அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


விவசாயக் கருத்தரங்கு


பெரியோர்களே விவசாயப் பெருங்குடி மக்களே, விவசாய உற்பத்தித் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற அதிகாரிகளே, மாவட்ட கலெக்டர் அவர்களே உங்கள் அனைவருக்கும் முதலிலே நான் நீங்கள் இன்றையதினம் அளித்திருக்கின்ற இந்தக் கருத்து விருந்திற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்றையதினம் இங்கே நடந்திருக்கின்ற கருத்தரங்கத்தின் மூலம் நான் பல புதிய கருத்துக்களை பெற்றுக்கொண்டுப்போகிறேன் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயத்தைப் பற்றியும் அதனுடைய பிரச்சினைகளைப் பற்றியும் ஏடுகளிலே நிரம்பப் படித்திருந்தாலும், நான் கல்லூரியிலே எடுத்துக்கொண்டப் பாடம் கூடப் பொருளாதாரம்தான்; நிரம்ப அதைப்பற்றி ஏடுகளிலே படித்திருந்தாலும் நேரடியாக விவசாயப் பிரச்சினைகளைக் கவனித்துக்கொண்டு வருகிற உங்கள் மூலமாக கேட்பதில் நான் பெருகின்றக் கருத்து அந்த ஏடுகளிலே கிடைத்தக் கருத்தைவிட பன்மடங்கு தரமானது என்பதனை இன்றையதினம் நான் உணர்கிறேன். இதைப்போன்ற பல கருத்தரங்கங்கள் தமிழகத்திலே பல்வேறு பகுதிகளிலே நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மிகமுக்கியமான காரணம் இன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்ற நாங்கள் ‘எங்களுக்குத் தெரியாத விஷயங்கள் பல இருக்கின்றன’ என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆகையினாலே எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களைப் பற்றி தெரிந்தவர்கள் மூலமாக அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக யார் யார் எந்தெந்தப் பிரச்சினையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் ஒருங்கு அழைத்து அவர்கள் மூலமாக அந்தத் தொழிலிலே உள்ள நுட்பங்களையும் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களையும் அவைகளை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அறிந்துகொள்வதிலே மிகுந்த ஆர்வத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். அது நல்ல பலனையும் தந்திருக்கின்றது. அந்தப் பலனின் காரணமாக நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிர்வாகத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட சிக்கல்களையும் எடுத்துச்சொல்லப்பட்டக் குறைபாடுகளையும் நீக்குவதற்கான வழிமுறைகள் கூட எங்களுக்கு ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொண்டு வருகின்றது. ஆகையினால் முதலிலே நீங்கள் இந்தக் கருத்தரங்கத்தின் மூலம் எங்களுக்கு நல்லக் கருத்துக்களைக் கொடுத்திருப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்லக் கருத்துக்களைக் கொடுத்தது மட்டுமல்லாமல் சென்னையிலே ஏற்பட்டத் தீவிபத்தின் காரணமாக துயரப்பட்டிருக்கின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்ற முறையில் திரட்டப்பட்டுவருகின்ற நிதிக்காக நம்முடைய மாவட்டக் கலெக்டர் அவர்களின் பெருமுயற்சியினாலே இந்த மாவட்டத்திலே உள்ள பொது நிறுவனங்கள், இந்த மாவட்டத்திலே உள்ள நண்பர்கள் இவர்களெல்லாம் சேர்ந்து மாவட்டக் கலெக்டர் அவர்கள் மூலமாகத் தந்திருக்கின்ற பெரியத் தொகைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அதைத் தருகின்றபோது ‘சிறியத் தொகை’ என்று சொன்னார்கள். ஆனால் அது பெரியத் தொகை என்பது மட்டுமல்ல; அவர்கள் பெருங்குணம் படைத்தவர்கள் என்பதனாலேதான் அவர்கள் அதை ‘சிறியத் தொகை’ என்றுக் கூறிப்பிட்டார்கள். அதுவே அவர் எடுத்துக்கொண்டிருக்கின்ற முயற்சியின் பெருந்தன்மையை நன்றாக எடுத்துக்காட்டுகின்றது. அதைப்போலவே பல தனிப்பட்ட நண்பர்கள், ஆசிரியர் அமைப்புகள், வேறு பல நிறுவனங்களிலிலே பணியாற்றுகின்றவர்கள், பள்ளிக்கூடத்திலே உள்ள மாணவர்கள் இவர்களெல்லாம்கூட இன்றையதினம் அதற்கு நிதி அளித்திருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவைகள் அவ்வளவும் தஞ்சைத் தரணியினுடைய தனிப் பண்புகள் என்பதனை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வளவைப் பெற்றுக்கொண்டப் பிறகு இன்னும் உங்களிடத்திலே நான் கேட்பதற்கு உரிமை பெறுகிறேன். ஏனென்றால் கொடுப்பவர்களைப் பார்த்துக் கேட்பதுதான் பெறுவதற்கு வழியே தவிர கொடுத்துப் பழக்கப்படாதவர்களைக் கேட்பது வீண் வேலையாக முடியும். ஆகையால் நான் இன்றையதினம் உங்களிடத்திலே கேட்டுக்கொள்வது துயர் துடைக்கின்றக் காரியத்தில்இ உணவு நெருக்கடி என்றத் துயர் துடைக்கின்ற காரியத்தில்இ பசிப் பிணியைக் போக்குகின்ற காரியத்தில் தமிழகத்தில் தஞ்சைத் தரணியைத்தான் நாங்கள் மிக அதிகமாக நம்பிக்கொண்டிருக்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல ‘விவசாய உற்பத்தித் துறையில் ஒரு மாபெரும் புதிய புரட்சி நடப்பது தஞ்சைத் தரணியிலே’ என்று இந்தியா முழுவதிலேயும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல, நமக்குக் கடன் கொடுக்கின்ற வெளிநாட்டுக்காரர்கள்கூட தஞ்சையிலே சாகுபடி எப்படி இருக்கிறது, தஞ்சையிலே ‘குறுவை’ எப்படி இருக்கிறது, ‘தாளடி’ எப்படி இருக்கிறது ‘சம்பா’ எப்படி இருக்கிறது என்று கேட்டுவிட்டுத்தான் கடன் கொடுக்கிறார்களே தவிரஇ யார் மந்திரியாக இருக்கிறார்கள்? என்று கேட்டு அந்தக் கடனைக் கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு தஞ்சைத் தரணி உலகப் புகழ் பெற்றிருக்கின்றது. ஆனால் அதிலே இருக்கின்ற ஒரு உண்மை, கசப்பான உண்மை, ஆனால் உண்மை, என்ன என்றால், நம்முடைய நாட்டு வளத்தைப் பற்றிஇ நம்முடைய நாட்டின் விவசாயத்தைப் பற்றிஇ நம்முடைய நாட்டின் நீர்வளத்தைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பதைவிட அதிகமாக வெளிநாட்டினருக்குத் தெரிந்திருக்கிறது. அமெரிக்கரிடத்திலே பேசிக்கொண்டிருந்தால் அவர் தஞ்சாவூரில் வடிகால் இல்லாதக் குறையை தஞ்சைத் தரணியிலே உள்ளவர்கள் சொல்வதைவிட மிக விளக்கமாகச் சொல்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன என்றால் தஞ்சைத் தரணியில் விவசாய உற்பத்தி பெருகினால் தமிழகத்தினுடைய உணவு நெறுக்கடி பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுவிடும் என்று அமெரிக்கா வரையில் இன்றையதினம் அறிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் உங்களுடையப் புகழ் பெரிது. புகழ் பெருகப் பெருகப் பொறுப்புப் பெரிதாகிவிடும். பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றபொழுது பல சங்கடங்கள் வரும். அந்தச் சங்கடங்களிலே சிலவற்றைத்தான் நம்முடைய நண்பர் பெரியவர் துரைசாமி ஐயர் அவர்கள் சொன்னார்கள். அது தனிப்பட்ட முறையிலே ஏற்பட்ட சங்கடங்கள் அல்ல. பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றபோது அந்தச் சங்கடங்கள் நிச்சயமாக ஏற்பட்டுத்தான் தீரும். ஆனால் அந்தச் சங்கடங்களைத் துடைக்க முடியாது என்றோ, அந்தச் சங்கடங்கள் துடைக்கப்படத் தேவையில்லை என்றோ நான் வாதாடுகிறேன் என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு சமயம் இந்தத் தலைமுறை முழுவதுமே சங்கடத்துக்கென்றே பிறந்த தலைமுறை என்று சொன்னாலும் தவறு இல்லை. இந்தத் தலைமுறையிலே நாம் பல சங்கடங்களைத் தாங்கிக்கொண்டால் வருங்காலத் தலைமுறைகள் நம்மைவிட நிம்மதியாக வாழ்வதற்கு வழி தேடிக்கொள்ள முடியும்.

உழவர் பெருங்குடி மக்களாகிய உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப்போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவும் இந்தத் தலைமுறையே தின்று தீர்த்துவிடுவது என்றால் அடுத்தத் தலைமுறைக்கு மிச்சமெதுவுமிருக்காது. ஆகையால்தான் நாம் உழைக்கின்ற உழைப்பு நம்முடைய நல்வாழ்வுக்கு மட்டுமல்ல் இந்தத் தலைமுறையின் நல்வாழ்வுக்கு மட்டுமல்ல் வருங்காலத் தலைமுறைக்காகவும் நாம் உழைக்கிறோம் என்பதை நாம் எண்ணிப் பார்ப்போமானால் வழிவழி வருகின்றத் தலைவர்களுக்காக நாம் இந்தத் தலைமுறையில் சில சங்கடங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை தேசியக் கடமையாக ஒவ்வொருவரும் கருதவேண்டும் என்று நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றை நாம் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். உலகத்திலே விவசாயத்திலே தேறியிருக்கிற எல்லா நாடுகளையும் விட நம்முடைய நாடு உற்பத்தித் திறனில் கடைசி கட்டத்திலே இருக்கிறது. நீர்வளமிருக்கலாம் நிலவளமிருக்கலாம், உழைப்பு வளமிருக்கலாம், அதைப் பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்கள் வண்டிவண்டியாக இருக்கலாம். ஆனால் விவசாய உற்பத்தியின் அளவையை எடுத்துக்கொள்கிற நேரத்தில் விவசாயத்திலே ஈடுபட்டிருக்கின்ற மற்ற நாடுகளைவிட நம்முடைய நாட்டின் உற்பத்தியின் அளவு மிகக் குறைவு. நம்மைவிடக் குறைவான நிலம் வைத்துக்கொண்டு நம்மைவிடக் குறைவான ஆட்களை வேலைக்கு வைத்துக்கொண்டு பிற நாடுகள் நம்மைவிட அதிக அளவுக்கு உற்பத்தி செய்து, நமக்கே உணவுப்பொருளை கடன் கொடுக்கக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை. அமெரிக்கா நாட்டில் நூற்றுக்கு பத்துப் பேருக்கு மேல் விவசாயத்திலே ஈடுபட்டில்லை. நம்முடைய நாட்டில் நூற்றுக்கு எண்பது பேர் விவசாயத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கு பத்து பேர்கூட ஈடுபடாத அமெரிக்க நாட்டிலே, தானும் உணவு உற்பத்தி செய்துகொண்டு நமக்கும் மற்றவர்களுக்கும் தருகின்ற அளவுக்கு அங்கே அமோகமான விளைச்சல் கிடைக்கின்றது. ஒரு அமெரிக்க உழவன் உழுகின்றான் என்றால் அவனுக்கு மாத்திரமல்ல அவனுக்கும், உலகத்திலே ஒரு கோடியிலே உள்ளவர்களுக்கும் சேர்த்து அவன் உழைத்துக் கொண்டிருக்கின்றான். ஆகையினாலே பொதுப்படையான ஒரு உண்மை; எல்லோரும் ஒப்புக்கொள்கிற ஒரு உண்மை; நம்முடைய நண்பர் துரைசாமி ஐயரும், நம்முடைய நண்பர் ஞானசம்பந்தமும் இரண்டுபேரும் சேர்ந்து ஒத்துக்கொள்கிற ஒரு உண்மை; உற்பத்தி பெருகியாகவேண்டும் என்பது. உற்பத்தி எப்படிப் பெருகுவது, உற்பத்தி பெருகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று துரைசாமி ஐயருடைய வாதம் ஒன்றாக இருக்கலாம், ஞானசம்பந்தத்தின் வாதம் ஒன்றாக இருக்கலாம். நான் இரண்டு பேருக்கும் சேர்ந்து சர்க்கார் நடத்துகிறவன். ஆகையினால் எனக்கிருக்கின்ற அக்கறையெல்லாம் நீங்கள் ரெண்டு பேரும் எப்படியாவது ஒன்றுபட்டு உற்பத்தியைப் பெருக்கிக் கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் ஒன்றுபடுவதற்கு என்னுடையத் துணை தேவையென்றால் நான் உங்கள் வீட்டு வாசல்படியில் காத்துக்கொண்டிருக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அவரவர்கள் தங்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லிவிட்டு துரைசாமி ஐயர் ‘குத்தகை பாக்கி வரவில்லை’ என்று சொல்லி, ஞானசம்பந்தம் ‘விவசாயக் கூலிக்குப் போதுமான வருவாய் இல்லை’ என்று சொல்லி என்னைப் பட்டினிப் போடாதீர்கள் என்று மட்டும் உங்களை நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு இதற்கு எதைச் செய்தால் நல்லது என்பது ஓரளவுக்கு அறிந்திருக்கிற பிரச்சினைகள். நான் கருதுகிறேன், இன்னும் ஒரு பத்து வருடம் பதினைந்து வருடத்திற்குப் பிறகு, நிலத்திற்கு சொந்தக்காரன் இவன் என்றும், இந்த நிலத்திலே உழுகிறவன் இவன் என்றும் பேதம் பிரித்துக் காட்டப்பட முடியாத அளவுக்கு நில உடமையாளர்கள் அவருடைய வீட்டுப் பிள்ளைகள் எம்.ஏ. படித்தாலும் பி.ஏ. படித்தாலும் பி.எஸ்ஸி. படித்தாலும் பி.காம். படித்தாலும் ட்ராக்டர்களை ஓட்டிக்கொண்டு தங்கள் நிலத்தைத் தாங்களே உழுகின்ற காலம்தான் நம்முடைய நாட்டினுடைய பொற்காலமாக இருக்க முடியும். ‘மிராசுதாரர் என்றால் நிலத்துக்கு உடமையாளர். அந்த உடமையாளராக இருப்பதற்கு அந்தஸ்து என்ன என்றால் உழைக்காமல் இருப்பதுதான்’ என்ற பழைய மரபு நிச்சயமாக அழிந்துகொண்டு வருகிறது. அதை அழித்துவிட்டோம் என்று சொல்வதைவிட அது தன்னாலே அழிந்துகொண்டு வருகிறது. காரணம் என்ன என்றால் ஏராளமான நிலம் ஒருவரிடத்திலே இருந்த காலத்தில் அவருக்கே எங்கே நிலம் இருக்கிறது என்று தெரியாமல் எந்த நிலத்திலிருந்து எது வந்தது என்று தெரியாமல்; அவர் மோட்டார் ஏறி போகின்றபொழுது டிரைவர் சொல்லுவார் “நமக்கு இந்தப் பக்கத்திலே நாலு வேலி உண்டு” என்று. “இந்தப் பக்கத்திலே ஏதுடா?” என்று கேட்பார் அவர். “உண்டுங்க, அம்மா சொன்னார்கள்” என்பார். “அப்படியா! அப்பாடியானால் இருக்கும்” என்று எண்ணிக்கொண்டு வந்த மிராசுப் பரம்பரை கடைசி தடவையாக உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனி எந்த அளவுக்குத் தங்களிடத்திலே நிலம் இருந்தால் நேரடியாகப் பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு நிலத்தை வைத்துக்கொண்டிருப்பதுதான் பாதுகாப்புக்கும் நல்லது. பயிர் வளர்ச்சிக்கும் நல்லது. குடும்பத்திற்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. ஏராளமான அளவுக்கு நிலம் இருப்பது, ஒரு காலத்திலே அந்தஸ்துக்கு அறிகுறி. ஏராளமான நிலம் இப்போது இருப்பது வாழ்க்கையினுடைய ஆபத்துக்கு அறிகுறி. ஆகையினாலே கட்டுக்கடங்கிய அளவுக்கு நிலத்தை வைத்துக்கொண்டு அதிலே உழுவதற்கென்றே ஒருவன் பிறந்தான் என்று கருதாமல் நம்முடைய நிலம், நாம் உழவேண்டும். நம்முடைய நிலம், அதை நாம் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு நில உடமையாளர்களுக்கும், இன்று உடமையாளர்களாக இல்லாமல் இருக்கின்ற விவசாயக் கூலிகளுக்கெல்லாம் நிலம் கிடைக்கின்ற ஒரு திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகின்ற வரையில் நிறைவேற்றப்படுகின்றபொழுது அவர்களும் உடமையாளர்கள் ஆகின்ற ஒரு காலம் வந்து உடமையாளர்கள்-உழைப்பாளர்கள் என்று இரண்டு வர்க்கம் இல்லாமல் உடமைக்கும் சொந்தக்காரர்கள், உழைப்பிற்கும் சொந்தக்காரர்கள் என்ற நிலை மாறவேண்டும். அது இன்று பேசி நாளை தீர்ந்துவிடுகின்ற பிரச்சினை அல்ல. ஆனால் அந்த லட்சியத்தை இந்த அரசு முதல் லட்சியமாகக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறது. அப்படி ஆராய்ந்து கொண்டிருக்கின்ற திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு அக்கறையும் ஆதரவும் நிரம்ப நாட்டிலே இருப்பதையும் இந்த அரசு அறிந்திருக்கிறது.
ஆனால் இப்போது நமக்கிருக்கின்ற முக்கியமான பிரச்சினை, நாம் உற்பத்தியைப் பெருக்குவதற்கு செய்யவேண்டியக் காரியங்களை செய்திருக்கிறோமா? ‘நாம்’ என்று நான் குறிப்பிட்ட நேரத்தில் நிலத்திற்கு உடமையாளர்கள், அதிலே பாடுபடுகின்ற விவசாயப் பெருங்குடி மக்கள், இவர்களுக்குப் பொறுப்பாக விவசாயத்திற்குத் தேவையான வசதிகளைத் தேடிக்கொடுக்கவேண்டிய பொறுப்பிலே உள்ள அரசுஇ ஆகிய இத்தனையும் சேர்ந்ததுதான் ‘நாம்’ என்பது. இதிலே மழையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அது எந்த அரசுக்கும் கட்டுப்பட்டதல்ல. ஆகையினால் அதை நான் இந்தப் பட்டியலிலே சேர்க்கவில்லை. அரசைப் பொறுத்தவரையில் ஒன்றை நான் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்துவிட்டதாக இந்த அரசு ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. நாங்கள் செய்யத் தவறியவை மிகமிக அதிகமான அளவுக்கு இருக்கின்றன. அதிலே நம்முடைய நண்பர் பட்டுக்கோட்டை சீனிவாசய்யர் அவர்கள், அதிலே நானும் அவரும் சட்டசபையில் இருந்த நாட்களில் ஒவ்வொருநாளும் பேசுவார். அவருடைய கட்சியினுடைய தலைவர்களுக்கே கூட அவர்களிடத்திலே அப்போது கோபம் வரும். நான்தான் அப்போது அந்தத் தலைவர்களுக்கு “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் பேசட்டும் பல விஷயங்கள் அவர் சொல்லுவார்” என்று நான் அவர்களுக்கு சிபாரிசு செய்தேன். அவர் நல்ல உழவர் பிரச்சினைகளை அறிந்து வைத்துக்கொண்டு சட்டமன்றத்திலே பேசியிருக்கின்றார்கள். இன்றையதினம் அவர்கள் பேசுகின்றபோதுகூட நான் 1957-58 ல் எதைஎதைக் கேட்டேனோ அதைத்தான் இன்றையதினமும் கேட்டேன். அதிலிருந்து அவர் புதிதாகப் பேசப் பழகவில்லை என்று குறைசொல்லுகிறேன் என்று எண்ணாதீர்கள். பிரச்சினைகள் அப்படியே இருப்பதாலே அவைகளை அவர்கள் அப்படியே எடுத்துச் சொன்னார்கள். அதையேதான் என்னுடைய நண்பர் கே.பி.எஸ்.மணி அவர்களும் சொன்னார்கள், மாரிமுத்து அவர்களும் சொன்னார்கள். 20 வருடங்களாக இதைத்தானே பேசிக்கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இதிலே என்ன வித்தியாசம் என்றால் இதை முதலிலே பேசியபொழுது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு ஐந்து வருடம் அதை ஒப்புக்கொள்ளவேவில்லை. ‘உரம் போட்டால் உற்பத்தி பெருகும்’ என்பதை நாம் இருபது வருடமாக சொன்னாலும் முதல் பத்து வருடத்தில் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ‘உரம் போட்டால் பூமி வெந்துவிடும்; உரம் போட்டால் சத்து குறைந்துவிடும்; உரம் போடச்சொல்லிச் சொல்வதே யாரோ உரக்கம்பெனியாரிடத்திலே கமிஷன் வாங்கிக்கொண்டு பேசுகிற பேச்சு’ என்றெல்லாம் ஒரு பத்து வருடங்கள் நாம் காலத்தை ஓட்டிவிட்டோம். ஆனால் இப்போழுது இருபது வருடங்களாகச் சொல்லப்பட்டுவந்த உண்மைகளில் மிகப்பெரும்பாலான அளவுக்கு உண்மைகள் மக்களால் அவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. இனி அதை செயல்முறையிலே நடத்துவது எப்படி? அதற்கு அரசு என்ன துணைபுரிவது? என்ற முறையிலேதான் அந்தக் கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ஆகையினால் இருபது வருடங்கள் வீணாகிவிட்டன என்பது பொருளல்ல. இருபது வருடங்களில் நாம் தெரிந்துகொண்டோம், தெளிவுபெற்றோம், துணிவுபெற்றோம், இப்பொழுது செயலிலே ஈடுபட இருக்கிறோம். ஆகையினாலே படிப்படியாக நாம் முன்னேறிவருகிறோம் என்பதனை இந்த இருபது வருடங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

அதைப்போலவே உற்பத்திப்பெருக்கத்திலேயும் ஆண்டுக்கு ஆண்டு நாம் ஓரளவுக்கு வளர்ந்தபடிதான் இருக்கிறோம். உற்பத்திப் பெருக்கமே இல்லை என்று நான் சொல்வதற்கில்லை. போதுமான அளவுக்கு இல்லை. தேவையான அளவுக்கு இல்லை. மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 'சரி' என்று சொல்லத்தக்க அளவுக்கு இல்லை என்றுதான் சொல்லுகிறோமே தவிர, முன்னாலே காடுகளாக இருந்த இடங்கள் - கறம்புகளாக இருந்த இடங்கள் இன்றையதினம் நிலங்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. முன்னாலே புஞ்சைக்காடுகளாக இருந்தவைகள் இன்று நன்செய் நிலங்களாக மாறியிருக்கின்றன. முன்னாலே ஒரு போகம் இருந்த இடம் இந்தத் தடவை இரண்டுபோகமாக்கப்பட்டிருக்கிறது. முன்னாலே கிடைத்ததைவிட இப்போது அதிகமாக கிடைக்க வழி இருக்கிறது. அதிலே தஞ்சைத் தரணியைப் பொருத்தவரையில் வேகத்திலே பின்தங்கியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே நிலம் இருப்பதாலே ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு பிணி வந்தாலும் ‘நம்மை மிஞ்சுவார் இல்லை’ என்ற அளவுக்கு நிலம் இங்கே ஏராளம். நீங்கள் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் வட ஆற்காடு மாவட்டம் தஞ்சை மாவட்டத்தைப்போல நீர்வளம் அதிகம் உள்ள மாவட்டம் அல்ல. அதற்கென்று எங்கேயும் மேட்டூர் இல்லை. அதற்கு காவேரி அன்னையினுடைய கருணை கிடைப்பதில்லை. வறண்டப் பிரதேசம். அப்படிப்பட்டப் புஞ்சைக் காடுகள் நிரம்பியிருக்கின்ற வடாற்காடு மாவட்டத்தில் வெறும் கிணறுகளைத் தோண்டி அதிலே மின்சாரப் பம்புச்செட்டுகளை அமைப்பதன் மூலம் பத்தே வருடத்தில் முன்னாலே பற்றாக்குறையாக இருந்த அந்த மாவட்டம் இன்றையதினம் உபரிமாவட்டமாக மாறியிருப்பது மட்டுமல்லாமல் ஒரு நிலத்திலே கிடைக்கின்ற உற்பத்தியினுடைய அளவினைக் கணக்கெடுத்தால் இரண்டாவதாகவோ முதலாவதாகவோ அது வந்திருக்கின்றது. ஆகையினாலே தஞ்சைத் தரணியிலே உள்ளவர்களும் இப்பொழுது மேற்கொண்டிருக்கின்ற இந்த முயற்சியை இன்னும் தீவிரமான முறையிலே அவர்கள் அதிலே ஈடுபடுவார்களானால் இப்பொழுது நம்முடைய மாவட்டக் கலெக்டர் அவர்களுடைய அருமையான முயற்சியின் மூலம் புதிய 'ஏடிடி' என்ற புதிய ரகத்தை அதிக அளவிலேயும் இரண்டாவது முறையாகவும் நடுவது என்றிருக்கின்ற திட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்த ஆர்வத்தை இன்னும் நல்ல விதத்திலே செயல்படுத்துவீர்களானால் நிச்சயமாக இந்த அக்டோபர் அறுவடை என்பது இந்தியாவில் உள்ள மற்றப் பகுதிக்காரர்கள் பார்த்து தஞ்சைத் தரணியிலே உள்ளவர்களை பாராட்டத்தக்க விதத்திலே அது இருக்கும் என்பதில் நாமெல்லாம் பெருமைப்படலாம். நான் எல்லோருக்குமே அதைத்தான் சொல்லுகிறேன். கேரளத்திலே இருந்து என்னிடத்திலே ‘அரிசி வேண்டும்’ என்று கேட்கின்றபொழுது ‘அக்டோபர் வரையிலே பொறுத்திருங்கள்’. ஆந்திராவிலே உள்ளவர்கள் “இன்னும் எத்தனை நாளைக்கு நெல்லூரிலே இருந்து அரிசி வரவேண்டும்?” என்று கேட்கிறபொழுது “அக்டோபர் வரையில்தான், அதற்குப் பிறகு உன் தயவு வேண்டாம்.” டெல்லியிலே உள்ளவர்கள் “பற்றாக்குறை உள்ள இடங்களுக்குக் கொஞ்சம் அரிசி கொடுங்கள்” என்று வாரத்திற்கு மூன்று தபாலாகிலும் மூன்று தந்தியாகிலும் அனுப்புகிறார்கள். அதற்கு அனுப்புகிற ஒவ்வொரு பதிலிலும் “றயவை வடைட ழஉவழடிநச” ரொம்ப நம்பியிருக்கிறேன் உங்களை. காரணத்தோடு நம்பியிருக்கிறேன். உரிமையோடு நம்பியிருக்கிறேன். உங்களுடைய திறமையிலே நம்பிக்கை வைத்து நம்பியிருக்கிறேன். நீங்கள் தஞ்சைத் தரணியிலே உள்ளவர்கள் நம்பினவர்களை கைவிட்டதில்லை என்பது உங்களுடைய வரலாற்றுச் சிறப்பு. ஆகையினால் நீங்கள் எத்தனை பிரச்சனைகள் சங்கடங்கள் இருந்தாலும் இந்த முறை எடுத்துக்கொண்டிருக்கிற உற்பத்திப் பெருக்கத்தில் தனிக் கவனம் செலுத்தி மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் விட இந்தப் பிரச்சனைக்குத்தான் முதலிடம் தரவேண்டும் என்ற அளவுக்கு நீங்கள் அக்கறை காட்டுவீர்களானால் உணவு நெருக்கடியை நாம் தீர்த்துக்கொள்ளலாம்.

பசிப்பிணியைத் தீர்ப்பதை, பசியை ‘பிணி’ என்று சொன்னதே தமிழர்கள்தான். மற்றப் பிணிகளைப்போல பசி என்பது ஒரு பிணி என்று சொல்லி சங்க இலக்கியத்திலே வள்ளல்களை “பசிப்பிணி மருத்துவர்” என்றே அழைத்திருக்கின்றார்கள். ‘வள்ளல்களுக்கு வள்ளல்கள்’ என்று பெயரிடுவது மட்டுமல்லாமல் பசிப்பிணி மருத்துவர், பசி என்ற நோயைத் தீர்க்கின்ற மருந்து கொடுக்கின்றவர் என்றே அழைத்திருக்கின்றார்கள். தஞ்சைத் தரணி தமிழகத்திற்கு பசிப்பிணி தீர்க்கின்ற மருத்துவர்களாக உங்களை நீங்கள் கருதிக்கொள்ளவேண்டும். மருத்துவர்களுக்கு சலிப்பு இருக்கலாம்இ களைப்பு இருக்கலாம்இ கட்டணம் போதுமானதாக இல்லை என்ற கவலை இருக்கலாம். ஆனால் இவைகள் எல்லாவற்றையும் விட பசிப் பிணியைத் தீர்த்தோம் என்ற தெம்பு இருக்கிறதே, அதற்கு நிகர் எந்த சப்சீடியும் ஆகாது. சப்சீடி கொடுக்கலாம்; சப்சீடி கொடுத்துவிட்டால் மட்டும் எதிலிருந்து நான் கொடுக்கப்போகிறேன்? உங்களிடத்திலே ஒரு கையாலே வாங்கி எண்ணிப்பார்த்து சர்க்கார் செலவுக்கென்று கொஞ்சம் வைத்துக்கொண்டு அதிலிருந்துதான் திருப்பித் தரப்போகிறேனே தவிர சப்சீடி தருவதற்கென்று தனியாகவா நிதி இருக்கின்றது? சமுதாயம் தருகின்ற பணத்தை பல்வேறு வகைகளுக்கு பிரிப்பதுதான் சர்காருடைய கவலையே தவிர, சர்க்கார் என்பது பணம் உண்டுபண்ணுகிற எந்திரம் அல்ல. அப்படி ஏதாகிலும் கொஞ்சம் பணம் உண்டுபண்ணுகிற எந்திரம் இருந்தாலும் அது வடக்கே நாசிக்கிலே இருக்கிறதே தவிர சென்னையிலே இல்லை என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். ஆகையினால் உங்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவையோ அவைகளை சொல்லுகிற நேரத்தில் அதை இந்தந்த வழியிலே பெறலாம் என்பதையும் நீங்கள் அருள்கூர்ந்து எனக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் இப்போது சொல்லியிருக்கின்ற பல கருத்துக்களில் ஒன்றைக்கூட என்னாலே மறுத்துப்பேச முடியவில்லை. எல்லாம் நியாயமானவைகள். எல்லாம் உண்மையானவைகள். எப்பொழுதுமே கொஞ்சம் நியாயக் குறைவான விஷயத்தை யாராவது பேசினால் மறுப்பது எளிதாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து நியாயத்தையே சொல்லியிருக்கிறபொழுது நான் எதை மறுக்கப்போகிறேன்; எதை மறைக்கப்போகிறேன்; எதை குறைக்கப்போகிறேன். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இந்த நியாயத்தை நடத்துவதற்கு கொஞ்சம் காலம் கொடுங்கள். வாய்தாதான் வாங்குகிறேன். வழக்கைத் தள்ளிவிடவில்லை. கொஞ்சம் காலம் கொடுங்கள். அதிகாரியிடத்திலே கலந்து பேசி எவை எவைகளை நல்லமுறையிலே தீர்க்க முடியுமோ, அவைகளைத் தீர்பபதற்காக நான் நிச்சயமாக அக்கறைக் காட்டுவேன் என்பதனை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை பற்றி அவரவர்கள் தங்கள் தங்கள் பகுதியிலே இருந்து இருக்கின்ற குறைகளையெல்லாம் எடுத்துச்சொன்னார்கள். அவைகளை காதுகளிலே கேட்கிறபோழுதே தீர்த்து விடக்கூடிய குறைகள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் உடனே ‘அவைகளுக்கெல்லாம் உத்தரவிட்டுவிடுகிறேன்’ என்று நான் சொல்லுவேனானால்இ முன்னாலே முதலமைச்சராக இருந்த காமராஜ் அவர்கள் அப்படித்தான் பாகல்மேடு என்ற இடத்திலே ஒரு மகாநாடு போட்டு எல்லோரையும் வரச்சொல்லி அவரவர்கள் கேட்டதற்கு “தந்தேன் தந்தேன்” என்று உத்தரவிட்டுவிட்டு பிறகு சர்க்காருடைய செயலகத்திற்கு போனவுடனே ‘இதையெல்லாம் தந்துவிட்டதாகச் சொன்னீர்களே, பட்ஜெட்டிலே எங்கே இடம் இருக்கிறது?’ என்று கேட்டு அதற்குப் பிறகு இன்னொரு பாகல்மேடு வேண்டாம் அவர் நிறுத்திவிட்டார்கள். அந்தக் கசப்பான அனுபவம் தெரிந்திருக்கிற காரணத்தினாலே நீங்கள் கேட்டுக்கொண்டவைகளையெல்லாம் உடனடியாக நான் உத்தரவிட்டுத் தீர்த்துவிடுகிறேன் என்று சொல்லாமல் இருப்பதற்கு அதுதான் காரணம். ஆனால் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அதிகாரிகளிடத்திலேயும் கலந்து பேசி வேளாண்மைத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், உணவு அமைச்சர் ஆகிய அனைவரிடத்திலேயும் கலந்து பேசி எவையெவைகளைத் தீர்க்க முடியுமோ அவைகளைத் தீர்ப்பதில் என்னைப் பொறுத்தவரையிலே நிதியமைச்சர் என்ற முறையிலானாலும் சரி முதலமைச்சர் என்ற முறையிலானாலும் சரி என்னைப் பொறுத்தவரையிலே ஒருதுளியும் தயக்கம் காட்டாமல் அந்தக் குறைகளை நீக்குவதற்கு நான் வழிவகையைக் கண்டுபிடிக்கின்றேன் என்பதில் உங்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகின்றேன்.

அதிலே உடனடியாக நான் செய்யக்கூடியது என்று நான் சொல்லவேண்டும் என்று விரும்பியதில் நீங்கள் இந்த உரங்கள் விற்பதில் தனியார் விற்பதற்கும் கூட்டுறவிலே விற்பதற்கும் விலை ஏற்றம் இருக்கிறது என்று சொன்னீர்கள். அதை நான் இப்பொழுது விசாரித்துப் பார்த்து கூட்டுறவுத்துறையாரிடத்தில் கலந்து பேசியதில் இனி அதனாலே கூட்டுறவுத்துறையாளர்களுக்கு ஓரளவுக்கு கைப்பிடிப்பு ஏற்பட்டாலும் அல்லது ஆதாயத்திலே ஏதாகிலும் குறைவு வந்தாலும் அந்த உரத்தை குறைந்த விலைக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றேன். அவர்களும் டன் ஒன்றுக்கு 400 ரூபாய் என்ற அளவுக்கு அந்த விலையைக் குறைத்து உரத்தை உங்களுக்குத் தருவதற்கு கூட்டுறவுத் துறையினர் ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியினை உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்னொன்று ‘இந்த இரண்டாவது சாகுபடிக்குத் தண்ணீர் விடுவதற்கு தண்ணீர் வரி போடுகின்றார்கள்; அது மிக மிக அதிகமான அளவுக்கு இருக்கின்றது’ என்று எடுத்துச் சொல்லப்பட்டது. நான் தஞ்சையைப் பொருத்தவரையில் நம்முடைய மாவட்டக் கலெக்டர் அவர்களைக் கேட்டேன் “அதை தள்ளிக்கொடுத்துவிட்டால் எவ்வளவு பணம் கைப்பிடிப்பு ஏற்படும்?” என்று. ‘முப்பது லட்சம் ரூபாய்’ என்றார்கள். முப்பது லட்சத்தைத் தள்ளிவிடுவது கஷ்டம் அல்ல. ஆனால் தஞ்சாவூருக்கு அந்த இரண்டாவது போகத்திற்கு நான் தள்ளுபடி செய்துகொடுத்துவிட்டு முப்பது லட்சத்தைத் தள்ளுபடி செய்தேன் என்று ஏற்பட்டுவிடுமானால் மற்ற எல்லா மாவட்டத்திலும் கேட்பார்களானால் அது இரண்டு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் போகும். ஆகையினால் உங்களுக்கு மட்டும் அந்தச் சலுகையைச் செய்வதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா என்பதை மட்டும் ஆராய்ந்து பார்த்து சட்டம் இடம் கொடுக்குமானால் முப்பது லட்ச ரூபாயை உங்களுக்கு நான் சலுகை காட்டுவது, முப்பது கோடி ரூபாய் அளவுக்கு உங்களிடத்திலே பலனை எதிர்பார்க்கிறபொழுது முப்பது லட்சத்தைத் தள்ளிக் கொடுப்பது கஷ்டமான காரியமல்ல. ஆனால் அதிலே ஆங்கிலத்திலே சொல்லுவார்கள் னளைஉசiஅiயெவழைn என்று; எப்படி நீங்கள் ஒரு இடத்திற்கு மட்டும் தள்ளிக் கொடுத்தீர்கள்? மற்ற இடத்திற்குத் தள்ளிக்கொடுங்கள் என்று கேட்கின்ற சட்டச் சிக்கல் மட்டும் குறுக்கிடாமல் இருக்குமானால், நான் அந்த இரண்டாவது போகத்திற்கு தண்ணீர் வரி இருப்பதை தள்ளுபடி செய்வதற்கு ஒருப்படுவேன் என்பதனை உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய துரைசாமி ஐயர் அவர்கள் சொன்னார்கள், “ஏக்கருக்கு இருபத்தினாலு கலமாகிலும் விளைவிக்காதவனை நிலத்தைவிட்டு வெளியேற்றுங்கள்; அந்த நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று. அவர் சொன்னதும் ஞானசம்பந்தம் சொன்னதும் மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபொழுது வேறு வேறாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் இரண்டு பேரும் உற்பத்திச் செய்யாதவனை வெளியேறச் சொல்லுகிறார்கள். அவர் ‘நிலச் சொந்தக்காரர் உற்பத்தி செய்வதில்லை ஆகையினால் வெளியேறுங்கள்’ என்கிறார்கள். இவர் ‘தரமாக வேலைசெய்யாதவனுக்கு இங்கென்ன வேலை, வெளியேறு’ என்கிறார்கள். ஆகையினாலே அதிதீவிரமான கம்யூனிஸ்டுகளுக்கும் அதிதீவிரமான நில உடமையாளர்களுக்கும் இந்த தஞ்சைத் தரணியிலே எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது பாருங்கள். ஆகையினாலே அந்தவிதமான முறையில் உற்பத்திப் பெருக்கம் என்பதுதான் நிலத்துக்குச் சொந்தக்காரரானாலும் இல்லாவிட்டாலும் முதல் நோக்கம் என்ன என்பதை சில வருடங்கள் வரையிலாகிலும் நாம் கடைப்பிடிப்போமானால் உணவு நெருக்கடி தீர்க்கப்பட்டபிறகு தொழில் வாய்ப்புகள் வளரும். நாம் செய்துவிட்ட பெரிய குறையே பதினைந்து வருடங்களாக இருபது வருடங்களாக இருந்துவந்தவர்கள் என்னைவிட அறிவுத் தெளிவிலே மிக்கவர்கள் அதிலே எனக்கே ஐயப்பாடு கிடையாது. ஆனால் அவர்கள் எதைப் பார்த்து எதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என்றால் “இந்திய நாட்டுப் பொருளாதாரம் விவசாயத்தின்பேரிலே கட்டப்படுகிறது” என்ற அடிப்படை உண்மையை அவர்கள் மறந்தார்கள். பொருளாதாரம் வளரவேண்டும் என்பதற்காக புதிய புதிய தொழில்களை ஆரம்பிப்பதிலேயும் உடனடியாக பலன் தரமுடியாத பெரிய பெரிய அணைகளையும் தேக்கங்களையும் தொழிற்சாலைகளை அமைப்பதிலேயும் நம்முடைய நாட்டினுடைய சக்தியையும், நம்முடைய நிபுணர்களின் நேரத்தையும், நம்முடைய விஞ்ஞானிகளின் கவனத்தையும், நாம் கொடுத்த வரிப்பணத்தையும் அவர்கள் முடக்கிப்போட்டதாலேயே நமக்கு இந்தத் தொல்லை வந்தது.

இரண்டாயிரம் கோடி ரூபாய்க்குமேல் வெளிநாடுகளுக்குப் பணம் கட்டி உணவு தரிவித்திருக்கிறோம். உணவுப்பொருளுக்காக வெளிநாடுகளுக்கு செலவழித்த இந்த இரண்டாயிரம் கோடி ரூபாயில் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் இந்த நாட்டு விவசாயத்திற்கு செலவழிக்கப்பட்டிருந்திருப்போமானால் நாம் வெளிநாடுகளுக்கு உணவுப்பொருளை ஏற்றுமதி செய்கின்ற நாடாகத் திகழ்ந்திருக்க முடியும். அப்படி ஒரு நிலை வரும் என்ற நம்பிக்கையோடுதான் 1958ல் பாராளுமன்றத்திலே மறைந்த பண்டித நேரு அவர்கள் சொன்னார்கள், “இன்னும் சில வருடங்களில் நாம் உணவுப் பொருளை ஏற்றுமதி செய்கிற நாடாகப் போகிறோம்” என்று அவர்கள் சொன்னார்கள். இப்பொழுது அறுபத்தேழாம் ஆண்டு நடக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டு கோதுமை கப்பலிலே ஏற்றப்பட்டு கடலிலே மிதந்து வந்துகொண்டிருக்கிறது. இங்கிருக்கின்ற உணவு அமைச்சர்கள் கடலையே நோக்கி பார்க்கிறார்கள். “தொலைவிலே ஒரு கப்பல் தெரிகிறதா?” என்றால் “ஆகா கப்பல் தெரிகிறது; உணவு வருகிறது” என்று சொல்லுகின்ற நிலைமை இருக்கிறது. உணவுக்காக வெளிநாடுகளுக்குக் கொட்டிக்கொடுத்த இரண்டாயிரம் கோடி ரூபாயில் ஒரு ஆயிரம் கோடி ரூபாயை நம்முடைய நாட்டு விவசாயிக்கு அவர் சரியாக செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி அந்த ஆயிரம் கோடியில் ஒரு ஐநூறு கோடி பாழானாலும் கூட அதிலே பரவாயில்லை, ஆயிரம் கோடியை இங்கே விவசாயத்திற்கு நாம் கொடுத்திருப்போமானால் அந்நிய நாட்டிடம் கையேந்தவேண்டிய நிலை இருந்திருக்காது. இதிலேகூட நீங்கள் கவனித்தால் துரைசாமி ஐயருக்கும் ஞானசம்பத்தத்திற்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறது.

எந்திரக் கருவி கேட்கலாம் - தொழிலிலே முன்னேறாத காரணத்தால். ஆகாய விமானங்கள் கேட்கலாம் - அதைக் கட்டுகின்ற திறமை வராததாலே. கப்பல்கள் கட்டிக்கொடுக்கக்கூடக் கேட்கலாம் - அதிலே நாம் இன்னும் தேராததாலே. சோறு போடுங்கள் என்றா கேட்பது? இந்தத் தஞ்சைத் தரணியை எடுத்துக்கொண்டால், மூன்று மயிலுக்கு ஒரு தடவை சத்திரமும் சாவடியும் இருக்கிறது. எந்தச் சிற்றூருக்குப் போனாலும், ஊரிலே ஒரு பகுதி கோயிலாக இருக்கிறது. எந்த நாளாக இருந்தாலும் காதிலே மங்கல ஒலி விழுந்தபடி இருக்கிறது. எந்தத் தெருவிலே திரும்பினாலும் ஏதாவது ஒரு சாமியினுடைய திருவிழா நடந்தபடி இருக்கிறது. இவ்வளவு வளம் நிரம்பிய நம்முடைய நாட்டில் சோறு இல்லை என்று சொல்லிக்கொண்டுப் போவது மட்டுமல்ல, அங்கே இருந்தே வந்திருக்கிறார்கள். அமெரிக்கநாட்டு pநயஉந pழசந-ல் இருக்கின்றவர்களும் கழசன கழரனெயவழைn-ல் இருக்கின்றவர்களும் வருகிறார்கள். வருகிறபோது அவர்கள் என்ன சொல்லிவிட்டு வந்திருப்பார்கள்? ஐயோ பாவம் தஞ்சாவூர் ஜில்லாவிலே பஞ்சமாம் உணவு எப்படி உற்பத்தி செய்வது என்று தெரியவில்லையாம், நான் போய் சொல்லிக்கொடுக்கப் போகிறேன் என்று அந்த அமெரிக்க வாலிபன் புறப்பட்டு வந்திருப்பான். அவன் சொல்லிக்கொடுக்கிறானா இல்லையா அது வேறு விவகாரம். இங்கே நடப்பது அவனுக்குப் புரிகிறதா இல்லையா அது வேறு விவகாரம். ஆனாலும் அந்த நாட்டிலிருந்து புறப்படுகிறபொழுது இந்த நாட்டினுடைய அவல நிலைமையை எடுத்துச் சொல்லிவிட்டு வருகிறான். இது இன்னொரு நாலைந்து ஆண்டுகளுக்குள் இது அடியோடு நின்றுபோகவேண்டும். அதற்கு நீங்களெல்லாம் சொல்லியிருக்கின்ற மிக அருமையான யோசனைகளை நான் ஆற அமர சிந்தித்துப் பார்ப்பதற்காக அவ்வளவையும் குறித்துவைத்துக்கொண்டிருக்கிறேன்.

நம்முடைய நண்பர் ஞானசம்பந்தமும்இ கே.பி.எஸ்.மணியும் மாரிமுத்து அவர்களும்இ சுப்பையா அவர்களும் சொன்னதை சாதாரண விஷயம் என்று தள்ளிவிடக்கூடாது. விவசாயக் கூலியினுடைய மனம் திருப்தியாக இருந்தாலொழிய அவனுடைய வாழ்க்கை நிம்மதியானதாக இருந்தாலொழிய அவனுடைய வயிற்றுப்பாட்டுக்குத் தேவையான அளவுக்கு உழைப்பின் மூலம் அவனுக்குக் கிடைத்தாலொழிய நிச்சயமாக விவசாயத்தை வளரச்செய்ய முடியாது. மனித சக்திக்குத்தான் முதலிடம் தரவேண்டும் என்பதனுடைய முக்கியமான கருத்துஇ மற்ற எந்த சக்தியும் மனித சக்தியினாலேதான் அது உண்டாக்கப்படுகிறது-பராமரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மனித சக்தியை வீணாக்காமலும், அந்த மனித சக்தி நொந்தநிலை அடையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டுமானால் கூடுமான வரையில் அவர்களுக்குத் தருகின்ற ஊதியத்தை நீங்கள் தாராள மனப்பான்மையோடு கொடுப்பது மட்டுமல்லாமல் பொருளாகவே கொடுப்பது என்பதை ஒரு மரபாக்கிக்கொள்வீர்களானால் மிக மிக அதனாலே பலன் கிடைக்கும். பணமாக கொடுப்பது என்பது அவர்கள் கேட்பார்களானால் கூட அதைவிட பொருளாகக் கொடுப்பது, நெல்லாக கொடுப்பது என்ற முறை பழக்கத்திலே வருமானால் உள்ளபடி அது வரவேற்கத்தக்கதாகும். ‘பலவற்றிற்கு குழுக்கள் அமைக்கவேண்டும்’ என்று நம்முடைய நண்பர்கள் சொன்னார்கள். நான் நம்முடைய மாவட்டக் கலெக்டர் அவர்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்இ எங்கே எந்தப் பிரச்சினை ஆரம்பமானாலும் அப்படிப்பட்ட ஒரு குழுவை அமைத்து அவரே முன் நின்று பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். அதை நம்முடைய நண்பர் சீர்காழி தோழர்கூட சொன்னார்கள் ‘அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்’ என்று. நம்முடைய நண்பர் ஞானசம்பந்தம் அவர்கள் கூட சொன்னார்கள்இ “சர்க்காருடையக் காதுக்குக்கூட வருவதற்குக் கொஞ்சம் நேரமாகலாம், மாவட்டக் கலெக்டருக்கு அந்தப் பிரச்சினையைத் தெரிவிப்பது சுலபத்திலே நடக்கின்றக் காரியம்” அவரையும் துணை வைத்துக்கொண்டு நிலத்திற்குச் சொந்தக்காரர்களும்இ விவசாயத்திலே பாடுபடுகின்றவர்களும்இ அவரவர்கள் தொழிற்சங்கத்திற்கு தலைவர்களாக உள்ளவர்களும் ஆகியவர்களெல்லாம் உட்கார்ந்து அந்த விவசாயக் கூலியை ஓர் நிர்ணயம் செய்துகொண்டு அதைப் பொருளாகக் கொடுப்பது என்று நீங்கள் ஏற்பாடு செய்வீர்களானால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டியவர்களாவீர்கள். இந்தத் தஞ்சைத் தரணி காட்டுகின்ற வழியில்தான் தமிழ்நாட்டு சங்கீதம் செல்கிறது. தமிழ்நாடு காட்டுகின்ற வழியிலேதான் தமிழ்நாட்டு சிற்பம் செல்கிறது. தமிழ்நாட்டு சிற்பத்திற்கும் கலைக்கும் எப்படி தஞ்சைத் தரணி வழிகாட்டியிருக்கிறதோ, அதைப்போல இந்தப் பிரச்சினைக்கும் தஞ்சைத் தரணி வழிகாட்டவேண்டும். அதற்கு நம்முடைய நண்பர்கள் சொன்னவற்றை நீங்களெல்லாம் குறிப்பிலே வைத்துக்கொள்ளவேண்டும் என்று நான் பணிவன்போடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நம்முடைய நண்பர் கே.பி.எஸ்.மணி அவர்கள் சமுதாய ஒழுக்கக் கேடுகள் நடப்பதைப்பற்றி மனக்குறைபட்டுக்கொண்டு எடுத்துப்பேசினார்கள். அதிலும் இந்தப் பதுக்கலைப்பற்றிப் பேசினார்கள். இந்தப் பதுக்கல் என்பது சர்க்காரினுடைய நடவடிக்கையினாலே மட்டும் தீர்ந்துபோகும் என்று நான் கருதவில்லை. அந்தப் ‘பதுக்குபவன் சமூக விரோதி’ என்ற ஒரு எண்ணம் மக்களுக்கே வரவேண்டும். அது இன்னும் வரவில்லை. நம்முடைய மக்கள் நம்முடைய நாட்டில் ஒருவனிடத்திலே எப்படியாகிலும் பணம் சேர்ந்துவிட்டால் அவனை மதிக்கிற பழக்கம் நம்முடைய மக்களுக்கு வருகிறது. பேசிக்கொள்கிறபோதுகூட கேவலமாக பேசுவார்கள், “எப்படி அவனுக்குப் பணம் வந்தது?” “எல்லாம் இலங்கையிலிருந்து வந்தது”. “இவனுக்கெப்படி பணம் வந்தது?” “பதுக்கலாலே வந்தது” என்று பேசுவார்களே தவிர அதை ஒரு சமுதாய அநீதி என்று உணர்கின்றத் தன்மை நமக்கு வரவில்லை. மேல் நாடுகளிலே அப்படி இல்லை. இங்கிலாந்து நாட்டில் இரண்டாவது உலகப்போரின்போது, சாமான்களுக்கெல்லாம் பங்குபோட்ட நேரத்தில் ‘ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் துணி-சட்டைக்கு’ என்று பங்குபோட்டபொழுது இங்கிலாந்து நாட்டிலே உள்ள வாலிபர்களும் முதியோர்களும் சட்டை தைக்கின்றபொழுது பின்பக்கத்திலே முழுவதும் வைக்காமல் தோள்பட்டையோடு நிறுத்தி அதிலே மிச்சமான துணியை நாட்டுக்குக் கொடுத்தார்கள் என்று நான் படித்தேன். அதற்கு நேர்மாறு நம்முடைய நாட்டில். ஒன்றுக்கு பங்கீடு என்று சொன்னவுடன் எவ்வளவு கிடைக்கிறதோ அதை நம் வரையிலே வாங்கிவைத்துக்கொள்ளலாம் என்று நமக்கு ஒரு துடிப்பு வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இரண்டாவது உலகப்போரின்போது லண்டன் நகரத்தில் முட்டைகளே கிடையாது-யாருக்கும். எவ்வளவு பணக்காரனனாலும் அவனுக்குக் கோழி முட்டை தரமாட்டார்கள். கிராமத்திலே உள்ளவர்களுக்கு மட்டும்தான் கோழி முட்டை. ஏனென்றால் நகரத்திலே உள்ளவன் வேறு பொருளாலே தனக்கு வலிவைத் தேடிக்கொள்ளலாம். கிராமத்திலே உள்ளவனுக்கு குறைந்த விலையில் நிறைந்த வலிவு தருவது கோழியிடுகின்ற முட்டை என்பதாலே கிடைக்கின்ற முட்டை அவ்வளவும் கிராமத்திலே உள்ளவனுக்குக் கொடுத்துவிட்டு நகரத்திலே உள்ளவர்களுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்படி ஏதாகிலும் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாம் ஒரு சட்டம் போட்டால் அந்தச் சட்டம் போட்டவுடன் யார் வசதியோடு இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் தடுக்கப்பட்டப் பொருள் அத்தனையும் எப்பொழுதும்போல இருக்கிறது. எப்பொழுதும்போல மட்டுமல்ல முன்னாலே இருந்ததைவிட அதிகம் இருக்கிறது. இருப்பது மட்டுமல்ல அதை பெருமையாகவும் சொல்லுகிறார்கள். “அரிசி பங்கீடு, இன்னமாதிரி அரிசிதான் கிடைக்கும், உங்களுக்கு இது எப்படி கிடைத்தது?” என்றால், “எப்படி? அதெல்லாம் வேண்டாம், உங்களுக்கு வேண்டுமா? ஒரு மூட்டை வேண்டுமா, இரண்டு மூட்டை வேண்டுமா? சொல்லுங்கள்; ஆள் கொண்டுவந்து கொடுப்பான்” என்று சொல்கிறார்கள். இது ஒரு தனித் திறமை. இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்தத் திறமையைவிட இதை பொதுமக்களுக்கு ஆக்குகின்ற திறமையில் நாம் ஈடுபடுவோமானால் எதற்காகப் பற்றாக்குறை இருக்கப்போகிறது? எதற்காகப் பங்கீட்டுமுறை இருக்கப்போகிறது? பற்றாக்குறையும் பங்கீட்டுமுறையும் இருந்தால்தான் பதுக்கல் வருகிறது. கள்ள வாணிபம் பெருகுகிறது. ஆகையினால் நம்முடையத் தனித்திறமையை பொது நன்மைக்கு மாற்றியமைப்பது என்பது ஆரம்பத்திலே கொஞ்சம் சங்கடம் இருக்கும். ஆனாலும் தஞ்சைத் தரணியிலே உள்ள உங்களுக்கெல்லாம் சொல்லத் தேவையில்லை. இந்தப் பெரியப் பெரிய கோபுரத்தைக் கட்டினார்களே அதற்குப் பணம் கொடுத்தவர்களெல்லாம் இதைவிட உயரமான வீட்டிலா வாழ்ந்தார்கள்? இல்லையே! கோவிலுக்கு பெரிய பெரிய மதில் சுவர் எழுப்பினார்களே, அதற்கு நன்கொடை கொடுத்தவர்களுடைய வீடுகளுக்கு சுற்றுச் சுவரா இருந்திருக்கும்? இல்லை. கோவிலிலே உள்ள தேவருக்கும் தேவிக்கும் நவரத்தின ஆபரணங்களை கொடுத்தார்களே அவர்களுடைய வீடுகளிலே அதைவிட அதிக ஆபரணமா இருந்திருக்கிறது? வேண்டாம். இது பொதுக் காரியத்திற்கு இருக்கட்டும். என்று கொடுத்தார்கள். அப்படிக் கொடுத்தது இங்கே கொடுத்தால் அங்கே வாங்கிக்கொள்ளலாம் என்ற தர்மச்சிந்தனையிலே கொடுத்தார்கள். நான் கேட்பது இங்கே கொடுத்தால் திருப்பி நமக்கே வரும் என்ற காரணத்தோடு நான் சொல்கிறேன். தமிழ்ப்பெரும் புலவர் சொன்னார் அறம் என்பதற்குப் பொருள் ‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வாணிகன் ஆய்அல்லன்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆய் என்றொரு வள்ளல் இங்கே அறம் செய்கிறான். தர்மம் என்று சொல்கிறோமே அந்த அறம் செய்கிறான் என்றால் இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் என்ற அறவிலை வாணிகன் அல்ல என்று குறிப்பிட்டதுபோல நீங்கள் சமுதாயத்திற்கு செய்கின்ற அறம் அந்த அறத்தின் மூலமாக வாணிபம் நடத்துவதாகப் பொருளல்ல, அது கொடுத்த இடத்திலேயே அதிகமான அளவுக்கு நமக்குக் கிடைக்கும்.
உதாரணத்திற்கு சொல்கிறேன். திருப்திப்பட்ட ஒரு விவசாயக் கூலி, நிலத்திலே உழுதுகொண்டிருக்கிறபொழுது, நிலத்தை உழுபவனாக இருக்கின்றபொழுது அந்த நிலத்திற்கு உடமையாளர் அந்தப் பக்கத்திலே நடந்து வருகிறபொழுது விவசாயியே சொல்லுவான் “அந்தப் பக்கம் வராதீர்கள், வேலமுள் இருக்கிறது” என்று. இப்பொழுது சொல்லுகிறானா? சொல்லமாட்டான். அவனுக்கு மனதிலே திருப்தி இல்லை. நீங்கள் நடந்து வருகிற பாதையில் அவனுக்குத் தெரியும் வேலமுள் இருக்கிறது என்று. என்ன எண்ணுகிறான்? ‘வரட்டுமே-குத்தட்டுமே-தெரியட்டுமே’ என்று எண்ணிக்கொண்டிருப்பானே தவிர அது நம்முடைய நிலத்துச் சொந்தக்காரனுடைய காலிலே குத்தக்கூடாதே என்ற எண்ணம் இல்லை. பத்து வருடத்திற்கு முன்னாலே இருந்தது. இப்பொழுது இல்லை. இப்பொழுது இருக்கிற அளவுக்குக்கூட இன்னும் ஒரு ஐந்து வருடத்திற்குப் பிறகு இருக்காது. இருக்காது என்பது மட்டுமல்ல, ஞானசம்பந்தம் இருக்கவிடமாட்டார். ஆகையினாலே நீங்கள் காலத்தினுடைய கூறை அறிந்து அவர்களுக்கு நல்ல திருப்தியான நிலையை வைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அப்படி திருப்தியான நிலையிலே வைத்துக்கொண்டு அவன் உற்பத்தி செய்வானானால் உரம் போட்டால் விளைவதைவிட அவர்களுடைய வியர்வையினாலே இன்னும் அதிக அளவுக்கு விளையும். வேண்டுமென்றால் ஒரு ஐந்து வருடம் பரிட்சை பாருங்கள். அவனுடைய தேவைக்கேற்ற அளவுக்கு கொடுத்து அவனுடைய உழைப்பையும் நிரம்பக் கொட்டச் சொல்லுங்கள்இ உற்பத்தி பெருகுகிறதா இல்லையா என்பதைப் பரிட்சைப் பார்ப்பீர்களானால் நிச்சயமாக உற்பத்தி பெருகும். உதாரணத்திற்கு சொல்லுகிறேன். இப்பொழுது நீங்கள் அந்த நிலத்திலே ஒரு மாட்டுக்கொட்டகை போடச்சொல்லுங்கள், நாலு நாள் ஆகும். ஆனால் அவனையே உங்கள் வீட்டுத் திருமணத்திற்கு அழைத்து சந்தோஷமாகப் பேசி “நம்முடைய மகனுக்குத் திருமணம் தெருவிலே ஒரு பந்தல் போடு” என்று சொல்லுங்கள். இருபத்துநாலு மணிநேரத்தில் அவனே போடுகிறான். ஏன்? இது மகிழ்ச்சியோடு செய்கிற காரியம். அது மகிழ்ச்சியோடு அல்ல, “பந்தலா உனக்குப் பந்தல்” என்று எண்ணிக்கொண்டே செய்கிற காரியம். ஆகையினால் அந்தக் கசப்பை நீக்குவதற்கு நீங்கள்தான் அவர்களை அணைத்துக்கொள்ளவேண்டும்.

ஒன்று எனக்கு ரொம்பப் பிடித்தது. நம்முடைய ஞானசம்பந்தம் சொன்னது. “விவசாயக் கூலி உங்களோடு போராடவில்லை. அவன் பசியோடு போராடுகிறான்” என்று சொன்னதை நீங்கள் ஒவ்வொருவரும் நில உடமையாளர்கள் வீட்டிலே எழுதிவைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் பார்க்கவேண்டும். பசியோடு போராடுகிறான். பசியோடு போராடுபவனுக்கு பழமொழி சொல்லுவார்கள் ‘ஆத்திரத்திற்கு சாத்திரம் இல்லை’ என்று ‘பசி வந்திட பத்தும் பறந்துபோகும்’ என்று. அப்படி பசியோடு போராடுகிறபொழுது அவன் கடினமாக நடக்கிறான் என்று பின்னாலே குறைபட்டுக்கொள்வதைவிட அவனை பசியாத வயிறுள்ளவனாக்கி அதற்குப் பிறகு பாருங்கள் உற்பத்தி எப்படி பெருகுகிறது என்று.

இவைகளையெல்லாம் தஞ்சைத் தரணியிலே உள்ள நில உடமையாளர்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. அவர்கள் அவைகளையெல்லாம் நன்றாக அறிந்திருக்கின்றார்கள். அந்த முறையிலே நடந்துகொள்வார்கள் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை. ஆனால் துவக்கத்திலே நான் சொன்னபடி சர்க்கார் தரப்பிலே இருந்து செய்யப்படவேண்டியவைகளில் உடனடியாக நாங்கள் இன்றையதினம் உரத்தினுடைய அளவு அதிகப்படுவதற்கு வழிவகைத் தேடி பெருமளவுக்கு தஞ்சைத் தரணிக்கு தரும்படியாகப் பெற்றிருக்கிறோம். ஆனால் அதற்குக் கொடுத்துக்கொண்டு வந்த சப்சிடியை மத்திய சர்க்கார் இன்றையதினம் நீக்கிவிட்டதாலே உரத்தின் விலை ஏறியிருக்கிறது. இதை நீங்கள் என்னிடத்திலே எப்படிச் சொல்லிக் குறைபட்டுக்கொண்டீர்களோ இதைப்போல் முதலமைச்சர்கள் மகாநாட்டிலேயும் தனியாக மொரார்ஜி அவர்களை பார்த்த நேரத்திலேயும் நீங்கள் இந்த நேரமாகப் பார்த்தா இந்தக் காரியத்தை செய்வது? நான் ஊரூருக்கும்போய் உற்பத்தியைப் பெருக்குங்கள் உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று உற்சாகப்படுத்திவிட்டு வருவது, நீங்கள் ஓசைப்படாமல் உரத்தின் விலையை ஏற்றிவிட்டால், நான் ஆங்கிலத்திலே சொன்னேன் ‘லழர யசந ளயடிழவயபiபெ அல ளஉhநஅந’. ‘நீங்கள் என்னுடைய திட்டத்திற்கு குழிபறிக்கின்றீர்கள்’ என்று நானே அவரிடத்திலே சொன்னேன். நாளையதினமும் அவரை நான் பார்க்க இருக்கிறேன். நாளையதினமும் நான் உங்களுக்காக வாதாடுவேன் என்பதனை உங்களிடத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த நேரத்தில் உரத்தின் விலை அதிகப்பட்டது அநீதி அக்கிரமம் என்பதை உங்களோடு சேர்ந்து நானும் மத்திய சர்க்காரிடத்தில் தெரிவித்துக்கொள்வதிலே ஒரு துளியும் தயக்கம் காட்டமாட்டேன். அவர்களும் அரசு நடத்துகிறார்கள். நானும் அரசு நடத்துகிறேன். ‘இரண்டும் அரசபரம்பரை’ என்ற தப்பான எண்ணம் எனக்கு இல்லை. நான் ஒரு அரசு நடத்தினாலும் அவர்கள் உரத்தின் விலையை ஏற்றியது அநியாயம் என்பதை நான் உணர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். மறுபடியும் அதைப்பற்றி அவர்களிடத்திலே எடுத்துப்பேசுவேன். அதற்குப் பிறகும்கூட உங்களுக்கு அந்த உரத்தின் விலையைக் குறைப்பதன் மூலம் நல்ல நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி சர்க்காரிடத்திலேயும் அதிகாரிகளிடத்திலேயும் கலந்துபேசி அதிலேயும் ஏதாகிலும் செய்யமுடிகிறதா என்பதை நான் ஆராய்ந்து பார்ப்பேன் என்று உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீர்ப்பாசனத் திட்டத்திற்கான நல்ல கருத்துக்கள் பல கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் இந்தப் பாசனத்துறைக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கின்ற பொதுப்பணித்துறை அமைச்சரிடத்திலேயும் அதிலே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்திலேயும் உடனடியாக நான் கலந்துபேசி எந்தெந்த சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்ற முடியுமோ அவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டொரு நண்பர்கள் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். கிராமங்களுக்குப் பாதைகள் இல்லாமல் எப்படி எங்களுடைய காரியம் நடக்கும் என்று கேட்டார்கள். உள்ளபடி நியாயமான கேள்வி. விளையலாம், எதுவும் வாங்கலாம் கிடங்குகளில், வாங்கியதைக் கொண்டுபோய் நிலத்திலே கொட்டவேண்டும் என்றாலும் விளைந்ததை அறுத்து எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றாலும் பாதைகள் நல்ல முறையிலே இருக்கவேண்டும். அந்தப் பாதைகள் நம்முடைய தஞ்சையிலே நல்லமுறையிலே அமையாமல் இருந்ததற்கு யார் காரணம் என்று பார்த்தால்இ சர்க்கார் மட்டுமல்ல ஒவ்வொரு நில சொந்தக்காரனும் இந்த மண்வெட்டியினாலேயே சர்வே செய்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சரித்து சரித்து பாதையை குறுக்கி குறுக்கி நிலத்தோடு சேர்த்து சேர்த்து வரப்பளவுக்கு விட்டுவைத்திருக்கிறார்கள். அதை சர்க்கார் ஏன் அனுமதித்தது என்று நானாக ஆராய்ந்தேன். ஏன் அவர்கள் அதை அனுமதித்திருக்கக்கூடும் என்று நினைத்தேனென்றால் பாதையிலே நெல் விளையாது அது நிலமானால் நெல் விளையும் சரி போனால் போகட்டும் என்று அவர்களே விட்டுவிட்டிருக்கிறார்கள். அவர்கள் நிலமென்றால் உற்பத்திக்கு மட்டும்தான் என்று கருதினார்களே தவிர பாதை இருந்தால்தான் தொடர்பு இருக்கும்; தொடர்பு இருந்தால்தான் விளைவதற்கு நல்ல விலை கிடைக்கும்; தேவைப்படுகிற நேரத்தில் தேவைப்படுகிற இடத்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என்பதை உணராமல் இருந்தார்கள். இனி அந்தப் பாதை அமைப்பை நல்ல முறையிலே கவனிப்பதற்கு தனிக் கவனத்தை செலுத்தும்படி அதற்குறிய அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

நம்முடைய நண்பர் தர்மலிங்கம் அவர்கள் இந்த சிறவை என்ற ஒரு பறவையைப்பற்றி, அது பயிர்களையெல்லாம் அழித்துவிடுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். இதைப்பற்றி விவசாயிகளுக்கு ஒரு மாதிரி அபிப்பிராயம். காட்டு இலாகா அதிகாரிகளுக்கு தனி அபிப்பிராயம் இருக்கிறது. ஏதோ அந்தப் பறவைகளையெல்லாம் அழிக்கக்கூடாது என்று காட்டு இலாகாவிலே சொல்வதாக நண்பர்கள் சொன்னார்கள். அந்தக் காட்டு இலாகா அதிகாரிகளை நான் கலந்து பேச இருக்கிறேன். எதனாலே அவர்கள் அந்த சிறவை என்ற பறவை அழிக்கப்படக்கூடாது என்று கருதுகிறார்கள் என்பதற்கான காரணத்தை நான் அவர்கள் மூலமாக கேட்டறிய விரும்புகிறேன். இல்லை இது அபூர்வமான பறவைகள், அதனால்தான் அதை அழிக்கக்கூடாது என்ற ஒரு காரணத்தை மட்டும் அவர்கள் சொல்வார்களானால் இருப்பதிலேயே மனிதன்தான் அபூர்வப் பிறவி, அவன் பிழைக்கட்டும். சிறவை இல்லாவிட்டால் போகட்டும் என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன். அல்லது வேறு ஏதாகிலும் காரணங்கள் அவர்கள் சொல்வார்களானால் அதை ஆலோசித்துப் பார்க்கவேண்டும். அதை நீக்குவதற்கு நல்ல விதத்திலே வழிவகைகள் காணவேண்டும் என்று கருதுகிறேன்.

இந்த பூச்சித் தெளிப்பு முறையைப் பற்றி நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தனித்தனியாக நிலத்துக்காரர்களை நீங்கள் பூச்சி மருந்து தெளித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதாலே மட்டும் பிரச்சினை தீராது. இப்பொழுதுகூட நான் ஒரு பண்ணைக்குப் போய்விட்டு வருகிற வழியில் இரண்டு இடத்திலே பூச்சி மருந்து தெளித்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு இடத்திலே பாலிடால் தெளித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு இடத்திலே சாதாரண பூச்சி மருந்து தெளித்துக்கொண்டிருந்தார்கள். இதைவிட அந்த நிலப்பரப்பளவு முழுவதற்கும் பூச்சி மருந்து தெளிக்கின்ற காரியத்தை சர்க்கார் ஏற்றுக்கொண்டு அதற்கு ஆகக்கூடிய செலவினத்தை விவசாயிகளிடமிருந்து திருப்பிப் பெற்றுக்கொள்ளலாம-தவனைகளிலே என்று சொன்ன யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை நாம் நிறைவேற்றவேண்டுமானால் இந்த தஞ்சைக்கும் மற்ற இடத்திற்கும் சில ஹெலிக்காப்டர்கள் வாங்கவேண்டியிருக்கலாம். அல்லது சிறு விமானங்கள் வாங்கவேண்டியிருக்கலாம். அந்த விமானங்களின் மூலமாகக்கூட அது தெளிக்கப்படலாம். அமெரிக்காவிலே போய்வந்தவர்களை நான் கேட்டேன். அமெரிக்காவிலே இந்த பூச்சி மருந்து தெளிப்பதற்கென்று தனியான கம்பெனிகளே இருக்கின்றனவாம். அந்தக் கம்பெனிகளுக்கு சொல்லிவிட்டவுடன் அவர்கள் அதை தெளித்துவிட்டு தெளிக்கின்றபொழுது எந்த இடத்திலே பூச்சி விழுந்ததோ அதுமட்டுமல்ல, பூச்சி பிடிக்காமல் இருக்கின்ற இடத்திற்கும் சேர்த்து அதைத் தெளித்துவிட்டு பிறகு கட்டணமாக வாங்கிக்கொள்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். இவைகளும் இதைப்போல திடீரென்று பயிர் கருகிப்போவது, எதிர்பார்த்ததைவிட சாகுபடி குறைந்துவிடுவது ஆகிய இவைகளையெல்லாம் நீக்கவேண்டுமானால் அதற்கு ஒரு அடிப்படையான பயிர் இன்சியூரன்ஸ் திட்டம் ஊசழி ஐளெரசயnஉந திட்டம் இருந்தே தீரவேண்டும். அந்த ஊசழி ஐளெரசயnஉந திட்டத்தை உடனடியாகக் கொண்டுவரவேண்டும் என்று எனக்கு மிகவும் விருப்பம். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் “இன்சூரன்ஸ்” என்ற தலைப்பு மத்திய சர்க்காரிடத்திலே இருக்கிறது. ஆகையினால் அவர்களை கொண்டுவரவேண்டும் என்று சில அமைச்சர்களை நான் கேட்டுக்கொண்டேன். அவர்கள் அதற்கான Pநசஅளைளiஎந டுநபளைடயவழைn இந்தத் தொடரிலேயே கொண்டுவருவதாக இருக்கிறார்கள். அது வந்த பிறகு இங்கே இந்த பூச்சியினாலே ஏற்படுகிற அழிவுகள் அல்லது இயற்கைக் கோளாறினாலே ஏற்படுகின்ற அழிவுகள் ஆகியவைகளையெல்லாம் விவசாயி தலையிலே விழாதபடி பார்த்துக்கொள்ள அந்தப் பொறுப்பை சர்க்கார் ஏற்றுக்கொள்வதற்கான முறையில் ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொண்டு அதற்கு இடையில் இந்தப் பூச்சி மருந்து தெளித்துவிட்டு எப்படி தண்ணீருக்கு வரி வாங்குகிறோமோ அதைப்போல விவசாயியிடத்திலே வாங்கிக்கொள்ளலாமா என்பது பற்றி சென்னைக்குச் சென்றதும் நான் அதற்குரிய அதிகாரிகளைக் கேட்டு தகுந்த முயற்சி எடுத்துக்கொள்வேன் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்று என்னுடைய மனதிற்கு ரொம்பப் பிடித்த ஒரு விஷயம் பஞ்சாயத்து யூனியனிடத்திலே பணம் நிரம்ப இருந்தும் அவர்கள் அதிலே விவசாயக் கருவிகள் வாங்குவதற்கும் டிராக்டர்கள் வாங்குவதற்கும் இன்றையதினம் ஏதோ சட்டம் குறுக்கிடுவதாகச் சொன்னார்கள். அப்படி சட்டம் குறுக்கிடுவதானால் அதற்கு ‘சட்டம்’ என்ற அந்தஸ்தேகூட இருக்கக் கூடாது. சட்டம் என்பது தாராளமாக காரியங்களை நடத்துவதற்கு அது பயன்படவேண்டுமே தவிர பணத்தை முடக்கிவைப்பதற்கு ஒரு சட்டம் இருக்கக்கூடாது. அந்த சட்டத்தைப் பற்றியும் ஆராய்ந்து பார்த்து எனக்கு சொன்னவுடனே எனக்குத் தோன்றியது டிராக்டர்களை வாங்கிக்கொள்ளுங்கள். யுபசiஉரடவரசயட ஐஅpடiஅநவெ வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடலாமா என்றுகூட எனக்குத் துடித்தது. ஆனால் அதற்குப் பின்னாலே என்னென்ன சட்டங்கள் இருக்கின்றனவோ அவைகளை நான் கவனிக்கவேண்டும். நான் மார்ச் மாதம் 6ஆம் தேதியிலேயிருந்து சட்டதிட்டங்களுக்கு அடக்கப்பட்டவனாக இருக்கிறேன். ஆகையினாலே அவைகளைப் பற்றியும் நான் நிச்சயமாக உங்கள் சார்பிலே வாதாடுவேன். கூடுமான வரையில் அது நடக்கும் நடத்த முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

இரண்டொரு நண்பர்கள் இந்த Pரஅpiபெ ளுஉhநஅந சரியாக நடக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். அதைப்பற்றி நான் நம்முடைய மாவட்டக் கலெக்டரிடத்திலேதான் இன்றையதினமோ அல்லது எனக்கு ஓய்வு கிடைக்கின்ற நேரத்திலேயோ முழு விபரத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். அதைப்பற்றியும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

எதிர்காலத்தைப் பற்றி நம்முடைய பட்டுக்கோட்டை சீனிவாசய்யர் நாமெல்லாம் பயப்படும்படியாக சொன்னார்கள். இந்தக் காவேரி ஒப்பந்தத்தினுடைய மறுபரிசீலனை 1974இல் வருகிறது. ஜாக்கிரதை ஜாக்கிரதை என்றார்கள். உள்ளபடி ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் காவேரி நமக்குப் பயன்படுகிறதே தவிர அதனுடைய உற்பத்தி இடம் நம்மிடத்திலே இல்லை. அது ஓடிவருகின்ற அழகு நம்முடைய தமிழகத்திலேதான் நன்றாக இருக்கிறதே தவிர அது பொங்கி எழுகின்ற இடம் நம்மிடத்திலே இல்லை. அதற்கான ஒப்பந்தம் வருகிற நேரத்தில் நிச்சயமாக அந்த மைசூர் சர்க்காரோ அல்லது ஆந்திர சர்க்காரோ நமக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. நான் அந்த இரண்டு மூன்று மாநில அமைச்சர்களிடத்திலேயும் கேரளத்திலே உள்ளவர், ஆந்திரத்திலே உள்ளவர், கர்நாடகத்திலே உள்ளவர் இவர்களிடத்திலே பேசிப் பார்த்த அளவுக்கு அவர்களுக்கெல்லாம் நிச்சயமாக இந்த நாலு இடங்களும் ஒன்றுபட்டு இயற்கை வளங்களை பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்ற பொதுத் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆகையினாலே இந்த ஒப்பந்தம் வருகிறபோதுகூட அதிகமான தகராறுகள் இருக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அதிகாரி இருக்கிறார். இந்த அதிகாரி சொல்வதை மறுப்பதிலேதான் தன்னுடைய திறமை தெரியும் என்று அந்த அதிகாரி மறுக்கக்கூடும். இப்போது கேரளத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கிற பிரச்சனை அதிலேதான் இருக்கிறது. அங்கே ஆனைமலை ஆறு என்று ஒரு ஆறு வருகிறது; அது நம்முடைய பகுதியிலே ஓடிவருகின்றது; அதனுடைய தண்ணீர் நமக்கு வேண்டும் என்று நாம் கேட்கிறோம். கேரளத்திலே உள்ளவர்கள் ‘உனக்கு நாங்கள் தேக்கடியிலே தண்ணீர் கொடுக்கிறோம்; நீராறிலே தண்ணீர் கொடுக்கிறோம்; இவ்வளவு தண்ணீர் கொடுப்பதாலே ஆனைமலை ஆற்றுத் தண்ணீர் முழுவதையும் எங்களுக்கே விட்டுவிடுங்கள்’ என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதற்குக் காரணம் அங்கே இருக்கிற ஊhநைக நுபெiநெநச. அந்த ஆற்றிலே தண்ணீர் வாங்கினால்தான் எனக்கு நமக்குச் சொல்பவர் நம்முடைய ஊhநைக  நுபெiநெநச. இதை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய உhநைக நபெiநெநச-ன் கீழ் வேலை பார்த்தவர்தான் கேரளாவிலே இப்பொழுது உhநைக நபெiநெநசஆக இருக்கிறார்.ஆக இந்த அதிகாரிகளின் திறமைகள் சில வேளைகளிலே பிரச்சினைகளை இழுக்கும். ஆனாலும் அவைகளிலே குறுக்கிட்டு அந்த மாநில முதலமைச்சர்கள் நமக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நல்லக் கருத்தோடு இருக்கிறார்கள் என்பதை நான் நம்பிக்கையோடு தெரிவித்துக்கொண்டு அந்த மாநில முதலமைச்சர்களுக்கெல்லாம்கூட நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நான் கேரளத்து முதலமைச்சருக்கே சொன்னேன் “திருப்பித் திருப்பி எங்களுக்கு அரிசி கொடுங்கள் அரிசி கொடுங்கள் என்று கேட்கிறீர்கள். எங்களுக்கு கடலிலே வீணாகக் கலந்துபோகிற தண்ணீரை எங்களுக்குக் கொடுங்கள். அரிசி நான் கொடுக்கிறேன். எத்தனை லட்சம் டன் வேண்டும் என்றாலும் தருகிறேன்” என்று அவர்களிடத்திலே சொன்னேன். இரண்டு நாளைக்கு முன்னாலே பத்திரிகையிலே பார்த்தேன். அது உண்மையான செய்தியாக இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். அது வெறும் நிருபருடைய ஆர்வத்தாலே வந்த செய்தியாக இல்லாமல் ஆதார பூர்வமான செய்தியாக அது அமையுமானால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். ‘தண்ணீரைக் கொடுத்து அரிசி வாங்கிக்கொள்ளப்போகிறோம்’ என்று கேரளத்திலே உள்ள அரசினர் கருதுவதாக பத்திரிகைச் செய்தி வந்தது. அப்படி அவர்கள் வருவார்களானால் நிச்சயமாக அந்தக் காரியத்திலே நான் மிகுந்த அக்கறை காட்டுவேன். இப்பொழுதேகூட தமிழகத்திலே இருக்கின்ற கேரள மக்கள் பல லட்சம். கேரளத்திலே இருக்கிற தமிழ்நாட்டு மக்கள் பல ஆயிரங்கள் இருக்கலாம். அதைத்தான் நான் சொன்னேன், “இப்பொழுதே கேரளாவுக்கு அரிசி அனுப்பினால்தானா? இங்கேயே கேரள மக்களுக்கு நான் சோறு போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று அவர்களுக்கு சொன்னேன். கேரளாவுக்கு அரிசி கொடுப்பதிலே நான் ஒரு துளியும் தயக்கம் காட்டவில்லை. அதைப்போலவே நமக்குத் தண்ணீர் கொடுப்பதற்கு அவர்களும் தயக்கம் காட்டமாட்டார்கள், காட்டக்கூடாது என்று நாமெல்லாம் விரும்புகிறோம்.

அதைப்போலத்தான் ஆந்திரம். நம்முடைய நண்பர் சீனிவாசய்யர் அவர்கள் சென்னையினுடைய குடிதண்ணீர் பிரச்சினையைப் பற்றி சொன்னார்கள். இந்த கிருஷ்ணா பெண்ணாறு திட்டத்தைப் பற்றி. இந்த கிருஷ்ணா பெண்ணாறு திட்டம் உடனடியாக முடியக்கூடியதாக இருந்தால் எனக்குக் காவேரி திட்டம்கூடத் தேவையில்லை. ஆனால் அது உடனடியாக முடிவதாக இல்லை. ஏனென்றால் கிருஷ்ணாவிலேயிருந்து தண்ணீரை பெண்ணாற்றுக்குக் கொண்டுவருவதற்குள் அவர்கள் கோதாவரியிலிருந்து கிருஷ்ணாவிற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆக இது இரண்டு மாநில பிரச்சினையாக மட்டும் இல்லை. நாலைந்து மாநிலத்தினுடைய பிரச்சினையாக அது வடிவமெடுத்திருக்கிறது. ஆக கிருஷ்ணாவிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதானாலும் வழி நெடுக அதற்காக வெட்டப்படவேண்டிய வாய்க்காலுக்கு யார் பணம் செலவழிப்பது என்ற தகராறு இருக்கிறது. அப்படி வாய்க்காலிலே தண்ணீர் வந்தாலும் அது குடிதண்ணீருக்கு மட்டுமல்லாமால் ஆந்திரப் பகுதியிலே விவசாயத்திற்கு பயன்படவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளெல்லாம் இருப்பதாலேதான் வீராணத்திலேயிருந்து தண்ணீர் எடுக்கவேண்டும் என்ற திட்டத்தை-காவேரி திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. அது தஞ்சை ஜில்லாவைப் பாதிக்கும், சிதம்பரம் தாலுக்காவைப் பாதிக்கும் என்று நம்முடைய நண்பர் சொன்னார்;. சிதம்பரம் தாலுக்காவை சேர்ந்த எல்லா மிராசுதாரர்களும் அதிலும் காங்கிரஸ் கட்சியிலே இருக்கின்ற மிராசுதார்கள் உள்பட போன மாதத்தில் சென்னைக்கு வந்திருந்து அந்தப் பிரச்சினைகளைப் பற்றி என்னிடத்திலே பேசி நம்முடைய சர்க்காரிலே உள்ள எஞ்சினியர்களை உட்காரவைத்துக்கொண்டு அவர்களுக்கு விளக்கமும் சமாதானமும் கொடுத்து அவர்கள் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று அனுமதி அளித்திருக்கிறார்கள் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

வீராணம் ஏரியிலேயிருந்து நாம் தண்ணீர் எடுக்கிறோம் என்றால் வீராணத்திற்கென்று தண்ணீர் கிடையாது. வீராணத்திற்குத் தண்ணீர் காவேரியிலேயிருந்து நாம் கொஞ்சம் தருகிறோம். வீராணம் என்பது ஒரு பாத்திரமே தவிர அது ஊற்று அல்ல. அந்தப் பாத்திரத்திலே தண்ணீர் விட்டு தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்கிறோம். எந்த அளவுக்கு சென்னைக்கு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு வீராணத்து ஏரிக்கு தண்ணீரை அதிகம் தருகிறோம். தந்துவிட்டு அது தங்கியிருப்பதற்கு வீராணம். எடுத்துக்கொண்டுப்போவதற்குக் குழாய்கள். அதை பருகுகின்றவர்கள் சென்னை மக்கள். அப்படிப் பார்த்தால் சென்னை மக்கள் என்றே ஒன்று கிடையாது. அவருக்குத் தெரியும் சீனிவாசய்யர் அவர்களுக்கு. சென்னை என்பது என்ன? அந்தக் கடலோரத்திலே இருந்த மீனவர்கள் கொஞ்சம் பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த வௌ;ளைக்காரர்களும் சேர்ந்து இருந்த ஒரு இடம் சென்னை. இப்பொழுது சென்னை அதுவா? வாரத்திலே இரண்டு நாளாகிலும் தஞ்சாவூரிலே உள்ளவர்கள் சென்னைப் பட்டணத்திற்கு வருகிறீர்கள். அண்ணன் தஞ்சாவூரிலே இருந்தால் தம்பி சென்னைப் பட்டணத்திலே இருக்கிறீர்கள். நீங்கள் காவேரியிலிருந்து கொடுக்கிற தண்ணீரில் என்னுடைய கணக்கின்படி மூன்றிலே இரண்டு பங்கு தண்ணீர் தஞ்சாவூர்காரர்தான் சாப்பிடுகிறார். நீங்கள்தான் அங்கே நிரம்ப இருக்கிறீர்கள். எங்களுடைய மாவட்டச் செயலாளரை எடுத்துக்கொள்ளுங்கள், மன்னை நாராயணசாமியை; அவர் குடிக்கிற தண்ணீரில் முக்கால்வாசித் தண்ணீர் சென்னைப் பட்டணத்துத் தண்ணீர். இப்பொழுது நான் காவேரி தண்ணீரை குடிக்கிறேனா என்றால் ஆசைக்கு இந்தப் பக்கத்திலே வருகிறபோது தண்ணீர் சாப்பிடுகிறேனே அது தவிர காவேரி தண்ணீரை இப்போதுதான் எடுக்கலாம் என்றிருக்கிறோம். அதுவும் கிருஷ்ணா கோதாவரி திட்டம், கிருஷ்ணா பெணடணாறு திட்டம் நிறைவேற்றப்படுகின்றபொழுது இந்தத் தண்ணீர்கூட அதிகம் தேவைப்படாது. ஆகையினால் அது விவசாயத்தைப் பாதிக்காத முறையில், சிதம்பரம் தாலுக்காவை பாதிக்காத முறையில் தஞ்சைத் தரணியைப் பாதிக்காத முறையில், அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதனை நான் சீனிவாசய்யருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அவர் ஒருவருக்கு திருப்தி ஏற்பட்டுவிட்டால் போதும் எனக்கு. அவர் ஒரு நாளைக்கு ஒரு நூறு பேரிடத்திலாகிலும் அதைச் சொல்லுவார். “நான்கூட அப்படித்தான்டா நினைத்தேன் அண்ணாதுரை சொன்னான் சரியாதான் இருக்கு. இருக்கட்டும் இருக்கட்டும்” என்று சொல்வாராகையினால் நான் அந்தப் பிரச்சினையை கவனமாக அவருக்கு சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் சீனிவாசய்யரைப் போன்றவர்கள் ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டால்கூட பலருக்குப் பயம் வந்துவிடும். “ஐயர் சொன்னாரே! ஐயர் சொன்னாரே! நம்முடைய சீர்காழி கெட்டுவிடுமாமே! சிதம்பரம் கெட்டுவிடுமாமே!” என்று பயப்படாதீர்கள். ஒருவரைக் கெடுத்து இன்னொருவரை வாழவைக்க நான் என்னப் பைத்தியக்காரனா? இல்லை. ஒருவரைக் கெடுத்து இன்னொருவரை வாழவைத்தால், லாபநஷ்டக் கணக்குப் பார்த்தால் இருப்பு நிகரமாகத்தான் இருக்கும். இது ஒருவரைக் கெடுத்து இன்னொருவரை வாழவைப்பதல்ல. ஒருவர் தங்களுடைய தேவைக்குப்போக மீதமிருப்பதைக் கொடுத்து இன்னொருவரை வாழவைக்கின்றத் திட்டம் என்ற முறையில் அதிலே எந்தவிதமான குற்றமும் இல்லை என்பதனை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மற்றவர்களெல்லாம் எடுத்துச் சொன்னவைகளை நான் குறிப்பிடாததாலேயே அவைகளை நான் தள்ளிவிட்டேன் என்று யாரும் அருள்கூர்ந்து தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள். இவைகளைப் பற்றியெல்லாம் ஆறஅமர சிந்தித்துப்பார்த்து ஆகவேண்டிய காரியங்களை முறையாக செய்துத் தருவேன் என்று உங்களுக்கு வாக்களித்து இந்த உற்பத்திப் பெருக்கத்திலே நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்ற நல்லார்வத்திற்கு மறுபடியும் நன்றி தெரிவித்து இதிலே நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இன்று உங்களையெல்லாம் பார்த்ததிலேயும், நீங்கள் சொன்னதைக் கேட்டதிலேயும் எனக்கு நிரம்ப ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கூறி, வாழ்க உங்களுடைய விவசாயம்! வளர்க நாட்டின் வளம்! என்று சொல்லி உங்களுக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன். வணக்கம்.