அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பண பாணம், பஞ்சு பஞ்சாக. . .
1

சட்டசபையில் திராவிட நாடு பற்றி அமைச்சர் கருத்து -
தேர்தலில் பண பாணம்

தம்பி!

நரகல் நடையில் ஏசுவார்கள்!
பழிச்சொற்களை வீசுவார்கள்!
வழிமடக்கி மிரட்டுவார்கள்!
வம்புவல்லடிக்கு வருவார்கள்!
வழக்கில் சிக்கவைப்பார்கள்!
தோழமையைக் கெடுப்பார்கள்!
கலகமூட்டிப் பார்ப்பார்கள்!
காவல்துறையை ஏவுவார்கள்!
எதையும் துணிந்து செய்வார்கள்!

இவ்வளவும், வேகத்துடன் விறுவிறுப்புடன், துணிச்சலுடன், செய்பவர்கள், நிரம்பிய நாடாகிவிட்டது தமிழகம் - தேர்தல் நேரம் நெருங்கி வருகிறதல்லவா, அதனால் இப்படிப்பட்ட, உருட்டல் மிரட்டல் பேர்வழிகள், நரகல்நடை பயின்றவர்கள் ஆகியோருக்கு நிரம்பக் கிராக்கி கிடைக்கும், இப்போதே, அந்த நிலை இங்கும் அங்கும் தெரிகிறது.

என்னடா தெரியும்
உங்க அண்ணாத்துரைக்கு?

என்று கேட்கும் பேச்சாளர்கள், அமைச்சர்களை அருகே வைத்துக் கொண்டே தூற்றுகிறார்கள்.

குலம், கோத்திரம் தெரியாதா, குணமும் பணமும் தெரியாதா, குட்டுகள் யாவும் வெளிப்பட்டுவிடும், மட்டந் தட்டிவிட்டு மறுவேலை - என்று பேசுபவர்கள், கிளம்பி விட்டார்கள், தூற்றியே நம்மைத் தீர்த்துக்கட்டி விடவேண்டும் என்ற நினைப்புடன்.

உங்க அண்ணாத்துரை ஒழிந்தான் இத்தோடு! மண்ணைக் கவ்வப்போகிறான்! பார்! பார்! - என்று மீசை முறுக்குவார்கள். அமைச்சர்களே ஆலமரத்தடி ஆரூடக்காரர் நிலைக்குத் தமது தரத்தைக் குறைத்துக்கொள்ளும்போது, வெந்ததைத் தின்று வாயில் வந்ததை உமிழும் உத்தமர்களைப்பற்றிக் கேட்கவா வேண்டும்!

திட்டுவதோடு அல்ல, தம்பி! திட்டமிட்டபடி இருக்கிறார்கள்.

காதைப் பிடித்திழுத்து, தலையில் குட்டி, இவ்வளவுதானா உன் திறமை? என்று கேட்டுக் கண்டிக்கும் எஜமானர்கள் போன்ற நிலையில் உள்ள டில்லித் தேவதைகள், இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள். தி. மு. கழகத்தைத் தீர்த்துக் கட்டப்போகிறீர்களா, இல்லையானால், உங்களைத் தீர்த்துக் கட்டவா என்று மிரட்டுகிறார்கள்.

ஈவு இரக்கமற்ற முறையில் வேலை வாங்கும் எஜமானன், உழைத்து உருக்குலைந்து கிடக்கும் வேலையாளை ஏசுகிறானல்லவா,

மூக்குப் பிடிக்கத் தின்கிறாயல்லவா?

வேளைக்குப் படி சோறு கொட்டிக் கொள்கிறாயல்லவா?

மரமண்டையாடா உனக்கு?

தண்டச் சோறு தின்னவா வந்து சேர்ந்தாய்? என்றெல்லாம்.

அரசியல் நிலையில், கேள்வி கேட்க, வேலை வாங்க, திருத்த, கண்டிக்க, மடக்க, இடிக்க, தடுக்க, அதிகாரம் பெற்றவர்களாக அல்லவா, டில்லியில் உள்ள மேலவர்கள் - மூலவர்கள் உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று, ஆதரவு நாடி, பிழைத்துத் தீரவேண்டிய அரசியல் கழைக்கூத்தாடிகள், பாவம், என்ன செய்வார்கள்? எதிர்த்துப் பேச முடியுமா? ஏனென்று கேட்க முடியுமா? சீட்டுக் கிழிந்துவிடுமே - ஆகவே, காட்டிய வழிநடக்க, நீட்டிய இடத்தில் கையெழுத்திட, குட்டும்போது குனிய, தொட்டிழுக்கும்போது பணியவேண்டி வருகிறது.

தி. மு. கழகத்தை அழித்தொழித்துக் காட்டுகிறோம், எம்மை அழித்துவிடாதீர்கள் என்று இறைஞ்சிக் கேட்டுப், படைபலம் பெற்றுத் தேர்தல் களத்திலே நம்மைச் சந்திக்க வருகிறார்கள். இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்.

நம்மைத் தாக்கினால் மட்டுமே, தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள் வடக்கத்தித் தலைவர்களின் தாக்குதலிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்

நிலைமை. தம்பி! என்னவென்றால், தி. மு. கழகம் குறித்து டில்மேலி டம் கேட்டபோதெல்லாம், தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கீர்த்தியும் கித்தாப்பும் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தி. மு. க. பற்றி

சிறிய கும்பல்
சீந்துவார் இல்லை
சிதறிப்போகும்

என்றெல்லாம் சொல்லிவைத்திருந்தார்கள். தென்னகக் காங்கிரஸ்காரர் சிலருக்கு, உண்மையாகவே, அகில உலகிலும் தம்மைவிட அறிவாளிகள் இல்லை, தம்மைத் தவிர தியாகத் தீயிலே குளித்தெழுந்த தீரர்கள் இந்தத் தரணியிலேயே வேறு எவரும் இல்லை என்ற எண்ணமும், கழகத் தோழர்கள் ஏதும் அறியாதவர்கள், எத்தர்களின் பிடியிலே சிக்கிக்கொண்ட ஏமாளிகள், வெறிச் செயலில் ஈடுபடுவோர் என்று ஓர் எண்ணமும் இருக்கிறது.

பயல்களுக்குப் பண்பே கிடையாது

என்று நம்மை ஏசுவதன் மூலம், பண்பின் பெட்டகம் என்ற பட்டப்பெயர் தமக்குப் பாரிலுள்ளோர் கூடித் தந்துவிடுவர் என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

தென்னகத்துக் காங்கிரஸ் தலைவர்கள், தி. மு. க. கவனிக்கப் படவேண்டிய அவசியமே இல்லாத ஒரு சிறு கும்பல் என்று வடக்கே அமைந்துள்ள பேரரசு நடாத்துவோருக்குக் கூறி விட்டனர்; ஆனால், நாளும் கழக நடவடிக்கைகள் புது விறுவிறுப்புடன் நடப்பதும், மக்கள் ஆதரவு பெருகுவதும், கிளர்ச்சிகளில் தி. மு. கழகம் ஈடுபடவேண்டிய நிலையும் தேவையும் ஏற்படும்போது, அதன் வடிவமும் வண்ணமும் வகையாக இருப்பதும், பேரரசினருக்குப் புரிந்துவிட்டது. எனவே, அவர்கள் தி. மு. க. பற்றி

நீங்கள் தப்புக் கணக்கு காட்டினீர்கள்.
தவறான விளக்கம் கொடுத்தீர்கள்.
வளரவிட்டு விட்டீர்கள்.
வெறும் வாய்ச்சவடால் அடிக்கிறீர்கள்.

என்று கூறிக் கண்டிக்கிறார்கள்; ஏன் தி. மு. கழகம் வளருகிறது? சிறு கும்பல் என்றீர்கள்; அது பெரும் இயக்கமாகி இருக்கிறது; சீந்துவார் இல்லை என்றீர்கள், எல்லாத் துறைகளிலும் கழகக் கரம் தெரிகிறது; சிதறிப்போகும் என்றீர்கள், வளர்ந்தவண்ணம் இருக்கிறது; ஏன் இப்படித் தவறான தகவல் கொடுக்காதீர்கள் என்று இடித்துக் கேட்கிறார்கள்.

பேரரசிலுள்ளோரின் மனப்போக்கை எடுத்துக் காட்டும் முறையிலே, வடநாட்டு "ஏடுகள்' அடிக்கடி எழுதுகின்றன.

தம்பி! சட்டமன்றத்தில் ஒரு முறை, நிதி அமைச்சர் சுப்ரமணியம்,

திராவிட நாடு கேட்பதைப் பத்து வருடம் தள்ளிப் போடும்படி பேசினாரே, நினைவிலிருக்கிறதல்லவா? அப்போது, பம்பாய் ஆங்கில ஏடொன்று, எடுத்தது பேனா, தொடுத்தது கண்டனம் அமைச்சர்மீது.

எப்படி சமரசம் பேசலாம்?
பத்து வருஷத் தவணை கேட்கலாமா?
கழகத்துக்கு நீ உடந்தையா?
கதர் உடையில் கழகமா?
இப்படிப்பட்டவர் காங்கிரஸ் அமைச்சராக இருக்கலாமா?

அண்ணாத்துரையே பரவாயில்லை, பிரிந்து போகிறேன் என்கிறான். அமைச்சர் வேலை பார்க்கும் காங்கிரஸ்காரர், 10 வருடம் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு, அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, பிறகு நாட்டைப் பிரித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்.

இது மிகமிக ஆபத்து!
காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கண்டிக்கத் தக்கது

என்றெல்லாம் அந்த ஆங்கில ஏடு எழுதிற்று.

உணருகிறார்களோ இல்லையோ, பேரரசு நடாத்தும் நிலையில் உள்ள வடநாட்டுத் தலைவர்கள், கழகத்தின்மீது கோபம் கொள்கிறார்கள்; ஆனால் தென்னகத்துக் காங்கிரஸ் தலைவர்கள்மீதோ சந்தேகம் கொள்கிறார்கள்.

இவர்கள் பதவியில் ஒட்டிக்கொண்டு, பலனைச் சுவைத்துக் கொண்டு இருப்பதால், பல்லிளித்துக்கொண்டுள்ளனர்; உள்ளூர இவர்களுக்கும் கழகக்காரர் போலவேதான், வடநாடு தென்னாடு என்ற பேத உணர்ச்சி இருக்கிறது; இவர்கள்,

கூடிக் குடி கெடுக்கிறார்கள்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்.
இந்தியா ஒன்று என்கிறார்கள் "எமக்கு இவ்வளவு தானா?'' என்று பங்குச் சண்டை போடுகிறார்கள்!

இவர்களை முழுவதும் நம்பிவிடுவதற்கு இல்லை! எந்த நேரத்திலும் இவர்கள் தமது கோலத்தை மாற்றிக்கொள்வார்கள்; கோபம் கக்குவார்கள்! இவர்கள்மீது எப்படியும் ஒரு கண் வைத்தபடிதான் இருக்க வேண்டும் என்று பேரரசினர் எண்ணுகின்றனர்.

எனவே வடக்கே அமைந்துள்ள பேரரசினை நடாத்திச் செல்பவர்கள், காங்கிரஸ் கட்சியினராக இருப்பினும், தென்னகத் தலைவர்களைச் சந்தேகிக்கிறார்கள்.

இது தென்னகத் தலைவர்களுக்கும் புரிந்துவிட்டது.

எனவே, அந்தச் சந்தேகத்தையும் துடைத்துத் தீரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள், பேரரசு நடாத்தும் பேறுபெற்றோரின் "தாக்கீது' கண்டு, கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டு, தி. மு. கழகத்தைத் தாக்கிடத் துணிவுகொண்டுவிட்டனர். ஆமடா தம்பி, ஆமாம்! உள்ளதை உள்ளபடி கூறிவிட்டேன்! உண்மையை மறைக்க விரும்பவில்லை. தி. மு. கழகத்தை ஒழிக்க, எல்லாவிதமான வலியினையும் திட்டமிட்டுச் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

அச்சமூட்டக் கூறுவதாக எண்ணிக்கொள்ளாதே! ஆனால், அலட்சியத்தாலே, உண்மையை மறைத்து வைப்பது தவறல்லவா? அதனால் கூறினேன்.

வலிவு கண்டு அஞ்சும் இனம் அல்ல நீ; அறிவேன்; பெருமைப்படுகிறேன்!

நான், தென்னகக் காங்கிரசு தலைவர்கள், பேரரசு நடாத்துவோரின் சந்தேகத்தை நீக்கவும், கசப்பைப் போக்கவும், தி. மு. கழகத்தைத் தாக்குவதுதான், தமக்குள்ள ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து, தளவாடங்களைத் திரட்டி வைத்துக்கொண்டும், துந்துபி முழக்கிக்கொண்டும், தொடை தட்டிக்கொண்டும் கிளம்பும் நிலையைக் காட்டுவது - அச்சம் ஏற்படுத்த அல்ல - தம்பி! உன் உயர்தரமான உழைப்பின் பயனாகக் கழகம் பெற்றுள்ள வளர்ச்சி, அத்துணை பெரிது, அத்துணை வலிவு மிக்கது. எனவேதான் கழகத்தைத் தாக்க, காங்கிரசு அத்துணை திட்டமிட்டுத் தளவாடங்களைத் திரட்டவேண்டி வருகிறது என்பதை உணர்ந்து உவகை பொங்கும் நிலையைக் காணத்தான்!

பத்துப்பேருக்கு நடுவே வீற்றிருக்கும் ஒருவன், அணிபணி பூண்டிருப்பினும், நறுமணம் பூசியிருப்பினும், நகைமுகம் காட்டிடினும், ஒருவரும் திரும்பியும் பாராமல், என்ன என்று கேளாமல், அலுவல்களைக் கவனித்துக்கொண்டும், உரையாடி மகிழ்ந்தபடியும் இருந்திடின், கவனிக்கப்படாமலிருப்பவன், மனம் என்ன பாடுபடும்! அங்கு உள்ள சுவரினையும் கதவினையும் விரிப்புதனையும் பிறவற்றையும், காண்போர், எங்ஙனம் அவை குறித்து, நாட்டம் ஏதும் காட்டாதிருப்பரோ, அஃதேபோல, நடுவிலே இடம்பெற்றுள்ள ஒருவனைக் கண்டவர்கள், துளியும் பொருட்படுத்தாது இருப்பின், வெட்கம் பிய்த்துத் தின்னும், வேதனை பீறிட்டு எழுமல்லவா? உருவம் கூடவா தெரியவில்லை! உரையாடக் கூடவா, மனம் இல்லை! அற்பனென்று எண்ணிக் கொண்டனரோ? அனாமதேயம் என்று கருதினரோ? - என்றெல்லாம் எண்ணி ஆயாசப்படுவானல்லவா?

பொதுத் தொண்டில் ஈடுபடுவோரின் மனதை வெகுவாகப் புண்படுத்தக்கூடியது,

எதிர்ப்பு
ஏசல்
இழிமொழி
பழிச்சொல்

இவைகள் அல்ல! அலட்சியப்படுத்தப்படுவதுதான், அவர்களின் மனதை மிகுதியாக வாட்டும்; வேதனை கொட்டும்; மனம் புண்படும்.

அதிலேயும், மிகத் தேவையான, மிகத் தூய்மையான ஒரு இலட்சியத்துக்காகப் பணிபுரிவோரை, மற்றவர், கவனிக்க மறுத்தால், இலட்சியவாதிகள் இரத்தக் கண்ணீர் வடிப்பர்.

தம்பி! நமது நிலை அப்படி இல்லை! சில காலம், ஏறெடுத்துப் பார்ப்பதும், யாரடா அவன் என்று கேட்பதும்கூட அளவுக்கதிகமான தகுதியைக் கொடுத்துவிடும் என்று எண்ணிக் கொண்டு, நம்மை அலட்சியப்படுத்தி வந்தனர்.

அப்போதெல்லாம், தம்பி! உண்மையைக் கூறுகிறேன் நான் குன்றிப்போனேன்.

நமது கழகத்தாரின் பேச்சு, "ஓசை' என்ற அளவு கூடவா இல்லை; ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லையே, என்றெண்ணி மெத்தவும் வாடினேன்.

பிறகுதான் மெள்ளமெள்ள, ஒருவரிருவர், நம் பக்கம் திரும்பி, "என்ன இரைச்சல் இது?' என்று கேட்கலாயினர்; நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி! கலம், வழிதவறிக் கடலிலே சென்று கொண்டிருக் கிறது. போய்ச்சேரவேண்டிய இடத்துக்கும், இப்போது கலம் ஊசலாடும் இடத்துக்கும் தொடர்பே தெரியாத நிலை! கரை காண முடியவில்லை! கலம் உள்ளோர், எத்துணை கலக்கமடைவர்!

கடலிலேயே அமிழ்ந்து அழியத்தான் போகிறோம் என்று சிலர் அலறித் துடித்தழும் வேளை.

கலம் செலுத்துவோன் கருத்தற்றவன், திறமையற்றவன், இவனை நம்பி இந்தக் கலத்திலே ஏறிப் பயணப்பட்டதே அறிவீனம் என்று சிலர் கைபிசைந்துகொள்கின்றனர்.

ஆற்றல் மிக்கவர் எம் தலைவர்! அவர் அறிவார் எவ்வழியும்! அலறி அழாதே ஆரணங்கே! ஆபத்தின்றிப் போய் வருவேன்! - என்று கூறிக் கண்ணீரைத் துடைத்து, கன்னத்தைத் தடவிக்கொடுத்துவிட்டு, காதலிக்குத் தைரியம் கூறி, விடை பெற்றுக்கொண்டு வந்தவன், கலம் செல்லும் நிலை கண்டு, கண்ணீர் உகுத்தவண்ணம் உள்ளான்.

கலம் செலுத்தும் தலைவனிடம் கலகலப்பாகப் பேசி வந்தவர், காணவும் கூசுகின்றனர்; காணும்போதே, கண்கள் கேள்விக் குறிகள் ஆகின்றன!

கலம்விடு தலைவனோ, கடுங்கோபமும் கொள்கிறான்; நிலைமையை அறிந்து அடக்கிக்கொள்கிறான்!

கலத்தின் மேல் தட்டிலே உலவுகிறான்; கலக்கம் நிறைந்த உள்ளத்துடன்; சுற்றும் முற்றும் பார்க்கிறான்; கரை காண முயலுகிறான்!

எங்கும் தண்ணீர்! அலைகள் எழும்புகின்றன, மடிகின்றன! நம்பிக்கை அவன் இதயத்தில் எழும்பி மடிந்த நிலைகூடப் போய்விட்டது; இதயமே பாழ் வெளியாகிவிட்டது.

புயல் வீசுகிறது! கலம் கட்டுக்கடங்காமல், எப்பக்க மெல்லாமோ இழுத்துச் செல்லப்படுகிறது! கலத்திலுள்ளோர் கூவுகின்றனர்; இருள் கப்பிக்கொள்கிறது; அந்நிலையில் மேல் தட்டிலே உள்ள கலம்விடு தலைவன், உடல்மீது ஏதோ வந்து வீழ்கிறது; என்னவென்று எடுத்துப் பார்த்தால், அரும்பும் மலரும் கலந்து காணப்படும் ஒரு பூங்கொம்பு!! கலம்விடு தலைவன் அதைக் கண்டதும், என்ன நிலை பெறுவான்? களிநடமிடுவான். ஏன்? பூங்கொத்து! ஆமாம்! பெருங்காற்றால், கிளை முறிந்து, அதிலொரு துண்டு, இங்கு அடித்துக்கொண்டு வரப்பட்டு வீழ்ந்துளது!! ஆகவே, எங்கோ, மிக அருகில் கரை இருக்கிறது!

"கலங்காதீர்கள்! அழிவு இல்லை! கரை சேரப் போகிறோம்! இதோ பூங்கொத்து! காற்றால் அடித்துக்கொண்டு வரப்பட்ட பூங்கொத்து! பக்கத்திலேயேதான் கரை இருக்கவேண்டும்! கரை மிக நெடுந்தொலைவில் இருப்பின், மரம் ஏது, செடிகொடி ஏது? பூங்கொத்து கண்டோம்; இனிக் கரை காண்போம். காரிருள் நீங்கிவிடும், கரை உள்ள திக்கு விளங்கிவிடும்!'' - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுவான்; மற்றவரும் அதன் பொருள் அறிந்து பூரிப்படைவர்!

தம்பி! பணியாற்றியபடி நாமிருந்தபோது, எவரும் நம்மைப் பொருட்படுத்தாமலிருந்த நிலை இருந்ததே, அது எனக்கு கரை காணவே முடியாதோ என்ற கலக்கத்துடன், கலம் இருந்த நிலை போன்றுதான் இருந்தது.

காற்றால் பறித்தெடுக்கப்பட்டு வந்து வீழ்ந்த பூங்கொத்துப் போலிருந்தது, நம்மைப்பற்றி நெரித்த புருவத்தினர் சிலர் கேமொ ழி பேசியபோது, கரை அருகாமையில்தான், என்று கலம்விடுவோன் எண்ணி மகிழ்ந்ததுபோல, நான் மகிழ்ந்தேன், நம்மை மாற்றார் தூற்றக்கேட்டு.

கவனிக்கப்பட்டுவிட்டோம், அலட்சியப்படுத்தப்பட வில்லை.

அலட்சியப்படுத்தவில்லை, ஆகவே, நமது முயற்சி பொருளற்றுப் போய்விடவில்லை.

முயற்சி பொருளற்றுப் போகவில்லை; ஆகவே, பலன் தராமற் போகப்போவதில்லை.

தூற்றுகிறார்கள், ஏனெனில் கவனித்துவிட்டார்கள்.

எதிர்க்கிறார்கள், ஏனெனில் நமக்கு வலிவு ஏறுவது புரிவதால்.

தாக்குவார்கள், நம்மைத் தகர்த்தாக வேண்டும் என்ற துடிதுடிப்பால்!

தாங்கிக்கொள்வோம், அதற்கேற்ற "உரம்' நமக்குக் குறிக்கோளில் உள்ள பற்று பெற்றுத் தரும்.

தாங்கிக்கொண்டால், தாக்குவோருக்குக் களைப்பு மேலிடும்.

களைப்பு மேலிட்ட நிலையிலும் தாக்குவர்; மேலும் களைத்துப் போவர்!

பிறகு? பிறகா? தாக்குதல் வலிவிழக்கும்! நமது வலிவு அவர்க்கு விளங்கும்! வெற்றி நமக்குக் கிடைக்கும்.

தம்பி! விடுதலை எனும் தூயதான குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம் கொள்ளவேண்டிய இந்த எண்ணம்தான், நமக்கெல்லாம்! ஆகவேதான், நாம் தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெறுகிறோம்; இவர்களின் தாக்கும் சக்தி குறைந்து வருகிறது. இம் முறை நடைபெறும் பொதுத் தேர்தல், அவர்கள் தமது தாக்கும் சக்திக்குத் துணைதேடி, அதிகப்படுத்திக்கொண்டு வந்து, தேர்தல் களத்தில் நம்மைத் தாக்க ஏற்பட்டுள்ள வாய்ப்பு.

இதைத் தாங்கிக்கொண்டால், தம்பி! இஃது உறுதி, பிறகு அவர்களின் தாக்கும் சக்தி வலிவிழந்து போகும்!!

பிறகு வேறு கட்டம் எழக்கூடும்! கண்காணாத் தீவுக்கு எடுத்தேகும் கட்டம்! கட்டி வைத்துச் சுட்டுத்தள்ளும் கட்டம்!! கண்ணைப் பெயர்த்திடும் கட்டம்! இப்போது, தங்களால் திரட்ட முடிந்த தளவாடங்களைக் குவித்துவைத்துக்கொண்டு, தாக்கித் தகர்த்திடுவேன் என்று அறைகூவலை விட்டபடி, காங்கிரஸ் கட்சி தி. மு. கழகத்தை, பொதுத் தேர்தல் எனும் களத்துக்கு அழைக்கும் கட்டம். இதிலே, நமது கழகம், தாங்கும் சக்தியை உலகறிய எடுத்துக் காட்டினால், காங்கிரஸ், தனது தாக்கும் சக்தி வலிவிழந்து விட்டதை உணர்ந்துகொள்ளும். பிறகு வேறு முறைகளைத் தேடிடும்; களத்தின் அமைப்பு வேறு வேறு ஆகிடும்; அது பிறகு! இப்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை தேர்தல் எனும் களம் நின்று, காங்கிரசுக்கு உள்ள தாக்கும் சக்தியைத் தாங்கிக்கொள்ளும் வலிவு, தி. மு. கழகத்துக்கு உண்டா என்பதாகும்.

என்ன சொல்கிறாய் தம்பி! தாங்கும் சக்தி இருக்கிறதா? என்ன அண்ணா! இப்படி நீ கேட்டிடவேண்டிய காரணம் என்ன? கடுவழி எனினும் நடந்திடுவேன்! பழிச்சொற்களைப் பொறுத்திடுவேன்! மாடும் மனையும் மறந்திடுவேன்! மலரணை துறப்பேன், மறப்பேன் இல்லம்! கூழோ களியோ, தருவர் அங்கு எனினும், அச்சிறை அஞ்சிடுவேன் அல்லேன்! ஓயாதுழைப்பேன், பலன் கேளேன்! உற்றார் எனினும் பற்றுக் காட்டினும், கொள்கைக் கல்லால் வேறெதற்கும் கட்டுப்பட்டிடேன்! - என்றெல்லாம் சொல்ல எனக்குத் தெரியாதெனினும், செய்து காட்டியவனல்லவோ! என்னைப்போய் தேர்தல் களத்தில், காங்கிரஸ் காட்டிட முனையும் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் வலிவு உனக்கு உண்டா என்று கேட்டிடலாமா? - என்று தம்பி! உன் கண் பேசுகிறது; அதிலே நீர்த்திவலை இருப்பதையும் காண்கிறேன். உன் உறுதியை உணருகிறேன், நான் உறுதி பெறுகிறேன்.

பச்சிளங் குழந்தைக்கு வந்துற்ற பயமூட்டும் நோயினை நீக்குதற்கு, மருத்துவர் கேட்டிடும் மூலிகை, வேங்கை உலவும் காடதனில், பாம்புப்புற்றுக் கருகினிலே கிடைக்கும் என்று தாய் அறிந்தால், தயக்கம் காட்டி நிற்பாளோ, தடுத்தாலும் போகாதிருப்பாளோ!!

அதுபோலத்தானே தம்பி! நாம் நமது இலட்சியத்துக்கு எதிர்ப்புக்காட்டுபவர்கள், இந்தத் தேர்தலை ஓர் வாய்ப்பாக்கிக் கொண்டு நம்மைத் தாக்கும்போது, நிலை குலையாமல், உறுதி தளராமல், தாங்கும் சக்தி நமக்குண்டு, மேற்கொண்டும் பணியாற்றும் வலிவும் நாம் பெற்றுள்ளோம் என்பதை எடுத்துக் காட்டியாக வேண்டும்.

எனவே தம்பி! தேர்தல் களத்துக்காக, "தளவாடம்' பலப்பல இலட்சம் உள்ளதுவாம் என்று கேள்விப்பட்டு, நாம், நமது உறுதியைத் தளரவிட முடியுமா - தளர்ந்து போகுமா?

கோபமூட்டி நம்மைச் செயலாற்ற இயலாதவர்களாக ஆக்கிடவேண்டும் எனும் நோக்குடன், கேவல மொழிகள் பேசியும், கீழ்த்தரப் பழிகளைச் சுமத்தியும், மாற்று முகாமினரும், அவர்கட்கு "மேய்ப்புத் தேய்ப்பு' வேலையினைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்களும், அங்குச் சிந்தியதைச் சிதறியதை எடுத்துவந்து சுவைத்திடும் போக்கினரும், அரசியல் பிரசாரம் என்ற பெராலே, நாவால் நாராசத்தை வெளிப்படுத்துவர். கோபத்துக்குத் துளியும் இடம் கொடாதே! பொறுத்துக்கொள்! நீ பொங்கி எழவேண்டியது, போக்கிடமற்றவர்கள் நோக்கம் மறந்து, தம் நாக்கு வலிக்கத் திட்டுகிறார்களே, அதை எண்ணி அல்ல.