அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (3)
1

திராவிடநாடு பிரச்சினை -
அரசினர் போக்கு -
தி. மு. க.மீது கணை

தம்பி!

சூடும் சுவையும் நிரம்பிய திராவிடநாடு பிரச்சினை குறித்துக் காங்கிரஸ் வட்டாரத்திலே கவனிப்பவர்கள், பல வகையினர்; ஒவ்வொரு வகையினர் ஒவ்வொரு முனையிலிருந்து பிரச்சினையைக் கவனிக்கிறார்கள் என்பதனைச் சென்றகிழமை எடுத்துக் காட்டியிருந்தேனே, நினைவிலிருக்கிறதல்லவா? ஒரே அடியாக அவர்கள் அனைவரும் நமது பிரச்சினைக்கு ஆதரவு தர முன்வரக் காணோமே என்று நான் கவலைப்படவுமில்லை, கலக்கமடையவுமில்லை. ஆர அமர யோசிக்காமல், உணர்ச்சி யால் மட்டும் உந்தப்பட்டு நம்முடன் உறவாடிவிட்டு, செச்சே! இப்போதல்லவா புரிகிறது, இது பொருளற்ற பிரச்சினை என்பது என்று கூறி ஓடிவிடுபவர்களைவிடப், பிரச்சினை புரிகிறவரையில் தயக்கம் காட்டுபவர்கள், தெளிவு ஏற்படுகிறவரையில் கேள்வி கேட்பவர்கள், விளக்கம் கிடைக்கிறவரையில் இசைவுதர மறுப்பவர்கள், ஆயிரம்மடங்கு மேல். குரலை உயர்த்தி உயர்த்திப் பேசினவர்கள், இன்னும் என்ன இவர்களிடம் பேச்சு! இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டியதுதான்! - என்று பரணி பாடினவர்கள், கொள்கையிலே உண்மையான பிடிப்பு இல்லாததால், எத்துணை வேகமாக வெளியேறிவிட்டார்கள் என்பதைத்தான் பார்த்துவிட்டாயே! ஆகவே, தயக்கம் காட்டுபவர்கள் மேல், தகதகவென ஆடிவிட்டு ஓடிவிடுபவர் களைவிட!! எனவே, காங்கிரஸ் வட்டாரத்திலே, நமது பிரச்சினைக்கு உடனடி ஆதரவு கிடைக்கவில்லையே என்பது எனக்குக் கலக்கத்தைத் தரவில்லை.

"நைடதம்'' எழுதிய அதிவீரராமபாண்டியனுடைய அண்ணியார், நூலின் தரம் எப்படி என்று கேட்கப்பட்டபோது சொன்னார்களாம், வேட்டை நாய் வீடு திரும்புவதுபோல இருக்கிறது என்று. வேட்டைக்குக் கிளம்பும்போது, வேகம் மிகுதியாக இருக்கும்; வெற்றி கிட்டினும் கிட்டாமற்போயினும், அலுத்து, களைத்து, சோர்ந்து வீடு திரும்பும் அல்லவா? அதுபோல, "நைடதம்'' எனும் நூல் முற்பகுதி மிக வேகமாக இருக்கிறது. பிற்பகுதியில் வேகம் இல்லை, மந்தமாக இருக்கிறது என்பதைக் கூறவே வேட்டை நாய் உவமையினைப் புலமைமிக்க அம்மையார் கூறினார்.

விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவோர்களும், தம்பி! தங்களிடம் உள்ள, திரட்டிக் காட்டக்கூடிய வேகம் அவ்வள வையும், துவக்கத்திலேயே கொட்டிக் காட்டிவிட்டு, நின்று நிதானமாக, நீண்ட காலம் நெருக்கடிகளை ஏற்று, தொண்டாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, வேகம் குன்றிப்போய், சோர்வு தட்டிப்போகும் நிலை அடைவார்களானால், அவர் களால் விடுதலை இயக்கத்துக்குப் பலன் இல்லை. ஆர்வம் மெள்ள மெள்ள வரலாம், தவறில்லை; தயக்கம் இருக்கலாம், தவறில்லை; வேகம் குறைவாக இருக்கலாம், தவறில்லை; ஆனால், தொண்டாற்றும் திறம் நீடித்து இருக்கவேண்டும், வெற்றி ஈட்டிடும்வரையில் தொண்டாற்றவேண்டும்; பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும்.

காகிதக் கப்பல், நொடியிலே தயாராகிவிடுகிறது. கொளுத்தி வைக்கும் "மத்தாப்பு' பளிச்சிட்டுக் காட்டுகிறது. விடுதலை இயக்கத்தில் தொண்டாற்ற, வேகம் வெடித்துக் கொண்டு வருவதுமட்டும் போதாது, காட்டுத்தீ போலன்றி, வீட்டு விளக்கு நிதானமாக, சீராக ஒளிவிட்டு இருளை அகற்றுவது போல, தொண்டு புரிதல்வேண்டும்.

ஓட்டப் பந்தயக்காரர்களிலே சிலர், துவக்கத்திலேயே குடல் தெரிக்க ஓட ஆரம்பித்து, பாதிப் பந்தயத்தின்போது, அதுவரை, வலிவை இழக்காமல் அதேபோது ஒரே அடியாகப் பின்தங்கிவிடாமல், ஒரு சீராக ஓடி வருபவர் வேகத்தை அதிக மாக்கிக்கொள்ளக் கண்டு, அந்த வேகத்துடன் போட்டியிடத் தக்க நிலையின்றி, களைத்துப்போவதனைக் கண்டிருக்கலாம்; விடுதலை இயக்கத்திலும், துவக்கத்திலே மிகுதியான வேகம் காட்டுவது இடையிலே கெடுதலை ஏற்படுத்துவதைக் கண்டிக் கிறோம். எனவே, காங்கிரசிலே உள்ளவர்கள், வேகமாக நம்முடன் வந்து சேர்ந்துவிடவில்லையே என்ற வருத்தம் எனக்கு எழவில்லை. அவர்கள் அனைவரும் சிந்திக்கிறார்கள் நமது பிரச்சினையைப்பற்றி, அது எனக்கு, இப்போதைக்குப் போதுமானதாகத் தெரிகிறது.

ஏசட்டும்.
எதிர்க்கட்டும்.
பழி பேசட்டும்.
பகை கொட்டட்டும்.
ஆர்ப்பரிக்கட்டும்.

எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யட்டும், பரவாயில்லை; அவைகளிலிருந்து தப்பிப் பிழைத்தால்தான் விடுதலை இயக்கம் என்பதற்கே மாண்பு ஏற்படும்; ஏளனமும் எதிர்ப்பும் அழிந்து விடுமானால், உண்மையான விடுதலை உணர்வு உண்டாக வில்லை என்று பொருள். எனவே, நமது விடுதலை உணர்வுக்கு எத்துணை வலிவு இருக்கிறது என்பதே, அதனிடம் காணப்படும், தாங்கிக்கொள்ளும் சக்தியின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. எனவேதான், காங்கிரஸ் வட்டாரத்தினர் நம்மைத் தாக்கும் போது எனக்கு எரிச்சல் ஏற்படுவதில்லை; அதுமட்டும் அல்ல; அவர்கள் நம்மைத் தாக்கத் தாக்கத்தான், நமது பிரச்சினையை அவர்கள் மிகக் கூர்மையாகக் கவனித்திருக்கிறார்கள், நமது பிச்சினை அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது புரிகிறது; அதிலே ஒரு மகிழ்ச்சியும் பிறக்கிறது.

காங்கிரசார்களிலே ஒரு சாரார்,

ஒரே அடியாகப் பிரிந்துபோய்விடுகிறோம் என்று கூறக்கூடாது. கோபம் கிளம்பும், எதிர்ப்பு ஏற்படும். ஆகவே, மெள்ள மெள்ளப் பக்குவமாக, "எங்களுக்கு அதிகாரம் அதிகம்வேண்டும், சலுகைகள் தரப்பட வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்தளிக்க வேண்டும்.'' என்று பேசிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும். ஒரே அடியாகப் பிரிந்துபோகவேண்டும் என்று கூறி வடநாட்டாரின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது; பல காரியங்கள் கெட்டுவிடும். என்று சொல்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்களிலே தகுதிமிக்க ஒருவர், என்னிடமேகூட இப்படிக் கூறினார்.

காலமறிந்து காரியமாற்றவேண்டும் என்பது இவர்தம் கொள்கை.

இன்று மத்திய சர்க்காரிடம் குவிந்துகிடக்கும் அதிகாரத் தையும், வடநாட்டுத் தலைவர்களிடம் உள்ள செல்வாக்கினையும் கண்டு, திகைத்துப்போய்க் கிடைக்கும் நிலையில், இவ்வளவு வல்லமையுள்ள வடநாட்டுத் தலைவர்களுடன் முட்டி மோதிக் கொள்வது ஆபத்தாக முடியுமே, என்ற அச்சம் இவர்களை இவ்விதம் நினைத்திட வைக்கிறது.

அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதனை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவது, அச்சம் பிடித்தாட்டும் நிலை, மனதில் உள்ளதை எடுத்துக்கூறக்கூட அச்சம்! இது மெள்ள மெள்ள, மிக நல்லவர்களைக்கூட, உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசவைக்கிறது. கீழ்மட்டத்தில் இப்போக்குக் காணப்பட்டால், நயவஞ்சகம் என்று கூறிவிடுகிறோம்; மேல் மட்டத்திலே இப்போக்கு இருக்கும்போது, அவ்விதம் கூறாமல், இராஜதந்திரம் என்று கூறிவிடுகிறோம்.

ஒரு நாள், சென்னை சட்டசபையிலே, இரும்புத் தொழிற்சாலை இங்கு அமைக்கப்படவேண்டும் என்பதற்காக வாதாடினேன். அமைச்சர்கள் வழக்கம்போல் மறுத்துப் பேசினர்; காங்கிரஸ் உறுப்பினர்கள், கட்சிப் பற்றுக் காரணமாக என்னைக் கண்டித்தனர்.

கவைக்குதவாப் பேச்சு.
கண்மூடித்தனம்.
கருத்தற்ற போக்கு.
இப்படிப் பல அர்ச்சனைகள்!!

பிற்பகல்; நண்பர் சிலருடன் ஒரு அமைச்சரைக் காணச் சென்றேன், அலுவலகத்தில், பொதுப் பிரச்சினை சம்பந்தமாக - அவரை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி - அழைத்திட சிறிதளவு தயக்கம் எனக்கு; காலையிலே, சட்டசபையிலே, மிகக் கண்டிப்பாக, அமைச்சர்களுக்குப் பிடிக்காத விஷயமாகப் பேசினோமே, அமைச்சர் அதற்காகக் கோபமாக இருப்பாரோ என்னவோ என்ற எண்ணம் எனக்கு. ஆனால் அமைச்சர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். நிலையை நான் காணவில்லை, மாறாக, மலர்ந்தமுகத்துடன் வரவேற்றார்; வரவேற்றதுடன், காலையிலே, அவர் என்னைக் மறுத்துப்பேச நேரிட்டதற்காக வருந்தினார்.

நீங்கள் பேசுகிறீர்கள் தாராளமாக; உரிமையுடன். எங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆனால் எங்கள் உள்ளத்திலே, அந்த எண்ணமெல்லாம் இல்லை என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் உங்களைப்போலவே பேசுவதற்கு இல்லை. எங்கள் நிலை அப்படி. என்று கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் வலிவுடன் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் தமது குரலுக்கு டில்லியில் ஓரளவு மதிப்பு ஏற்படும் என்பது இவர்களின் உள்நோக்கம்.

தி. மு. கழகம் இந்த முறையில் எதிர்ப்புக் காட்டியபடி இருக்கவேண்டும். நாம், வடநாடு - தென்னாடு என்ற பேதம் கூடாது என்று பேசியபடி, ஒத்துழைப்புத் தந்து கூடிக் குலவி, கூடுமானவரையில், நமது நாட்டுக்குத் தேவையான சலுகை களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது, இவர்களின் திட்டம்.

கிட்டத்தட்ட இவர்களின் போக்கு, வெள்ளையர் காலத்திலே இங்கு ஜஸ்டிஸ் கட்சியினர் கொண்டிருந்த போக்குப் போன்றது. காங்கிரஸ் இயக்கம் வெள்ளை ஏகாதிபத்தியத்தை மிகப் பலமாகத் தாக்கியும், மறியல், சட்டமறுப்பு, வரிகொடா இயக்கம்போன்ற கிளர்ச்சிகளை நடத்தியும் வந்தபோது, இவ்விதம் எதிர்ப்பது பலன் தராது, எதிர்க்க எதிர்க்க வெள்ளையர் களுக்கு நம்மீது வெறுப்புத்தான் வளரும், வெறுப்பு வளர்ந்தால், நாட்டைச் சீராக்கும் முயற்சியே செய்யமாட்டார்கள். எக்கேடோ கெட்டுப்போகட்டும் நமக்கென்ன, சுரண்டின வரையில் இலாபம் என்ற போக்கிலே இருந்து விடுவார்கள்; எனவே நாம் பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து, அரசாங்க நிர்வாகத்திலே பங்கேற்று, பக்குவமாக நடந்து, படிப்படியாக அதிகாரத்தைப் பெற்று, வலிவும் பொலிவும்பெற்று, சுயராஜ்யத்துக்குத் தகுதி உள்ளவர்களாகிவிடவேண்டும் என்று கூறினர். பலர் இதே நோக்குடன் நடந்துகொண்டனர்.

அன்று ஜஸ்டிஸ் கட்சி மேற்கொண்ட முறைபோன்ற தாகவே, இன்று தமிழகக் காங்கிரசார் மேற்கொண்டுள்ள போக்குக் காணப்படுகிறது.

குலாம்கள்
அடிமைகள்
பதவிப் பித்தர்கள்
தாசர்கள் பூட்ஸ் துடைப்பவர்கள்
வால் பிடிப்பவர்கள்

என்றெல்லாம், அந்த நாட்களில் ஒத்துழைத்து உரிமைபெற வேண்டும் என்று கூறிய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைக் கண்டித்தனர், காங்கிரஸ் தலைவர்கள்.

அதேபோல, இன்று அதேவிதமான போக்குடன் நடந்து கொள்ளும் தமிழகக் காங்கிரசாரை, திராவிட விடுதலை இயக்கத்தினர் கண்டிக்கவேண்டும் என்பதற்காக இதனைக் கூறவில்லை. காங்கிரசிலே ஒருவகையினருடைய போக்கு எவ்விதம் இருக்கிறது என்பதை விளக்கவே இதனைக் கூறினேன்.

ஒத்துழைத்து உரிமைபெறவேண்டும் - உறவாடி உயர்வு பெறவேண்டும் - பக்குவமாகப்பேசி காரியமாற்றிடவேண்டும் - என்ற போக்குடைய காங்கிரஸ் நண்பர் ஒருவர், முதலிலே,

துணிவைப் பாராட்டுகிறேன்
வெளிப்படையாகப் பேசவேண்டியதுதான்

என்றெல்லாம் பாராட்டினார். ஆனால் அவர் சென்ற கிழமை என்னிடம் வந்து, மிகக் கவலையுடன்

என்ன இருந்தாலும் இராஜ்யசபையிலே நீங்கள் இவ்வளவு பச்சையாக, திராவிடநாடு பற்றிப் பேசியிருக்கக் கூடாது. . . .

என்று சொன்னது கேட்டு நான் திடுக்கிட்டுப் போகவில்லை, காரணம் எனக்குப் புரிந்ததால். அவரே மேற்கொண்டு விளக்கம் அளித்தார்.

தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் கிளப்பினாலே, அங்கு கொதிப்படைந்து, வடக்கு - தெற்கு என்று பேதம் காட்டிப் பேசுவது அற்பத்தனம், அக்ரமம். இதை அனுமதிக்கமாட்டோம் என்று ஆர்ப்பரிப்பார்கள்.

மத்திய சர்க்காருக்கு அதிகாரம் மிக அதிகம் இராஜ்ய சர்க்கார், கேவலம், நகராட்சிபோல ஆக்கப்பட் டிருக்கிறது. எங்கள் மந்திரிகள் எதற்கும் டில்லிக்குக் காவடி தூக்கிக்கொண்டு வரவேண்டி இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்; இராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்று வாதாடினாலே, வடக்கே உள்ளவர்களுக்கு ஆத்திரம் பிறக்கும், ஆஹா! நேரு சர்க்காரையா குறை கூறுகிறாய் என்று பதிலடி கொடுப்பார்கள்.

இந்தி மொழியைத் திணிக்காதீர்கள், தாய்மொழி அழிந்துவிடும். மொழி ஆதிக்கம் நல்லது அல்ல, தென்னகம் அதனை எதிர்த்தே தீரும். இந்தி ஏகாதி பத்தியத்தை சகித்துக்கொள்ளமாட்டார்கள், எமது மக்கள் என்று பேசினால்போதும், தீமிதித்தவர்போலாகி வட நாட்டுத் தலைவர்கள் பகை கக்குவர்.

அப்படிப்பட்ட இடத்துக்குப் போய், நீ ஒரே அடியாக. நான் திராவிடன் - எங்கள் நாடு திராவிடநாடு - எங்கள் பண்பாடு தனியானது - நாங்கள் தனியாக வாழ்ந்திட விரும்புகிறோம் - தனிநாடு தேவை - தனி அரசு தேவை என்று பேசிவிட்டாய். இது கேட்டு அவர்கள் எப்படிச் சும்மா இருக்க முடியும்? ஆத்திரம் அவர்களுக்கு; "இவ்வளவு பெரிய எண்ணிக்கை பலத்துடன் நாம் இருக்கிறோம்; ஈடு எதிர்ப்பற்ற நிலையிலே அரசோச்சு கிறோம்; நம் எதிரில், இந்தத் தி. மு. கழகத்தான் வந்து நின்றுகொண்டு, துளியும் அச்சமின்றி, நமது அதிகாரத் தைத் துச்சமென்று எண்ணிக்கொண்டு, இதுவரையில் இங்கு ஒருவரும் பேசாததைத் துணிச்சலாகப் பேசுகிறான்; நாமென்ன மரக்கட்டைகளா? நம்மை வம்புக்கு இழுப்பது போல, அறைகூவி அழைப்பதுபோல, ஒரு ஆள் வந்து பேசுவதா? அதை நாம் அனுமதிப்பதா? ஜின்னாவுக்குப் பிறகு - நாட்டுப் பிரிவினைபற்றி, தில்லியில் அரச அவையிலே பேச்சுக் கிளப்பப்பட்டிருக்கிறதே! இதை எப்படி நாம் பொறுத்துக்கொள்ள முடியும்? விடக் கூடாது. அனுமதிக்கக்கூடாது. அழித்துவிடவேண்டும்' என்றெல்லாம்தானே அவர்களுக்குத் தோன்றும். கோபம் கொதிக்காதா? அந்தக் கோபத்தின் காரணமாக, அவர்கள் எதையும் செய்யலாமே. அதிகாரம் அவர்களிடம் அவ்வளவு இருக்கிறதே, நாடு அவர்களிடம். படை அவர்கள் சொல் கேட்க. இவைகளைப்பற்றி எண்ணிப் பார்க்காமல், நீ பேசிவிட்டு வந்துவிட்டாய். பார் இப்போது அதனால் ஏற்படும் விளைவுகளை. உனக்கும் உன் கழகத்துக்கும்தானே கெடுதல் இதனால். நடமாடவிட மாட்டார்களே இனிமேல். பக்குவமாகப் பேசிவிட்டு வந்திருந்தாலாவது, "பொருளாதார வளர்ச்சிவேண்டும், மேலும் சிறிது அதிகாரம்வேண்டும், மொழி உரிமை வேண்டும்' என்று வற்புறுத்திக்கொண்டு வரலாம்; இப்போது இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையிலே தள்ளி விடுவார்கள்போலிருக்கிறதே; கழகமே தடைசெய்யப் படுமாமே! இந்த விபரீதம் ஏற்படக் காரணம் உன்னுடைய பேச்சுத்தானே! அப்படியா பேசுவது, ஒரே அடியாக. திராவிடன், திராவிடநாடு, தனிநாடு என்றெல்லாம் ரொம்ப ஆசைப்பட்டுவிட்டாய். ஆர்வத்தை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை.

இவ்விதமாக அந்த நண்பர் பேசிவிட்டு, மேஜைமீது ஒரு நாளிதழை வீசி எறிந்தார்.

தி. மு. க. மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

தமிழக அமைச்சருக்கு டில்லி அவசர அழைப்பு

மதுரை, ஜூன் 1

திராவிடநாடு பிரிவினையை வலியுறுத்திக்கொண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது நடவடிக்கை எடுப்பது முடிவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக முதல் அமைச்சர் திரு. கே. காமராசர் நாளை புதுடில்லியில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டில் கலந்துகொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது எந்தவித நடவடிக்கை எடுப்பது என்பதைபற்றி அம்மாநாட்டில் வெளியிடுவார். பிரிவினையை வலியுறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் நண்பர், நாளிதழில் காணப்பட்ட செய்தியால், பதறிப்போய்ப் பேசினார். எல்லா இதழ்களுமே, இதுபோலச் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஊரெங்கும் இதே பேச்சுத் தான். இவ்வளவு கூறுவானேன், தம்பி! நானே, சென்றகிழமை அரசியல் இருந்த நிலைமைகளைக் கண்டபோது, இந்த கிழமை உனக்கு மடல் தீட்ட இயலுமா என்பதுபற்றி ஐயப்பாடு கொண்டிருந்தேன்.

மங்களம் பாடப்போகிறார்கள், தெரியுமா!

மாட்டிக்கொண்டார்கள் பயல்கள், வசமாக!

கண்மண் தெரியாமல் ஆடினார்களே, இனி, கப்சிப் வாயைத் திறக்கக்கூடாது, தெரியுமா. . . .

ஒழிந்துபோகட்டுமய்யா, ஊரிலே ஒரே அமளி இதுகளால். . . . .

நம்மை யார் என்ன செய்ய முடியும் என்று மண்டைக் கர்வம், இதுகளுக்கு. சட்டம் எத்தனை நாளைக்குத்தான் சகித்துக் கொள்ளும், இப்போது, கொட்டப்போகிறது; பயல்கள் இனிப் பெட்டிப் பாம்புதான்.

கழகத்தைத் தடை செய்துவிடத்தான் போகிறார்கள்.

பிரிவினைப் பேச்சுப் பேசினால், பிடித்துப்போடு வார்கள் சிறையில், ஐந்து வருஷம் ஆறு வருஷம்.

நாட்டைப் பிரிக்கச் சொல்வது இராஜத் துவேஷக் குற்றம் இனி; தெரியுமா? இராஜத்துவேஷக் குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா? நாடு கடத்தலாம்! ஆயுள் தண்டனை தரலாம்! சுட்டுக் கொல்லலாம், பலாத்காரம் தலைதூக்கினால். முடிந்ததா இதுகளோட கதை ஒழியட்டும்!

அவன் கெட்டிக்காரன்யா, இப்படி வரப்போவது தெரிந்துதான். சாமர்த்தியமாக இதுகளைவிட்டுப் போயேவிட்டான். . .

பிரிவினைகூடாது என்று பேசவும் ஆரம்பிச்சாச்சி. . .

தம்பி! ஊரார் உரையாடல் இவைபோல; தெரியுமே உனக்கு.

கணக்கே போட ஆரம்பித்தார்கள், அவசரக்காரர்கள் - எவ்வளவு பேர் பிடிபடுவார்கள் என்பதுபற்றி.

கழகத் தோழர்களுக்குள் பேச்சே இது குறித்துத்தான் - நமக்கு எப்போது அழைப்பு வரும் என்பது பற்றி, ஆர்வத்துடன்.

நாடு பிரியும் பேச்சு இவர்கள் பேசினால், மற்றவர்களுக்கு என்னவாம்? இவர்கள் மக்களிடம் பேசட்டுமே, நாடு பிரியக் கூடாது என்று. அதை விட்டுவிட்டு, நாட்டுப் பிரிவினைபற்றிய பேச்சேகூடாதே - சட்டவிரோதம் - தடை போடுவோம் - என்றா மிரட்டுவது? இதுதான் சுயராஜ்யமா? இதுதான் பேச்சு உரிமையா?

நாட்டுப் பிரிவினைபற்றி தி. மு. கழகம் பேசப்பேச அதைக் கேட்டு, மக்கள் மனம் கெட்டுப்போகிறதாம், பிரிவினை மனப் பான்மை வளருகிறதாம், பிளவு சக்தி வளருகிறதாம்; அதனால் தான் பிரிவினைப்பற்றிப் பேசக்கூடாது, அதற்காக ஒரு கழகம் இருக்கக்கூடாது என்று தடைசெய்யப் போகிறார்கள்; சட்டம் போடப் போகிறார்கள்.