அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அப்போதே சொன்னேன்
2

தருமாம்பாள் தன் கணவனிடம் “நீங்களும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கதறுங்கள். காரியம் தன்னாலே ஆகிவிடும்” என்று சொன்னது யார் காதிலும் விழவில்லை.
தாழைப்பட்டியாருக்கு ஆள் அனுப்பினார்கள்! அவர் வந்துதானே சகல ஏற்பாடுகளும் ஆகவேண்டும்.

காவேரி அம்மாள் இறந்துவிட்டார்களே தவிர, அவர்கள் முகத்திலே பதிந்திருந்த பொலிவு, சாவதற்கு முன்பு காணாமல் போயிருந்த தன் மூத்தமகன் வந்துவிட்டதிலே அவர்களுக்குத் தனியானதோர் மகிழ்ச்சி ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டிற்று.

பக்கத்திலிருந்தவன் பராமரித்துக் கொண்டிருந்தவன். குடும்பத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவன் தங்கப்பன்; ஊர் தூற்றும், உற்றார் உறவினர் கேவலமாகப் பேச, எவளுடனோ ஓடிவிட்டவன் இந்தச் சாத்தப்பன் தாயை மறந்து. குடும்பத்தை மறந்து; ஆனால் விந்தையைப் பாருங்களேன், காவேரி அம்மாளின் மனம் அவன் மீதே பதிந்து கிடந்திருக்கிறது. இதைத் தானய்யா, தாய்ப்பாசம் என்பது” என்றார் குத்தாலலிங்கம்.

மகன் என்ன ஆனானோ ஏது ஆனானோ என்று அந்த அம்மாள் கவலைப்பட்டிருப்பார்கள்; மகன் நல்லபடி இருக்கிறான் என்பதைக் கண்டதும் கவலை பறந்தே போய்விட்டது; ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. கண்ணை மூடுகிற நேரத்தில், கவலையில்லாமல் இருந்திருக்கிறார்கள் என்றான் பூசாரி.

படகு மோட்டாரிலே மகன் வந்திருக்கான் என்பது காவேரி அம்மாளுக்குத் தெரியுமோ, என்னமோ? என்று கூறிக்கொண்டி ருந்தார்; சின்னப்பன். அதுவரையில் மோட்டார் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்த முகமது சாத்தப்பன் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்ததும் பதறிப்போய் ஓங்கோல் நகரத்திலே இருந்து மோட்டாரிலே மானாகப் பறந்து வந்திருக்கிறார்... என்று சொன்னதிலேயே, மற்றவர்கள், சாத்தப்பன் பெரிய புள்ளியாகி விட்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, புதிய பாசத்துடன் சாத்தப்பனைப் பார்க்கத் தொடங்கினர்.

“குடும்பத்துக்குத் தலைப்பிள்ளையாச்சே! நீதானேப்பா மற்றவர்களுக்குத் தைரியம் சொல்லணும் தம்பியைப்பாரு! திகைத்துக் கிடக்கிறாரு...” என்று பட்டம் சூட்டிப் பேசினார் குத்தாலம்.

“நூறு வயதுக்கு மேலே ஆகி இருக்கட்டும், தாயாரைப் பறிகொடுக்க நேரிட்டால் தாங்கிக் கொள்ள முடியுமா மகனாலே” என்று உருக்கம் கலந்து பேசினார் சின்னப்பன்.

“எல்லாவற்றையும் துறந்துவிட்ட பட்டிணத்தடிகளே அல்லவா, தன்னோட தாயார் காலமானதைக் கேட்டதும் ஓடோடி வந்து பதறினார் கதறினார்...” என்று பூசாரி சொன்னார்.
* * *

“மணிக்கு 60, 70ன்னு மோட்டாரு பறந்து வந்திருக்குது” என்று விவரம் கூறினார் மகமது.

“கார் பெரிசு, புதுசு...” என்று சின்னப்பன் கூறியது கேட்டு, மகமது, தன்னிடம் விவரம் கேட்காமல், இவர்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்தது போலப் பேசுகிறார்களே என்ற எரிச்சலைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு “கார் பெரிசு புதுசு என்பதுதான் தெரியும் உங்களுக்கு. டிரைவர் யார் தெரியுமா... மிலிடரியிலே வேலை பார்த்த ஆசாமி. வேலைக்கு வந்து வருஷம் நாலு ஆகுதாம். மாதச் சம்பளம் இரண்டு நூறு...” என்ற தகவலைத் தந்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.

“ஒங்கோல் ஊரிலே என்ன தொழிலாம்...”

“பெரிய முதலாளியாம் அங்கே இவரு... ஈயச் சுரங்கம் இருக்கிறதாம்... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற வியாபாரமாம்...”

“ஈயச் சுரங்கம்னா ஆசாமி பெரிய புள்ளின்னு சொல்லு...”

“முகத்தைப் பார்த்தாலே தெரியலியா லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கற விஷயம்...”

“வெளிநாடுகள் போய் வர்ற வேலை நிறையவாம். கப்பல் கப்பலா ஈயம் அனுப்புவாராம்... வருஷத்துக்கு இரண்டு தடவை மூணு தடவை, வெளிநாடு போய் வருவாராம்.”
* * *

தாழைப்பட்டியார் வந்துவிட்டதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. மற்றத் தகவல்களைப் பற்றிப் பேச முடியவில்லை.

“உன் உடம்பு இருக்கற நிலையிலே நீ அதிகமாகக் கதறி தொந்தரவைக் கொண்டு வந்து விடாதேம்மா. உங்க மாமியாரு பழுத்த பழமான பிறகுதான் காலமாயிட்டாங்க. ஊரிலே இதைத்தான் பெரிய சாவுன்னு சொல்லுவாங்க... அழாதேம்மா, தருமு” என்று தாழைப்பட்டியார் தேறுதல் சொல்ல ஆரம்பித்த கண்டு, தர்மு கண்களைக் கசக்கிக் கொண்டாள். எப்படியோ தாழைப்பட்டியாருடைய பேச்சு காதிலே விழுந்துவிட்டது சாத்தப்பனுக்கு கோபமும் வெறுப்பும் கலந்த குரலில். “அம்மாவுக்கு வயசு உங்களைவிட ஆறு குறைவுதானுங்க” என்று கூறிவிட்டு, பதில் ஏதும் எதிர்பாராதவன்போல வேறு பக்கமாகச் சென்றுவிட்டான். தாழைப்பட்டியாருடைய கோபம், அவருடைய மோட்டார் சாத்தப்பன் மோட்டாருக்கருகே எப்படி அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்ததோ, அதுபோல தன்னாலே சுருண்டு கொண்டது.
* * *
‘பெரிய சாவு’ பற்றிய பேச்சு அடங்க நாலைந்து நாட்கள் பிடித்தன. இதற்குள், வடிவும் அவள் புருஷனும் வந்து சேர்ந்தார்கள். ஊரார் கூட்டம் குறைந்து வீட்டிலுள்ளவர்கள் மட்டும் ‘நிலைமைகளை’ப் பற்றிப் பேசிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்குள் சாத்தப்பன் ‘சீமான்’ நிலையில் இருக்கிறான் என்ற உணர்வும், அதற்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற போக்கும் வடிவமெடுத்துவிட்டது.

“தம்பியோட நினைவுதான் அம்மாவுக்கு... இல்லையானா இன்னும் பத்து வருஷத்துக்காவது இருப்பாங்க.”

தாழைப்பட்டியார் அவ்வளவு பரிவுடன் பேசியது பலருக்கு விந்தையாக இருந்தது. சாத்தப்பன் பார்வையிலேயே இருந்த குறும்புத்தனத்தின் பொருள் மற்றவர்களுக்கு விளங்க வில்லை. தருமாம்பாளைத் தனக்குத் தருகிற எண்ணத்தோடு இருந்தபோது இதே பரிவு கனிவு தாழைப்பட்டியாருக்கு இருந்தது. அந்தப் பழைய நாட்களை இருவரும் நினைவு படுத்திக் கொண்டனர். இருவரைக் காட்டிலும் அந்த நாட்களை அதிக அளவு நினைவுபடுத்திக் கொண்டு தத்தளித்தான் தங்கப்பன்.

தாழைப்பட்டியார் மிட்டாதாரர். ஆனால் செல்வம் புரளும் நிலையில் இல்லை. சாத்தப்பன் தனக்கு இதைவிட அதிகச் செல்வம் புரளும் இடம் வேண்டும் என்ற பேராசை காரணமாகவே, ஓடிவிட்டான் என்றோர் எண்ணம் மிட்டாதாருக்கு.

‘ரசவாதி’ ரங்கலால், பித்தளையைப் பொன்னாக்குபவன், ஆகவே அவன் தங்கையை மணம் செய்து கொண்டால் அளவற்ற பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தினால்தான் சாத்தப்பன் தருமாம்பாளை உதறிவிட்டான் என்று நினைத்துக் கொண்டார். இல்லையானால், தாராளமாகப் பழகிக் கொண்டு வந்தவன், ஏன் திடீரென்று மாறிவிடவேண்டும்.

எங்கே, தம்பி நாலைந்து நாளாகத் தென்படக் காணோமே.

ரங்கலால் ஆராய்ச்சிக் கூடத்திலேயே இருந்து விட்டேன்.

ஆராய்ச்சின்னு நீதான் தம்பி சொல்றே. ஊரிலே அந்த இடத்தைப்பத்தி தாழ்வாப் பேசறாங்க தெரியுமோ. அந்த ஆள் இருக்கறானே, என்னமோ அவனை மோசக்காரன்னு சொல்றாங்க.

தெரியாதவங்க எதையும் பேசுவாங்க. நாலு குருடர் ஒரு யானையைப் பத்தி என்னென்ன சொன்னாங்கன்னு கதை இருக்குதே, அதுபோல,

தம்பி, உன்னோட சினேகிதனை தாழ்வாகப் பேசுவது உனக்குக் கோபமாகத்தான் இருக்கும். தருமுவுக்குத் துளி கூட பிடிக்கவில்லை, நீ அந்த இடத்திலே பழகறது.

தருமு மட்டுமில்லே ஊரேன்னு சொல்லலாம்...
ஊர் எதையும் பேசும். சும்மாவா பெரியவங்க சொன்னாங்க, உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாதென்று...

இவ்விதமான ‘பேச்சு’தான் முறிவுக்குத் துவக்கமாக இருந்தது. பிறகு நிலைமை வேகமாக வளர்ந்தது.

நம்ப அந்தஸ்துக்குத் தகாது தம்பீ...

தலை எறக்கமா இருக்குதப்பா...

இந்த விஷயத்திலே நான் சற்று கண்டிப்பாகத்தான் இருப்பேன்... ஆமாம்!

இந்த இடத்துச் சம்பந்தம் வேண்டுமானா, உன் போக்கை மாற்றிக் கொண்டாகணும்.

உன்னைக் கண்டாலே தருமு வெறுப்படையுது... நானுந்தான்... நீ இங்கே அதிகமாகப் பழகாமல் இருக்கிறது நல்லது...

உள்ளே யாரும் இல்லை சாத்தப்பா! இப்படித் திண்ணையிலே உட்காரு... பேச்சுக் குரல் கேட்குதேன்னு யோசிக்கிறாயா... உன் தம்பியோட குரல்தான்...

எதுவோ பாட விஷயமாகத் தருமுவோடப் பேசிக் கொண்டிருக்குது தங்கம்...

தருமுவைப் பத்தி நினைப்பை விட்டுவிடு சாத்தப்பா. நான் வேறே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். தருமுவோட சம்மதத் தோடத்தான்... உன் தம்பி தங்கப்பனுக்கே கொடுத்து விட முடிவு செய்திருக்கிறேன்...

இப்படிப் படிப்படியாக, ஆனால் வேகத்துடன், நிலைமை வளர்ந்தது. சாத்தப்பன் வருத்தப்பட்டதாகவோ, கோபித்துக் கொண்டதாகவோ தெரியவில்லை. ரங்கலாலிடம் பழகுவது அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. இந்த நிலையில்தான் சாத்தப்பன், எவரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டே ஓடி விட்டது!

சாத்தப்பனும் தாழம்பட்டியாரும் இவை பற்றிய நினைவிலே நெடுநேரம் ஈடுபட்டிருந்தனர்.

“தம்பீ! உன் கலியாணத்துக்குக் கூடவா ஒரு கடுதாசி போடக்கூடாது” என்று கேட்டார் தாழப்பட்டியார்.

“போடாமல் இருப்பேனா... கலியாணம் ஆகிறபோது?” என்று சாத்தப்பன் சொன்னது தாழப்பட்டியாரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

“கலியாணம் ஆகவில்லையா!... அப்படியா... அந்தப் பெண்...?”

“ரங்கலாலோட உடன்பிறந்தாளா...? அந்தப் பெண் இறந்து போய்விட்டாள்...”

எவளைக் காதலித்தானோ, எவளுக்காக ஊரையும் உறவையும் விட்டுவிட்டு ஓடினானோ, அவள் இறந்து போய் விட்டாள். மனம் உடைந்து போய், திருமணமே வேண்டாமென்று இருந்து வருகிறான் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்ட தாழம்பட்டியாருக்கு, தனக்கு மற்றொரு பெண் இல்லையே என்ற வருத்தமே கிளம்பி வாட்டிற்று. ஈயச் சுரங்கம்! இலட்சக்கணக்கில் வருமானம்! படகு மோட்டார்! எவள் கொடுத்து வைத்திருக்கிறாளோ, என்று எண்ணிக்கொண்டார்; வேதனையும் அடைந்தார்.

“தம்பி! சப் ஜட்ஜு வேலை உனக்குப் பிடிக்குமா...” என்று ஒருநாள் சாத்தப்பன் கேட்டபோது, தங்கப்பனுக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தருமுவுக்கு உள்ளத்தில் ஆவல் குடைந்திடலாயிற்று. தாழம்பட்டியாருக்கோ’ மகிழ்ச்சி தாங்க முடியாத அளவு பொங்கிற்று. தலை அசைத்தான் தங்கப்பன். ஏற்பாடு செய்கிறேன் என்று சுருக்கமாகப் பதிலளித்தான் சாத்தப்பன். ஒரு வாரம் முடிவதற்குள், தங்கப்பன் சப் ஜட்ஜு வேலையில் அமர்ந்தான்.

சாத்தப்பனுடைய செல்வாக்குப் பற்றிய பேச்சு ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.

குத்தாலம் சொன்னார் “எனக்கு அப்போதே தெரியும். அவனோட ஜாதகம் அப்படிப்பட்டது என்பது அவன் கல்லூரியிலே படிக்கிறபோதே, நான் அவனுடைய சிபாரிசு” வேண்டும் என்று கேட்டேன். நமக்குக் “கொடுப்பினை இல்லாததாலே சாத்தப்பன் உதவி செய்யவில்லை. அப்போதே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, எனக்குத்தான் கல்லூரி புது மண்டபக் காண்ட்ராக்டு கிடைத்திருக்கும்” என்று கூறினார், ஏக்கத்துடன்.

“பாருங்களேன், அவரோட செல்வாக்கை. தம்பி! உனக்கு ஜட்ஜு வேலை வேணுமான்னு கேட்டாராம். தங்கப்பன் தலை அசைத்தானாம்; பத்தே நாளிலே ஜட்ஜு வேலை வீடு தேடி வந்திருக்குது. அப்படி அல்லவா இருக்கவேணும்” என்றான் சின்னப்பன்.

“அப்படிப்பட்ட ஓர் அண்ணன் இருக்கிறது தங்கப்பனுக்கு ஒரு பெருமையில்லையா” என்று சொல்லிவிட்டு, தன் அண்ணன் ஆறாயிரம் கடன்பட்டு அதைக் கொடுக்கமாட்டாமல் மஞ்சள் கடிதம் நீட்டியதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டார் மகமது.

அந்த வட்டத்து வணிகர் சங்கம், ஒரு வரவேற்பு வைபவம் ஏற்பாடு செய்தது, சாத்தப்பனுக்கு.
சப்ஃ ஜட்ஜ் தங்கப்பனுடைய அண்ணன், என்ற காரணம் காட்டியதும், அமைச்சர் ஒருவரே, வைபவத்துக்குத் தலைமை வகிக்கச் சம்மதமளித்தார். அவருக்கு அடுத்த முறை அத்தொகுதியில் நிற்கவேண்டும் என்ற விருப்பம்; விழா மூலம் அந்த வட்டத்து வணிகர்களின் நட்பு கிடைக்கும் என்ற எண்ணம். கணக்கு சரியாகவே போட்டிருந்தார் அமைச்சர். பாராட்டும் பிரமாதமாக அமைந்தது. பிரத்தியேக ‘நிருபர்’, புகைப்படக்காரர் புடைசூழ அமைச்சர் வந்திருந்தார்.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்று நமது முன்னோர்கள் சொன்ன பொன்மொழியின்படி திருவாளர் சாத்தப்பிள்ளைவாள், செல்வம் தேடிச் செல்வாக்கு தேடி நமக் கெல்லாம் பெருமை தேடி கொடுத்திருக்கிறார். சில வேளைகளில் வியாபாரிகளைக் கண்டிக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட நாணயமான, நேர்மையான வியாபாரிகளை அல்ல. இவர்கள் நமது நாட்டுக்கே தூண் போன்றவர்கள். எங்கள் அரசாங்கம் இத்தகைய வியாபாரிகளுக்கு எல்லாவிதமான உதவியும் செய்யச் சித்தமாக இருக்கிறது.

அமைச்சரின் ‘பேருரை’ கேட்டு, வைபவப் பொறுப்பாளர் களான குத்தாலம் குழுவினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

சாத்தப்பன், பேசும்போது அடக்கம், தெளிவு, அனுபவம் எல்லாம் ததும்பியதாகக் கூறிக் களிப்படைந்தனர்.
* * *

விழா முடிந்ததும் பயணிகள் விடுதியில் சென்று தங்கி யிருந்த அமைச்சரிடம் போலீஸ் மேலதிகாரி ஒருவர் சந்தித்துச் சில விநாடிகள் பேசினார். மறுநாள் காலையில் புறப்பட இருந்த அமைச்சர் அவசர அவசரமாக அப்போதே புறப்பட்டுவிட்டார். வணிகர்கள் ஒருவரையும் கண்டு பேசாமல் அமைச்சர், சென்றதும், ஒரு ‘வேன்’ நிறையப் போலீசை அழைத்துக் கொண்டு, மேலதிகாரி, சாத்தப்பன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று, அவனைக் கைது செய்தார்கள்.

ஊரே திடுக்கிட்டுப் போய் விட்டது. திகில் கப்பிக் கொண்டது. தாழம்பட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. விழா காண வந்திருந்த தங்கப்பன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். தருமாம்பாள் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சாத்தப்பன் துளியும் கலங்கவில்லை. கைகளைக் கூட நீட்டினான். விலங்கு போடுவதாக இருந்தால் போடுங்கள் என்று கூறியபடி, முடுக்காகப் பேசினால் தன் வேலை சுலபமாகி இருக்கும், இவன் அமைதியாகவும் மரியாதையாகவும் பேசுகிறானே இவனிடம் நாம் பக்குவம் தவறி நடந்து கொள்வது முறையாக இருக்காதே என்று எண்ணிச் சங்கடப் பட்ட போலீஸ் மேலதிகாரி “என் கடமையைச் செய்கிறேன். வருத்தமாகக் கூட இருக்கிறது.” என்று சமாதானம் கூறினார். அதனால் என்ன! கடமையைச் செய்யும் போது கலங்கக்கூடாது. அதனால் நமக்கே சங்கடம் தொல்லை, ஆபத்து வருவதானாலும் கலங்கக்கூடாது” என்று சாத்தப்பன் போலீஸ் அதிகாரியிடம் பேசிடக் கேட்டு, தாழம்பட்டியார் திகைத்துப் போனார்.

“ஜாமீனில் விடுவார்களல்லவா சார்! நான் ஜாமீன் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்.” என்று தாழம்பட்டியார் கூறியதற்குப் போலீஸ் அதிகாரி பதிலளிக்கவில்லை, சாத்தப்பன் தான் பதில் கூறினான்.

“இது கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாயிற்றே... ஜாமீனில்விட மாட்டார்கள்” என்பதாக, போலீஸ் அதிகாரி புன்னகை புரிந்தபடி “ஐயா சகல விவரமும் தெரிந்து வைத்திருக்கிறார்” என்று சிறிதளவு குறும்புடன் கூறினார்.

“பார்த்தாயா மகமது! எனக்கு அப்பவே சந்தேகம்! என்னமோ மோசடி நடந்திருக்குது; இல்லையானா இந்தப் பயலுக்கு ஏன் இவ்வளவு செல்வம் என்று. கொள்ளை அடிச்சிருக்கான் பய! யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க என்கிற தைரியத்திலே இங்கே வந்து வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறான்.

“மோட்டாரைப் பார்த்தாயா, எல்லாம் பெரிசு.”

“ஊரைக் கொள்ளை அடிச்சா உனக்கும் எனக்கும் கூடத்தான் கிடைக்கும் இதைவிடப் பெரிய மோட்டாரு... பாடுபட்டுத் தேடின பணமாக இருந்தாத்தானே கணக்குப் பார்ப்பானுங்க. இது எப்படியோ வந்தது தானே...”

“ஈயச் சுரங்கம்னு சொல்றபோதே எனக்குச் சந்தேகம்... ஈயத்திலேயா இவ்வளவு பணம் புரளும்னு...”

“கொள்ளை மட்டும் இல்லையாமே, கொலைக் குற்றமே இருக்குதாம், - ஆசாமி பேர்லே...”

“வெளிவேஷம் போட்டுக் கொண்டு நம்மைப் போல இருக்கிறவங்களை ஏமாற்றிவிடலாம்... சர்க்காரு சும்மாவிடும்மா... பார்த்தாயா, அவன் கழுத்திலே போட்ட மாலை கூட வாடலே, வதங்கலே, அதுக்குள்ளே கையிலே மாட்டி விட்டாங்க, காப்பு, இரும்புக் காப்பு...”

“உள்ளபடி நாணயமான தொழில் செய்யறவா, ஏன் இத்தனை வருஷம் தலைமறைவா இருக்கவேணும். சொல்லு.”

“எனக்கு அப்பவே சந்தேகம்.. நான் அப்பவே சொன்னேன் நம்ம பூசாரிகிட்டே, அய்யோவ்! இதிலே என்னமோ மர்மம் இருக்குதுன்னு...”

“சர்க்காரே! தன்னோட உள்ளங்கையிலே இருக்கிறதா காட்டிக்கிட்டானே பார்த்தாயா, இப்போ காட்டுடா கையைன்னு வந்துட்டாரு டி.எஸ்.பி.

“சப்-ஜட்ஜ் வேலை, தம்பிக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னாங்களே. அப்போதே எனக்குச் சந்தேகம். எப்படி இப்படிப்பட்ட செல்வாக்கு கிடைச்சிருக்கும்னு...”

“அதெல்லாம் செல்வாக்கும் இல்லே மண்ணும் இல்லை... பழமொழி இல்லே காக்கா உட்கார பனம் பழம் விழன்னு; அது போல... தங்கப்பன் என்ன தகுதியில்லாதவனா... சப்-ஜட்ஜு வேலை தன்னாலே வராதா அவனுக்கு. கோர்ட்டிலே கூட, அதிகமாக அலட்டிக் கொள்றதில்லே தங்கப்பன்... மத்த வக்கீல் களைப் போல... பல பேர் அதைப் பார்த்து அப்பவே சொல்லி இருக்கறாங்க தங்கப்பன் ஜட்ஜு வேலைக்குத் தகுதின்னு...”

“சப் ஜட்ஜு வேலை, தம்பிக்குக் கிடைக்கப் போகிற விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டிருக்கு பயலுக்கு. ‘இதுதான் சமயம்னு போடு போட்டிருக்கிறான், நான் வாங்கித் தர்ரேன் சப்-ஜட்ஜி வேலைன்னு...”

“அப்படித்தான் இருக்கவேணும். இப்படிப்பட்ட கொலைக்காரப்பயலா உன்னோட அண்ணன் என்று நாலு பேர் கேட்டா, சப் - ஜட்ஜி மனசு என்ன பாடுபடும். தலை இறக்கமாகத்தானே இருக்கும்.”
“சந்தேகமா அதுக்கு இவன் இப்பத்தானா தலை இறக்கமான காரியத்தைச் செய்யறான். அந்தக் காலத்திலேயே எவளையோ இழுத்துக்கிட்டு ஓடிட்டானே, அது என்ன காரியம். குடும்பத்துக்கு கெட்ட பெயர் தேடினவன் தானே...”

“பாவம் தங்கப்பன், படிச்சி பட்டம் பெற்று, ஒரு நாணயமான வக்கீலாகி குடும்ப கௌரவத்தைக் காப்பாத்தினான்... இப்ப இவன் வந்து சேர்ந்தான் அதைக் கெடுக்க.”

“வாயைத் திறக்கிறானா பார்த்திங்களா... இப்பவும் ஓர் அகம்பாவம்.”

“தலைக்கு மேலே போகுது, அது ஜான் போனா என்ன, முழம் போனா என்ன என்கிற போக்கு.”

“எல்லாப் போக்கும் பத்து நாளிலே தெரிந்துவிடும்...”

எல்லோருடனும் சேர்ந்து இதே முறையில் பேசினாலும், மகமது மோட்டார் டிரைவரைச் சந்தித்து தகவல்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பதிலே ஈடுபட்டார். விளக்கம் தருகிற விதமான தகவல் கிடைக்கவில்லையே தவிர, சாத்தப்பன் கைது ஆனது பற்றியோ என்ன நேரிடும் பற்றியோ டிரைவர் துளியும் கலக்கமோ கவலையோ கொண்டதாகத் தெரியவில்லை. வழக்கப்படி மோட்டாரைச் சுத்தப்படுத்துவதும், கதைப் புத்தகம் படிப்பதும் காப்பிக் கடைக்குப் போவதுமாக இருந்து வந்தான். தாராளமாகச் செலவும் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட மகமது மேலும் திகைப்படைந்து போனார்.

“ஏம்பா! டிரைவர், எஜமானரு போலீசிலே சிக்கிக் கொண்டாரே என்று பயப்படாதே. நாங்க எப்படியும் அவரை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்வோம். சமயம் வரணுமேல்லோ...”

“இது சகஜமுங்க... ஐயாவுக்கு இப்படிப்பட்ட ஆபத்து அடிக்கடி மிரட்டும்; ஆனால் அவரு எல்லாவற்றையும் விரட்டி அடித்து விடுவாரு... வல்லமை சாலி...”

“பதறது எங்க மனசு... இப்படிப்பட்டவர் பேர்லே கொலை, கொள்ளை போன்ற அபாண்டம் வந்து விழறதைப் பார்த்து... இதுக்கு முன்னாடி எப்பாவாவது போலீசு பிடிச்ச துண்டா உன்னோட முதலாளியை...”

“பல மாதிரியான கேசு தொல்லை ஏற்படும். ஒரு தடவை இவருடைய தொழிலிலே பங்காளியை இவர் கொலை செய்ய முயற்சி செய்தார்னு கேசு போட்டாங்க. ஒரு ருஜுவும் கிடைக்கல்லே... விடுதலை கிடைச்சுது...”

இந்தத் தகவலை எடுத்துக் கொண்டு மகமது தன் நண்பர்களைத் தேடிக் கொண்டு சென்றான். அனால் சூளை சின்னப்பன், இதைவிட அதிசயமான தகவலைச் சேகரித்து வைத்திருந்து அதைக் கூறி மகமதை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டான்.