தியது, யாரோ இரண்டு பேரால் நடத்திச் செல்லப்படுவதல்ல, அது, ஏழைகளின் கண்ணீரால் கட்டப்பட்டது – இல்லாதவர்களின் இதயக் குமுறல்களால் கட்டப்பட்டது‘ என்பதுதான்!

நான் இரண்டு பிரச்சினைகளை இந்த அரசியலாருக்கு வைக்கிறேன், அடுத்த 5 ஆண்டுகளில் தமி் நாட்டுப் பஸ்களைத் தேசிய உடையமையாக்குவது – பொதுத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் அமைச்சர்கள் பதவிகளைத் துறப்பது – அதற்குப் பிறகும் காங்கிரசு தேர்தலில் நின்று வெற்றி பெற்றால், 15 ஆண்டுகளுக்கு, தி.மு.க. தேர்தலில் நிற்காது‘ என்பது தான் அது! அப்படிச் செய்தால் 150 இடம் தி.மு.க.விற்கும் 50 இடங்கள் காங்கிரசுக்கும் கிடைக்கும். ஒப்புக்காவது சொல்வாரா காமராசர்? அப்படிச் சொன்னால் விடுவாரா கார்த்திகேயன் சுப்ரமணிய முதலியார்? ‘அடப்பாவி! உன் வீட்டில் இடி விழ! உன்னை நம்பி, பெட்டியிலிருந்த இலட்சக்கணக்கான பணத்தைச் செலவிட்டேனே! இந்த அண்ணாதுரை பேச்சைக் கேட்டுக் கொண்டு இப்படிச் செய்து விட்டாயே! என்று சொல்லமாட்டாரா?

இந்தத் தேர்தலுக்கு நாம் ரூ.1000-க்கு மேல் யாரிடமும் வாங்கியதில்லை. கூட்டம் நடக்கும் போது, ‘தேர்தல் நிதிக்கு ரூ.1555 என்பார்கள். ‘அவ்வளவு ரூபாயா? என எண்ணி, நான் வட மகிழ்வேன், ஆனால் கடைசியில் ‘புதுக்காசு‘ என்று மெள்ளச் சொல்வார்கள்.

ஆனால் காங்கிரசுக்காரர்கள் திரட்டிய தேர்தல் நிதி பற்றி நாடு அறியும்.

ஆட்சியின் அவலட்சணம் புரியும்!

தி.மு.கழகத்திற்குக் கிராமத்தார் ஓட்டுப் போட்டார்களா? நகரத்தார் ஓட்டுப் போட்டார்களா? படித்தவர் ஓட்டுப்பேட்டார்களா? பாமரர்கள் ஓட்டுப் போட்டார்களா – என்று ஆராய்ச்சி தேவையில்லை. நாட்டுப் பிரிவினைக்கு 34 இலட்சம் பேர் ஒப்பம் அளித்துள்ளார்கள்!

‘பிரிவினைக்கு மக்கள் வாக்கு அளிக்கவில்லை, காங்கிரசு மீது அவர்களுக்கு வெறுப்பு! அதனால்தான் போட்டார்கள்‘ என்று அமைச்சர்கள் பதருகிறார்கள்! அப்படியே வாதத்திற்காக அதனை ஒப்புக் கொண்டாலும் 14 ஆண்டுக்கால ஆட்சியின் அவலட்சணத்தை மக்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்‘ என்று பொருள்.

இன்று பத்திரிக்கையிலே பார்த்தேன் – காமராசர் பேசியதாக – நான் சாவதற்குள் தி.மு.கழகத்தை ஒழித்து விடுவேன்‘ என்று அவர் கூறியிருக்கிறார்.

‘காமரசார், கால்வழி இல்லாத பேர்வழி! விடுதலை இயக்கத்தை ஒருவர் அழித்ததாக வரலாறே இல்லை! அப்படி ஒழிக்க நினைத்தாலும், அவரோடு சரி! ஆனால், எங்கள் கொள்கையை வெற்றி பெறச் செய்ய எங்கள் சந்ததியினர் கூடப் போராடுவார்கள்!

‘திராவிடநாடு‘ என்பார் ஒருவர், ‘என்ன நாடு அது?‘ என்று கேட்பார் மற்றொருவர், ‘அதுவா?‘ என்பார் மற்றவர், ‘அது தெரியாதா‘ என்பார் இன்னொருவர்.

இப்படிப் பேசிய உங்கள் கேலிப் பேச்சு – கிண்டல் பேச்சு – மமதைப் பேச்சு எல்லாம் எங்கே? அவ்வளவு பாடுபட்டு, நீங்கள் எங்களைப் பற்றிப் பேசும் அளவிற்குச் செய்துள்ளோம்!

உங்களிடம் குண்டு உண்டா?

சுழல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளப் போகிறார்களாம், எங்களிடம் ஆட்கள் உண்டு – உங்களிடம் குண்டுகள் உண்டா? குறிபார்த்துக் சுடத் தெரிந்தவர்கள் உங்களிடம் உண்டா? என்பதில் எனக்குச் சந்தேகம்?

எதிர்கட்சிகளைக் கலந்தாலோசிக்க வேண்டும், என்கிறார் நேரு! தி.மு.கவை ஒழிப்பேன்‘ என்கிறார் காமராசர்.

‘அணைக்கலாம்‘ என்கிறார் அவர் ‘அழிக்கலாம்‘ என்கிறார் இவர்! உங்களுக்குள்ளேயே போர் முறையில் வேறுபாடு இருக்கிறது. அவசரத்தில் அவர்கள் பேச்சே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது! இந்தப் பெண்ணை அவனுக்குக் கொடுக்கிறது ‘அவன் வாலிபன் என்பதற்காக அல்ல‘ என்றால் என்ன பொருள்? ‘பணத்திற்காக‘ என்று பொருள்! அப்படிச் சொல்பவனைப் பார்த்து மக்கள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

பிரிவினைக்கு அல்ல என்றால்...?

அதைப்போல, தி.மு.க.விற்குக் கிடைத்த ஓட்டுக்கள் பிரிவினைக்கு அல்ல என்றால், உலகம் என்ன கருதும்?

திராவிட நாடு கேட்பது நியாயமா? கிடைக்குமா? வாழுமா? இவர்களாவது அமைச்சராகிப் பேசுகிறார்கள். இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார் எனது நண்பர் ம.பொ.சி.!

விருந்துக்கு அழைக்கப்படாத வரை, ‘உங்களை விருந்துக்கு அழைக்க வில்லையா?‘ என்று கேட்டால், ‘அழைத்தால் மட்டும போவேனா? என்பார்! அழைத்தார்களா இல்லையா? என்று மீண்டும் கேட்டால், ‘அழைத்தால் மட்டும் போவேனா? என்று பிகுவோடு பேசுவது போல, நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்‘ என்கிறார். நமது குரலுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையிலிருப்பது டெல்லிப் பேரரசு! இருசப்பக் கிராமணித் தெரு சிவஞானமல்ல!

தனிநாடு – அதற்கு ஆதாரம் – அதற்கு வேண்டிய வளம் முதலியவற்றைச் சொல்ல வல்லமையுடையவர்கள் இருக்கிறார்கள்.

நேர பண்டிதர், ‘தரமாட்டோம்‘ என்றால், எதைக் காட்டித் தரமாட்டேன் என்கிறார்?

கையில் உள்ள கத்திக்குப் பயந்துதான்...

இரவு நேரத்தில் இரட்டை மாட்டு வண்டியில் ஊர்ப்பிராயணம் செய்யும் பெண்கள், கழுத்து நகையையும், கை நகையையும் வழியில் வந்தவனிடம் கழற்றிக் கொடுக்கிறார்கள் என்றால், எதனாலே! அவன் கையில் உள்ள கத்திக்குப் பயந்துதான்.

“பட்டாளத்தை வைத்துக் கொண்டு உரிமையை மடக்குவது, கத்தியை வைத்துக் கொண்டு வழிப்பறி நடத்துதற்குச் சமம்!“

‘துப்பாக்கி சுடத் தெரியுமா? கப்பல் விடத் தெரியுமா? விமானம் ஓட்டத் தெரியுமா? – என்று வெள்ளைக்காரன் கேட்டான், ‘நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்‘ என்று பாரதியார் பதில் அளித்தார்.

கோயில் வெடிச் சத்தங்களைத் தான் நாம் கேட்டிருக்கிறோமே தவிர, துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டிருக்கிறோமோ? நாம் கட்டிய கப்பல்கள் – தெப்பங்களைத் தவிர வேறு ஏது?

இவ்வளவும் செய்தவன் அயோக்கியன்!

‘விடுதலை பெறுவதற்காகக் கோட்டை – கொத்தளங்களை இடித்திருக்கிறார்கள் – இன்னுயிரைத் தந்திருக்கிறார்கள் – வேறு நாடுகளில்! ஆனால், வெள்ளையன், கத்தியின்றி இரத்தமின்றி வேட்டுச் சத்தமின்றி விடுதலையைக் கொடுத்தான். கப்பலைக் கொடுத்தான். ஓட்டவும் கற்றத் தந்தான்த, விமானத்தையும் கொடுத்தான் – அதை ஓட்டுவதற்குப் பயிற்சி பெறக் கல்லூரியையும் அமைத்தான்! குண்டுகளைக் கொடுத்தான் – துப்பாக்கிச் சுடும் முறைகளையும் கற்றுக் கொடுத்தான்! இவ்வளவு செய்தவனை, ‘அயோக்கியன்‘ என்றார்கள்.

இவர்கள், ஆங்கிலேயனைப் போல் 100 ஆண்டுகள் ஆண்டால், நேருவின் குடும்பத்திற்கே இந்த நாட்டைக் குத்தகைக்குக் கொடுத்து விடுவார்கள்! எனவேதான் நாங்கள், ‘திராவிடநாடு திராவிடருக்கே‘ என்கிறோம்.

(நம்நாடு - 14, 16-4-1962)