திராவிட நாடு திராவிடருக்காக
வேண்டுமென்ற நமது லட்சியத்தைப் பற்றிப் பலர் பலவிதமாகப்
பேசுகிறார்கள்.
ஒரு நாடு, அந்த நாட்டு மக்களிடம்
இருக்க வேண்டுமென்பது எப்படி தவறானதாகும்? சொந்த நாட்டுக்கு
விடுதலை வேண்டுமென்பதற்கு விளக்கமா தேவை?
திராவிட நாடு திராவிடரிடம்தான்
இரக்க வேண்டுமென்பதைக் கூடாதென்று சொல்ல யாரால் முடியும்?
இதை நிர்ணயிக்கும் நீதிமான்கள்
யார்? உலகத்திலேயே கிடையாதே?
வெள்ளைக்காரன், இந்த நாட்டு
மக்கள், ‘உங்களுக்கு ஆளத் தெரியுமா?‘ என்று கூடக் கேட்டான்.
தெரிகிறதோ இல்லையோ! நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்
என்றதும் – வெள்ளையனிடமிருந்த ஒழுக்கமும், ராஜதந்திரமும்
– அரசியல் யூகமும், அவனை இந்திய நாட்டிற்குச் சுதந்திரத்தைத்
தந்துவிட்டு ஓடச் செய்தன.
வீரம் உலாவிய நமது பூமி
சுதந்திரம் மட்டுமல்ல, இவர்களிடம்
இல்லாத ரயிலையும் விமானத்தையும் இராணுவத்தையும் தளவாடங்களையும்
சேர்த்துத் தந்துவிட்டுப் போனான்.
நாமும் இன்ற உணர்கிறோம் –
திராவிட நாடு திராவிடரிடமிருக்க வேண்டுமென்று. இந்த நாட்டு
மக்கள் அத்தனை பேரும் உணர வேண்டுமென்று விரும்புகிறோம்.
இதில் தவறு என்ன?
நமது தந்தையர்கள் வீரத்தோடு
உலவிய பூமியலா இன்று நாம் உலவுகிறோம் என்று எண்ணும்போது
நமக்கு வெட்கம் விலாவைக் குத்துகின்றதே!
இந்தத் தென்னாட்டில் அன்று
வாழ்ந்த மக்களின் வீர உணர்வையும் இன்று நாம் அடிமைகளாய்
இருக்கிறோம் என்னும் நிலையையும் எண்ணும்போது, நம் மனம் எழுச்சிக்
கொள்ளாமலா இருக்க முடியும்.
போர்ப்படை தயாராகட்டும்!
நம்மிடம் என்ன இல்லை – இந்த
நாட்டை நாமே ஆள்வதற்கு? ஆளும் தகுதியும், தேவையான வளமும்
நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. எனவே நமது கழகத் தோழர்கள்
நம்முடைய லட்சியத்தின் உயர்வு கருதி, இந்த நேரத்தில் மிகப்
பொறுப்பாகப் பேசவும், எழுதவும் வேண்டும்.
லட்சியத்தை ஈடேற்ற நமக்கு
நிரம்ப ஆர்வம் வேண்டும் – ஆர்ப்ாட்டம் கூடாது!
எழுச்சி வேண்டும் – வீண் ஆரவாரம்
கூடாது!
நம்முடைய தோழர்கள் போராட்ட வேட்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
நாம் ஒரு நிரந்தரப் போர்ப்படையினராக
இருக்க வேண்டும் – தேவைப்படும்போது களம் புகத் தயாராக இருக்க
வேண்டும்.
(நம்நாடு - 26.8.1954)