அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (3)
1

தி. மு. க. வெற்றியும் வடநாட்டுப் பத்திரிகைகளும் -
நாகநாடும் திராவிட நாடும்.

தம்பி!

தேர்தல் துவங்கிய நாள்தொட்டு, பத்திரிகைகளில் பல்வேறு விதமான படங்களைக் கண்டாய் அல்லவா? ஒவ்வொன்றும், நமது கழகத்தை மக்கள் துச்சமென்றெண்ணி ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும், நச்சுப் பூச்சி என்றெண்ணி நசுக்கி அழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டன. படங்களை வெளியிட்டவர்களின் எண்ணம் கெட்டது என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அவர்களுக்கே உள்ளபடி, நமது கழகத்திடம் அத்துணை வெறுப்பு; வெறுப்புக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? நம்மைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாதது அல்லது புரிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணமே கொள்ளாமல், ஏனோதானோ என்ற போக்குடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் இருந்து வந்தது.

ஏழைக் குடும்பத்து ஏந்திழை, தன் கணவனுக்கு வந்துற்ற நோய் தீர்க்க மருந்துபெற, செலவுக்குப் பணம் கிடைக்காமல், தன் காதணியைக்கொண்டு சென்று, அங்காடியில் விற்றிட முயலும் காட்சியைக் கண்டதுண்டா? சோகம் கப்பியமுகம் - நீர் ததும்பும் கண்கள் - தைலமற்ற கூந்தல் - அழுக்கேறிய ஆடை - தட்டுத்தடுமாறும் பேச்சு - தள்ளாடும் நடை! இந்நிலையில் இருந்திடும் அம்மை, காதணியை விற்றிட முனையும்போது, அங்காடி ஐயன், ஐயோ! பாவம்! என்று இரக்கம் காட்டுவதில்லை. - பொருள் களவாடப்பட்டதோ? என்றே ஐயப்படுகிறான். அச்சமூட்டும் கேள்விகளால் தாக்குகிறான். கண் கசிந்து காரிகை நின்றாலோ, "நீலி வேடமிட்டு, என்னை ஏய்க்காதே! கள்ளி! காதணியை எங்கு களவாடினாய்?'' என்று கேட்டு கண்டபடி ஏசுகிறான். போலீசுக்குத் தகவல் கொடுத்திடும் போக்கினனும் உண்டு. காரணம் என்ன? அந்த அம்மையின் கோலம்!! கண்ணகியின் காற்சிலம்பு விற்ற கோவலனையே, கோலம் கண்ட மன்னன், கெடுமதியாளன் சொல்லை நம்பி, கள்ளனென்று கூசாது கூறி, கொலையும் செய்திட கட்டளை பிறப்பித்தனனே!!

அஃதேபோல, நமது கழகத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறி, ஆதரவு திரட்ட முனைந்திடும் நாம், எளியோர். நாற்பதாண்டு அனுபவம் - நாலாறு இலட்ச பணபலம் - ஏழெட்டு கிராமச்சொத்து - எனும் "மகிமை'கள் இல்லை; சாமான்யர்கள், பெரிதும் இளைஞர்கள்! அணிமணியினை ஓர் ஏழை விற்றிட முற்படும்போது, ஐயம் கொண்டு, அதட்டி மிரட்டிக் கொடுமை செய்யும் உலக வழக்குக்கு ஒப்ப, நல்ல மதிப்புள்ள கொள்கைகளை, நாம் எடுத்துக்காட்டுகிறோம், அதுகண்டு அலட்சியப்படுத்துகிறார்கள் - அச்சமூட்டுகிறார்கள் - கண்டிக்கிறார்கள்.

மாளிகைவாசிகள் அல்லது மடாலயவாசிகள் மதியற்றது பேசிடினும், உட்பொருள் ஏதேனும் இருந்திடக்கூடும், அதனை அறிந்திடும் "பரிபக்குவம்' நமக்கு ஏற்படவில்லை என்றெண்ணி, பயபக்தி காட்டுவோர் நிரம்பிய சமூகமல்லவா! அதே பழக்கமல்லவா!! அதனால், நாம் எடுத்துக்காட்டும், கொள்கைகளில் சிறப்பும் சீலமும், நமது போக்கில் பெறுப்பும் இருப்பதாக, நம்புவது பெரும்பாலோருக்குக் கடினமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, நம்மைப் புரிந்துகொள்ள மறுத்து வந்திருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாததால் அலட்சியமாகப் பேசி ஏச முற்பட்டனர்.

அந்தப் போக்கின் விளைவுதான் நம்மைக் குறித்து, இதழ்கள் வெளியிட்ட பலப்பல கேலிப் படங்கள்!! அவைகளை எல்லாம் கண்ட உனக்கு, இந்த இதழில் ஒரு படம் காணும் வாய்ப்பு! இதழின் மேலட்டையில்!! பார்த்திருப்பாய், மேலால் படிப்பதற்கு முன்பு, மீண்டுமோர் முறை பார்; படத்தை!

அடிபட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்குத் தூக்கிச் செல்கிறார்கள்! தோல்வி ஏற்பட்ட இடங்களில், காங்கிரசைத் திருத்த, மருந்தூட்ட புதிய வலிவு ஊட்ட முற்பட்டிருக்கிறார் களே, தலைவர்கள். அதனை விளக்கிடும் படம்.

பல்வேறு இடங்களிலே, காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரசுக்கு இருப்பதுபோன்ற

உலகப் புகழ்பெற்ற தலைவர்
பிரம்மாண்டமான பத்திரிகை பலம்
பெரியதோர் பணபலம்
அளவற்ற அதிகார பலம்

வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். எனினும், பல மாநிலங்களிலே, காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மாடுகள் அடிபட்டு கட்டித்தூக்கி வரப்படும் காட்சி, இதனைக் காட்டத்தான்! ஆனால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதேயொழிய, மருந்தூட்டி மீண்டும் வலிவுபெறச் செய்யமுடியும், அதற்கான வசதி இருக்கிறது என்பதைக் காட்டவே, "மாடுகளுக்கு மருத்துவ விடுதி' இருப்பதாகப் படம் காட்டுகிறது!!

தம்பி! இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வந்துற்ற நிலையை எடுத்துக்காட்டும் இந்தப் படம், நமது இதழில் காண்கிறாயே தவிர, இதனை முதலில் வெளியிட்டது நாமல்ல.

அசாம் ட்ரைப்யூன் எனும் ஆங்கில நாளிதழில் நான் கண்ட படம்; அசாம் மாநிலத்தில் கௌஹத்தி நகரிலிருந்து வெளியிடப்படும் இதழ்; காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை, காங்கிரஸ் ஏட்டினாலேயே, அடியோடு மறைத்திட இயலவில்லை. மருத்துவ விடுதிக்கு அடிபட்ட மாடுகள் தூக்கிச் செல்லப்படுவதுபோல், படம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது; பார்க்கலாமே இவர்கள் என்னதான் சாதித்துவிடுகிறார்கள் என்று வீம்பு பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் மேலிடத்துக்கு உள்ளத்தைப் பிடித்துக் குலுக்குவது போன்ற நிலைமைதான், இதனால் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குமுன்பு, இம்முறை கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி தலைதூக்காது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம் என்று வீரம் பேசினர் - இப்போது, கம்யூனிஸ்டு கட்சி வெற்றிபெற்றுவிட்டால் என்ன! என்ன சாதித்துவிட முடியும்! கட்டு திட்டத்துக்கு அடங்கி, பெட்டிப் பாம்பாகி, நாங்கள் சொல்லுகிறபடி ஆடித் தீரவேண்டும். இல்லையானால் அமைச்சர்களுக்குச் சீட்டுக் கொடுத்து விடுவோம் என்று வீம்பு பேசுகின்றனர். ஏமாற்றமும் கிலியும் இவ்விதம் பேசச் செய்கிறது என்பதை எவரும் எளிதில் அறிய முடிகிறது!!

நேரு பண்டிதரை, ஆசியாவைக் கம்யூனிஸ்டு அபாயத்தி லிருந்து காப்பாற்றவல்ல "புருஷோத்தமர்' என்று கொண்டாடி வரவேற்கும் அமெரிக்கா, "நேருவின் இந்தியாவில்,' ஒரு மாநிலம் - அது அளவிலே எப்படி இருப்பினும் சரி - கம்யூனிஸ்டு அமைச்சர்களின் ஆட்சியில் வந்துவிட்டது என்ற செய்தி கேட்டு, பாராட்டவா செய்யும்!! நேருவின் இந்தியா' - நேருவின் பிடியிலிருந்து பிய்த்துக் கொள்கிறது என்ற பேருண்மையைக் கேரளம் எடுத்துக் காட்டுகிறது!!

அகில இந்தியாவையும், உலகின் பல்வேறு நாடுகளையும், சிந்தனையில் ஆழ்த்திவிட்ட அளவு வெற்றிபெற்று, அமைச்சர் அவை அமைக்கும் நிலையைப் பெற்றிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றியையே, கேலிக்குரியதாகப் பேசும் போக்கில், காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும்போது, தம்பி! 15 இடங்களை மட்டுமே பெற முடிந்த நம்மை ஒரு பொருட்டாகவா மதிப்பார்கள்!! மமதை நிரம்பியவர்களாகப் பேசுகிறார்கள்!

அந்தப் போக்கு தவறு, தீது பயப்பது என்பதைக் காட்டவே அடிப்பட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்வதாகப் படம் போட்டுக் காட்டி, அசாம் டிரைப்யூன் அறிவூட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, கேரளத்தில் சிதைக்கப்பட்டிருப்பது, பண பலத்தால் அல்ல, கொள்கை பலத்தால். காங்கிரஸ் கட்சி பிற்போக்குக் கொள்கையின் இருப்பிடமாகவும், முதலாளித்துவத்தின் பாசறையாகவும், சர்வாதிகாரம் நெளியும் இடமாகவும் இருக்கிறது, என்பதை உணர்ந்த மக்கள், முற்போக்கும், ஜனநாயகமும், சமதர்மமும் வேண்டும் என்ற தம்முடைய "வேட்கை'யை கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றிமூலம் எடுத்துக் காட்டுகின்றனர். இது காண முற்போக்கு எண்ணங் கொண்ட எவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையுமாகவே இருக்கும்.

ஆனால், காங்கிரசின் செல்வாக்கை ஒரிசாவில் சிதைத்தவர்கள், காங்கிரஸ்காரர் எவ்வளவோ தீவிரவாதிகள் என்று சொல்லத்தக்க அளவுக்குப் பிற்போக்குவாதிகளாக உள்ள கண தந்தர பரீஷத் எனும் ஜரிகைக் குல்லாய்க்காரர்கள்!!

மராட்டியப் பகுதியிலேயோ, பல்வேறு கட்சிகளிலும் உள்ள மொழி அரசு கொள்கை கொண்டவர்கள் ஒன்றுகூடிய "சமிதி' காங்கிரசை அந்தப் பகுதியில் முறியடித்திருக்கிறது.

அசாமில், தனிநாடு கேட்போர் செல்வாக்குப் பெற்று விளங்கும் மலைநாடு, காங்கிரசை வீழ்த்தியிருக்கிறது.

இங்கு, காங்கிரசை எதிர்த்து நின்ற நாம், பொச்சரிப்புக் காரர் தவிர, பிறர் கண்டு பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்தக் "குறிகள்' காலப்போக்கைக் காட்டுவதாகும் என்று கருத்துத் தெளிவுள்ளோர் எண்ணுகின்றனர். அலாதியாகத் தெரியும் என்பதற்காகவே, எதிலும் காட்டுப்போக்கு காட்டுபவர்கள் மட்டும், பூ! பூ! இதெல்லாம் ஒரு வெற்றியா!! இதுகளெல்லாம் ஒரு கட்சியா!! என்று பேசுகின்றனர்.

தம்பி! தேர்தலின்போது, நமது கழகத்தை இழித்தும் பழித்தும் பெரியாரின் படை பேசியபோது, மனம் குமுறிய பலர் என்னிடம் கூறினர் - என்னிடம் கூறுவானேன் ஐயா! என் செவிக்கேதான் அந்தச் சங்கீதம் நித்த நித்தம் கேட்கிறதே என்று சொன்னேன்; இப்படி வரைமுறையின்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்களே, இதை அனுமதித்துக்கொண்டே போவதா என்று கேட்டனர்; நாம் அனுமதிப்பதாவது தடுப்பதாவது, இந்த இழிமொழிகளைத் தாங்கிக்கொள்வதற்கான நெஞ்சு உரத்தை நாம் பெறவேண்டும் என்று பதிலளித்து அனுப்பினேன். பிறகு நானே யோசித்தேன் - ஏன் அவ்விதமாகப் பேசுகிறார்கள் என்று. எனக்கு, தம்பி! பேசுபவர்களின் நிலை புரிந்தது - புரிந்ததால் எனக்கு அவர்களிடம் இருந்த "கொஞ்சநஞ்சம்' கோபம்கூடக் குறைந்தது. அனுதாபம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள வேலையும், தமக்கென்று மேற்கொண்டுவிட்ட போக்கும், வேறு விதத்தில், முறையில், பேசவைக்கவில்லை - முடியவில்லை.

புலிவேடம் போட்டுக்கொண்டு பரத நாட்டியம் ஆடமுடியுமா? கற்பனை செய்து பாரேன்!!

புலிவேடம் போட்டு ஆடுவது என்றால், அதற்கான விதத்தில் தாவியும் பாய்ந்தும், பதுங்கியும் உலுக்கியும், "ஜகா' வாங்கியுந்தான் ஆடவேண்டும் - ஆடமுடியுமே தவிர, பரத நாட்டிய பாணியிலா ஆடிக்காட்ட முடியும்!!

அதுபோலத்தான், தம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுவது என்ற வேலையை விட்டுவிட்டு, அல்லது மூட்டை கட்டி ஒரு புறம் வைத்துவிட்டு, யார் பேரிலோ எதற்காகவோ ஏற்பட்டுவிட்ட ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதற் காக, வேறு யாருக்கோ "அடி ஆளாக'ப் போகத் துணிந்துவிட்ட பிறகு, அதற்குத் தகுந்த "பாஷை' தானே இருக்கும் - வேண்டும் - பிறக்கும் - மணக்கும்!

எத்தனை எத்தனை ஏற்புடைய கொள்கைகளை, எவ்வளவு எழிலுடன் எடுத்துக் கூறிவந்தவர், இன்று இப்படிப்பட்ட "பாஷை'யில் பேசவேண்டி நேரிட்டுவிட்டது என்று எண்ணியபோது, உண்மையிலேயே நான் அனுதாபப்பட்டேன்.

அந் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், இப்போது அதே முறையில் பேசுகிறார்கள் - தமக்கென வேறு புரட்சிகளைக் கண்டுபிடித்து செயல்படுகிறவரையில், இதே "பாஷை'தான் இருக்கும்.

பொதுவாகவே, அரசியல் நிலைமைகளுக்கான ஆய்வுரைகளையும், தீர்ப்புகளையும், அவ்விடமிருந்து எதிர்பார்த்தால், எரிச்சலும் ஏமாற்றமும்தான் கிடைக்கும். அல்லிப் பூவில் மல்லிகை மணம் கிடைக்காது.

ஆனால், அரசியற் குறிகளைக் கண்டு காலத்தைக் கணிப்போர், காங்கிரசுக்குப் பல்வேறு பகுதிகளிலே ஏற்பட்டிருக்கும். "சரிவு சிதைவுகளை' சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதழின் மேலட்டையில் உள்ள படம், இந்த நோக்கத்தை விளக்குவதாக இருக்கிறது.

தம்பி! தேர்தலென்பதே ஒரு பித்தலாட்டம் - அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் - ஓட்டர்கள் எல்லோருமே அப்பாவிகள் - என்ற "அருமை'யான தத்துவத்தை யும் கண்டறிந்து கூறிக்கொண்டு, அந்தத் தேர்தலில், ஓட்டு கேட்பதற்காக யார் பின்னோடும் சென்றால், மனதுக்கு இலாபகரமான சந்தோஷம் கிடைக்கும் என்று இருந்தவர்களின், பேச்சும் போக்கும் தொல்லை நிரம்பிய வாழ்க்கையில் தவிக்கும் மக்களுக்கு, ஒருபொழுது போக்காகிவிட்டது. எனவே, அது குறித்து நாமும் அதிகமாகக் கவனிப்பதற்கில்லை!!

நாம் பெற்ற வெற்றிகள், கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் பெற்றுள்ள மகத்தான வெற்றி, கணதந்திர பரீஷத் ஒரிசாவில் பெற்ற கவலையூட்டும் வெற்றி, மராட்டிய மண்டலத்திலே சமிதி பெற்றுள்ள வசீகரமிக்க வெற்றி, அசாமில் மலைநாடு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி - இவைகளுக்கான காரணங்களைச் சிலர் உள்ளபடி கண்டறிந்தாகவேண்டுமென்று முயலுகின்றனர்.

அந்தச் சிரமம் நமக்கேன் என்று கருதும் போக்கினர் - காட்டுத் தீ - கடுவிஷம் - என்று சுடுசொல் கூறிவிடுவதன் மூலம், தமது வேலை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.

பீகார் மாநிலத்திலிருந்து வெளிவரும், இந்தியன் நேஷன் ஆங்கில இதழ், இது குறித்து வழங்கியுள்ள ஆய்வுரை சுவையும் பயனும் உள்ளதாக இருந்திடக் கண்டேன். கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி பெற்ற வெற்றிபற்றியே அந்த இதழ் ஆய்வுரை அளித்திருக்கிறது - என்றாலும், பொதுவான அரசியல் விளக்க மும், தத்துவவிளக்கமும் அதிலே இருந்திடக் காண்கிறேன்.

ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது அபத்தம் என்பாரும்,

ஆரிய - திராவிடப் பிரச்சினை ஆபத்தானது என்பாரும்,

ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது, புதை குழியைத் தோண்டிப் பார்த்திடும் போக்கு என்பாரும் உண்டல்லவா?

காங்கிரசு கட்சி மட்டுமல்ல, வெற்றிபெற்ற கம்யூனிஸ்டு கட்சியே கூட, ஆரிய... திராவிடப் பிரச்சினையை, கேவலமானது கேடு பயப்பது என்று சில வேளைகளிலும், இல்லாதது இட்டுக் கட்டியது என்று சில நேரங்களிலும், பேசிடக் கேட்கிறோம்.

நமது கம்யூனிஸ்டு நண்பர்கள், திடுக்கிட்டுப் போவர் என்று எண்ணுகிறேன், "இந்தியன் நேஷன்' இதழ் தரும் ஆய்வுரையைக் கண்டால்.

தம்பி! இதழ் "பாட்னா' விலிருந்து வெளியிடப்படுகிறது. காஞ்சிபுரத்துக் காகிதமல்ல!!

கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள திராவிட உணர்ச்சிதான் என்று அந்த இதழ் எழுதுகிறது.

Kerala is a small reorganised State in the South

கேரளம், தெற்கே உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட அரசு.

The basis of her culture is Dravidian

அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு.

இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்', பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது.

In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida.

பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம்.

To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt.

குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன!

There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt

தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம்.

செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர் களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். "இந்தியன் நேஷன்' கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது.

The Aryan mind which may be Characterised as the Brahminical mind may be sharp but it is rigid. It is burdened with rites and taboos. It may be metaphysical but it is not emotional and as such it is not very receptive.

ஆரிய மனப்பான்மையை பிராமண மனப்பான்மை என்று கூறலாம். அந்த மனப்போக்கு கூர்மை நிரம்பியதாக இருக்கலாம்; ஆனால், அது வளர்ச்சிபெற மறுக்கும், ஆழ்ந்துவிட்ட நிலையில் உள்ளது. தடை விதிகளையும் சடங்குகளையும் சுமந்துகொண்டிருப்பது. வேதாந்தப் போக்கினதாக இருக்கலாம்; ஆனால், எழுச்சிக்கு இடமளிப்பதில்லை; எனவே புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் வளம் ஆரிய மனப்பான்மைக்கு இல்லை.

The non-Aryan mind is definitely emotional

ஆரியரல்லாதார் மனப்பான்மை நிச்சயமாக எழுச்சிமிக்கது.

It is receptive to New ideas

புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் மனவளம் கொண்டது.

Thus the anti-Congress temper in the South and in Bengal has found expression in the support to the Communist party.

எனவே, தெற்கிலும் வங்கத்திலும் கிளம்பிய காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி, கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிப்பது என்ற வடிவமெடுத்தது.

But in the Aryan Belt the opposition pattern is different.

ஆனால் ஆரிய வட்டாரத்தில், காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் வேறு வகையானதாக இருக்கிறது.

The Janata party and the Jharkand party represent the anti-Congress mood in Bihar, but they are not wedded to evolutionary experiments.

பீகாரில் உள்ள ஜனதாகட்சி, ஜார்கண்டு கட்சி, காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவங்களாக உள்ளன; ஆனால் இவை புரட்சிகரமான திட்டங்களைக் கொள்ள மறுப்பவை.

The Ganatantra Parishad is strong in Orissa as an opposition party; the Jana Sangh and independents have some strength in the Punjab, Rajasthan, Uttar Pradesh which are strongly Aryan Belts.

ஒரிசாவில், பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக கணதந்தர பரீஷத் உள்ளது! ஜனசங்கமும் சுயேச்சைகளும் பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் சிறிது வலிவு பெற்றுள்ளனர் - இந்த இடங்க ளெல்லாம் ஆரிய வட்டாரங்கள்.

The Dravidian mind is a daring mind with expressions and rich varieties.

திராவிட மனப்பான்மை, அஞ்சாதது! புத்தம் புது முறைகளைக் கையாண்டிடத் துடிப்பது. தம்பி! ஆரிய திராவிடப்பிரச்சினையைப் பேசிடும் நாம், வீணர்கள் என்று விளம்பி வந்தனரே, இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆரியர் - திராவிடர் என்று நாம் தனி ஆட்களைக் குறித்து, வெறுக்கவோ, விரட்டி அடிக்கவோ, பேசும் போக்கினரல்ல, முறைகளைத்தான் எடுத்துக் கூறி வருகிறோம்.