அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கொட்டடி எண் : 9
1

இரத்தப் பொங்கல்
சைதைச் சிறை : அன்றும் இன்றும்
அடையாறு "லாக்கப்'பில் ஆட்சியாளர் இழைத்த கொடுமைகள்
அறிவாற்றல் வளர்க!

தம்பி!

முடுகு முரசொலி
முடுகு முழவொலி
முடுகு முருடொலி
முடி விலாக்
கடுகு பறையொலி
கடுகு கலமொலி
கனிவெழாத்
தொடுகு குழலொலி
தொடுகு குரலொலி
தொடுகு துதியொலி
தொடுதலாற்
படுகு முகிலொளி
படுகு கடலொலி
படுதலில் மணமாயதே!

உடன்பிறந்தோரே! தமிழகத்தைக் காட்டுகிறார் கவி! ஆங்கு எழும் ஒலிகளைக் கேட்கச் சொல்கிறார்.

இன்றைய தமிழகத்தில் நித்தநித்தம் கேட்டிடக் கிளம்பிடும் "ஒலி', அனைவர் உள்ளத்தையும் வாட்டுவதாக உளது. ஒரேவழி, பழந்தமிழகத்தைப் புலவர் பெரு மக்கள் காட்டிடக் காண்பது, பயனற்றதாகிவிடாது; பெருமூச்சும் புன்னகையும் கலந்திடும் ஓர் நிலை தரும்.

அந்நிலையில்தானே, உள்ளோம்! இருந்ததையும், இனிக் காண விழைவதையும் எண்ணிடுங்காலை புன்னகை; இருப்ப தையும் இழப்பதையும் எண்ணிடும்போதோ, பெருமூச்சு!

பொங்கற் புதுநாள் என்று வரும் என்று வரும் என்று ஆவலுடன் வரவேற்கும் நிலையுடையார், அதிகம் இல்லை; வருமே என்று அஞ்சுவோரின் தொகையே அதிகம்; எனினும், எப்பாடு பட்டேனும் எவ்வளவு தொல்லையைத் துரத்தியபடி யேனும், தமிழர் உளமெலாம் மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடிக் களித்திடுவது, இந்தத் திருநாளைத்தான்!

இந்தத் திருநாள், இவ்வாண்டு, "இரத்தப் பொங்கலோ?'' என்று கூறத்தக்க வகையிலே, நடைபெற்ற அடக்குமுறை அலங்கோலத்தை, நாடு கண்டு, நடுக்கம் கொண்டுள்ள நேரத்திலே வந்துளது.

நாலாயிரவருக்குமேல் எனலாம், நாடாள்வோரால், வேட்டையாடப்பட்டவர்கள்.

ஆயிரவருக்கு இருக்கும் என்கின்றனர், அடிபட்டோர், படுகாயமுற்றோர்.

சிறை சென்றோரின் தொகை கணித்திட இயலவில்லை.

வழக்குகள் பல, வாய் பிளந்தவண்ணம் உள்ளன.

இவற்றினுக்கிடையே, பொங்கற் புதுநாள் வருகிறது - எங்ஙனம் நாம் மகிழ்ச்சி அடைவது? கண்ணீர் பெருக்கியும், செந்நீர் சிந்தியும் செந்தமிழ் நாட்டார் இருக்கையிலே, ஐயயோ! அம்மவோ! என்றலறி, கை உடைந்தது, கால் முறிந்தது, துவைத்து விட்டனர், துரத்தித் தாக்கினர், எலும்பு நொறுங்கிற்று, இரத்தம் கொட்டிற்று, என்றெல்லாம், பதறிக் கதறிப் பலரும் இருந்திடும் வேளையில் "பொங்கலோ பொங்கல்!'' என்று கூறிக்கொண்டாட நாவும் எழாதே, என்றெண்ணி நானிருந்தேன்.

எனினும், நாள்பலவில் திரு காணாதிருக்கிறோம், விழா பலவும் வீணாட்டம் என வெறுத்தொதுக்கி, வேண்டாம் வெற்றாட்டம் என்றே கூறிவிட்டோம், ஆண்டுக்கோர் நாள், அருமைமிகு பொன்னாள், பொங்கற் புதுநாள், புது வாழ்வு மலரும் நாள் என்றே இதனை நாம் நன்றெனக் கொண்டாடி வருதல், நாடு கண்ட முறை அல்லவோ என்றெண்ணி எப்படியும் விழாவினை நாம் ஏற்றமுடன் நடாத்துதல்தான், அடிப்போம். குடல் அறுப்போம் என்றே ஆர்ப்பரிக்கும் ஆணவக்காரருக்கும் அரும்பாடம் தானளிக்கும் என்று உறுதிகொண்டு, ஏற்புடைய விழாவினை எவ்விதத்தும் நடத்துதலே சால்புடைத்து என்று கண்டோம்.

இந்த நிலைகூட வந்திடுமோ, வாராதோ என்று எண்ணிடும் வகை ஒன்றும், என்னையும் என்போன்ற நமதருமைத் தோழரையும், வந்து கைப்பற்றிற்று.

சிறையில் சென்றிருந்தோம்; சில நாட்கள்!

விரைவிலே வெளிவருவோம் என்ற நிலை அல்ல அது.

இந்த ஆண்டுப் பொங்கற் புதுநாள், உடன்பிறந்தோரோ! உம்மிடமெல்லாம் அளவளாவும் வாய்ப்புக் கிடைக்குமோ, மறுக்கப்படுமோ என்ற ஐயப்பாடு என்னை வாட்டிக்கொண் டிருந்த நிலையில், சென்ற கிழமை, நான் 9ஆம் எண்ணுள்ள கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தேன்.

துளியும் எதிர்பாராத நிகழ்ச்சி - அதிலேயும் ஒரு வேடிக்கை இழைந்திருந்தது. அதே 9ஆம் எண்ணுள்ள கொட்டடியில், நான் இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அடைக்கப்பட்டிருந்தேன். இருபதாண்டுகள் உருண்டோடி விட்டன; இந்த இருபதாண்டுகளுக்குள், நாட்டிலே உலகிலே, என் மன நிலையிலே, என்னென்ன மாறுதல்கள்! எத்துணை வளர்ச்சி!

திட்டமிட்டு நடத்தப்படுவதுபோல, அதே கொட்டடிக்குள் இருபதாண்டுகளுக்குப் பிறகு, நான் சென்றேன்!!

அப்போது - இருபதாண்டுகளுக்கு முன்பு - 1938இல் நான் ஒரு நாள் "அந்தி சாயும்' நேரத்தில் அங்கு இழுத்துச் செல்லப் பட்டேன். கட்டாய இந்தியை எதிர்த்து நடத்தப்பட்ட கிளர்ச்சியில், நான் "மறியலை'த் தூண்டிப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டேன். வழக்கு விசாரணைக் காக, என்னை அந்தக் கொட்டடியில் அடைத்து வைத்தார்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலே "பிடிக்கப்பட்ட' நூற்றுக் கணக்கானவர்கள், சென்னை மத்திய சிறையில் இருந்தனர். என்னை மட்டும், தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள்- 9ஆம் எண்ணுள்ள கொட்டடிக்கு - சைதாப்பேட்டை சப்ஜெயிலில்!!

அதே சிறை!! அதே கொட்டடி! அப்போது, உள்ளே பூராவும் "கருப்பு' சாயம் பூசப்பட்டிருந்தது! இப்போது "வெள்ளை' அடிக்கப்பட்டிருக்கிறது!

அறை மட்டுமா? நானேகூடத்தான்!! அப்போது கருத்த மீசை! இன்று வெளுத்துக் கிடக்கிறது! அப்போது காளை! கல்லூரி முலாம் கலையாத பருவம்! இப்போது, கட்டுத் தளர்ந்து, கல்லூரி முலாம் குலைந்து, "பட்டிக்காட்டான்' என்பார்களே, அந்த "உருவம்' பெற்றுவிட்டிருக்கிறேன். அப்போது "சிறை' என்றால், ஏதோ ஓர் இனம் அறியாப் பயம்! இப்போது? சிறையி லிருப்பதற்கும் வெளியில் இருப்பதற்கும் அதிக மாறுபாடு காண முடியாத மனப்பக்குவம் பெற்றுவிட்டேனல்லவா? அப்போது, நான் தனியாகச் சென்றேன்! இப்போது, என்னுடன் எழுபது தோழர்கள்! அப்போது, நான் பெரியாரின் "புதிய கண்டுபிடிப்பு!' இப்போதோ பெரியாருக்குத்தான் என் பெயர் என்றாலே கசப்பாமே!

அந்தி சாயும் வேளையிலே, அன்று, உள்ளே என்னை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், சிறைக் "காவலர்' முன் நிறுத்தினார்.

முதியவர்! நாட்டு நடப்புபற்றி அதிகம் ஏதும் அறியாதவர் - அறிந்துகொள்ளவேண்டுமென்ற நினைப்பும் கொள்ளாதவர்.

இப்போது, சைதாப்பேட்டை "சப்-ஜெயில்' உள்ளே நான் அழைத்துச் செல்லப்பட்டபோது, என் மனக்கண் முன்னால், அந்த முதியவர் தெரிந்தார்; அவர் "உரையாடல்' ஒலித்தது!

ஒரு "உம்' போட்டபடி என்னை ஏற இறங்கப் பார்த்தார் அந்த முதியவர்!

சிறை என்றால் இப்படித்தான் பார்ப்பது வாடிக்கை போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். நாமாகப் பேசுவதுகூடாது - அது ஒரு வேளை, சிறையிலே, குற்றமென்று கருதப்படக்கூடும்; நமக்கேன் வீண் தொல்லை என்று நினைத்துக் கொண்டு, சிலையாக நின்றேன். முதியவர், சிரிக்கவில்லை - ஆனால், புன்னகைக் கோடுகள் முகத்திலே காணப்பட்டன.

"மணி ஆறுக்கு மேலாகிவிட்டது! இந்த நேரத்திலே, வந்தால் சோறு ஏது'' என்றார் சிறைக் காவலர்.

நான் சோறு கேட்டுத் தொல்லை தருவேன் என்று எண்ணிக்கொண்டார் போலும்.

நானோ, சோர்ந்து கிடந்தேன்; ஓயாத பயணம்; பல நாட்களாக, இன்று பிடித்துவிடுவார்கள், இதோ வருகிறார்கள், அதோ "வாரண்டு' - என்றெல்லாம் பலர் கூறக் கேட்டுக் கேட்டு, மனக்குடைச்சல் ஏற்பட்டிருந்தது. சிறைக்கு! - என்ற செய்தி, எனக்கு ஒருவகையில், செந்தேனாகிவிட்டது - ஏனெனில், என்ன செய்வார்களோ? எப்போது வருவார்களோ? என்றெல்லாம் எண்ணி எண்ணி, மனத்தைப் புண்ணாக்கிக்கொண்டிருந் தேனல்லவா? அந்தத் தொல்லை தீர்ந்தது - சிறை! என்ற செய்தி, செந்தேனாயிற்று. எனவே, "சோறு' கிடைக்காவிட்டால், என்ன செய்வது என்று எண்ணும் நிலையோ ஏங்கும் நிலையோ இல்லை!

ஒரு "அத்தியாயம்' முடிந்தது! - என்ற திருப்தி.

சிறைக் காவலரிடம், கைதிகள், "சோறு' கேட்டுத் தொல்லை தருவது, வாடிக்கையாக இருந்திருக்கவேண்டும்; எனவேதான், "ஆறு மணிக்கு மேல் வந்ததால், இன்று சோறு இல்லை!'' என்ற செய்தியை, விளக்கமளிக்கும் முறையில், சிறைக்குக் காவலராக இருந்த முதியவர் கூறினார்.

அடக்க ஒடுக்கத்துடன் அவர் எதிரே நின்ற என்னைக் கண்டதும், அவருக்கே ஒரு "பரிவு' ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்; எனவேதான், சோறு இல்லை! என்று கூறியதுடன், ஒரு வாழைப்பழம் தருகிறேன் - ஒரு பொட்டலம் தின்பண்டம் தருகிறேன் - என்றார். அவர் பரிவுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவேண்டுமல்லவா! பற்களை வெளியே தெரியச் செய்தேன்! காவி படிந்திருப்பது கண்டார் - சிறிதளவு கண்டிப்புடன் "வெற்றிலை கிற்றிலை' எதுவும் போடக்கூடாது - கிடைக்காது - என்றார்!

மேற்கொண்டு, "உத்தரவுகள்' மளமளவென்று புறப்பட்டன.

கிட்டே வா! துணியை உதறு! சொக்காயைக் கழற்றி! அரைஞாணை அறுத்தெறி!

ஒழுங்காக, பரிசோதனைக்கு உட்பட்டேன்.

மெல்லிய குரலிற் கேட்டார். "ஏதாவது அபினி கிபினி, கஞ்சா கிஞ்சா, பீடி கீடி, இருக்கா?''

"அதெல்லாம் கிடையாதய்யா! அப்படிப்பட்ட பழக்க மெல்லாம் கிடையாது.''

"ஆமாம்! இங்கே வருகிற எந்தப் பயதான், அந்தப் பழக்க மெல்லாம் இருப்பதாக ஒப்புக்கொள்கிறான்.''

"நான் அப்படிப்பட்டவனல்ல.''

"நீ பெரிய யோக்கியன்தான் - சரி - அதோ, பார் மூலையில்; சட்டிகள்; இரண்டு எடுத்துக்கொள்; ஒன்று குடிக்கத் தண்ணீர் வைத்துக்கொள்ள; மற்றொன்று இரவிலே சிறுநீர் கழிக்க. . . . நிற்காதே. . . . எடுத்துக்கொண்டு போய் அறையிலே, வைத்துக் கொள்; கம்பளி இருக்கும், விரித்துக்கொள்; தொந்தரவு கொடுக்காமல் படுத்துக்கொள்!''

படுத்துக்கொண்டேன்! அந்தக் கொட்டடிதான், 9ஆம் எண்! அதே கொட்டடிதான், இந்த ஜனவரித் திங்கள் நாலாம் நாளில்!

இம்முறை, என்னுடன், நாவலர், அவர் தம்பி, நடராசன், அன்பழகன்!! - அதே கொட்டடியில்.

இதிலென்ன பெருமை! - என்றுகூட அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்; நான் அந்தக் கொட்டடியைக் காட்டி, "இதோ, என் அறை! இருபதாண்டுகளுக்கு முன்பு, நான் இருந்த இடம்! மீண்டும் இங்கு வந்திருக்கிறேன்'' - என்று சொன்னது கேட்டு.

இருபதாண்டுகளில், நாட்டிலே ஏற்பட்டிருக்கும் மாறுதலை விளக்கிட வேறெதுவும் காட்டத் தேவை இல்லை; அன்று, சிறைக்காவலர் அடைந்த திகைப்பையும், இன்று எங்கு உள்ள சிறைக்காவலராயினும் கொண்டுள்ள தெளிவையும் ஒப்பிட்டாலே போதும்.

அன்று, உள்ளே சென்று, கம்பளியை விரித்துக்கொண்டு, "ஒழுங்காக' நான் படுத்தேன்; பக்கத்து அறைகளிலே, "கைதிகள்' கானம் பாடினர், கைத்தாளமிட்டனர், சிறைக்காவலரை நையாண்டி செய்தனர் - எல்லாம் எரிச்சலூட்டும் முறையில். நான் இருந்த நிலை கண்டு, அந்த காவலருக்கே, ஒரு வியப்பு!

அருகே வந்தார் - கம்பியைப் பிடித்தபடி. "ஏன் வந்திருக் கிறாய்?'' என்று கேட்டார். "இந்தி எதிர்ப்பு!'' என்று சற்றுக் கெம்பீரமாகச் சொன்னேன்!! முகத்தில் அறைந்ததுபோலப் பதில் பிறந்தது, "அப்படின்னா?'' என்று கேட்டாரே, காவலர்!!

துக்கம் துளைத்தது! வேதனை பிய்த்தது! வெட்கம் கொட்டிற்று! கோபம்கூட, மெள்ள மெள்ளக் கொப்புளித்தது!

தமிழ் நாடெல்லாம், சுற்றிச் சுற்றிப் பேசி வருகிறோம். இந்தி ஆதரவாளர் காட்டும் காரணங்களை எல்லாம் சுக்கு நூறாக்கி விடுவோம். நாகையில், தஞ்சையில், அய்யம்பேட்டையில், ஆற்காட்டில், வேலூரில், சூலூரில் - காட்டூரில், மோட்டூரில், நெல்லையில், தில்லையில், சென்னையில், கோவையில், எங்கும் "ஈரோடு செய்தியை'ப் பரப்பி வருகிறோம் - சென்னைக்கு அருகே உள்ள சைதையில், இந்தி எதிர்ப்பு என்றால் என்ன? என்று கேட்கிறாரே, என்பதை எண்ணியபோதே, நெஞ்சம் "பகீர்' என்றது!

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு - என்பார் களே; சுற்றியதன் பலன் சைதைவரைகூட எட்டவில்லையே! அதுவாகவன்றோ இது இருக்கிறது. செச்சே! இவ்வளவுதானா, நமது "பிரச்சாரம்'? இந்தச் சிறைக் காவலருக்குக்கூடச் "சேதி' எட்ட வில்லை; நாமோ, நாள் தவறாமல் பேசுகிறோம்! - என்று எண்ணி வெட்கப்பட்டேன்.

இந்தி - அதனை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்கள், இவைகளை விளக்குவது எளிதல்ல; அவ்வளவு மூடுபனி படர்ந்திருக்கக் கண்டேன்; எனவே, இயலாததை முயல வேண்டாமென்று தீர்மானித்து சிறைக்காவலர், எளிதிலே, புரிந்து கொள்ளக்கூடிய முறையில் பேசினேன்.

"சர்க்காருக்கு விரோதமான காரியம் செய்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.''

என்று சொன்னேன்; அவர் விளக்கம் கேட்கவில்லை; புரிந்ததாகத் தெரிவித்தார் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகுதான், அவர், விளக்கம் பெற்றார். அது, இருபதாண்டுகளுக்கு முன்பு! இப்போது? ஒவ்வொரு அதிகாரியும் தமது மகனை "நமது வலையில்' விழாது தடுத்திடவேண்டுமே என்றல்லவா, தவியாய்த் தவிக்கிறார்கள். நமது நோக்கம், எங்கும் நிறைநாதமாகி விட்டிருக்கும் நேரமல்லவா?

எனினும், இருபதாண்டுகளுக்கு முன்பு, நான், எந்தச் சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் சிறை வைக்கப்பட்டேனோ, அதே இடத்தில், அதே 9ஆம் எண் கொட்டடியில் கொண்டு போய்ப் பூட்டப்பட்டேன்!!

எனக்கு, சிரிப்பும் பீறிட்டுக்கொண்டு வந்தது, "சம்பத்து!'' என்றேன். "என்னண்ணா?'' என்றான், "ஒரு வேடிக்கை பார். இப்படி, சப்-ஜெயிலிலும், ஜெயிலிலும் அடைபட்டுக் கிடந்த வர்கள், எம். எல். ஏ.-க்கள் ஆனார்கள், எம். பி.-க்கள் ஆனார்கள்; ஆனால் நாமோ, எம். எல். ஏ. எம். பி. - எல்லாம் ஆன பிறகும், சப்-ஜெயிலில் தள்ளப்பட்டிருக்கிறோம்'' என்றேன்,

என்னுடன், இரண்டு எம். பி.-க்கள், - சம்பத்து - தர்மலிங்கம்; ஒரு டஜன் எம். எல். ஏ.-க்கள்! பல கவுன்சிலர்கள்! பல வணிகர்கள்! பல பட்டதாரிகள்! எல்லோரும், சப்-ஜெயிலில் தான்!! சப்-ஜெயிலில், சாதாரணக் கைதிகளாக! சாதாரணக் கைதி என்றால், சிறை விதியின்படி, 4 அவுன்சு அரிசி; 4 அவுன்சு கேழ்வரகு, 4 அவுன்சு காய்கறி! இவைகளைக் கேட்டுப் பெறவும், கடப்பைக் கல்லில், எரிச்சலூட்டும் கம்பளியை விரித்துப் படுக்கவும், ஒரு மூலையில் "மூத்திரச் சட்டி' உடனிருக்க, உள்ளே உறங்கவும், "உரிமை'பெற்றவர்கள்!!

எம். எல். ஏ.-க்களுக்கு, சட்டசபை நடைபெறும் நாட்களில், "படிச் செலவு' - ஒரு நாளைக்கு 12-ரூபாய் தருகிறார்கள்! எம். பி.-க்களுக்கு இதைவிட அதிகம்!!

இவர்கள் யாவரும், சைதை சப்-ஜெயிலில், "மூத்திரச் சட்டியை' மூலையில் வைத்துக்கொண்டு, கம்பளிமீது படுத்து உறங்கும், "கைதிகள்' ஆக்கப்பட்டனர்.

"கோடை' கொளுத்தும்போது, சட்டசபையைச் சென்னையில் நடத்தினால், தாங்கமாட்டார்கள், எனவே "ஊட்டி' சென்று கொலு இருக்கவேண்டுமென்று, காங்கிரஸ் சர்க்கார் எங்களிடம் பேசுகிறது. சைதைச் சிறையில், கேழ்வரகுக் கஞ்சியும், கம்பளியும், மண் சட்டியும், எங்களுக்கு!

சென்னை மத்திய சிறையில், "வகுப்புகள்' உண்டு. - நாங்கள் வகுப்பு பேதம் ஒழியவேண்டும் என்று கூறுகிறோம் அல்லவா! அதனால், இருப்பதிலேயே, எது கீழ்த்தர வகுப்போ, அதிலே தள்ளி, அழகு பார்த்தனர் போலும்!

பரவாயில்லை! அதனால், எங்கள் இலட்சியம் பட்டுப் போய்விடாது, உடல் கெட்டாலும், உள்ளம் பழுதுபட்டு விடாது! கோடிக்கணக்கான மக்கள், இந்த "அளவு' வாழ்க்கைத் தரமும் பெறமுடியாது வேதனைப்படும் நாடல்லவா இது! நாட்டினை இந்த நிலையில் வைத்திருக்கும் நாயகர்கள், எங்களை மிகக் கேவலமான வருப்பில் தள்ளியதில், ஆச்சரியப்படவோ, ஆயாசப்படவோ தேவையில்லைதான்!

"சைதை'ச் சிறையிலாவது இரவில், அறையில் சிறுநீர் கழித்திடச் "சட்டி' தந்தனர்; அங்கு கொண்டு செல்லுமுன்னம், நாங்கள் அடையாறு போலீஸ் லாக்கப்பில் அல்லவா, தள்ளிப் பூட்டப்பட்டிருந்தோம். அங்கு, இந்தக் கம்பளியும் கிடையாது, சட்டியும் இல்லை; மேல் துண்டை உதறிப்போட்டுப் படுத்துக் கொண்டு உறங்கிறோம், என்றால்லவா, எண்ணிக்கொள்கிறீர்கள்; நாங்கள் எம். எல். ஏ.-க்கள், எம். பி.-க்கள் ஆயிற்றே, 17 இலட்சம் வாக்காளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கழகத்தவ ராயிற்றே, எங்களை அந்தக் கேவலத்துக்கா, ஆளாகவிடுவார்கள்; மேல்துண்டுகளை ஒன்றுவிடாமல், எடுத்து வைத்துக் கொண்டனர்!! வெறும் கல்லிலேதான் படுத்தோம்.

அமைச்சர் பக்தவத்சலம், எங்களைச் சாடினார் - பொறுப் பற்றவர்கள், போக்கிரிகள், என்பதாகவெல்லாம் சீரழிவும் வன்செயலும் கண்டிக்க, நாம் தயங்கோம்; கயவர் செயலெல்லாம் கழகத்தைக் காய்வதற்குப் பயன்படுத்தல் முறையல்ல.

எங்களை நாடு அறியும்; நல்லோர் எமது நோக்கம் அறிவர்; ஆனால், எங்களை இந்த ஆட்சியாளர் நடத்தியதை, நாடு அறியாததல்லவா? அதற்காக "அடையாறு' சம்பவம் கூறினேன்!! வேறு, யாரையும் குறைகூற அல்ல.

நடுசிநி! நா வறண்ட நிலையில், தர்மலிங்கம் எம். பி. தண்ணீர் கேட்டார்; தர இயலாத போலீஸ்காரர் கண்ணீரைச் சொரிந்தார்!!