அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'ஞோ ஞா'
2

இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை - நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும் - அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும் - அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விடவேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம், இரண்டாயிரம் கைக்கூலி பெற்றுக் கொண்டு, "தடித்த தோலராகி' - அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்துகொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட்கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாத தொன்று என்பதனால்தான், வீரம், தீரம், தியாகம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலை போர்க் காதைகளாம் வீரக் காப்பியங்கள், உலக மன்றத்திலே, என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர் நாள் கொதித்தெழுந்து கிளம்புகின்றனர். அச்சம் அழிந்துபடுகிறது, ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள் தூளாகின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!! - என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தலைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்று, தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.

காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!! - என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர் எனும் நீக்ரோ இனமக்களை. காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல்களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை!

காமஞன்
டோகோ
சோமாலியா
காங்கோ
தாஹோமி
நைஜர்
மேல்வோல்டா
ஐவரிகோஸ்ட்
சாட்
கேபன்
மத்திய ஆப்பிரிக்கா
சைப்ரஸ்

தம்பி! 14 புதிய நாடுகள் - விடுதலை பெற்ற வீரபுரிகள் - தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள், இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே, உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்ட போது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள். கைபிசைந்து கொள்ளக் கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடி அரசுகள், எடுத்துக் காட்டுகின்றன!

"எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்காள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தலைகள் பூட்டப்பட்டிருந்தன - தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கர மான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளைவிப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர்கள் முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க! உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர், நாய்கள் மேய்ப்போம், தேய்ப்போம்! அவர்களின் நாய்கள், எமது குழந்தைகளைக் கடித்துவிடும், நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்க மாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேசெய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர், ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர், மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம், ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!

அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள் - வடுக்கள் உலர்ந்தன - உள்ளம் உலர்ந்துவிட்டது - அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம், வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப்பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் விழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழமாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர்.

தலையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சிய மாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கி வைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்துவிட்டான் என்று பொருள்!

எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்த்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக் கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற, ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம். அதற்கு நீவிர் தயாராகிவிட்டீர்களாயின், தலைகள் அறுபடும், தருக்கரின் அரசு அழிந்துபடும், தன்னரசு பெறுவீர்.

பல்கலைக் கழகங்களிலே உள்ளோர், இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக்கொண்டுள்ளனராம். இனிதான், நாங்கள் அவைகளைப் படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்குப் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தாள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப் பிடித்திழுத்துக் சென்றனர் சிறையில் தள்ள, அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப்பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் - இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.

"மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்!?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம், விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!!

அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி வைக்கும்.

அல்லற்படும்போது, அழத்தோன்றும்.

அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும்.

கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டுவிடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்!

அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படைகிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறான்!

அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது, கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்!

கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது!

அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலைபெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் - என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும்.

தம்பி! விடுதலை பெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய் - உன் புன்னகை அதனைத்தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித் தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத்தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும்.

எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது! இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!!

எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட!

எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!!

எங்கெங்கு படை எடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்!!

இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளங்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்!

தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா. . . .

விடவிகள் மொடுமொடு விசைபட
முறிபட எறிபட நெறிபடவே!
அடவிகள் பொடிபட, அருவிகள்
அனல்பட, அருவரை துகள்படவே.


ஓசை கேட்கும்போதே, பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா?

மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன.

இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா - பாடல் படித்தேனும்!

பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப்
பழஆறு, படர்ந்து எழு கொல்லி எனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
நதி ஆறு கடந்து நடந்து, உடனே

வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய்
மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும்
பெயலாறு, பரந்து நிறைந்து வரும்
பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே

கோதாவரி நதி, மேலாறொடு குளிர்
பம்பா நதியொடு சந்தப் பேர்
ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன்
ஒலி நீர் மலிதுறை பிற காக.


இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத் தட்டுகள் போன்றாருடன் அல்ல, போர்! மாற்றார், வீரமே புலியுடன் போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே.

குருதியின் நதிவெளி பரக்கவே
குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணிபடும் உடல் அடுக்கியே
கரை என இருபுடை கிடக்கவே

இரத்த வெள்ளம் - ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன - அதனால்!!

இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் - கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது.

அந்த வீரத் தமிழ் மக்கள்தாம், நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு!

கொற்றம் இழந்தோம், எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது.

அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக் கூடக் குழிபறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரிகின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, "திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர்.

மலாய் நாடு, இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது.

மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீரவேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதிகாட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழை கிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக் கொள்ளும் போக்கினர்.

ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம்.

இன்று, தமிழ்மொழியின் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்விளைஞன் இல்லை எனலாம்.

மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்னை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர்.

தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாத வர்களும்கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம்.

மொழிவளமே கூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசு களின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித், தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம்.

இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமையினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதியாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் "ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும்.

அண்ணன்,

25-9-1960