அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

மக்கள் தீர்ப்பு
3

அவர்களைத் தள்ளிக் கொல்வதற்குப் படுகுழி வெட்டப்படுகிறது. என்ன செய்வது! போரிலே அண்ணனுக்கு முதல் வெற்றி கிடைத்து விட்டது. இதழில் வெளியிட்டால்தானா – ‘மக்களிடம் நேரிலேயே கூறுவோம் – பிரச்சாரம் சிறந்ததோர் சாதனம். திட்டத்தால் வரக்கூடிய தீமையையும் விளக்குவோம். இதழின் உரிமையாளரும் சீமானும் சேர்ந்து நடத்தும் சதித் திட்டத்தையும் விளக்குவோம் பொதுமக்களிடம். உண்மையை உணர்ந்ததும் பொதுமக்கள், சீறிக்கிளம்புவர், புல்லர்களின் போக்கைக் கண்டிப்பர். ஆம்! கூட்டம் நடத்தவேண்டும் – உடனே என்று எண்ணினார். கூட்டத்திலே, எப்படி எப்படி விஷயத்தை விளக்குவது என்று குறிப்புகள் தயாரித்தார் – அவர் மனக்கண் முன்பு பெரியதோர் மன்றம் தெரிந்தது – மக்கள் திரண்டுள்ளனர் – அவர் பேசுகிறார் – ஆனந்த ஆரவாரம் செய்கின்றனர் மக்கள் – டாக்டர் வாழ்க! டாக்டர் வாழ்க! என்று பேரொலி கிளம்புகிறது! ஆனால் எல்லாம் மனக்கண்முன்!! டாக்டரின் மனத்திலே உண்மையிலேயே அச்சம் மூண்டது. கூட்டம் நடத்துவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோற்றுப் போனதுகண்டு! மண்டபங்கள், கொட்டகைகள், பள்ளிக்கூடங்கள் எங்கும் இடம் கிடைக்கவில்லை – உரிமையாளர்கள் அனுமதி தர மறுத்துவிட்டனர். உண்மையைக் கூற இடம் கிடைக்கவில்லையே! பொதுஜன சேவைக்கு இடம் இல்லையே! இப்படியா, நிலைமை இருப்பது என்று எண்ணினார். அடக்க முடியாத கோபம் பிறந்தது. அண்ணன் வெற்றி பெறுகிறான் – சூது வெல்கிறதே – சூழ்ச்சி பலிக்கிறதே – மக்களின் நன்மையைக் கனவிலும் கருதாத மாபாவிகள் வெற்றி பெறுகிறார்களே இதற்கென்ன செய்வது! – என்று எண்ணி மனம்மிக வாடினார் – பித்தம் பிடித்தவர் போலானார்.
* * *

“அப்பா! அவர் வந்திருக்கிறார்” – என்று தழுதழுத்த குரலில் கூறினாள் டாக்டரின் ஒரே மகள்.

“யார் – ஏன்?” என்று வெறுப்புடன் கேட்டார் டாக்டர்.

“அவர் தானப்பா! இன்றுதான் கப்பல் வந்தது...” என்றாள் காரிகை. “ஓஹோ! உன் நண்பனா... காதலன் வந்திருக்கிறானா... சரி கண்ணே! நான் சஞ்சலத்திலே இருக்கிறேன். ஆகவே புரிந்து கொள்ளவில்லை. உன் திருமணத்தை நடத்தித்தான் ஆகவேண்டும் விரைவில் நானும் உன் காதலுடைய பொறுமையை அளவுக்கு அதிகமாகவே சோதித்து விட்டேன்.” என்று கனிவுடன் கூறினார் டாக்டர். குமாரியின் முகம் மலர்ந்தது. தந்தையின் அன்புமொழி கேட்டு மட்டுமல்ல, அதே சமயம் அங்கு வந்து நின்ற தன் காதலனைக் கண்டு.
* * *

“கப்பல் தலைவனானேன், கண்மணி. அப்பாவிடம் கூறு. ஆனந்தப்படுவார்!” என்றான் இளைஞன் எழிலரசியிடம் மலர் முகத்தை முத்தமிட்டுவிட்டு. அப்பாவின் அல்லலை விளக்கினாள் ஆரணங்கு. கப்பல் தலைவன் கடுங்கோபம் கொண்டான். உண்மைக்கு உழைக்கும் உத்தமனுக்கா இப்படி இடையூறு செய்கிறார்கள். “அன்பே! ஆயாசம் விடு நாளை மறுதினம் கிடங்கிலே கூட்டம் நடத்தலாம். அங்குள்ள சரக்குகளைக் கப்பலில் துரிதமாக ஏற்றிவிட ஏற்பாடு செய்கிறேன் பிறகு கிடங்கு பொதுக்கூட்டம் நடத்த ஏற்றதாகிவிடும் என்று கூறினான். காதலன் – களிப்பூட்டும் இச்செய்தியைத் தந்தையிடம் கூறினாள் தத்தை! கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறலாயின. பொதுமக்கள் திரண்டனர் கிடங்கில். புதிய குறிப்புகள் தயாரித்துக்கொண்டு கிளம்பினார் டாக்டர். புன்னகை பூத்த முகத்துடன், உள்ளே நுழைந்தார். முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் அண்ணன், அவன் அருகே, வாடகை வீட்டுக்காரர் சங்கத் தலைவர் இருந்தார். சட்டை செய்யவில்லை டாக்டர். யாரையும் ஆணவத்தால் அல்ல, ஆதாரங்கள் ஏராளமாக இருக்கும்போது, பொதுமக்களுக்கு உண்மையான தொண்டு செய்கிறோம் என்ற தூய்மை மனத்திலே இருக்கும்போது யாருக்குத்தான் அஞ்ச வேண்டும்!!

அண்ணன் தானாகவே எழுந்திருந்து கூட்டத்துக்கு தலைமை வகிக்கும்படி குடியிருப்போர் சங்கத் தலைவனைப் பிரேரிபித்தான் – அவனும் தலைமை தாங்கி டாக்டரின் சிறப்புகளை விளக்கிப் பேசினான் – மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். டாக்டர் தந்த திட்டத்தைப் புகழ்ந்தான். மக்கள் பூரித்தனர் – டாக்டர் ஏதோ பேச முயன்றார் மக்களின் கரகோஷம் கிளம்பும்படி சங்கத் தலைவன் சண்டப்பிரசண்டமாகப் பேசியபடி இருந்தான். “இந்தத் திட்டத்தைக் கண்ட அண்டையிலுள்ள நகரங்கள் பொறாமை கொண்டு விட்டன. நமது பிரதான நகருக்குப் புதியதோர் அந்தஸ்து வருவது அந்த நகரத்துக்குப் பொச்சரிப்புக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. டாக்டரின் திட்டத்தின் பயனாக நமது நகருக்குச் செல்வம் பெருகும் என்பது தெரிந்ததும் எப்படியாவது இந்தத் திட்டத்தைத் தகர்த்துவிடுவது என்று சூதுக்காரர்கள், சூழ்ச்சிக்காரர்கள், முயற்சி செய்தனர். இந்த இரகசியம் எங்களுத் தெரிந்தது. நாங்கள் நமது டாக்டரின் அரிய ஆராய்ச்சிக் கட்டுரையை மீண்டும் பத்திரிகையில் வெளியிட்டோம். சூழ்ச்சிக்காரர்கள் ஆசிரியருக்கு இலஞ்சம் கொடுத்தனர் – அந்த இரகசியம் தெரிந்ததும் அவரை வேலையினின்றும் நீக்கினோம். இப்படிச் சூழ்ச்சிக்காரர்கள் யாரும் செய்யத் துணியாத ஒரு விபரீத காரியத்தைச் செய்துவிட்டனர். மாசுமறுவற்ற மனமுடைய நம்முடைய டாக்டரை, சுயநலத்தைக் கருதாது பாடுபட்டு வந்த நம்முடைய டாக்டரையே அந்தப் பாவிகள் எப்படியோ மயக்கி விட்டனர். அவர் வாயாலேயே அவர் முன்பு புகழ்ந்து கூறிய திட்டத்தை ஆபத்தானது, தீதானது, நாசம் தருவது என்று பேச வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதைக் கேட்டதும் நாங்கள் பதை பதைத்தோம் – நெஞ்சம் குமுறிற்று. நமது டாக்டரும் துரோகியாக முடியுமா அவரைச் சதிகாரர்கள், சூழ்ச்சிக்காரர்கள் தங்கள் கையாள் ஆக்கிக்கொள்வது முடிகிற காரியமா என்றெல்லாம் எண்ணி மனம் துடித்தோம். முடிவில் அவரையே கேட்டோம் – அவர் முதலில் மறுத்தார் – பிறகு மழுப்பினார் – கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்! அந்தப் பாவிகள் தயாரித்துக் கொடுத்ததை அப்படியே பொதுஜனங்களிடம் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அழைத்து வந்திருக்கிறோம். அவர் இப்போது அதைப் படிப்பார்!” என்று கூட்டத் தலைவன் பேசி முடித்தான். டாக்டருக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றுவதுபோலாகிவிட்டது. இந்த எதிர்பாராத தாக்குதலால் அண்ணன் வெற்றிப் புன்னகையுடன் வீற்றிருந்தான். டாக்டருக்குப் புயலெனக் கிளம்பிற்று கோபம். “பாவிகளே, பழிகாரர்களே! பச்சைப் புளுகு பேசும் அயோக்கியர்களே! பாமரரை ஏய்க்கும் கயவர்களே!” – என்று ஏசினார். ஏற்கெனவே டாக்டர் துரோகம் செய்யத் துணிந்தவர் என்ற குற்றச்சட்டைக் கேட்டு திடுக்கிட்டுப் போயிருந்த மக்களுக்கு, எப்போதும் அன்பாகவும் சாந்தமாகவும் பேசும் டாக்டர், கண்டபடி ஏசுவது கேட்டு, ஆத்திரம் பிறந்தது. துரோகி ஒழிக! பொதுஜன விரோதி ஒழிக! காட்டிக் கொடுத்தவன் ஒழிக! – என்று கூவினர். காட்டுக் கூச்சல் கிளம்பி விட்டது. கப்பல் தலைவன், கூட்டத்தில் கலகம் செய்பவர்களை அடக்க முயன்றான். கலகம் வளர்ந்துவிட்டது – கை கலப்பு ஏற்பட்டு விட்டது – பொதுஜன விரோதி ஒழிக! துரோகி ஒழிக! என்ற கூச்சல் வலுத்துவிட்டது. மேஜை நாற்காலிகள் தூளாயின! கற்கள் பறந்தன – டாக்டருக்குக் கல்லடி – இரத்தம் ஒழுகலாயிற்று! மிகுந்த கஷ்டப்பட்டு, கப்பல் தலைவன் அவரை வீடு கொண்டுபோய்ச் சேர்த்தான்.

பொதுஜனமாம் – பொதுஜனம் – விவரமறியாக் கும்பல் – விவேகமற்ற கூட்டம் – தலையாட்டிப் பொம்மைகள் – காலிப் பாண்டங்கள் – யார் நண்பன், யார் விரோதி என்பதை அறிந்து கொள்ள முடியாத சடங்குகள் – என்றெல்லாம் டாக்டர் ஏசினார். வீட்டுக்குள்ளே இருந்தபடி வேதனையுடன், வெளியே ஆர்ப்பாட்ட ஊர்வலம், பொதுஜன விரோதி ஒழிக! என்ற கூச்சலுடன் டாக்டர் வீட்டின் மீது கல்மாரி!

போரிலே புரட்டன் வெற்றிபெற்றான் – உண்மைக்குச் சித்தரவதை! பொதுமக்களின் சேவையை மதித்த டாக்டரிடம் பொதுமக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. பொய்யன் மூட்டிய தூபம் அவர்களை வெறியர்களாக்கிற்று! உன் பொதுஜனம் எதையும் செய்யும் – யார் தூண்டிவிட்டாலும் அதற்கு ஏற்றபடி ஆடும் என்று ஆணவக்கார அண்ணன் சொன்னது முற்றிலும் உண்மையாகிவிட்டதே என்பதை எண்ணினார் டாக்டர். வேதனையுடன் வெட்கமும் அவரைத் தாக்கிற்று.

செச்சே! இது அறிவிழந்தவர்களின் இருப்பிடம். இந்த ஊரைவிட்டே போய்விடலாம் வாருங்கள். எங்கள் ஊர், பாட்டாளிகள் வாழும் பட்டினம், அங்குச் சென்றால், தங்களைப் போன்ற பொதுஜன சேவையாளருக்கு இடமும் உண்டு மதிப்பும் உண்டு என்று கூறினான் கப்பல் தலைவன். அண்ணன் முகத்திலே விழிப்பது கூடாது. அண்டப்புளுக்கு இரையான அப்பாவிகளின் ஊரிலே இருப்பதைவிட வேற்றூர் போவதே மேல் – என்று தீர்மானித்தார் டாக்டர். மறுதினம் தன் மகளையும் அழைத்துக்கொண்டு டாக்டர் கப்பல் துறைக்குச் சென்றார்.

கப்பல் தலைவன் தலையைக் கவிழ்ந்தபடி அங்கு நின்று கொண்டு இருந்தான். அவன் கரத்திலே அவனை வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகக் கப்பல் கம்பெனி முதலாளி அனுப்பிய உத்தரவு இருந்தது. அந்த முதலாளி தன் அண்ணனுடைய கூட்டாளி என்பது டாக்டருக்குத் தெரியும். பெருமூச்செறிந்தார். “பொதுஜன விரோதி பார் ஊரைவிட்டே ஒழிகிறான். பொதுஜன விரோதி ஒழிக!” என்று கூச்சலிட்டபடி, சிறுகும்பல் கூடிற்று. மீன்பிடிப்போர் உபயோகிக்கும் சிறுபடகு ஒன்றில் ஏறிக் கொண்டு, மூவரும் பயணமாயினர். டாக்டரின் கண்ணீர் கடல்நீரில் கலந்தது. பொதுஜனம் இப்படித்தானா! அண்ணன் சொன்னபடி ஆடும் பதுமைகள்தானா இந்தப் பொதுஜனம். ஆதாரம் காட்டாது, காரணம் கூறாது, அண்டப்புளுகு பேசினான். அதை நம்பி என்னைத் துரோகி, சதிகாரன் என்று ஏசினாரே, இவ்வளவுதானா இவர்கள் இயல்பு என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றார் டாக்டர். தன் மனக்குறையை மருமகனிடம் கூறிக் கூறிக் குமுறினான். பொதுஜன சேவை, பயனற்ற காரியம்! வீண்வேலை!! பொதுஜனத்துக்குத் தெளிவு கிடையாது! சிந்தனா சக்தி கிடையாது! – என்று டாக்டர் உண்மையாகவே எண்ணத் தொடங்கினார்; அவர் அடைந்த அல்லல் அவருக்கு இருந்து வந்த ஆர்வத்தை நம்பிக்கையை நசுக்கச் செய்தது. வேற்றூரில் வேதனையுடன் இருந்து வந்தார் – பொதுஜனத்தின் முகத்தையும் பார்க்க விருப்பமின்றி, டாக்டர் தன் வேதனையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அவ்வப்போது, இந்தச் சம்பவத்தின் முழுவிவரத்தையும், தன் மருமகனிடம் கூறிக் கொண்டிருந்தார் – இதைக் கேட்டுக் கேட்டு, மருமகனுக்கு, புதியதோர் எண்ணம் பிறந்தது – உண்மையைத் துலங்கச் செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

தனக்கும் தன் அண்ணனுக்கும், ஆதியில், பொதுஜன சேவையைப் பற்றி எழுந்த வாக்குவாதத்தை டாக்டர் கூறுவார் –அக்கறையுடன் அந்த வாதத்தைக் கேட்பான் மருமகன் – கேட்டுக் கேட்டு அவனுக்குப்பொதுமக்களிடம் நம்பிக்கை பிறக்கலாயிற்று! பொய்யை அவர்கள் மெய்யென நம்பிவிட்டனர். காரணம்? பொய்யர்கள், உண்மை அவர்கள் செவி புகாதபடி செய்த சூழ்ச்சியினால். ஆகவே தவறு, பொதுமக்கள் மீதா! சூழ்ச்சிக்காரரை, எதிர்த்தாகவேண்டும் என்ற துணிவு, போதுமான அளவு, டாக்டருக்கு இல்லாததே. இதற்குக் காரணம். பொதுமக்களிடம் உண்மையைக் கூறவேண்டும். சமயமறிந்து எதிர்ப்புக்கு அஞ்சாமல் – என்று தீர்மானித்தான். வெற்றி பெற்ற அண்ணன், நச்சுப் பொய்கை தயாரித்து விட்டான் – சீமான்கள் பலருக்கும் கொள்ளை இலாபம் கிடைத்து விட்டது. திறப்பு விழாவுக்கான நாளும் குறிக்கப்பட்டது.

“இன்னமும் என்ன சந்தேகம்! பொதுமக்கள், மெழுகுப் பொம்மைகளேதான்! இதோ பாரேன், தங்களுக்கு வர இருக்கும் பேராபத்தை உணராமல், இலாப வேட்டைக்காரர்களின் சூது மொழியை நம்பி நாசமாகின்றனர். குதூகலிக்கிறார்களே கொண்டாட்டமாம், கேளிக்கையாம்! என் அண்ணன் சொன்னது சரியாகப் போய்விட்டது. பொதுமக்கள், விளக்கமறியாத வெறும் கும்பல்தான் சந்தேகமில்லை” – என்று டாக்டர் மனவேதனையுடன் கூறினார். அவருடைய மருமகனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. ஆனால் மனத்திலே மட்டும் பொதுமக்கள் உண்மையை உணர்ந்தால் நீதிக்காகப் போராடுபவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை தளராமலிருந்து வந்தது. ஆனால், உண்மையைப் பொதுமக்கள் உணரவேண்டுமே அதற்கான வழிதான் அடைபட்டுப் போயிருக்கிறது – பணமூட்டைகளைப் போட்டல்லவா அந்த வழியை அடைத்துவிட்டார் சீமான்! என்ன செய்வது?

கப்பல் தலைவனாக இருந்த நிலைமை, உண்மைக்கு பாடுபடத் துணிந்தவருக்கு உபசாரம் செய்யச் சென்றதால், பாழ்பட்டுவிட்டது – பிறகு, மருகனான, அவன் நாலைந்து சிறு படகுகள் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மீன் பிடிக்கும் தொழிலிலே அமர்ந்தான் – சுமாராகத்தான் வருமானம் கிடைத்தது. எனினும், அடிமை வேலையல்ல என்ற எண்ணம் அவனுக்குத் தனியானதோர் இன்பம் தந்தது. மேலும், தத்தை, அவனுடைய வாழ்க்கைக்குக் கீதமானாள். மகிழ்ச்சிக்குக் குறைவில்லை, ஒரே ஒரு மனக் குறைதான். எப்படிப் பொதுமக்களை, உண்மையை உணரும்படிச் செய்வது, உலுத்தர்களின் கொட்டத்தை எப்படி அடக்குவது என்பது தெரியாததால் ஏற்பட்ட மனக்குறைதான். மீன்பிடிக்க வலை வீசும்போதும் மீன்களை விலைபேசி விற்பனை செய்யும்போதும், கிடைத்த பணத்தைக் கணக்குப் பார்க்கும்போதும், கூட்டுப் பணியாற்றும் தோழர்களுக்குப் பணம் பிரித்துத் தருகிற போதும், எந்த வேலை செய்யும்போதும், அவன் மனத்திலே, இந்த ஓர் எண்ணம் மட்டும், குடைந்தபடி இருந்தது.
* * *

“ரோஜா! விழா தினத்தன்று, நீ என்ன வர்ணப் புடவை உடுத்திக் கொள்ளப்போகிறாய், நீலமா, ஊதாவா?” என்று கேட்டாள் அல்லி. அல்லி, பத்திரிகை உரிமையாளரின் மனைவி – இரண்டாம் தாரம் – அழகைவிட ஆணவம் அதிகம் அவளுக்கு. ரோஜா, சீமானின் மகள். செருக்குடையவள்தான். எனினும் அடக்கமானவள் என்ற பெயர் கிடைக்கவேண்டும் என்பதிலே அக்கறை கொண்டவள். எனவே அதற்கான விதத்திலே நடிப்பாள். இரு அழகிகளும் சேலையைப் பற்றித் தொடங்கிய பேச்சு கடைசியில் விழா நடத்தக்கூடியஅளவுக்கு வெற்றிகரமாகத் திட்டம் நிறைவேறியது யாரால், என்பதிலே வந்து முடிந்தது – வம்பும் வளர்ந்தது. என் புருஷனுடைய பத்திரிகைப் பலத்தினாலேதான் வெற்றி கிடைத்தது – என்று வீரம் பேசினாள் அல்லி. ரோஜாவுக்குக் கோபம் – அப்பாவின் பணபலம்தான். வெற்றிக்குக் காரணம் என்று வாதாடினாள். வார்த்தைகள் தடித்தன.

“பொதி பொதியாகப் பணமூட்டைகளைச் சுமந்து என்ன பயன்! செல்வாக்கு வேண்டுமே! புகழ் வேண்டுமே! பொதுஜன ஆதரவைத் திரட்டும் ஆற்றல் வேண்டுமே! பணம் இருந்தால் போதுமா?”
“அல்லி! உன் கணவனுடைய காகிதத்தை நீ மெத்தப் புகழ்கிறாய், உலகமறியாமல். என் அப்பா மனம் வைத்தால் அதைப்போல ஓர் அரை டஜன் பத்திரிகைகளை விலைக்கு வாங்க முடியும் – கூலி கொடுத்துக்கூட வேலை வாங்க முடியும்.”

“என்ன திமிரடி உனக்கு! சீமான்களை யார் இந்தக் காலத்திலே சீந்துகிறார்கள்! அவர்களுக்கு ஆதரவு தர யார் முன்வருகிறார்கள். என் புருஷனுடைய பத்திரிகை பலத்தைப் பெற்றதாலேதான், உன் அப்பாவுக்கு ஊரிலே ஏதோ நாலு பேருடைய ஆதரவு கிடைத்ததே தவிர, அதற்கு முன்பு, அவரைக் கண்டாலே மக்கள் அருவருப்பர் – தெரியுமா? சீமான்தான் – ஆனால், ஊரைவிட்டுப் போய்விட்டாரே உன் சிறிய தகப்பனார் டாக்டர். அவருடைய செல்வாக்கிலே ஆயிரத்திலே ஒரு பாகம் கூடக் கிடையாது உன் தகப்பனுக்கு, தெரியுமா! பத்திரிகை பலம் கிடைத்தது – டாக்டரைக்கூட தோற்கடிக்கும் அளவுக்குப் பலம் பெற்றார் உன் அப்பா.”

“உன் துடுக்குத்தனத்தை என் தந்தையிடம் கூறித் தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் பார்.”

“போடி! எங்கள் பத்திரிகையிலே உன் அப்பனுடைய யோக்கியதையைப் பற்றி எழுதி மானம் பறிபோகிறபடி செய்யாவிட்டால் என் பெயர் அல்லி அல்ல பார்”

“நாளைக்கே, நான் ஒரு பத்திரிகையை நடத்தச் சொல்கிறேன் பாரடி, என் அப்பாவிடம் சொல்லி! பணத்தை வீசி எறிந்தால் காரியம் நடக்கிறது தானாக! ஒரு பத்திரிகையை நடத்துவதுதானா பிரமாதமான காரியம்!”
* * *

இந்த வாக்குவாதத்தால் விளைந்த வம்பு, இரு வீடுகளிலும், தேம்பி அழுவதும் திக்கித் திக்கிப் பேசுவதுமாக வளர்ந்து, கடைசியில் அல்லியின் கண்களைத் துடைத்தபடி அவள் கணவன். ஆகட்டும் நான் அந்தச் சீமானின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறேன் என்று உறுதி கூறுவதும், ‘கிடக்கட்டும் ரோஜா! புதிய பத்திரிகை ஆரம்பித்துவிடலாம், கவலைப்படாதே, நாம் பத்திரிகை ஆரம்பித்தால் அந்தப் பத்திரிகை தானாக கீழே விழுந்து போகும்” என்று சீமான் தன் செல்வக் குமரிக்குக் கூறுவதிலும் போய் முடிந்தது. நேசத்துக்கு முறிவு!

ரோஜாவும் அல்லியும் தத்தமது சமர்த்தைத் தாமே மெச்சிக் கொண்டனர். ஆனால் சீமானும் பத்திரிகை உரிமையாளரும் மோதிக்கொள்ள முன்வந்ததன் காரணம் ஆணவக்காரர்கள் மூட்டிவிட்டதால் மட்டுமல்ல! விழாவுக்குத் தலைமை தாங்க வருகிற வியாபார மந்திரிக்கு யார் மாலை சூட்டுவது, விருந் ளிப்பது என்பதிலே சீமானுக்கும் பத்திரிகை உரிமையாளருக்கும் தகராறு கிளம்பிற்று – எனவேதான் ரோஜாவும் அல்லியும் போட்ட தூபம் துரிதமாகவும் வேகமாகவும் வேலை செய்தது.

பொதுமக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமடிக்கும் இந்தச் சீமானுக்குத் தானா, சகல மரியாதையும், முதலிடமும் இருக்கவேண்டும். விழாவில் நான் கிள்ளுக்கீரையோ! டாக்டரின் கட்டுரையை அன்றே நான் வெளியிட்டிருந்தால், இந்தச் சீமானின் திட்டம் தவிடுபொடியாகி விட்டிருக்குமே! இவ்வளவு பாடுபட்டு, இவனுக்கு ஆதரவு தேடித் தந்த என்னை, விழாவிலே, வந்தனோபசாரம் கூறத்
தானா செய்வது! ஏன்? வியாபார மந்திரியுடன் நான் பேசிக்
கொண்டிருக்கும் சந்தர்ப்பமே ஏற்பட முடியாதபடி தன் வீட்டிலே அல்லவா, அவருக்கு ஜாகை, விருந்து ஏற்பாடு செய்கிறான்! பார்க்கிறேன் ஒரு கை! இனி தயவு தாட்சண்யம் ஏன்? – என்று எண்ணினான் பத்திரிகை உரிமையாளன் கோபத்துடன். விழாவுக்கு, வியாபார மந்திரியை வரவழைக்கவேண்டுமென்ற யோசனையைச் சொன்னதேகூட, பத்திரிகை உரிமையாளர்தான்! பலர், இந்த விழாவுக்கு, சுகாதார மந்திரியை வரவழைப்பதுதான் பொருத்தம் என்றனர். ஆனால், வியாபார மந்திரியிடம் தனியாகப் பேசவேண்டிய ஒன்று இருந்தது பத்திரிகை உரிமையாளருக்கு.

வியாபார மந்திரி செல்வான் – மந்திரி வேலைக்கு முன்பேகூட! ஒரே மகன் அவருக்கு ரோஜாவுக்கு ஏற்ற மணாளன். இது சீமானின் பிடிவாதத்துக்குக் காரணம்! போட்டி – பூசல் முற்றிவிட்டது. புதிய இதழ் வெளிவருவதற்கான ஏற்பாடுகளைச் சீமான் கவனிக்கலானார். இது தெரிந்ததும் பத்திரிகை உரிமையாளர் பதைத்தார். கணையைத் தொடுத்துவிடுவது என்று தீர்மானித்தார். டாக்டரின் பழைய கட்டுரையை – திட்டம் தீதானது – நாசம் தருவது – என்ற கட்டுரையை, வெளியிட்டார் பத்திரிகையில். ஊரிலே ஒரே பரபரப்பு! திகைப்பு! பல்வேறு வதந்திகள், அச்சுப்பொறி சரியாக அமையவில்லை சீமானுக்கு. எனவே, கணையைத் தடுக்கும் வழி இல்லை.

மறுதினம், சீமானுக்கு ஒரு வேண்டுகோள்! – என்ற கட்டுரை வெளிவந்தது – அதிலே, திட்டம் தீமையானது என்று தெரிந்துவிட்டதால், இனி விழாவே கூடாது. பொதுமக்கள் விவரம் தெரியாமல் குளிக்குமிடம் சென்று விடுவதைத் தடுக்க தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சீமானுக்கு நஷ்டம்தான் என்றாலும், அவர் அதைப் பொதுஜன நன்மையை உத்தேசித்துப் பொருட்படுத்தக்கூடாது என்று விளக்கமும் உருக்கமும் நிரம்பிய விதமாக எழுதப்பட்டிருந்தது. ஊர் மக்களின் கண்களெல்லாம் கேள்விக் குறிகளாயின! மறுதினம் சீமானின் இதழ் வெளிவந்தது! ‘இத்தனை நாள் ஏன் மறைத்தாய்’ – என்ற கட்டுரை காரசாரமாகத் தீட்டப்பட்டிருந்தது – டாக்டரின் எச்சரிக்கை தரும் கட்டுரையை ஏன் முன்பு பிரசுரிக்கவில்லை இத்தனை நாள் ஏன் மறைத்து வைத்தார் இந்தப் பத்திரிகை உரிமையாளர் – என்று கேட்டார் சீமானின் பத்திரிகை ஆசிரியர். மக்கள் இதைப்படித்ததும் பதறினர்! இரு இதழ்களும் நடத்திப் ‘போர் – வியாபார மந்திரியின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது – அவர் எதிர்ப்புக்கு அஞ்சுபவர். எனவே, விழாவுக்கு வரமுடியாது என்று எழுதிவிடலாமா என்று எண்ணினார் – இதற்கிடையிலே சுகாதார மந்திரிக்கு இதுதான் தக்க சமயம் தன் கோபத்தைக் காட்ட என்று தோன்றிற்று. குளிக்கும் – இடம் பூந்தோட்டம் – மருத்துவ விடுதி – போன்றவை அமைக்கப்படும்போது, சுகாதார மந்திரியான தன்னை அழைத்துக் கௌரவிப்பது முறையே தவிர, இந்த விஷயமாகத் தொடர்பு அற்ற வியாபார மந்திரியை அழைப்பது முறையல்ல, அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதும் சரியல்ல என்பது சுகாதார மந்திரியின் வாதம். அவருடைய கோபத்துக்குக் காரணம் அதுதான்!
இரு பத்திரிகையிலும் வெளிவந்த கட்டுரைகளையே ஆதாரமாகக் கொண்டு, பொதுஜன நன்மையை உத்தேசித்து, இந்தக் குளிக்குமிடத்தை உடனே மூடிவிடும்படி உத்தரவிட்டார். போலீஸ் மந்திரிக்கு இதை நிறைவேற்றுவதிலே ஓர் தனி மகிழ்ச்சி – ஏனெனில் விழாவுக்குப் பெருங்கூட்டம் கூடினால் தொல்லை ஏதேனும் வருமோ என்று பயந்து கொண்டிருந்தவர் அந்த மந்திரி. குளிக்குமிடம் மூடப்பட்டது! பொதுமக்கள் டாக்டரின் கட்டுரையை நிதானமாகப் படித்துப் பார்த்தனர் – அவர்களுக்கு அப்போதுதான் அவருடைய அருமையும் பெருமையும் விளங்கிற்று. இப்படிப்பட்டவரை அல்லவா நாம் துரோகி என்று தூற்றினோம் என்று வருத்தப்பட்டனர். இவ்வளவுக்கும் காரணமாக இருந்த சீமானின் மீது சீற்றம் கொண்டனர் – ஆனால் அவரும் ரோஜாவும் ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டனர். இதை ஜாடை மாடையாக அறிந்ததும் இந்தப் பத்திரிகைக்காரன் ஏன் இந்தச் சூதுக்கு உடந்தையாக இருந்தான். இதுவரையில் – ஏன் டாக்டருக்கு விரோதமாக வேலை செய்தான் – நம்மை ஏய்த்தது ஏன் என்று எண்ணினர் – சீறினர் – முடிவு, பத்திரிகை அலுவலகத்திலே, அமளி!” பொதுமக்களே! சீமான் மிரட்டினான். நான் பயந்து போனேன் – அதனால்தான் டாக்டருக்குத் துரோகம் செய்தேன் – என்னை மன்னிக்க வேண்டும்” என்று கெஞ்சினான் பத்திரிகை உரிமையாளன்.

“பணத்தைக் கண்டு பலிலிளிக்கும் உனக்குப் பத்திரிகை ஒரு கேடா! சீமான் மிரட்டினால் என்ன, பொது மக்களிடம் உண்மையைச் சொல்வதுதானே. நாங்கள் சும்மா விட்டிருப்போமா சீமானை” என்று கேட்டனர் மக்கள்.

“டாக்டரை வரவழைத்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் பத்திரிகை உரிமையாளன்.
* * *

அந்தத் திருநாள் வந்தது! டாக்டரின் கண்களிலே களிப்புக் கண்ணீர்! பேசவும் முடியவில்லை. அவர் சார்பிலே மருமகன்தான் பேசினான் – டாக்டரின் பெருமையை மட்டுமல்ல – இரண்டு இதழ்களுக்கும், கட்டுரைகள் தயாரித்துக் கொடுத்த மாஜி ஆசிரியரின் பெருமையைப் பொதுமக்கள் வாழ்த்தினர் அந்த ஆசிரியரை. “இவ்வளவு ஆனந்தத்திலே சூட்சுமத்தை மறந்து விட்டீகள். அன்று நான் உண்மையை விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தபோது அண்டப்புளுகு பேசி, என்மீது அபாண்டமான பழிசுமத்தி என்னைத் துரோகி என்றும், சதிகாரனென்னும் கூறிய குடியிப்போர் சங்கத் தலைவனல்லவா இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம்?” – என்று டாக்டர் கேட்டார். “ஆம்! ஆம்!” என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். ஆனால் அந்தப் பொதுஜன விரோதி ‘எளியோர்’ மாநாட்டுக்குத் தலைமை தாங்க வெளியூர் சென்று விட்டான்!
* * *

பொதுமக்கள், முழு உண்மை தெரியாதபோது அவசர முடிவுக்குத்தான் வருகிறார்கள் – உண்மை தெரிந்தாலோ அவர்கள் தக்க தீர்ப்பைத் தருகிறார்கள் – என்று பூரிப்புடன் கூறினார் டாக்டர். “ஆமாம் ஆனால் பொதுமக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற வசதி, வல்லமை, வாய்ப்பு இருக்க வேண்டும். பணந்தேடிகளிடமும் அவர்களைக் கண்டு பல்லிளிப்போரிடமும் பிரசார யந்திரம் இருந்தால், பொதுமக்கள் கண்களிலே மண்ணைத்தான் தூதுவர் – தூயவனைத் துரோகி என்று திரித்துக் கூறுவர் – பொதுமக்களை மயக்குவர், மிரட்டுவர் – தவறான வழியிலேயும் திருப்பிவிடுவர் – என்றான் மருமகன். உண்மைதான்! மக்களாட்சி ஏற்படட்டும் மக்களின் மாண்பு சரிவர வேலை செய்யாததற்குக் காரணம், இரும்பு முதலாளிகள் இன்னும் இதுபோன்ற பணந்தேடிகளிடம், பிரச்சார யந்திரம் சிக்கிக் கொண்டதுதான். மக்களாட்சி மலரவேண்டுமானால் இந்த நிலைமை மாற வேண்டும்” என்று டாக்டர் கூறினார். டாக்டரின் புகழ் ஓங்கிற்று – அண்ணன் ஊர் திரும்பவே அஞ்சினார். ஊரார் சும்மா விடவில்லை. நகராட்சி மன்றத்தைத் திருத்தி அமைத்தனர். நாசம் தரும் திட்டத்தைத் தயாரிக்க பொதுமக்களின் பணத்தைச் செலவிட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்தனர்! அந்த நோட்டீசும், டாக்டர் பொதுமக்களின் மாண்பைப் பற்றி விளக்கமாக எழுதிய கடிதமும், சீமானுக்கு ஒரே தபாலில் கிடைத்தன – படித்தார் – பயந்தார் – மக்கள் விழிப்படைந்து விடுகிறார்கள், விரைவில் மக்களாட்சியை ஏமாற்றுவது முடியாத காரியம். இனி – என்று தெரிந்து கொண்டனர்.

(திராவிட நாடு - 1950)