அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அப்போதே சொன்னேன்
4

புரிகிறது, புரிகிறது, நீங்கள் எங்கே பொடி வைத்துப் பேசுகிறீர்கள் என்பது. நான் ஒன்றும் முட்டாள் அல்ல. இதைக்கூடப் புரிந்து கொள்ளாமலிருக்க. முதலிலே உங்கள் அண்ணனோடு பழகினேன். அவரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தேன். பிறகு என் விருப்பத்தை மாற்றிக் கொண்டு உங்களை ஏற்றுக் கொண்டேன்; அதைத் துணிச்சல் என்று கூறுகிறீர்கள். பைத்தியம். பைத்தியம். எல்லாம் உங்கள் அண்ணனுக்கே தெரியும், என் விருப்பம் என்ன என்பது என்றாள் தருமு.

இது என்ன புதுக்கரடி விடுகிறாய் என்று கேட்டான் தங்கப்பன்.

கரடியுமில்லே. காவடியுமில்லே. உண்மையைத்தான் சொல்லுகிறேன். எனக்கு ஆரம்ப முதலே உம்மிடம் தான் உண்மையான அன்பு. அப்பா, அண்ணனைத் தேர்ந்தெடுத்த தால், தலை அசைக்க வேண்டி இருந்தது. தலை மட்டும்தான் அசைந்தது. உள்ளம் அல்ல. எப்படியாவது என் உண்மையான விருப்பத்தை உங்கள் அண்ணனிடம் தெரிவித்து விட வேண்டும் என்று முயற்சி செய்தேன். கடைசியில் அதிலே வெற்றியும் பெற்றேன். ரசவாதி ரங்கலாலை மறந்துவிடவில்லையல்லவா. அவனுடன், இருந்தாளே, ஒரு பெண், கவனிமிருக்கிறதல்லவா ‘மைக்கண்ணி’ காதிலே விழுகிற முறையில். அதைக் கேட்ட பிறகுதான், உன் அண்ணன், எங்கள் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டார். ஊம், என் அப்பாவும் வேறு ஏதேதோ காரணம் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். உண்மையான காரணம், நான் உங்களைத்தான் விரும்புகிறேன் என்பதை நானே பக்குவமாக உங்கள் அண்ணன் காதிலே விழும்படிச் செய்தது தான் என்று கூறிவிட்டு, தருமு, எப்படி என் சாமார்த்தியம், உங்களுக்கு உண்டா அப்படிப்பட்ட சாமார்த்தியம்! என்று கேலிப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே கேட்டாள். தங்கப்பன் கண்களில் நீர்த்திவலைகள் தோன்றின. ‘தருமு! உன்னுடைய சாமார்த்தியமும் என்னுடைய சாமார்த்தியமும் ஒருபுறம் இருக்கட்டும். என் அண்ணனுடைய தியாக சுபாவத்தைப் பார்த்தாயா... எனக்காகத் தனக்குக் கிடைக்க இருந்த நிலையை இழந்து விடச் சம்மதித்தைக் கவனித்தாயா! துளியும், மனம் கோணாமல், தன்மீது வேண்டுமானால் ஏதாவது பழி ஏற்பட்டுவிட்டுப் போகட்டும் தன் தம்பியின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்றல்லவா என் அண்ணன் எண்ணி நடந்து கொண்டார். உத்தமர்களால் மட்டுந்தானே அது முடியும் என்று உருக்கமாகக் கூறினான்.

தம்பியின் விருப்பம் என்று கூறினீர்களோ, அப்படியென்றால், உங்களுக்கும் என்மீது அன்பு என்றா சொல்கிறீர்கள்.

வெறும் அன்பு அல்ல; காதல்; உயிர். ஒவ்வொரு கணமும் துடித்தபடி இருந்தேன். உன் அப்பா, உன்னை எனக்கு ‘அண்ணி’ ஆக்குவது என்று தீர்மானமாக இருப்பதையும் என் அண்ணன் அதற்கு இணங்குவதையும் கண்டு பதறினேன். மீறிட வழி இல்லை. நீயோ, என் அண்ணனிடம் உன் மனத்தையே பறிகொடுத்து விட்டவள்போல நடந்து கொள்வதைக் கண்டேன். எங்காவது ஓடி விடுவது என்று முடிவு செய்தேன்... கடைசியில் நான் அல்ல, அவர் ஓடினார் ஊரை விட்டு; பழி ஏற்றுக் கொண்டு... உன்னை நான் அடைந்தேன்... அவர் இப்போது கள்ளன் என்ற பெயருடன் கோர்ட்டிலே நிற்கிறார். எல்லாம் எனக்கு மனத்துணிவு இல்லாததால், ஆனால் இனி அப்படி இருக்கப் போவதில்லை என்று உறுதி கலந்த குரலில் பேசினான். தருமு அந்தக் குரலில் இருந்த உறுதியைக் கவனிக்கவில்லை. தங்கப்பன் தன்னிடம் காதல் கொண்டு துடிதுடித்துக் கிடந்ததாகக் கூறினானே அதைக் கேட்டதாலே எழுந்த உருக்கத்தின் பிடியிலே இருந்தாள்.

“என்னங்க... நான்தான் ‘மைக்கண்ணி’யிடம் என் விருப்பத்தைப் பேசி அவர் காதில் விழும்படியாகச் செய்தேன்; நீங்கள் எப்படி உங்கள் எண்ணம் அவர் காதில் விழும்படிச் செய்தீர்கள் என்று கேட்கலானாள்.

எல்லாம் அதே மைக்கண்ணி மூலமாகத்தான். உன்னுடைய விருப்பத்தைப் பற்றி என்னிடம் விசாரித்தாள். அண்ணன் ஏற்பாடு என்றுதான் எண்ணுகிறேன். நானும் துணிந்து கூறிவிட்டேன். எங்காவது கண்காணா தேசத்துக்கு ஓடிவிடப் போகிறேன் என்பதாக. அப்போது அந்த “மைக்கண்ணி விளையாட்டுக்காகப் பேசுவதாக எண்ணிக் கொண்டேன். அவள் சொன்னாள்: நீங்கள் ஏன் ஓட வேண்டுமா? உங்கள் அண்ணனை இழுத்துக் கொண்டு நான் ஓடிவிடுகிறேன் என்பதாக.

கடைசியில் அப்படியே அல்லவா நடந்துவிட்டது.

எப்படி நடந்தது? நம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அண்ணன், என்ன அந்த மைக்கண்ணியுடனா வாழ்க்கை நடத்து கிறார். இவள் வேறு எங்கோ சென்றுவிட்டாள். அண்ணன் திருமணமே செய்து கொள்ளவில்லையே... என்று கூறிக் கொண்டே, பெருமூச்செறிந்தான்.

மடாலய மானேஜர், முத்துமாலை, மடாலயத்துடையது என்பது பற்றியும், வேறு சில பொருள்களும் இந்த மாலையுடன் களவாடப்பட்டதாகும், அதனைக் கொள்ளை என்றே கூறலாம் என்றும், ஏனெனில் மடாதிபதியிடம் ‘உபதேசம்’ பெறுபவனைப் போல வந்த ஒருவன், நகைப்பேழையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டதாகவும், விவரம் கூறினான்.

மடாதிபதியின் வாக்குமூலம் சாதகமளிக்காதபோது, மானேஜரின் வாக்குமூலத்தைக் கொண்டு மட்டும், முத்துமாலை மடாலயச் சொத்து என்று தீர்மானிக்க சட்டம் இடம் கொடுக்குமா என்பதுபற்றி சுவையாக ஊரிலேயே பேசப்பட்டபோது, குளத்தங்கரை மாநாட்டிலேயா நடைபெறாமலிருக்கும்.
* * *

வேறு இடங்களில் சட்டம் பற்றிய சுவையான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தங்கப்பன் அறையில் சூடான பேச்சும், டிரைவரிடம் நடைபெற்றது.

“என்னிடம் ஒரு முழக்கயிறு கொடுத்துவிட்டு, பிறகு உன் விருப்பம் போல் நடந்து கொள். வேறு நான் என்ன சொல்ல முடியும். உன்னைத் தடுத்து நிறுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறது. வருவது வந்துதான் தீரும். நடப்பது நடக்கட்டும். ஆனால் நடைபெறக் கூடாதது நடைபெறுவதற்குள் நான் கண்ணை மூடிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். கடைசி முறையாகக் கேட்கிறேன். நீ கோர்ட்டிலே சாட்சி கூறத்தான் போகிறாயா? அண்ணனுடைய சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டாயா...”

“உங்கள் அண்ணனுடன் தொடர்பு ஏற்பட்ட நாளிலிருந்து அவர் சம்மதம் பெறாமல் நான் எந்தக் காரியத்தையும் செய்த தில்லை. இப்போதும் அப்படித்தான்...”

“கோர்ட்டிலே, என்னதான் சொல்லப் போகிறாய்...”

“வேடிக்கையான கேள்வியைக் கேட்கிறீர்களே, கோர்ட்டிலே என்ன சொல்லுவேன்? உண்மையைத்தான்!”

“உண்மையை... சரி... உண்மையைச் சொல்லு... என் உயிரைக் குடி... ஊரார் இழிவு பேசட்டும்... என்ன வேண்டுமானாலும் பேசட்டும்... எனக்குக் கவலை இல்லை... நான் ஏன் கவலைப்பட வேண்டும்... எதற்காகக் கவலைப்படுவதற்குத் தேவையான உணர்ச்சியுள்ள உருவம் இருந்தால்தானே...”

“பரவாயில்லையே! மடாலயத்தில் இல்லாமலேயே மடாலயப் பேச்சுப் பேசுகிறீரே வழக்கறிஞர் தொழில் பார்த்ததை விட, மடாதிபதி வேலையைப் பார்த்திருக்கலாம் போல இருக்கிறதே. வேதாந்தமே பேசுகிறீர், செய்வதை எல்லாம் செய்துவிட்டு, சிக்கிக் கொள்கிறபோது, இந்த வேதாந்தம் எங்கிருந்து வந்து சேர்ந்து கொள்கிறது பல பேர்களிடம்... பேசுமய்யா பேசும்... எல்லா வேதாந்தத்தையும் ஒரேயடியாகப் பேசிவிடும்...”

தங்கப்பனால் டிரைவரிடம் தொடர்ந்து பேச முடியவில்லை.

“இந்த முத்துமாலையைப் பற்றிய விவரம் தெரியுமா உனக்கு...?”

“தெரிந்த விவரத்தைக் கூறத்தான் வந்திருக்கிறேன்.”

“என்ன விவரம் கூறப் போகிறாய். இந்த முத்து மாலை பற்றி...”

“இது 64 நல்முத்துக்கள் கொண்ட மாலை, அதிலே ஆறு முத்து சொத்தை. மொத்தத்திலே தரமான மாலை...”

“நகைக்கடை அல்லய்யா, இது. கோர்ட்... குற்றவாளி களைப் பற்றிய விசாரணை நடக்கிற இடம்... நகைக்கடை அல்ல...”

“இது நகைக்கடை அல்ல என்பதாலேதான், நகை பற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்திருக்காதே என்று இதனைச் சொல்லுகிறேன். மாலையின் விலைமதிப்பு ஏழாயிரம் ரூபாய் இருக்கும்.”

“முத்துமாலையின் விலை பற்றிய கேள்வியே இங்கே எழவில்லை. இதுபற்றி... வழக்குக்குத் தொடர்பான விவரம் கூறலாம்... நகை வியாபார, விவரம் தேவையில்லை...”
“ஐயா, எனக்கு அது தேவை. நான் ஒரு நகை வியாபாரி, ‘ஐயா!”

சாத்தப்பரிடம் மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறேன்... நகை வியாபாரத்திலே பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதனால்... ஏன்... இந்த மாலையாலே கூட எனக்குக் கஷ்டம். நஷ்டம், ஏராளம்.”

“இந்த மாலைக்கும் உனக்கும் என்ன தொடர்பு...”

“இந்த மாலையைக் கொடுத்ததே நான்தானே... என்னிடமிருந்து இந்த மாலையைப் பெற்றுக்கொண்ட வரும் இங்கே தானே இருக்கிறார்!”

“என்ன! என்ன! தண்ணீர்! தண்ணீர்! மெல்ல! மெல்ல! - என்று பலரும் பதறிக் கூறினர், தங்கப்பன் திடீரென்று மயக்கமாகிக் கீழே விழுந்தது கண்டு, வழக்கு மன்றத்திலே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

மனத்திற்கு ஏதோ அதிர்ச்சி! அதனால் ஏற்பட்ட மயக்கம்; உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை... என்று கூறினார்கள், தங்கப்பனைக் கோர்ட்டிலிருந்து மருத்துவ விடுதிக்கு எடுத்துச் சென்றபோது.
* * *

அப்போதே சொன்னேன் கவனமிருக்கிறதல்லவா; இந்த டிரைவர் டிரைவரல்ல; டிரைவராக வேலை பார்க்கிறானே யொழிய, இவன் சாத்தப்பனுடன் சரிசமமாகப் பழகுகிறான். ஆசாமி வெறும் வேலையாளாக இருக்க முடியாது என்று... எனக் குத்தாலம் கூறினார்.

அவனோட சாட்சியம் வந்ததும் கேசு தூள்தூளாகி விட்டதே.

ஆகாமலிருக்குமா... நான்தான் அப்போதே சொன்னேன். இந்தக் கேசு சாத்தப்பனை ஒன்றும் செய்யாது என்பதாக.

ஆமாம்... முத்துமாலையைச் சாத்தப்பனிடம் விலைக்கு விற்றதற்கான ரசீதும் தானே காட்டினான்.

அதுசரி... இவ்வளவு எளிதாக விஷயம் இருக்கும்போது, சாத்தப்பன் ஏன் எடுத்த எடுப்பிலேயே இதை அதிகாரிகளிடம் சொல்லியிருக்கக் கூடாது. ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

குளத்தங்கரை மாநாட்டில் இந்தப் பிரச்சனை எழுந்தது; விவாதம் தொடர்ந்தது; முடிவு கண்டறியப்படவில்லை. ஆனால் வேறோர் இடத்திலே நடைபெற்ற பேச்சிலே இதற்கு ஒரு விளக்கம் பிறந்தது.

“தம்பி! எப்படியோ, சாமார்த்தியமாக என்னிடம் நகையை அவன் விற்றான் என்பதைக் கண்டறிந்து, அவனையும் கோர்ட்டிலே அதை ஒப்புக்கொள்ளும்படியாகச் செய்து, என்னைக் காப்பாற்றினாய். அண்ணனிடம் உனக்கு உள்ள பற்றும் பாசமும் அப்படிப்பட்டது...”

“அண்ணா! அண்ணா! என்னைக் கொல்லாதே! வேண்டாம் இந்தச் சித்தரவதை! வேண்டாம் அண்ணா! இனியும் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை...”

“மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே... உன் சாமார்த்தியமான தலையீட்டினால்தான், துப்பு துலங்கிற்று. என்று பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றன... இதோ பார்... பெரிய பெரிய தலைப்புகளுடன் செய்தி வந்திருக்கிறது. தம்பி! முதலிலே அவன் மிகவும் பிடிவாதம் செய்தானாமே... ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்றானாமே... எப்படி அவனை உன் வழிக்குக் கொண்டு வந்தாய்...”

தங்கப்பனுக்குக் கண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அலறினான். பதறிப்போய், அங்கு வந்த பெரிய டாக்டர் சாத்தப்பனிடம் மரியாதையுடன், “விவரம் தெரிந்த நீங்களெல்லாமா, இப்படி நடந்து கொள்வது. இவருக்குத் துளியும் மனஅதிர்ச்சியே ஏற்படக்கூடாது. ஆபத்து அடியோடு நீங்கி விட்ட நிலையில் அவர் இல்லை. ஆகவே அதிகம் பேசக் கூடாது. மன்னிக்க வேண்டும். இனியும் இங்கு இருந்து பேசிக் கொண்டிருக்க அனுமதிப்பதற்கு இல்லை. டாக்டர்கள், தங்களை இவ்வளவு நேரம் அனுமதித்ததே தவறு... பெருந்தவறு... என்று கூறியதுடன், சாத்தப்பனை அழைத்துச் சென்றுவிட்டார்.
* * *

டிரைவர் முன்னாளில் நகை வியாபாரியாக இருந்தவர்; நொடித்துப் போனவர்; சாத்தப்பனிடம் பல நகைகள் விற்றிருக்கிறார்; நொடித்துப் போனவருக்குச் சாத்தப்பன் தன்னிடமே வேலையும் கொடுத்திருக்கிறார் வைத்துக் கொண்டு ஆதரித்து வருகிறார் என்ற செய்தி பரவி குளத்தங்கரை மாநாட்டில், மறுபடி
யும் குத்தாலம் அப்பேதே சொன்னேன் அல்லவா, சாத்தப்பன் பெரிய மனிதன் அலாதியான பெருந்தன்மையான குணம் அவனுக்கு என்று பேசிடலானார்.

சாத்தப்பனுடைய குணாதிசயம் இருக்கட்டும் தம்பி! தங்கப்பனுடைய குணம் என்ன சாமான்யப்பட்டதா! அண்ணன் இன்று கௌரவமாக வெளியே உலவ யார் காரணம்? தங்கப்பன் அல்லவா... டிரைவர் சாட்சியம் எப்படிக் கிடத்தது? தங்கப்பன் திறமையாலே அல்லவா என்று அர்ச்சித்தார்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் என்பார்களே. இந்த நகை வியாபாரி நொடித்துப் போன நிலையிலே வேலை கொடுத்த சாத்தப்பன் ஆதரித்து இருக்கிறாரே. அப்படியிருக்கும் போது முத்துமாலை விஷயமாக அவர் பேரிலே ஓர் அபாண்டம் விழுந்தபோது, இவனல்லவா முந்திக் கொண்டு போலீசிலே சொல்லியிருக்க வேண்டும். ஐயா! முத்துமாலை களவுப் பொருள் அல்ல... அது நான் அவருக்கு இன்ன நாளிலே இன்ன விலைக்கு விற்றிருக்கிறேன் என்று ஏன் சொல்லவில்லை...

அது என்னத்தாலே தெரியுமய்யா... சொல்றேன் கேள்... வாழ்ந்து கெட்டவங்க இருக்கிறாங்க பாரு... அவங்களோட சுபாவம் ஒரு மாதிரியா ஆகிடும்... சாத்தப்பன் வேலை கொடுத்து உதவி செய்தாரு... அதனாலே அவரிடம் அன்பு மரியாதை இதெல்லாம்தானே ஏற்பட வேண்டும். இந்த டிரைவரோட மனத்திலே என்று யோசிக்கிறே ஆனால இந்த மாதிரி சில பேருக்கு நாம் எவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தோம் நமக்கு இன்று இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே; இவனிடம் கை கட்டி சேவகம் செய்யும்படியான நிலை வந்திருக்குதே. இவனே கூட பல பேரிடம் யார் தெரியுமா நம்ம டிரைவர்? நகை வியாபாரம் செய்து ‘ஒகோ’ன்னு வாழ்ந்து வந்தாரே நாகலிங்கம். அதே ஆசாமிதான் என்று சொல்லாமலா இருப்பான்; எத்தனை பேர் அதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்திருப்பார்கள் என்றெல்லாம் எண்ணி எண்ணி அருவருப்பு பொறாமை கொண்ட மனம் ஏற்பட்டுவிடும். எப்படியோ ஆசாமி சிக்கிக் கொண்டான்; நமக்கு வந்த தாழ்வு இவனுக்கும் வரட்டும் என்ற ஒரு நினைப்பு வந்திருக்கும் அதனாலேதான் சாத்தப்பனைக் காப்பாற்றும் ருஜு தன்னிடம் இருந்தும் டிரைவர், ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறான்.

எனக்கு முதலிலே இருந்தே அவனிடம் ஒரு சந்தேகம் உண்டு, நடந்ததை எல்லாம் பார்க்கிறபோது, என் மனத்திலே டிரைவரைப் பற்றி முதலிலே தோன்றிய எண்ணம் சரியானது என்று தெரியுது.

எல்லா விவரமும் இருக்கட்டும்... முத்துமாலை மடாலயத் தது என்பது விளங்கி விட்டது. இது இந்த நகை வியாபாரிகளிடம் எப்படி வந்தது. சாத்தப்பனுக்கு இவன் கொடுத்தான். ஆதாரம் காட்டினாங்க. ஆனா இந்த நகை வியாபாரியிடம் இந்த முத்துமாலை வந்த விதம்?

அதற்கும் ஒரு கணக்குக் காட்டியிருக்காங்களே... வேறே ஒரு நகை வியாபாரி இந்த நகை வியாபாரிக்கு விற்றதாக...

யாரு அவன்... எங்கே இருக்கிறான்...

அது இனிதான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு, சாத்தப்பன் பேரிலே உள்ள பழி நீங்கிவிட்டது... நகை வியாபாரி, முத்துமாலையை யாரிடம் தான் வாங்கியதாகச் சொல்லியிருக்கிறானோ அதுபற்றி தகவல் விசாரித்துக் கொண்டு இருக்கிறாங்க... வேறே என்ன செய்யறது.

டிரைவர் பேரிலே போலீஸ் ஒரு ‘கண்’ வைத்தபடிதான் இருப்பாங்க. இல்லையா...?”

ஆமாம். ஆமாம் பார்வை விழுந்தபடிதான் இருக்கும்.

கொள்ளிச் சாமியார் மடத்திலே கொள்ளை நடந்தபோது, அவனுக்கு ‘வக்கீலாக’ இருந்தவர் ஒருவர் உண்டாமே... அவரிடம் போய்க்கூடத் தகவல் விசாரித்தார்களாமே...

விசாரிக்கப் போனார்கள். ஆனால் பாவம் அந்த வக்கீல் முடக்கு வியாதி ஏற்பட்டு, பேச முடியாத நிலையில் இருக்கிறாராம்... வழக்கு சம்பந்தமான கட்டுகளைப் படித்ததிலே, பிடி பட்டவன் தக்க ருஜு இல்லாததாலே விடுதலை செய்யப் பட்டதாகத் தெரிகிறது...

முடக்கு வியாதி மட்டும் வராமலிருந்திருந்தா, அந்த வக்கீல் இப்ப, பெரிய ஜட்ஜு ஆகியிருந்திருப்பாராமே.

அப்படித்தான் கேள்வி. அவரிடம் வேலை கற்றுக் கொண்டவர்களெல்லாம், இன்றைக்குப் பெரிய நிலையிலே இருப்பதாகக் கேள்வி.
* * *

நாட்கள் பல உருண்டோடின. வேறு பரபரப்பூட்டும் செய்திகள் குளத்தங்கரை மாநாட்டுக்குக் கிடைக்கவில்லை. தங்கப்பன் உடல் நலம் முழுவதும் பெறவில்லை என்றாலும் இனி உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலை பிறந்தது. தருமுவின் தாலி பாக்கியத்தை ஊர் மெச்சிக் கொண்டது.

அண்ணன் பேரிலே ஏற்பட்ட அபாண்டத்தாலே தங்கப்பன் மனம் அதிர்ச்சி அடைந்தது, என்று ஊர் பேசிக் கொண்டது.

வடிவு தங்கப்பனைக் காண வந்திருந்தான் உடன் வந்திருந்த அவள் கணவன் போலீஸ் இன்ஸ்பெக்டர், சாத்தப்பனைக் காணவே கூச்சப்பட்டான்.

“என் கடமையைச் செய்தேன்... மன்னிக்க வேண்டும்.”

“மன்னிக்க வேண்டும் என்று சொல்லாதே... மதிக்க வேண்டும் என்று சொல்லப்பா! உன்னிடம் எனக்கு உண்மையான மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணமே, உன் கடமையை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்படாமல் செய்தாய் என்பதாலேதான்...”

“ஆனால் கடைசியில் பார்க்கப் போனால், வீண் சந்தேகம் கொண்டதுதான் மிச்சமாகிறது... அவசரப்பட்டு விட்டேன்... மேலதிகாரிகளிடம் சொல்வதற்கு முன்பு, நானே நேரிலே வந்து உங்களிடமே விசாரித்திருந்தால் இத்தனை விபரீதம் நடந்திருக்காது...”

“உன்னுடைய நேர்மையையும் துணிவையும் உலகு உணர இந்தச் சம்பவம் பயன்பட்டது என்பதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. பெருமை. எப்படித்தான் நடந்து கொள்கிறாய் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்... நான் எதிர் பார்த்ததைவிட மேன்மையாக நடந்து கொண்டிருக்கிறாய். உனக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று கருதுகிறேன்.

உன் மனப்போக்கைப் பாராட்டுகிறேன். ஆனால் முடிவு வரவேற்கக் கூடியது அல்ல. துவக்க காலம் உனக்குச் சிறிது துடிதுடிப்பு, அவசரம், திடீர் முடிவெடுக்கும் இயல்பு இருக்கத் தான் செய்யும். ஆனால் படிப்படியாகப் பக்குவம் ஏற்பட்டுவிடும். வேலையை விட்டு விலகாதே. சரியல்ல, என் தம்பி கூட இப்படித்தான், இனிதான் ஜில்லா ஜட்ஜு வேலையில் இருக்கப் போவதில்லை. விலகிவிடப் போகிறேன் என்று பிடிவாதம் செய்கிறான். அவனுக்கும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தங்களுடைய ‘வாதம்’ என்னைத் திருத்திவிட்டது.

என் தம்பியும் இதைப் போலவே தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அவன் ஒரு விதமானவன். என் பேரிலே விழுந்த வழக்கிலே நான் விடுதலையாகி விட்டேன் என்றாலும், அப்படி ஒரு வழக்கு வந்ததே ஓர் இழுக்கல்லவா. அப்படி ஓர் இழுக்கு விழுந்தவனுடைய ‘தம்பி’ இவன் என்று நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களே, என்பதை எண்ணி வேதனைப் படுகிறான்.
என் மனத்தை மாற்றி விட்டதைப் போல அவருடைய மனத்தையும் மாற்றாமலா விடுவீர்கள்?
* * *

ஒரே ஒரு கணம்தான் அண்ணா! அந்தச் சபலம் எனக்கு... சபலத்துக்குப் பலியாகி விட்டேன்...
சபலம் எல்லாமே அப்படித்தான் தம்பி! ஒரு கணம், ஒரு நொடி... அந்த ஒரு நொடிப்போதிலே மனத்திடம் துளி கெட்டாலும் தீர்ந்தது. பாதைகெட்டு விடும்.
அப்படித்தான் அண்ணா, நடந்தது, அவன் குற்றம் செய்தவன் என்பதற்கான சாட்சியம் ருஜு இருந்தது. அதை நான் கோர்ட்டிலே கொடுத்திருக்க முடியும். வேண்டுமென்றே மறைத்தேன்... அவன் தப்பித்துக் கொண்டான்... ஊரே பாராட் டிற்று. அவனுக்காக வாதாடிய வக்கீலின் திறமையால்தான் அவன் விடுதலையானான் என்று... ஆனால் அவனைக் கூண்டுக்குள் தள்ளக்கூடிய ருஜு என்னிடம் இருந்தது... அதைக் கோர்ட்டிலே நான் காட்டாமலிருந்து விட்டேன்... அந்த முத்து மாலை என்னை மயக்கிவிட்டது... அதைக் கொடுத்து காலிலே விழுந்தான்... பேராசை, பெற்றுக் கொள், பெற்றுக் கொள் என்று தூண்டிற்று... நேர்மை தூங்கிவிட்டது... வழி தவறினேன்...