அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

உடன் பிறந்தார் இருவர்
2

கேயஸ் கிரேக்கஸ் பேசிக் கொண்டிருக்கும்போது, எழுச்சி அலை எனக் கிளம்புமாம், உரத்த குரலெடுத்து ஆவேசமுறப் பேசுவானாம், குரல் மங்குமாம், வார்த்தைகள் தேனொழுக்காக வராதாம்! அவனுடைய பணியாள் ஒருவன், இதனை, கேயசுக்கு உணர்த்துவிக்க, சிறு குழல் எடுத்து ஊதுவானாம். உடனே கேயஸ் குரலைச் சரிப்படுத்திக் கொள்வானாம். உண்மைக்காகப் பரிந்து பேசும் போது, தன்னையும் மறந்து விடும் நிலை, கேயசுக்கு!

டைபீரியஸ் தண்ணொளியும், கேயஸ் வெம்மை மிக்கதுமான, பேச்சினை வழங்குவர் - இருவரின் பேச்சும் சீமான்களுக்குச் சீற்றத்தையும் அச்சத்தையும் சேர்த்தளித்தது.

செல்வக்குடி பிறந்தவர்கள், ஏன் இந்தப் போக்கிட மற்றவர் களுக்காகப் போரிடக் கிளம்புகின்றன; திறமையைக் காட்ட வேறு முறையா இல்லை! களம் இருக்கிறது, கட்கமெடுத்துப் போரிட்டு, காவலர்களின் முடிதரித்த சிரங்களைச் செண்டுகளாக்கி வீர விளையாட்டு ஆடிக் காட்டலாம்; உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன, அங்கு ஆற்றலைக் காட்டி நாட்டுத் தலைவர்களின் நல்லாசி பெறலாம்; குதிரை ஏற்றம், தேரோட்டம், என்றெல்லாம் வீர விளையாட்டுகள் விதவிதமாக உள்ளன, அவற்றிலே ஈடுபட்டு, புகழ் ஈட்டாது, வறண்ட தலையரிடம் சென்று, விபரீத திட்டங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்களே, ஏன் இந்த வீண்வேலை, எதற்காக இந்த ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனர், என்று செல்வர்கள் பேசினர் - ஏசினர். டைபீரியசும், கேயசும், தூண்டிவிடும் தலைவர்கள், என்று செல்வர் கண்டித்தனர்; மக்களோ, வாழ்த்தினர்.
ரோம் நாட்டுக் கீர்த்தி பரவியது, இடிமுழக்க மெனப்பேசும் பேர்வழிகளாலல்ல, எதிரியின் வேலுக்கு மார்காட்டி நின்ற வீரர்களால்; அகழ்களைத் தாண்டி, கோட்டைகளைத் தாக்கிக் கொடி மரங்களைச் சாய்த்து, உயிரைத் துச்சமென்று கருதி வீரப்போரிட்டு வெற்றிகண்டவர்களால்; அணி அழகும் உவமை நயமும், கலந்து, புன்னகையும் பெருமூச்சும் காட்டிப் பேசிடும் நாநர்த்தனக்காரரால் அல்ல!! மண்டிலம் பல வென்றவர்கள், புலமைமிக்க பேச்சாளரல்ல, கூர்வாள் ஏந்தத் தெரிந்தவர்கள். சந்தைச் சதுக்கத்திலே நின்றுகொண்டு, “சாய்ந்தீரே! மாய்ந்தீரே!” என்று ஏழை மக்களிடம் அழுகுரலில் பேசுவதும், “எழுக! வருக! போரிடுக!” என்று தூண்டிவிடுவதும், எளிதான காரியம், தாக்கவரும் மாற்றனைத் துரத்திச் சென்று, அவனுடைய மாநகரைத் தரைமட்டமாக்குவது, அனைவராலும் சாதிக்கக் கூடிய செயலல்ல!!

செல்வர்கள், அதிலும் செருமுனை சென்று வெற்றிகண்டவர்கள், இதுபோலத்தானே ஏளனம் பேசுவர், அறிவுத் துறையிலே ஈடுபடும் இளைஞர்களைக் கண்டு. டைபீரியஸ், இந்த ஏளனத்துக்கும் இடமளிக்கவில்லை. களத்திலே தன் கடமையைச் செம்மையாகச் செய்தான். நியூமான்டைன்ஸ் என்னும் நாட்டாருடன் நடந்த பெரும் போரில், டைபீரியஸ் காட்டிய வீரம், சாமான்யமானதல்ல. மான்சினஸ் எனும் படைத்தலைவன், டைபீரியசின் வீர தீரத்தைக் கண்டதுமட்டுமல்ல, களத்திலே ஒரு சமயம், எதிரிகளால் சுற்றிவளைத்துக் கொள்ளப்பட்ட நேரத்தில், டைபீரியசின் யோசனையால் பெரிதும் பயன்.

மாற்றாரிடம் சென்று சமரச ஏற்பாடுகளைத் திறம்படப் பேசி, பேராபத்தில் சிக்கிக்கொண்ட, ரோம் நாட்டுப் பெரும்படையை மரணத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த பெருமை, டைபீரியசுக்குக் கிடைத்தது. குறைந்தது இருபதினாயிரம் ரோமான்ய வீரர்கள் டைபீரியசினால் பிழைத்தனர்.

டைபீரியஸ் கிரேக்கஸ், பொதுப்பணியிலே, நேர்மையைக் கடைப்பிடித்து ஒழுகினவன் - களத்திலே, மாற்றார்களிடம் அவனுடைய கணக்கேடு சிக்கிவிட்டது - நாட்டவர், கணக்குக் கேட்டால், என்ன செய்வது என்ற கடமை உணர்ச்சியால் உந்தப்பட்ட டைபீரியஸ், மாற்றார் நகருக்கு மீண்டும் ஓர்முறை சென்று, கணக்கேட்டைக் கேட்டுப் பெற்றுவந்தான்.

இதனைக்கூடி, சூதுக்காரச் சீமான்கள், திரித்துக் கூறி, டைபீரியஸ்மீது கண்டனம் பிறப்பித்தனர், ஆனால் டைபீரியசின் ஆற்றலால் உயிர்தப்பிய போர்வீரர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் திரண்டு வந்து நின்றனர், பெரியதோர் நன்மையை நாட்டுக்குச் செய்த டைபீரியசையா கண்டிக்கத் துணிகிறீர்கள் - என்ன பேதைமை - ஏன் இந்தப் பொறாமை! என்று ஆர்ப்பரித்தனர். இந்த எழுச்சியைக் கண்டே, கண்டவற்றை விட்டுவிட்டனர். ஆனால் சீமான்களின் சீற்றமும் பொறாமையும், புற்றுக்குள் பாம்பென இருந்து வந்தது.

இந்தப் போரிலே, டைபீரியஸ் வீரமாகவும் ராஜதந்திரமாகவும் பணியாற்றிப் பெரும்புகழ் பெற்றான் - ஆனால் இந்தப் புகழைவிட, பயன் தரத்தக்க மற்றோர் பாடம் இந்தச் சமயத்தில் அவனுக்குக் கிடைத்தது.

களம் நோக்கி அவன் சென்றகாலை, வழிநெடுக அவன் கண்ட பட்டி தொட்டிகளெல்லாம் பாழ்பட்டுக் கிடந்தன; சிற்றூர்களிலே மக்கள் இல்லை, அங்கொருவரும் இங்கொருவரு
மாக. அயல் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த அடிமைகள் காணப்பட்டனர். இந்தக் காட்சி, டைபீரியசுக்குக் கருத்தளித்தது. நாடு காடாகிறது, நல்ல உழைப்பாளிகள், கிராமத்தில் வாழ வகையின்றி, வெளி இடங்களை நாடிச் சென்றுவிட்டனர்; காரணம், அவர்களுக்கு வயல் இல்லை, குடில் இல்லை, தொழில் இல்லை, இந்நிலைக்குக் காரணம், அவர்களிடம் இருந்த நிலமெல்லாம், செல்வர் கையிலே சிக்கிக்கொண்டதுதான். மீண்டும் நாட்டுக் குடிமக்கள் வளம்பெற வேண்டும் - அறம் அதுதான், அன்பு நெறியும் அதுதான் - அரசு கொள்ள வேண்டிய முறையும் அதுதான். இதற்காகவே நாம் இனிப் போரிடவேண்டும், என்று டைபீரியஸ் தீர்மானித்தான். ரோம் திரும்பியதும் இந்தத் திருப்பணியைத் துவக்கினான், மக்கள் திரண்டனர்.

“உழுபவனுக்கு நிலம் வேண்டும்”

“நிலப் பிரபுக்களை ஒழித்தாக வேண்டும்”

“ஏழைக்கு எங்கே இல்லம்!”

சுவர்களிலும், வளைவுகளிலும், இந்த வாக்கியங்கள் எழுதப்படுகின்றன! ஏழை விழித்துக்கொண்டான் - உரிமையைக் கேட்கத் தொடங்கிவிட்டான்; டைபீரியசின் பேச்சு, ஊமைகளைப் பேசச் செய்து விட்டது.
குறிப்பிட்ட அளவுக்குமேல் நிலத்தைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் செல்வர்கள், அளவுக்கு மேற்பட்டு உள்ள நிலத்தை அரசினரிடம் தந்துவிட வேண்டும், அதற்காக அவர்களுக்கு நஷ்டஈடு அளிக்கப்படும்.

அங்ஙனம் பெறப்பட்ட நிலத்தை ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் - அவர்கள் சிறுதொகை நிலவரியாகச் செலுத்த வேண்டும்.

டைபீரியஸ் கிரேக்கஸ், இந்தத் திட்டத்தை எடுத்துக் கூறினான். மக்கள் இதுதான் நியாயம், ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தைச் சதி செய்து சாகடித்து விட்டனர்; இப்போது புதுக்கணக்கு வேண்டும், என்று முழக்கினர்.

டைபீரியஸ் கிரேக்கஸ், ட்ரைப்யூனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான் - மக்களுக்கு வழக்கறிஞனானான்! சீமான்கள் ீறினர்.

உலகை வென்றோர்! - என்று விருது இருக்கிறது; இங்கே, ஏழையின் உள்ளத்தை வென்றோமா! - என்று இடித்துரைத்தான் டைபீரியஸ். புயலொன்று கிளம்புகிறது பூங்கா அழிந்துபடும், இதனை உடனே அடக்கியாக வேண்டும், என்று எண்ணிய சீமான்கள், மார்கஸ் ஆக்டேவியஸ் எனும், மற்றோர் ட்ரைப்யூனைச் சரிப்படுத்திக் கொண்டனர். ஒரு ட்ரைப்யூன் கொண்டுவரும் திட்டத்தை மற்றோர் ட்ரைப்யூன் மறுத்து ஓட்டு அளித்தால், திட்டம் தோற்றதாகப் பொருள் - சட்டம் அவ்விதம் ஆக்கப் பட்டிருந்தது. ஏழைகளின் ‘ரட்சகனாக’ ஏழைகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கஸ் ஆக்டேவியஸ், மாளிகை வாசிகளுக்கு அடிமையாகி, டைபீரியசின் நல்ல திட்டத்தை எதிர்க்கலானான். மக்கள் வெகுண்டனர். டைபீரியஸ் இனியன கூறினான், இறைஞ்சினான், எச்சரித்தான், பணப்பெட்டிகளிடம் பல்லிளித்துவிட்ட ஆக்டேவியஸ், ஏழைகளுக்குத் துரோகியாகி விட்டான். டைபீரியசின் திட்டத்தை மறுத்து ஓட்டளித்தான். திட்டம் தோற்றது, சீமான்கள் வெற்றிக் கொட்டமடித்தனர்.

தோல்வி - துரோகம்! - இதனை டைபீரியஸ் எதிர்ப்பார்க்கவில்லை. சீமான்கள் சீறுவர், எதிர்ப்பர், சதிபுரிவர். என்பதை எதிர்பார்த்திருந்தான். ஆனால் ஏழைகளின் ‘பாதுகாவலன்’ எனும் பதவியைப்பெற்ற ஆக்டேவியஸ், துணிந்து, தன் திட்டத்தைத் தகர்ப்பான் என்று எதிர்ப்பார்க்கவில்லை. எவ்வளவு ஏளனம் கிளம்பியிருக்கும் சீமான்களின் மாளிகையில்! பணம் செய்யும் வேலையைப் பாரடா, பக்குவமற்றவனே! என்றல்லவா கூறுகிறது, பணக்காரரின் பார்வை. ஏழைக்கு வாழ வழி வகுக்க, கிளர்ச்சிசெய்து, வேலை நிறுத்தம் நடத்தி, ட்ரைப்யூன் எனும் பாதுகாவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையைக் கண்டனர்! வேலியே பயிரை மேய்கிறதே! மான் வழிகாட்ட, சிறுத்தை, மான் கன்றுகளைக் கொன்று தின்கிறதே! என்ன அநியாயம்! என்ன கேவலம்!! என்று டைபீரியசும், அவன் பக்கம் நின்றோரும் வருந்தினர்; செல்வர் வெற்றிச் சிரிப்புடனே உலவினர்.

டைபீரியஸ், சோர்ந்துவிடவில்லை - மீண்டும் ஓர் சட்டம் கொண்டுவந்தான் - பழையதைவிட, பரபரப்பும் தீவிரமும் மிகுந்தது.

“யாரும் 330 ஏகருக்குமேல் நிலம் வைத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது சட்டம், இப்போது அந்த அளவுக்குமேல் வைத்திருப்பவர்கள் சட்ட விரோதமான செயலாற்றினார்கள் என்று பொருள்படுகிறது, எனவே அவர்கள், சட்ட விரோதமாக வைத்துக்கொண்டிருக்கும் நிலத்தை சர்க்கார் வசம் உடனே ஒப்படைக்கவேண்டும்.” - என்பது டைபீரியசின் புதுத் திட்டம்.

சீமான்களின் அக்கிரமத்துக்கு உடந்தையாக இருந்த ஆக்டேவியசேகூட, குற்றவாளியானான்! சட்ட வரம்புக்கு மீறி அவனும் நிலம் வைத்துக் கொண்டிருந்தான்.

டைபீரியசின் இந்தப் புதிய திட்டத்தை, தீவிரமாக, சீமான்களின் கையாளான ஆக்டேவியஸ் எதிர்த்தான். மீண்டும் டைபீரியஸ், பொது நன்மையை எண்ணி நீதியாக நடந்துகொள்ளும்படி, ஆக்டேவியசைக் கெஞ்சி கேட்டுக் கொண்டான். ஆக்டோவியஸ் இணங்க மறுத்தான்.

இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் அதிகாரிகள், தமது அலுவலைச் செய்யக்கூடாது என்றான், டைபீரியஸ். அதிகாரிகள் இணங்கினர்.

சனிபகவானுக்கு ஒரு கோவில் உண்டு ரோம் நகரில்! துரைத்தனத்தாரின் பணம் அங்குதான், வைத்திருப்பர். ஏழைகளின் பிரச்சனை தீர்க்கப்படுகிறவரையில், கோவிலிலுள்ள பணத்தைத் தொடக் கூடாது, இழுத்துப் பூட்டுங்கள் ஆலயத்தை என்றான் டைபீரியஸ். கோவில் கதவு அடைபட்டுவிட்டது! டைபீரியசின் வார்த்தைக்கு வலிவு ஏற்பட்டுவிட்டது. செல்வர் பீதியுற்றனர்! துக்க உடை அணிந்து வலம் வந்தனராம்!

வருந்திக்கொண்டு வாளா இருந்துவிடுவரா, வன்கணாளர்கள்! நமது ஆதிக்கத்தை அழிக்கத் துடிக்கும் இந்த அற்பனைக் கொலை செய்தாக வேண்டும் என்று துடித்தனர், சதி செய்யலாயினர். டைபீரியஸ் வாளும் கையுமாகவே உலவ நேரிட்டது.

இவனல்லவா இதுகளுக்காகப் போராடுகிறான் - அடங்கிக் கிடந்ததுகளை ஆர்ப்பரிக்க வைக்கிறான் - இவன் இருக்குமட்டும் பேராபத்துதான், எனவே இவனை ஒழித்தாக வேண்டும் என்று செல்வர்கள் கொக்கரித்தனர்.

வயலை வளமாக்கியவர்களே! வறுமைதான் உங்களுக்குப் பரிசா? பாதை அமைக்கப் பாடுபாட்டோரே! பட்டினி தான் உங்களுக்குப் பரிசா? சித்திரச் சோலைகளுக்காக உங்கள் செந்நீரைக் கொட்டினீர்கள்! அற்புதமான கட்டிடங்கள் எழுப்பினீர்கள் உழைப்பால்! உங்கள் நிலைமை காட்டுமிருகத்துடையததைவிடக் கேவலமாகவன்றோ காணப்படுகிறது! என்று டைபீரியஸ் முழக்கமிடுகிறான்.

சட்டத்தை மீறினவர்கள் செல்வவான்களே! என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறான். ஏழைகளுக்குத் துரோகம் செய்தவர்களை இழுத்து வரச் சொல்கிறான். எவ்வளவு ஆணவம்! செனட் சபையிலே ஈடில்லா அதிகாரம் செலுத்து கிறோம். நமது மாளிகைகளிலேயோ, எதிரி நாடுகளிலிருந்து கொண்டுவந்து விலையுயர்ந்த பொருள்கள், காட்சியாக இருக்கின்றன. ஏன் என்று கேட்காமல் இருந்து வந்தனர், அந்த ஏழையரை நம்மீது ஏவிவிடுகிறானே கொடியவன், இவனைக் கொன்றால் என்ன, கொல்லாது விடினோ இவன் நமது செல்வாக்கையே சாகடித்துவிடுவானே என்று எண்ணினார், சீறினர். டைபீரியஸ் கிரேக்கசைக் கொன்று போடக் கொடியவர்
களை ஏவினர்.

டைபீரியஸ் புகுத்த விரும்பிய புதுத் திட்டம் பற்றி ‘வாக்கெடுப்பு’ நடாத்தும் நாள் வந்தது. செல்வர்கள் கூலிப் படையை ஏவி, குழப்பத்தை மூட்டிவிட்டு, வாக்கெடுப்பு நடைபெறாவண்ணம் தடுத்து விட்டனர்.

அன்று அவர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு டைபீரியசிடம் ஆள்பலம் இருந்தது. எனினும், இரத்தக் களரியைத் தடுக்கவேண்டும், சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பை, செனட் சபையிடம் விட்டுவிடலாம். என்று நண்பர் சிலர் கூறிய நல்லுரைக்கு இணங்கி, டைபீரியஸ், அமளியை அடக்கினான்.

செனட் சபை, செல்வரின் சூதுக்கும் சுக போகத்துக்கும் அரணாக அமைந்திருந்தது. அங்கு, நியாயம் எப்படிக் கிடைக்கும் - சமர் இன்றி பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளும் சகல வழிகளையும் பார்க்கவில்லை என்று பிறகோர் நாள் எவரேனும் குற்றம் சாட்டுவரே என்பதற்காகவே, டைபீரியஸ், செனட் சபையிடம் பிரச்சனையை அனுப்பி வைத்தான் - நம்பிக்கையுடன் அல்ல. அவன் எதிர்பார்த்தபடியே, செனட் சபை மழுப்பிற்று, மிரட்டிற்று, காரியமாற்றவில்லை. மீண்டும் மக்களிடம் வந்தான் டைபீரியஸ்.

ஏழைகளுக்கு இதமளிக்கும் திட்டத்தை எதிர்ப்பவன், ஏழைகளாலேயே டிரைப்யூன் ஆக்கப்பட்ட ஆக்டேவியஸ்தானே! அவனைப் பதவியிலிருந்து அகற்றினாலொழிய வெற்றி கிடைக்காது. எனவே, மக்கள், அவன் தேவையா? நான் தேவையா? என்று தாமே தீர்ப்பளிக்கட்டும் என்று டைபீரியஸ் கேட்டுக் கொண்டான்.

ஏழைகளுக்காகவே நான் புதிய திட்டம் கொண்ட வருகிறேன் - அதை நீ மறுக்கிறாய் - ஏழைகளுக்கு என் திட்டம் கேடு பயக்கும் என்று உன்னால் காரணம் காட்டமுடியுமானால், மக்களிடம் கூறி, என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிடச் சொல், என்று அறைகூவி அழைத்தான், டைபீரியஸ். ஆக்டேவியஸ் முன்வரவில்லை. பிறகே, டைபீரியஸ், ஆக்டேவியசை பதவியிலிருந்து நீக்கும்படி மக்களிடம் முறையிட்டான். வாக்கெடுப்பு துவங்கிற்று. முப்பத்தைந்து ‘ஆயத்தார்கள்’ கூடினர். அவர்களில் 17 ஆயத்தார், ஆக்டேவியஸ் நீக்கப்பட வேண்டும் என்று வாக்களித்தனர். பெருங்குணம்படைத்த டைபீரியஸ், அப்போதும், வெற்றி எவர் பக்கம் என்பது விளங்கிய அந்த வேளையிலும், பழி தீர்த்துக்கொள்ளும் உணர்ச்சி கொள்ளாமல், தோழைமை பேசி, ஆக்டேவியசைக் கட்டித் தழுவி முத்தமிட்டு, வேண்டலானான், “வேண்டாம் வீண்பிடிவாதம்! ஏழைகள் உய்யும் திட்டத்தை நீயும் ஆதரித்து நற்பெயர் பெறு!” என்று கெஞ்சினான். உருக்கமான வேண்டுகோள்; ஆக்டேவியசுக்குக்கூட கண்களிலே நீர் ததும்பிற்றாம், எனினும் அவனை அடிமைப்படுத்திவிட்ட, செல்வர்கள் அங்கிருந்தனர். அவர்களைக் கண்டான் ஆக்டோவியஸ், கருணை கருகிவிட்டது, வஞ்சகம் படமெடுத்தது, இணங்கமுடியாதெனக் கூறிவிட்டான். வாக்கெடுப்பும் தொடர்ந்து நடந்தது, ஆக்டேவியஸ், நீக்கப்பட்டான்.

ஆக்டேவியஸ், பதவி இழந்தான். ஆனால் டைபீரியஸ் வெற்றியால் வெறியனாகவில்லை - பண்புடன் நடந்து கொண்டான். ஆக்டேவியஸ் ஓர் அம்பு என்பதை அவன் அறிவான், அவனிடம் கோபம் அல்ல, பரிதாபம் தான் பிறந்தது. ஏழைகளுக்கென்று அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட பாதுகாவலனைக் கொண்டே ஏழையை நாசமாக்கக்கூடிய வலிவு, செல்வர்கள் பெற்றிருக்கிறார்களே, என்பதை எண்ணியே டைபீரியஸ் துக்கித்தான்.

ஆக்டேவியசை, மக்கள் தாக்கியபோது கூட, டைபீரியஸ் ஓடிச்சென்று அவனைக் காத்து, மக்களை அடக்கினான். டைபீரியசின் வழி நிற்கக்கூடிய மியூஷியஸ் என்பான் ட்ரைப்யூன் ஆக்கப்பட்டான். செனட்சபை, டைபீரியசின் செல்வாக்கு ஓங்கி வளர்வது கண்டு பெரிதும் பீதி அடையலாயிற்று.

புதிய சட்டம் நிறைவேறிற்று. அதன்படி, ஒவ்வொரு பிரபுவிடமும் உள்ள நிலத்தை அளவெடுக்க முற்பட்டான், டைபீரியஸ். இதற்காகக் கூடாரம் அமைத்துக்கொள்ளும் செலவுத் தொகை கூட, தர மறுத்தது செனட்; அவ்வளவு அருவருப்பு. மற்றவர்கள் சர்க்கார் சார்பிலே, பொதுப் பணியாற்றக் கிளம்பும்போது, படிச்செலவு, மிகத் தாராளமாகத் தரும், இதே செனட். ஆனால், ரோம் நாட்டுச் சமுதாய அமைப்பின் சீர்கேட்டை நீக்கி, சமன் உண்டாக்கி, வலிவடையச் செய்யும் நற்பணிபுரியும் டைபீரியசுக்கு, படிச்செலவுகூடப் போதுமான அளவு தரமறுத்தது. அதுமட்டுமல்ல, அவனுக்கு எதிராகத் தப்புப் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தலாயிற்று.

“மண்டைக்கர்வி! மக்களை மயக்கி அடிமை கொள்கிறான்!”

“வீதியிலே பெரிய வெற்றி வீரன்போலல்லவா செல்கிறான்.”

“ஏழைகளுக்காக உருகும் இவன் என்ன, வெட்டுகிறானா, குத்துகிறானா, வெயிலிலும் மழையிலும் நின்று வேலை செய்கிறானா? ஏழைகள் பெயரைக் கூறிக் கொண்டு ஏய்த்துப் பிழைக்கிறான்”

“மண்டிலங்களை வென்ற மாவீரர்களெல்லாம், தலைகுனிந்து நடந்து செல்கிறார்கள்; இந்த ‘மார் தட்டி’ மக்கள் புடைசூழ அல்லவா செல்கிறான்.”

“இரவுக் காலத்தில் பார்த்திருக்கிறீர்களா அவனை, வீடு செல்லும்போது மக்கள் தீவர்த்தி பிடித்துக்கொண்டு செல்கிறார்கள், அவ்வளவு ஒய்யாரம் கேட்கிறது அவனுக்கு.”

“திட்டமிட்டு வேலை செய்கிறான்; ஏழைகளை ஏவிவிட்டு, செல்வர்களை அழிப்பது, பிறகு அதே ஏழைகளை ஏய்த்துவிட்டு, அரசன் ஆகிவிடுவது, இதுதான் அவன் திட்டம்!”

“முடிதரித்துக் கொண்டால், தீர்ந்தது; பிறகு, நாடு அவன் காலடியில் தானே.”

“ஏழை மக்களுக்கு எங்கே அவனுடைய வஞ்சகம் தெரிகிறது.”

“இவன் எவ்வளவு உரிமை உள்ளவனோ, அதே அளவு உரிமை படைத்தவன் தானே, ட்ரைப்யூனாக இருந்த ஆக்டேவியஸ். அவனைப் பதவியிலிருந்து விரட்டினானல்லவா! சரியா அது? மக்களுக்கு இழைத்த துரோகமல்லவா. கொடுகோலர்கள்கூட, ட்ரைப்யூனை நீக்கமாட்டார்களே! எவ்வளவு அரும்பாடுபட்டு மக்கள், ட்ரைப்யூனைப் பெறும் உரிமையைப் பெற்றனர். ஒரு கணத்தில் ஒழித்துவிட்டானே!”

“எல்லாம், அரசனாவதற்காத்தான்!”

இவ்வண்ணம் பலமான தப்புப்பிரச்சாரம். மக்களுக்கு, மன்னனாக யாராவது முயற்சிக்கிறார்கள் என்றால்போதும், ஆத்திரம் பொங்கும். அவ்வளவு அல்லலை அனுபவித்திருக்கிறார்கள், அரசர்கள் ஆண்டபோது. அதிலும், மன்னன் என்ற உடன் மக்கள் மனத்திலே, டார்க்வின் என்ற கொடுங்கோலனுடைய நாட்கள்தான், எழும்; எழுந்ததும் பதறுவர். எனவே, டைபீரியஸ், மன்னனாவதற்கு, திட்டமிடுகிறான் என்ற வதந்தி கிளம்பியதும், மக்கள் மனம் குழம்பலாயிற்று. மெல்ல மெல்ல, அவர்கள் மனத்தைச் செல்வர்கள் கலைத்தனர்.

ஆக்டேவியசை அகற்றியது அக்கிரமம்தான் என்றுகூடச் சிலர் பேச முன்வந்தனர். மக்கள் ஏமாற்றப்படுவதைக் கண்டு டைபீரியஸ் வருந்தினான்.

“ட்ரைப்யூன் பதவி மகத்தானது - மக்களின் உரிமையையும் நலனையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வாய்ந்தது - அதனை மதிப்பதே அனைவரின் கடமையுமாகும். எனினும், மக்களின் ‘காப்பாளர்’ ஆகப் பதவி பெற்றவர் மக்களுக்கே துரோகம் செய்தால், அவரை விரட்டாதிருக்கமுடியுமா! டார்க்வின் எனும் மன்னன் கொடுமை செய்தான் - அதனால் வெறுப்படைந்த நாம், மன்னராட்சி முறையையே ஒழித்துக் கட்டவில்லையா! மக்களின் நலன்களுக்காகத் தானே பதவிகள்! பதவிகளை அளிக்கவல்ல மக்களுக்கு அவற்றைப் பறிக்கவும் உரிமை உண்டு. எனவே, என் செயல் நியாயமானது - தவறான பிரச்சாரத்தைக் கேட்டு ஏமாந்து போகாதீர். நான் எதேச்சாதிகாரமாக நடந்துகொள்ளவில்லை. கெஞ்சினேன், மிஞ்சினேன்! கை குலுக்கினேன், கடுமையாக என் தோழமையை நிராகரித்தான். எனவேதான் ஆக்டேவியசைப் பதவியிலிருந்து அகற்றினேன் என்று விளக்கமுரைத்தான்.

“நான் என் கண்ணாரக் கண்டேன், காட்சியை; ஓர் ஆசாமி, பட்டுப் பட்டாடையும் மணிமுடியும் கொண்டுவந்து டைபீரியசிடம் தந்தான்” என்று, டைபீரியசின் பக்கத்து வீட்டுக்காரனே புளுகினான்.

“செல்வர்களின் சூழ்ச்சிக்கு நான் பலியாகிவிடுவேன். உங்களுக்காக உழைத்தேன், ஊரைச் சுரண்டி வாழும் உலுத்தர்களின் சீற்றத்தினுக்கு ஆளானேன், என்னைக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டார்கள். நான் கொல்லப்பட்ட பிறகு, இதோ என் குழந்தைகளையும், குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு உம்முடையது” என்று கூறி, மக்கள்முன், தன் குழந்தைகளைக் கொண்டுவந்து டைபீரியஸ் நிறுத்தினான் - மக்கள் கசிந்துருகினர்.

அடாலஸ் என்னும் வெளிநாட்டு மன்னன் ஒருவன், இறக்கும்போது, தன் பெருஞ் செல்வத்தை ரோம் நகருக்கு அளித்தான். இதை ஏழை எளியவருக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும், அவர்கள் விவசாயக் கருவிகள் வாங்க இந்தப் பணம் தேவைப்படுகிறது.

செனட் சபையிலே, செல்வர்களே கூடிக்கொண்டு கொட்டமடிக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் தீர்ப்புகள் ஏழையருக்குக் கேடு பயப்பனவாகவே உள்ளன. ஓரவஞ்சனை நடைபெறுகிறது. எனவே செனட்சபையிலே, ஏழைகளும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப உரிமை பெறவேண்டும்.

செனட் சபையின் தீர்ப்பை மாற்றும் உரிமை மக்களுக்கு அளிக்கப்பட்ட வேண்டும்.

போரில் ஈடுபடுவதற்கு டைபீரியஸ் புகுத்த விரும்புவதாகக் கூறினான்.