அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மிரட்டல்! விரட்டல்!
1

டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும் -
டில்லியின் ஓரவஞ்சனை -
கல்வி, கலை, அரசியலில்

தம்பி!

தக்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா - கோபமில்லையே என்மீது அதற்காக!!

மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார் - அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல - ஆசிரியத் தொழிலில் இருப்பவர் - அமைதியில் ஆனந்தம் காண்பவர் - அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூட மாட்டார் - இவ்வளவு போதும் - கோடிட்டுக் காட்டினாலும் போதும் - இப்போதைக்கு இவ்வளவுபோதும் - என்று அவ்வப் போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர் - என் நண்பர் - தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர் - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர் மு. வரதராசன்.

பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள் புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர், திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகிறோம்.

இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, "பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!'' என்று கூறியும், புலவர்களைப் பார்த்து, "ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை'' என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர்.

அதிலும், தமிழாசிரியர்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் - ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது.

அவர்களை, "நாத்திகர்' என்று நிந்திக்கவும், ஆட்சி யாளர்கள் துடித்தெழுகின்றனர்.

எனவே, டாக்டர். மு.வ.வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்றுநான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை - அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம்.

அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர்.

பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசும்போது, ஆம் என்றுதான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின்கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச் சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன் நிற்பானேன் - கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடு களையும் கலைத்தொழித்துக்கூட "உலகு ஒன்று' என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை.

ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடத்திடும்போது மனம் வெதும்புகிறது - இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல் வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர்.

விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார் - சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான் இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார்.

தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத் துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்துரைத்தன ம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக்கொண்டு விடுகின்றனர்.

டாக்டர் மு.வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர் அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில் டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும் போது, டாக்டர் மு.வ. போன்ற தமிழாசிரியர்கள், இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்படவழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, "டில்லி - சென்னை தொடர்பினை' எடுத்துக் காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை - நாட்டு மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது.

கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்கு வந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம் - கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது.

கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல் - விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக் கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல் - விரட்டல்!!

தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக் கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக் கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேரு பண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார்.

சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும் இந்த விழாவிற்குப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவில்லை.

பாட்டும், கூத்தும், கேளிக்கையும் நிறைந்த விழா - ஒவ்வோர் பல்கலைக் கழகமும் தத்தமது கோட்டத்தில் வளர்ந்துள்ள கலைத்திறனைக் காட்டிடும் வாய்ப்பு - இதிலே சென்னைப் பல்கலைக் கழகம் கலந்து கொள்ளவில்லை. காரணம் என்ன?

இந்தியப் பேரரசு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்தது. மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டோம் என்று சென்னைப் பல்கலைக் கழகம் கூறிவிட்டது.

இந்த விழா, ஆண்டுதோறும் டில்லியிலேயே நடத்துகிறீர்கள் - இது சரியல்ல - ஒவ்வோர் ஆண்டு ஒவ்வோர் "ராஜ்ய'த்தில் நடத்துவதுதான் நல்லது என்று சென்னைப் பல்கலைக் கழகம் கூறிற்று இந்தச் சாதாரணமான நியாயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள டில்லிக்கு விருப்பம் இல்லை.

டில்லி ஒரு திட்டம் வகுப்பது, அதை முறையில்லை சரியில்லை என்று கூறி, சென்னை மறுப்பதா!

நந்தா! உனக்கேன் இந்தப் புத்தி!

டில்லியின் போக்கு இது போலிருந்திருக்க வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் யோசனையைப் புறக்கணித்தது.

புண்பட்ட மனம்; சென்னைப் பல்கலைக் கழகம், இதனைக் காட்டவும், தன் கண்டனத்தைத் தெரிவிக்கவும் டில்லி விழாவில் கலந்துகொள்ளவில்லை.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல பாடங்கள் போதிக் கப்படுகின்றன, ஆனால் திராவிட நாடு திராவிடருக்கே என்பது பாடமாக்கப்பட்டதில்லை! சென்னைப் பல்கலைக் கழகம் கேட்டதெல்லாம் "விநயமான கோரிக்கை' - அதற்கே டில்லி இணங்கவில்லை.

சென்னைப் பல்கலைக் கழகம் என்ன செய்யும்? என்ன செய்தார் டாக்டர் மு.வ.! கலைத் தூதுக்குழு சம்பந்தமாக டில்லி காட்டும் போக்கைக் கண்டு மனம் வெதும்பி - மிரட்டல் - விரட்டல் என்று கூறினார். சென்னை பல்கலைக் கழகம், விழாவில் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றது! அவ்வளவுதான்!!

சென்னைப் பல்கலைக் கழகம் இதுபோல் நடந்து கொண்ட காரணம் என்ன என்பதுகூடப் பொது மக்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்பட்டாலும், மற்றத் துறையினர் இது குறித்து அக்கரை காட்டி, இது டில்லி ஆதிக்கத்தின் ஒரு "கூறு'தான் என்று கூறிட முன் வந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!

ஒன்றுபட்டு, தமிழகம் தன் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டும் வாய்ப்பே ஏற்படவில்லை.

கலை, கல்வித்துறை பற்றிய பிரச்சினை நம்முடைய தல்ல என்று மற்றவர்களும், எல்லை, உரிமை என்பன அரசியல் வாதிகளின் ஆயாசப் பேச்சு என்று கலை கல்வித் துறையினரும், வாணிபம், இலாப வேட்டைக்காரர் பிரச்சினை, இதில் நமக்கென்ன அக்கரை என்று பிற துறையினரும், இவ்விதம், ஒவ்வொருவர் ஒவ்வோர் "முனை'யில் மட்டும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, பிற பிரச்சினைகளில் கருத்தைச் செலுத்துவதே தேவையில்லை என்று எண்ணும் போக்குக் காண்கிறோம். அதுமட்டுமல்ல; இவர் ஒவ்வொருவரும், எதற்கும் "பிள்ளையார் சுழி' போடுவது என்பார்களே, அதுபோல, டில்லியின் போக்கைக் கண்டிக்கக் கிளம்பும்போதே, எமக்கு இந்தியா ஒரு நாடு என்பதிலோ, இந்தியர் ஓர் இன மக்கள் என்பதிலோ, ஐயம் இல்லை. நாங்கள், நாடு துண்டாடப்பட வேண்டும் என்ற தீய கொள்கை கொண்டோரல்ல! இந்தியாவின் ஐக்கியமே, எமது பேச்சு, மூச்சு என்ற "துதி' பாடிவிட்டுத்தான், தமது கண்டனத்தை வெளியிடு கின்றனர். இப்படிப்பட்ட "அடக்கமான'வர்களுக்கே, டில்லி வழங்குவது, மிரட்டல், விரட்டல்!

எத்தனை காலத்துக்கு, எத்தனை பிரச்சினைகளுக்கு, இப்படி இருகரம் கூப்பி, ஐயா! ஐயா! என்று இறைஞ்சி நின்று இடியும் கடியும் பட்டுத் தீரவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்களா, தெரியவில்லை.

தம்பி, ஒன்று புரிகிறது. இன்று எனக்கு வந்த தபாலில், டில்லியிலிருந்து வெளியாகும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு துணுக்கு வெட்டி அனுப்பி வைத்திருந்தார் ஒரு நண்பர். இந்த இதழ் மகாத்மாவின் புத்திரரும் ஆச்சாரியாரின் மருகருமான தேவதாஸ் காந்தியை ஆசிரியராகக் கொண்டது.

இடியும் கடியும் பொறுத்துக் கொண்டு, வலியையும் வெளியே தெரியவிடுவது நாகரிகமல்ல வென்று கருதிக் கொண்டு, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி, கண்ணீர் பொழிந்து கனிவு பெறலாம் என்று காத்து நிற்போர் மட்டுமல்ல, தமிழகத்தில் விளைவு விபரீதமாகுமோ, அடக்குமுறை அவிழ்த்து விடப்படுமோ என்பது பற்றிய அச்சமற்று, வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் ஓர் கழகம் இருக்கிறது, அது, தி.மு.க. என்பதை, டில்லி வட்டாரத்து ஏடு புரிந்துகொண்டிருப்பது, நன்றாகத் தெரிகிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், தி. மு. க. தேர்தலில் ஈடுபட இருப்பது பற்றிய குறிப்புரை வெளிவந்திருக்கிறது.

வழக்கமான வசையும் - சாபமும் காண்கிறேன், குறிப்புரையில்.

கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு காமராஜர் கிளம்பி விட்டார், எனவே இந்த தி.மு.க. தோற்று அழிந்துபோகும் என்று அந்த இதழ் "ஜோதிடம்' கூறுகிறது.

பிறகோ, அந்த ஜோதிடத்தில் அதற்கு நம்பிக்கையில்லாமல், இந்த தி. மு. க. திராவிட நாடு, தனி நாடு என்றெல்லாம் பேசுகிறது - இப்படிப்பட்ட பேச்சுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று எடுத்துக் காட்டி, வக்கீலாகிறது; வழக்கறிஞர் வேலையில் மற்றவர்களும் ஈடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்றால் என்ன, ஐயா! அதற்கு இடம் இருக்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி, மக்களிடம் பேசலாமல்லவா, என்று வாதாடக்கூடுமே என்ற அச்சம் பிறக்கிறது. உடனே, வழக்கறிஞர் வேலையை விட்டுத் தொலைந்து, போலீஸ் வேலையை இந்த இதழ் மேற்கொண்டு, தி. மு. கழகத்தை இனியும் சும்மா விட்டு வைக்கக் கூடாது! இராஜத்துரோகக் குற்றம் செய்கிறது இந்தக் கழகம்! உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து தி. மு. கழகத்தை ஒடுக்கித் தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது.

ஜோதிடர் வேடம் கண்டு சிரிப்பு வருகிறது, வழக்கறிஞர் கோலம் காணும்போது பரிதாபமாக இருக்கிறது, போலீஸ் குரலில் பேசக் கேட்கும்போதோ, இந்த இதழிடம் எனக்கு அனுதாபம்கூட ஏற்படுகிறது. எவ்வளவு கிலி, பாபம், இந்த இதழுக்கு.

இந்துவும் மித்திரனும் இடம் அளிப்பதில்லை, கல்கியும் விகடனும் கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதில்லை காட்டுக் கூச்சல், கவைக்கு உதவாப் பேச்சு என்று காமராஜர்கள் கூறிவிடுகின்றனர். இந்த நிலையிலேயே, டில்லியில் உள்ள ஏடு, தீபட்டது போலத் "தகதக'வென ஆடி, தடி எடு! தடைபோடு! தடைபோடு! என்று கொக்கரிக்கிறது. தம்பி! நீயும் நானும் விரும்புகிறபடியும் நாட்டில் நல்லோர் பலரும் எதிர்பார்க்கிற படியும், பொதுத் தேர்தலிலே நமக்குச் சிறப்பான வெற்றி கிடைத்து, நாம் ஆட்சி மன்றத்திலேயும் அமர்ந்து, நமது உரிமை முழக்கத்தை நடத்தினால் ஏ! அப்பா! இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஏடுகள் என்ன பாடு படுமோ என்று எண்ணும்போதே எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்த அரியவாய்ப்புக்காக நாம் அரும்பாடுபடும்போது, 150 ரூபாய்க்காக இதுகள் ஆலாய்ப் பறக்கின்றன, என்று நம்மவர்களிலேயே சிலர் கூறுவது கேட்கும்போது, நெடுந்தொலைவிலிருக்கிற இந்துஸ்தான் டைம்சுக்கும் புரிகிறதே, இவர்களுக்கு ஏனோ வயிறு எரிகிறது என்றெண்ணி ஆயாசமடைகிறேன்.

நாங்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு, சில வேளைகளில் கனிவு காட்டி மகிழச்செய்கிறோம், மற்றும் சில வேளைகளில் உருட்டுவிழி காட்டி மருளச் செய்கிறோம், எனினும் எல்லாம் எதன் பொருட்டு? நாம் ஒன்றாக வாழலாம், ஒரே நாடாக இருக்கலாம், ஓரரசுக்குள் இருந்திடலாம், தனித்தனி நாடுகள் தனித்தனி அரசுகள், வேண்டாம், கவி பாடியும் கதை கூறியும் நாங்கள் இதனைத்தானே எடுத்துக் கூறுகிறோம் ஒற்றுமைக்காக ஓயாது உழைக்கிறோம், ஏன் உமக்கு மட்டும் இந்த உயர்ந்த நோக்கம் ஏற்படவில்லை, எதனாலே உமக்குமட்டும், பேதபுத்தி, பிளவு மனப்பான்மை ஏற்படுகிறது, கங்கைக் கரைக்கும் காவிரிக் கரைக்கும் பேதம் ஏன் காணவேண்டும்? காசி காஞ்சி என்று ஏன் பிரித்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்? எல்லாம் பாரதநாடு என்று பரிவுடன் எண்ணிடலாகாதா? என்று தலைவர்கள் பேசத்தான் செய்கிறார்கள் - கேட்கும் போது சிற்சில வேளைகளிலே எனக்குக்கூடத் தம்பி! நாம்தான் ஒருவேளை தவறாக நடந்துகொள்கிறோமோ, வீணான பேதபுத்தி நம்மைப் பிடித்தாட்டுகிறதோ, ஒற்றுமையின் மேன்மையை, ஓரரசின் உன்னதத் தன்மையை, ஒரு பெரும் நாடு என்ற திட்டத்தின் அருமை பெருமையை அறிந்து போற்றிடும் அறிவற்றுப் போனோமோ, என்றெல்லாம் தோன்றச் செய்கிறது. எனினும் மறுகணம், நம் நாட்டின் இயல்பும் அதற்கேற்ப வளர்ந்துள்ள வரலாறும், அதன் பயனாக நாம் பெற்ற பெருமைகளும் வந்து நிற்கின்றன. "ஏடா! மூடா! என்னை மறந்திட, துறந்திடத்தக்க நிலையிலா உன் மூதாதையர் காலமுதற்கொண்டு உன் காலம் வரையிலே நான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறேன் - இயற்கை எழிலும் வளமும் ஈந்த என்னை, உன் அன்னை என்று ஏற்றுக்கொள்ளவுமா உனக்குக் கூச்சம் ஏற்படுகிறது!