அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (3)
2

தி. மு. க. நாட்டுப் பிரிவினைப்பற்றிப் பேசினால், ஆட்சியிலே இருக்கிற காங்கிரசார் நாட்டு ஒற்றுமைபற்றிப் பேசட்டும்; அவர்கள் பேச்சை மக்கள் கேட்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதுதானே! ஏன் அதிலே காங்கிர சாருக்கு நம்பிக்கையும் தைரியமும் இல்லை. சட்டத்தைத் துணைக்கு அழைத்து, தடை போடுவது என்றால், இவர்கள், தங்களைக் கையாலாகாதவர்கள் என்று உலகுக்கு அறிவித்து விட்டதாகத்தானே பொருள் ஏற்படும்.

இவ்விதமாகப் பேசத் தலைப்பட்டனர் பலர், தமிழகமெங்கணும்.

தம்பி! நான் கண்டு பெருமிதம்கொண்டேன் - மாநாட்டுக்கு நான் குறிப்பிட்டானதும், கழகத் தோழர்கள் அதற்குச் செல்வதற்கான வழிவகை பற்றிப் பேசிக்கொண்டுப் புறப்பட முயற்சி எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தோடும் இருப்பார் களே - அதுபோன்ற எழுச்சியுடன், நமது தோழர்கள் தடை வரும் மீறிடவேண்டும்; சிறை என்பார்கள், சரி என்று செப்பிட வேண்டும் என்று பேசி மகிழ்ந்திருந்ததை.

இதற்கு முன்பும் பலமுறை தடைபோடப்படும் - கழகம் கலைக்கப்படும் - என்ற பேச்சுக் கிளம்பியதுண்டு. என்றாலும், இம்முறை, திட்டவட்டமான அறிவிப்பு என்ற விதமாக, இந்தப் பிரச்சினை கிளம்பிற்று, இதழ்களிலும், வானொலியிலும், தேசிய ஒருமைப்பாடு மாநாடு கூடுவதே தி. மு. கழகத்தைத் தடை செய்யத்தான் என்று அறிவிக்கப்பட்டது.

எனக்கு அப்போதே தெரியும்.

என்று கூறித் தலை அசைத்தனர், அரசியல் அனுபவத்தைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பேசிடும் அருங்கலைவாணர்கள்.

பதினைந்து ஐம்பதாகிவிட்டதே என்று பயந்தீர்களே! ஐம்பது நூறு ஆகுமோ நூற்று ஐம்பது ஆகுமோ என்று எண்ணி ஆயாசப்பட்டீர்களே, பார்த்தீர்களா? பலூன் வெடிக்கப் போகிறதே, தெரியுமா?

என்று பேசிக் கேலி செய்தனர், நமது வளர்ச்சி கண்டு மனம் பொறாதார்.

இங்கும் சரி, அல்லது தில்லி வட்டாரத்திலேயும் சரி, ஒரு காங்கிரஸ் தலைவர்கூட, "அப்படி ஒன்றும் இல்லை, தடை போடப்போவது இல்லை' என்று அறிவிக்கவில்லை. ஊரெங்கும் ஒரே கொதிப்பு.

என்றைக்காவது ஓர் நாள் இது வந்துதீரவேண்டிய நிலைமை - எதிர்பார்க்காமலிருப்பவன் ஏமாளி - ஆனால் சதா அதனையே எதிர்பார்த்துக் குழம்பிக்கிடப்பவன், கோழை! நாம், நாமாக ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியத்துக்காக, என்ன விதமான கஷ்ட நஷ்டம் ஏற்கவும் உறுதிகொண்டால்தான், ஊரிலே பெரிய புள்ளிகள் என்றும், அரசியலிலே "ஜாம்ப வான்கள்' என்றும், அகிலம் சுற்றிய அறிவாளர் என்றும், ஆட்டிப்படைத்திடும் ஆற்றல்மிக்கோன் என்றும் விருதுகள் பல பெற்றவர்கள், நம்முடன் இல்லை, நம் பிரச்சினையை ஆதரிக்க முன்வரவில்லை என்று மிக நன்றாகத் தெரிந்திருந்தும், உள்ள இதழ்கள் அவ்வளவும், நம்மைக் கண்டிப்பதைக் கடமையாகவும், தூற்றுவதைத் தொண்டு ஆகவும், கேலி செய்வதைக் கலை யாகவும்கொண்டு இயங்கி வருகின்றன என்பதை அறிந்திருந்தும், நமது இரத்தம் சிந்தப்பட்டால், கண்ணீர் சிந்தவாவது இவர்கள் முன்வருவார்களா என்பதுபற்றிய கவலையுமற்று, நாம் ஏற்றுக்கொண்டிருக்கிற இலட்சியத்தின் பளுவை நாம்தான் தாங்கியாகவேண்டும்; ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம்தான் ஈடுகொடுத்தாகவேண்டும், இலட்சக்கணக்கானவர்களோ, ஆயிரக் கணக்கிலோ அல்லது நூற்றுக்கணக்கிலோ, எந்த அளவில் நம்முடன் பயணம் நடாத்துபவர் கிடைக்கின்றனரோ, அது பற்றியும் கவலைகொள்ளாமல், நம்மை நாம் ஒரு இலட்சியத்துக்கு ஒப்படைத்துவிட்டோம் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். பேச்சால், எழுத்தால், பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டால், அடக்குமுறைகொண்டு நாம் தாக்கப்பட்டால், நமது செந்நீரும் நமக்காகச் சிந்தப்படும் கண்ணீரும், நமது பேச்சு, எழுத்து ஆகியவற்றினைவிட வல்லமைமிக்கதாகி, இலட்சிய வெற்றிக்கு வழிகோலும் என்ற திடமான நம்பிக்கையுடன் இருந்து வருகிறோம்.

உள்ளபடி சொல்கிறேன் தம்பி! நமது கழகத்தைத் தடை செய்யப் போகிறார்கள் என்று பேச்சுக் கிளம்பியபோது எனக்குத் திகிலோ, கோபமோ எழவில்லை. விடுதலை இயக்கத்திலே காண வேண்டிய பல கட்டங்களிலே மிகமுக்கியமான, எழுச்சிமிக்க கட்டத்தைக் காணப்போகிறோம் என்ற தெம்பும், இராஜ்ய சபையிலே பேசினோம் அது பத்தோடு பதினொன்றாகி விடாமல், பரபரப்புக்குரியதாக மட்டுமல்ல, ஆளுங்கட்சியினர் ஆர்ப்பரித்து எழுந்து அடக்குமுறையை அவிழ்த்துவிட்டாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது ஆகிவிடுகிறது என்பதிலே பெருமிதமும்கொண்டேன்.

ஒழித்துக்கட்டிவிடப்போகிறோம், இந்தப் பொதுத் தேர்தலில் என்று காங்கிரஸ் கட்சி தி. மு. கழகத்தை மிரட்டிற்று. பொதுமக்களோ 34 இலட்சம் வாக்குகளைக் கொடுத்து 50 சட்டமன்ற இடங்களையும், 7 பாராளுமன்ற இடங்களையும் தந்தனர்.

பாராளுமன்றத்திலே, தி. மு. கழகத்தார் நாட்டுப் பிரிவினைபற்றிப் பேசலாயினர்.

அதனால் பெருத்த பரபரப்பு ஏற்பட்டது.

இனி தி. மு. கழகப் பிரச்சாரத்தை மறுத்துப்பேசி வெற்றி பெறமுடியாது என்ற திகில்கொண்ட காங்கிரஸ் கட்சி, தி. மு. கழகத்தைச் சட்டவிரோதமானது என்று தடைசெய்து, தி. மு. கழகத் தோழர்களைச் சிறையில் அடைத்தது.

இப்படி, நம்முடைய பிள்ளைகள் வரலாறு படிக்கத்தானே வேண்டிவரும் - இந்தக் கட்டம் இல்லையேல், விடுதலை பெறுவது ஏது?

எனவேதான், இந்தக் கட்டம் இவ்வளவு விரைவாக வருகிறதே என்பதனை எண்ணி நான் மகிழ்ச்சியுற்றேன். ஆனால், தி. மு. கழகம் இருப்பதனால்தான், ஒரு நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தாரில் எழுவருக்கு தில்லி மந்திரி சபையிலே இடம் கிடைத்தது, மேலும் பலசலுகைகள் கிடைக்க வழி இருக்கிறது என்பதனால் உற்சாகம்கொண்ட காங்கிரஸ் நண்பர், கழகம் தடைசெய்யப்பட்டால் நட்டம் கழகத்துக்கு அல்ல, தமிழகக் காங்கிரசுக்குத்தான் என்பதனை உணர்ந்து, "ஐயோ! தடைசெய்யப் போகிறார்களாமே! ஏன் அவ்வளவு சூடாகப் பேசினீர்?' என்று என்னைக் கேட்டார்! சூடு சுவையும் தருகிறது என்பது நமக்குத் தெரிந்த அளவுக்கு அவருக்குத் தெரியாததல்லவா?

வேலையற்றதுகள்
வெட்டிப்பேச்சுக்காரர்கள்
தீய சக்திகள்
ஒருசிறு கும்பல்

என்று, மிகப்பெரிய ஆணவத்தைத் துணைகொண்டு, காங்கிரஸ் தலைவர்களும், அவர்களின் தயவை நாடிப் பிழைத்துக் கிடக்கும் பேர்வழிகளும், நம்மைப்பற்றிப் பேசுவது வாடிக்கை.

உங்க அண்ணாதுரைக்கு, அரசியல் தெரியுமா? என்று ஒருவர் கேட்பார்!

படித்தால்மட்டும் போதுமா? என்று இன்னொருவர் கேட்பார். வரலாறு தெரியுமா, பூகோளம் தெரியுமா, இலக்கியம் தெரியுமா, இலக்கணம் தெரியுமா? என்று கேட்பார் மற்றொருவர்.

கலை தெரியுமா? என்று கதைப்பார் ஒருவர்; கதை எழுதிப் பிழைப்பவர்கள் என்று குத்திக்காட்டுவார் இன்னொருவர்.

தியாகம் செய்திட முடியுமா? என்று கடாவுவார் ஒருவர், தீரம் உண்டா வீரம் உண்டா என்று தீப்பொறி கிளப்புவார் இன்னொருவர்.

இப்படிப்பட்டவர்களெல்லாம் அரசியலில் இருக்க லாமா என்று இடித்துக் கேட்பார் ஒருவர்; இதுகளின் பேச்சை யார் மதிக்கிறார்கள் என்று வியப்பு வெளியிடு வோர் வேறொருவர். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல, ஒருவர் கேட்பார், இங்கே நாலுபேர் பேசித் திரிகிறார்களே தவிர, ஆந்திரத்திலே, கேரளத்திலே, கர்னாடகத்திலே, ஒரு ஆள் உண்டா இதுகளை ஆதரிக்க என்று கேட்பார். இவர் திங்கட்கிழமை திருவனந்தபுரத்தில் பேசிவிட்டுச் செவ்வாய்க்கிழமை காகிநாடா, புதன்கிழமை பெல்காம், வியாழக்கிழமை விசாகப்பட்டினம், வெள்ளிக் கிழமை கள்ளிக்கோட்டை, சனிக்கிழமை சாத்தூர், ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் என்று இந்தப்படி சுழல் வேக சூறாவளிப் பயணம் நடத்தி, அறிவை வாரி வழங்கிக் கொண்டு இருப்பவர்போன்ற "தொனி' கிளப்பி.

தம்பி! இவ்வளவுதான் இவர்கள் நமது கழகத்தைப்பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு. எனினும் கவனித்தனையா, இந்நிலை தான் நமது கழகத்தது என்று, "இத்தனை பெரியவர்கள்' சொன்ன பிறகும், கழகம் அகில இந்திய அரசியலிலே ஒரு கேள்விக் குறியாகிவிட்டது! இந்திய துணைக்கண்டத்தில் உள்ள இதழ்கள் யாவும், அலசிக் காட்டிடவேண்டியதோர் பிரச்சினையாகி விட்டது. ஆளுங்கட்சி மட்டுமேயன்றி, நாட்டில் உள்ள கட்சிகள் பலவும் ஆராயவேண்டிய பிரச்சினையாகிவிட்டது. அது மட்டுமா? கழகம் வளராதிருக்க, பிரிவினைப் பேச்சு வளராம லிருக்க என்ன செய்யலாம்? தேசிய ஒருமைப்பாடு எப்படி ஏற்படுத்துவது? என்பதனை ஆய்ந்தறிந்து வழிவகை காண அகில இந்திய அடிப்படையிலே ஒரு பெரிய முயற்சி செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. முப்பத்து ஏழு பேர் களாமே, ஆய்ந்தறிந்து வழிமுறை கூற, தேசிய ஒருமைப்பாடு மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த பேரறிவாளர்கள்!! அவ்வளவு "மூளைபலம்' - "கூட்டுபலம்' - தேவைப்படுகிறது, வெட்டிப் பேச்சுக்காரர்களாமே கழகத்தார், அவர்களின் போக்கினால் ஏற்பட்டுவிட்ட விளைவுகளைச் சமாளிக்க, வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

மதுரையிலே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றபோதாகிலும், முதலமைச்சர் காமராசர் சற்று முடுக்காக, "தி. மு. கழகம்பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்'' என்று பேசினார். இம்முறை, கழகத்தைத் தடைசெய்யப்போகிறது இந்தியப் பேரரசு என்றதும், பழைய முடுக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. தில்லி சென்றார், உத்தரவு என்ன என்று கேட்டு அதன்படி நடந்திட.

கசப்பாலும் குரோதத்தாலும் பொறாமையாலும் பொச்சரிப்பாலும், சிலருக்கு இயல்பாகிவிட்ட இழிகுணத் தாலும், தி. மு. கழகத்தைப்பற்றி மிகக்கேவலமாகப் பேசுகின்றனர் என்றாலும், இன்றைய அரசியலில், கவனித்துத் தீரவேண்டிய, சிக்கல்மிக்க, சங்கடம் மிகுந்த, பெரிய பிரச்சினையாகிவிட்டிருக் கிறது தி. மு. கழகம் என்ற பேருண்மையை, எவரும் மறைத்திட முடியாது, தம்பி! இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையை உருவாக்கியதிலே, உனக்கும் எனக்கும் ஓரளவு பங்கு இருக்கிறது என்பது எண்ணி மகிழத்தக்கது, உரிமையுடன் பெருமிதம் கொள்ளத்தக்கதாகும்.

ஒன்று கூறுகிறேன், தம்பி! ஒரு சிலர் கருதுகிறார்கள், தி. மு. கழகத்தார் தெளிவாகப் பேசுவார்கள் தீரமாக நடக்க மாட்டார்கள் என்று. மக்களின் மனதில் பதியும்படியாகப் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார்கள், ஆனால், உடலிலே தியாகத் தழும்பு ஏற்கத் துணியமாட்டார்கள். கண்டனக் கூட்டம் நடத்துவார்கள், காரிருள்கொண்ட சிறையில் அடைபட்டுக் கிடக்கமாட்டார்கள் என்று சிலர் கருதுகிறார்கள். இவர்கள் பிறக்கும்போதே வீரவாளுடன் பிறந்ததுபோலவும் நாம் கைவளையுடன் பிறந்ததுபோலவும் எண்ணிக்கொண்டு பேசுகின்றனர். பகை உணர்ச்சி காரணமாக இவர்கள் இதுபோலப் பேசுகின்றனர் என்றாலும், தம்பி இந்தத் தவறான எண்ணம் தகர்ந்துபோகத் தக்கதோர் நிலை விரைவில் ஏற்படவேண்டும் என்று, நான் மெத்தவும் விரும்புகிறேன். ஏளனம் பேசும் இவர்கட்காக அல்ல, ஏத்தித் தொழுதனவெல்லாம் ஏளனம் பேசும்போது கேட்டுச் சிரிப்பதல்லால், வேறு ஏதும் தோன்றவில்லை - நான் கூறுவது இத்திறத்தினர் பொருட்டல்ல. நாம், திராவிடநாடு தனிநாடு ஆதல்வேண்டும் என்பதற்காக, எந்த விலையும் கொடுக்க, எதனையும் இழக்க, எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கச் சித்தமாகிவிட்டோம் என்பதனை, உலகு உணரவேண்டும்! அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட இருக்கிறது என்று கேள்விப்பட்டபோது, நான் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டிருந்தேன். நமது நோக்கத்தின் தூய்மையை, கொள்கையில் உள்ள உறுதியை, மாற்றாரும் உணரத்தக்க விதத்தில், நாம், அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று எண்ணினேன். நாம் பேசுவதைக் கேசெய் திடலாம் - நம்மை அடக்குமுறை தாக்கிடும்போது, நமது குருதி கொட்டப்படுவது கண்டேனும், நமது கொள்கையை ஏற்றுக்கொள்ளக்கூடவேண்டாம், நமது உள்ளத் தூய்மையை, உறுதியை உணர்ந்துகொள்வார்களல்லவா, அது போதும் என்று, நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

தியாகத்துக்குத் தயாராக இருக்கிறோம், இருக்கிறோம் என்று எத்தனைமுறை முழக்கமிட்டு என்ன பலன்? நம்மிலே பலர் அடக்குமுறையின் கோரப் பற்களுக்கு இடையிலே சிக்கிப் பிய்த்தெறியப்படுவதை, நம்மை நம்ப மறுக்கும் நல்லவர்கள் கண்குளிரக் காணவேண்டும்.

நாடு கடத்தினார்கள்.
நையப் புடைத்தார்கள்.
பத்தாண்டு சிறைத் தண்டனை.
சுட்டுக் கொல்ல உத்தரவு.

என்பன போன்றவைகள், நம்மை அடக்க, அச்சத்தால் பீடிக்கப் பட்ட ஆட்சி மேற்கொண்டு தீரவேண்டிய முறைகளாகும்.

நறுக்கி எடுத்து, கொதிக்கும் நீரில் வேகவைத்து, சுவை கூட்டியான பிறகே, பச்சைக் காய்கறி பண்ட மாகிறது, உண்டு மகிழ.

மரண வாயிலில் போய்ப் போய் வந்தபிறகே, தாய் பிள்ளைப்பேறு காண்கிறாள்.

கீழ்மண் மேலாக உழுது கிளறியபிறகே, போட்டது முளைக்கிறது.

கடைந்தால்தான் மோரிலிருந்து வெண்ணெய் கிடைக்கிறது.

விடுதலை மட்டும் என்ன, வாய்ப்பந்தலிட்டு, வார்த்தைக் கொடி படரச்செய்து, பறித்தெடுத்திடும் காயோ? இல்லை, தம்பி, இல்லை. நாடு விடுபட நானிலமதனில் கொட்டப்பட்ட இரத்தம், வெள்ளம் என்னலாம். கொய்தனர் தலையினை! கொளுத்தினர் உயிருடன்! இடித்தனர் மனைகளை! ஒடித்தனர் கரங்களை! பறித்தனர் கண்களை! - என்றெல்லாம் படிக்கிறோம், நாடு மீட்ட வீரர் நடாத்திய கிளர்ச்சிக் காதைகளில்.

ஏடா! மூடா! நாடாவேண்டும், உனக்கு? நத்திப் பிழைத்துக் கிடந்திடவேண்டியவன், பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்று பிதற்றித் திரிகிறாயாமே! கற்றது அது. அதனால், வல்லமை மிக்க எமது ஆட்சியை மாற்றிடவில்லையோ?

என்று கேட்டிடும் மமதையாளன் முன் மண்டியிட மறுத்து, வெட்டுண்டு கீழே சாய்ந்த வீரர் எத்தனை பேர்!!

தாயகத்தின் தளைகளை நொறுக்கிடவேண்டும் என்றா கூறினான் இத்தருக்கன்? நொறுக்கிடு இவன் மண்டையை!! நாய் நரி பொறுக்கித் தின்னட்டும் பிணத்தை!! - என்று கொக்கரித்த கொடுங்கோலர்களின் வாளுக்குப் பலியானோர் எத்தனை எத்தனையோ பேர்கள்.

"எனக்கென்று ஓர் வீடு உண்டு - இன்றோ அது வெறும் மண்மேடு! காதலித்துனை மணந்தாள் கட்டழகி - அவள் கண்ட துண்டமாக்கப்பட்டாள், கற்பினை இழந்திட மறுத்ததால். ஒரே மகன்! ஓயாச் சிரிப்புக்காரன்! யானையின் காலிலிட்டுக் கொன்றனர் அவனை - என் மகன் என்பதால் - என் மொழி பேசியதால். இவைகளை எண்ணும்போது, நெஞ்சு வெடித்து விடும்போலிருக்கிறது. ஆனால், எனக்கென்று ஒரு நாடு உண்டு - அதிலே ஆதிக்கம் செலுத்துவது வேற்று நாட்டான் - அதை நீக்க வகையற்றுக் கிடக்கிக்கிறேன் நெடுந்தொலைவில், இதனை எண்ணிடும்போதுதான் வேதனையும் வெட்கமும் வேலாகி இதயத்தில் பாய்கிறது. வீடற்றுக் கிடக்கலாம், நாடற்றுக் கிடப்பதா? சாவே, வா!'' - என்று கத்தும் கடல் நடுவே தீவினிலே சிறையினிலே கதறிய வீரர்களின் தொகை குறைவோ?

தம்பி! வரலாற்று ஏடுகளைக்கூட விடு, பிறகு பார்த்திடு வோம். கொடிகாத்த குமரன் அடிபட்டு மாண்டது அறியாயோ? செக்கிழுத்த சிதம்பரனார், வேறு நாடோ? இவை தமை அறிந்துள்ள நாம், உள்ளத் தூய்மையுடன் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு இலட்சியத்துக்காக, எப்போது காணிக்கை செலுத்துவது, எவ்விதமான காணிக்கை? விடுதலை அதனைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

"காணிக்கை' செலுத்தும் காலம் வந்துவிட்டது என்று காத்துக்கிடந்த நமது எண்ணத்திலே, மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர், நம்மைத் தடைசெய்யக் கூடிய தகுதி மிக்கோர், ஏனோ? விளங்கவில்லை.

பொதுத்தேர்தல் முடிந்தது, காங்கிரஸ் போட்ட கணக்குப் பொய்த்துப்போய்விட்டது.

ஐம்பதின்மர் சட்டசபையில் - எழுவர் பாராளுமன்றத்தில்.

இராஜ்யசபையில் பேசும் வாய்ப்பு, முதல் பேச்சு முழு மூச்சுடன் எதிர்ப்பு. அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கழகத் தோழர்கள் இரத்தக் காணிக்கை செலுத்தினர். . . .

இம்முறையில் மின்னல் வேகத்தில், சூடும் சுவையும் மிக்க நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன். என்னையும் உன்னையும் ஏமாற்றிவிட்டனர், நம்மீது கணை தொடுக்கக்கூடியோர். காரணம் என்ன? கூறுவார் காணோம்.

"இன்னின்ன காரணங்களுக்காக, தி. மு. கழகம் தடை செய்யப்படுகிறது; தடை மீறினால் இன்னின்ன விதமான தண்டனைகள் தரப்படும்' என்று சூடும் சுவையும் மிக்க செய்தி வெளியிடப்படும் என்று எண்ணிக்கொண்டிருந்தோம் - இன்னின்னார் தலைமையிலே இன்னின்ன கமிட்டி அமைக்கப்படுகிறது; இன்னின்ன விதமான வேலைகளைக் கமிட்டிகள் மேற்கொள்ளும் என்ற உப்புச் சப்பற்ற செய்தியே தரப்பட்டிருக்கிறது.

காங்கிரசை அறைகூவிக் களம் வரச்சொல்லி அழைத்த வரும், தடைமீறி உள்ளே நுழைந்தால், சிறைதான் காந்தியாருக்கு என்று அறிவித்தவரும், திருவிதாங்கூர் பாரதத்தில் பிணைபட்டு இருக்கப்போவதில்லை தனி நாடு ஆகிவிடுகிறது என்று "பிரகடனம்' செய்தவருமான, சர். சி. பி. இராமசாமி ஐயர், பிரிவினை சக்திகளைக் கவனித்துத் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட வழிகூற அழைக்கப்பட்டிருக்கிறார். துகில் உரித்த துச்சாதன னுடன், துரோபதை செல்கிறாள் கடைவீதி, புதுச்சேலை வாங்க!! விந்தைமிகு இந்தச் செய்திபற்றி அடுத்த கிழமை.

அண்ணன்,

10-6-1962