அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'ஞோ ஞா'
1

மலேய மொழி உணர்வு -
இந்தி வெறி -
அசாமிய மொழி உணர்ச்சி -
தமிழின் தனி இயல்பு.


தம்பி!

"ஞோஞா'' - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, "ஞோஞா' என்று கூறும்போது. உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு, "ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது - ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் - இந்த நிலை "ஞோஞா' என்று கூறக், கனகச்சிதமாக இருக்கிறது!!

அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாமலிருந்தது, சீன மொழி கற்கத்தானா, என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, மிகத் தவறு! ஞோஞா', சீன மொழி அல்ல; மலாய் மொழி.

ஆமாம், இனி மலாயா வானொலியில், அடிக்கடி, இந்த "ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம்.

மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ் - என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி, தமிழ்ச் சொல் - மிஸ் ஆங்கிலம். மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்கவேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய் மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன? தாய்மொழியில் தக்க சொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர, வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் "ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது!

துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும் சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர, வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது.

பெயரில் என்ன இருக்கிறது!- என்று பேசிடும் பெருந் தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு "ஸ்ரீ' என்றால் இனிக்கும்; "திரு'-என்றால் தித்திக்காது! "ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருதுகின்றனர். தமிழ் மொழியாம் "திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள். . . இனி, "திரு' என்ற அடைமொழியையே, கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சி மன்றமும் கூறிற்று; பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? "ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்றவேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப் பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. "மலாயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு, எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும், அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு, பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார் - அந்தக் கருத்துக்கேற்பக் காரியமாற்றுகிறார்.

ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான் என்றும், மலாயா வானொலி அறிவிக்கும்.

குறுகிய மனப்பான்மை - கோணல் வழி - மொழி வெறி - என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலாயாவில், துரைத் தனமே மலாய் மொழிதான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது; கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது.

இத்தனைக்கும், தம்பி! மலாயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு "கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும். அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரை யன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று, அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகக் பாடுபடுவோரை எள்ளி நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவியினின்றும் உருட்டிக் கீழே தள்ளிவிடுவரோ, என்ற அச்சம், குடி கொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர்.

"இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன - ஒன்று துளசிதாசின் இராமாயணம். . .'' என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக்கிறானே, துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக் கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து,

மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட் - என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார் - எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார், "நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலை புரிந்தது. அதனையும் அங்கேயே கூறினேன்.

இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், "இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார் என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள், தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர்களாக்கி விட்டிருக்கிறது - பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்புகின்றனர் - பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர் தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது, கருத்தழிந் தோர் துணிவினைப் பெறார் - என்று எண்ணிக் கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம், தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும், ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிற மொழிச் சொற்களைக் கொண்டு வந்து கலக்கி விடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும், என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப் படுகிறதல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாதார், வீணான பகைமையுணர்ச்சியை மூட்டி விடவே, "திரு' என்றும், "வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக் கிடந்திடும், குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது!!

மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால் நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பதுமட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத்தக்கது என்பது, உறுதிப்படுகிறது.

மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக் கொண்டுள்ள சூது வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர்.

அசாமில் அசாம் மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத்திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக் கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும், கொலையும் கொள்ளையும், சூறையாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன - கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப்பட்டன; ஆய்வுரைகள் வெளி யிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது.

மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! - என்று பெருந்தலைவர்கள், நெடுந்தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ, அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். எற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக்கிடக்கத்தான் வேண்டுமா! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர், நாமோ மாற்றானால் சிறை பிடிக்கப்பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவும் இல்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டிக் கொழுக்கிறார்கள்! ஏன் என்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்படாததால். நாமும், அவர்போல் இருந்துவிட்டால், நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிக நன்று! - என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள் - வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழி பற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங்காலமாக மூண்டுகிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று - பாரத நாடு - இந்திய மக்கள் - எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது; அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும், வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக்கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது, தம்பி! கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிரக், குறையாது.

வங்கத்தவரும் அசாமியரும்-இரு சாராருமே-தவறுகளை உணர்ந்துவிட்டனர் - ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்து கின்றனர். - வெட்கப்படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது.

இதிலே, தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய, சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா - இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!! - ஒரு தாய் வயிற்று மக்கள் போல!! - சுவை பூசப்பட்டிருக்கிறது, எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா, "போல'' என்ற சொல்லில்!!

ஒரு தாய் வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு - வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி - எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள்போல என்று மட்டும்தானே பேச முடிகிறது, அசாமியருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப்போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச், சமரசம் காண விழைவோரால்!

ஆமாம், இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது - நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடை யோரா! - வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற "நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம் - புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம் - இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் - என்றெல்லாம், பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இரு சாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் கொண்டுள்ளனர் - தம்பி! அவர்கள் பற்றிக் கொண்டுள்ளனர் என்று கூறுவதைவிட, அந்தக் கருத்து அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமான தாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள, மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தலை தூக்கும் - மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரை யுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும், நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும்.

இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரியத்துக்காக இன்று வெட்கப்படுகிறான் - இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான் - அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன் வருகிறான் - அவனைப் பாராட்டிவிட்டு, "ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர்களைக் கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக் கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, அத்தகைய இழிகுணத்தை!'' - என்று கேட்டிடின், அவன் முதலில், "வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்துவிட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!'' என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது, நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால். . . இதைக் கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங்களை - வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகை வண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள்! எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச் சென்று கூவிக் கூவி விற்க நாங்கள்! இதற்கு, எமக்கு அசாமியர் என்ற பெயர் எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர், இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிறகு, வங்கத்தின் கொல்லையாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!! - என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது! கவனித்தாயா!!