அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கடைசிக் களவு
1

“உன் பெயர் என்னப்பா?”

“அவசியம் தெரியவேண்டுமா?”

“இதிலென்ன கோபம்? பெயர் என்ன என்றுதானே கேட்கிறேன்! வேறென்ன கேட்டுவிட்டேன்!”

“எதை வேண்டுமானாலும் கேளேன்; எனக்கென்ன? என் பெயர், ஏகாம்பரம்”

“நிஜமாகவா? ஏகாம்பரம் என்பதா உன் பெயர்!”

“ஏன், பிடிக்கவில்லையா, அந்தப் பெயர்? சரி, சதாசிவம்! இந்தப் பெயர் பிடிக்கிறதா?”

“அழகாகத்தான் இருக்கிறது, சதாசிவம் என்பது. ஏகாம்பரம் என்ற பெயரும் நல்ல பெயர்தான். நான் உன் பெயரை அல்லவா, கேட்கிறேன்!”

“ஓஹோ! ஏகாம்பரம், சதாசிவம் என்பவை என் பெயர் களல்ல - அப்படியானால் என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கொள்ளய்யா! உனக்கு விருப்பமான பெயர் என்னவோ, அதைக் கூறிக்கொள்.”

“அதுவும் நல்ல யோசனைதான்! மாடசாமி என்ற பெயர் உனக்குப் பிடிக்கிறதா?”

“மாடசாமியா... என் பெயர் எப்படி உனக்குத் தெரிந்தது?”

“உன் பெயர், மாடசாமியா? நான் வேடிக்கையாகக் கேட்டேன், அது உண்மையாகி விட்டதே! மாடசாமி என்பது தான் உன் பெயரா? ஆருடக்காரன் போலல்லவா, நான் கூறிவிட்டேன். ஏதேது; நான் சொல்வதெல்லாம், அப்படியப் படியே உண்மையாகிவிடும் போலிக்கிறதே தேவவாக்கு என்கிறார்களே அதுபோல! மாடசாமி...!”

“என்னய்யா, மளமளவென்று எதை எதையோ, பேசிக் கொண்டே போகிறாய், பெரிய அறிவாளி, அனுபவசாலிபோல! சுத்த வெகுளியல்லவா நீ! வெளுத்ததெல்லாம், பால், கருத்த தெல்லாம் தண்ணீர் என்று நம்பிவிடும் ஏமாளி.”

“அதென்ன அவ்வளவு அலட்சியமாகப் பேசிவிடுகிறாய், என்னைப் பற்றி? உன் பெயர் மாடசாமி என்று நான் சொன்னது, உண்மையாகி விட்டதா இல்லையா! அதே போலத்தான், நான் சொல்வது அவ்வளவும், உண்மையாவி விடும்.”

“பெரிய ஞானி, யோகீஸ்வரன்! அடே ஏனய்யா வீணான வம்பளப்பு. உன்னுடைய தொணதொணப்பை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. தொலைந்து போகலாமென்றாலோ, பாழாய்ப்போன கால் சரியாகவில்லை - நொண்டி நொண்டித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. அதனாலே, சிறகொடிந்த பறவை போல இங்கே கிடக்க வேண்டி இருக்கிறது. நீ, கிடைத்தவனைக் குடைந்தெடுக்கிறாய், பெயர் கூறுவேன், பிறப்பு வளர்ப்பு பற்றிய தகவல் கூறுவேன், நடந்தது, நடக்கப் போவது எல்லாம் கூறுவேன் என்று பிரதாபம் பேசுகிறாய்.”

“கூற முடியாதா? இப்போது, உன் பெயர் இன்னது என்று என்னால் கூற முடிந்ததா இல்லையா? அதுபோலவே, மற்ற எல்லாம் கூட என்னால் கூற முடியும்.”

“கூற... முடியும்... ஆளைப்பார்... பெரிய மேதாவி தான்... சரி, மாடசாமி... அது வரையில் சரி... வேறு என்ன தெரியும், என்னைப் பற்றி... சொல்லேன் கேட்போம்...”

“சொல்லவா? மாடசாமி!... உன் பெயர் மாடசாமி... தொழில்... உன் தொழில்...?”

“கொலை செய்வது...!”

“இல்லையே! கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்வாய்... கொலை செய்ததில்லையே...”

“வழிப்பறி... யார்? நான்...? அடே! உன் வாக்கு தேவவாக்குத்தான்...”

“வழிப்பறிக் கொள்ளைக்காரன்! சிறைப் பறவை! இப்போது, உன்னைத் தேடிக் கொண்டு, திக்கெட்டும் அலை
கிறார்கள் போலீஸ்காரர்கள்! எலி தோண்டுவது போல வளை தோண்டியல்லவா, சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்து விட்டிருக்கிறாய்...”

“தெரிந்து விட்டதா உனக்கு? அட மோசக்காரா! தெரிந்து தான், தந்திரமாக என்னை இங்கே அடைத்து வைத்திருந்தாயா? போலீசிடம் ஒப்படைக்கவா இந்தச் சூது செய்தாய்? இதுவரையில் நான் கொலை செய்தது கிடையாது. இதோ இப்போது...”

“பைத்தியக்காரனாக இருக்கிறாயே! உன்னால் வேகமாக ஓட முடியாதே இப்போது. என்னையும் கொலை செய்து விட்டு, நொண்டி நொண்டி நீ செல்வாயானால், சுலபத்திலே போலீசிடம் தானே சிக்கிக் கொள்வாய்... உடம்பு பூரணமாகக் குணமாகட்டும். முயல் போல் ஓட, நரி போல் பதுங்க, புலி போல் பாய, உடலிலே வலிவு வந்த பிறகு, மகாராஜனாக, என்னைக் கொன்று விட்டு, கொலைகாரன் என்ற பட்டமும் பெற்றுக் கொண்டு, புறப்படு, போலீசிடமும் சிக்கிவிடாமல், தப்பித்துக் கொள்ள முடியும், அப்போது. இப்போது, உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுத்துத் தூங்கு... கோபம் எழவே கூடாது... நோய் அதிகமாகும்... எனக்கு மருத்துவம் தெரியும்...”

“உன்னை என்ன செய்வதென்றே எனக்குத் தெரிய வில்லை. உன் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை. இதோ பார்! என்னிடம் நயவஞ்சகம் செய்ய மட்டும் எண்ணாதே. நான் கொள்ளைக்காரன், சிறையிலிருந்து ஓடிவந்து விட்டவன், என்று எப்படியோ உனக்குத் தெரிந்துவிட்டது. சமயம் பார்த்து, என்னைப் போலீசிடம் பிடித்துக் கொடுத்துவிடப் போகிறாய்...!
“உன்னைப் போலீசிடம் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் இனாம் தருவார்கள்! சர்க்கார் அறிவித்திருக்கிறார்கள்!”

“சந்தேகமில்லை! என்னைப் போலீசிடம் கொடுத்து விடத்தான், இவ்வளவு உபகாரிபோல நடித்து வந்தாய்... அட சூதுக்காரா! எனக்கு அப்போதிருந்தே சந்தேகம்! அதனால்தான், மூர்ச்சை தெளிந்ததுமே, போய் விடமுயன்றேன் - பசப்பிப் பேசிப் பேசி, என்னைத் தடுத்து நிறுத்தி வைத்தாய்...”

“நான் தடுத்து நிறுத்தா விட்டால், நீ என்ன நூலேணி போட்டு மாடிமீது ஏறி விடவா முடியும்?”
“நூலேணியா...?”

“ஆமாம்! அற்புதமாகச் செய்து வைத்திருக்கிறாயே... அதென்ன இரும்புக் கம்பியும் முறுக்குக் கயிறும் சேர்த்துப் பின்னப்பட்டதா...!”

“கண்டு பிடித்து விட்டாயா?...”

“அடே அப்பா! உன் பக்கத்திலேயேதானே அந்த மூட்டை கிடந்தது... பிரித்துப் பார்த்து, நூலேணி, சாவிக் கொத்து, சுத்தி, அரம், கத்தரிக்கோல், கன்னக் கோல் இவை இருந்ததைக் கண்டு பிடிக்கவா முடியாது! இதற்கு என்ன மேதாவித்தனம் வேண்டும்...”

“என் தலைமாட்டிலேயேதானே மூட்டை எப்போதும் இருந்து வந்தது... நீ எப்படி, எப்போது பார்த்தாய்...?”

“முதல்நாளே பார்த்து விட்டு, உன் தலைமாட்டிலேயே வைத்து விட்டேன்... நினைவு இருக்கிறதா உனக்கு... நீ இங்கு வந்து, இன்றோடு இருபத்தொரு நாட்களாகின்றன... மூட்டை உன்னிடம்தான் இருக்கிறது... வேண்டுமானால், நீயே மூட்டையைப் பிரித்துப் பார்த்துக் கொள், உன் சாமான்களெல்லாம் சரியாக இருக்கிறதா என்று; நான் ஒரு துரும்பும்கூட எடுத்துக் கொள்ளவில்லை...”

“என்னடா இது பேரிடியாக இருக்கிறது. நீ, மனுஷன் தானா... எனக்கு ஒன்றுமே புரியவில்லையே... நான் கொள்ளைக்கார மாடசாமி என்பதும் தெரிந்திருக்கிறது. என் கன்னக்கோல் மூட்டையையும் கண்டுபிடித்து விட்டாய். இந்த இருபது நாட்களாக என்னைப் போலீசிலும் பிடித்துக் கொடுக்க வில்லை, ஆயிரம் ரூபாய் இனாம் தருவதாகச் சர்க்கார் கூறுவதும் உனக்குத் தெரிந்திருக்கிறது, தெரிந்தும், போலீசில் ஒப்படைக்க வில்லை...”

“ஆமாம்... வீட்டிலே வைத்து வைத்தியம் பார்த்து வருகிறேன், உபசாரம் செய்கிறேன்... பாதுகாத்து வருகிறேன்...”

“ஏன்? என்ன வேண்டும் உனக்கு?”

“எனக்கா? ஒரு நல்ல மனிதன் வேண்டும்! நீ நல்லவனாக வேண்டும்!! அவ்வளவுதான்...”

“நான், நல்லவனாக வேண்டுமா! நான்? அட, பைத்தியக் காரா!! நான் கொள்ளைக்காரன் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டாய் என்பதை அறிந்ததும், உன்னைக் கொல்லவேண்டும், என்று எனக்கு ஆத்திரம் கொப்புளித்துக் கொண்டு வருகிறது... மேலே பாய்ந்து, கழுத்தை நெரித்து விடலாமா என்று துடிக்கிறேன்... என்னைப் போய்...”

“நல்லவனாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்... நல்லவன் ஆக்கப் போகிறேன்...”

“என்னை...?”

“உன்னைத்தான், மாடசாமி! உன்னைத்தான்! என்னால் முடியும்! நான் இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுள்ள அறிவும், சிந்தனையும், அனுபவமும், இதற்குப் பயன்படுகிறதா இல்லையா என்று பார்த்து விடத்தானே போகிறேன்! நான், அந்தப் பரீட்சை நடத்துவதற்காகவே, உன்னைப் போலீசில் ஒப்படைக்கவில்லை! அவர்களிடம் சிக்கித்தானே, நீ இந்த் நிலைக்கு வந்துவிட்டாய்! அவர்களால், கெட்டவர்களைத் தண்டிக்க முடியும், கெட்டவர்களை நல்லவனாக்க முடியாது. அது ஒரு தனி விதமான வைத்தியம்... எனக்குத் தெரியும்.”
“இது ஒரு புது தினுசான பைத்தியம்! வேறென்ன சொல்ல முடியும். இதோ பார், பண்டாராம்! நான் பழிபாவத்துக்கு அஞ்சாதவன்! ஆமாம், என் நெஞ்சில் ஈவு இரக்கம் கிடையாது, தர்மம், நியாயம், எதற்கும் கட்டுப்பட மாட்டேன். தேவைப் பட்டதைப் பெறுவதற்காக எந்த முறையையும் கையாளுவேன்! களவு, எனக்கு நாற்பது வருஷப் பழக்கம்! போலீசை ஏய்ப்பது எனக்கு ஒரு விளையாட்டு. இரும்புக் கம்பிகளைப் பெயர்த் தெடுப்பது, கருங்கல் சுவர்களைத் துளைப்பது இதெல்லாம் எனக்குத் தண்ணீர் பட்ட பாடம்! குழந்தைகளின் நகைகளைக் கூடத் திருடி இருக்கிறேன். சில சனியன்கள் அப்போது கூடச் சிரித்தபடி இருக்கும் - மயங்கினதில்லை நான்; பாட்டிமார்கள், பொல பொலவெனக் கண்ணீர் விட்டுக் கதறி இருக்கிறார்கள், என் கத்தியைக் கண்டு, ச்சீ! கிழட்டுப் பிணம்! கழட்டு காதோலையை எனக்கு யாரிடமும் பாசம், பற்று, நேசம் கிடையாது. யாரிடமும் நான் பாசம் நேசம் எதிர்பார்க்கவுமில்லை. யாருக்கும் மரியாதை காட்டியதில்லை, என்னையும் யாரும் மனிதனாகவும் மதித்ததில்லை. நான் மிருகம்... ஆமாம், துஷ்ட மிருகம்... நீ ஒரு ஏமாளி.... பாம்புக்குப் பால் வார்த்து வளர்ப்பது என்று பழமொழி சொல்வார்களே, அதுபோல, என்னை இங்கு வைத்துக் கொண்டிருக்கிறாயே...”

“இவ்வளவு தெளிவு இருக்கிறது உனக்கு... நீ ஏன் நல்லவனாக முடியாது! நிச்சயம், நல்லவனாகப் போகிறாய்.”

“யாருக்காகவாம்! நான் கெட்டவனாகி, கொள்ளைக் காரனானதால் வருத்தமோ, வெட்கமோ, ஆத்திரமோ அழுகையோ கொள்வதற்கும் ஓர் ஆசாமியும் கிடையாது... நான் நல்லவனானால் அதைக் கண்டு பெருமையும் சந்தோஷமும் அடைவதற்கும் ஆள் கிடையாது - இந்த உலகில், நான் தனி ஆள்! ஆமாம், சொந்தம் தொடர்பு இன்றி இவ்வளவு காலம் கழித்து விட்டேன்... இனியும் அப்படித்தான்... சாக்கடை ஓரத்தில் பிறந்தேன்... சாக்கடையிலேயே புரண்டு கொண்டிருக்
கிறேன்... அங்குக் கிடக்கும் பூச்சி புழுக்களிடம்தான் எனக்குப் பழக்கம்... யாருக்காகவும் நான் அஞ்ச வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. யாருடைய அன்புக்காகவும் நான் காத்துக் கிடந்ததில்லை... அப்படிப்பட்ட நான், யாருக்காக நல்லவனாக வேண்டும்? எதற்காக நல்லவனாக வேண்டும்?”
“உலகத்துக்காக! எனக்காக!”

“இந்த ஊதாரிப் பேச்சு எனக்குப் பிடிக்காது! ஆமாம், கட்டோடு பிடிக்காது. உலகத்துக்காகவாம், உலகத்துக்காக! உலகத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு! என்னிடமிருந்து உலகம் எதைப் பெறவேண்டும், எனக்கு அது என்ன தந்தது? பிறந்தேன், இறக்கும் வரையில் வாழப் போகிறேன்... வாழ்ந்து கொண்டிருக்கும்போது, எனக்கு முடிந்ததைச் செய்து கொண்டிருக்கப் போகிறேன். அவ்வளவுதான்! நான் செய்வதனால், பிறருக்குத் தீங்கு நேரிட்டால் எனக்கென்ன, பிறர் பார்த்து என்னை நல்லவன், என்று சொன்னால் எனக்கு வரப்போவதென்ன? நான் நல்லவர்கள்’ என்பவர்களை, உலகம் என்ன விதமாக நடத்துகிறது என்பதைக் கொஞ்சம் பார்த்துமிருக்கிறேன். என்னைக் கண்டால், நடுங்குகிறது... பார்த்தாயல்லவா நீயே... எட்டுத் திக்கும் போலீஸ் தேடுகிறது என்னை! ஏன்? அவ்வளவு நடுக்கம் என்னிடம்! நல்லவனைத் தேடிக் கண்டு பிடிக்கும் காரியத்திலா, உலகம் ஈடுபட்டிருக்கிறது! பைத்தியம், உனக்கு! இதோ பார்! என்னைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு! அரை பைசா தருமா, சர்க்கார் நல்லவனைக் கண்டறிந்து சொன்னால்! நல்லவன் ஆக வேண்டுமாம் நான்! உலகத்துக்காகவாம்! நான் என்ன ஏமாளியா! எந்த உலகம், என்னைக் கண்டால், கிலி கொள்கிறதோ, நான் மிரட்டினால் நடுங்கிக் கிடக்கிறதோ, நான் கேட்பதைக் கொடுத்து விட்டுக் கும்பிடு போடுகிறதோ, அதே உலகத்தின் முன் நான் அடங்கி ஒடுங்கி அடிமை போலாகி, நடந்து கொள்ள வேண்டுமாம்! புலி எதற்காகப் புனுகுப்பூனை ஆகவேண்டும்! புலியைச் சுட்டு விடுகிறார்கள் - தெரியும் ? ஆனால் சுடப்படுகிற வரையில், அதன் எதிரே வரப் பயந்து கிடக்கிறார்களல்லவா! தெகிட்டும் அளவு இரத்தம் குடித்தான பிறகு, புலி சாகும் - அப்போதுகூட தெரியுமா உனக்கு, ஆளு மாடு, செத்து மனிதருக்கு உணவாகும், புலி அப்படி அல்ல! நான், நல்லவனாக வேண்டுமாம்! ஆடு ஆக வேண்டுமாம்! ஆண்டி! வீண் கனவு காணாதே! உன்னால் முடியாது! நிச்சயமாக முடியாது, போகட்டும், நான் கொள்ளைக்காரன் என்று தெரிந்தும் இத்தனை நாள், ஏதோ ஒரு பைத்தியக்கார எண்ணத்தால் என்னைப் போலீசில் ஒப்படைக்காமலிருந்து விட்டாய், பிழைக்கத் தெரியாத ஆசாமி, இனி என்னைப் போலீசில் ஒப்படைக்க ஏதேனும் சூழ்ச்சி செய்தாயோ... அவ்வளவுதான்... பரலோக யாத்திரைதான்!”

“நான் ஏனப்பா, உன்னைப் போலீசில் ஒப்படைக்க வேண்டும்? உலகம் உன்னை என்னிடமல்லவா ஒப்படைத்து இருக்கிறது... உன்னை நல்லவனாக்கி உலகத்திடம் ஒப்படைக்கப் போகிறேன், போலீஸ் குறுக்கிட நான் அனுமதிக்கப் போவதில்லை!”

“சரியான ஏமாளி... எதையோ சொல்லிக் கொண்டு கிட!”

2
மாடசாமி மட்டுமல்ல, மருதூர் வட்டாரம் முழுவதிலுமே, பண்டாரம், ‘சுத்த ஏமாளி’ என்பதுதான் பேச்சு. புத்தகமும் கையுமாக இருப்பார் பண்டாரம் - மாடோட்டும் கோலும் மண் பிசையும் கரமும் கொண்டவர்களாக இருப்பவர்களெல்லாம் கூட, அவரை ஏமாளி என்றுதான் கேலியாகக் கூறுவார்கள்! ஆனால் அந்தக் கேலிப் பேச்சிலும் ஒரு கனிவு இருக்கும். அலட்சியமோ அருவருப்போ இருப்பதில்லை “அட போக்கிரி! அடத் திருட்டுப் பயலே!” என்று தாய் கூறிக் கொஞ்சுவதில்லையா, தன் குழந்தையிடம். அது போலத்தான், ஏமாளி, சுத்த ஏமாளி, விவரம் தெரியாத அப்பாவி, என்றெல்லாம் மக்கள், பண்டாரம் பற்றிப் பேசுவர்.

பண்டாரம், என்பது கூட ஊரார் கேலிக்காக வைத்த பெயர் தான். காவி திருவோடு, உருத்திராட்ச மாலை, விபூதிப்பை, இவற்றைக் கண்டல்ல - வெள்ளை வேட்டிக்காரர்தான் அந்தப் பண்டாரம். அவரிடம் மருந்துப் பொட்டலங்கள் கொண்ட ‘பை’ தான் இருந்தது. எனினும், குடும்பமின்றி, சுகத்தை நாடாமல் அவர் இருந்துவந்த போக்கைக் கண்டு பண்டாரம் என்று அழைத்தனர்; புன்னகையால் அதை ஆமோதித்துவிட்டுச் சில வேளைகளில் அவர், நான் மட்டும் விரும்பி இருந்தால், ‘பண்டாரச் சன்னதி’யாகி இருக்க முடியும். என் எதிரே விழுந்து விழுந்து கும்பிடுவீர்கள். பல்லக்கிலே அல்லவா சவாரி செய்திருப்பேன்” என்று சொல்லுவார். அது உண்மையுங்கூட. ஏனெனில், வெள்ளை வேட்டியுடன் இருந்து வந்த பண்டாரம், இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளி அம்பலத்து மடாதிபதியாகப் போகிறார் என்று அனைவரும் பேசிக் கொண்டதுண்டு - அது அவர் குறிஞ்சிபுரத்தில் இருந்த போது, பண்டாரத்துக்கு அங்கு அவ்வளவு மதிப்பு - பெயர் பாதி மதிவேதியர்க்கடியார் என்பதாகும். காவி உண்டு, அதிலே தனியானதோர் கவர்ச்சி உண்டு! பூ இதழ் போன்ற ஆடை! அதிலே அழகுதரும் அளவுக்குக் காவி!! கழுத்திலே உருத்திராட்சம், பொறுக்கி எடுக்கப்பட்டு, பொன் கவசம் போடப்பட்டது. வெள்ளை அம்பலத்து மடாதிபதி திரிபுராந்தக பரம்பரை ஸ்ரீலஸ்ரீ திரு அருட்பிரகாச தேசிகருக்கு. இந்த இளைஞரிடம், மிகுந்த நம்பிக்கை; இவனே, எனக்குப் பிறகு! என்று வெளிப்படையாக, மடாலயம் வரும் பிரமுகர்களிடம் கூறியும் வந்தார். அரண்மனை இளவரசன் போல, வெள்ளி அம்பல மடாலயத்திலே, இவருக்கு அந்தஸ்து தரப்பட்டிருந்தது. எனினும் எல்லோரும் எதிர்பார்த்து நடை பெறவில்லை. வெள்ளி அம்பல மடாலயத்தை விட்டு வெளியேறியவர் பிறகு வெள்ளை வேட்டிப் பண்டாராமாகி மருதூர் மக்களால் ‘ஏமாளி’ என்று கேலி பேசப்பட்டு வந்தார்! கொள்ளைக்கார மாடசாமியே அல்லவா “சுத்த ஏமாளி” என்று கேலியாகப் பேசுகிறான்.

“ஏமாளிகளை ஏய்த்துப் பிழைக்கும் இந்த இழிதொழிலில் உழல என் உள்ளம் இடமளிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்களய்யா! நான் தங்கள் நம்பிக்கையை நாசமாக்கி விட்டதற்காகக் கோபித்துக் கொள்கிறீர் - ஆனால் நான் என்ன செய்ய முடியும்!” என்றான் காவியைக் களைந்து விட்டு, அழுக்கேறிய ஓர் வெள்ளை ஆடையைக் கட்டிக் கொண்டே, இந்தப் பண்டாரம் - அன்றோர் நாள்.

“இப்படி ஓர் ஏமாளியை நான் கண்டதில்லை! பாதி மதியானுக்கு அடியான் என்று உனக்கு நான் பட்டப் பெயரிட்டேன்! நீயோ பாதிமதியும் இல்லாதவனாகி விட்டாயே!” என்று புலமையைக் கோபத்துடன் கலந்தளித்துப் பேசினார், தேசிகர்.

“தாங்கள் மட்டுமல்ல, உலகில் பல பேர் என்னை ஏமாளி என்றுதான் கேலி பேசுவர். ஐயா, தங்கள் தயவு எனக்கு இருப்பது தெரிகிறது. இங்கு ‘தர்பார்’ என்னென்ன இன்பத்தைப் பெற வசதி அளிக்கிறது என்பதையும் காண்கிறேன். என்னால், இவற்றைப் பெற முடியும் என்ற நிலை வளர்ந்திருக்கிறது. எனினும், என் மனம், இவற்றை ‘அக்கிரமம்’ என்று உறுதியாக எண்ணச் செய்துவிட்டது. தாங்கள், கூறியபடியேதான், நான் இங்கு ஏடுகளை, ஓலைச் சுவடிகளை, கருத்தூன்றிப் படித்தேன்; ஆனால் ஐயா! என்னவென்று நான் சொல்வது, எந்த நோக்கம் பெற வேண்டுமென்று தாங்கள் எந்த ஏடுகளைப் படித்தறியும் படி தந்தீர்களோ, அதற்கு நேர்மாறான எண்ணமே எனக்கு, அந்த ஏடுகள் தந்தன. நான் என்ன செய்ய...”

“நான் என்ன செய்ய... என்று நானும்தான் கேட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நீ, இப்படிப்பட்ட கொதி தாங்காத நொய்யரிசி என்று தெரிந்து கொள்ளாமல், நானோர் ஏமாளி, உன்னை என் வாரிசு ஆக்கிக்கொண்டேன் - அதன் காரணமாக மடாலயத்து விஷயமவ்வளவும், உனக்குக் கூறித் தொலைத்து விட்டேன். நீயோ, இப்போது, வெள்ளி அம்பலத்து மடாலயம் அளிக்கும் ‘விருது’கூட வேண்டாமென்று கூறிவிட்டு, வெள்ளை வேட்டிக்காரனாகி விட்டாய்! நீ வெளியே சென்றதும், விதண்டா வாதிகளும் விஷமக்காரர்களும், உன்னைச் சூழ்ந்து கொண்டு, கிளறிக் கிளறிக் கேட்பார்கள் மடாலயத்தைப் பற்றி. மடாலயத்திலே என்னென்ன பாவச்செயல் நடைபெறுகின்றனவோ, எத்தனை எத்தனை அக்கிரமமோ! என்னென்ன படு கொலையோ! எதைக் கண்டு உள்ளம் பதறிப் போய், இந்த உத்தமன், மடத்தை விட்டு வெளியேறி விட்டானோ! என்றெல்லாம் பேசப் போகிறார்கள். நீயும் என்னென்ன கூறப் போகிறாயோ! உன்னைப் பூஜாமடத்தில் மட்டும் நுழைய அனுமதி கொடுத்து வைத்திருந்தேனானால், நானோ, உன்னை, தாராளமாக, எல்லா இடங்களிலும், எந்த நேரத்திலும் நுழைய இடமளித்து விட்டேன். நீயோ இப்போது, வெள்ளை வேட்டி! வெளியே உன்னை விட்டால், என்னென்ன விபரீதம் விளையுமோ? நான் என்ன செய்ய... நானல்லவா இப்போது யோசிக்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. நான் என்ன செய்வது...?”

ஆதீன அதிபருக்கு விபரீதம் ஏதும் நேரிடாது என்று உறுதியாக வாக்களித்து விட்டு அதிபர் அதற்காகச் செய்த பிரத்யோக ஏற்பாட்டுக்கும் இணங்கிய பிறகே ‘வெள்ளை வேட்டி’ வெளியேற முடிந்தது.

பலர் கேட்டனர், பன்னிப்பன்னி! ‘வெள்ளை வேட்டி’, தனக்கு மடாலயத்திலே தங்கி இருப்பதற்கான ‘பரிபக்குவம்’ ஏற்படவில்லை என்று கூறியது கேட்டு ஆச்சரியப் பட்டனர்.

ஆராய்ச்சித் திறனுடன் சகல நூல்களையும் ஓதி உணர்ந்தவர், ஐயன் பெருமைகளைப் பாமரர் நன்கு உணர்ந்து உருகத்தக்க வகையில், பதிகங்களைப் பாடவல்லவர், தத்துவங்களை அலசிப் பொருள் கூறி சொற்பொழிவாற்றத் தக்கவர், கனிவுடன் எவரிடமும் உரையாடி, எவர் மனத்தையும் வசீகரிக்கும் குணம் கொண்டவர், இவருக்கே மடாலயத்தில் தங்கி இருக்கும் பரிபக்குவம் ஏற்படவில்லை என்றால், வேறு யாருக்குத்தான் ஏற்பட முடியும் என்று பேசிக் கொண்டனர். கஞ்சாக்குடியினால் கட்டை போலக் கீழே விழுந்து கிடப்பவன், காவியை மறைத்து விட்டு, வெள்ளையாடை அணிந்து கொண்டு விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுபவன், ‘பூர்வாசிரமத் தொடர்புகளுக்கு மாதந்தவறாமல் பணம் அனுப்பி வருபவன், இப்படிப் பட்டவர்களெல்லாம், அங்குத் தங்கி இருந்து வந்தனர் - இவர் மட்டும் பரிபக்குவம் பெறவில்லை என்றால், எப்படி நம்ப முடியும்? ஆனால் என்ன செய்வது, அவரே அதனை வலியுறுத்திக் கூறுகிறார்.

“இப்படி ஓர் ஏமாளி உண்டா? இந்தக் கிழப்புலி, யாரிடமும் நம்பிக்கை வைப்பதில்லை - எப்படியோ இவனிடம் நம்பிக்கை வைத்து, செல்லப் பிள்ளை போல நடத்தி வந்தது - எல்லா வசதியும் இருக்கிறது - பண்டார சன்னதியாகி ‘ஜாம்ஜாம்’ என்று தர்பார் நடத்திக் கொண்டிருக்கலாம், எனக்கு மடத்திலே இருக்க இஷ்டம் இல்லை என்று கூறிவிட்டு, வெண்ணெய் திரண்டு வந்ததும் அதை வழித்தெடுத்துச் சுண்ணாம்புக் கலயத்தில் கலந்து விட்டதே இந்தப் பைத்தியம்!’ என்று சட்டிச் சாமி, மொட்டைச்சாமி, கொட்டைச்சாமி - போன்றவர்கள் கேலியாகப் பேசிக் கொண்டனர்.

3
“அம்மா, நான் மடாலயத்திலிருந்து விலகி விட்டேன்...”

“அப்படியா? ஆண்டவனே, என் மகனை எனக்குத் திருப்பித் தந்து விட்டாயா...” அடெ ராஜா, காவியைக் களைந்து விட்டு, வெள்ளை வேட்டியில் நீ இருப்பது பார்க்கும்போது, என் மனம் என்னதான் ஆனந்தமடைகிறது தெரியுமா? போறாத வேளையால் உன் புத்தி குழம்பிப் போய், பண்டாரக் கூட்டத்திலே போய்ச் சேர்ந்துகொண்டு, திருவோடு தூக்கிக் கொண்டு திரிந்து வந்தாய். அந்தக் கோரக்காட்சியைக் கண்டபோது என் கண்களில் இரத்தமல்லவா பீறிட்டுக் கொண்டு வந்தது. உனக்கு ஐந்து வயதிருக்கும்போது ‘வித்யாரம்பம்’ நடந்தது. அப்போது உன் அப்பா, டமாஸ்கஸ் சில்க்கிலே சட்டை தைத்துப் போட்டார்; ‘ராஜகுமாரன்’ போல இருந்தது. அதைப் பார்த்த அதே கண்களால், காவி கட்டிக் கொண்டு, கழுத்தில் உருத்திராட்ச மாலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு நீ நின்றபோது எப்படியடா பார்த்துச் சகித்துக் கொள்ள முடியும்! ஒவ்வொரு நாளும் ஒரு நூறு பண்டாரங்களுக்குச் சோறு போடும் ‘சக்தி’ பகவத் கடாட்சத்தாலே நமக்கு இருக்கும்போது, நீ எதற்காகத் திருவோடு தூக்கித் திரிய வேண்டும்? நீ, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள் அம்பு, இங்கே இருக்கிறது, அங்கே பெரிய சாமியாரின் துணியைத் தோய்த்துப் போடவும், கைகாலைப் பிடித்து விடவும் வேண்டுமாமே, நீ. மகனே! உனக்கேன் அந்தத் தலையெழுத்து? தேவாரமோ, திருவாசகமோ, உனக்குப் பிடித்தமான எந்தப் புராணமோ, படிக்க வேண்டு மென்றால், இங்கேயே இருந்து படிக்க முடியாதா - பணம் கொடுத்தால் அந்தப் பண்டாரங்களிலேயே யாராவது ஒரு பண்டிதன், நம் வீடு தேடி வந்து, தேவாரம் பாடுகிறான். இதை விட்டுவிட்டு, புராணம் படித்துப் புண்ணியம் தேடிக் கொள்ள பண்டாராமாக வேண்டுமா? எவ்வளவு கீர்த்தி வாய்ந்த குடும்பம் நம்முடையது? உன் பாட்டனார் - என் தகப்பனார் - பட்டாளத்திலே பெரிய அதிகாரியாக வேலை பார்த்து, பஸ்ரா போய் வந்தார். உன் அப்பா மிலிடரி காண்ட்ராக்ட் எடுத்து ஏராளமாகச் செல்வம் சேர்த்தார் - அவர் செய்யாத திருவிழா உண்டா? போகாத க்ஷேத்திரம் உண்டா? அவருக்கும் புராணம் என்றால் மெத்த பிரியம்தான். நம்ம வீட்டிலே, உனக்கு அப்போது வயது எட்டு, ஏழு இருக்கும், தர்மானந்த பண்டிதர் என்பவர், மூன்று மாதம் தொடர்ச்சியாகத் திருவிளையாடற் புராணம் படித்தார்.”

“திருவிளையாடற் புராணமா? திருவிளையாடற் புராணமா?” என்று கேட்டுவிட்டு, மகன், கைகொட்டிக் கொட்டிச் சிரித்தது கண்டு, தாயாருக்குச் சிறிதளவு பயமாகக்கூட இருந்தது. மகனுக்கு மனம் குழம்பிவிட்டதோ, என்று.

திருவிளையாடற் புராணம் என்றால், சிரிப்பு ‘பகீர் பகீர்’ என்று வருவது ‘பண்டாரத்துக்கு’ வாடிக்கை. அதற்குக் காரணம், அவனுக்கு வெள்ளி அம்பலத்து மடாலயத்திலே, ஆதீனக்கர்த்தா, பிரத்யேகமாக, திருவிளையாடற் புராணத்தைத் தந்து பார்க்கச் சொன்னது தான்! அன்று முதல், திருவிளையாடற் புராணமென்றால் இப்படித்தான் சிரிப்பு வருவது வாடிக்கை.

மகன், இனி மாளிகை வாசத்தை ஏற்றுக் கொண்டு, மனதுக்குப் பிடித்த மங்கையை மணம்செய்து கொண்டு, குதூகலமாக வாழ்வான், கண் குளிரக் காணலாம், என்று தாயார் எண்ணினார்கள். காவியைக் களைந்து விட்டதால், இனிமகன், கனவானாகி ஊர் மெச்ச வாழத் தொடங்குவான் என்று எண்ணிக் கொண்டார்கள்; ஆனால், காவி மட்டும்தான் போயிற்று, மடத்தைவிட்டு வெளியே வந்தான், உள்ளம் பண்டாரக் கோலத்திலே தான் இருந்தது; உண்மையான பண்டாரமாவதற்காகவே, வெள்ளை வேட்டிக் கட்டிக்கொண்டு, வெள்ளி அம்பலத்து மடாலயத்தை விட்டு வெளியேறினேன் - மீண்டும் சம்சார சாகரத்தில் விழ அல்ல - உமக்கு ஒரு பேரப் பிள்ளையை அளிக்கவல்ல - பிள்ளை, இறந்தவன் இறந்தவனே...! நான், வெள்ளை வேட்டிப் பண்டாரம் - வேதகிரி அல்ல, என்று மகன் கண்டிப்புடன் கூறிவிட்டான்; அப்போது காய்ச்சலும் இருமலும் கண்டு படுத்தவர்கள், எலும்புந் தோலுமாகி, எழுந்து நடமாட மாதம் ஆறு ஆயிற்று.

மகனோ, வெள்ளை வேட்டிப் பண்டாரமாகி விட்டான். குடும்பம் ‘வாரிசு’ அற்றுப் போகிறது. தாயார், இனி ‘சொத்து’ யாருக்காக என்று எண்ணத் தலைப்பட்டு, ‘தான தர்மம்’ தாரளமாகச் செய்யத் தலைப்பட்டார்கள்; மகன், மருத்துவ முறைகள் அறிந்தவர்களை வரவழைத்து உபசரித்து, பணம் செலவிட்டுச் சித்த வைத்திய முறைப்படி மருந்துகள் தயாரிக்கும் பரீட்சையில் ஈடுபட்டான். செடியும் கொடியும், தழையும் வேரும், மலைமலையாக; காய்ச்சுவதும், அரைப்பதும், புடம் போடுவதும் தைலம் இறக்குவதும், மும்முரமாக.

‘ஆடாதோடை’ இலை ஒன்று மட்டும், ஆயிரத்தெட்டு வகையான மருந்துகள் செய்யப் பயன்படும் என்பார் ஓர் மருத்துவர் - ஆயிரம் ரூபாய் கரையும், மருந்து தயாராகும் - அதைச் சாப்பிட்டவர்களோ ‘நோய்’ பரவாயில்லை, இப்போது உயிரே போய்விடும் போலிருக்கிறதே என்று கதறுவார்கள், பாழுங் கிணற்றிலே போட்டு விடுவார், மருந்துப் பெட்டியை. ‘புடம்’ போட்டதிலே ஆறு ‘எரி மூட்டை’ குறைவு, அதனால் பதம் கெட்டு விட்டது, என்று சமாதானம் சொல்லுவார் மருத்துவர் - அவன் சுத்த மட மன்னார்சாமியாயிற்றே, அவனுக்கு என்ன தெரியும் வைத்தியம். மலம் கூட மருந்து என்பான், பணம் கறப்பதிலே பக்காப் பேர்வழியாயிற்றே! உங்களை ஏமாற்றி விட்டான் - என்று கூறிவிட்டு, மற்றோர் வைத்தியர், தமது ‘வேலையைத் துவக்கி’ மேலும் கொஞ்சம் பணத்துக்கு வேட்டு வைப்பார்!

உற்றார் உறவினர்களிலே சற்றுத் தந்திர புத்தி படைத்தவர் களெல்லாம், பல வழியிலும் பணத்தைக் கறந்து கொண்டே இருந்தனர் - தாயாரும் தட்டாமல் தயங்காமல், பத்து கேட்டால் ஐந்தாவது கொடுத்து அனுப்புவார்கள் - ஒரே ஒரு காரியத்துக்கு மட்டும் பண உதவி செய்வதில்லை - கலியாணத்துக்கென்று வந்து கேட்டால், கால் ரூபாயும் தரமாட்டார்கள் - கண்ணீர்தான் சிந்துவார்கள்!

பணம் நம்மை வைத்துக் கொண்டு பலவிதமான சுகானு பவமும், படாடோபமும் பெற முடியாத இவர்களிடம் இருப்பதால், நமது பெருமையே பாழ்பட்டுப் போகிறது, இவர்களிடம் இனியும் இருந்து, நமது மதிப்பைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று கருதியோ என்னவோ, வேக வேகமாக, வெளி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது! தாயாரும் இறந்து விடவே, வெள்ளை வேட்டிப் பண்டாரம், குறிஞ்சி புரத்தில் மிச்சம் இருந்த சொத்துக்களை உறவினர் களிடம் ஒப்படைத்து ‘தர்ம காரியம்’ செய்து வரும்படிக் கூறிவிட்டு, ‘தேச சஞ்சாரம்’ செய்து வந்தான்; மருதூர் வட்டாரம், பண்டாரத்துக்குப் பிடித்துவிட்டது, எனவே, அங்கேயே தங்கி விட்டான். அவன் ‘குடில்’தான், அந்தக் கிராமத்துக்கு, வைத்தியசாலை, பள்ளிக் கூடம், படிப்பகம், பஞ்சாயத்து ஆபிஸ், எல்லாம்.

கேலி பேசிப் பொழுது போக்கக்கூட, அவன் ‘குடில்’ தான்! பண்டாரம்! பண்டாரம்! என்று ஒரு நாளைக்குப் பத்துத் தடவையாவது உச்சரிக்காத ஆளே கிடையாது, மருதூரில்! எல்லோருக்கும், ‘பண்டாரம்’ ஓர் ஏமாளி என்றுதான் எண்ணம்! ஞானப்பைத்தியம் - கிறுக்கு - என்று கூடச் சிலர் கூறுவர்! பண்டாரம் இப்படித் தன்னைக் கேலி செய்வதால் சிலருக்கு வேடிக்கையான பொழுதுபோக்கு கிடைக்கிறதே அதற்கு நாம் பயன்படுகிறோமல்லவா, அதுவரையில், நல்லது தான்! என்று எண்ணிக் கொள்வான். அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவனுக்கு, மாடசாமி தன்னை ஓர் ஏமாளி என்று கூறியது கேட்டுக் கோபமா வரும் - புன்னகை தான் பிறந்தது. “இப்படி வேடிக்கையாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும், மாடசாமி, ‘உம்’ மென்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், உலகத்தையே பறிகொடுத்து விட்டவன் போல அழுது கிடப்பதும் எனக்குப் பிடிப்பதே இல்லை!” என்று பண்டாரம் கூறினான். மாடசாமிக்கு, பைத்தியம் பிடித்து விடுவது போலாகி விட்டது.

அச்சப்பட்டுக் கெஞ்சுபவர்களை அவன் பார்த்திருக்கிறான், பிடித்து அடிக்கும்போது கண்டபடி ஏசுபவர்களை அவன் கண்டிருக்கிறான், ஆனால், தன்னிடம் பாசம் காட்டியும் தனக்கு மகிழ்ச்சி பிறக்கும்படி வேடிக்கையாகப் பேசுபவர்கள் யாரையும் அவன் கண்டதில்லை. படிப்பும் பண்பும் உள்ளவர்களின் தொடர்பே அவனுக்கு ஏற்பட்டதில்லை. இந்தப் பண்டாரம், கள்ளன் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும், போலீசில் பிடித்துக் கொடுக்க வில்லை, போய் விடு என் எதிரே நிற்காதே. இப்படிப்பட்ட இழிமகனா நீ, உன்னிடம் நான் இரக்கம் காட்டினேனே ஏமாந்து போய் என்று ஏசவில்லை. மாறாக, வேடிக்கைப் பேச்சல்லவா பேசுகிறான்! இதென்ன விசித்திரமான சுபாவம்! என்றெல்லாம் எண்ணிக் கொண்டான். அவனுக்குத் திகைப்பு மட்டுமல்ல, சிறிதளவு திகில் கூடத்தான் பிறந்தது.

‘மாடசாமி! பயமே வேண்டாம் என் விஷயத்தில்’ என்று கூறிவிட்டு பண்டாரம், தன் வேலைகளைக் கவனிக்கலானான். உலகிலே இதுவரை பெறாததோர் புதிய அனுபவம் பெற்ற, மாடசாமி, வாயடைத்துக் கிடந்தான்.

விசித்திரமான ஆசாமிதான் என்றாலும், எந்தச் சமயத்திலும் இங்கே ஆபத்து ஏற்படக்கூடும், எனவே சிறிதளவு நடமாட வலிவு ஏற்பட்டதும், ஓடிவிட வேண்டியதுதான்! என்று தீர்மானித்துக் கொண்டான்.