அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
12
                     

“இதுவும் உன் தேவியின் திருவருள் போலும்” என்று புலவர் சிரித்துக்கொண்டே கேட்டார். சபையிலே இது சிரிப்பை உண்டாக்கவில்லை. மணிவீரன் ஓடிவிட்டான் - சிறைக் கூடத்தைவிட்டுத் தப்பித்துக் கொண்டான்” என்ற சத்தம் பலமாகிவிட்டது. குழப்பத்தை உத்தேசித்துச் சபையை அரசி கலைத்து விட்டனர்.

சிறையிலே தள்ளப்பட்ட வீரமணி அங்குக் காற்றும் சரியான உணவுமின்றிக் காவலாளிகளின் கடுங்கோபத்தால் தாக்கப்பட்டு, வருந்தவேண்டுமே என்பதைப் பொருட்படுத்த வில்லை. என்றையதினம் நடனராணியைப் பிரிய நேரிட்டதோ, அன்றே உலகமே அவனுக்குக் கொடுஞ் சிறையாகிவிட்டது. கலிங்கப் போர் முடிந்ததும், அக்கட்டழகியை மணம் புரிந்து கொண்டு, காதல் சுவையை உண்டு களித்து வாழலாம் என்று எண்ணி இறுமாந்திருந்தவனுக்கு, நேரிட்ட விபத்து, அவன் மனத்தை மிக வாட்டி விட்டதால், நடனாவைக் கண்டு அவளுடன் பேசி மகிழும்வரை, அவன் தன்னை ஒர் சிறையிலே காலந்தள்ளும் ஓர் கைதி என்றே கருதிக்கொண்டிருந்தான். அவள் இல்லா வாழ்வு, நிலவில்லா வானமாக இருந்தது. உலகு, தனது வழக்கமான வசீகரத்தைக் காட்டிய படிதான் இருந்தது. காலைக்கதிரோன் உதயமும், அதுகண்டு கூடுகளிலிருந்து கிளம்பிக் கீதம் இசைத்த வண்ணம் சிறகை விரித்துச் செல்லும் பறவைகளும், கறவைப்பசு தன் கன்றுகளின் முதுகை நாவினால் அன்புடன் தடவிக் கொடுப்பதுமாகிய காட்சிகள் எப்போதும் போல நடந்துவந்தன. குயில்கூவ மறக்கவில்லை! மயில் நர்த்தனத்தை நிறுத்தவில்லை, தென்றல் வீசாமலில்லை, இயற்கை தன் எழிலைக்குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இவைகள் முன்பு இன்பமூட்டியது போல வீரமணிக்கு இன்பந் தரவில்லை. அவன் மனம், நெய்குறைந்த தீபமாயிற்று. காதலற்ற வாழ்வு அவனுக்குக் கடுஞ்சிறையாகவே இருந்தது. எனவே, மலர்புரி அரசி, ஆரியனின் மாயமொழி கேட்டுத் தன்னைச் சிறைப்படுத்தியதால், அவன் சோதிக்கவில்லை. ஆனால், வந்த காரியம் முடியவில்லையே என்று வருந்தினான். கலிங்கக் கிழவன் கூறிய குமரியைக்கண்டுபிடிக்கவில்லை. மலர்புரி அரசியின் கள்ளக்காதலின் கனி அக்கன்னி, என்பதுமட்டுமே அரசியுடன் பேசியதிலிருந்துதெரிந்தது. உத்தமன் திடீரென்று அங்குவந்து சேர்ந்த மர்மம் என்ன? என்பது தெரியுமுன், ஆரியனின் சதிநாடகம் நடக்கவே, காரியம் வேறுவிதமாகிவிட்டது. இவைகளைத் தீரவிசாரித்துத்தக்க பரிகாரங்கள் தேடிக், கலிங்க கிழவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுப் பிறகு நடனாவைச் சோழமண்டலத்திலிருந்து வெளிஏறச் செய்து, எங்கேனும் ஓரிடத்தில் வாழவேண்டும் என்பது வீரமணியின் எண்ணம். இது ஈடேற முடியாதபடி சிறைவாசம் ஏற்பட்டதே. என்றே கருதிக்கலங்கினான். சிறைக்கூடத்திலே ஆரிய முனிவனின் ஆதிக்கம் கூடாதென்று ஆரம்பத்திலேயே, எதிர்த்துப் போராடிச் சிறைப்பட்ட பலரைக் கண்டான். அவர்களிற்சிலர், மனம் உடைந்துகிடந்தனர். அவர்களைத் தேற்றி, “இரவு எவ்வளவு இருண்டுகிடப்பினும், விடிந்தே தீர வேண்டுமல்லவா! அதுபோலவே, ஆரியம் மலர் புரியை எவ்வளவு கப்பிக் கொண்டிருப்பினும், தமிழ் உணர்ச்சி ஓர் நாள் உதிக்கப்போவது உறுதி, நீங்கள் சிந்திய இரத்தமும், வடித்த கண்ணீரும், வீண்போகாது. வெண்ணெய்திரண்டுவரும் சமயத் திலே, தாழி உடைந்த கதைபோல, ஆரியனின் சதிச்செயலை அரசியார் உணரும்படி செய்யச் சரியான சமயம் கிடைத்தது என்று எண்ணிய நேரத்திலே, அவன் ஏதோ ஓர் மாயவித்தை செய்து, என் ஏற்பாட்டைக் கெடுத்துவிட்டான். அதனாலே அவன் தலைதப்பிற்று, நான் சிறைப்பட்டேன்” என்று வீரமணி கூறினான்.

“அப்படி என்ன மாயவித்தை செய்தான்” என்று ஒருவன் கேட்டான்.

“அது உண்மையிலேயே, மாயந்தான். தேவி கோயிலிலே, நான், ஆரியனின் சிரத்தை வெட்டக் கத்தியை ஓங்கினேன். ஆனால், ஏதோ ஓர் சக்தி, என்கையிலிருந்த கத்தியை மேலுக்கு இழுத்துக் கொண்டது. வாள், கோயிற்கூரையிலே போய்த் தொங்கிற்று,” என்று வீரமணி விளக்கினான்.

“அப்படியா? ஆச்சரியந்தான் அது” என்று பலர் வியந்து கூறினர்.

இப்பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் கைதி, கேலிச் சிரிப்புடன் பேசலானான்.

“மகா பெரிய ஆச்சரியந்தான்! தேவிகோயில் கூரைமீது மாகாளி உட்கார்ந்துகொண்டு, இவன் வீசியவாளை மேலுக்கு இழுத்துக்கொண்டது. இது தானே உங்கள் எண்ணம். ஆச்சரியமாம் ஆச்சரியம். பாருங்கள் என் இருகரங்களை, இவை செய்த ஆச்சரியம் அது. ஆமாம்; இப்போது எலும்புந்தோலுமாகிக் கிடக்கும் இக்கரங்கள் செய்துதந்த ஆச்சரியந்தான், உங்களுக்குத் திகைப்பை உண்டாக்கிவிட்டது. ஏன், என்னை விறைத்துப் பார்க்கிறீர்கள். கிழவனுக்குக் குழம்பிவிட்டது என்று நினைக்கிறீர்களா! நான் புத்தி சுவாதீனத்துடனேயே பேசுகிறேன். என் திறமையே, என்னைச் சிறையிலே தள்ளிற்று. அந்தத் திறமையே ஆரியனின் தலையைத் தப்பவைத்தது, அத்திறமையே, இவளைச் சிறைக்கு அனுப்பிவைத்தது” என்று அக்கிழக்கைதி பேசினான். வீரமணி அவனை அன்புடன் உபசரித்து, ‘பெரியவரே! நாங்கள் அனுபவமில்லாதவர்கள், ஆகையினால் தங்களின் அற உரையின் பொருள் எமக்கு விளங்கவில்லை. தயவு செய்து, எமக்கு அந்த வாள் மேலேறிய விந்தையை விளக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டான். கிழவர், “அப்படிக் கேள்! தம்பீ! உன்னைவிட, அதிக வினயமாகத்தான், ஆரியன் என்னிடம் பேசினான். ஊராளும் அரசியையே தன் உள்ளங்கையில் அடக்கிவைத்துள்ள ஆரியன், என்னிடம் அன்போடும் மரியாதையுடனும் பேசக்கேட்டு நான் சற்றுக் கர்வமடைந்தேன். நமது பெருமையை உணர்ந்து, நம்மிடம் அடக்க ஒடுக்கமாய் ஆரியன் நடந்துகொள்கிறான், அவன் மற்றவர்களை அடிமை போல் நடத்தினால் நமக்கென்ன? நம்வரையில் அவன் மதிப்பு தருகிறான் என்று என் சுயநலத்தை மட்டுமே பெரிதென்று எண்ணினேன். நமது தமிழரிற்பலர், இத்தகைய நினைப்பினாலேயே நாசமாகின்றனர்.”
“என்னிடம் ஆரியன் சரியாக நடக்கிறான். எனக்கோர் கேடும் செய்யவில்லை. என்னிடம் ஆணவமாக நடந்துக் கொள்வதில்லை, மற்றவர்களை அவன் எப்படி நடத்தினால் எனக்கென்ன” என்று எண்ணுவது, ஆரியம் வளர மறைமுகமாக ஆக்கந்தருவதாகும். இதனை நான் அன்று உணராமல், ஆரியன் அடக்கமாகப் பேசுகிறான்; அன்புடன் பேசுகிறான் என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அதன் விளைவுதான்,இச்சிறைவாசம், என்று பேசிக்கொண்டே, வியர்வையைத் துடைத்துக் கொள்ளலானான். அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கிழவன் சுற்றிவளைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே, விஷயத்துக்கு வரக் காணோமே என்று சலிப்பு ஏற்பட்டது. அதையும் கிழவன் யூகித்தறிந்துகொண்டு “கிழவன் வம்பளக் கிறான் என்று எண்ணுகிறீர்களா! கேளுங்கள் என் துயர்மிக்க கதையை. நான் ஓர் சிற்பி, கட்டட வேலையில் கைதேர்ந்தவன். எத்தனையோ மன்னர்கள் நான் கட்டிய மண்டபத்திலே தர்பார் செய்திருக் கின்றனர், எவ்வளவோ அரசகுமாரிகளுக்கு நான் அழகான உப்பரிகைகள் அமைத்துக்கொடுத்திருக்கிறேன். கோட்டை அமைப்பதும், சுரங்க வழிகள் அமைத்திடுவதும், பொறிகள் அமைப்பதும், எனக்குப் பிரியமான வேலைகள். என் திறமையைத் தெரிந்துகொண்டு ஆரியன் ஓரிரவு, என் வீடு வந்தான். அரசியை ஆட்டிவைக்கும் ஆரியன், என் வீடு தேடி வந்ததும் நான் மலைத்துப்போனேன். புன்னகையுடன் அவனை வரவேற்று, ஆசனத்திலமர்த்தி அருகினிலமர்ந்து, “என்ன விசேஷம்? இவ்வளவு சிரமப்பட்டு, என்னை நாடி வந்த காரியம் என்ன?” என்று வினயமாகப் பேசினேன்.

“மலையிலிருக்கும் மூலிகை வேண்டுபவன், மலையிருக் குமிடம் செல்லத்தானேவேண்டும். திறமை மிக்கவனே! உன்னை நான் தேடிவந்ததிலே வியப்பென்ன இருக்கமுடியும்? உன் திறமைக்கு, மூவேந்தருமன்றோ உன் வீட்டு வாயற் படியிலே காத்துக் கிடக்கவேண்டும்” என்று ஆரியன் என்னைப் புகழ்ந்தான். அவன் ஏதோ சுயநலத்துக்காகவே என்னை முகஸ்துதி செய்கிறான் என்று தெரிந்தது. ஆனாலும், அவன் புகழ்ந்தது எனக்கு ஆனந்தமாகத் தான் இருந்தது. ஊரெல்லாம் இவனைப் புகழ்கிறார்கள், இவன் நம்மைப் புகழ்கிறான், என்ற நினைப்பு என் நெஞ்சிலே தவழ்ந்தது. நான் ஆரியனின் வலையில் வீழ்ந்தேன்.

“அப்படியொன்றும் நான் திறமையுடையவனல்லவே, நானோர் சாதாரண சிற்பி?” என்று பேசினேன்.

“சிற்பி, என்றால் சாதாரண விஷயமா? சிருஷ்டிகர்த்தா அல்லவா நீ! கரடுமுரடான கற்களை நீ, கண்கவரும் உருவங்களாக் குகிறாய்; உணர்ச்சி யூட்டும் உருவங்களாகச் செய்கிறாய், அது இலேசான காரியமா! சிற்பத் திறமை சாமான்யமான தல்லவே. ஜெகத்திலே உள்ள அருங்கலைகளிலே அது சிறந்த தன்றோ! எங்ஙனம் ஓர் தாய், பத்து மாதம் சுமந்து, வலியைப் பொறுத்துக்கொண்டு, குழந்தையைப் பெற்றெடுத்ததும், அவள் களிப்பெனும் கடலில் மூழ்கி, இதோ பாரீர் என் சிருஷ்டியை! நான் ஈன்ற இச்சேய் இருக்கும் சுந்தரத்தைக் காணீர் என்று பெருமையுடன் கூறிக்கொள்வாளோ அது போல நீயும், கருங்கற் களிலே உன் கருத்தின் திறனையும் கைத்திறமையையும் காட்டிக் கலையின் இருப்பிடமாக்கி, உருவமாக்கியதும் உள்ளப் பூரிப்போடு உலகுக்கு உரைக்கலாம், உனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆகவே சிற்பியே உன் சமர்த்தை நான் ஆண்டவனின் சமர்த்துக்கு ஈடானதாகவே மதிப்பிடுவேன். ஆண்டவன் கோயிலுக்கும், சிற்பியின் கூடத்துக்கும் வித்தியாசம் காண்கிலேன்” என்று ஆரியன் பேசினான். நான் அவன் வயப்பட்டு, “என்னால் ஏதேனும் தங்கட்குக் காரியம் ஆக வேண்டுமா? கூறுங்கள்; செய்து தருகிறேன்” என்று உரைத்தேன். அப்போது அவன் தேவி கோயிலுக்குப் புது மாதிரியான அமைப்புகள் செய்து தரச் சொன்னான். நான் என் திறமையைக் காட்ட, கோயில் மண்டபத்திலே மூன்று இடங்களிலே காந்தக் கற்களை அமைத்துத் தந்தேன், அந்தக்கற்கள் இருக்குமிடத்தினருகே இரும்பாலான எந்தப் பொருளைக் காட்டினாலும், காந்தக் கல்லின் சக்தியால் அப்பொருள் மேலுக்கு எழும்பிவிடும். நான் அமைத்துத் தந்த இந்த அற்புதக் கட்டட வேலை முடிந்ததும். அந்தக் கபட வேடதாரி, என்மீது பழி பல சுமத்தி இச்சிறையிலே தள்ளிவிட்டான். நான் வெளியே இருந்தால், காந்தக் கல்லின் சக்தியை அவன் தேவி திருவிளையாடலென்று உரைத்திட முடியாது. சூது பலிக்காது. ஆகவே தான் என்னை இங்கே அநியாயமாகத் தள்ளிவிட்டான்” என்று கிழவன் கூறி அழுதிட, வீரமணி அவனைத் தேற்றிவிட்டு, கத்தி மேலுக்கு எழும்பிய தன் காரணம் விளங்கிவிட்டதால், மனக் குழப்பம் நீக்கப்பட்டு, இனிச் சிறையைவிட்டு எங்ஙனம் வெளி ஏறுவது என்று யோசனையில் இறங்கினான். பலப் பலயோசனைகளுக்குப் பிறகு வழி தோன்றிற்று. உணவு கொண்டுவருபவனைப் பிடித்து கட்டி உருட்டி விட்டு, அவன் உடைகளைத் தான் அணிந்து கொண்டு வெளியே தப்பி ஓடிய கைதிகளின் கதை வீரமணிக்குத் தெரியும், ஆனால், அவ்விதமாகப் பலர், தப்பித்துக் கொண்டதால், காவலாளிகள், சற்று எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டனர். எனவே, அந்த வழி சரியானதாக வீரமணிக்குப் பயன்படவில்லை. சிற்பியுடன் கலந்து பேசியதாலேயே, வீரமணிக்குச் சரியான வழி தோன்றிற்று. “நான் இச்சிறையி லிருந்து தப்பித்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்திருந்தால், நெடுநாட்களுக்கு முன்பே, போயிருப்பேன். ஆனால் நான் வெளியே போனால், பலன் இல்லை என்றே உள்ளே தங்கிவிட்டேன். இதனையே என் மாளிகை என்று கருதிவிட்டேன். நீ தப்பிப்போனால், ஏதேனும் பலன் ஏற்படக்கூடும். நீயோ வாலிபன்; வீரன், உன்போன்றவர்களாலேயே ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும், இந்த வயோதிகனால் முடியாது. நீ தப்பிப்போக நான் ஓர் மார்க்கம் காட்டுகிறேன்”, என்று கிழவன் உருக்கமாகக் கூறினான். வீரமணி பெரியவரே! உமது தியாக உணர்ச்சி தமிழ்ப்பண்பு இன்னமும் பட்டுப்போகவில்லை என்பதைக் காட்டுகிறது. நான் தப்பினால், உம்மை போன்ற உத்தமர்களைச் சிறையிலிட்ட அக்கொடியவனின் ஆதிக்கத்தை ஒழீக்க நிச்சயமாக வேலைசெய்வேன், இனி மலர்புரியிலிருந்து கொண்டு, அக்காரியம் செய்யமுடியாது. நான்வேறு மண்டலம் சென்று, இக்காரியத்துக்கான வீரரைத் திரட்டிப் படை எடுத்துவரவே எண்ணுகிறேன் என்று உறுதிமொழி கூறினான். கிழவன், களிப்புடன், வீரமணியைக் கட்டித் தழுவிக் கொண்டு, “நீ நிச்சயமாக வெற்றி அடைவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பாராட்டிப்பேசினான். ஒருவார காலத்தில், சிற்பி, சிறைச்சாலையிலே கிடைக்க கூடிய பொருள்களைக் கொண்டே கருவிகள் தயாரித்துக்கொண்டு, வீர மணிக்கு என ஏற்பட்டிருந்த அறைக்குவரும் தாழ்வாரத்திலே, சில கற்களைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் பள்ளம் உண்டாக்கி
விட்டான். அதன்மீது கருப்புக் கம்பளியைக் கற்பாறை போலத் தெரியும்படி மூடி வைத்தான். இந்தச்சூது தெரியாத, சிறைக் காவலன் அன்றிரவு, வீரமணியையும் மற்றக் கைதிகளையும் அறைகளுக்குப் போகச்சொல்லிவிட்டுத், தாழ்வாரத்தின் வழியாகச் சென்றான்; பள்ளத்திலே வீழ்ந்தான். இதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரமணி, ஒரே அடியாகப்பாயந்து, காவலாளியின் குரல்வளையைப் பிடித்தழுத்திக் கட்டிப் போட்டு விட்டு அவன் உடைகளைத் தான் அணிந்துகொண்டு, மற்றக்காவலாளிகளை ஏய்த்துவிட்டு வெளி ஏறிவிட்டான்.

நடுச்சாமக் காவலாளி, கைதிகள் சிரித்துக் கொண்டும் கேலி பேசிக்கொண்டும் இருக்கக்கேட்டு, விளக்குகளைத் தூண்டிவிட்டு, இடத்தைச் சோதிக்கத் தாழ்வாரத்திலே பள்ளம் இருக்கக்கண்டு, ஆச்சரியப்பட்டு, அறைகளைச்சோதிக்க, வீரமணியின் அறையிலே ஓர் உருவம் குப்புறக்கிடக்கக்கண்டு அருகேசென்று பார்க்க, வீரமணிக்குப் பதில், காவலாளி, கைகால் கட்டப்பட்டு உருண்டு கிடக்கக் கண்டு, வீரமணி தப்பி ஓடிவிட்டான் என்பதைத் தெரிந்து கூவினான். காவலாளிகள் வெளியே சென்று தேடவும், அரசிக்குச்சொல்லி அனுப்பவுமாயினர். கூக்குரல் அடங்குமுன், வீரமணி ஊர் புறம் அடைந்தான். காவலாளி வேடத்தைக் கலைத்துவிட்டு, ஓடலானான். குதிரை மீதேறிக் கொண்டு சிலர் தன்னைத் தேடிக் கொண்டுவரக். கண்டு, வீரமணி, ஊருக்கடுத்திருந்த கானகத்துக்குள் நுழைந்து, அடர்ந்த பகுதிக்குப்போய், அங்குக் காணப்பட்ட ஒரு குகையில் புகுந்தான். குகையிலே வீரமணி உள்ளே நுழைந்து, குகையைக் கூர்ந்து நோக்குகையில், இரு நெருப்புப்பொறிகள் தெரிந்தன. பொறிகள் வரவர பெரிதாகிக் கொண்டே வரத்தொடங்கிற்று. காலடிச்சத்தம் கேட்டது. வீரமணி திடுக்கிட்டான். தன்னை நோக்கி ஓர் புலி வருகிறதென்பது தெரிந்தது. என்ன செய்வதென்று தீர்மானிக்கு முன்பு, புலி சீறிக்கொண்டே வீரமணியை நெருங்கிவிட்டது.

புலிக்கு இறையாவதினின்றும் தப்பித்துக் கொள்ள ஓர் வழியும் இல்லையே. வெளியாக இருந்தாலாவது, புலியுடன் கட்டிப்புரண்டு போரிட்டாவது; மாளலாம். ஓடிச் சண்டை செய்யமுடியாத குகையிலல்லவா சிக்கிக்கொண்டோம்; எப்படித் தப்பமுடியும் என்று திகைத்த வீரமணியின் மனக் கண்முன், கேலிச் சிரிப்புடன் ஆரியன் நிற்பது போலவும், அவன் அடி வருடிக்கொண்டு மலர்புரி அரசி இருப்பதுபோலவும், நீர்புரளும் கண்களுடன் நடனராணி நிற்பதுபோலவும் தோன்றிற்று. சாவுக்கும் தனக்கும் இடையே, சிலஅடி இடம் மட்டுமே இருப்பதை எண்ணினான்; மயக்கம் உண்டாயிற்று; கண்கள் மூடின; காது குடையும்படியான பெருங்கூச்சல் கேட்டு, மூடின விழியைத் திறந்தான். எதிரே இருந்த புலி மரணாவஸ்தைப் படுவதைக் கண்டான். வீரமணிமீது பாயப்புலி தயாராக இருந்தபோது, குகையின் கூரைச்சுவரின் பிலத்திலிருந்து மலைப்பாம்பு, சீறிப், புலியின் வயிற்றைத் தன் உடலால் அணைத்து அழுத்திக் கொல்ல முனைந்தது. திடீரென, மலைப் பாம்பு, தன்னைச்சுற்றி வளைக்க ஆரம்பிக்கவே புலி பெருங்கூச் சலிட்டுச் சுவரிலே மோதியும், தரையில் புரண்டும், கால் நகங் களால் பாம்பின் உடலைக் கீறியும், மலைப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போரிட்டது. மலைப்பாம்போ, பிலத்திலே பாதிஉடலை வைத்கொண்டு, மற்ற பாதியால், புலியின் வயிற்றை இறுக்கிற்று. விநாடிக்கு விநாடி, புலியின் வேதனை வளர்ந்தது. பாம்பின் பிடி தளரவில்லை. புலியின் வாயிலே நுரைத்தள்ளலாயிற்று. விழி வெளிவந்து விடும் போலாகிவிட்டது. மலைப்பாம்பின் பிணைப்பை நீக்கமுடியாது புலிதவித்தது. இக்காட்சிளைக் கண்ட வீரமணி களித்து, இதுதான் சமயமென்பது தெரிந்து, குகையை விட்டு வெளியே வந்துவிட்டான். புலியின் சத்தம் வரவர அடங்கலாயிற்று. சரி, மலைப்பாம்பு வெற்றிபெற்று விட்டது போலும், என்று எண்ணியபடியே, வீரமணி, கானகத்திலே மேலும் சென்றான். ஒவ்வோர் புதருக்கருகிலும் சலசலப்பு கேட்கும் போதெல்லாம், புலியோ, சிறுத்தையோ, என்று பயப்படவேண்டி இருந்தது. காட்டைக்கடக்க முடியுமா? வழியிலேயே பிணமாக வேண்டியதுதானா, என்று சந்தேகிக்க வேண்டி இருந்தது. எதிர்பாராத ஆபத்துகள் இமை கொட்டு வதற்குள் ஏற்படக்கூடிய அந்த அடவியைக் கடந்தாகவேண்டும். ஆரியம்போலவே அடவியும் உயிர்குடிக்கும் விஷவிலங்களின் விடுதிதானே? என்று நினைத்து வீரமணி தனக்குள் நகைத்துக் கொண்டான். ஓரிடத்திலே, கனி குலுங்கும் மாமரம் கண்டு, பழத்தைப் பறித்து உண்ணலானான். அவனது ஆயாசம் சற்றுத் தீர்ந்தது; பசித்தொல்லை குறைந்தது; ஆனால் புதியதோர் ஆபத்து வந்து சேர்ந்தது. வீரமணி, இரண்டோர் கனிகளைக் கையிலெடுத்துக்கொண்டு, போகப்புறப்பட்டான்.

போகாதே! நில்! என்று ஓர்குரல் கேட்டுத்திடுக் கிட்டான். ஆள் நடமாட்டமே இருக்கமுடியாத அந்த அடவியில். பேச்சுக் குரல் கேட்டால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்தான், யாரும் தென்படவில்லை. மனப்பிராந்தி போலும் என்று எண்ணிக்கொண்டு, இரண்டடி எடுத்து வைத்தான், மறுபடியும் அக்குரல் கேட்டது போகாதே! நில்! வீரமணிக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்தான், யாரும் தென்படவில்லை. மனப்பிராந்தி போலும் என்று எண்ணிக்கொண்டு, இரண்டடி எடுத்து வைத்தான், மறுபடியும் அக்குரல் கேட்டது போகாதே! நில்! வீரமணிக்கு ஆச்சரியம் போய், அச்சம் பிறந்து விட்டது. யார் என்னைத்தடுப்பவன்? என்று கூவிக் கேட்டான். பதில் இல்லை. மறுபடி போகத் தொடங்கினான்; போகாதே! நில்! என்று மறுபடியும் குரல் கிளம்பிற்று. மறுபடியும் வீரமணி, குரல் எப்பக்கமிருந்து வருகிறதென்று கவனித்தான். மரத்துக்கிளையிலே ஓர் கிளியும், வேறோர் பக்கத்திலே குரங்கும் தவிர அவன் கண்களிலே ஆள்யாரும் தென்படவில்லை. “இதோ பெரிய தொல்லை” என்று சலித்துக் கூறிக்கொண்டே மறுபடி நடக்கலானான். போகாதே! நில்! என்று கூவிக்கொண்டே, மரக்கிளையிலிருந்து கிளி பறக்கக் கண்டு. வீரமணி வாய்விட்டுச் சிரித்து, “அட, பேசும் கிளியே! நீயோ, என்னைப் பயப்படவைத்தாய்” என்று கூறிக்கொண்டே கிளியை நோக்க, அது. வேகமாகப் பறந்து சென்றிடக்கண்டு, “இவ்வளு அருமையாக இக்கிளிக்கு யார் பேசுவதற்குப் பழக்கப்படுத்தினார்கள்? பேசும் கிளி இங்கு காணப்பட்டதால் பக்கத்திலே யாரோ வசிக்கிறார்கள், என்ற எண்ணம் ஏற்படுகிறதே. இங்கே, காட்டிலே யார் வசிக்கிறார்கள்? என்று யோசித்தபடியே நடக்கலானான். சிறிது தூரம் நடந்ததும், போகாதே! நில்! போகாதே! நில்! என்று உரத்த குரலொலி கேட்டது. கிளியா இப்படிக் கூவிற்று என்று திரும்பிப் பார்க்கத் தன்னை நோக்கி நாலைந்து வேடர்கள் ஓடிவரக் கண்டான்; நின்றான். அவர்கள் இளைக்க இளைக்க ஓடிவந்து, வீரமணியின் எதிரே நின்றனர். அவர்களுடன், முன்பு வீரமணிகண்ட குரங்கும் இருக்கக்கண்டு, இக்குரங்கு ஜாடை காட்டியே இவர்களை அழைத்து வந்ததுபோலும் என்று எண்ணி, “வேடர்களே! நான் வேற்றூர் போகக்கருதி இக்காட்டிலே புகுந்தேன், போகாதே நில்! என்று கூவிடும் கிளியும். ஆள் நடமாட்டம் கண்டால் உங்கட்குச் சேதிகூற ஜாடை செய்யும் இக்குரங்கும், சற்றுத் தொலைவிலே இருக்கக் கண்டேன்; என்னைத் தடுப்பானேன்?” என்று வீரமணி வேடர்களைக் கேட்டான்.

அவர்களுள் தலைவன்போல் காணப்பட்ட ஓர் இளைஞன், “கிளியும் குரங்கும், எம்முடையனவே. நீர் யார்? ஏன் இங்குவந்தீர்? கையிலே இருப்பது மாங்கனிதானே! ஏன் பறித்தீர்?” என்று கேட்க, வீரமணி, “நான் யாரென்பது கூறினால், உங்களுக்குத் தெரியாது? நீங்கள் இக்காட்டு வேடர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. இக்காடு இன்னம் எவ்வளவு தூரமிருக்கிறது? எவ்வளவு நேரம் பிடிக்கும் இதனைக் கடக்க” என்று வேடுவத்தலைவனைக் கேட்டான். வேடுவத் தலைவன் சிரித்தபடி,“அரை மணிநேரத்திலே, இந்த அடவியைக்கடந்து அடுத்த ஊர் போகலாம், நாங்கள் அனுமதித்தால்” என்றான்.

வீரமணி,“நீங்கள் அனுமதிப்பதா? காட்டிலே நான் நடப்பதற்கு உங்கள் அனுமதி ஏன்” என்று கேட்டான்.

நாட்டிலே நடமாட, அரசரின் அனுமதி வேண்டுமல்லவா?” என்று வேடுவத் தலைவன் கேட்டான். ஆம், என்று வீரமணி பதிலிறுத்தான். “அதே சட்டம் காட்டிலேயும் உண்டு. இங்கு அரசு எங்களுடையது; ஆகவே எங்கள் அனுமதி இன்றி யாரும் இக்காட்டிலே நடமாட முடியாது” என்று வேடுவத் தலைவன் கெம்பீரமாகப் பேசினான்.

வீரமணி, “ஓஹோ! காட்டரசன் கூட்டமா நீங்கள்; சரி என்னை அனுமதிக்க ஏதேனும் நிபந்தனை உண்டோ” என்று கேட்டான்.

“நீர் எடுத்துச் செல்லும் பொருளைத் தந்துவிட வேண்டும்; அதுதான் இங்கு சட்டம்” என்று கூறிக்கொண்டே ஒரு வேடுவன் களிப்புடன் கூத்தாடினான். மற்றவர்களும் எடு! எடு! என்று கூவிக்கொண்டு தாளமிட்டனர். வீரமணி தலைவனை நோக்கி, “கொள்ளை அடிக்கும் கொடியவர்கள்தானா நீங்கள். சரி! என்னிடம் ஒரு பொருளும் இல்லை” என்று கூறினான்.

“கொள்ளை, என்று நீ கூறுகிறாய், காணிக்கை என்று நாங்கள் அதைச் சொல்லுகிறோம். சரி, உன்னிடம், பொருள் இல்லை என்று நீ சொன்னது முழுப்பொய். உன்னிடமிருக்கும் பொருளை நான் அறிவேன், நீ அதை மறைக்க முடியாது.” என்று வேடுவத்தலைவன் பேசினான். அப்பேச்சிலே, அதிகாரத்தைவிட அதிகமாக அன்பு தொனித்திடக் கண்ட வீரமணி ஆச்சரியப்பட்டு “உண்மையிலேயே என்னிடம் ஒரு பொருளும் இல்லை” என்று மீண்டும் கூறினான்.

“இதுவரை, எப்போதாவது, நம்மிடம் சிக்கியவர்கள் நாம் கேட்டதும், பொருள் இருப்பதாகக் கூறினதுண்டோ? மயில்கூட இறகுபோடு என்று கேட்டாலா போடுகிறது” என்று மற்றத் தலைவர்களிடம் கூறினர். இதற்குள் மற்றும்பல வேடுவர் அங்கு வந்தனர். வீரமணிக்கு, இவர்களிடமிருந்து தப்பமுடியாது என்பது விளங்கி விட்டது.

“நிச்சயமாகச் சொல்கிறேன். என்னிடம் பொருள் இல்லை - என்னைச் சோதித்துக் கொள்ளலாம், கையிலே ஒன்றுமில்லை, மடியிலேயுமில்லை” என்று கூறிக்கொண்டிருக்கையிலேயே வேடுவர்கள் வீரமணியைப் பிடித்துக்கொண்டு இழுத்துச் செல்லலாயினர். வீரமணி வேடுவத் தலைவனை நோக்கி, “ஐயா! இது அநீதி! நான் ஒருவன், நீங்கள் இவ்வளவு பேராகச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்துவது பேடிச்செயல். என்னை வதைத்தாலும் பலன் இல்லை. என்னிடம் பொருள் இல்லை. நான் பராரி” என்று கூறினான்.