அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கோமளத்தின் கோபம்
3

அவளுடைய செல்வமும் செல்வாக்கும் அழிக்கப்பட்டா லொழிய, கோமளத்தை, என்னால் பழிக்குப்பழி வாங்க முடியாது. எனவே எனது முதல் வேலை, கோமளத்தின் பணக் கொட்டத்தை அடக்குவதுதான்.

ஆம்! முள்ளை முள் கொண்டேதான் எடுக்க முடியும். பணத்தைப் பணங்கொண்டே அடக்க முடியும். பார்க்கிறேன் ஒருகை. அவளைப் பராரியாக்கினால்தான் அவள் ஒரு பாதகி என்பது விளங்கும். இல்லையேல் நான்தான் பித்தனெனப் பேசப்படுவேன். எனவே பொறு மனமே பொறு என்று எண்ணி, ஒரு முடிவுக்கு வந்தான், வஞ்சந் தீர்த்துக் கொள்ள வேண்டுமென சென்னைக்கு வந்த லிங்கம்.

எனக்கும் அவளுக்கும் வயது எவ்வளவோ வித்தியாசந் தான்! என்னைவிடக் குறைந்தது 10 ஆண்டுகளாவது அவள் பெரியவளாகத்தான் இருப்பாள். என்றாலும் எனக்கென்னவோ அவள் மீது ஆசை அவ்வளவு இருக்கிறது.”

“எதைக் கண்டு நீ ஆசைப்பட்டாய் தம்பி!”

“எதைக் கண்டா? என்ன அப்பனே, அப்படிக் கேட்கிறாய்? உனக்குக் கண்ணில்லையா! அவளுடைய பார்வை எப்படிப் பட்டது? வாட்டுகிறதே என்னை. அவள்மேனி என் மனத்தை உருக்குகிறதே. அவள் நடையழகை என்னென்பேன். உடை அழகை என்னென்பேன்? உடற்கட்டு உள்ளத்திலே கொள்ளை எண்ணத்தைக் கிளப்புகிறதே. அவள் பேச்சு எனக்குத் தேனாக இருக்கிறதே. நீ பேசிப்பார், அவளோடு. தெரியும் உனக்கு அந்த இன்பம். வேண்டாம் நண்பா, பேசக்கூடாது. என் கண் எதிரே வேறு ஆளுடன் அவள் பேச நான் சகியேன். கண்களைச் சற்றுக் குறுக்கிக் கொண்டு கருத்துத் திரண்டு வளைந்துள்ள புருவத்தைச் சிறிதளவு அசைத்தபடி அவள் பேசும்போது நீ கண்டால் தெரியும், அந்தக் காட்சியின் அழகை! என்னை அந்தச் சிங்காரி சொக்க வைத்து விட்டாள்.

ஆம்! அதிலே அவள் மகா கைகாரி!”

“நண்பா, அப்படிச் சொல்லாதே! அவளை அடைய நான் பட்டபாடு உனக்கென்ன தெரியும். இவ்வளவு பழக்கம் ஏற்பட நான் எத்தனை நாட்கள், வாரங்கள் காத்துக் கொள்டிருந்தேன் தெரியுமோ, மான் குட்டி போலவன்றோ அவள் துள்ளி ஓடினாள்! நான் முதன்முதல் அவள் கைகளைப் பிடித்து இழுத்தபோது அதை எண்ணும்போதே என் உள்ளம் எப்படி இருக்கிறது தெரியுமா?”

“வேதாந்தம் பேசாதே நண்பா!”

“வேதாந்தம் அல்ல தம்பி, அனுபவம்! நான் பட்ட பாடு. உனக்கு வர இருக்கும் ஆபத்து கேள் தோழா! அவளை நம்பாதே. அவள் சிரிப்பிலே சொக்கி வீழ்ந்து சிதையாதே, அவளைத் தீண்டாதே. அவள் ஒரு விபச்சாரி. விபச்சாரியின் தன்மையோடு கொலைகாரியின் மனம் படைத்தவள் அவள்”

பாஸ்கரன், ‘பளீர்’ என ஓர் அறை கொடுத்தான் லிங்கத்தின் தாடையில்.

‘கோமளத்தைக் குறைகூறும் குண்டனே. உன்னைக் கொல்வேன். என் எதிரில் பேசாதே! இனி முகத்தில் விழிக்காதே. போ வெளியே எழுந்து.”

லிங்கம் சிரித்துக்கொண்டே, பாஸ்கரன் வீட்டினின்றும் வெளியேறினான்.

‘நான் கூண்டிலே போவதற்கு முன்பு இருந்த நிலையில் இருக்கிறான் பாஸ்கரன். இவனாவது அடித்தான் தாடையில். இந்தக் கோமளத்தின் மையலால் சிக்கிய நான் ஆளை அடித்துக் கொன்றே விட்டேனே! பாதகி, அப்படித்தான் ஆளை அடியோடு தன் அடிமையாக்கிக் கொள்கிறாள். ஆடவர் அழியவே அழகைப் பெற்றாள்” என்று எண்ணினான் லிங்கம்.
பாஸ்கரன் என்ற சீமான் வீட்டு மகன், கோமளத்தைக் கண்டு அவள் மையலில் சிக்கியதைக் கடற்கரையிலேயே கண்ட லிங்கம், ஒருநாள், பாஸ்கரன் வீட்டுக்குச் சென்று அவனைத் தடுக்க எண்ணினான். இருவரும் பேசிய சம்பாஷணையே மேலே தரப்பட்டது. சம்பாஷணையின்போது கோமளத்தைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொன்ன லிங்கத்தைத்தான், பாஸ்கரன் அடித்தான்.
* * *

காதலால் கருத்தை இழந்த காளையின் கோபத்தைக் கண்டு லிங்கம் வருத்தப்படவில்லை. அவனுக்கே தெரியுமன்றோ அந்த ஆத்திரம், ஆவேசம் பரந்தாமன் மீது பாய்ந்த போது, மனம் இருந்த நிலை! எனவே கோபம் வரவில்லை லிங்கத்துக்கு; யோசனைதான் வந்தது. என்ன செய்வது, இந்த இளைஞனுக்கு வர இருக்கும் ஆபத்தை. எப்படிக் கோமளத்தின் நாகரிகப் போர்வையைக் கிழித்தெறிந்து, அவளுடைய நாசகாலத் தன்மையைக் காட்டுவது என்பதிலேயே லிங்கத்தின் யோசனை இருந்தது.
* * *

கோமளத்தின் செல்வத்தைச் சிதைத்தாலன்றிச் செல்வாக்கைச் சிதைக்க முடியாதென்பது லிங்கத்துக்கு நன்கு தெரியும். பணந்தானே, பராரியாகப் பாழுஞ்சத்திரத்திலே உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த தன்னை, பட்டினத்துக்குப் புது குபேரனாக் கிற்று. லிங்கத்துக்குப் பணத்தின் சக்தியா தெரியாது? எனவே அந்தப் பாதகிக்குப் பணமெனும் பலம் இருக்கும் வரையில் அவளைப் பகைத்து ஒன்றும் செய்யமுடியாது என்று எண்ணியே வேறு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வந்தான். இடையே பாஸ்கரனின் கவலை வந்துவிட்டது. பாபம் பாஸ்கரன்! கோமளத்தையே தனது உயிராக எண்ணினான். தனது குடும்பச் சொத்து மிக விரைவாகவே கரைத்துக் கொண்டு வந்தான். இந்த ஆபத்தைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினான் லிங்கம். தன் வார்த்தை பாஸ்கரன் காதில் ஏறுமென எண்ணியே அவன் மாளிகை சென்று மந்திராலோசனை கூறினான். ஏறுமா இவன் சொல்! தலையணை மந்திரம் செல்ல இடமுமுண்டோ? தையலின் மையலில் சிக்கிய பிறகு, நண்பன் மொழி என்ன செய்யும், நல்லோர் வார்த்தை எதுக்கு! மன்மதனிடம் மண்டியிட்ட பிறகு மகேஸ்வரனாலும் மீட்க முடியாதே அந்த அடிமையை!
* * *

ஒரு முரட்டு மனிதனை அழைத்து 100 ரூபாய் கொடுத் தனுப்பினான் லிங்கம் என முந்திய இதழில் குறிப்பிடிருந்த தோமல்லவா! அவன் லிங்கத்தின் சொற்படி கோமளத்தின் தோட்டக்காரனாக வேலைக்கமர்ந்தான்.

அவன்தான் லிங்கத்துக்கு ஒற்றன். கோமளத்தின் வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் விடாது கவனித்துச் சேதி சொல்பவன். விநாடிக்கு விநாடி கோமளம் என்ன செய்கிறாள், யாரைக் காண்கிறாள் என்பதெல்லாம் லிங்கத்துக்குத் தெரியும். கோமளம் இதை அறியாள். லிங்கத்திடம் அவளுக்குப் பயமிருந்தது. ஆனால் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவன் விரும்புவது மட்டும் அவளுக்குத் தெரியாது. அவன் மட்டும் ‘ஜாடை’ காட்டி இருந்தால் போதும், கோமளம் அவனுடன் கூடிக்குலாவத் தயாராக இருந்தாள். அவளுக்கென்ன அந்த வித்தை தெரியாதா? பழக்கமில்லையா! அழகு இருக்கிறது, அதைவிட அதிகமாக ‘சாகசம்’ இருக்கிறது. பாழாய்ப் போன பருவம் மாறிவிடுகிறதே என்ற கவலைதான்! அவளுக்குப் பவுடரும், மினுக்குத் தைலமும் எத்தனை நாளைகுத்தான் பருவத்தை மறைத்து பாவையாக்கிக் காட்டமுடியும்? இளமை மட்டும் என்றுமே இருக்குமானால் இகத்திலே இவளுக்கு இணை யாருமில்லை என்று ஆகிவிடுவாள் கோமளம். அவ்வளவு கைகாரி! ஆனால் லிங்கம் தன்னை அலட்சியம் செய்வதைக் கண்டாள். மேல்விழுந்து செல்ல மட்டும் பயமாகத்தான் இருந்தது. மேலும், பாஸ்கரன் இருந்தான், பணத்துடன், பித்தம் தலைக்கேறி.
* * *

‘சம்போ! சதாசிவம்!’ - என்று உருக்கமாகக் கூறிக் கொண்டே, ஜடைமுடியுடன் நெற்றியில் நீறு துலங்க, நீண்ட தொரு காவியாடை அணிந்து, ஒரு சாமி, கோமளத்தின் வீடு சென்றார். பிச்சை போட வேலைக்காரி வந்தாள். அரிசியைக் கொட்டினாள் பையிலே. “அபலையே! இந்தா அருட் பிரசாதம்” என்று கூறியபடி, தன் வெறுங்கையை நீட்டினார் சாமி. வேலைக்காரி விழித்தாள். “ஏன் விழிக்கிறாய், திற வாயை” என்றார் சாமி. திறந்தாள். கையை வாயருகே கொண்டு போனார். எங்கிருந்தோ சீனி வந்தது. சுவைத்தாள் வேலைக்காரி. சாமியின் அற்புதத்தை ஓடோடிச் சென்று கோமளத்துக்குக் கூறினாள். கோமளம் சாமியை நாட, சாமி பலவித அற்புதங்களைச் செய்து காட்டினார்.

“சாமி! தங்களுக்கு வேறு என்னென்ன தெரியும்” என்றாள் கோமளம். “ஆண்டவனின் அடிமைக்கு அனந்தம் அற்புதம் செய்யத் தெரியும். கைலையங்கிரியான் கடாட்சத்தால் காணாத பொருளைக் கண்டெடுப்பேன் - இல்லாத பொருளை உண்டாக்குவேன் - ஆகாத காரியத்தை ஆக வைப்பேன் - பேயோட்டுவேன் - பித்தம் தெளிவிப்பேன் - இரசவாதம் செய்யவும் வல்லேன். ஆனால் அதை மட்டும் அடிக்கடி செய்வதில்லை” - என்று சாமியார் கூறினார்.

“எல்லாச் சாமிகளுந்தான் இரசவாதம் செய்யமுடியுமெனக் கூறுவது. ஆனால் ஏமாற்றந்தான்” என்றாள் கோமளம்.

“இருக்கலாம் அணங்கே! என் பேச்சு சரியோ, தப்போ! பிறகு பார்ப்போம். நான் இன்று ஒரு ஆரூடம் சொல்கிறேன். நாளை வரச்சொன்னேன். ஆண்டவனறிய வருகிறேன். நான் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று பாரும் அப்போது” என்று சாமியார் சொன்னார்.

“சொல்லும்” என்றாள் கோமளம்.

“சுகமும் துக்கமும் மாறிமாறி வரும். அது இயற்கை அம்மையே! இன்று சுகமாக இருக்கும் உன் தமையன் நாளை கைது செய்யப்படுவான். இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக-” என்றான் சாமியார். ‘என்ன? என் அண்ணா கைது ஆவதா?’ என்று திகைத்துக் கேட்டாள் கோமளம்.

பாபம்! நெஞ்சிலே பயம். குலை நடுக்கம்! மாதரசி மனம் நொந்து, “என்ன பயம்? நடப்பன நடக்கும் நானிலத்திலே. இதுவே முறை” என்றார் சாமியார்.

“சுவாமி! என்னைச் சோதிக்க வேண்டாம்” என்று கெஞ்சி னாள் கோமளம். “மாதே! நான் ஏன் சோதிக்க வேண்டும். சோமேசன் என்னையன்றோ சோதிக்கிறார்” என்றார் சாமியார்.
“என்ன அது?” என்றாள் கோமளம்.

“உன் அண்ணனைக் காப்பாற்றி உன் மனத்தைக் குளிர வைக்க வேண்டுமென்று ஓர் எண்ணமும் என் உள்ளத்திலே எழுகின்றது. அதே நேரத்திலே அடாது செய்தவர் படாதபாடு படுவதன்றோ முறை! நாம் ஏன் அதிலே குறுக்கிட வேண்டுமெனவும் தோன்றுகிறது. ஆண்டவன் என்னைச் சோதிக்கிறான்” என்றார் சாமியார்.

“சுவாமி! எப்படியேனும் என் அண்ணாவைக் காப்பாற்றும். அவர் ஆபத்திலே சிக்கிக்கொண்டதென்னமோ உண்மைதான். என்ன செய்வது அதற்கு” என்றாள் கோமளம்.

“மாதே! ஒன்று செய். உன் அண்ணனை இங்குவரச் சொல். நாளை நாம் மூவருமாகச் செல்வோம். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இடுகாட்டில் என் அண்ணல் ஏகாந்தனுக்கு ஒரு பூஜை நடத்துவோம். அவர் காப்பாற்றுவார். உமது அண்ணன், தான் இதுவரை செய்த தவறை ஒன்று விடாது எழுதி அதை இலிங்கேசன் பாதத்திலே வைத்து வணங்கவேண்டும். ஆண்டவன் அருள் புரிவார்” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார் சாமியார்.
* * *

கவலையுடன் உள்ளே சென்ற கோமளம், தனது படுக்கை யறையில் ஒளிந்து கொண்டிருந்த தனது அண்ணன் வக்கீல் வரதாச்சாரியிடம் சாமியாரைப் பற்றிச் சொல்ல, அவனும் ஏற்பாட்டுக்கு ஒப்பினான்.

மறுநாள் இரவு 10 மணிக்குச் சாமியார் வந்தார். வரவேற்று இருவரும் வணங்கினர். ‘எழுதி விட்டீரோ ஆண்டவனுக்கு விண்ணப்பத்தை’ என்று கேட்க, ‘ஆம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தார். வக்கீலாக இருந்த பிறகு ஒரு ஜெமீனில் திவானாக இருந்து கள்ளக் கையொப்பம், இலஞ்சம் முதலிய பல செய்து, விஷயம் வெளிவந்துவிடவே சென்னைக்கு ஓடிவந்து தங்கையிடம் சரண் அடைந்த வரதாச்சாரி. சாமியார் அதை வாங்கிப் படித்துக்கூடப் பார்க்கவில்லை. சிறிது நேரம், மூவரும் ஆண்டவனைத் தொழுதனர்.

மணி பனிரெண்டடித்தது. மூவரும் சுடுகாடு செல்லப் புறப்பட்டனர். வீட்டு வாயிலை அடைந்ததும், எங்கிருந்தோ போலீசார் திடீரெனத் தோன்றினர். வரதாச்சாரியைக் கைது செய்தனர். சாமியிடமிருந்த பையையும் பிடுங்கிக் கொண்டனர். அதிலேதான் வரதாச்சாரி தன் குற்றம் பூராவையும் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குப் போலீஸ் கமிஷனரே இருந்தார்.

“மிஸ்டர் லிங்கம்! சபாஷ்! சரியான வேலை செய்தீர். ஆசாமி அகப்படாமலே மூன்று மாதமாகத் தலைமறைந்து கிடந்தான்” என்று கூறி சாமியாரைத் தட்டிக் கொடுத்தார். ஜடை முடியுடன் விளங்கிச் சாகசமாகக் கோமளத்தை – வரதாச்சாரியையும் ஏய்த்த லிங்கம் சிரித்தான். சொல்ல வேண்டுமா கோமளத்தின் கோபத்தை. தோட்டக்காரனாக நடிக்கும் ஒற்றன் மூலமாக வரதாச்சாரி மீது பலவித குற்றமிருப்பதைக் கோமளம் கேள்விப்பட்டு வருந்தின சேதியும், வரதாச்சாரி தப்பு தண்டா செய்துவிட்டு தலை மறைந்த சேதியும், திருட்டுத்தனமாக வீடு வந்த சேதியும் கேள்விப்பட்டு, சாமிவேடம் பூண்டு, லிங்கம், வரதாச்சாரியைச் சிக்க வைத்தான். கோமளத்தின் கொட்டம் அடங்கும் இனி என்று எண்ணி மகிழ்ந்தான்.

* * *

வரதாச்சாரியின் வழக்கு ஆரம்பமானதும், கோமளத்தைக் கொண்டாடி வந்த கூட்டம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விட்டது. அண்ணனைப் போலத்தான் இவளும் இருப்பாள் என்று பேசிக் கொண்டனர். பாஸ்கரன் மட்டும், அவளையும், அவளுக்காக வரதாச்சாரியையும்கூடப் புகழ்ந்தே பேசினான்.

வழக்கு காரணமாக, கோமளத்தின் பணம் பஞ்சாய் பறந்தது. அலைச்சல், மனக்கலக்கம், எவ்வளவு பணத்தை வாரி வீசியும் ஒன்றும் பயனில்லாமலே போய்விட்டது. வரதாச்
சாரிக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
* * *

வழக்கு முடிந்த மறுதினம்...

“குமாரி கோமளாதேவியின் அண்ணன் வரதாச்சாரிக்கு மோசடி குற்றத்திற்காக 7 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக் கப்பட்டது.” என்ற சுவரொட்டி சென்னை முழுவதும் ஒட்டப் பட்டது. அதற்காக லிங்கத்துக்குச் செலவு இருநூறு ரூபாய். ஆனாலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாகச் செலவிட்டாலும் வராத அளவு ஆனந்தம். பழி தீர்த்துக் கொண்டோம். இனி அவள் வெளியே தலைநீட்ட முடியாது. ஒழிந்தது அவள் பணம். மீதமிருப்பது அவளுடைய டம்பத்துக்குக் காணாது; செல்வாக்கு அற்றுவிட்டது. செத்தாள் அவள் - எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.
* * *

இவ்வளவு நடந்தும் பாஸ்கரனின் மனம் மாறவில்லை. முன்னைவிட மோகம் அதிகரித்தது. கோமளமும், உலகம் தன்னை இனி வெறுத்து ஒதுக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் பாஸ்கரனையும் விட்டுவிட்டால் வீதியில் திண்டாட வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனிடம் அளவற்ற ஆசை கொண்டவன் போல நடித்தாள். குடும்பமோ பெருத்துவிட்டது. வரதாச்சாரியின் மனைவி, குழந்தைகள், கோமளத்திடம் வந்து விட்டனர். இந்நிலையில் பாஸ்கரனின் தந்தை இறந்துவிட்டார். இந்தத் துக்கச் சேதி கோமளத்துக்குப் புதிய ஆனந்தத்தைக் கொடுத்தது. ஏனெனில், பாஸ்கரன் தந்தையின்கீழ் பிள்ளையாக இருந்ததால் அதிக தாராளமாகப் பணத்தை இறைக்க முடியாதிருந்தான். தந்தை போனபின், பாஸ்கரனே ஜெமீன்தார். எனவே இனி கோமளம் ஒரு ஜெமீன் தாரணியன்றோ! பாஸ்கரன் கோமளத்தை ரிஜிஸ்தர் மணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டான். இச்சேதி கேட்டு லிங்கம் துடிதுடித்தான். எந்தப் பாடுபட்டாவது இந்த மணம் நடக்க ஒட்டாது தடுத்தே தீரவேண்டும் எனத் தீர்மானித்தான். பாஸ்கரனோ யார் வார்த்தையும் கேட்கமாட்டான். தன்னை ஒரு பகைவனாகவே கருதிவந்தான். என் செய்வது?

கோமளத்தின் கெட்டகாலம் மாறி மறுபடியும் அவள் சீமாட்டியாக வாழ்வதைக் கண்ணால் காண்பதைவிட, தான் பழையபடி பஞ்சையாகிப் போவதேமேல் என்று எண்ணினான். ஆனால் வீரப்பன், கணக்குப்படி, எவ்வளவோ செலவிட்டும், லிங்கத்தின் பணம் குறையவில்லை. வீரப்பன் லிங்கத்தின் சொத்தைக் கொண்டு ஆரம்பித்த வியாபாரம் நல்ல இலாபத்தைத் தந்தது. எனவே, பணத்துக்குப் பஞ்சமில்லை! ஆனால் பாதகி கோமளம் மறுபடியும் சீமாட்டியாவதா. அதுதானே கூடாது என்று எண்ணி எண்ணி வாடினான் லிங்கம். அந்த பாஸ்கரன் மட்டும் அவளைக் கைவிட்டால் போதும், அவள் கொட்டம் அடியோடு அடங்கும். அவனோ அவளைக் கலியாணம் செய்து கொள்கிறானாமே. இதற்கென்ன செய்வது என்று ஏங்கினான்.
* * *

ஒரு நாள் இரவு தோட்டக்கார ஒற்றன் ஓடோடி வந்து ஏதோ சேதி சொல்லிவிட்டுப் போனான். உடனே மோட்டாரை ஓட்டிக் கொண்டு லிங்கம் நகரின் கோடியில் இருந்து ஒரு சிறு தெருவுக்குச் சென்றான். ஒரு வீட்டினுள்ளே போனான்.

ஒரு நடுத்தர வயதுடைய மாது “வாங்கய்யா, உட்காருங்கோ! எங்கிருந்து வருகிறீர். அம்மா, அம்புஜம் ஏதோ வெட்கப்படாதே - தாம்பூலம் எடுத்துவா” என்றாள். அது ஒரு தாசி வீடு. அம்புஜம் என்ற பெண் தாம்பூலத்தை எடுத்து வந்து வைத்துவிட்டு வெட்கப்பட்டாள். அது அவளுடைய வாழ்க்கை வித்தையிலே ஒரு முக்கியமான பாகம்.

“அம்மா! நான் வந்த விஷயம் வேறு. நீங்கள் எண்ணுவது வேறு. அம்புஜம். நாட்டியம் ஆடுமென்று கேள்விப் பட்டேன். பிரபலமான கலா மண்டபத்திலே பயிற்சியாமே! எனக்கு நாட்டியக் கலையிலே கொஞ்சம் ஆசை” என்றான் லிங்கம். நாட்டியம் ஆடும்; ஆனால் குழந்தைக்கு இப்போது கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாள் தாய்.

‘கலாமண்டபத்திலே நல்ல பயிற்சிதானோ?’ - என்று கேட்டான் லிங்கம்.

‘பயிற்சிதான்’ என்று இழுத்தாற்போல் பதில் கூறினாள் அம்புஜம்.

“ஆயிரம் ரூபாய் இப்போதே தருகிறேன் அம்புஜம், கலா மண்டபத்தின் மர்மத்தை எனக்குச் சொல்லு. உங்களுக்கு ஓர் ஆபத்தும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோமளம் செய்த கொடுமைகளை மட்டும் சொல்லு எனக்கு. நீ நேற்று அவள் வீடு சென்று அழுதவரைக்கும் விஷயம் தெரியும். ஆகவே ஒன்றையும் ஒளிக்காதே. நான் உன்னைச் சிக்க வைக்க மாட்டேன்; நடந்ததைக் கூறு” என்று கேட்டான் லிங்கம்.

வெகுநேரம் வரையில் விஷயத்தைக் கூற அம்புஜம் ஒப்பவில்லை. பிறகு சொல்லிவிட்டாள்.

“அந்தப் பாவி கோமளம், எங்களை எல்லாம் வீணாக வஞ்சித்து, பெரிய ஆட்களுக்கு அந்தக் கலாமண்டபத்தை விபசார விடுதியாக்கிப் பணம் சேர்த்தாள். இப்போது அதைக் கலைத்து விட்டாள். நாங்கள் கஷ்டப்படுகிறோம். அவள் அதுமட்டுமா செய்தாள். எத்தனையோ பெண்களே, எங்கோ வடநாட்டிலே ஓர் ஊர் இருக்கிறதாம்.அங்கு விற்று வந்தாள். அவள் செய்த கொடுமை கொஞ்சமல்ல” என்றாள் அம்புஜம்.

“எனக்கு ருஜு வேண்டுமே” என்று கேட்டான் லிங்கம்.

“இதை எப்படி ருஜு செய்வது. நேற்றுகூட இவளால் விற்கப்பட்ட பெண் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள்” என்றாள் அம்புஜம்.

“அதுவே போதுமே! எங்கே எடு அக்கடிதத்தை” என்றான் லிங்கம்.

அதிலே, ‘பாவி கோமளம் என்னைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, குடிகாரனுக்கு விற்றுவிட்டாள். நான் இங்குத் தவிக்கிறேன். அவள் என்னைக் கன்னிகை என்று சொல்லி ஏமாற்றி, 2000 ரூபாய்க்கு விற்று விட்டாளாம். நான் கன்னிகை அல்ல என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. என்னைக் கொல்லுகிறான் குடிகாரன்.’

என்று அந்த அபலை தன் கதையை எழுதியிருந்தாள். ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அக்கடித்தை வாங்கிக் கொண்டான் லிங்கம். இனி தீர்ந்தது கோமளத்தின் வாழ்க்கை எனக் குதித்தான்; வீடு வந்தான்.
* * *

“மிஸ்டர் பாஸ்கர்! பேசுவது லிங்கம்... அடடே, கொஞ்சம் இருப்பா, விஷயம் முக்கியமானது. கோபிக்காதே! உனக்கு எப்போது கலியாணம்.”

“உனக்கு அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை”

“மிஸ்டர் பாஸ்கர்! இன்றிரவு கோமளம் என்னிடம் கொஞ்சி விளையாடி முத்தமிடுவதை நீ கண்டால் என்ன பரிசு தருவாய்...?

“துப்பாக்கியால் அவளையும் உன்னையும் சேர்த்துச் சுடுவேன்...”

“துப்பாக்கி இல்லையானால்-”

“விளையாடாதே.”

“கேள் பாஸ்கர்! நாளை இரவு பத்து மணிக்கு, நீ இங்கு வர வேண்டும். இங்கு நான் சில காட்சிகளைக் காட்டுகிறேன். பிறகு தாராளமாகக் கோமளத்தைக் கலியாணம் செய்து கொள்ளலாம்.”

“சரி! வருகிறேன்-”

இந்த டெலிபோன் சம்பாஷணைக்குப் பிறகு...

“கோமளந்தானே பேசுவது.”

“ஆமாம், நீங்கள்...”

“பழைய காதலன்...”

“நான்சென்ஸ்...”

“உன் கலியாணத்துக்கு ஏதாவது பரிசு தர வேண்டாமா? லிங்கத்தின் பரிசு வராமல் கலியாணம் நடக்கலாமா...”

“என்னிடம் வீண் வார்த்தை பேச வேண்டாம்.”

“இதேதான் கலாமண்டலி அம்புஜம்கூடச் சொன்னாள்.”

“என்ன? அம்புஜமா? அது யார்?”

“அவள்தான் உனது கலா மண்டல நட்சத்திரம். கல்வி மண்டபத்தில் கெட்டவள். அவளுக்கு நீ விற்ற பெண் கடிதம் எழுதினாள். ஆயிரம் ரூபாய்க்கு அதை விலைக்கு வாங்கினேன். பாஸ்கரனுக்கு அதைத்தரப் போகிறேன். இன்றிரவு 9 மணி முதல் 10 மணிவரை நீ என்னுடன் தனித்திருக்கச் சம்மதித்தால் - கடிதம் கொளுத்தப்படும். இல்லையேல் கொடுக்கப்படும். ‘லிங்கம்... லிங்கம்... ஹலோ!’ ...டெலிபோனைக் கீழே வைத்துவிட்டு லிங்கம் சிரித்தான்.
* * *

இரவு 9 மணிக்கு லிங்கத்தின் வீடு நோக்கி கோமளம் வந்தாள். என் செய்வாள் பாபம். அந்த ஒரு கடிதம் அவளுக்கு எமனன்றோ?

மலர்ந்த முகத்துடன் வரவேற்றான் லிங்கம்.

அவளுக்கு முகத்தில் ஈயாடவில்லை. பயம், நடுக்கம், கண்களிலே நீர் ததும்பிற்று. நேரே இருவரும் படுக்கை அறை சென்றனர். கடிதத்தைப் படித்துக் காட்டினான் லிங்கம். கோமளம் அழுதாள்.

“லிங்கம்! போதாதா நீ என்மீது வஞ்சந்தீர்த்துக் கொள்வது? இந்த உதவி செய். கடிதத்தைக் கொளுத்தி விடு. பாஸ்கரனை நான் மணக்காவிட்டால் என் வாழ்வு பாழாகிவிடும்.

“கோமளம்! உனக்குப் பாஸ்கரன் மீது காதலா?” என்று கேட்டான் லிங்கம்.

“ஆம்! தடையில்லாமல், கடைசிவரை கெட்டவளாகவா இருப்பேன். எனக்குப் புத்தி வந்துவிட்டது” என்றாள் கோமளம்.

“அதைப் போலவே உன்மீதும் எனக்கு ஆசை வந்து விட்டது. அதோ உன் அழகிய உதடு என்னை அழைக்கிறது. முத்தம் வேண்டும் கோமளம்! மூன்று முத்தங்கள் கொடு,

இக்கடிதத்தை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்” என்றான் லிங்கம்.

“நிஜமாகவா! உள்ளபடி என் முத்தம் உமக்கு வேண்டுமா” என்று கேட்டாள் கோமளம்.

“ஆமாம்; கொடு! ஆசையுடன் கொடு!” என்று ஆவேசம் வந்தவனைப்போலக் கேட்டான் லிங்கம்.
அவன் மீது பாய்ந்து விழுந்தபடி கோமளம், ஒன்று, இரண்டு, மூன்று நான்கு ஐந்து என முத்தங்களைக் கொடுத்த வண்ணமிருந்தாள்.

“போதுமடி உன் முத்தம்” என்று கூறியபடி பாஸ்கரன் அவள் மயிரைப் பிடித்து இழுத்தான். லிங்கம் சிரித்தான். கோமளத்தின் கோபம், எப்படித்தான் இருந்ததென்று யாராலும் சொல்லமுடியாது. வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே ஓடிவிட்டான். பாஸ்கரன், “எனக்கு நீதான் குரு” என்று லிங்கத்தின் அடி பணிந்தாள்.

கோமளத்தின் வாழ்க்கை, கிடுகிடுவெனக் கீழே வந்து விட்டது. கடைசியில் அவள் பகிரங்கமான விபசாரியாகி, விபசார சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டாள்.

லிங்கம் தனது வியாபாரத்தையும், சொத்தையும், ஒரு பகுதி பரந்தாமன் குடும்பத்துக்கும், மற்றொரு பகுதி விபசாரிகள் மீட்பு சங்கத்துக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு தனது நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தானாகப் பொருள் தேட சிங்கப்பூர் சென்றுவிட்டான்.

(குடியரசு - 1939)