அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பண பாணம், பஞ்சு பஞ்சாக. . .
2

நாடு உள்ள நிலையைக் கண்டு, தம்பி! உனக்குக் கண்ணீர் பொங்க வேண்டும்!

வளம் குறைந்து, வாழ்வுக்கான வகைகள் குன்றி, வாழ்க்கை நடத்தத் தேவைப்படும் வருவாய் தேய்ந்து, தேய்ந்த வருவாய் கொண்டு வயிற்றையேனும் கழுவிக்கொள்ளலாம் என்றெண்ணி, அங்காடி சென்று, பண்டம் பலவற்றின் விலையைக் கேட்டிடின், பற்றி எரியுதே வயிறு என்று பலரும் பதறும்படி விலைகள் யாவும் ஏறிவிட்ட நிலையிலே நாடு இருக்கிறது.

நல்லவர்கள்! நம்மவர்கள்! வல்லவர்கள்! வாழவைக்க வந்தவர்கள் - என்றெல்லாம் சாற்றுக்கவிபாடி ஏற்றுக் கொண்டனர் மக்கள், காங்கிரஸ் ஆட்சியினை, ஆண்டு பதினைந்தை எட்டிப் பிடிக்கிறோம். இந்நிலையில் இந்நிலை! என்னென்பது!

வடித்த சோறு போதாமல், வயிற்றைப் பிசைந்து வாட்டமுறும் வறியோர் நிலையினை எண்ணிப்பார்!

மாற்று ஆடை கிடைக்காமல், மரத்தில் பாதி உடலில் பாதி சுற்றியபடி உலர்த்திடும் மாதர் நிலையை, மனதில் கொண்டு பார்த்திடு!

உருகி உடல் கருகி, உள்ளீரல்பற்றிய நோய், உயிரைக் குடிப்பது தெரிந்தும், அதனைப் போக்கிடும் மருந்து வாங்கிடப் போதிய பணம் இல்லாமல், அணையும் விளக்கு என்றறிந்தும், எண்ணெய் இல்லாது ஏக்கமுறும் நிலையை, தம்பி! நினைத்துப் பார்.

இரத்தம் தோய்ந்த வாயுடனே, கொல்லும் புலி உலாவுகையில், குட்டியை இழந்த தாய்மானும், குப்புற வீழ்ந்து மடிந்துபடும் கொடுமை நிறைந்த காட்சியைப்போல், கொள்ளை இலாபம் அடித்தவர்கள் கோலாகலமாம் வாழ்க்கையிலே, குடிசையில் சுருண்டு படுத்துழலும் ஏழையின் நிலையை எண்ணிப்பார்!

திண்டுகள் அடுக்கிச் சாய்ந்துகொண்டு, நோட்டுகள் நெளியும் பெட்டியுடன், சேட்டுகள் கடையில் இருக்கையிலே, மூக்குத்தி அடகு வைத்துவிட்டு, பதிலுக்கு, துடைப்பக்குச்சியைச் சொருகி நிற்கும் அந்த சொக்கி, சுப்பி, இவர்களைப் பார்!!

களஞ்சியம் நிரம்பி வழிந்ததனால், மற்றதை மூட்டைகளாய்க் கட்டி, மாட்டுத் தொழுவம்தனில் போட்டு வீட்டுக்குப் போடா, வேலப்பா! எனக் கட்டளையிட்டிடும் கனதனவான்; அவன் கழனி உழுது செல்வம் சேர்த்து, மாளிகைக்கதனைச் சொந்தமாக்கி, மனைக்கு ஓடும் இல்லாமல், கூரைவேய்ந்து குடி இருந்து, குப்பி கொடுத்த சோற்றுருண்டை உள்ளே போக வெங்காயம் தேடி அலைபவன் வேலப்பன்!

நாட்டின் நிலைமை இதுதானே - இன்னும் பலப்பல கூறிடவோ!

இவைகளை எண்ணி, உன் மனதில், இரக்கம் அன்பு எழல் வேண்டும்; அறநெறி அரசு சென்றிட்டால், அவதி இத்துணை இராதென்ற எண்ணம் மலரும், சிந்தித்தால். அறநெறி அரசு செலவேண்டின், அரசு நடக்கும் போக்கினையும், அறநெறிக்கான முறைதனையும், அனைவரும் அறியச் செய்திட நாம், ஆவன செய்திடவேண்டாமோ? அதற்கு ஏற்ற வாய்ப்புத்தான், அடுத்து வருகிற பொதுத் தேர்தல்! ஆட்சி நடத்தும் காங்கிரசு அரை கோடி அளவு என்கிறார்கள்; ரூபாய்களைக் குவித்துக் கொண்டு, தாக்கும் நோக்குடன் இருப்பதனைக் காணுகிறோம்; எனின், கடமை செய்திட மறந்திடல், அறம் அலவே.

நாடு முழுவதும் நம் வீடு! நாட்டிற்குழைத்தல் நம் கடமை! ஆட்சி அமைத்திட அரும் வாய்ப்பு அடுத்து வருகிற பொதுத் தேர்தல். பணத்தாலான கோட்டைக்குள்ளே பதுங்கிக்கொண்டால், பயந்துபோய், நமக்கேன் இந்த வீண்வேலை, நத்திப்பிழைப்போம் என்று கூற, நாமென்ன மரபு அறியா மாக்களோ அல்லது மரக்கட்டைகளோ! இல்லை, தம்பி! நான் அறிவேன்! எடுத்ததை முடித்திடும் ஆற்றல்மிக்க, ஏறுகள் உண்டு நாட்டினிலே! அவர்க்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு! ஏமாறமாட்டார், பணக் குவியல் கண்டு! என்பதனை நான் அறிந்துள்ளேன்.

எதனையும் தட்டிக் கேட்டிட நாம் இத்துணை வலிவுடன் உள்ளபோதே, ஊர்க்குடி கெடுத்திடும் பேர்களுடன் உறவுகள் கொண்டு, பணம் குவித்து, உழைப்போர் குடியை உருக்குலைந்து ஊராளும் வழிக்கு விலைபேசி, வெற்றிகள் பெற்றிடும் நினைப்புடனே! உலவுது காங்கிரசு மமதையுடன்.

கூரை குடிசை உம் பக்கம்! கூடகோபுரம், மாடமாளிகை, எம் பக்கம்! யாது செய்யவல்லீர்கள்! எமக்கிருப்பது பண பாணம்! கவசம் இருக்குது தங்கத்தால்! - என்று காட்டாட்சி, நடத்துபவன் போட்டிடும் முறையில் கூச்சலிட்டு, மிரட்டுது நம்மைக் காங்கிரசு!

உண்டி குலுக்கி அலைவீர்கள், நாங்கள் "உம்' என்றால் இலட்சம் உருண்டுவரும்! பஞ்சைகள் நீங்கள், அறிவோமே! பங்களாவாசியை எதிர்க்கப்போமோ? - சீமான்களின் அணைப்பிலே உள்ள காங்கிரஸ் கட்சி கேட்கிறது.

இருட்டடிப்பால் தாக்கிடுவேன்! இழிமொழியில் அமிழ்த் திடுவேன்! ஏன் என் பகையைத் தேடுகிறாய், எவரும் என்னிடம் தப்பியதுமில்லை! தகரக்குவளை, நீயப்பா! தகாது உனக்கு தேர்தல் என்று தர்பார் நடத்தும் காங்கிரசு எச்சரிக்கை விடுகிறது.

ஆளப்பிறந்தவர் நாங்களன்றோ! அதற்கேற்ற அந்தஸ்து எமக்குண்டப்பா! வீணாய் ஆசை கொண்டலைந்து, விரோதம் தேடி அழியாதே! விடமாட்டோம் உமை நாடாள என்று வீறாப்புப் பேசுது காங்கிரசு.

காங்கிரசு போடும் கூச்சலினால், கதிகலங்கிப் போவதற்கா நாங்கள் உமக்குத் துணை நிற்போம், என நாளும் மக்களிடம் கூறி வந்தோம்!!

ஆயின், காங்கிரசுக் கட்சிக்கு அன்று 1957-ல் இருந்ததைவிடப் புது ஆற்றல், வந்துளதோ இன்றென ஆராய்ந்தால், மமதை அதிகம் வளர்ந்ததன்றி, தூய்மை வாய்மை நேர்மையுடன் வலிவு வளர்ந்த அறிகுறிகள் எங்கும் காணோம்? கண்டனையோ?

கண்டவர் காங்கிரஸ் நுழைந்ததனால், கரையுது மதிப்பு மாண்பென்று, கதறும் சஞ்சீவியார் நிலையும் இதற்குச் சான்று; வேறென்ன?

பற்பல தொகுதியில் வேட்பாளர் என வெளிக் கிளம்பிய காங்கிரசார், முன்னாள் எங்கு இருந்தவர்கள்? முறைகள் யாவை அவர் தொழிலில்? மூதறிவு மிக்கவரோ? - நாட்டவர் இதனைக் கேளாரோ?

இவர்தான் "ஓட்டு' கேட்க வரும் உத்தமர் இரத்தினம், காங்கிரசு; இவர்க்கே உங்கள் ஓட்டுகளைக் கொடுத்திட வேண்டும் எனத் தரகர் கேட்டிடும்போது, "ஓட்டு' உள்ள மக்கள் மனதில், என்ன எழும்? பற்றும் பாசமும் நேசமுமா? இல்லை, தம்பி! அவை அல்ல! திகைப்பு, திகில், வெறுப்புணர்ச்சி! இவர்க்கெலாம் காங்கிரஸ் புகலிடமா! என்று இவர் நல்லது செய்திட்டார்? கொன்றவனைக் கண்டறிந்து, மாலைகள் சூட்டிடச் செல்வானோ, மகளை இழந்து துயரம் உறும் தகப்பன் தரம் மிகக் குறைந்திடினும்!!

எத்துணை பணபலம் காட்டிடினும், எத்தருக்கெல்லாம் இடமளித்து, மற்றவர் வாழ்வை மதியாது, தேயவைத்து ஆண்டுவரும், காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்காமல், காட்டிக் கொடுப்பதோ மக்கள் தமை?

போனதெல்லாம் போகட்டும்; பொல்லாங்குகள் இனிப் போகும்; நல்லவை பலவும் நாம் தருவோம் எனச் சொல்லா லாகிலும் வரமளிக்க, காங்கிரஸ் கட்சி முன்வருமா? அதுவும் இல்லையே!

விலைகள் குறைக்கச் சொல்லாதீர்! விம்மி விம்மிக் கிடக்காதீர்!

விலைகள் குறைய உள்ள வழி, வயிற்றை இறுக்கிக் கட்டுவதே! வேறு முறைகள் கிடையாது! சோறு குறைத்துச் சுகப்படு!

வரிகள் வளரும், சொல்லிவிட்டேன்! குறைகள் பேசிக் கிடக்காதீர்! கொடுக்க வேண்டும், புது வரிகள்!!

கடன் சுமை ஏறும், குறையாது! கட்டுக்கடக்க முடியாது! தொழில்கள் நடத்த முதலாளி! தோழமை அவருடன் கொண்டுவிட்டோம்! இதுவோ சமதர்மம் எனக்கேட்டு பேசுதல் தீது; சிறை உண்டு!

கொள்ளை இலாபம் அடிப்போர்கள் கொட்டம் அடக்கு என்றெல்லாம் கூச்சலிடாதீர், அவரெல்லாம் கதரை அணிந்தார், காணுங்கள்; காங்கிரசானார் கேளுங்கள்!

நோயும் நொடியும் போக்கிவிட, மாய மந்திரம் கற்றோமா! பிறப்பார், இறப்பர், அதற்கென்ன? பிரபஞ்ச மர்மம் இதுதானே!! இப்படியல்லவா, தம்பி! காங்கிரஸ் கட்சி, துணிந்து கருத்து அறிவிக்கிறது.

இன்று உள்ள நிலையில், ஏழைகள், மறைமுக வரியினால் மிகவும் கொட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொருளாதார நிபுணர்களெல்லாம் எடுத்துரைக்கிறார்கள். எனினும், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், 1600 கோடி ரூபாய் வரியாம்! அதிலே பெரும் பகுதி மறைமுக வரியாமே! கேட்டனையா, அக்ரமத்தை!! கேட்பார் இல்லை என்ற துணிவன்றி வேறு என்ன? குலைநோயால் கதறுபவன், தாளம் தவறிப் பாடுகிறான் எனக் கோல்கொண்டு தாக்கிடும் கொடியவன் ஒருவன் இருந்தானெனக் கதையிலும் இல்லை; ஆனால் தம்பி! குமுறி ஏழை அழிகின்றான், அவனைக் காங்கிரஸ் கட்சி பார்த்து, கிளர்ச்சி செய்தால் துப்பாக்கி சுடுவது, கொல்ல அறிந்திடு எனச் சொல்லக் கேட்கிறோம்; என் செய்தோம்?

திட்டம் தீட்டினோம் பாரென்றார். கொட்டினர் வரிப் பணம் கோடி கோடி! ஒட்டிய வயிற்றினர் பாடுபட ஒய்யாரச் சீமான்கள் கொழுக்கின்றார். வளருது செல்வம் திட்டத்தால், வகை வகையாக என்று சொன்னார்; வறுமை வாட்டம் போகாமல், வலிவு இழந்து ஏழை மக்கள் கோடி கோடி இருக்கின்றார்! வளர்ந்த செல்வம் ஒளிந்தது எங்கே?

தேடச் சொல்லி குழு ஒன்றைத் தேசம் ஆளும் நேரு பிரான், அமைத்து அறிவித்துவிட்டார்; அக்குழு பேச்சு மூச்சுமில்லை!!

செல்வம் யாவும் ஒரு சிலரின் கரத்தில் சிக்கிக் கொண்டதென செப்புகிறார் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் - முன்னாள் நிதி அமைச்சர்! அங்ஙனம் அவர் கூறுவதை, யாரறிவார் எனும் எண்ணமுடன், இங்குள்ள நிதி அமைச்சரவர், சுப்பிரமணிய பெருமானார், சொல்லுகிறார் சொகுசாக, செல்வம் பரவிவிட்டது காண்! செழுமை எங்கும் வழிந்திடுது! ஏழை வாழ்வு மலர்ந்திடுது! எல்லாம் எம்மால் - என்னால்தான்!! - என்று அடித்துப் பேசுகிறார்! அபத்தம் அல்லவோ எனக் கேட்பாய், ஆமாம், ஆனால் அமைச்சர் நிலை, அதற்கும் பயன் படவில்லையெனில், எற்றுக்கந்தப் பதவி என எதிர்த்துக் கேட்பார்; வெகு தீரர்!

ஏழை மக்கள் தொகை தொகையாய் ஏங்கிச் சாகும் நிலையில் உள்ளார்! - என்று நாம் கூற வந்தால், ஏடா மூடா! நாடதனை அறிவாயோ நீ, கூறிவிடு! நானா, நீயா, அமைச்சர்? அதை மறந்து பேசுவதழகல்ல!! - என்று கேட்டுவிடத் துணிவுண்டு - ஆற்றலரசர், அவர் தமக்கு, அவனி காலுக்குப் பந்து, அறிவுக்கட்லின் நீர் முழுதும். அவரது வாய்க்கு ஒரு முழுங்கு!!

ஆனால் டி. டி. கே. முன்னாள் நிதி அமைச்சர் கூறி விட்டார் நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்து பேர், தரித்திர நிலையில் காலந் தள்ளுகிறார்கள்; பணம் ஒரு சிலரிடம் சிக்கிக் கொண்டுவிட்டது என்று.

தம்பி! நாட்டு நிலைமை புரிகிறதல்லவா? உனக்குப் புரிகிறது, ஆனால், மற்றவர்க்கு? புரியச்செய்ய வேண்டியது, உனக்கு உள்ள புனிதக் கடமை! அதனை இன்றே துவங்கு.

காங்கிரசாட்சியினால் விளைந்த கேடுபாடுகளை விளக்க முன்பு - இரு கிழமைகளுக்கு முன்பு - வெளியிட்டிருந்தேனே! கருத்துரைகள், ஏன் தம்பி! அவைகளைத் துண்டு வெளியீடு களாக்கி, மக்களுக்குத் தந்தனையா? ஆம், எனில், ஏன் எனக்கு ஒன்றுகூட, உள்ளம் களிப்படையும் முறையில் அனுப்பி வைக்கவில்லை? திரைகளிலே தீட்டி, கழகத்திலே தொங்க விட்டிருக்கலாம். செய்தனையோ? தம்பி! காங்கிரசின் பண பாணம், நம்மை ஒன்றும் செய்ய முடியாதவிதமான, "கேடயம்' அல்லவா, அந்தக் கருத்துரைகளை ஓவியமாக்குவதும், ஊருக்கு அறிவிப்பதும்.

தம்பி! 1100 கோடி ரூபாய் செலவிலே மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டாகிவிட்டது, தெரியு மல்லவா? ஏது அவ்வளவு பணம்? என்று கேட்கிறாயா? நாடு நாடாகச் சென்று கடன் வாங்கியும், ஓடாகிப் போயுள்ள நிலையிலும் மக்களை விடாமல் வரிகளைப் போட்டும், நோட்டுகளை அச்சடித்துக் குவித்தும், இந்தப் பெருந் தொகையைப் பெற வழிகண்டுள்ளனர். 1100 கோடி!

நமக்கு இதிலே - தமிழக துரைத்தனத்தாரின் அளவிடற்கரிய ஆற்றலின் காரணமாகக் கிடைப்பது, எவ்வளவு தெரியுமோ? 291 கோடி!!

தமிழகக் காங்கிரஸ் அரசு 400 கோடி கேட்டது. கிடைத்தது 291 கோடிதான்!

எவ்வளவு தேவைப்படும் ஒரு திட்டம் தீட்டிக் கணக்குப் போட்டுச் சொல்லுங்கள் என்று, தமிழகக் காங்கிரஸ் அரசு நிபுணர்களைக் கேட்டிட, அவர்கள் பல நாட்கள் பாடுபட்டு, புள்ளி விவரங்களைத் தேடிக் கண்டெடுத்துக் கோர்த்து, திட்டம் தயாரித்து, 600 கோடி வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர்.

பார்த்தவுடனே துரைத்தனத்துக்கு, ஆசையாகத்தான் இருந்தது; ஆனால் உடனே அச்சம் குடைந்தது, அவ்வளவு எங்கே கொடுக்கப்போகிறார்கள் என்ற பயத்தால், 600 கோடியை 400 கோடி என்று குறைத்தார்கள். அந்த 400 கோடியை, டில்லியில் உள்ள பேரரசு 291 கோடியாகக் குறைத்தது! சரி! என்றனர், வேறு? பிடிவாதம் பேசினால், பதவி நிலைக்குமா! பதவி இல்லையெனில், பணக்காரர்களின் கூட்டுறவு கிடைக்குமா? அந்தக் கூட்டுறவு கிடைக்காவிட்டால் பண பாணம் எப்படித் தயாரிக்க முடியும்!!

தம்பி! டாட்டா பிர்லா எனும் இரண்டு செல்வவான்களிடம் மட்டும், இன்று உள்ள தொழில்கள் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய 600 கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்டுள்ள தொழில்! கொழுத்த இலாபம் கிடைக்கிறது! மானைக் கொல்வது வேங்கை! ஆனால், புதரருகே உள்ள நரிக்கும், சிறு சிறு துண்டுகள் உண்டல்லவா? அதுபோல, இந்தக் கோடீஸ்வரர்கள் பெறும் கொள்ளை இலாபத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு, தேர்தல் நிதியாகக் கிடைக்கிறது.

டாட்டா கம்பெனி முன்பு பெருந்தொகை, காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நிதியாகக் கொடுத்ததும், வழக்குப் போடப் பட்டதும், அதுபோது நீதிபதிகள் எடுத்துரைத்த அற உரையும் அறிந்திருப்பாய்.

தம்பி! கான்பூர் எனும் திருத்தலத்துக்கு, இப்படிப்பட்ட முதலாளிமார்களிடம் நன்கொடை பெற, நேரு பண்டிதர் நடத்திய புனிதப் பயணம் பற்றி, இதழ்களில் படித்திருப்பாய். கொள்ளை இலாபம் அடிப்போரிடம் "கைநீட்டுவது' பஞ்சசீலம் பேசும் பண்டிதருக்கு, ஆறாவது சீலமாகிவிட்டது! அவர் என்ன செய்வார், பாவம், அவரை நம்பித் தேர்தலில் ஈடுபடுவோர் அவரைப் பிய்த்து எடுக்கிறார்கள்.

பிர்லாவுக்குச் சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி மட்டும், இம்முறை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக, இருபது இலட்சம் கொடுத்தது!

பெரிய தொகை? ஆமாம்! ஆனால் கசக்குமா கொடுக்க? காங்கிரஸ் ஆட்சியால் மட்டுந்தானே, தம்பி! சமதர்மம பேசிக் கொண்டே இப்படிப்பட்ட முதலாளிகளை ஆதரிக்க முடியும்! அந்த ஆதரவின் காரணமாக பிர்லாவின் மோட்டார் கம்பெனிக்கு கிடைத்த இலாபம் (160-ல்) எவ்வளவு தெரியுமா 2,85,71,127 ரூபாய்! கொடுக்க மனம்தான் வராதா? கைதான் நீளாதா? டாட்டாவுக்கு? 5 கோடி 77 இலட்சம் இலாபம்!

தம்பி! பண பாணம் காங்கிரசிடம் இருக்கிறதே என்று பதறாதே, அந்தப் பண பாணம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை நாடு அறிந்திடச் செய்திடு, பிறகு பார், அந்தப் பண பாணத்தை, மக்கள், எத்துணை துச்சமென்று கூறிக் காரித் துப்பிவிடுகிறார்கள் என்பதை.

சமதர்மம் பேசுவது, முதலாளிகளை மிரட்ட! எமது குறிப்பறிந்து நடந்துகொள்ளாவிட்டால், சமதர்மத் திட்டப்படி, தொழில்களை நாங்களே நடத்தத் திட்டமிட்டு விடுவோம்; உமது கொட்டம் அடங்கிவிடும் என்று கூற!

அதேபோது, முதலாளிகளிம் தொழில்களை விட்டு வைப்பது, இலாபத்தில் பங்குபெற! நாடு வாழ அல்ல! தொழிலாளர் வாழ அல்ல! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக!! அதாவது, பண பாணம் தயாரித்துப் பொதுமக்களை மிரட்ட. தம்பி! மக்கள் இதனை அறியச்செய் - பார் பிறகு பண பாணம், பஞ்சு பஞ்சாகப் பறந்துபோவதை.

டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்குப் பகையாளி! என்பதை எங்கெங்கும் எடுத்துக் கூறு, தம்பி! இன்றே உன் பொழுதுபோக்குச் செலவுக்கென உள்ள சிறு தொகையை, இதற்கு ஒதுக்கி துண்டு வெளியீடுகளைப் பரப்பலாமே!!

சாக்கடையில் ஊறியது என்று தெரிந்தால், கரும்புத் துண்டினை எவர் விரும்பிச் சுவைப்பர்?

வாட்டம் போக்காக் காங்கிரசு
நோட்டம் பார்க்குது ஓட்டுப்பெற
பாட்டாளித் தோழர்களே!
பட்டது போதும்; விடுபடுவீர்!

***

உழைத்து வாழும் உத்தமரே!
உலகம் உமது உணர்வீரே!
உடனே வருவீர்! புதுப்பாதை
உதயசூரியன் ஒளிதருமே!

என்று எடுத்துக் கூறலாமே தம்பி! பேச்சாக, பாட்டாக! துண்டு வெளியீடுகளாக! செய்வாயா தம்பி! நாள் அதிகம் இல்லை.

தம்பி! துவக்கத்திலே குறிப்பிட்டேனே,

நரகல் நடை
இழிமொழி
பழிச்சொல்

இவைகளை, நம்மை அழித்திட எண்ணுவோர் கூறிடும்போது கோபம் கொள்வதிலே, துளியும் பயன் இல்லை. சொல்லப் போனால், நாம் கோபமடைய வேண்டும், நம் குணம் கெட வேண்டும், பாதை தவற வேண்டும், பண்பு பாழாக வேண்டும், இலட்சியத்தை இழக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசுகிறார்கள். அதை அறிந்து, தம்பி! அந்தப் பேச்சுக்கள்பற்றிய கவலையை விட்டொழித்து, நாட்டுக்கு நாம் எடுத்துக் கூறவேண்டியது ஏராளம் இருக்கிறதே, அவைகளை எடுத்துச் சொல்வதற்குப் போதுமான நாட்கள்கூட இல்லையே என்பதை எண்ணி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில், சிறு சிறு பங்கு செலுத்த வேண்டும் என்ற தன்மையில், துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள், திரை ஓவியங்கள் என்பன போன்றவைகள் மூலம், காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்ட கேடுபாடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறு. தம்பி! பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நாட்கள் பறந்தோடிப் போகின்றன!

தம்பி! புள்ளினம் இசை எழுப்புகிறது, மெல்லிய இசை! என் அருகே படுத்துறங்கும், கவுன்சிலர் இராசகோபாலுடைய குரட்டைச் சத்தம், சுருதி இல்லாத சங்கீதமாக இருக்கிறது. வளை ஒலி! தொலைவில்! மாதர்கள், இல்லங்களைத் துப்புரவு ஆக்குகிறார்கள். பொழுது விடிகிறது, தம்பி! உதயசூரியன் எழுகிறான்! உலகுக்கு ஒளி கிடைக்க இருக்கிறது! இருள் கலைகிறது!!

நாடு ஒளிபெற உதயசூரியன்

***
நமது சின்னம் உதயசூரியன்

***
உழவுக்கும் தொழிலுக்கும் உயிரளிப்பது உதயசூரியன்

***
உலகு செழித்திட உதயசூரியன்

***
உறங்குவோரை எழுப்பிடுவது உதயசூரியன்

***
பசியும் பிணியும் பறக்கடிக்க உதயசூரியன்

***
பாருக்கெல்லாம் ஒரே விளக்கு உதயசூரியன்

***
உதயசூரியன் உமது சின்னம்

***
உதயசூரியன் எழுவது திண்ணம்

***
உலகு புகழும் இளங்கோவடிகள் வாழ்த்தியது உதயசூரியன்

***
உதயசூரியன் கிளம்பிவிட்டால்
உண்டோ இருளும் நாட்டில்? வீட்டில்?

தம்பி இப்படியெல்லாம், நீ நண்பர்களுடன், இனிய குரலெழுப்பித் தெருக்களிலே பாடிக்கொண்டு செல்வது போலவும், முதியோரும் வாலிபரும், ஆடவரும் ஆரணங்குகளும், முகமலர்ச்சியோடு, இசைகேட்டு மகிழ்வதுபோலவும், ஓர் காட்சி காண்கிறேன். நீ மனம் வைத்தால், நாடு காண முடியாதா, அந்தக் காட்சியை?

அண்ணன்,

19-11-61