அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘விடுதலைப் போர் வீட்டுக்கொருவர் வாரீர்!‘

“ஆற்றில் நீர் ஓடுகிறது, அதில் குளிக்கவும் செய்கிறோம், காலும் கழுவுகிறோம், குடிக்கவும் செய்கிறோம், அதற்காக அந்த நீர் ஏதும் வருந்துவது கிடையாது“.

“அதைப்போல் நாம் எவர் தாக்கினாலும் அதுபற்றிச் சிந்திக்கத் தேவையில்லை, நமக்கு இப்படிப்பட்ட செயல் ஒன்றும் புதியது அல்ல, ஆகவே, ஆத்திரப்பட வேண்டியது அவசியமில்லை என்று, வேதாரண்யத்தில் நடைபெற்ற தி.மு.கழகம் பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள்.

பல ஆண்டுக்கு முன்பு இங்கு நாடகத்திற்கு வந்த நான், முதல் முறையாகப் பொதுக் கூட்டத்திற்கு இன்று வந்துள்ளேன், இங்கு வருகின்ற வாய்ப்பினை நண்பர்கள் எனக்குப் பலமுறை, தந்தும் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. நான் பொதுக்கூட்டத்திற்கு வரும் முன் இவ்வூராட்சி மன்றத்தில் வரவேற்கப்பட்டேன்.

எனக்கு முன் பேசிய நண்பர்களெல்லாம் தேர்தலில் ஏற்பட்ட தொல்லைகளை எடுத்துச் சொன்னார்கள். தலைவர் பேசுகின்ற நேரத்தில் மாற்றுக்கட்சி நண்பர்கள் – குறிப்பாக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஏதேதோ இழிமொழிகளை அள்ளி வீசியதாகச் சொன்னார்கள்.

‘ஏக இந்தியாவாதி‘ ஆனோம்!

நமக்கு இந்த ஊரில் கிடைத்த வாக்குகளைத் தலைவர் எடுத்துக் காட்டினார். அவர்க் ளஅதை ஏடுத்துச் சொல்லியது இந்தப் பகுதியில் கழகம் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. நாம் வளருவதை மாற்றார் யாரும் வாழ்த்தி வரவேற்பது கிடையாது.

கடையில் வேலை பார்க்கும் கணக்கர் தனக்கு வாரிசுகள் அதிகரித்துவிட்டது கண்டு இந்தத் தொகைக்கு இனியும் இந்தக் கடையில் வேலை பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்து தனிக்கடை வைக்கப்போகிறேன் என்று தன் முதலாளியிடம் எடுத்துச் சொன்னால், அந்தக் கடைக்காரர் முதலாளி உடனே “நீ இங்கே இருந்து உருப்பட்டுக் கொண்டிருந்தாய்த, உனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டதல்லவா? இனி உருப்ட்டாற் போலத்தான். எக்கேடு கெட்டால், எனக்கு என்ன? என்று கூறுவார் அதைப்போலத்தான், நான் டெல்லிக்குப் பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்லும் பொழுது நம்முடைய பழைய நண்பர்கள் கூறினார்கள். ‘அண்ணாதுரை டெல்லி செல்லுகிறான், திரும்பும் பொழுது திராவிடநாட்டை விட்டு விட்டு ‘ஏக இந்தியா‘வாதியாகத் திரும்பி விடுவான். என்று கொள்கையில் நம்பிக்கையுடைய எவரும் இப்படிக் கூறமாட்டார்கள்.

சபலம் அடைந்தவர்கள் கூறுவார்கள்்!

இளம் உள்ளமும், ‘சபல‘ புத்தியும் கொண்ட சிலர் மாறியதன் காரணம் என்ன என்று பார்த்தால் தெரியும். டில்லியில் இறங்கியதும் தெரிகின்ற பெரிய கட்டிடம் செங்கோட்டை, அதை அவர்கள் பார்க்கின்றபோது சற்று ‘சபலம்‘ தட்டுகிறது. செங்கோட்டையின் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள மாபெரும தூண்கள். உள்விரிக்கப்பட்டுள்ள இரத்தினக் கம்பளத்தை ஒத்த விரிப்புக்கள், கை கொடுக்கிறவர்கள் பழைய கவர்கனர்களும் முன்னாள் அமைச்சர்களும், நின்றால் ஏன் என்று கேட்கும் ஆட்கள், பளபளக்கும் இருக்கைகள் இவைகளைக் கண்டு சபலம் அடைந்தவர்கள் ஏதோ கூறுகின்றார்கள்.

இதைவிடப் பெரிய, இதை விடச் சிறப்பு வாய்ந்த இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றக் கட்டிடத்தையும் மற்றவற்றையும் கண்டு, லாலாலஜபதிராய், திலகர், மோதிலால் நேரு, காந்தி இவர்கள் சபலம் அடைந்திருந்தால் இந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற்று இருக்க முடியாது. அவர்கள் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள். அதைப் போலத்தான் நானும். நான் என்ற கொள்கையில் தளராத உறுதியும் நம்பிக்கையும் கொண்டுள்ளவன். தென்னாட்டுப் பணம் தானே இங்கு இப்படிக் கொழிக்கிறது, நம்முடைய உழைப்புத்தானே இங்கு எழுந்துள்ள மாளிகை என்று எண்ணும் பொழுது நாம் விடுதலை பெற்றால் இதைவிடப் பெரிய மாளிகைக்கு நம்நாடு சொந்தமுடையது ஆகாதா? கூடாதா? என்ற எண்ணம் இதயத்தில் இருந்தால் நம்மை எந்தச் சக்தியும் அசைக்க முடியாது.

எல்லா வளமும் இங்குண்டு!

நான் பாராளுமனற்த்தில் பேசினாலும, பேசா விட்டாலும், ‘நாடு பிரிப்பவனாம் இவன்‘ என்று கூறுவார்கள், ஆதலால் நாம் பேசாமலே ‘நாடு பிரிப்பவன்‘ என்று சொன்னால் பேசுவதைவிட, நம்முடைய வாதத்தையே இங்குத் துவக்கி விடுவோம் என்றுதான் நாட்டுப் பிரிவினைப் பற்றிப் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தேன், அவர்கள், ‘நாடு பிரித்தால் வாழ முடியுமா? என்று கேட்கிறார்கள், நான் ஒன்று கூறுகின்றேன் நாட வாழ என்னென்ன தேவை?

ஒரு மணமகன் என்றால், அவனுக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று பெண் வீட்டுக்காரர்கள் எதிர்பார்ப்பார்கள், அதைப் பற்றி மாப்பிள்ளையின் தந்தை பேசுகின்ற பொழுது ‘எனது மகன் மாலை 6 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி விடுவான், இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டான், வெளிப் பெண்களிடம் ஏதும் பேசவும் மாட்டான், பார்க்கவும் மாட்டான், எந்தக் கெட்டப் பழக்க வழக்கமும் கிடையாது – என்று கூறி, ஆதலால் நீங்கள் உங்கள் பெண்ணை எனது பையனுக்கு கொடுங்கள் என்று கூறுவார்.

அதைப்போல, நாடாளுபவர்கள், ‘நாடு வாழ, என்னென்ன வளங்கள் இருக்கின்றன‘ என்று கேட்காமல், ‘வாழுமா‘? என்கிறார்கள். அவர்களுக்குக் கூறுவேன் இந்த நாடு வாழ வேண்டிய அளவிற்கு வளங்கள் இங்கு உண்டு. முதலில் கனிவளம் உண்டு, நீர் வளம் உண்டு. நில வளம் உண்டு. மணவளம் உண்டு. திராவிடத்தில் குடிவளம் 9 கோடி மக்கள்.

வாழுமா என்பதல்ல, வாழ வளமெல்லாம் உண்டு!

நெய்வேலியில் நிலக்கரி, காவிரியின்அடியில் எண்ணெய் ஊற்று, கோலாரில் தங்கவயல், நீலகிரிப் பகுதியில் தங்கம் கிடைக்கிறது. நாட்டு மக்களிடம் நல்ல மனவளம் உண்டு, இப்படி இந்த நாட்டின் வளங்களைக் காட்டித்தான் நாடு பிரிய வேண்டும் என்று கூறுகிறோம்.

இவ்வளவு காரணங்களைக் காட்டிய பிறகும் ஆளும் வர்க்கத்தினர் ‘நாடு பிரிந்தால் வாழுமா?‘ என்கிறார்கள்.

இறுதியாக, ஆளும் கட்சியினர் புதிய சட்டம் ஒன்றும் கொண்டுவர இருக்கிறார்கள். நாட்டு விடுதலை கோருபவர்களைச் சிறையில் பூட்ட வேண்டுமென்று. இந்தச் சட்டம், இரண்டு ஆண்டுகளில் வரலாம், ஆதலால், தென்னாட்டுப் ‘பர்தோலி‘ என்று புகழப்படும் இந்த வேதாரண்யத்தில் வாழும் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டு விடுதலைக்கு வீட்டுக்கு ஒருவரைத் தாருங்கள்.

முன்பு இந்திய விடுதலைக்குத் தந்த அதே ஆதரவை இம்முறை எங்களுக்கும் தாருங்கள்.

(நம்நாடு - 22-5-1962)