அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வேலை இருக்கிறது நிரம்ப!
2

மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்;அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம் - வாய்ப்பு - இப்போது ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப் பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று எடுத்துக்கூறப்பட்டது.

விளக்கம், விவாதம், மறுப்பு - இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது.

நாம்தான், தம்பி! 15!! - என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும்.

தி. மு. கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைத் தோற்கடித்து விட்டனர்.

அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற் கொண்டு, தி. மு. க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது என்பது வடவருக்கு விளங்கி இருக்கும்.

என்னால் இயன்றமட்டும், கேட்டுப் பார்த்தேன் - அவர் களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப்படவில்லை - 150 - 15 - அது ஒன்றுதான், அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக்கூடிய பொன்னான வாய்ப்பினை அழித் தொழித்தார்கள்.

"இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்.''

* * *

இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்கமென்று துணிவாகக்கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்கு வாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லிவிடுவார்களானால் - அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும். உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (டர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ஸ்ரீப்ண்ம்ஹற்ங்) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

* * *

1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன்.

இந்தித் திணிப்புப்பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருதினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன்.

"சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.''

இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும் என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால்,

"எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.''

என்று எடுத்துக் காட்டினேன்.

இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப் படக்கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசிவருவதுதான் நமக்குத் தெரியுமே, தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே விளக்கம் கூறினேன்.

"இந்திய அரசியல் சட்டமாக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டமாக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுய ஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர் காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதைவேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில், செய்துகொண்ட காரியம் இது. ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக் கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல, ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக் கொள்ளப்பட்டன. ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்பட வில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.''

* * *

மொழிப் பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது, நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக்கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது.

வெறும் வாதத் திறமையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனே, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை. உணரக்கூடிய ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக்கூறி, அமைச்சரின் இசைவினைப் பெற வேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள்கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள் - நாட்டுக்கான திட்டம் இது என்பதைக் கவனிக்க மறுத்தார்கள்.

இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனி நாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, "இடம் பிடித்தார்கள்' - அதே முறையில்தான் அன்றும்!

கனிவு இருக்க வேண்டும் என்ற அலாதி அக்கறையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி; பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம், இந்த வாடை!

இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கறை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருத்து மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது - என்ற பொருள்பட அல்லவா பேசினார். அன்றும் அதேவிதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அது குறித்து அன்று பேசினேன்.

"இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை.

தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10 - 15 - ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்ப தாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசிய மொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவி வந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14 - தேசிய மொழிகள் இருக்கின்றன.''

ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி.

இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்க வேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்தப் பிரச்சினையை மூன்றுவிதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப் பிரச்சினையைப் பார்ப்பது ஒரு விதம்.

இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப்போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும்.

எங்களைப் பொறுத்தவரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப் பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம்.

நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்பு களை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புகளைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.

தம்பி! மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணு கின்றனர்; அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப்பற்றி நாட்டம் செலுத்து கிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப் பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன்.

"நிர்வாக மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம் சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.''

என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார். பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை அவருடைய கட்சிக்காரர் ஒருவரே, பிற்போக்கான பேச்சு என்று வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்.

"அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்''

என்று பேசினார்.

கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக்கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகிவிட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு.

"இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது, இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செல்வாக்கு வளர்ந்து கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள்.''

இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்புகிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மைகொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள்.

இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெறமாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூற முடியாது.

இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்படவேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டுமென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம்.

நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர்களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன்.

இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.

இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கழகத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. நாம் 15 - அவர்கள் 150! அதனால்!!

தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு "பரிகாரம்' கிடைக்கவேண்டு மானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக்கொள்வோம் என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார்.

இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது - தோல்விதான்!! சொல்லவா வேண்டும்!

இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத்துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு, முடிவெடுத்து, மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று பெருமை பேசிக்கொள்கின்றனர்.

அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப் பட்டாக வேண்டும் என்று நமது கழகம் வாதாடி இருக்கிறது.

இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும் அன்று, சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது.

ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளி களில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டு மென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார்.

தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் "தேசிய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.

(சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர்நீதி மன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வர வேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப. உ. சண்முகம் கொடுத்தார்.

இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன.

சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத் திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்த வேண்டு மென்று, செயற் குழு முடிவெடுத்திருக்கிறது.

எனவே, கருப்புக் கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே, இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டியுள்ளனர் என்பதை மறவாதே!

நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு. இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாகவேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்ததல்ல. முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துகூறப்பட்டதுதான் - அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி, புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு.

இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒரு முறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு.

வேலை இருக்கிறது நிரம்ப, வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே, நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது! - என்று இருந்து விடாதே!!

வடக்கே உள்ள இதழ்கள் பல "டைம்ஸ் ஆப் இந்தியா', "இதவாதம்', "போரம்' - இவை, எப்படி நேருவும் பந்தும் குடி அரசுத் தலைவரும் இந்த தி. மு. கழகத்துக்கு உறுதிமொழிகள் அளிக்கலாம்? அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக்கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்றுஅந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன - எரிச்சல் தாள மாட்டாமல்.

தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!! - என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார்.

"எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!'' என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர்.

"யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை'' என்று கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடு நிலையாளர் அனைவருமே பேசுகின்றனர்.

எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகையுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!!

அண்ணன்,

14-8-1960