அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறைகூவுகிறார் அமைச்சர்!!
1

நிதி அமைச்சர் மொழிகள் - ஜஸ்டிஸ் கட்சியும் காங்கிரசும் - ஆயிரம் கோடி திட்டம்

தம்பி!

நிதியமைச்சர் சுப்பிரமணியனார் போர்க்கோலத்துடன் வந்து நிற்கிறார்.

மெத்தக் கோபத்துடன் அவர் இருக்கிறார் என்பதும் தெரிகிறது. கோபம் ஏன் அவ்வளவு கொந்தளிக்கிறது என்பதும் புரிகிறது.

செல்லுமிடமெல்லாம் அவருக்குச் சொல்லுகிறார்கள் "ஊழியர்கள்' - நமது கழகம் வளர்ச்சி அடைந்திருப்பதனை!

"கூட்டம் குறைவுதான்.''

"பரவாயில்லையே! சென்ற மாதம் காமராஜர் வந்தபோது இதிலே கால்வாசிதான் இருக்கும்.''

"அப்படியா... இந்த ஊரில் மக்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி இல்லை... பொதுக்கூட்டத்திற்கு வருவதில் ஆவல் எழாததற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்...''

"அப்படிச் சொல்லிவிடுவதற்கில்லை...''

"ஏன்?... என்ன...!''

"முன்னேற்றக் கழகத்தார் கூட்டம் போட்டால்...!''

"முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியா?... அடுக்கு மொழி பேசிடும் ஆள் மயக்கிக் கூட்டம், அதுகளுக்கு அரசியல் என்ன தெரியும்...?''

"அதுசரி, அதுசரி... ஆனால் இந்த ஜனங்கள்...''

"குப்பையில் தள்ளுங்கள்... பெரிய கூட்டமா அவர்கள் வந்தபோது?''

"ஆமாம்... பிரமாண்டம்... அதைப் பார்த்த பிறகுதான் நம்ம பேச்சிமுத்து, தேர்தலில் இறங்கவே தயங்குகிறார்.''

"அப்படியா! இன்று வெளுத்து வாங்கிவிடுகிறேன், முன்னேற்றக் கழகத்தை...''

இப்படி உரையாடல் நடந்தான பிறகு, பொதுக்கூட்டம் சென்றிடவும், "பிரமுகர்கள்' அவரை வரவேற்கவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாமலிருக்கவும் கண்டவுடன், நிதி அமைச்சருக்குக் கோபம் கோபமாக வருகிறது, கொக்கரிக்கிறார்.

இந்தக் கிழமை, தம்பி, சென்ற இடமெல்லாம், எங்கே அந்த அண்ணாத்துரை? பிடித்திழுத்து வாருங்கள்! - என்று கேட்பது போலவே, சீற்றத்துடன் பேசியிருக்கிறார். நான் வருத்தமடை கிறேன், மெத்தவும் அவருக்கு "வேலை' கொடுத்துவிட்டதற்காக.

திட்டம் எங்கே? திட்டம் எங்கே? காட்டட்டும்! நீட்டட்டும்! பார்க்கிறேன்! நிபுணர்களை, அழைக்கிறேன்! அவர்கள் அளித்திடும் தீர்ப்பை ஏற்கிறேன்! என் பதவியைக் கூடத் துறக்கிறேன்! - என்று ஒரே வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.

தேர்தல் நேரமல்லவா - தீ பறக்க வேண்டுமே - அப்போது தானே ஐம்பது ஆயிரமானாலும் இலட்சமானாலும் பரவாயில்லை என்று வீசி எறிந்து தேர்தல் வேட்டையில் ஈடுபட "ஆட்கள்' தைரியம் பெறமுடியும். அதற்காகப் பாபம், அமைச்சர் ஆலாய்ப் பறக்கிறார், "ஆலகாலம்' கக்கப்பார்க்கிறார். அவர் உதிர்த்துள்ள "முத்துகளை' சிந்தாமல் சிதறாமலெடுத்து ஏடுகள் வெளியிட்டுத் தமது தேசியத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளன! தேசியத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் அந்த ஏடுகள், மக்களுக்குத் தெளிவும் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கவனித்து நடப்பதானாலும் நான் எடுத்துக் கூறும் பேச்சையும், குலைக்காமல் வெளியிட வேண்டும். அந்தப் பண்பு ஏது? இருந்தால் ஜனநாயகம் ஏன் இன்று கேலிக்கூத்தாகிக் கிடக்கிறது! அது கிடக்கட்டும் நீண்டகால வியாதி, உடம்போடு ஒட்டிக் கொண்டது!

என் மீது இத்துணை எரிச்சல் கொள்ள என்ன காரணம் நிதி அமைச்சருக்கு?

சாதாரணமாக, நிதி அமைச்சர், நம் பிரச்னைகளை - பேச்சுகளைத் தமது மேலான கவனத்துக்கு உரியன என்றே கருதுவது கிடையாது. நிதியும் மந்திரியும், ஒருசேரத் தம்மிடம் சிறைப்பட்டிருப்பதால், அவர் பண்டைக்காலப் பாதுஷாக்கள் போல, ஊர்ப் பிரமுகர்கள் தரும் உக்காவைப் பிடித்துக்கொண்டு, ஊஹும்... ஆஹாம்... பேசிக் கொண்டு உலா வந்தால் போதும், கழகத்தார் பற்றிக் கவனிப்பதே, தமது மேலான நிலைக்கு ஏற்றதாகாது என்று எண்ணிக்கொள்பவர், எனினும், இந்தக் கிழமை, முழுவதும் அவர், கரூரிலும் மதுரையிலும், திருச்சியிலும் செல்லுமிடமெங்கணும், பொதுவாக முன்னேற்றக் கழகத்தையும், குறிப்பாக என்னையும் போடு போடு' என்று போட்டு விட்டதாகக் கருதிக் கொண்டு தம்முடைய பலவீனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

1. திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில் அமைந்த எதிர்க்கட்சி அல்ல.

2. திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு அரசியலே தெரியாது.

3. அடுக்குமொழி பேசுவார்கள் - அனாவசியமாக எதிர்பார்கள்.

4. அவர்களுக்கு நாட்டிலே ஆதரவே கிடையாது.

இவை நிதியமைச்சரின் மொழிகள் - மதிமிகு மொழிகள் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார் - அவராவது அவ்விதம் எண்ணிக்கொள்ளாவிட்டால், வேறு யார் துணைவரப் போகிறார்கள்.

எதிர்க்கட்சி என்பதற்கு என்ன இலக்கணம் காண்கிறார் நிதி அமைச்சர் - அவர் படித்துள்ள அரசியலில் - படித்திருந்தால்! - என்று அறிய யான் மிகவும் ஆவல் கொண்டுள்ளேன்.

அவர் பேசுவதிலிருந்து; நான் யூகித்துக்கொள்ள என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்டு கட்சி கெட்டது.

சோஷலிஸ்டுகள் கெட்டவர்கள்.

முன்னேற்றக் கழகம் மிகமிகக் கெட்ட கட்சி.

இப்படி எல்லாவற்றையும் கண்டித்துவிட்டு, எதை எதிர்க்கட்சி என்று இவர் கூறுகிறார்? ஒரு சமயம், உண்மையான எதிர்க்கட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே, காங்கிரசிலே இருந்தே சிலரை இவர் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பி, எதிர்க் கட்சியாக்கி, அரசியல் "சேவை, செய்யப் போகிறாரோ என்னவோ? யார் கண்டார்கள்!

ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தைக் கண்டிப்பது.

ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது.

ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லலை, அவதியை எடுத்துக் காட்டுவது.

ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது.

ஆளும் கட்சி, என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது. உரிமையையும் உடைமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது, கண்டிப்பது எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவது.

இவைபோன்றவைதாம், எதிர்க்கட்சிகளுக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் என்று நான் படித்த - அதிக அளவு படிக்கவில்லை, ஆனால் படித்தவரையில் கவனத்துடன் படித்திருக்கிறேன் - அரசியல் விளக்க ஏடுகளில் காணப்படுகின்றன.

எதிர்க் கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இந்த இலட்சணங்கள், யாரிடம், எந்த வகையிலே இல்லை என்பதை எடுத்து விளக்கிட இந்த வீராதி வீரர் முன்வரவில்லை - அதை விட்டு விட்டு "ஓஹோ! இவைகளெல்லாம் கட்சிகளே அல்ல என்று கூறிவிடுகிறார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற கதை உண்டல்லவா, அதுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கத்தில் இன்ன தவறு, போக்கிலே இந்த விதமான கோளாறு இருக்கிறது என்று எடுத்துக்காட்ட வக்கற்ற இந்த வக்கீல், இந்தக் கழகத்தார், முன்பு வெள்ளையர் ஆட்சியிலே வெண்சாமரம் வீசினவர்கள் என்று குதர்க்கம் பேசிவருகிறார்.

இன்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களில் - முக்கியஸ்தர்களில் - யார் வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசினவர்கள் - யார் பதவியில் இருந்தவர்கள் - யார் வெள்ளைய னிடம் பணம் வாங்கி வேலைபார்த்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டும்படி, "சூரசம்ஹார'க் கோலம்பூண்டு சுற்றி வரும் இந்தச் சுப்பிரமணியனாரைக் கேட்கிறேன்.

எப்போது ஜஸ்டிஸ் கட்சி, சேலத்தில் திராவிடர் கழகமாக மாறிற்றோ, அன்றே, களங்கம் துடைக்கப்பட்டது. "கழுவிவிட்டதை'க் காங்கிரஸ் தங்கக் கலசத்தில் அல்லவா ஏந்திகொண்டது?

நாமறியோமா, நாடு அறியாதா, இந்தச் சேதியை?

வெள்ளையனிடம் சுளைசுளையாகப் பணம் பெற்றுக்கொண்டு, அவன் காலைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டவர்களை, கட்டி அணைத்துக்கொண்டது காங்கிரஸ் என்பதை விளக்க எத்தனை எடுத்துக்காட்டு வேண்டும்! மந்த மதியினரும் இதனை அறிந்துகொள்ள முடியுமே!

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயா யார்? அலிபுரம் சிறையில் அவதிப்பட்ட தேசியத் தொண்டரோ!! வெள்ளையர் ஆட்சியை ஒழித்திட வீரப்போரிட்ட சிதம்பரனாருடன் கூடிச் செக்கிழுத்த வரோ! அன்னிய ஆட்சிக்கு அடங்கிக் கிடக்கமாட்டேன் என்று ஆர்த்தெழுந்த வைக்கம் வீரருக்கு வலதுகரமோ? தேசத்தை அடிமை கொண்டவனுடன் உறவுகொள்ளமாட்டேன் என்று கூறி, "உத்தியோகத்தை' உதறி எறிந்த தியாகியோ? நாடு கேட்காதா, நாப்பறை அறையும் இந்த அமைச்சரை? ஐயா! அமைச்சரே! அண்ணாத்துரையும் அவன் சார்ந்துள்ள கழகத்தினரும், வெள்ளையரை ஒழித்திடும் வீரப்போர் புரிந்தவர்களல்லர், எனவே அவர்கள், எமது ஆட்சியிலுள்ள அலங்கோலத்தை எடுத்துக் கூறினால், கேளேன், எவரும் கேளார் என்று விசித்திர வாதம் புரிகிறீரே, இந்த அல்லாடி யார், கூறும் கேட்போம், என்றால், பதில் ஏது கூறுவார்! நான் கூறுகிறேன், தம்பி, நாடறிந்த உண்மையை, அதை மறுத்திடவாவது முன்வருகிறாரா, கேள் இந்த மந்திரியை!

அல்லாடி - ஒரு, சர்! ஆங்கில அரசு தந்த பட்டம், அட்வகேட் ஜெனரல் பதவி - ஆங்கில அரசு வீசிய எலும்புத் துண்டு என்றுரைக்கவேண்டும் அமைச்சரின் பாஷையில்! அவரை அல்லவா, அடிபணிந்து அழைத்து, இவர்கள், அரசியல் சட்டம் தீட்டும் வேலையைத் தந்தனர்!

தேசத்துரோகி - இவர் தீண்டக்கூடாது எமது விடுதலைச் சாசனத்தை என்றா கூறினர்.

தேடித் தேடிப் பிடித்திழுத்து வந்தனர், தேசியத் தலைவர்கள், அவர் திருவடி சரணம் என்று கிடந்தனர்.

அமைச்சரின் அறிவாற்றல் என்ன செய்துகொண்டிருந்தது? அல்லாடியை அழைக்காதே! அவமானத்தைத் தேடாதே! என்றா இவர் ஆர்ப்பரித்தார்!

அல்லாடி, அரசியல் சட்டத்தைத் தீட்டிக்கொண்டிருந்த போது, இந்த அமைச்சர் இருந்த திக்கும் தெரியாது நாட்டு மக்களுக்கு! இன்று இளித்து நிற்கவும், இனிப்பாகப் பேசவும் பதவியின் காரணமாக நாலுபேர் நத்திக்கிடக்கக் கிடைத்து விட்டார்கள் என்பதனால் உண்டான போதையில், போதகா சிரியராகிறார் - வெள்ளையன் காலத்தில் இந்தக் கழகத்தார் என்ன செய்தார்கள் தெரியுமா என்று விண்ணாரம் பேசுகிறார்.

கலெக்டர் வேலையில் காலடி வைத்து, காஷ்மீர் திவான் வேலை வரையில் உயர்ந்து, உள்ளே நுழையாதே! என்று உத்திரவிட்டு, நேரு பண்டிதரின் மார்புக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிடும் துணிவுடன் துரைத்தனம் நடத்திய கோபாலசாமி ஐயங்காரல்லவா, மந்திரியானார்! அப்போது. மானமும் ரோஷமும் எங்கே போய்க் குடிபுகுந்தது? வெள்ளை ஏகாதிபத்யத்தின் செல்லப் பிள்ளையாயிற்றே இந்த கோபால சாமியார்! இவரைக் காங்கிரசாட்சியிலே காராக்கிரகத்தில் தள்ளுவார்கள், கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவார்கள், எந்தத் துப்பாக்கி முனையை நேரு பண்டிதரின் மார்பிலே வைத்தாரோ, அதே துப்பாக்கி முனையை இவருடைய முதுகிலே குத்தி விரட்டுவார்கள். என்றெல்லாம் முழக்கமிட்டனரே காங்கிரஸ் பேச்சாளர்கள் வெட்கமின்றி அவரை அழைத்து "சோடசோபசாரம்' நடாத்தி, "சுபசோபனம்' பாடி பாதுகாப்பு இலாகா, மந்திரியாக்கிக் கொள்கிறோமே, உலகு கைகொட்டிச் சிரிக்காதா, என்று, அன்று எண்ணிய தன்மானத் தலைவர் யார்? காட்டச் சொல்லுங்கள்! இன்று துள்ளி வருகுதுவேல்! தூர விலகி நில் என்று துந்துபி முழக்கிடும் இந்தத் தூயவராவது, வாய் திறந்தாரோ! இவர் இருப்பதையே நாடு கவனிக்கவில்லை அந்த நாட்களில்!! இன்று வீரம் சொட்டுகிறது பேச்சில் - அன்று அசடு வழிந்தது இவர் போன்றார் முகத்தில்! ஆங்கில ஆட்சியின்போது எத்துணை ஜொலிப்புடன் இருந்தாரோ, அதே பளபளப்புடன், கொலு வீற்றிருந்தார் கோபாலசாமி ஐயங்கார்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்திடும் வீரப்போருக்கு முத்துராமலிங்கத் தேவர் தேவைப்பட்டார் - இன்று பசும்பொன் இருக்கவேண்டிய இடத்தில், பரங்கியருக்குப் பல்லக்குத் தூக்கிய சிற்றரசர் கூட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் ராஜா அல்லவா வீற்றிருக்கிறார்! வெட்கங்கெட்ட நிலைக்கு வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும்.

ஏழைகள் ஈடேற்றப்படுவதற்கான திட்டம் வேண்டும்.

ஆட்சியாளர்கள் இதைச் செய்கிறவரையில் உண்ணாவிரத மிருக்கிறேன், என்று சங்கரலிங்க நாடார் எனும் காங்கிரஸ் தியாகி, அல்லற்படுகிறார்; அமைச்சர் அவையில் அமர்ந்து கொண்டு, என்ன ரகளை? என்ன கூச்சல்? என்று கேட்டிட, இராமசாமி படையாச்சியும் மாணிக்கவேலரும் இருக்கிறார்கள். இது வேதனையைக் கிளறவில்லை வெட்கத்தை மூட்டவில்லை, இந்த அமைச்சருக்கு! நாம் ஒரு காலத்திலே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தோமாம், ஆகவே நம்மை மக்கள் ஆதரிக்கக் கூடாதாம்!!

யாரார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்று மக்களால் சுட்டிக் காட்டப்பட முடியுமோ, அவர்களிலே பசை கொண்டோரிடமெல்லாம் நேசம் கொண்டு சுவைத்து, இன்புறுவதுதான் இன்றைய காங்கிரஸ் என்பதை யார்தான் அறிந்து கொள்ளவில்லை! ஊர் முழுவதையுமா ஒரு அமைச்சர் தமது அதிகாரப் பேச்சினாலே உண்மையை மறந்துவிடச் செய்யமுடியும்?

எனவே தம்பி, சொத்தை வாதத்தை மெத்தச் சிரமப்பட்டு, மெச்சுவதற்கு யார் கிடைக்கா விட்டாலும், அடுத்த தேர்தலுக்கு மனு போட்டிருக்கும் மகானுபாவர்களாவது பாராட்டுவர் என்ற எண்ணத்தில் அமைச்சர் பேசுகிறார் அந்த மகானுபாவர்களிலே பலரும், ஜஸ்டிசில் இருந்தவர்கள்!!

மற்றோர் பெரிய தவறு நாம் செய்கிறோமாம் - தேமதுரத் தமிழோசை அவர் செவியைத் துளைக்கிறதாம்! ஏனடா, தம்பி, தமிழின் எழில் விளங்கப் பேசுகிறாய்? பார்! அமைச்சருக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது; அமைதி அழிகிறது; அழுது விடுவார் போலிருக்கிறது. நானே கூடச் சொல்லலாமென்று இருக்கிறேன் - நீயும் சொல்லு - மலையினின்றும் கிளம்பும் சிற்றாரின் ஒலியோ, மங்கை நல்லாள் மதலைக்கு முத்தமிட்டுக் கொஞ்சும் போதும், மணவாளனிடம் பேசி மகிழ்ந்திருக்கும் வேளையிலும் கேட்கக் கிடைக்கும் சிரிப்பொலியோ, வாட்போரின்போது கேட்கும் ஓசையோ, தென்றலோ, புயலோ, தேனோ, என்றெல்லாம் பலரும் பலப்பல எண்ணி மகிழத்தக்க விதமாக, இனிப் பேசி, இந்த அமைச்சரின் இதயத்தை வாட்டாமலிருக்கும்படி, நமது நாவலருக்கும், மற்றையோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சீவிச் சிங்காரித்துக்கொண்டு, முல்லை சூடி, முறுவலுடன் இடுப்பில் குழந்தையுடன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளமங்கை செல்லக் கண்டால், பதியை இழந்ததால் பசுமை உலர்ந்து போன பரிதாபத்துக்குரிய "மொட்டை'க்குக் கோபமும் சோகமும் பீறிட்டுக் கொண்டுதானே வரும்! அமைச்சருக்கு நாம் ஏன் அந்த அல்லல் தரவேண்டும்!!

அவர் நமது கழகத் தோழர்கள் பேசும் மொழியில் ஏற்றமும் எழிலும் இருந்திடக் காண்கிறார் - எரிச்சல் பிறக்கிறது - அதை மறைத்துக்கொள்ளும் ஆற்றலும் அற்றுப்போய், அழகாகப் பேசி, அடுக்குமொழி பேசி, மயக்கிவிடுகிறார்கள் என்று கூறி மாரடித்து அழுகிறார்! நாம் என்ன செய்வது, தம்பி, வேண்டுமென்றே, தமிழின் இனிமையைத் தேடிப் பிடித்திழுத்தா வருகிறோம். தமிழ் உள்ளம் நமக்குத் தமிழ் இனிமையைத் தருகிறது; அமைச்சரின் நிலை அது அல்லவே!

உள்ளொன்று வைத்துப் புறம் மொன்று பேசவேண்டிய நிர்ப்பந்தம் தாக்குகிறது.

உண்மை தெரிகிறது, அதை மறைத்தால்தான் பதவி என்பது குடைகிறது.

எந்தத் துறையிலே பார்த்தாலும் வடவர் வளம் பெறுவதையும், தென்னவர் திகைப்புண்டு கிடப்பதையும் அறிகிறார். உள்ளத்தில் சோக அலை கிளம்புகிறது கோபப் புயல் வீசுகிறது. ஆனால் அந்த வெல்வெட்டு மெத்தையில் அமர்ந்து எண்ணிப் பார்க்கும்போது, தெற்குத் தேய்ந்தாலென்ன, காய்ந்தாலென்ன, என்ன சுகம்! என்ன சுவை, இந்தப் பதவி! என்று சபலம் பிறக்கிறது; அமைச்சரின் பேச்சு, உள்ளத்தில் உள்ளதை மறைத்திடப் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே பேச்சிலே சூடு இருந்தால் சுவை இல்லை சுத்தம் இல்லை! சூட்சமம் அதுவே தவிர அவருக்கென்ன அகமும் புறமும் படித்திட, தமிழின் அருமையும் இனிமையும் அறிந்திட, எதுகை மோனையை அழைத்திட, எழிலும் சுவையும் பெற்றிடவா இயலாது! நம்மைவிட அதிகம் முடியும்!! ஆனால். உள்ளத் தூய்மை வேண்டுமே! கொள்கை ஆர்வம் தேவையாயிற்றே!

தெளிவும் துணிவும் நிரம்ப வேண்டுமே! அதை எங்ஙனம் அவர் பெறுதல் இயலும் - அமைச்சராயிற்றே! அமைச்சர் பேசியதாக "தினமணி' கூறுகிறது, நான் ஓர் மாபாதகம் செய்துவிட்டிருப்பதாக அவர் மனச்சங்கடம் அடைந்திருக்கிறார் என்று தெரிகிறது என்ன என்கிறாயா? கேள், தம்பி, நான் ரோமாபுரி ராணிகள் - ஓர் இரவு - என்றெல்லாம் ஏடுகள் எழுதினேனாம் - எனவே, இதுதான் இவர்கட்குத் தெரியும், வேறென்ன தெரியும் - என்று ஏளனம் செய்ய முற்படுகிறார், அமைச்சர் பெருமான்!

அமைச்சர் பெருமானுடைய கவனத்தை ஓர் இரவும், ரோமாபுரி ராணிகளும் ஈர்த்திருக்கும் உண்மை எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறதல்லவா - மகிழ்ச்சி - மெத்த மகிழ்ச்சி, நரைதிரை மூப்பு என்பவைகளுக்கு ஆளான தொண்டு கிழங்களே, ரோமாபுரி ராணிகளிடம் சிக்கிக்கொண்டனர் என்றால், வாலிப முறுக்குக் குறையாத அமைச்சர், அவர்களிடம் சொக்கிப் போனதிலே ஆச்சரியமில்லை. ஆனால் இதிலே ஆச்சரியம் என்ன தெரியுமா தம்பி, கயல்விழி, மையல் மொழி, காட்டியும் ஊட்டியும் கட்டழகிகள் கருத்தைக் கெடுப்பர், காரியம் குலைப்பர், ரோம் சாம்ராஜ்யம் அழிந்துபட்டதற்கு வேல்விழி மாதரிடம் வாள் ஏந்திய வீரர்கள் அடிமைப்பட்டது ஒரு காரணம் என்று எச்சரிக்கை செய்ய, நான் அந்த ஏடு எழுதினேன். அமைச்சர், பாவம், அதைப் படித்து, பெறவேண்டிய பாடம் பெறாமல், வேறு ஏதேதோ எண்ணங்களைப் பெற்று, மெத்தச் சிரமப்பட்டிருக்கிறார்போலும். அதனாலேதான், அவர் அத்துணை கோபத்துடன், ரோமாபுரி ராணி புத்தகம் எழுதியதைக் கூறியிருக்கிறார்.

அமைச்சரே! அலைமோதும், அடக்கிக்கொள்க! ஆசை வந்து உந்தும், ஆட்பட்டுவிடவேண்டாம். அந்த ஏடு, சுவையூட்டுச் சூறாவளியை மூட்டிவிடும் சுந்தராங்கிகளிடம் அரசியல் உலகத்து அதிபர்கள், ஆழ்வார்கள், அடிவருடிகள் எனும் எவரும் சர்வஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ஏனெனில், ரோம் சீரழிந்ததே, கோலமயிலனையார் கண்டாரைக் கொல்லும் விழியால் தாக்கியதனால்தான் என்று எடுத்துக் கூறவே எழுதப்பட்டது அந்த ஏடு.

இது, சபலம் எழும்போதெல்லாம், அமைச்சர்போன்று பெரிய நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் படித்துப் பாடம் பெற்று, பதமும் பக்குவமும் கெடாதபடி தம்மையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டது.