அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘விதித்துள்ள தடையைக் திரும்ப பெறுக‘

அசோக் – லேண்ட் தொழிலாளர் தேர்தர் நிதியளிப்புக் கூட்டததில் அண்ணா.

‘போலீஸ் கமிஷனர் மகாதேவன் அவர்கள் நம்மீதுள்ள நல்லெண்ணத்தாலும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தாலும் இந்த மாதம் 24ஆம் தேதி வரை ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறார். கலகம் நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், 24ஆம் தேதிக்குப் பிறகு கலகம் செய்யமாட்டார்களா? அடிதடியில் இறங்க முனைபவர்கள் 24ஆம் தேதிவரை காத்திருப்பார்களாக? பத்தாம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரைதான் கலகம் நடக்கும் என்று மகாதேவன் ஜாதகம் பார்த்தாரா? போலீஸ் அதிகாரி என்ன ஜோதிடரா?

“இரு கட்சிகளும்மோதிக் கொள்ளும் என்று போலீஸ் அதிகாரி கருதுவாரானால் போலீஸ் எதற்கு இருக்கிறது? மோதிக் கொள்ளாமல் தடுத்த நிறுத்தும் ஆற்றலைத்தான் போலீசுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கு என்ன பொருள்?

‘வீண் கலவரம் விளையக்கூடாது என்பதை நான் வரவேற்கிறேன். இரு கட்சி ஊர்வலங்களையும் வேறு வேறு நேரத்தில் – வெவ்வேறு வழிகளில் செல்ல உத்தரவிடும் உரிமை உங்களுக்கு !போலீசுக்கு) இருக்கிறது. அதற்குக் கட்டுப்படும் கடமை எங்களுக்கு இருக்கறிது. ‘ஊர்வலேமே வேண்டாம்‘ என்றால் அதற்கு என்னதான் பொருள்.

‘ஊர்வலம் என்றாலே ஒழுங்காக அணி வகுத்துச் செல்லுதல் என்றுதான் பொருள். ஊர்வலம் நடத்தத்தான் எங்களுடைய தோழர்களுக்கு நான் உத்தரவு கொடுப்பேன். ஊர்வலம் கலைக்கப்பட்டால் பிறகு என்ன நேருமோ எனக்குத் தெரியாது.

‘எனவே, இன்னமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் – வீணான கலவரம் விளையும்என்று கூறி விதித்துள்ள தடையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்‘ என்று நேற்றுச் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில், அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் சார்பில் நடந்த தேர்தல் நிதியளி்புக் சிறப்புக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசுகையில் கேட்டுக் கொண்டும் மேலும் குறிப்பிட்டதாவது –

தடையுத்தரவைத் திரும்பப் பெறுக!

“அப்படிக் கலவரம் ஏற்பட்டால் அதைத் தடுத்து நிறுத்த இந்தப் போலீசுக்குத் திறமை இல்லாதிருந்தால் பட்டாளத்தை வேண்டுமானால் கொண்டு வந்து நிறுத்துங்கள், அதை விடுத்து ஊர்வலமே கூடாது எனத் தடை விதிப்பது ஏன்? நாளைக்குச் சீனாக்காரன் வந்தால்கூட இந்தத் தடை உத்தரவுதானா? தடை போட்டுவிட்டால் அவன் சும்மாயிந்த விடுவானா?

“தடைப்போட்டால் அதற்குத் தலைவணங்காதவர்கள் நாங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? பார்க்கவில்லையா? நேரு வந்த வோது முன்யோசனை இல்லாமல் அரசாங்கம் நடந்து கொண்டது குறித்துப் பின்னாலே காங்கிரஸ் தலைவர்கள்கூட வருத்தப்பட்டுக் கொள்ளவில்லையா? இன்றும் காலம் கடந்துவிடவில்லை, யோசித்துப் பார்க்க அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அவகாசம் இருக்கிறது. எனவே, நன்கு யோசித்து, தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமெனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலிவைக் காட்டுவதா வம்புச் சண்டை

அண்ணா அவர்கள் மேலும் பேசியதாவது –
‘எங்கள் ஊரில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தால், யாராவது ஒரு மாதிரியாக ‘கிராப்‘ சீவியிருந்தால் அவருக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடிக்காத விதத்தில் யாராவது கிராப் சீவியிருந்தால் அந்த ஆளைப் பிடித்துக் கொண்டு வந்து உள்ளே தள்ளே அடிப்பார், தலைமுடி கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருந்தால்், அது சிங்கத்தின் பிடரி மயிர்போல அவருக்குத் தெரிந்தது. அதனால் அவருக்கு, அப்படிப்பட்டவர்களைக் கண்டால் அச்சம் ஏற்பட்டது. அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரைவிடப் பெரிய பதவியில் இருக்கும் மகாதேவனுக்கும் வித்தியாசமில்லை.

“நாங்கள் எங்கள் வலிவைக் காட்டுவதற்காக ஊர்வலம் நடத்துவதாகத் திரு.மகாதேவன் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அப்படித்தான் வலிவைக் காட்டினால் என்ன? நாங்கள் எக்ஙள் வலிவைக் காட்டினால் வேடிக்கை பார்க்கட்டும். மோதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளட்டும். ஒருவர் தனது வலிவைக் காட்ட, வீட்டிற்குள் சோடா புட்டியைக் கையால் உடைத்தால் அதில் என்ன தவறு? தெருவிலே போய்க் கொண்டிருப்பவரைப் போய் குத்துகிறார் என்றால், அது வம்புச் சண்டை. காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடக்கும் இடத்துக்குப் போய், எங்களில் ஒருவர், ‘பார், எங்களுடைய வலிமையை‘ என்று சொன்னால் அது வம்புச் சண்டை, அதே இடத்தில் மறுநாள் எங்களுடைய கூட்டத்தைக் கூட்டி, எங்கள் வலிமை எவ்வளவு இருக்கிறது என்பதைக் காட்டினால் அது வம்புச் சண்டையா?

வேறுபாட்டைக் கவனியுங்கள்

“எனவே, நம்முடைய போலீஸ் அதிகாரி, தம் உத்தரவில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளைக் கூடத் திருத்த வேண்டும்.

“எங்களுக்குச் சரிசமமாக வார்த்தைகளினால் சண்டை போடத்தக்க கட்சி, இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லை. இதை நான் பெருமையுடனும் உறுதியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குச் சமமாகச் சண்டைக்கு வர ஒரு கட்சி முனைகிறது என்றால், அந்தக் கட்சி, சாப்பிட வேண்டிய தயார் தீனியெல்லாம் சாப்பிட்டு, போட வேண்டிய தண்டால், பஸ்கியெல்லாம் போட்டு உடம்பைத் தேற்றிக் கொண்டு, அதன் பிறகுதான் வரவேண்டும்.

“நாங்கள், எங்களுக்குச் சரிசமமாக மதிக்கத்தக்க கட்சி காங்கிரஸ் கட்சி ஒன்றுதான். போலீஸ் கமிஷனர் மகாதேவன் அவர்கள், ஏதோ வேறொரு கட்சியை எங்கள் கட்சியுடன் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பதே சரியல்ல. எனவே, அவர் எங்களைப் பற்றிக் கவலைப்படவும் தேவையில்லை.

“இங்கே பேசிய வி.நடராசனும், கருணாநிதியும், சட்டத்தை உடைப்போம், ஆணையிடுங்கள் அண்ணா‘ என்று ஆவேசத்துடன் சொன்னார்கள். என் வார்த்தைக்கும், இங்கு பேசிய எனது நண்பர்களின் வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். நான் ஒருவன்தான் மகாதேவன் சார்பில் பேசுகிறேன். என் நண்பர்களெல்லாம் உங்கள் !மக்கள்) சார்பில் பேசினார்கள்.

அரசு புறக்கணிக்கக் கூடாது

“மகாதேவன் ஓர் அதிகாரி, அதேபோல் நானும் நமது கழகத்தில் ஓர் அதிகாரி,அதனால் பொறுப்போடு பேசுகிறேன். எனவே இந்தத் தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

“இந்த என் வேண்டுகோளை அரசாங்கம் புறக்கணிக்குமானால் நாளைய தினம் கழகத்தின் பொறுப்பாளர்கள் தக்க ஒரு முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

(நம்நாடு - 12-9-61)