அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அப்போதே சொன்னேன்
5

விவரம் யாவும் தெரியும் தம்பி! களவாடி பிடிபட்டான், உன்னால் விடுதலை பெற்றான். ஊரெல்லாம், சுற்றி அலைந்தான்... கடைசியில் என்னிடம் அடைக்கலமானான், டிரைவராக. தன் கதையை விவரமாகச் சொன்னபோது, முத்துமாலை பற்றிக் கூறினான்... நீ தான் அதைப் பெற்றுக் கொண்டாய் என்பதை இங்கு வந்த பிறகுதான் எனக்குத் தெரிவித்தான். முத்துமாலையைப் பெற்றுக் கொண்டவன் என் தம்பிதான் என்பது எனக்குத் தெரிந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன்... நானே தான், உனக்குத் தெரியாமல், அதை உன்னிடமிருந்து எடுத்தேன்... எடுத்தேனா! களவாடினேன்... அதை எடுக்கும் போது உன் பெருமையை எண்ணாமலில்லை. ஒரு கண சபலம் காரணமாக, அந்த முத்துமாலையை நீ பெற்றுக் கொண்டாயே தவிர, அது அளவுப் பொருள் ஆகவே அதைத் தருமுவுக்குக் கொடுக்கக்கூடாது, எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்று எண்ணி, ஒளித்து வைத்திருந்தாய் அல்லவா... அது ஒரு கணம் சபலத்துக்கு ஆட்பட்டுவிட்டாலும், உன் மனத்திலே உள்ள நேர்மை உணர்ச்சி அடியோடு மறந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறதல்லவா, அதனால் பெருமிதம் எனக்கு...

அப்போதே என்னை இழுத்துப் போட்டு உதைத்திருக்க வேண்டும் நீங்கள்...

உன்னையாடா தம்பி! சிறுவயதிலே அடிக்கடி பொறாமை காரணமாக என்மீது ஏதாவது பழி சுமத்துவாயே... அப்போது கூட நான் உன்னை அடித்ததில்லையே... நான் உன்மீது என் உயிரை அல்லவா வைத்திருக்கிறேன் உன்மீது எப்போதும் எனக்குக் கோபம் ஏற்பட்டதில்லையே... வாலிபத் துடிப்பு எனக்கு இருந்த நாட்களிலேயே...

முத்துமாலையை எடுத்ததுடன், அதை ஏன் அண்ணா! வடிவுக்குக் கொடுத்து; நீங்களாக வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள முனைந்தீர்கள்.

ஒரு சிறு விளையாட்டா தம்பி! வடிவு புருஷன் எப்படிப் பட்டவன், நேர்மையானவனா, பொருளைக் கண்டு நெளிபவனா என்று பார்க்க விரும்பினேன். பார்த்தேன்... பூரிப்பு எனக்கு அவனுடைய நேர்மையை உணர்ந்ததில்.

ஆமண்ணா! இவ்வளவு நேர்மையாளருக்கு மத்தியில், நான்... செ! எனக்கே வெட்கமாக இருக்கிறது... இந்தச் சுமையோடு நான், மற்றவர்களுக்கு நீதி வழங்கும் வேலையிலே இருக்க வேண்டும்... மனம் ஒப்பவில்லை அண்ணா! மனம் ஒப்பவில்லை...

களவுப் பொருளைப் பெற்றுக்கொண்டோமே என்ற பழியைப் பற்றிய மனச்சுமையைத்தானே குறிப்பிடுகிறாய்?

ஆமாம்... ஏன்... அது என்ன சாமான்யமான குற்றமா...

களவுப் பொருளைப் பெறுவது, தவறு; குற்றம்; மன்னிக்க முடியாத குற்றம். நான் மறுக்கவில்லை... ஆனால், தம்பி! உன்னிடம் தரப்பட்ட அந்த முத்துமாலை, மடத்திலிருந்து களவாடப்பட்டது உண்மை... ஆனால் அது மடத்துக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா?...

யாராவது மடத்துக்குக் காணிக்கை கொடுத்திருப்பார்கள்...

இல்லை, தம்பி! இல்லை. அந்த முத்துமாலை நம் முடையது, தம்பி! நம்முடையது! கொ. கொ. கொ. என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதால், கொடி கொண்டா மலை கொள்ளிச்சாமியாருடையது என்று ஆயிற்று. ஆனால், அது நம்முடையது. இந்தக் கொள்ளிச்சாமியார் மடம் வைக்காத முன்பு ஊரூருக்கும் சென்று உபதேசம் செய்து கொண்டிருக்கும் ‘போலி’யாக இருந்த வந்துபோது, நம்முடைய வீட்டிலே அப்பா இவனுக்கு ‘பூஜை’ நடத்தினார். அப்போது இவன் நம்முடைய வீட்டிலிருந்து களவாடிச் சென்றிருக்கிறான் இந்த முத்துமாலையை... போன பொருள்தான் திரும்பி வந்திருக்கிறது நம்மிடம்...

திடுக்கிட வைக்கிறீர்களே. இந்த விவரம் வந்திருக்கிறது நம்மிடம்...

ரங்கலால் மூலமாக... ரசவாதி ரங்கலால் தெரியுமல்லவா... இந்தச் சாமியார்கள் ஒவ்வொருவரை மயக்க ஒவ்வொரு வித்தை காட்டுவார்கள்... பலரை மயக்க நமக்கு ‘ரசவாதம்’ தெரியும் என்று கூறுவார்கள். அதிலே மயங்கிச் சேர்ந்து, சாமியாரின் பல அக்கிரமங்களுக்கு உடந்தையாக இருந்தவன் ரங்கலால். அவன் மூலமாகவே இந்த விவரம் அறிந்தேன்.
ரங்கலால் என்ன ஆனான்... அந்தப் பெண்...

ரங்கலாலா... அவன் முதலிலே என்னைத் தன் வலையில் விழ வைக்கலாம் என்று எத்தனித்தான்... முடியவில்லை அந்தப் பெண்ணுக்கும் ‘மோசடி’ வாழ்க்கை பிடிக்கவில்லை... நாணயமான ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு, தனியே சென்று விட்டாள்... இவன் எங்கோ பினாங்கோ, மோரிசோ ஓடி விட்டான்.

உள்ளபடி இது நம்முடையது என்பதைக் கேட்க, ஓரளவுக்கு எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது என்றாலும்...

நீதிபதி வேலை பார்க்க மனம் இடம் தரவில்லை... ஒருவிதத்திலே, தம்பி! உன் எண்ணம் சரியானதுதான்... பொருள் நம்மிடமிருந்து களவாடப்பட்டது என்றாலும், அதை நாம் சட்டத்துக்கு உகந்த முறையிலேதான் திரும்பப் பெற வேண்டும்; குறுக்கு வழியில் அல்ல... அதை நான் ஒப்புக் கொள்கிறேன்...

மேலும், கொள்ளிச்சாமியாரின் அக்கிரமம் ருஜுப் படுத்தப் பட்டும், முத்துமாலை நம்முடையது என்பது நிரூபிக்கப்பட்டாக வேண்டுமல்லவா...

ஆமாம்... அதற்கான வேலைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்... அதற்கு வடிவு புருஷன் ஏற்றவன்... அவன் எப்படியும் கண்டு பிடித்துவிடுவான்...

இதெல்லாம் ஓரளவு மனத்துக்கு ஆறுதல் தருவதாக அமைந்திருப்பினும், முத்துமாலை களவாடப்பட்டிருக்கிறது மடத்திலிருந்து; அந்தக் குற்றவாளியை நான் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தப்பி விட உடந்தையாக இருந்திருக்கிறேன்; நீங்களோ அவனை உங்களிடம் வேலைக்கே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தவறானதாகத்தான் தோன்றும், தம்பீ! முழு விவரம் தெரியாத முன்பு, இவன் மடத்திலே தங்கி கொள்ளிச்சாமிக்கு ஓர் அபூர்வமான தைலம் தயாரித்துக் கொடுத்திருக்கிறான்... அது கொடிய குஷ்ட நோயைத் தீர்க்கக் கூடியது... இந்தச் சாமியார்; அதை மருந்து என்று கூறாமல், தன்னுடைய மாய சக்தி என்று கூறி ஏய்த்து வருவது இவனுக்குப் பிடிக்காமல், தகராறு கிளப்பி
யிருக்கிறான்.

தனக்குத் தருவதாகச் சொன்ன தொகையைக் கொடுக்கும் படி வற்புறுத்தி இருக்கிறான். மடத்துத் தலைவன் கொடுக்க மறுக்கவே, ஒரு நகைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுவது என்று தீர்மானித்திருக்கிறான். அதுதான் பிறகு ‘கொள்ளை’ என்ற வடிவும் கொண்டது.

என் மனச் சுமையிலே பெரும் அளவு குறைந்து விட்டது அண்ணா! ஆயினும், நான் நீதிபதியாக இருக்க மட்டும் மனம் இடம் தரவில்லை...

என் தம்பி நீதிபதியாக இருக்கிறான் என்ற பெருமிதம் எனக்கு இனிப்பளிக்கும்; அதை இழக்க மனமில்லை. என்றாலும், நீதித் துறையிலே உள்ளவர்கள் ஒரு துளியும் எந்த விதமான களங்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
* * *

மாதங்கள் உருண்டோடின; தங்கப்பன் வேலையை விட்டு விலகி விட்டான். வக்கீல் வேலை கூடப் பார்க்கப் போவதில்லை என்று கூறிவிட்டான். அண்ணனுடன் சேர்ந்து வியாபாரம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டான்.
* * *

நான் அப்போதே சொன்னேனே கவனமிருக்கிறதல்லவா, சாத்தப்பன் பெரிய புள்ளி என்பதாக. தம்பியைக்கூட வேலையில் இருக்க வேண்டாம் என்று கூறி விட்டானாம்.

வேலையிலே என்னய்யா கிடைக்கும், ஆயிரம் இரண்டாயிரம் மாதம் இருக்கும். மாதம் ஓர் இலட்சம் புரளுமாமே. வியாபாரத்திலே...

என்னமோ போ! நம்ம ஊரிலே ஒரு பெரிய குடும்பம், இடையிலே பலவிதமான கஷ்டம் ஏற்பட்டாலும் இப்போது நிம்மதி அடைந்திருக்குது. அதுவரையிலே மகிழ்ச்சிதானே, யாருக்கும்.

நான் அப்போதே சொன்னேன். அண்ணன், தம்பியோ ஒற்றுமையைப் பார்க்க வேண்டுமென்றால், சாத்தப்பன் தங்கப் பனைப் பார்க்க வேண்டுமென்று, கல்லூரியிலே படிக்கிற காலத்திலே அவ்வளவு ஒற்றுமை...

சாத்தப்பனுக்குத் தன் தம்பியிடம் அவ்வளவு பாசம்...

தங்கப்பனுக்கு மட்டும்! அண்ணன் பேரிலே வழக்கு வந்தபோது எவ்வளவு கவலை, பாவம்... ஆள் துரும்பு துரும்பாக இளைத்துப் போய் விட்டானே...

எவ்வளவோ கஷ்டப்பட்டு அண்ணன் பேரிலே ஒரு குற்றமும் வராமல் காப்பாற்றினான் இல்லையா...

தருமு அதைத்தான் ஊரெல்லாம் பெருமையாகப் பேசிக் கொள்வதாகக் கேள்வி.

சாத்தப்பனுடைய புதிய வியாபாரக் கம்பெனி துவக்க விழாவுக்கு ஒரு மந்திரி வாராராமே...

கேள்விப்பட்டேன்... முந்தி வந்த மந்திரி இல்லே... இவர் வேறே...

பந்தல் பெரிய அளவு... விருந்து வைபவம் பிரமாதமாகத் தான் இருக்கும். பெரிய வீட்டு விசேஷமில்லையா...

தருமுகூடத் தலை முழுகாமலிருப்பதாகச் சொல்றாங்களே...

நான் அப்பவே சொன்னேன் கவனமிருக்கிறதா, பெரிய வீட்டு மதிப்பு எப்பவும் குறையாதுன்னு...
குளத்தங்கரையிலே வழக்கம்போல மாநாடு நடைபெற்றுக் கொண்டு வந்தது.

சாத்தப்பன் தங்கப்பன் ஆகியோருடைய புதிய ‘மருந்தகம்’ துவக்கப்பட்டது.

மாநாட்டினர், நோய் நொடி மருந்து வகை, அதிலே கிடைக்கக்கூடிய இலாபத்தின் அளவு ஆகியவற்றிலே கவனத்தைத் திருப்பிக் கொண்டனர்.

“நம்ம முகமதுகூடத்தான் என்னமோ ‘சூரணம்’ செய்வதாகச் சொல்றாரு. யாறு சீந்துவாங்க...” என்று கேலி பேசினார் குத்தாலம்.

எல்லாத்துக்கும் ஒரு காலம் வரணுமோல்லோ என்று மகமது பதிலளித்தார்.

முற்றும்


‘காஞ்சி’ – 1968