“விடுதலை! வந்துவிட்டது
தங்கத்திற்கு! லிங்கத்தின் பாடு கொண்டாட்டந்தாண்டா. இனி
மேலே அவன் அவன்தான்; நாம்ப நாம்பதான்.”
“நம்மை எல்லாம் மறந்து விட்டாலும், நாராயணனை மாத்திரம்
மறக்கமாட்டான். அவங்க இரண்டு பேரும், வந்த நாளா ஜோடி
போட்டுக்கிட்டாங்க. என்னமோ சூது இருக்கு.”
“நாராயணன் மந்திரக்காரனாச்சே! ஏதாகிலும் மந்திரம் கிந்திரம்
கற்றுக் கொடுத்திருப்பான்.”
“மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவன், இங்கே
யேண்டா வந்து மாட்டிக்கிட்டு கம்பி எண்ணிக்கிட்டு கிடக்கிறான்.”
“இங்கேன்னா என்னடாப்பா! இந்தே பெரிய வூடு உங்க அப்பங்
காலத்திலே கண்டெயா? நம்ம ராணியம்மா சத்திரத்திலே மணியடிச்சா
சோறு; மயிர் முளைச்சா மொட்டை”
“தன்னானே தானென்ன
தன்னான தன்னானே.”
“சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வைத்தமரம்...”
வார்டர் நம்பர் 9, ரொம்ப முரட்டுப் பேர்வழி “பைல், பைல்”
என்று கூவினால், எவ்வளவு முரட்டுக் கைதியும், பெட்டியில்
போட்ட பாம்பு போலத்தான்! அவனும் வந்தான்! நாம் மேலே
தீட்டியபடி வம்பளந்து கொண்டும், பாடிக் கொண்டுமிருந்த
கைதிகள், பேச்சை நிறுத்திக்கொண்டு சிமிட்டி திண்ணை மேலே
சிவனே என்று உட்கார்ந்து விட்டார்கள்.
சிறையிலே எல்லா வார்டரும், கைதிகளும் மனிதர்கள் தானே என்றா
எண்ணுவார்கள். வீடுவாசல், குழந்தை குட்டி, பெண்டுகளை விட்டுப்
பிரிந்து தனித்து வந்து இருப்பவர் ஏதோ பேசிப் பாடி ஆடி,
பொழுதைப் போக்கட்டும் என்று விட்டு விடுவார்களா?
அதிலும், சீப் வார்டராக வேண்டுமென்ற ஆசை 9-க்கு அதிகம்.
ஆகவே, ஏகதடபுடல். அதிகாரம்! கைதிகளை மிகக் கண்டிப்பாக
நடத்துவது வாடிக்கை.
லிங்கத்துக்கு அன்று விடுதலை! முக்கா போர்டிலே பேர் விழுந்தது.
ஐந்து வருடம் தண்டனை அவனுக்கு. உள்ளே வந்து மூன்று வருஷமாச்சு.
இரண்டு வருஷமிருக்கும்போதே ஓர் அதிர்ஷ்டம். விடுதலை!
அப்பா! இனி சூரியனையும், சந்திரனையும், வானத்தையும், நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்! வீதியிலே உலாவலாம்! கடை வீதி செல்லலாம்.
கீரையுந்தண்டுமே மூன்று வருஷமாகக் கண்டு சலித்துப் போனவன்
இனி வாய்க்கு ருசியாக எதையாவது உண்ணலாம். ராஜா அவன் இனி
மேலே! விடுதலை வந்து விட்டது. அதோ வந்து விட்டான் வார்டர்.
“டே லிங்கம்! எங்கே எடு படுக்கையைச் சுருட்டு! கம்பளியை”
என்றான். ஒரு படுக்கையைச் சுருட்டினான்; குதித்தான். கம்பளியை
எடுத்துக் கொண்டான். அவனைச் சுற்றிலுமிருந்த கைதிகளை
நோக்கினான் ஒரு முறை. அவர்கள் தலையை ஆட்டினார்கள். இவன்
பல்லைக் காட்டினான்.
மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த நாராயணன் தள்ளாடி நடந்து
வந்தான் லிங்கத்திடம்! நாராயணன். கிழவன் பாவம். ஜென்ம
தண்டனை! உள்ளே வந்து எட்டு வருடத்திற்கு மேலாயிற்று. உலகத்தை
அவன் மறந்தே விட்டான். லிங்கத்திடம் அவனுக்கு ஓர் ஆசை.
லிங்கத்துக்கும் அப்படியே.
“லிங்கம்! இனிமேலே புத்தியா பிழை. பார்த்தாயே. இங்கே படறபாட்டை”
என்றான் நாரயணன்.
லிங்கம் பதில் சொல்ல எண்ணினான். ஆனால் துக்கம் தொண்டையை
வந்து அடைத்துவிட்டது.
“வருகிறவனெல்லாம் இப்படித்தான் போறப்போ புத்தியோடு
இருப்பதா பேசுவான்! புத்தியாவது வருவதாவது” என்றான் வார்டர்.
‘மார்ச்’ என உத்திரவிட்டான்
9.
மூன்று வருஷமாக வார்டர் எத்தனையோ தடவை, உத்தரவிட்டிருக்கிறான்.
அப்போதெல்லாம் தோன்றாத ஒரு புதிய சந்தோஷம் இந்த உத்தரவைக்
கேட்டதும் வந்தது.
மார்ச்! புறப்படு! போ வெளியே!
எங்கே? உலகத்துக்கு! சிறைக்கதவு திறந்து விட்டது. கூண்டைவிட்டுக்
கிளம்பு. போ வெளியே! பார் உலகை! நீ பல நாளும் பார்க்காது
மனம் வெந்து, மண்ணைத் தின்று கொண்டிருந்தாயே, இனி உலகத்துக்குப்
போ! உன் மக்களைப் பார்! என்றல்லவோ அந்த உத்தரவு சொல்லுகிறது.
பார்க்கும்போதே யமன் போலத் தோழனாகத் தோன்றினான்.
ரொம்ப குஷாலாகத்தான் நடந்தான். வார்டர் பொழுது போக்க
வேண்டி, “டே! லிங்கம் யாராவது வந்திருப்பார்களா வெளியே
உன்னைப் பார்க்க” என்று கேட்டான்.
லிங்கத்துக்குத் துக்கம் பொங்கிற்று! கைகால்கள் நடுங்கின.
கோமளத்தை எண்ணினான். கண்களில் நீர் ததும்பிற்று.
மாதச் சம்பளத்திற்கு மாரடிக்கும் அந்த வார்டருக்கு லிங்கம்
கொலைக்கேசில் சம்பந்தப்பட்டு, 5 வருஷம் தண்டிக்கப்பட்ட
கைதி என்பது தெரியுமே தவிர, லிங்கத்தின் உள்ளம் என்ன தெரியும்?
லிங்கத்தின் மனத்தை அந்த நேரத்தில் கலக்கிய அந்தக் கோமளத்தைப்
பற்றித்தான் என்ன தெரியும்?
உங்களுக்குத்தான் என்ன தெரியும்? லிங்கம் ஒரு கைதி! ஆகவே
அவன் வெறுக்கப்பட வேண்டியவன் என்று வாதாடு வீர்களே தவிர,
லிங்கம் ஏன் கைதியானான், எது அவனை அந்த நிலைக்குக் கொண்டு
வந்தது என்பது உங்களுக்கு என்ன தெரியும்?
என்ன உலகமிது? ஏழைக்கு உலகமா? ஏழையின் மனம் புண்பட்டால்,
அதை ஆற்றும் உலகமா? அல்ல! அல்ல! ஏழையின் துயரைப்பற்றி
எள்ளத்தனை சிந்தனையும் செய்யாது ஏழை மீது ஏதேனும் பழி
சுமத்தப்பட்டாலும் “ஆமாம் அவன் துஷ்டன்! செய்துதான் இருப்பான்”
என்று சாதிக்கும் உலகமாச்சே.
* * *
அன்று, ஒரே கருக்கல்! இருட்டுடன் மேகம், அடிக்கடி இடி,
காது செவிடுபடும்படி. மின்னல் கண்களைக் குத்துவது போல.
பிசுபிசுவெனத் தூறல். லிங்கம் மாட்டுக் கொட்டிலுக்குப்
பக்கத்திலே தனக்கென விடப்பட்டிருந்த அறையிலே படுத்துத்
தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்திலே கோமளத்தைப்
பற்றித்தான் கனவு கண்டு கொண்டிருந்தான். இரவு 12 ஆயிற்று.
அவன் அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டு, கறுப்புக்
கம்பளியால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டிருந்த ஓர்
உருவம் உள்ளே நுழைந்தது. அதுதான் கோமளம்.
மிஸ். கோமளம் சார், மிஸ் கோமளம். லிங்கத்தின் சின்ன
எஜமானி! வக்கீல் வரதாச்சாரியின் சொந்தத் தங்கை. ரொம்ப
அழகி. மகா கைகாரி! சூதுவாது அறியாத லிங்கத்துக்கு மோகமெனும்
அபினியை நித்த நித்தம், சிரிப்பாலும், சிமிட்டலாலும் ஊட்டி
வந்தவள்.
லிங்கம் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே பெரிய தனக்கார ராக
இருந்த மண்டி மகாதேவ முதலியாரின் மகன். கோமளத்தின் தகப்பனார்தான்
முதலியார் வீட்டுக்குப் புரோகிதர். புரோகிதம் செய்து
சேர்த்த பணந்தான், வரதாச்சாரியை வக்கீலாக்கிற்று. புரோகிதச்
செலவுடன் புதுச்சத்திரம் கட்டுதல், கோதானம் அளித்தல்,
கும்பாபிஷேகம் செய்தல் முதலிய கைங்கரியங்களை 20 ஆண்டு
விடாமல் செய்தான், மண்டி மகாதேவ முதலியார், 10,000 ரூபாய்
சொத்தும் இருபதனாயிரம் கடனும், மகன் லிங்கத்துக்கு வைத்துவிட்டு
இறந்தார். போனால் போகிறது என்று வக்கீல் வரதாச்சாரி,
வேலையின்றித் திண்டாடிக் கொண்டிருந்த லிங்கத்துக்குக்
கட்டுத்தூக்கும் வேலைகொடுத்து தன் வீட்டிலேயே சோறும்,
மாட்டுக் கொட்டிலுக்கு மறு அறையில் அவனுக்கு இடமும் கொடுத்தார்.
லிங்கத்தின் தாய், மகனுடைய நிலை, புரோகிதர் மகனுக்குப்
போக்குவரத்து ஆளாக மாறும் வரை இல்லை. அந்த அம்மை “அகிலாண்ட
நாயகியின் அனுக்கிரகத்தால்” கணவனுக்கு முன்னதாகவே இறந்து
விட்டாள். அப்போதுகூட இருபது பிராமணாளுக்கு வேஷ்டி வாங்கி
தானம் செய்தார், லிங்கத்தின் தகப்பனார்.
உள்ளே நுழைந்த கோமளம் மெல்ல தட்டி எழுப்பினாள் லிங்கத்தை!
எப்படி இருக்கும் அவனுக்கு. தான் கண்டு கொண்டிருந்த கனவில்
அதுவும் ஒரு பகுதிதானோ என்று எண்ணினான். மிரள மிரள விழித்தான்.
கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். நிஜமான கோமளம்,
நிஜமாகவே தன் எதிரில் நிற்கக் கண்டான்.
லிங்கத்துக்குக் கோமளத்தின் மீது அளவற்ற ஆசை! உழைத்து
அலுத்துப் படுக்கப் போகும் நேரத்திலும் கோமளம் ‘லிங்கம்’
என்று கூப்பிட்டால் போதும்; ஓடுவான், அவள் என்ன வேலை
சொன்னாலும் செய்ய.
முதலிலே அவன், சினிமாவிலே தோன்றும் பெண்களைப் பார்த்துச்
சந்தோஷப்படுகிற அளவுக்குத்தான் இருந்தான். கோமளமும்,
எந்தச் சினிமாக்காரியின் சாகசம் சல்லாபத்திலும் குறைந்தவளல்ல.
‘டால்’ அடிக்கிறது உடம்பிலே என்பார்களே, அதை லிங்கம் கோமளத்திடம்தான்
கண்டான். “கண்ணாலே மயங்கி விடுவார்கள் பெண்கள்” என்று
லிங்கம் கதையிலே படித்தது, கோமளத்தைக் கண்ட பிறகுதான்
அவனுக்கு உண்மையாகப் பட்டது.
கோமளம், சிவந்த மேனியள்! சிங்கார உருவம்! சிரிப்பும்
குலுக்கும் அவளுடைய சொந்தச் சொத்து! பேச்சோ, மிக சாதுர்யம்!
ஆடை அணிவதிலோ ஒருதனி முறை! கோமளம், லிங்கத்துக்குச்
சரியான மயக்க மருந்தைக் கொடுத்து விட்டாள். லிங்கமும்
எட்டாத கனி என்று முதலிலே எண்ணியவன், “இல்லை! இல்லை! கோமளத்திற்கு
என் மீது கொஞ்சம் ஆசைதான். இல்லாவிட்டால் ஏன் என்னிடம்
அடிக்கடி கொஞ்சுவது போல் இருக்கிறாள் என்ன இருந்தாலும்
நான் என்ன பரம்பரை ஆண்டியா! பஞ்சத்து ஆண்டிதானே” என்று
எண்ணத் தொடங்கினான்!
அவன் மீது குற்றமில்லை! அவள் மீதுகூட அவ்வளவு. குற்றமில்லை.
பருவம்! அதன் சேட்டை அது! லிங்கத்துக்கு உலகம் தெரியாது
பாபம். அதிலும் கோமளத்தின் உலகம் தெரியாது!
கோமளத்தின் உலகம், மிக பொல்லாதது. ஆனால் பார்ப்பதற்கு
ஜொலிக்கும். எரிகிற நெருப்பிலே இல்லையா ஒரு ஜொலிப்பு!
விஷப்பாம்பிலே தலைசிறந்த நல்லபாம்புக்கு இல்லையா ஒரு தனி
வனப்பு! அதைப்போலக் கோமளத்தின் உலகம்.
அவள் கண்பார்வை, ஒரு மாய வலை, யார் மீது விழுந்தாலும்
ஆளை அடிப்படியே சிக்க வைக்கும். அதிலும் லிங்கத்தின் மீது
ஒவ்வொரு நாளும் எத்தனையோ முறை விழுந்தபடி இருந்தது.
என் செய்வான் லிங்கம்! ஏமாந்தான் அவளிடம்.
தன் காதலைப்பற்றி ஒரு நாளாவது ஒரு வார்த்தையாவது அவளிடம்
பேசியதும் கிடையாது. அவன் தன்னிடம் அப்படியே சொக்கிக்
கிடக்கிறான் என்பதைக் கோமளம் தெரிந்து கொள்ளாமலும் இல்லை.
அதனைத் தடுக்கவும் இல்லை. மாறாக, வேண்டுமென்றே அதனை வளர்த்தாள்.
தன் அழகைக் கொண்டு அவனை அறிவிலியாக்கினாள். தன் பிரகாசத்தால்
அவன் கண்களை மங்கச் செய்தாள். அடிமை கொண்டாள் அவனை. தன்
இஷ்டப்படி ஆட்டி வைத்தாள்.
ராவ்பகதூர் ராமானுஜாச்சாரியார் மட்டும் இவ்விதம் தன்னிடம்
அடிமைப்பட்டிருந்தால் கோமளம் ஏன் பிறந்த வீட்டிலேயே இருக்கப்
போகிறாள். எத்தனையோ பேருக்கு ஏக்கத்தைக் கொடுத்த அவள்
அழகும், சல்லாபமும், அவள் கணவன், ராமானுஜாச்சாரிக்கு ஒரு
மாற்றத்தையும் கொடுக்க வில்லை. அவர் உண்டு, கீதை உண்டு,
ஜெர்மன் நிபுணரின் வீரிய விருத்தி மருந்து கேட்லாக் உண்டு.
ஊடலிலிருந்து, உள்ளபடி சண்டையாகி, பிரதிதினம் சண்டை என
வந்து, “இனி உன் முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன் போ”
எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, வீடு வந்த கோமளம்,
ராவ்பகதூரைப் பிறகு கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. அவரும்
யோகத்தில் இறங்கிவிட்டார். கீதையின் சாரத்தில் மூழ்கிவிட்டார்.
* * *
‘லிங்கம்’ என்றாள் மெல்ல, அந்த மாது. குல தேவதையை நோக்குவதைப்
போலப் பார்த்தான் லிங்கம்!
“கோபமா? இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தேன்” எனக் கேட்டாள்
கோமளம். “கோபமா! எனக்கா! வருமா கோ...” அதற்கு மேல்
அவனால் பேசமுடியவில்லை; நாக்கிலே ஒருவிதமான பிசின் வந்துவிட்டது.
“சரி! நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா, கேட்பாயா, மாட்டாயா?”
என்று கொஞ்சினாள் கோமளம்.
தலையை அசைத்தான். தன்னை மறந்த லிங்கம். காதிலே மந்திரம்
ஓதுவதைப் போல ஏதோ சொன்னாள் மாது. லிங்கத்தின் முகத்திலே
ஒரு மருட்சி ஏற்பட்டது. “பைத்தியமே! பயமா?” என்று புன்சிரிப்புடன்
கேட்டாள் கோமளம்.
அந்தப் புன்சிரிப்பு, அவனை ஒரு வீரனாக்கிவிட்டது.
“எனக்கா பயம்?” என்று கூறினான், “நான் போகட்டுமா. அண்ணா
எழுந்து விடுவாரோ என்று பயம்” என்றாள் கோமளம், லிங்கத்தின்
தவடையைத் தடவிக் கொண்டே.
கண்கள் திறந்திருந்தும் லிங்கத்துக்குப் பார்வை தெரிய
வில்லை.
“செய்” என்று ஈனக்குரலில் பதில் சொன்னான். சரேலெனக் கோமளம்
வெளியே சென்றுவிட்டாள். லிங்கம் மறுபடியும் கண்களைத் துடைத்துக்
கொண்டு பார்த்தான்-, அவ்வளவும் கனவா நினைவா என்று. தாடை
சொல்லிற்று அவனுக்கு நடந்தது கனவல்ல, உண்மைதான் என்று!
அந்தக் கொடி இடையாள் கோமளம், அவன் கன்னத்தில் ஒரு முத்தம்
கொடுத்துவிட்டுப் போனாள். அந்த முத்திரை இருந்தது அவன்
கன்னத்திலும்; அதைவிட அதிகத் தெளிவாக அவன் மனத்திலும்.
உலகம் ஒரு துரும்பு இனி! ஆபத்து ஓர் அணு அவனுக்கு. கோமளத்தின்
முத்தம் அவனுக்கு ஒரு கவசம்! ஒண்டி ஆளாக இருப்பினும்,
உலகம் முழுவதையும் எதிர்க்கலாம் என்ற தீரம் வந்துவிட்டது.
மங்கையரின் மையல், மனிதனுக்கு உண்டாக்கும் மன மாற்றந்தான்
என்னே!
என்ன சொல்லிவிட்டுப் போனாள் தெரியுமோ கோமளம்! தனது
கணவனை எப்படியாவது அடித்துக் கொன்று விட வேண்டுமென்று
சொன்னாள். ஏன்? ராவ்பகதூர் உயில் எழுதி வைத்திருந்தார்;
தனக்குப் பிறகு தன்சொத்து, கோமளத்துக்கு என்று. சொத்து
கிடக்கிறது; ஆனால் ராவ் பகதூர் செத்தபாடில்லை. கோமளம்
எப்படியாவது அவரை ஒழித்துவிட்டால், பணம் கிடைக்கும். படாடோபமாக
வாழலாம் என்பது கோமளத்தின் எண்ணம். அதற்காகத் தனது கணவனைக்
கொல்ல லிங்கத்தையே கத்தியாக உபயோகித்தாள்.
“அவர் ஒருவர் குத்துக்கல் போல இருப்பதுதான் நமக்குள்
தடையா இருக்கிறது. அவர் ஒழியட்டும்; உடனே நாம் உல்லாசமாக
வாழலாம்” என்று கூறினாள் கோமளம்.
லிங்கம் அது கொலையாயிற்றே. அதைச் செய்தல் தவறாயிற்றே,
ஆபத்தாயிற்றே என்பதைப் பற்றி எண்ணவே யில்லை.
கோமளம் மிக அழகி! தன்னை விரும்புகிறாள். ஆகவே அவள் சொல்வதைச்
செய்ய வேண்டும் என்று மட்டுமே எண்ணினான்.
கொலை! குலை நடுங்கும் சொல்லாயிற்றே! ஆமாம்; ஆனால் கோமளமல்லவா
சொன்னாள்-, அந்தச் சொல்லை! அதிலே பயமென்ன இருக்கிறது.
‘இவ்வளவுதானா நீ! கையாலாகாதவனே! இதோ நான் என்னை எடுத்துக்
கொள் என்று சொன்னேன். என்னை உன்னிடம் வாழவொட்டாது தடுக்கும்
ஒரு தடைக்கல்லை நீக்கு என்று சொன்னேன். அது முடியவில்லையே
உன்னால்! நீயும் ஓர் ஆண்பிள்ளையா” - என்றல்லவோ கோமளம்
கேட்பாள். அவள் பேச்சின் ‘குத்தலை’ச் சொல்லவா வேண்டும்.
கோமளம், நமக்கேன் இந்தத் தொல்லை? போலீசில் மாட்டிக்
கொண்டால் வீண் தொந்தரவுதானே. நீயும் நானும் சிங்கப்பூர்
போய்விடலாமே. அங்கு என் தங்கை புருஷன் பெரிய பணக்காரர்.
அவரிடம் எனக்கு வேலை கிடைக்கும். நாம் சுகமாக இருக்கலாமே
- என்று கோமளத்திடம் கூறவேண்டுமென எண்ணினான் லிங்கம்.
அதை எண்ணும்போதே அவனுக்கு ஓர் இன்பம். நீல நிறக் கடல்!
கப்பல் அசைந்து ஆடிச் செல்கிறது! அவனும் கோமளமும் சிங்கப்பூர்
செல்கிறார்கள். லிங்கம் மோகன ராகம் பாடுகிறான். கோமளம்
புன்சிரிப்புடன் அவனை நோக்குகிறாள்.
இதெல்லாம் அவனுடைய மனக்கண் முன்பு தோன்றிய படக்காட்சி.
சரி! ஒருமுறை கோமளத்திடம் இந்த ஏற்பாட்டைச் சொல்லிப்
பார்ப்பது என்று எண்ணினான். இப்போதே சொல்வது என எண்ணம்
தோன்றிற்று. எழுந்தான், நேராக கோமளத்தின் படுக்கை அறைப்பக்கம்
சென்றான்.
கோமளம் சிரித்த சத்தம் கேட்டது! மணி ஓசை போன்ற குரல்.
“மாட்ட வைத்துவிட்டாய் லிங்கத்தை” என்று மற்றொரு குரல்
பேசுவதும் கேட்டது.
திகைத்து அப்படியே நின்றுவிட்டான் லிங்கம். படுக்கை அறையிலே
அந்தப் பாதகி, பரந்தாமன் என்னும் வக்கீலின் மோட்டார்
டிரைவருடன் கொஞ்சுகிறாள். “அந்தக் கிழத்தின்மீது இந்தக்
கிறுக்கனை ஏவி விட்டேன். இவனுக்குத் தலைகால் தெரியவில்லை.
அவ்வளவு ஆசை இந்தத் தடியனுக்கு என் மேலே. உனக்குத்தான்
என் மேலே அவ்வளவு ஆசை கிடையாது” என்றாள் கோமளம்.
“பாவி! பாதகி! பழிகாரி! குடிகெடுக்கும் கோமளம் - திறடீ
கதவை - ஐய்யா! வக்கீலய்யா, எழுந்திருங்கள்! வாருங்கள்;
இங்கே வந்து பாருங்கள், இந்த நாசகாரி செய்யும் வேலையை.
டேய், பரந்தாமா, வாடா வெளியே! மோட்டார் ஓட்டறயா மோட்டார்.
கோமளம்! நான் தடியனா, கிறுக்கனா, வெறியனா, திற கதவை.
ராவ் பகதூரைக் கொல்லச் சொன்னாயே உன் கழுத்தை ஒடித்துவிட்டு
மறுவேலை பார்க்கிறேன்...” என லிங்கம் ஆவேசம் வந்தவன்போல
அலறினான். வீடு பூராவும் அமர்க்களமாகிவிட்டது. அண்டை எதிர்வீட்டுக்
கதவுகள் திறக்கப் பட்டன. அறையைத் திறந்துகொண்டு பரந்தாமன்
பயந்து கொண்டே வெளியே வந்தான். அங்கொரு கட்டை கிடந்தது.
தூக்கினான லிங்கம் அதனை. கொடுத்தான் ஓர் அடி பரந்தாமன்
தலைமேல். இரத்தம் குபீரென வெளியே வந்தது. கோமளம் கோவெனக்
கதறினாள். வக்கீல் வாயிலே அறைந்து கொண்டார். தெருமக்கள்
கூடிவிட்டனர்.
ஆ! ஆ! என்ன அநியாயம்! அடே லிங்கம், கொலைகாரா! பிடி, உதை,
அடி! போலீஸ், போலீஸ்!!
எல்லோரும் லிங்கத்தின் மீதே பாய்ந்தனர்.
* * *
“நான் விடியற்காலை வெளியே போகவேண்டுமென மோட்டார் டிரைவரை
இங்கேயே இரவு படுத்திருக்கச் சொன்னேன். அவனை அநியாயமாக
இந்தத் தடியன் அடித்துப் போட்டு விட்டானே” என்றார் வக்கீல்.
“நடு இரவில் என்னை வந்து எழுப்பி, தகாத வார்த்தைகள் பேசினான்.
நான் கூவினேன்; பரந்தாமன் ஓடிவந்தான். இந்தப் பாவி அவனை
அடித்துவிட்டான்” என்றாள் கோமளம்.
பரந்தாமன் கோர்ட்டுக்கு வர முடியவில்லை. அடிபட்ட 5 நாளில்
அவன் ‘அந்த லோகம்’ போய்விட்டான். லிங்கம் ரிமாண்டில்
இருந்தான்.
வழக்கு முடிந்தது. ஐந்து வருடம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது
லிங்கத்துக்கு. அந்த நேரத்தில் கோர்ட்டில் வந்திருந்த
கோமளத்தை அவன் பார்த்த பார்வை அவளை அப்படியே அலற வைத்துவிட்டது.
சிறையினின்று வெளிவரும்போது, லிங்கம் என்னென்ன எண்ணினான்.
அவன் மனம் இருந்த நிலை என்ன என்பதைப் பற்றி விவரிப்பதென்பது
முடியாது. அது மிக மிகக் கஷ்டம். கூண்டிலிருந்து விடுபட்ட
கிளி, நீரில் மூழ்கிக் கரை ஏறியவன், சிறையினின்று வெளிவந்தான்
ஆகியோரின் மனநிலையைப் படமெடுப்பது முடியாத காரியம்.
கடலூர் மூன்று ஆண்டுகளுக்குள் எப்படி எப்படி மாறி விட்டதோ!
வக்கீல் என்ன ஆனாரோ! அந்த வம்புக்காரக் கோமளம் என்ன
ஆனாளோ? பாபம்! பரந்தாமனின் குடும்பம் என்ன கதியில் இருக்கிறதோ?
தனது நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ, பேசுவார்களோ, கொலைகாரன்
ஜெயிலுக்குப் போய் வந்தவன் என்று தன்னிடம் பேசவும் வெட்கப்படுவார்களோ
என்று எண்ணினான்.
இனி பிழைப்பிற்கு வேறு மார்க்கம் வேண்டுமே. ஏதவாது கூலி
வேலை செய்தாவது பிழைக்க வேண்டும். வயிறு ஒன்று இருக்கிறதே,
என்ன செய்வது. ஆனால், யார், கொலை செய்த, ஜெயிலுக்குப்
போய்வந்த லிங்கத்தை நம்பி வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
செத்த மனிதனாக்கிவிட்டாளே பாவி. என் தந்தை தன் பொருளைப்
புரோகிதப் புரட்டுக்கு அழுதார், நான் என் வாழ்வை இந்தப்
பொல்லாத கோமளத்தின் பொருட்டுப் பாழாக்கிக் கொண்டேனே.
அவள் பார்வையே எனக்கு நஞ்சாகி விட்டதே என லிங்கம் எண்ணி
எண்ணிப் பரிதவித்தான். பாபம்! அவன் நிலைதான் உள்ளபடி என்ன?
அன்று பொழுது போவதற்குள், கடலூரை ஒரு சுற்று சுற்றினான்.
பல பழைய நண்பர்களைப் பார்த்தான். சேதிகள் சொன்னார்கள்
ஆனால் ஒருவர்கூட, தோழமை கொள்ளவில்லை.
“அடே! பாவி, லிங்கம். வெளியே வந்துவிட்டாயா? சரி! இனிமேலாகிலும்,
ஒன்றும் தப்பு தண்டா செய்யாமல், ஏதாகிலும் வேலை செய்து
பிழை” என்றும்,
“ஜாக்கிரதை லிங்கம், ஊரிலே இனி எங்கே என்ன நடந்தாலும்
உன்பாடுதான் ஆபத்து. போலீசார் உன்மீது எப்போதும் ஒரு
கண் வைத்தபடிதான் இருப்பார்கள்” என்றும்.
“நீதான் அந்த லிங்கமா! மறந்துவிட்டேன். சரி! கொஞ்சம்
ஜாலியாக நான் வெளியே போகிறேன். என் வீட்டுக்கு மட்டும்
வராதேயப்பா” என்றும்,
“வேலையாவது, கீலையாவது, மாடு போலே உழைக்கிறேனென்றாலும்
வேலை எங்கேயப்பா இருக்கிறது. என்னைப் போன்றவனுக்கு வேலை
கிடைக்கவில்லை என்றால் உன்னை யார் கூப்பிடப் போகிறார்கள்”
என்றும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்றபடி பேசினர். ஒரு சிலர்
காசு கொடுத்தனர். அன்றைய பொழுது போயிற்று. தனது உற்றார்
உறவினர் முகத்தில் விழிக்க அவனுக்குத் துணிவில்லை. அன்றிரவு
சாவடியில் படுத்துக் கொண்டு, தான் கேட்ட சேதிகளை எண்ணிப்
பார்த்தான்.
என்ன அச் சேதிகள்?