அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

மக்கள் தீர்ப்பு
1

“பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! – அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது – அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சிதறியே போய்விடும். நீ, ஏதோ புத்தகங்களிலே படித்துவிட்டுப் பேசுகிறாய், பொதுஜன வாக்கு – சத்திய தேவதையின் தீர்ப்பு என்றெல்லாம். மெழுகுப் பொம்மைக்காரர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றபடி, மெழுகைக் கொண்டு பலப்பல செய்கிறார்களே, பார்த்திருக்கிறாயல்லவா? யானையும் செய்வார்கள் பூனையும் செய்வார்கள் – நிஜம் போலவே இருக்கும் – மெழுகு கொண்டு! அதுபோல ‘சாலக்குக்காரர்கள்’ மக்கள் மனத்தைக் கொண்டு பல உருவங்களைச் செய்கிறார்கள் – நீ, ஏதோ மக்கள் தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்று பாடம் படிக்கிறாய்.”

“தவறு! பெருந்தவறு! அநீதியுங்கூட! பொதுமக்களை அவ்வளவு துச்சமாக எண்ணாதே. சகல சக்தியும், கிளம்பும் ஊற்று. ஜனசக்தி! அவர்கள், குடும்பப் பாரத்தால் வளைந்து போகக்கூடும் – அதனால் அவர்களுக்கு, முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து முடிவு கட்ட நேரம் இல்லை – அதனாலேயே, அவர்கள் ஏதுமறியாதவர்கள் – எதையும் சிந்தித்து முடிவு செய்யும் ஆற்றலற்றவர்கள் என்று கூறுவது தவறு. ஜனநாயகக் கோட்பாட்டுக்கே விரோதம். மனித சக்தி மகத்தானது! மக்கள் தீர்ப்பு முடிவானது–அதுவே சிலாக்கியமானதுங்கூட!

“மக்கள், எத்தனை முறை, தாங்களே செய்த தீர்ப்பைத் தாங்களே மாற்றிக்கொண்டனர் தெரியுமா? ஜூலியஸ் சீசர், மகாவீரன், ரோமாபுரிக்கு அவனே தக்க காவலன் என்று உன் ‘பொதுஜனம்’ தான் தீர்ப்பளித்தது! அதே ‘பொதுஜனம்’ பிறகு, சீசர் சர்வாதிகாரி, முடிதரிக்க முயல்கிறான் – குடியரசைக் குலைக்கிறான் என்று கொக்கரித்தது. சீசர் கொல்லப்பட்டான். அழுகுரலிலே அறிவையும் கலந்தான் ஆண்டனி! உடனே உன் பொதுஜனம் என்ன செய்தது? சீசரைக் கொல்லச் சதி செய்தவர்களின் இரத்தத்தைக் குடிக்காவிட்டால் ஆவேசம் அடங்காது என்று ஆர்ப்பரித்தது.”

“தவறுகள் செய்வது, இயற்கை!”

“எத்தனை தவறுகள் எவ்வளவு முறை! சாக்ரடீசைக் கொல்ல, உன் ‘பொதுஜனம்’ இணங்கிற்று – பிறகு, அவனை ‘மகான்’ ஆக்கி மகிழ்ந்தது. என்னதான் சொல்லு பொதுஜன அபிப்பிராயம் என்பது கானல்நீர் – அல்லது வானவில் – அல்லது நீர்மேற்குமிழி...”

“இல்லை – இல்லை – விஷயம் விளங்காதபோது” விஷமியின் வலையில் விழும்போது – முழு உண்மை துலங்காதபோது, நீ கூறுகிறபடி பொதுமக்கள் தவறான தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஆனால், உண்மையை அவர்கள் உணரும்படிச் செய்தால், அவர்களின் உள்ளம், கானல் நீரை அல்ல, எப்படிப்பட்ட அநீதியையும் அழிக்கும் பெரும்புயலைக் கிளப்பிவிடும். மக்களின் மனவலிமை மகத்தானது – அது மன்னர்களின் படைவலிவை முறியடிக்கக் கூடியது.”

“சரி, சரி உன்னோடு பேசுவதைவிட, ஏதாவது வியாபாரக் காரியத்தைக் கவனிக்கலாம். நீ போய்வா! பொதுஜனத் தீர்ப்பு, புனிதமானது! மக்களின் தீர்ப்பு மகத்தானது, மகேசன் தீர்ப்புக்குச் சமம்!”

“கேலி பேசுவது சுலபம்... அதிலும் பெரியவர்கள் பேசுவது மிகவும் சுலபம்...”

“வாழ்க! வாழ்க! என்றுதான் பொதுஜனம் முழக்கமிடுகிறது. உன்னைப் புகழ்கிறது... வீரன்... உதாரன் என்று ஏதேதோ பட்டம் கொடுத்து உன்னைப் பாராட்டுகிறார்கள்.”

“ஆமாம்! நான் அவர்களுக்காக உழைக்கின்றேன் – அவர்கள் பொருட்டு பாடுபடுகிறேன், என்பதற்காகப் பாராட்டுகிறார்கள். மாளிகைகளிலேதான் நன்றி கெட்டவர்கள், நற்குணத்தை மதிக்காதவர்கள் இருக்கிறார்கள்! மக்கள் அப்படியல்ல. யார், தங்களின் நலனுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்பதை அவர்கள் உணருகிறார்கள் – உணர்ந்தும் அப்படிப்பட்ட உபகாரிகளை...”

“பொதுஜனத் தலைவர் என்று கூறிப் பூரிக்கிறார்கள் – பெருமைப்படுத்துகிறார்கள்.”

“ஆமாம் – அதிலேயும் உங்களுக்குச் சந்தேகமா?”

“அதிலே சந்தேகம் ஏன் பிறக்கப் போகிறது! நான்தான் கண்ணால் காண்கிறேன் – அவர்கள் உன்னைக் கண்டதும் கொள்ளும் மகிழ்ச்சியையும், காட்டும் மரியாதையையும்!”

“பிறகு, எதிலே சந்தேகம்! எதிலே அவநம்பிக்கை?”

“அதிலே சந்தேகம் ஏன் பிறக்கப் போகிறது! நான்தான் கண்ணால் காண்கிறேன் – அவர்கள் உன்னைக் கண்டதும் கொள்ளும் மகிழ்ச்சியையும், காட்டும் மரியாதையையும்!”

“பிறகு, எதிலே சந்தேகம்! எதிலே அவநம்பிக்கை?”

“பச்சையாகவே சொல்லட்டுமா? மக்களின் மனம் ஒரு நிலையிலும் இருப்பதில்லை. ஆட்டுவிக்கிறபடி ஆடுவர். இன்று உன்னைப் பொதுஜனத் தலைவன் என்று புகழும் இதே மக்கள் உன்னைப் பொதுஜன விரோதி என்று தூற்றவும் கூடும்.”

“ஆமாம் – நான் தவறி நடந்தால் – துரோகம் செய்தால் – அவர்களின் நலனைக் கெடுத்தால்...”

“அல்ல! அவ்விதம் அவர்கள் எண்ணிக் கொண்டாலே போதும். ஆர, அமர யோசிக்காமலே, ஆத்திரத்தைக் கொட்டுவர். எவனாவது ஒரு தந்திரக்காரன், உன் நடவடிக்கையைத் திரித்துக் கூறி, உன்னால் பொது மக்களின் நலன் கெட்டுவிடும் என்று கூறிவிட்டால் கூடப் போதும், பொதுமக்கள் சீறுவார்கள் – சபிப்பர். அவர்களின் எண்ணம், நிலைத்துமிராது – யோசிக்கும் திறமை பழுதுற்றுத்தான் இருக்கும்.”

“அப்படி அவர்கள் மனத்திலே, சந்தேகம் கிளம்பினால் நாம் உண்மையை விளக்கி, சந்தேகத்தைப் போக்கிவிட முடியும்.”

“அதுதான் முடியாது! உன்னைப் பற்றித் தப்பு அபிப்பிராயம் கொண்டுவிட்டால், நீ தரும் விளக்கம், விரோதத்தை வளர்க்கும் உன்னுடைய சமாதானம், சாகசம் என்று கருதப்படும். பைத்தியக்காரா! உன்னைச் சமாதானம் கூற, விளக்கம் தரவே அவர்கள் அனுமதிக்க மாட்டார்களே! அவசரமான முடிவுக்கே வருவர்! அந்த முடிவை, மாற்றிக் கொள்ளவும் விரும்ப
மாட்டார்கள், சுலபத்தில்.”

“இல்லை! உண்மையைக் கேட்க அவர்கள் எப்போதும் சித்தமாக இருப்பர்.”

“உனக்கு அவர்களிடம் அபாரமான நம்பிக்கை இருக்கிறது – அனுபவம் போதாததால்.... உன்னை நான் மிரட்டுவதாக எண்ணிக் கொள்ளாதே, எந்தப் பொதுஜனம் இன்று உன்னைப் பாராட்டுகிறதோ, அதே மக்கள், உன்னைப் பொதுஜன விரோதி என்று தூற்றும்படிச் செய்ய முடியும். என்னால்... விஷப் பரீட்சை – என்றாலும் நீ விரும்பினால் செய்து காட்டுகிறேன் – நீயோ, என் தம்பி! உனக்குக் கெடுதி வரக்கூடாதே என்று கவலைப்படுகிறேன் – இல்லையென்றால் – பொதுமக்களின் மனம் எப்படிப்பட்டது என்பதை விளக்கியே காட்டிவிட முடியும்!”

“கட்டாயமாக, அந்தப் பரீட்சை நடத்தியே ஆக வேண்டும். அண்ணா! தோல்வி உனக்குத்தான்.”

மூத்தவன் சிரித்தான்! தம்பியின் முகத்திலேயோ, எள்ளும் கொள்ளும் பொறியும் போலிருந்தது. அண்ணன் பணக்காரன். ஆகவேதான், பொதுமக்களின் பண்புபற்றிச் சந்தேகிக்கிறான். பொதும்களின் சக்தியிலும் குணத்திலும் சந்தேகம் பிறப்பது, ஓர்வகை நோய் – அது மாளிகைவாசிகளுக்கு எப்போதும் இருக்கும் – என்று தம்பி தீர்மானித்தான். தம்பி ஒரு டாக்டர்.

சிறிய நகரம் – அண்ணன், தம்பி வேறு வேறு குடித்தனம் நடத்தி வந்தனர் – ஆனால் விரோதம் கிடையாது. என் அண்ணனுக்குப் பணம் என்றால் உயிர் – பாழாப்போன பணத்திற்காக, அவர் எதை வேண்டுமானாலும் செய்வார் – என்று, தம்பி பிறரிடம் கூறுவதுண்டு – அண்ணனிடம், நேரிலே கூடச் சொல்வதுண்டு. நமது தம்பியின் போக்கு ஒருவிதமானது – பொதுஜன உபகாரியாக வேண்டுமென்பதற்காக டாக்டர் தொழிலைக்கூடக் கவனிக்காமல், ஊருக்கு உழைக்கிறேன் என்று பேசிக்கொண்டு உருக்குலைந்து போகிறான் என்று அண்ணன் பலரிடம் கூறுவதுண்டு – தம்பியிடமேகூடப் பேசுவதுண்டு. டாக்டருக்கு, பொதுமக்களிடம் அளவு கடந்த பிரியம், நம்பிக்கை, மதிப்பு. ஜனநாயகக் கோட்பாட்டிலே அசைக்க முடியாத பற்று. காண்ட்ராக்ட் வேலை – வட்டித் தொழில் வியாபாரம் – இவை அண்ணனுக்கு. அவனுக்கோ பொதுமக்களின் மனப்போக்கிலே எப்போதும் அவநம்பிக்கை. அவர்களுடைய தீர்ப்பிலே ஒருவகை அலட்சியம். டாக்டர் பொதுமக்களை ஒரு சக்தி என்று எண்ணினார்! காண்ட்ராக்டர், “சக்தி”தான், ஆனால் யார் கையிலேயும் சுலபமாகச் சிக்கிக் கொள்ளும் சக்தி அது என்றார். இருவருக்கும் அடிக்கடி இதுபற்றி விவாதம் நடைபெறும். அவ்விதமான உரையாடலிலே ஒன்றுதான் துவக்கத்திலே காணப்படுவது.
அவன் இலட்சியவாதி! ஆனால் அவனுக்குக் குடும்பம் இருக்கிறதே! டாக்டர் தொழிலைக் கவனித்தால், குடும்பம் நடக்கும் – ஆனால், எங்கே கவனிக்கிறான்! – இது அண்ணன் கூறும் குறை.

பணத்தைக் குவிக்கத்தானே, அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. பொதுமக்களின் நலனுக்கு உழைக்க அவருக்கு நேரம் ஏது? நினைப்பே கிடையாதே! இது தம்பி கூறுவது.

அண்ணன் செல்லும்போது, காணும் மக்கள் அருவருப்பர் – சிலர் அலட்சியமாகக்கூட இருப்பர் – வேறு சிலர் பணிவர் – பாவனைக்கு!

தம்பி, வீதி வழி சென்றாலோ, அனைவரும் வரவேற்பர் – மகிழ்வர் புகழ்வர் – மதிப்புடன் நடந்து கொள்வார்கள்.

அண்ணன், உள்ளூர் நகர சபையிலே ஓர் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

தம்பி அந்த நகர சபையினரால் வைத்தியராக நியமிக்கப்பட்டான்.

கவுன்சிலரானதால் காண்டராக்டருக்குத் தொழிலும் வியாபாரமும் வளர்ந்தது – தன்னையொத்த செல்வவான்களிடையே மதிப்பு வளர்ந்தது.

முனிசிபல் டாக்டரானதால் தம்பிக்கு, ‘வருமானம்’ அதிகமாக வளரவில்லை – வேலை வளர்ந்து முனிசிபல் நிர்வாகத்தினருக்கு, புதிய புதிய திட்டங்கள் – சுகாதார சம்பந்தமான யோசனைகள் கூறிவந்தான். அதற்காகச் சிந்தனையைச் செலவிட்டான் – பல ஆராய்ச்சிகள் நடத்தி வந்தான்.

அவ்விதமான திட்டங்களிலே கடலோரத்திலே குளிக்கும் இடம் அமைப்பது என்பதொன்று, பொழுது போக்குக்காகப் பலர் பல இடங்களுக்குப் போகிறார்களல்லவா, ஆண்டுக்கோர் முறை மலைச்சாரலுக்கோ – மலர் வனத்துக்கோ – பாரிஸ் போன்ற நாகரீக நகருக்கோ – அதுபோல, இந்தக் குளிக்குமிடம் வருவர் – பல நாட்கள் தங்கி இருப்பர் – அதனால் அவர்களுக்கும் சுகாதாரம் வளரும். அவர்கள் வந்து தங்குவதால், நகருக்கும் பொருளும் புகழும் வளரும் – இது டாக்டரின் எண்ணம். இந்தத் திட்டத்தை மிகச் சிரமப்பட்டுத் தயாரித்து, நகரசபையினருக்குத் தர, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர் – அதற்கான வேலையும் துவக்கப்பட்டது.
ஏற்கெனவே பொதுமக்களின் அன்பைப் பெற்றிருந்த டாக்டருக்கு, இந்தத் திட்டம் மேலும் ஆதரவைத் திரட்டிற்று. அவருடைய அறிவும், பொதுமக்கள் நலனில் அவருக்குள்ள அக்கறையும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

உள்ளூரில் ஒரு பத்திரிகை – அதிலே டாக்டரைப் புகழ்ந்தும், அவருடைய புதிய திட்டத்தை வரவேற்றும், ஓர் அழகிய தலையங்கமும் பிரசுரமாயிற்று.

தம்பி, அடிக்கடி பேசும், ‘பொதுஜன சேவைகளில்’ இதுவொன்று என்றுதான் அண்ணன் முதலில் எண்ணினான் – அலட்சியப்படுத்தினான். தம்பியோ விடவில்லை. அண்ணனிடம் மட்டுமல்ல, ஊரிலே பலரிடம், தன் திட்டத்தால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்.

தம்பியின் ‘பொதுஜன சேவை’யைஅண்ணன் அலட்சியமாகக் கருதுகிறான் என்பதறியாத சிலர், அண்ணனிடம் புதிய திட்டத்தைப் புகழ்ந்து பேசினர் – அவர் மகிழ்வார் என்று எண்ணிக்கொண்டு. அண்ணன், அவர்கள் தன்னை மகிழ்விக்கத்தான் அவ்விதம் புகழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல், வழக்கப்படி பொதுஜனம் மனத்தைப் பறிகொடுத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு புதிய திட்டத்தைப் பழித்துப் பேசினாலோ, அலட்சியப்படுத்தினாலோ, அதிலே அக்கறை காட்டாவிட்டாலோ, தன்மீது கோபிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு, நல்ல திட்டந்தான் என்று சொல்லி வைத்தான். ஆக, ஊரிலே மெல்ல மெல்ல புதிய திட்டத்துக்கு ஆதரவு திரண்டது.

புதிய திட்டத்தில் அண்ணனுக்கு உண்மையாகவே ஆசை ஏற்பட்டது – வேறோர் காரணத்தால்.

குளிக்குமிடம் அமைக்க, தம்பி குறிப்பிட்ட இடத்தைக் கவனித்தபோது அதை அடுத்து, ஏராளமான புறம்போக்கு நிலம் இருந்திடக் கண்டான். புதிய யோசனை உண்டாயிற்று.

குளிக்குமிடம் அமைக்கப்பட்ட பிறகு, அந்த இடத்துக்கு உள்ளூர் மக்கள் வரத் தொடங்குவர். மதிப்பு உயரும். அப்போது, அதை அடுத்துள்ள புறம்போக்கு நிலத்துக்கு, ‘விலை’ அதிகப்படும் – கடைகள் அமைக்க விரும்புவோர், புதிய வீடுகள் கட்ட விரும்புவோர், காட்சிச் சாலைகளை அமைக்க வருவோர் ஆகியோர் நல்ல வாடகை தருவர், நல்ல விலை கொடுத்தும் வாங்குவர், போடும் பணத்தைப் போல, பத்து, இருபது, மடங்கு அதிகமான பணம் கிடைக்கும் என்று யோசனை ஏற்பட்டது. இலாப வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்ற அண்ணனுக்கு உடனே மோப்பம் பிடித்த புலியானான். புதிய திட்டத்தைப் பிரமாதமானது என்று புகழ்ந்தான். தம்பியைப் பாõராட்டினான் – முனிசிபல் சபைக்குப் புதிய திட்டத்தைச் சிபாரிசு செய்தான். புதிய திட்டத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தான்.

டாக்டருக்குப் பெருமகிழ்ச்சி. பொதுஜன நன்மைக்கும், ஊரின் கீர்த்தி பரவுவதற்கும் உகந்த தன் புதிய திட்டத்தை அண்ணன் ஏற்றுக் கொண்டது கண்டு, களித்தான் – பொது ஜனங்களிடம் அபிமானம் அற்றிருந்த தன் அண்ணனுக்கு, இந்த அளவுக்கேனும் பொதுமக்களிடம் அக்கறை உண்டாயிற்றே என்று எண்ணி உள்ளம் பூரித்தான். அவன் அறியான், புதிய திட்டத்தை முனிசிபல் சபை, அங்கீகரித்துக் கொள்வதற்கு முன்னம், ‘புறம்போக்கு’ நிலத்தை, அண்ணன், இலாப நோக்கத்துடன் மலிவான விலைக்கு வாங்கிக் கொண்டு விட்டான் என்பதை. அண்ணனுக்கும், பொதுமக்களின் நன்மையிலே அக்கறை உண்டாயிற்று. என்றே அவன் எண்ணிக் கொண்டான். பாவம்! டாக்டருக்கு, மக்களுக்கு ஏதேது நல்லது என்பதைக் கண்டறிய பல ஏடுகளைப் படிக்கவும், சிந்திக்கவும், திட்டங்கள் தீட்டவும் நேரம் அதிகம் செலவானதால், தன் அண்ணன் போன்றவர்களின் உள்ளத்தின் தன்மை எப்படிப்பட்டது என்று கண்டறிய நேரம் இல்லை.

உள்ளூர் பத்திரிக்கையின் புகழுரை, நகர சபையின் அங்கீகாரம், அண்ணனின் ஆதரவு, இவ்வளவும் புதிய திட்டத்துக்குக் கிடைத்த சந்தோஷத்தால் மெய்மறந்து இருந்தான் டாக்டர். அண்ணன் புதிய திட்டத்தினால், தனக்கு மொத்தத்திலே எவ்வளவு இலாபம் கிடைக்கக் கூடும் என்பதைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

வீடுகளிலே குடியிருப்போர் சங்கம் ஒன்று அவ்வூரில். அதற்கோர் தலைவன், தீப்பொறி பறக்கப் பேசுபவன் – ஏழைகளின் சார்பில். வரி செலுத்துவோர், ஏழைகள் ஆகவே அவர்களின் நன்மையைக் கவனிப்பதையே நகர சபை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்பது அவன் முழக்கம். தவறானதல்ல. அவனுக்கும் புதிய திட்டத்திலே அக்கறை ஏற்பட்டது – ஆதரித்தான். குளிக்குமிடம் அமைக்கப்பட்டு, அது செல்வாக்குப் பெற்று, வெளியூர் மக்கள் அதிகமாக அங்கு வந்து போகத் தொடங்கினால், நகர சபைக்குப் பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும் – நகரசபையின் வருமானம் அதிகரித்தால், நகரசபை, உள்ளூர் பொதுமக்களிடம் வசூலிக்கும் வரியைக்கூடக் குறைக்கும். இதனால் ஏழைகளுக்கு நன்மை உண்டாகும் என்று கூறினான் – ஏழைப் பங்காளன் என்ற பட்டத்துக்குரியவனாவதற்குத் தன்னைத் தயாரித்துக் கொண்ட குடியிருப்போர் சங்கத்தலைவன், புதிய திட்டம், ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உண்மையிலேயே எண்ணினான் – புதிய திட்டத்தை ஆதரித்தான். டாக்டரின் களிப்பு பூர்த்தியாயிற்று.

குளிக்குமிடம் கட்டுவதற்குப் பெருந்தொகையொன்று முனிசிபல் சபையினர் குறித்தனர். பலருக்குப் பல வேலைகள். காண்டிராக்டுக்குத் தரப்பட்டன. மரச்சாமான்கள் சப்ளை செய்ய மார்க்கசகாயம், சுண்ணாம்புக்கும் செங்கல்லுக்கும் சேஷாசலம் – பிளான்படி, கட்டடத்தை அமைக்க, கங்காதரம் – இப்படிப் பலருக்குக் கிடைத்தது. இந்தக் காண்ட்ராக்டுகள், சிலவற்றிலே, அண்ணனுக்குத் தொடர்பு உண்டு – வெளியே தெரியாது, சிலவற்றிலே, பணம் கடன் கொடுப்பதன் மூலம் தொடர்பு ஏற்பட்டது. மொத்தத்திலே, புதிய திட்டத்திற்காகச் செலவிடப்படும் பெரும் பணத்திலே, குறிப்பிடக்கூடிய தொகை, அவருக்கு வந்துசேரும்படி, தந்திரமாக ஏற்பாடு செய்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அவர்போன்ற பல பணந்தேடி களுந்தான்!

டாக்டருக்கு, இவை ஒன்றும் தெரியாது. ஒரே மகிழ்ச்சி மயம். மேலும் மேலும் ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருந்தார் – புதிய திட்டத்துக்குப் பயன்தரத் தக்கவையான ஆராய்ச்சிகள்.

உள்ளூர் பத்திரிகையின் உரிமையாளர், ஒரு மாஜி தீவிரவாதி. புரட்சிக்காரராகவும் இருந்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர் – ஆதிக்கக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்கத் தன்னைத்தானே அர்ப்பணித்தவராக இருந்தவர் – பிறகோ – தீவிரமாகக் கோலத்தைக் கலைத்துவிட்டு, பத்திரிகை துவக்கினார். தன் பேனா புரட்சி எழுத்துக்களையே தீட்டும் என்று எண்ணி வேறோர் எழுத்தாளரை, ஆசிரியராக அமர்த்தினார் – நிருவாகத்தையே, கண்ணுங் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். நல்ல விளம்பரம் – நல்ல வருவாய்.

பத்திரிகைக்கு ஆசிரியராக அமர்ந்தவர், ஒரு பெரிய புரட்சி வீரரிடம் தான் தயாராவதாக எண்ணிக்கொண்டு மகிழ்ந்தார். தீவிரவாதியானார். பொதுஜன நன்மையை ஆதரிப்பதே என் குறிக்கோள். அதற்கு எதிரிடையாக எதுவரினும், குறுக்கிடினும் அச்சம், தயை தாட்சண்யமின்றிக் கண்டிப்பேன் என்று கூறினார். அவ்வப்போது மட்டும், பத்திரிகை உரிமையாளர், ஆசிரியருக்கு வாழ்க்கைச் சிக்கல்களைப் பற்றி உபதேசம் செய்வார். தீவிரமாகத்தான் எழுதவேண்டும், ஆனால் அதே பொது வாழ்க்கையையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று குத்தலாகப் பேசுவார். தீப்பொறி பறக்கத்தான் எழுத வேண்டும். ஆனால் அந்தப் பொறிகள் பத்திரிகையையே தீய்த்துவிடக் கூடாது; தம்பீ, பத்திரிகை என்னுடையது. எனக்குக் குடும்பம் உண்டு. அவர்களுக்கு உணவு, உன் உணர்ச்சிதரும் எழுத்துக்களல்ல! – என்று கிண்டலாகப் பேசுவார். சில சமயங்களில் உரிமையாளருக்கும் எழுத்தாளருக்கும் கருத்து வேற்றுமை உண்டாகும் – வெற்றி, உரிமையாளருக்கு, விசாரம், எழுத்தாளருக்கு!

ஆனால், குளிக்குமிடம் அமைக்கும் திட்டத்தைப் பற்றியோ இருவருக்கும் ஒரே கருத்து. ஆசிரியருக்கு மகிழ்ச்சி. மெல்ல மெல்ல உரிமையாளரைத் தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டதாக எண்ணினார். அவர் அறியார், உரிமையாளர், காண்ட்ராக்டர் யோசனைப்படி, புறம்போக்கு நிலத்திலே ஒரு பகுதிக்கு, உரிமையாளர் ஆகிவிட்ட இரகசியம்!

பொதுவாகப் பார்க்கும்போது, அந்தச் சிற்றூர் முழுதும், சிறந்த திட்டம், சிலாக்கியமான திட்டம் என்று புகழ்ந்தது. டாக்டரின் திட்டத்தைப் பொதுஜன ஆதரவு இவ்வளவு தெளிவாகவும் உருவாகவும் மகத்தான அளவிலும், தனக்குக் கிடைத்ததை எண்ணி டாக்டர் களித்தார் – தமது திட்டத்தை மேலும் மேலும் ஆராயத் தொடங்கினார். ஒரு சந்தேகம் வந்துதித்தது.

கடலோரக் குளிக்குமிடத்திலே உள்ள தண்ணீர், சிலாக்கியமானதுதானா என்பதுபற்றி, தான் நடத்திப் பார்த்த ஆராய்ச்சியுடன் திருப்தி அடையாமல், பிரபல நகர ஆராய்ச்சியாளருக்குத் தண்ணீரை அனுப்பி வைத்தார். அவருடைய ஆராய்ச்சி முடிவு கிடைத்ததும் தமது புதிய திட்டத்துக்குப் பரிபூரண சிறப்பு உண்டு என்பதை உலகே ஒப்புக்கொள்ளும் என்பது டாக்டரின் எண்ணம்.

நகர ஆராய்ச்சியாளரின் கடிதம் டாக்டரைத் தூக்கிவாரிப்போட்டுவிட்டது.

“தாங்கள் பரிசோதனைக்கு அனுப்பிய நீரை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து கீழ்க்காணும் முடிவுக்கு வந்திருக்கிறோம்.
1. தண்ணீர் அசுத்தமானது.

2. சுத்தப்படுத்த முடியாதபடியான அசுத்தமானது.

3. கிருமிகள் நிரம்பியது.

4. கிருமிகள் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியது.

5. விஷஜுரம் போன்ற கொடிய நோய்களை உற்பத்தி செய்யக்கூடியன அந்தக் கிருமிகள்.

6. இந்தத் தண்ணீரை உட்கொண்டாலோ, குளிக்க உபயோகித்தாலோ, மக்களுக்கு, கொடியநோய் உற்பத்தியாகும்.

7. இந்தத் தண்ணீர் உள்ள இடத்தைத் தூர்த்து விடவேண்டும்.

8. பொதுஜனம் இதை எந்த வகையிலும் உபயோகிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கடிதத்தைக் கண்டார் டாக்டர். கண்ணாடி பாத்திரத்
தின்மீது, கருங்கல் வீழ்ந்தது போலாயிற்று!