அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

உடன் பிறந்தார் இருவர்
1

“காட்டு மிருகங்களுக்குக் குகையும் புதரும் உண்டு, தங்கியிருக்க; நாட்டைக் காக்கும் போர் வீரர்களாகிய உங்களுக்கு உறைவிடம் உண்டா?”

இல்லையே!!

“மாற்றான் வருகிறான் தாயகத்தைத் தாக்க, உங்கள் இல்லத்தைக் காக்கக் கிளம்புங்கள் என்று தளபதிகள் முழக்கமிடுகிறார்கள், உங்களைப் போர்க்கோலம் கொள்ளச் செய்கிறார்கள்! உங்களுக்கு எங்கே இல்லம் இருக்கிறது? எந்த இல்லத்தைக் காப்பாற்ற நீங்கள் போரிடவேண்டும்? இல்லம் இருக்கிறதா உங்களுக்கு?”
இல்லை! இல்லை!

“இரத்தம் கொட்டுகிறீர்கள் நாட்டுக்காக. உயிரையும் தருகிறீர்கள், தாயகத்தைக் காப்பாற்ற. தாயகம் உங்களுக்குத் தருவது என்ன?”

தெரியவில்லையே!!

“தெரியவில்லையா! காற்றும் ஒளியும் கிடைக்கிறது! இருக்க இடம் தரவில்லை தாயகம்! உழுது பயிரிட வயல் இல்லை. ஒண்டக் குடிசை இல்லை.”

ஆமாம்! ஒண்டக் குடிசையும்தான் இல்லை.

வீர இளைஞன், விழியிலே கனிவுடன் காட்சிதரும் இலட்சியவாதி, பெருந்திரளான மக்களைப் பார்த்துக் கேட்கிறான். அவனுடைய கேள்விகள் அந்த மக்கள் மனத்திலே தூங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்புகின்றன.

இதே கேள்விகள், அவர்கள் மனத்திலே ஆயிரம் முறை எழும்பின - அடங்கின! மாளிகைகளைக் காணும் போதெல்லாம் இந்தக் கேள்விகள், மனத்தைக் குடைந்தன! பசும் வயல்களிலே முற்றிக் கிடக்கும் கதிர்களை அறுவடை செய்தபோதும், பழமுதிர் சோலைகளிலே பாடுபட்டபோதும், பாதை ஓரத்தில் நின்று பட்டுடைக்காரருக்கு மரியாதை செய்தபோதும், அவர்கள் மனத்திலே இந்தக் கேள்விகள் எழுந்தன!

ஆலயங்களிலே கோலாகல விழாக்கள் நடைபெற்ற பொழுதெல்லாம் இந்தக் கேள்வி! ஆடல் பாடல் அரங்கங்களி

லிருந்து களிப்பொலி கிளம்பிய போதெல்லாம் இந்தக் கேள்வி! மதுவும் மமதையும் தலைக்கேறிய தருக்கரின் சிவந்த கண்களை

யும், சிங்காரச் சீமாட்டிகளின் பல வண்ண ஆடைகளையும் கண்டபோதெல்லாம் இந்தக் கேள்வி!
உழைத்து அலுத்து, உண்டது போதாததால் “இடும்பைகூற் என்வயிறே” என்று ஏக்கமுற்றபோது - இந்தக் கேள்வி! சவுக்கடி பட்டபோது இந்தக் கேள்வி - சகதியில் புரண்ட போது, இந்தக் கேள்வி - பன்முறை, இக்கேள்வி மனத்திலே எழுந்ததுண்டு - நிலைமை தெரிகிறது - தெரிந்து?

தாயகத்தின் மணிக்கொடி வெற்றிகரமாகப் பறந்து, ஒளி விடுகிறது. வாகை சூடுகிறார்கள் மாவீரர்கள் - விருந்துண்கிறார்கள் சீமான்கள் - விருதுகள் அளிக்கும் விழாவுக்குக் குறைவில்லை. ஆண்டவர்களையும் மறக்கவில்லை, அழகழகான கோவில்கள், அலங்காரம், திருவிழா - இந்த வேலைப்பாடுகள் குறைவற உள்ளன - நமக்குத்தான், இருக்க இல்லம் இல்லை, வாழ்வில் இன்பம் இல்லை!

தாயகம், மாற்றாரை மண்டியிடச் செய்திருக்கிறது - வெற்றிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன - மண்டலங்கள் பிடிபட்டன, மாநகர்கள் தரைமட்டமாக்கப்பட்டன, கொன்று குவித்ததுபோக மிச்சம் இருப்பவர்கள், அடிமைகளாக்கி, வீரம் அறிவிக்கப்படுகிறது!

தாயகம்! கம்பீரம், வீரம், வளம், எனும் அணிபணிகளுடன்!! ஆனால், நமக்கோ ஒண்டக் குடிசையில்லை, மாமா, தாயகத்தின் வெற்றிக்காகக் குருதிகொட்ட அழைக்கப்படுகிறோம், முரசு கேட்டதும் பாய்ந்து செல்கிறோம், மாற்றான் புறமுதுகு காட்டும்வரை போரிடுகிறோம், தாயகம்! தாயகம்!! என்று தளபதிகள் வீரத்திலே முழக்கமிடும்போது, எழுச்சி கொள்கிறோம், எத்தனை பேர் எதிரிகள், என்ன ஆயுதம் நம்மிடம், என்பது பற்றிய கவலையற்றுப் போரிடுகிறோம், பிணங்களைக் குவிக்கிறோம், பிறந்த நாட்டில் பெருமைக்காக - ஆனால் அந்தப் பிறந்த நாட்டின் நமக்கு உள்ள நிலை என்ன? அந்த வீர இளைஞன் கூறியதுபோல், காட்டுமிருகங்களைவிடக் கொடுமையானது! நமக்கும் தானே இது தாயகம்? நாம், அவ்விதம் தான் கருதுகிறோம், ஆனால், நாடாளும் நாயகர்கள், அவ்விதம் கருதுவதாகத் தெரியவில்லை. கருதினால் நம்மை இந்தக் கதியிலா வைத்திருப்பர்! நியாயமான கேள்வி கேட்டான் இளைஞன். நேர்மையாளன்! அஞ்சா நெஞ்சன்! ஏழைப் பங்களான்!!
மக்கள் வாழ்த்துகின்றனர் - தம் சார்பாகப் பேசும் இளைஞனை - அவனோ, வாழ்த்துப்பெற, உபசார மொழிகளை வழங்குபவனல்ல, அவன் உள்ளத்திலே தூய்மையான ஒரு குறிக்கோள் இருக்கிறது - கொடுமையைக் களையவேண்டும் என்ற குறிக்கோள்; உறுதிப்பாடு.
தாயகத்தின் வெற்றிகளையும் அவன் கண்டிருக்கிறான் - அந்த வெற்றிக்காக, உழைத்த ஏழையரின் இரத்தக் கண்ணீரையும் பார்த்திருக்கிறான்.

மமதையாளர்கள் மாளிகைகளிலே மந்தகாச வாழ்வு நடாத்துவதையும் பார்த்திருக்கிறான், உழைப்பாளர் உடல் தேய்ந்து உள்ளம் வெதும்பிக் கிடப்பதையும் கண்டிருக்கின்றான்.

இருசாராருக்கும் இடையே உள்ள பிளவு, பயங்கரமான அளவிலே விரிவதும் காண்கிறான்-, இந்தப் பிளவு, எதிர்கால அழிவுக்கே வழி செய்கிறது என்பதையும் அறிகிறான்.

கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டவர்கள் கண்மூடி மக்களது நிலத்தை எல்லாம் கொத்திக் கொண்டு ஏப்பம் விடுகிறார்கள் - இது அபாய அறிவிப்பு என்பது அவனுக்குப் புரிகிறது.

கூலி மக்கள் தொகை தொகையாய் அதிகரிக்கிறார்கள் - புழுப்போலத் துடிக்கின்றார்கள் - இனி, புதுக் கணக்குப் போடா விட்டால், ஓடப்பர் உதையப்பர் ஆகிவிடுவர் என்பது அவனுக்குத் தெரிகிறது. ஆனால், ஆர்ப்பாட்டக்காரர் இதை அறிய மறுக்கிறார்கள். தாயகத்தின் வளத்தை அவர்களே சுவைக் கிறார்கள், செக்கு மாடென உழைக்கும் ஏழை மக்களுக்குச் சக்கை தரப்படுகிறது - இந்தப் ‘பாபம்’ போக்கிக்கொள்ள, பல்வேறு கடவுளருக்கு விழா நடத்தப் பணம் இருக்கிறது - பயம் என்ன!

இரண்டாயிரத்து எண்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் நாட்டில், அங்காடிச் சதுக்கத்தில், காணப்பட்ட காட்சி இது!

“காட்டு மிருகங்களுக்கேனும் குகை இருக்கிறது, நாட்டைக் காக்கும் வீரர்களே! உங்களுக்கு உறைவிடம் உண்டோ?” என்று கேட்டான், டைபீரியஸ் கிரேக்கஸ் எனும் இளைஞன்.

இன்று, உலகில் பல்வேறு நாடுகளிலே காணப்படும் எந்தத் துறைக்கும், ‘வித்து’ ஆதிநாள் ‘கிரேக்க - ரோமானிய’ அறிவுக் கருவூலம், என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும். கிரேக்க, ரோமானிய பேரரசுகளின் பெருமையைக் கூறிவிட்டுத் தான், பிறவற்றைப் பற்றிப் பேசுவர், மேலைநாட்டு வரலாற்றுரை ஆசிரியர்கள். மெச்சத்தக்கதும், பாடம் பெறத் தக்கதுமான பல்வேறு கருத்துக்களை உலகுக்கு அளித்தன, அவ்விரு பூம்பொழில்கள். எனினும், அங்கு உலவி, பிறகு அவற்றை நச்சுக்காடாக்கிய அரவங்கள் சிலவும் உலவின! வண்ணப் பூக்களையும், அவற்றை வட்டமிட்டு வண்டுபாடும் இசையையும், தாமரைபூத்த குளத்தினையும், அதிலே மூழ்கிடும் கோமளவல்லிகளையும், கண்டு சொக்கிவிட்டால் போதாது - மலர்ப் புதருக்குள்ளே அரவங்காட்டாதிருக்கும் அரவம், பச்சைக் கொடியுடன் கொடியாகக் கிடப்பதையும் கண்டுகொள்ள வேண்டும். ரோம்நாடு இறுதியில், ஆற்றலும் அணியும் இழந்து, வீழ்ந்துபட்டதற்கு முக்கியமான காரணமாக இருந்தது, நச்சரவுகள் போன்ற சில பல நடவடிக்கைகளை, முறைகளை, கருத்துகளை, நீக்காமற் போனதேயாகும்.

ஏழையர் உலகின் பெருமூச்சுக்கு, ரோம், மதிப்பளிக்க மறுத்தது - தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் கொடு நோய்க்கு ஆட்பட்டது. மண்டிலங்களைப் புதிது புதிதாக வென்று, மணிமுடிகளைப் பறித்துப் பந்தாட்டமாடி மகிழ்ந்தது. பஞ்சை பராரிகளை, அடக்கி வைப்பதே அரசியல் முறை என்று எண்ணிக்கொண்டது. ஓர் அரசின் மாண்பு, அது களத்திலே பெறும் வெற்றிகளின் அளவைப் பொறுத்து இருக்கிறது என்பதையே குறிக்கோளாக்கிக்கொண்டு, வறண்ட தலையர் தொகை வளருவதைப் பிரச்சனையாகக் கருதாமற் போயிற்று - கீறல், வெடிப்பாகி, வெடிப்பு ஓட்டையாகி, கலம் கவிழ்ந்தது போலாகிவிட்டது, நாட்டின் கதை.

ரோம் நாட்டு வீரம், பிற நாடுகளைப் பீதி அடையச் செய்தது - காலில் வீழ்ந்து கப்பம் கட்டிய நாடுகள் பல - களத்திலே நின்று அழிந்துபட்டன பல - ரோம் நாட்டு வீரப் படையினர், புகாத நகர் இல்லை, தகர்க்காத கோட்டை இல்லை, பெறாத வெற்றி இல்லை, என்று பெருமை பேசிக்கொண்டு, ஒளிவிடும் வாளை ஏந்திய தேசத்தில், எதிரியின் முடியையும், அதனை உறையிலிட்ட நேரத்தில் இன்ப வல்லிகளின் துடி இடையையும் வெற்றிப் பொருளாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர், மேட்டுக் குடியினர் - நாட்டுக்காக உழைக்கும் ஏழையரோ, டைபீரியஸ் கிரேக்கஸ் கூறியபடி, காட்டு மிருகங்களைவிடக் கொடிய நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.

டைபீரியஸ் கிரேக்ஸ், ஏழையர் சார்பில் பேசும் நாட்களிலே, ரோம், வெற்றி பல கண்டு, செல்வமும் செல்வாக்கும் கொழிக்கும் அரசு ஆகிவிட்டது. வளமற்ற நிலத்திலே வாட்டத்துடன் உழைத்துக் கொண்டு பலன் காணாது தேம்பித் தவிக்கும், பஞ்ச பூமியாக இல்லை, ரோம். அண்டை அயல் நாடுகளிலே, அதன் கீர்த்தி பரவி இருந்தது,வளம் பெருகி வந்தது.

ஆப்பிரிக்காவிலே 300 நகரங்கள் கப்பம் கட்டி வந்தன. ஸ்பெயின், சார்டீனியா, சிசிலி ஆகிய பூபாகங்களிலே, பெரும் வெற்றிகளைக் கண்டு, தரைப்படை மட்டுமல்லாமல் திறமிக்க கப்பல் படை கொண்டு, வாணிபம் நடாத்திச் செல்வத்தை ஈட்டி, பல நூற்றாண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்த, கார்த்தேஜ் எனும் மண்டலத்தை ரோம் வென்றது! பயங்கரமான போர் நடாத்தும் ஆற்றல் மிக்க ஹனிபால் என்பான், ரோம் நாட்டுத் தளபதியால் விரட்டப்பட்டான்! கார்த்தேஜ் தரைமட்டமாக்கப் பட்டது. பெருஞ்செல்வம் கொள்ளைப் பொருளாகக் கிடைத்தது. ரோம் சாம்ராஜ்யக் கொடி கடலிலும் நிலத்திலும், கம்பீரமாகப் பறந்தது. சிசிலியும், ஆப்பிரிக்காவும் ரோம் அரசுக்குக் கப்பம் செலுத்தின, தோற்ற காரணத்தால்.

உலகை வென்ற மாவீரன் என்று விருதுபெற்ற அலெக்சாண்டரின் அரசான மாசிடோனியாவை, ரோம் வென்றது! கிரீஸ் தோற்றது!

வெற்றிமேல் வெற்றி! எந்தத் திக்கிலும் வெற்றி! ரோம், இந்த வெற்றிகளால் திரட்டிய செல்வம் ஏராளம். தோற்ற நாடுகளிலிருந்து ரோம், கைது செய்து! கொண்டுவந்த அடிமைகளின் தொகை 100 இலட்சம்! இவர்களை, ‘விலைக்கு’ விற்று ரோம், பணம் திரட்டிற்று.

ஈடில்லை, எதிர்ப்பு இல்லை-, என்ற நிலை பிறந்தது! எந்தெந்த நாட்டிலே என்னென்ன போகப் பொருள் கிடைக்குமோ, அவை எல்லாம், ரோம் நகரிலே கொண்டுவந்து குவிக்கப்பட்டன. முத்தாரங்கள், நவமணிகள், ஆகிய ஆபரணம் அணிந்து, பூந்துகில் உடுத்தி, புன்னகை காட்டிய பூவையர் தம் காதலரின் தங்கப் பிடி போட்ட வாட்களை எடுத்து மூலையில் சாய்த்துவிட்டு, களத்தில் அவன் கொய்த தலைகளின் எண்ணிக்கை பற்றிக் கூறக் கேட்டு, தான் பூம்பொழிலில் கொய்த மலர்களின் அளவுபற்றிக் கூறிட, “அவ்வளவு மலரா! கனியே! மெத்தக் கஷ்டமாக இருந்திருக்குமே!” என்று வீரன் கூற, “எல்லாம் தங்களைக் கண்டதும் பறந்ததே கண்ணாளா!” என்று அவள் கூற - காதல் வாழ்வு நடாத்திய கனவான்கள் நிரம்பினர், ரோம் நாட்டில்.

அந்தச் சமயத்திலே ஏழையர் உலகு ஏக்கத்தால் தூக்கமிழந்து, நெளிந்தது. இதைக் கண்டு உள்ளம் வாடினான், டைபீரியஸ் கிரேக்கஸ். தன் தொண்டு மூலம் ஏழையரை உய்விக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

வையகம் வியக்கும் அறிவுக் கருவூலப் பெட்டகமென விளங்கிய கிரேக்கநாடு, இருப்புச் செருப்பினரால் முறியடிக்கப்பட்டது; அந்நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர், ரோம் நாட்டிலே அடிமைகளாக அமர்ந்து, ‘எஜமானர்களுக்கு’ கலையின் நேர்த்தியையும் காவியத்தின் மேன்மையையும் எடுத்துக் கூறி இன்பமூட்டி வந்தனர். உலக வரலாற்றிலே மனத்தை உருக்கவல்லதான நிகழ்ச்சி, இது. தோற்ற கிரேக்கர்கள், வெற்றிபெற்ற ரோம் நாட்டவருக்கு, அடிமைகளாக இருந்து வந்தனர். களத்திலே கண்டெடுத்த கொள்ளைப் பொருள்களைக் காட்டி மகிழ்வதுடன் ரோம் நாட்டுச் சீமான், அடிமையாகக் கொண்டுவந்த கிரேக்கக் கவிஞனையும் காட்டிக் களிப்பான். ‘பாடு’ என்பான் படைத்தளபதி, கிரேக்கக்கவி அரும் பாடலை அளிப்பான், அதன் பொருளையும் அளிப்பான் - இன்பமும் அறிவும் குழைத்தளிப்பான், அடிமைதரும் இன்னமுதை உண்டு மகிழ்வான், ரோம் நாட்டுச் சீமான்.

போர்த்திறனைப் பெறுவதுதான், வாழ்வில் உயர்வளிக்கும் என்பதையும், வீரவெற்றிகள் பெற்றவனை நாடு தலைவனாகக் கொள்கிறது என்பதையும் கண்டு கொண்ட ரோம் நாட்டு உயர்குடியினர், அந்தத் துறையிலேயே ஈடுபட்டனர்; அரசு அவர்களை ஆதரித்தது, போற்றிற்று.

டைபீரியஸ் கிரேக்கஸ், இத்தகைய புகழ் ஏணி மூலம் உயர்ந்திருக்கலாம்; செல்வக்குடி பிறந்தவன், கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினன், போர்த்திறனும் பெற்றிருந்தான். ஆப்பிரிக்காவில் மண்டிலங்களை வென்று, விருதுபெற்ற, ஸ்கிபியேர் என்பானின் பெண்வயிற்றுப் பேரன், டைபீரியஸ் கிரேக்கஸ், ரோம் நாடு அவனுக்கு உயர் மதிப்பளிக்கத் தயாராக இருந்தது. டைபீதியஸ் கிரேக்கஸ், கெயஸ் கிரேக்கஸ் எனும் இரு புதல்வர்களுக்கும் தாயார், கர்னீலியா. நாட்டவரின் நன்மதிப்பைப்பெற்றார். ஆழ்ந்த அறிவும், சிறந்த பண்புகளும் மிக்க அந்த அம்மையின் சொல்லுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. ஸ்கிபியோவின் மகள் கேட்கும் எந்தப் பதவியையும், உயர்வையும், டைபீரியசுக்குத் தர, எந்த ரோம் நாட்டுத் தலைவனும், மறுத்திடமுடியாது. வாழ்வில் இன்பம், அரசில் பெரும்பதவி பெற்று, ஒய்யாரவாழ்வு நடத்திவர, வாய்ப்பு இருந்தது, டைபீரியஸ் கிரேக்கசுக்கு. எனினும் அவன், பிறருக்காக வாழப் பிறந்தவன். ஏழையரின் இன்னலைத் துடைப்பதிலும்-, புதுமண்டிலங்களை வெல்வதிலும் மேலான வெற்றி என்ற எண்ணம் கொண்டவன்.

வெறியன்! என்றனர், சிலர். மயக்க மொழி பேசுகிறான், ஏழை மக்களை ஏய்த்துத் தன் பக்கம் திரட்டிக் கொள்ள! என்றனர், சிலர். அனைவரும் இவன் கவனிக்கப்பட வேண்டியவன் என்று கூறவேண்டி இருந்தது; டைபீரியஸ், நாட்டுக்கு ஒரு பிரச்சினையாகி விட்டான்.

அவனை ஒத்த இளைஞர்கள்போல அவன் சோலைகளையும் சொகுசுக்காரிகளையும் நாடிச் செல்லும் சுகபோகியாக இல்லை; எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையருடன் பழகிவந்தான். களத்திலே பெற்ற வெற்றிகளை எடுத்துக் கூறி, காதற் கனிபறித்து மகிழ்ந்திருக்கும் காளையர் பலப்பலர். டைபீரியஸ், அவர்கள் போலல்லாது, நாட்டுக்கு உண்மையான சீரும் சிறப்பும் ஏற்பட வேண்டுமானால் வறியவருக்குள்ள வாட்டம் தீர்க்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுப் பணியாற்றினான், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு.

ரோம் நாட்டுச் சமுதாய அமைப்பு - பெட்ரேஷியன், பிளபியன் எனும் இரு பெரும் பிரிவு கொண்டதாக இருந்தது - முன்னவர் மேட்டுக் குடியினர், சீமான்கள், பரம்பரைப் பணக்காரர்கள் - இரண்டாமவர், ஏழைகள், ஏய்த்துப் பிழைக்கத் தெரியாதவர்கள், நாட்டின் முதுகெலும்பு போன்றார். டைபீரியசின் அன்பு நோக்கு.

பிளபியன் எனும் ஏழைகளைக் கொடுமை பல செய்து, பெட்ரீஷியன்கள் அடக்கி வைத்திருந்தால். சகிக்கொணாத நிலைமை வந்தது. இந்த நாட்டிலே இருந்து இடியும் இழிவும் மிடிமையும் தாக்கத் தகர்ந்து போவதைக் காட்டிலும், இதைவிட்டே சென்றுவிடுவோம், வேற்றிடம் புகுந்து புது ஊரே காண்போம், உழைக்கத் தெரிகிறது, ஏன் இந்தப் பகட்டுடையின ருக்குப் பாடுபட்டுத் தேய வேண்டும், நம் கரம் நமக்குப் போதும் என்று துணிந்து, பிளபியன் மக்கள் அனைவரும், ரோம் நகரை விட்டே கிளம்பினர். மூன்று கல்தொலைவில் உள்ள குன்று சென்றனர்! ரோம் நாட்டிலே உல்லாச வாழ்வினர் மட்டுமே உள்ளனர் - உழைப்பாளிகள் யாரும் இல்லை! வயல் இருக்கிறது. உழவன் இல்லை! சாலை சோலை இருக்கிறது, பாடுபடுபவன் இல்லை! மாளிகை இருக்கிறது, எடுபிடிகள் இல்லை! திடுக்கிட்டுப் போயினர், பெட்ரீஷியன்கள்.

இந்த வெற்றிகரமான வேலை நிறுத்தம் சீமான்களைக் கதிகலங்கச் செய்தது. ஏர் பிடித்தறியார்கள், தண்ணீர் இறைத்துப் பழக்கம் இல்லை, மாளிகை கலனானால் சரிந்துபோக வேண்டியதுதான், செப்பனிடும் வேலை அறியார்கள், என் செய்வர்! தூது அனுப்பினர், தோழமை கோரினர், சமரசம் ஏற்பட வழி கண்டனர். வெள்ளை உள்ளத்தினரான பிளபியன்கள், இனி நம்மை அன்புடனும் மதிப்புடனும் நடத்துவர் என்று நம்பி, ஒருப்பட இசைந்தனர்.

இந்த ஏழைகள் கடன் படுவர், சீமான்கள், அட்டை என உறுஞ்சுவர் இரத்தத்தை. வட்டி கடுமையானது! ஏழை, வட்டியுடன் கூடிய கடனைச் செலுத்தும் சக்தியை இழந்ததும், அவன் , தன்னையே சீமானுக்கு அடிமையாக விற்றுவிடுவான். குடும்பம் குடும்பமாக இப்படி அடிமைகளாவர்.

இந்தக் கொடுமையை ஒழிப்பதாக வாக்களித்தனர். அதுவரை செலுத்திய வட்டித் தொகையை, கடன் தொகையிலே கழித்துக்கொள்வது, மீதம் இருப்பதை, மூன்றாண்டுகளில் செலுத்துவது, அடிமைகளை விடுதலை செய்வது, என்று ஏற்பாடாயிற்று.

ஏழை மக்களின் உரிமைகளைக் கேட்டுப் பெறவும், அரசியலில் அவர்களுக்குப் பங்கு இருக்கவும், ட்ரைப் யூன் எனும் அதிகாரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதென்றும், ஏற்பாடாயிற்று.

இந்த ட்ரைப்யூன்கள், பெரிதும் சீமான்களே கூடி சட்டதிட்டம் நிறைவேற்றும் செனட் சபையின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம், என்றும் ஏற்பாடாயிற்று.

ஏட்டளவில் பார்க்கும்போது, ஏழைகளுக்கு, இது மகத்தான வெற்றிதான். கலப்பு மணத்துக்குக்கூடத் தடையில்லை என்றனர், கனதனவான்கள்.

கான்சல் எனும் உயர்பதவிக்குக்கூட பிளபியன்கள் வரலாம், தடை.

இவைகளைவிட முக்கியமான ஓர் ஏற்பாடும் செய்யப்பட்டது - நிலம் ஒரு சிலரிடம் குவிந்து போவதால், கூலி மக்களாகப் பெரும்பான்மையோர் ஆகிவிடும் கொடுமை ஏற்படுவதால், இனி யாரும், 330 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துக் கொள்ளக் கூடாது, என்று சட்டம் ஏற்பட்டது!

இனியும் என்ன வேண்டும்! நிலம் ஒரு சிலரிடம் குவியாது! கடனுக்காக அடிமைகளாக்கும் கொடுமை கிடையாது. கலப்பு மணம் உண்டு. கான்சல் பதவி வரையில் அமரலாம்!

ஏட்டளவில் இந்தத் திட்டம் இருந்துவந்தது, ஆனால் சீமான்கள் இதைக் கவையற்றதாக்கி வந்தனர். சட்டத்தைத் துணிந்து மீறினர் - அதன் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொள்வர். ஏழையின் இன்னல் ஒழியவில்லை; பொங்கி எழுந்த ஏழையரை அந்த நேரத்தில் தட்டிக் கொடுத்தனர், பிறகோ எப்போதும் போல் ஏய்த்தனர்.

சீமான்கள், தன் குடும்பத்தார், உற்றார் உறவினர், அடுத்துப் பிழைப்போன் ஆகியோருடைய பெயரால், நிலங்களை அனுபவித்து வந்தனர். ஏழையின் வயல், எப்படியும் தன்னிடம் வந்து சேரும்விதமான நடவடிக்கைகளை நயவஞ்சகர்கள் செய்து வந்தனர். டைபீரியஸ் கிரேக்கஸ், இந்த அக்கிரமத்தைக் கண்டான். வாயில்லாப் பூச்சிகளாக உள்ள ஏழை எளியவருக்காகப் பரிந்து பேச முற்பட்டான். கவனிப்பாரற்றுக் கிடந்த தங்கள் சார்பில் வழக்காட ஒரு வீர இளைஞன் முன் வந்தது கண்டு, மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெற்ற பிளபியன்கள், டைபீரியசுக்குப் பேராதரவு அளித்தனர்.

டைபீரியசும், கெயசும், சிறுவர்களாக இருக்கும் போதே தந்தையார் காலமானார். சிறுவர்களைத் திறமிகு இளைஞர்களாக்கும் பொறுப்பு, தாயாருக்கு வந்து சேர்ந்தது; அதனை அந்த அம்மை, பாராட்டத்தக்க விதமாக நடாத்தினார். கல்வி கேள்விகளில் சிறந்தனர் - போர்த் திறன் பெற்றனர் - பேச்சுக் கலையில் வல்லுநராயினர். வீர இளைஞர்கள், ரோம் நகரில் ஏராளம் - ஆனால் இந்த இருவர், வீரமும் ஈரமும் நிரம்பிய நெஞ்சினராக இருந்தனர். குடிப்பெருமையையும் நாட்டின் பெருமையையும் குறைவற நிலைநாட்ட வேண்டும் என்பதை அன்னை எடுத்துரைப்பார்கள்; இருவரும், அவைதமைக் குறிக்கோளாகக்கொண்டதுடன், அக்கிரமத்தைக் கண்டால் கொதித்தெழும் அறப்போர் உள்ளமும் கொண்டவராயினர்.

“ஸ்கிபியோவின் மகள் என்றே என்னை அனைவரும் அழைக்கின்றனர் - கிரேக்கர்களின் தாயார் என்று என்னை அழைக்கும் வண்ணம் சீரிய செயல் புரிவீர்’ என்று தன் செல்வங்களுக்கு, கர்னீலியா கூறுவதுண்டாம். பெற்ற மனம் பெருமை கொள்ளும்படி, சிறுமதியாளரின் செருக்கை ஒழிக்கும் பெரும் போரில் ஈடுபட்டனர், இணையில்லா இரு சகோதரர். பெற்றபொழுதும், மழலை பேசிய போதும், பெற்ற மகிழ்ச்சியைவிட அதிகமான அளவு பெற முடிந்தது, தன் மக்கள், அறப்போர்

வீரர்களாகத் திகழ்ந்தபோது.

அறிவுக் கூர்மையும் மாண்பும் மிகுந்த கர்னீலியாவினிடம் பாடம் பெற்ற மைந்தர்கள், ரோம் நாட்டுச் சமுதாயத்திலே கிடந்த சீர்கேட்டினைக் களைய முனைந்தனர் - கடமையாற்றுகையில் இருவரும் இறந்து பட்டனர் - கொல்லப்பட்டனர் - இறவாப் புகழ் பெற்றனர்.

டைபீரியஸ் கிரேக்கஸ், கேயஸ் கிரேக்கஸ் - இருவரும், சிறந்த பேச்சுத் திறன் பெற்றனர் - அந்த அருங்கலையை ஏழைகளின் சார்பிலே பயன்படுத்தினர்.

டைபீரியஸ், உருக்கமாகப் பேசுபவன் - கேயஸ், எழுச்சியூட்டும் பேச்சாளன்.

டைபீரியஸ், அடக்கமாக, அமைதியாகப் பேசுவான். இளையவன், கனல்தெறிக்கப் பேசுவான், கடுமையாகத் தாக்குவான்.

இருவரும் செல்வர்கள் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்தே பேசுவர் - ஏழைகள் சார்பிலேயே வாதாடுவர்; இருவரும் இலட்சியவாதிகள்.

இருவரையும், செல்வர் உலகம், எதிர்த்தொழிக்காமல், விட்டா வைக்கும்!! டைபீரிஸ், பையப் பையப் பெய்யும் மழை போன்று, பேசுவான் - குளிர்ந்த காற்று - வளமளிக்கும் கருத்து மாரி!
கேயஸின் பேச்சிலே புயல் வீசும் - பொறிகிளம்பும்.

பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவயத்தனாகி, மேலங்கியை வீசுவானாம், இங்குமங்கும் அசைந்து ஆடியபடி இருப்பானாம், கேயஸ் கிரேக்கஸ். அண்ணனோ, கம்பத்திலே கட்டிவிடப்பட்ட விளக்கு ஒரு சீராக ஒளிதரும் பான்மைபோல, அறிவுரை நிகழ்த்துவானாம்.

இருவருடைய வாதத் திறமையையும் ஆற்றலையும், எதிர்த்துப் பேசி வெல்ல வல்லவர்கள் ரோம் நகரில் இல்லை - திறமைமிக்க பேச்சாளியானாலும், அநீதிக்காகப் போரிடும் போது, திறமை சரியத்தானே செய்யும்.