அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கோமளத்தின் கோபம்
2

வக்கீல் வரதாச்சாரி, எங்கோ பெரிய உத்தியோகத்திற்குப் போய்விட்டார். ராவ்பகதூர் தமது சொத்தைக் கோமளத்துக்கு எழுதி வைத்துவிட்டு ‘கண்ணன் திருவடி’ சேர்ந்தார். கோமளம், தனிப்பங்களா எடுத்துக் கொண்டு எங்கோ, சென்னையில் இருப்பதாகவும்-, கோமளத்தின் படம் அடிக்கடி பத்திரிகையிலே வருவதாகவும் சேதி. பரந்தாமன் வீட்டார் பரிதாப நிலைமையில் இருப்பதாகவும் கேள்விப்பட்டான்.

அன்று இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தான். மணிக்கு மணி வார்டர் கூப்பிடுவது போன்ற கவனம்.

பொழுது புலர்ந்ததும், நேராகப் பரந்தாமன் இருந்த வீட்டிற்குச் சென்றான்.

பரந்தாமனின் குழந்தைகள் வெளியே புழுதியில் புரண்டு கொண்டிருந்தன. அந்த ஏழைக் குழந்தைகளுக்கு அதுதான் விளையாட்டு. கடையிலே பொம்மைகளும், ஊதுகுழலும் இருக்கின்றன. ஆனால், அம்மா காசு கொடுத்தால்தானே! அம்மாவைக் காசு கேட்டால்தான் போட்டு அடித்துத் தம்மை அழவைத்துவிட்டுத் தானும் அழுகிறார்களே. காசு இல்லாத விளையாட்டுச்சாமான், கல்லும், மண்ணுந்தானே! ஆகவேதான் குழந்தைகள் புழுதியில் புரண்டு விளையாடின. பரந்தாமன் இறந்த பிறகு அவனுடைய மனைவி மரகதம் சிறு பலகாரக்கடை வைத்துக் கொண்டு காலந்தள்ளி வந்தாள்.

“அம்மா! யாரோ ஒரு ஐயா வந்தாங்க” என்று கூவினான் குப்பன். அவன்தான் மரகத்தின் மூத்த மகன்.

“யாரய்யா! என்ன வேண்டும்? இட்டிலி சூடா இருக்கிறது” என்று கூறிக்கொண்டே வெளியே வந்த மரகதம், லிங்கத்தைக் கண்டாள். அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் ஒரு விநாடி. உடனே கோவென ஆத்திரத்துடன் கத்தினாள். “ஆ! பாவி! என் முகத்திலும் விழிக்க வந்துவிட்டாயா! என் குடியைக் கெடுத்தவனே. இங்கேன் வந்தாய்? டே குப்பா, சின்னா, சரசு, அங்கே போக வேண்டாம். அந்தக் கொலைக்காரப்பாவி, நம்மையும் ஏதோ செய்யத்தான் இங்கே வந்தான். ஜெயிலிலே இருந்து ஓடிவந்து விட்டான். கூப்பிடு போலீசை” எனக் கூக்குரலிட்டாள்.

லிங்கம் அந்தச் சோகக் காட்சியைக் கண்டு தானும் அழுதான். பாவி நான் செய்த பாவத்தின் பயனாக, இந்தப் பாவையும் அவள் மக்களும் வாடுகின்றனரே, என் செய்வேன்! என்னைச் சித்திரவதை செய்தாலும் தகுமே என எண்ணினான் லிங்கம். பிறகு, மரகதத்தை நோக்கி, “அம்மா! நான் செய்தது தப்புதான்...” என்று சமாதானம் சொல்வதற்குள், மரகதத்தின் கூச்சலைக் கேட்டு அங்குக் கும்பல் கூடிவிட்டது. “இங்கேண்டா வந்தாய். என்னா தைரியண்டா இவனுக்கு. போடா வெளியே . கூப்பிட்டு போலீசுகிட்ட கொடுக்கணும்” என்று பலர் மிரட்டினார்கள். லிங்கம் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவில்லை. சிலர் அடித்தார்கள். பதிலுக்குக் கையைத் தூக்கவுமில்லை. அவர்கள் துரத்தத் துரத்த ஓடினான். அந்த இடத்தைவிட்டு ஓடி, பழையபடி சாவடியில் படுத்தான். படுத்து கண்கள் சிவக்குமளவு, தலை பளுவாகு மட்டும் தன் நிலையையும், தன்னால் பரந்தாமன் குடும்பம் பரிதவிப்பதையும் எண்ணி எண்ணி அழுதான். அழுது பயன் என்ன? அவனைத் தேற்ற யார் இருக்கிறார்கள். ஆம்! ஒரே ஒரு தங்கை, சிங்கப்பூரில் சீமாட்டியாக இருக்கிறாள்.

கொலைகார லிங்கத்துக்கு, ஒரு தங்கை இருப்பதைக் கூட உலகம் ஒப்புமோ ஒப்பாதோ! மேலும், தங்கை மணம் செய்து கொண்டு சிங்கப்பூர் போனது முதல் வீடு வருவதுமில்லை. கடிதம் போடுவதுமில்லை. தகப்பனார் இறந்தபோது சேதி கூட அனுப்பப்படவில்லை. “தெரியாமல் ஆச்சாரமற்ற அந்தப் பயலுக்குக் கிளியை வளர்த்துப் பூனையிடம் பறிகொடுத்ததைப் போலத் தந்துவிட்டேன். அவனும் என் முகத்தில் விழிக்கக்கூடாது. அந்தப் பெண்ணும் வரக்கூடாது, என் பிணத்தருகே” என்று கூறிவிட்டு இறந்தவர் லிங்கத்தின் தகப்பனார். அவருடைய புரோகிதப் பித்து, சீர்த்திருத்தவாதியான சுந்தரத்துக்குப் பிடிக்கவில்லை. சுந்தரம் மாமனாரைக் கடிந்து பேசலானான். ‘போக்கிரிப்பயல்! என்னமோ எல்லாம் தெரிந்தவன் போலப் பேசுகிறான்!’ என்று மாமானார் ஏசுவார்; காந்தா பாடு மிகக் கஷ்டமாகிவிடும். யார் பக்கம் பேசுவது. தகப்பனார் கூறும்போது, தன் கணவர் குற்றம் செய்வதாகத்தான் தோன்றுகிறது. கணவர் விஷயத்தை விளக்கும்போதோ, தகப்பனார் செய்வது ஆபாசம் எனத் தெரிகிறது. இந்தச் சில்லறைச் சண்டை முற்றி, கடைசியில் ஒருவர் முகத்தில் ஒருவர் இனி விழிப்பதில்லை என்று சண்டை போட்டுக் கொண்டு சுந்தரம், தன் மனைவி காந்தாவுடன் சிங்கப்பூர் சென்று, வியாபாரம் செய்து பெரும் பொருள் சேர்த்தான். கடைசிவரை விரோதம் நீங்கவில்லை; அவர்கள் தனியாகவே வாழ்ந்தனர்.

அவர்களை எண்ணினான் லிங்கம், அந்தச் சாவடியில் படுத்துக்கொண்டு.

எவ்வளவு பெரிய மாளிகையோ, என் தங்கை புருஷனுக்கு என்ன அழகான மோட்டாரோ, எத்தனை குழந்தைகளோ, ஒன்றும் எனக்குத் தெரிய மார்க்கமில்லையே! நான் அங்குச் செல்லலாமா? சென்றால் என்னைக் கவனிப்பார்களோ, அன்றி கொலை செய்தவனுடன் கோடீசுவரனான நான் பேச முடியாது எனச் சுந்தரம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றும் எண்ணினான்.

மேலே பார்த்தான் ஒரு கயிறு கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனையும் அறியாது அவன் கைகள் நெஞ்சருகே சென்றன.

தற்கொலை செய்து கொள்வதே நல்லது. நான் ஏன் இருக்க வேண்டும்? பொருள் இழந்தேன். பொன் இழந்தேன், பெற்றோரை இழந்தேன். கொலை செய்தேன், சிறைபுகுந்தேன், இன்று சீந்துவாரில்லை. வேலையில்லை, வாழ வகையில்லை. மரியாதை கிடைப்பதில்லை. மண்தின்று வாழ்வதா! பிச்சை எடுத்துப் பிழைப்பதா? என் செய்வது? அலையில் அகப்பட்ட சிறு குழந்தை, நெருப்பில் விழுந்த புழு, ஆடிக் காற்றில் சிக்கிய பஞ்சு போலவன்றோ எனது நிலை இருக்கிறது. ஏன் நான் வாழவேண்டும்? இறப்பதே நல்லது. இன்றிரவே இந்தச் சாவடியே சரியான இடம். இதோ இக்கயிறே போதும், என் வகையற்ற வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர!

கோமளம், பங்களாவிலே வாழுகிறாள்; அவள் தூண்டு தலால் கெட்ட நான் சாவடியில் புரளுகிறேன்.

பரந்தாமன் ஏன் அடிபட்டு இறந்தான். அவன் குடும்பம் படும்பாட்டைப் பார்த்தால் வயிறு ‘பகீரென’ எரிகிறது.

வக்கீலாம், வக்கீல். கோமளத்தின் சேட்டைகளைத் தெரிந்தும் கண்டிக்காது இருந்து வந்தார். அவருக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்ததாம். எனக்கோ வேலையில்லை.

‘நான் ஒரு கொலைகாரன்! ஜெயில் பறவை! தீண்டாதான். நடைப்பிணம்! கண்டவர் வெறுக்க, காலந்தள்ளுவதா? ஏன் இந்தப் பிழைப்பு, இன்றே முடித்துவிடுகிறேன் என் சோகமான வாழ்க்கையை’ என்று தீர்மானித்தான். விநாடிக்கு விநாடி அவனது உறுதி பலப்பட்டது. வாழ்க்கையில் வெறுப்பு அதிகரித்தது. அதுமட்டும் பகற் பொழுதாக இல்லாதிருந்தால், அவன் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பான். பாழாய்ப்போன சூரியன் எப்போது மறைவானோ, என் வாழ்வும் எப்போது மறையுமோ என்று வாய்விட்டுக் கூறினான். படுத்துப் புரண்டான் சாவடிப் புழுதியிலே. சிவந்த கண்களிலே நித்திரை புகுந்தது. அயர்ந்து தூங்கிவிட்டான், துர்ப்பாக்கியமே உருவென வந்த லிங்கம்.

மணி பனிரெண்டுக்கு மேலாகிவிட்டது. நாகரிக உடை அணிந்த ஓர் ஆள் அங்கு வந்தான். படுத்துக் கிடக்கும் லிங்கத்தைத் தட்டி எழுப்பினான். கண்களைத் திறந்தான் லிங்கம். தனது நண்பர்களிலே ஒருவனும், முன்னாள் தன்னை வீட்டுக்கும் வரவேண்டாமெனக் கடிந்துரைத்தவனுமான, வீரப்பன் சிரிப்புடன் நிற்பதைக் கண்டான்.

“லிங்கம்! எழுந்திரு. இது என்ன, புழுதியிலே படுத்துப் புரளுகிறாயே. இதோ பார்! நான் உனக்கொரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கிறேன்! இனி நீ பெரிய சீமான்” என்றான்.
லிங்கத்துக்கு அவ்வளவு சோகத்திலும் சிரிப்புத்தான் வந்தது. “இவன் யாரடா பித்தன்!” என்று எண்ணினான்.

“உன் தங்கை புருஷர் சிங்கப்பூரிலே இறந்துவிட்டாராம். அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே உன் தங்கையும் பிரசவ வேதனையால் இறந்துவிட்டதாம். ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்தை உனக்கு எழுதி வைத்திருக்கிறார் சுந்தரம் பிள்ளை. இதோபார், பத்திரிகையை” என்று வீரப்பன் கூறினான். பத்திரிகையைப் பிடுங்கிப் பார்த்தான் லிங்கம்.

‘உண்மைதான்! வீரப்பன் சொன்னது நிஜமே!’ என்பது விளங்கிற்று.

ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து வந்து விட்டது, கைதி லிங்கத்திற்கு! கொலைகார லிங்கம் கோடீசுவரர் இனி!

பணம்! பணம்! பஞ்சையாய், பதராய், பலராலும் தூற்றப் பட்டு, பட்டினி கிடந்து படுத்துப் புரண்ட லிங்கம் இனி பணக்காரன். ஒரு கோடி ரூபாய்! ஒரு முழங்கயிற்றால் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு கட்டிய நேரத்திலே, ஒரு கோடி ரூபாய் வருகிறது. கயிறு ஏன்? கவலை ஏன்? வெறுப்பு ஏன்? தற்கொலை ஏன்?

“இதோ ஒரு கோடி ரூபாய். உலகம் இனி உன் காலடியில். உற்றார் உறவினர் இனி உன் சொற்படி நடப்பர். இதோ உன்னை ஒரு நாளைக்கு முன்பு வெறுத்த வீரப்பனைப் பார்! விஷயம் அறிந்ததும் வந்துவிட்டான், உன்னைத் தேடிக் கொண்டு. எழுந்திரு! எழுந்திரு லிங்கம்! நான் இருக்கிறேன் உனக்குத் துணை. இந்த நானிலம் முழுதும் இனி உன் அடிமை” என்று கோடி ரூபாய் சொல்லாமற் சொல்லிற்று.

கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான லிங்கம் வீரப்பனுடன், சாவடியை விட்டுக் கிளம்பினான்.

ஊரார் துரத்தப்பட்டு ஓடிவந்து சாவடியில் படுத்த லிங்கம் ஒரு கோடி ரூபாயின் சொந்தக்காரனாகி, வீரப்பனுடன் சாவடியை விட்டுப் புறப்பட்டு வீரப்பன் மாளிகை சென்றான்.

வீரப்பன் வீடு சென்ற லிங்கம் அங்குத் தங்கியபடியே, சிங்கப்பூர் சேதியின் முழுவிவரமும் தெரிந்து கொண்டான். பிரபல வக்கீல்கள் வலிய வந்து, எப்படி, அந்தச் சொத்தை எடுத்துக் கொள்வதென்பதையும், என்ன செய்வதென்பதையும் சிரித்த முகத்துடன் கூறினர். வீரப்பன், வக்கீலை அழைத்துக் கொண்டு தானே சிங்கப்பூருக்குச் சென்று வருவதாகச் சொன்னான். சரி என ஒப்பினான் லிங்கம். ஆனால் உடனே ஒரு பத்தாயிரம் தேவை என்றான். சேட்ஜி அழைக்கப்பட்டார். “பத்தாயிரம் போதுமா பிள்ளைவாள், இருபதினாயிரம் தரட்டுமா” என்று கேட்டபடியே, ஒரே கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு, பத்தாயிரம் ரூபாய் தந்தான்.

ஆமாம்! ஒரு கையெழுத்து என்றாலும் அது ஒரு கோடீசு வரரின் கையெழுத்தல்லவா?

வீரப்பா, இனி மாதமொன்றுக்கு உனக்கு 200 ரூபாய் சம்பளம். பரந்தாமன் குடும்பத்துக்கு மாதா மாதம் 100 ரூபாய் தரவேண்டும். கோடி ரூபாயோ, இரண்டு கோடியோ, எந்த இழவோ அது எனக்குத் தெரியாது. அதனை மேனேஜ் செய்ய வேண்டியது நீ. நான் கேட்கும்போது எனக்குப் பணம் வேண்டும்.” என்று லிங்கம் கூறினான்.

வீரப்பனும் ஒரு வக்கீலுமாகச் சிங்கப்பூர் சென்றனர், செல்வத்தைத் திரட்டிக் கொண்டு வர.

லிங்கம், பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்னை சென்று, தனி விடுதியில் சமையற்காரன், வேலை ஆள் அமர்த்திக் கொண்டு வாழலானான். மோட்டார் வாங்கியாகி விட்டது.

வாழ்க்கையின் இன்பத்திற்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் இருந்தன. உண்ண உணவும், இருக்க இடமும் இன்றித் தவித்தவன், கோடீசுவரனானதும் அதிக ஆனந்தம் அடைவதே இயல்பு என்ற போதிலும், லிங்கத்துக்கு மனோபாவம் அப்படியாகவில்லை.
அடிக்கடி பெருமூச்சு விடுவதும், ‘இது என்ன உலகம்! மின்னுவதைக் கண்டு மயங்குகிறது. மோசக்காரர் வலையில் இலேசாக விழுகிறது. பாடுபடுவோரைப் பாதுகாப்பதில்லை’ என்று முணுமுணுப்பான்.

எங்கே அந்தக் கோமளம்? அவளைக் காண வேண்டும். கண்டு, பழிக்குப்பழி வாங்கி, பாதகி என்று கேட்க வேண்டும். பரந்தாமனின் மனைவியின் பாதத்தில் இவள் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஏன் இதைச் செய்ய முடியாது? கோடி ரூபாய் இருக்கும் போது இது கூடவா கஷ்டம். பார்க்கிறேன் ஒரு கை என்று தீர்மானித்தான் லிங்கம்.

ஒரு தினம், வழக்கப்படி லிங்கம் தனது அழகிய மோட்டாரிலே மாலைக் காற்று வாங்கப் போனான். காற்றிலும் கடுவேகமாக வேறொரு மோட்டார் வந்தது. தனது மோட்டரை நொடியில் தாண்டிற்று. பார்த்தான் லிங்கம்.

“டிரைவர், யாருடைய கார் அது?” என்று கேட்டான்.

“அது குமாரி கோமளாதேவி என்பவரின் கார்” என்றான்.

“விடு வேகமாக அதன் பின்னால். உம்! சீக்கிரம்” என்று உத்தரவிட்டான்.

கோமளத்தின் காரைத் துரத்திக் கொண்டு கோடீசுவரனின் மோட்டார் ஓடிற்று. மோட்டார் டிரைவர் அலுக்கிற நேரத்திலே, கோமளத்தின் கார் ஒரு சாலை ஓரமாக நின்றது. லிங்கத்தின் காரும் நிறுத்தப்பட்டது. கோமளம், காரிலிருந்து இறங்கினாள். கூடவே ஒரு குச்சு நாய் குதித்தது. கோமளம் கீழே இறங்கிய உடனே புன்னகையோடு, அங்குமிங்கும் நோக்கினாள்.
தன் மோட்டாரில் அமர்ந்தபடியே லிங்கம் அவளைப் பார்த்தான். மூன்று ஆண்டுகள் அவள் அழகையும் அலங் காரத்தையும் அதிகப்படுத்தினதைக் கண்டான். மூன்று ஆண்டுகள் ஆயினவே யொழிய அவள் பருவத்திலே மூன்று அல்ல; பத்து ஆண்டுகள் குறைந்தவள் போலவே காணப்பட்டாள்.

கடலூரில் இருந்ததைவிட அதிக அலங்காரம்! குலுக்கு நடையிலே விசேஷ அபிவிருத்தி. கொடிபோல வளைந்து நிற்பதிலே ஒரு புது முறை கற்றுக் கொண்டிருந்தாள் கோமளம். மோட்டார் கதவின் மீது சாய்ந்தபடி நின்றாள். அந்தக் குச்சு நாய், அவளுடைய தொடை மீது தாவிப் பாய்ந்தது. ‘சீச்சி, சோமு! கீழே படு. உம்... ஜாக்கிரதை” என்று கொஞ்சினாள் கோமளம். குச்சுநாய் மேலும் ஒரு குதி குதித்து அவள் முகத்தைத் தொட்டது.

‘சோமு! கண்ணான சோமு!’ என்று மறுபடியும் கொஞ்சி அதனை முத்தமிட்டாள் கோமளம்.
அதே நேரத்தில், லிங்கம் அவள் எதிரில் வந்து நின்றான்!

“ஒரு முத்தம் என்னைக் கெடுத்தது போல, சோமுவையும் கெடுத்துவிடப் போகிறது” என்று கூறினான் சிரித்துக் கொண்டே.

கோமளத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது போலாகி விட்டது. நாயைக் கீழே போட்டுவிட்டு, மிரள மிரள லிங்கத்தைப் பார்த்தாள்.

“யார்...! லிங்கமா... நீயா...?” என்று கேட்டாள்.

“நானேதான் தேவி! உன் லிங்கந்தான். உன் அழகால் மதிமோசம் போனவனே” என்று புன்சிரிப்புடன் லிங்கம் கூறினான்.

அவன் மிரட்டி இருந்தால், கோபித்துக் கொண்டிருந்தால், அடிக்க வந்திருந்தால்கூட கோமளம் பயந்திருக்கமாட்டாள். ஆனால் அவனது புன்சிரிப்பு அவளுடைய மனத்திலே ஈட்டி போலப் பாய்ந்தது. துளியும் கடுகடுக்காது, மிகச் சாவதானமாக அவன் பேசிய பேச்சு அவளுக்குப் பெரும் பயத்தை உண்டாக்கி விட்டது. தன்னால் சிறைக்கு அனுப்பப்பட்டவன் தன்மீது சீறி விழாது, தன் எதிரில் நின்று சிரிக்கும்போது இது லிங்கமா? அவனது ஆவியா’ என்று சந்தேகிக்கும்படித் தோன்றிற்று.

முகத்திலே பயங்கரமும், அசடும் தட்டிற்று. நாக்கிலே நீரில்லை. தொண்டையிலே ஒரு வறட்சி. தன்னையும் அறியாமல் கைகால்கள் நடுங்கின.

சோமு, கோமளத்தின் காலடியில் படுத்தது. சோமு, “என்னைப் போலவே உன்னிடம் மிக அடங்கி இருக்கிறான். பாபம்! அவனுக்கு என்ன கதியோ” என்றான் லிங்கம்.

கோமளத்தின் கண்களிலே நீர் ததும்பிற்று. “குமாரி கோமளாதேவி! வருந்தாதே இதற்குள். நான் உன் காதலன் லிங்கமல்லவா! உன்னுடைய எத்தனையோ காதலரில் நானும் ஒருவன். என் பேச்சு உனக்குக் கசப்பாக இருக்கிறதா? இதோ பார்! என்னிடம் பணமும் இருக்கிறது. உன்னுடைய நாகரிக வாழ்க்கைக்குப் பணம் வேண்டாமா! அதற்குத்தான் என் போன்றவர்களிடம் பணம் வந்து சேருகிறது. என்ன வேண்டும் உனக்கு. புதுமோஸ்தர் டோலக்கு, வைரத்தில் தேவையா? பூனாகரை பட்டுச் சேலை வேண்டுமா? உதட்டுக்கு உன்னதமான சாயம் வேண்டுமா, பாரிஸ் நகரத்து செண்ட், இலண்டன் நகரத்து சோப், ஜெர்மனி மோட்டார், அமெரிக்க தேசத்து அத்தர், எது வேண்டும் கோமளம்? முன்பு நான் உன் வீட்டு வேலைக்
காரனாக இருந்தேன். எனவே என் காதலுக்காக என் இதயத்தை, உழைப்பை, உணர்ச்சியை உனக்குத் தத்தம் செய்தேன். இன்று நான் பணக்காரன். மானே, ஒரு கோடிக்கு மேல் என்னிடம் இருக்கிறது. கொட்டுகிறேன் உன் காலடியில். அதன்மீது நீ தாண்டவமாடு. என் மனத்தை மிதித்து என் வாழ்வைத் துவைத்த கோமளம் இன்று நீ எப்படிக் குமாரி கோமளாதேவியானாயோ அதைப் போலவே கைதியாக இருந்த நானும் கோடீஸ்வரனாகிவிட்டேன். என் நேசம் வேண்டுமா உனக்கு. நேரமிருக்குமா என்னையும் கவனிக்க. இதுவரை எத்தனை பேரை அடிமை கொண்டாயோ” என்று அடுக்கிக் கொண்டே போனான் லிங்கம். கோமளம் அழுதாள். கண்ணீர் தாடை வழியாக ஓடி வந்தது.

“அழாதே தேவி! மாலை எவ்வளவோ கஷ்டப்பட்டு முகத்தை நீ செய்து கொண்ட அலங்காரம் கெட்டுவிடும். உன் முக அலங்காரத்தை நம்பி, இங்கு எத்தனையோ பேர் வருவார்கள். அவர்கள் நல்ல காட்சியைப் பார்ப்பதைக் கெடுத்துவிடாதே. கண்களைத் துடைக்கட்டுமா?” என்று கிட்டே நெருங்கப்போகும் சமயம், “ஹலோ கோமளாதேவி” என்ற குரல் கேட்டது. கண்களை அவசர அவசரமாகத் துடைத்தபடியே, கோமளம் திரும்பினாள். லிங்கமும் பார்த்ததான்! ஆங்கில உடையுடன் வாயில் சிகரெட்டுடன், முகத்தில் புன்னகையுடன், 25 வயதுள்ள சீமான் வீட்டு வாலிபன் நிற்கக் கண்டான்.

“ஏதாவது இரகசியமா? நான் கெடுத்துவிட்டேனா?” என்றான் வாலிபன் கோமளத்தை நோக்கி. எப்படியோ புன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கோமளம், “ஒன்றுமில்லை பாஸ்கர், இதோ இவர் என் நண்பர், மிஸ்டர் லிங்கம்” என்று வந்தவனுக்கு லிங்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தாள். “இவர், சிங்காரச் சோலை ஜெமீன்தார் பாஸ்கர்; எனக்கு நண்பர்” என்று லிங்கத்திடம் கூறினாள் கோமளம்.

“ரொம்ப சந்தோஷம்” என்றான் லிங்கம். அந்தச் சொல், கோமளத்தின் இருதயத்தைப் பிளந்தது. பாஸ்கரின் முகத்தை மாற்றிவிட்டது. சிறிது நேரம் மூவரும் மௌனமாக நின்றனர். திடீரென, லிங்கம் உரக்கச் சிரித்தான். இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“மிஸ்டர் பாஸ்கர்! நாளை மாலை பார்க்கிறேன். குமாரி கோமளம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்குத் தான் தெரியுமோ நான் ‘பழிக்குப்பழி கொட்டி’ என்ற நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று. திடீரென ஒரு கருத்து வந்தது. உடனே போய் அதை எழுத வேண்டும்” என்று கூறிவிட்டு, அவர்களை விட்டுப் பிரிந்து, காரில் ஏறிக் கொண்டான். மோட்டாரும் அவன் தங்கியிருந்த விடுதியில் போய்ச் சேர்ந்தது.
* * *

ஒரு வாரம் வரையில், லிங்கம், பழைய பத்திரிகைகளைப் படிப்பதும், ஏதேதோ குறிப்பு புத்தகத்தில் எழுதிக் கொள்வதுமாக இருந்தான். யாராரோ அவனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு சரி! இனி பழிதீர்க்கும் படலம் நம்பர் 1 ஆரம்பமாக வேண்டியதுதான் என்று எண்ணினான்.

அன்றிரவு 10 மணிக்கு மேல் ஒரு முரட்டு மனிதன், லிங்கத்தைத் தேடிக் கொண்டு வந்தான். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 100 ரூபாய் பெற்றுக் கொண்டு அவன் போய்விட்டான்.
* * *

கடலூரை விட்டு சென்னைக்கு வந்த கோமளம், தனது கணவன் வைத்துவிட்டுப் போன சொத்தை முதலாக வைத்துக் கொண்டு ஆடம்பர அலங்கார வாழ்வு வாழ்வதையும் தனது தளுக்கால் பல பெரிய இடத்து மைனர்களை, ஜெமீன்தாரர்களை மயக்கிப் பணம் பறித்து, பெரும் செல்வம் தேடிக் கொண்டதோடு, ‘பெரிய மனிதர்களின்’ பழக்கத்தால் சமுதாயத்திலே மிக மதிக்கப்பட வேண்டியவர்களிலே ஒருத்தியாகக் கருதப்பட்டு, பத்திரிகைக்காரர்களால் புகழப்பட்டு, அரசியல் தலைவர்கள், பாங்கிக்காரர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோருடன் சரிசமமான அந்தஸ்துடன் பழகத் தொடங்கிய சாதாரண கோமளம், குமாரி கோமளாதேவி எனக் கொண்டாடப்பட்டு சமூகத்தின் மணியாக ஜொலிக்கலானாள் என்பதைத்தான், லிங்கம் அந்த ஒரு வார காலத்தில் பல ஆதாரங்களைக் கொண்டு கண்டுபிடித்தான். பல ஒற்றர்களை ஏற்படுத்தி அவளுடைய மூன்று ஆண்டு அலுவலர்களையும் திரட்டி குறித்து வைத்துக் கொண்டான். பழைய பத்திரிகைகள் மூலமாக அவள் எவ்வளவு மதிப்புக்குரியவளாகக் கருதப்பட்டாள் என்பதும் தெரியவந்தது.
* * *

வாரந்தவறாது அவளது படம்! எந்த விருந்திலும் அவளுக்கு இடம்! எந்த அரசியல் கூட்டத்திலும் அவளுக்குச் செல்வாக்கு.

குமாரி கோமளா தேவிதான் சென்னைச் சீமாட்டிகள் சங்கத்தின் தலைவி, கலாபிமான மண்டலியின் காரியதரிசி, கீழ்த்திசைக் கலைக் கல்லூரியின் கௌரவ ஆசிரியை, ‘விழி மாதே’ என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியை. ஆம்! அவள் இல்லாத இடமே இல்லை. அவளைக் கொண்டாடாத பேர் வழியில்லை.

பரந்தாமனின் கள்ளக் காதலி லிங்கத்தை சிறைக்கு அனுப்பிய காதகி, சென்னையின் சீமான்கள் - சீமாட்டிகள் உலகிலே ஜொலிக்கிறாள்.

லிங்கம், அவளுடைய உண்மை உருவை வெளிப்படுத் துவதென்பதே அசாத்தியம். யார் நம்புவார்கள். சொன்னால் இவன் ஒரு பித்தன் என்று கூறிவிடுவார்கள். அவ்வளவு உயர்ந்த இடத்தில் தங்கி நின்றாள். உருவத்தால் பெண்ணாகவும், உணர்ச்சியால் பேயாகவும் வாழ்ந்து வந்த கோமளம்.