அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

உடன் பிறந்தார் இருவர்
3

ஏழைகளுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளையும் கொடுமைகளையும் அகற்ற, இந்தத் திட்டங்கள் பெரிதும் பயன்படும். பாதுகாப்பும் உரிமையும் பெற்று, ஏழையர், தம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக்கொண்டு, அதன் மூலம், நாட்டின் வளத்தையும் மாண்பையும் அதிகமாக்க முடியும்.

செல்வர்களின் சீற்றம் மேலும் அதிகமாயிற்று. கொலை காரர்கள் ஏவப்பட்டனர். மக்களோ, டைபீரியசைக் காக்கக் கிளம்பினர். பலர் அவனுக்குப் பாதுகாப்பளிக்க, அவன் வீட்டைச் சுற்றிலும் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு, இரவெல்லாம் காவலிருந்தனர். ஏழைகளுக்காக உழைத்து, அவர்கள் நெஞ்சத்திலே இடம் பெற்றுவிட்ட டைபீரியசுக்கு இந்தச் சம்பவம், மாபெரும் வெற்றி எனத் தோன்றிற்று.

வாக்கெடுப்புக்கான நாள் வந்துற்றது. மக்கள் சந்தைச் சதுக்கத்தில் திரண்டனர். மாவீரன் டைபீரியஸ் வந்து சேர்ந்தான், மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

செல்வர்களும் அவர்தம் கையாட்களும் ஒருபுறம் குழுமி இருந்தனர்.

நெருக்கடியான கட்டம். டைபீரியசைத் தாக்கிக் கொல்ல, செல்வர்கள் வருவதாக ஒருவன், ‘செய்தி’ கொண்டுவந்தான். இதுகேட்ட மக்கள், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, அமளிக்குத் தயாராகிவிட்டனர். தொலைவில் இருந்த மக்களுக்கு நிலைமையை விளக்குவதற்காக, டைபீரியஸ் பேச முயன்றான். பெருங்கூச்சல்! எனவே, என்ன சொல்கிறான் என்பது புரியவில்லை. புரிய வைப்பதற்காக, டைபீரியஸ் தன் தலையைத் தொட்டுக் காட்டினான - தன்னைக் கொல்லச் செல்வர்கள் துணிந்து விட்டனர், என்பதை எடுத்துக் காட்டினான்.

ஓடோடிச் சென்றான் ஒருவன் செனட் சபைக்கு - டைபீரியஸ், மன்னன் ஆகப்போவதாக அறிவித்து விட்டான்; தன் சிரத்துக்கு மணிமுடி வேண்டும் என்று தெரிவித்துவிட்டான், நானே கண்ணால் கண்டேன் என்று கூவினான். செனட் சபையினர் சீறினர். உடனே, டைபீரியசைக் கொன்றாக வேண்டும், கிளம்புக! என்று முழக்கமிட்டான் நாசிகா எனும் கொடியோன்; ஆர அமர யோசிக்கவேண்டும் என்றனர், சிலர்; நாசிகாவோ, “பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துவிட்டது! நீங்கள் கிளம்பாவிட்டால், நான் செல்கிறேன், துரோகியை ஒழித்துக் கட்ட” என்று கொக்கரித்தான். உடன் சென்றனர் அவன் போன்ற ஆத்திரக்காரர்கள். ஏற்கெனவே செல்வர்கள் திரட்டி இருந்த கூலிப்படை திரண்டது, சந்தைச் சதுக்கத்தில் பாய்ந்தது. பயங்கரமான போர் மூண்டது. முன்னூறு பேர்களுக்குமேல், டைபீரியசின் சார்பினர் படுகொலை செய்யப்பட்டனர். பாதகர்கள், டைபீரியசையும் கொன்றுவிட்டனர்.

ஏழைகளின் நல்வாழ்வுக்காக உழைத்தவனை, அடித்துக் கொன்றனர்! ஏழைகள் வாழ வழி வகுத்துத் தந்த உத்தமனை, தன்னலமின்றி, உயர்ந்த கொள்கைக்காகப் பாடுபட்ட இலட்சிய வீரனை, மனித மிருகங்கள் தாக்கிச் சாகடித்தன!

ரோம் நாட்டிலிருந்த காட்டுமுறையை மாற்றி அமைக்க விரும்பினான்; நாட்டின் முதுகெலும்பாக உள்ள ஏழை மக்களை வாழ வைத்தால் தான் நாட்டுக்கு மாண்பு என்று நம்பினான். தன்னலம், தற்பெருமை, எதற்கும் இடந்தராமல், தளராது உழைத்துவந்த வீரனை, தன்னலக்காரர்கள், படுகொலை செய்தனர்.

செல்வரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிபவர்களை எப்படிச் சித்திரவதை செய்வோம் காணீர்! என்று கூறுவதுபோல, இலட்சியவாதிகளுக்கு எச்சரிக்கை தருவது போல, சந்தைச் சதுக்கத்திலே சழக்கர் கூடி, டைபீரியசைப் படுகொலை செய்தனர்.

கள்ளனும் காமுகனும், பிறர் பொருளைக் கொள்ளை அடித்து மாளிகை கட்டுவோனும், துரைத்தனத்துக்குத் துரோகம் இழைத்து, அதை இலஞ்சம் கொடுத்து மறைத்துவிடுவோனும், கற்பழித்தவனும் காதகனும், கனவானாகி, செனட்சபை உறுப்பினனாகி, விருது அணிந்த சீமானாகி, கொலு இருந்துவந்தான். ஏழைக்கு இதமளிக்கும் ஏற்பாடு பற்றியன்றி வேறொன்றின் மீதும் நாட்டம் கொள்ளாமல், மிரட்டலுக்கு அஞ்சாமல், தோல்வி கண்டு துவளாமல், மாளிகையின் மயக்க மொழி கேட்டு ஏமாந்துவிடாமல், உழைத்த உத்தமனைக் கொலை செய்துவிட்டனர், கொடியவர்கள்.

தங்கள் பாதுகாவலன் படுகொலை செய்யப்பட்டது கண்ட மக்கள், பதறினர்; கதறினர்; வேறென் செய்வர்? வெறிகொண்ட செல்வர் படை, துரத்தித் துரத்தித் தாக்குகிறது. எதிர்த்து நிற்கச் செய்யும் ஆற்றல் படைத்த தலைவன் இல்லை. செல்வர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளித்து வந்தவன் பிணமானான், மக்களோ நடைப்பிணமாயினர், மாளிகைகளிலே, மதுவருந்தி மகிழ்ந்தனர். ஏழைக் குடில்களிலே குலைநடுக்கம், கண்ணீர். முற்சியை முறியடித்துவிட்டோம் என்று வெற்றி பேசினர் வெறியர்; உத்தமனை இழந்துவிட்டோம் என்று விம்மிக் கிடந்தனர் எளியோர். டைபீரியஸ் கிரேக்கஸ், மறைந்தான். படுகொலைக்கு ஆளானான். வயது 36!

சோலை சுற்றியும், சொகுசுக்காரியின் மாலைக்கு அலைந்தும், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், அவனை ஒத்தவயதினர், ரோம் நகரில். டைபீரியஸ், உழைத்து, ஊராரின் நண்பனாகி, உலுத்தரின் சதியால், பிணமாகி விட்டான்.

36 வயது! வீரத்துக்கும் ஆர்வத்துக்கும் இடமளிக்கும் பொருத்தம் அமைந்த வயதினன்! கீர்த்திமிக்க குடும்பம்! தன் நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்புப் பெற்றவன். ஆனால், அவனோ, களம், செனட், காதல்கூடம் இவற்றிலே இன்பம் காணவில்லை; சந்தைச் சதுக்கத்திலே, ஏழையரிடமே, இன்பம் கண்டான். அவர்களுடைய முகத்திலே படிந்துகிடக்கும் கவலையைத் துடைக்கவேண்டும், அதுவே சிறந்த குறிக்கோள், பெறற்கரிய வெற்றி என்று எண்ணினான்; சிறந்த பணியாற்றினான். தூங்கிக்கிடந்த மக்களைத் தட்டி எழுப்பினான்; பேச வைத்தான்; போரிட நெஞ்சுரம் தந்தான்; நேர்மையாளனாக வாழ்ந்தான்; வஞ்சகர்களால் வீழ்த்தப்பட்டான்.

அறம் வீழ்ந்தது! அன்புரும் உயிரிழந்தது! ஏழைப் பங்காளன் பிணமானான்! எத்தர்கள் கொட்டமடிக்கின்றனர்; மக்கள் கதறுகின்றனர்!

அறிவும் அறமும் குழைத்து வீர உரையாக்கி, சந்தைச் சதுக்கத்திலே நின்றளித்துவந்த சிறந்த பேச்சளான், கேட்போர் உள்ளத்தைத் தன்பால் ஈர்க்கும் தகைமை வாய்ந்த பேச்சுவல்லேன், பிணமாக்கப் பட்டுவிட்டான். பேயுள்ளம் பூரிக்கிறது, தாயகம் போக்கமுடியாத கறையைப் பெறுகிறது.

கொன்றதுடன், கொடுமையாளர், திருப்தி அடையவில்லை, இழிவும் சொரிந்தனர். கண்களில் நீர் சோர, கேயஸ் கிரேக்கஸ், தன் அண்ணன் உடலை அடக்கம் செய்ய, எடுத்துச் செல்ல அனுமதி கேட்கிறான் - மறுக்கப்படுகிறது, ஆப்பிரிக்க மண்டிலத்தை ரோமுக்குக் காணிக்கையாகத் தந்த ரணகளச் சூரன், ஸ்கிபியோவின் பேரன் டைபீரியஸ். மகனின் உடலை மாதா பெற முடியவில்லை.

அண்ணன் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஏதும் செய்யமுடியாத நிலையில், கேயஸ் கிரேக்கஸ் இருந்தான். வளமற்ற மனமல்ல; நாள் வரவில்லை; பக்குவப்பட்டுக்கொண்டு வருகிறான். ரோம் நாடு, எவ்வளவு கொடியவர்களின் உறைவிடமாகிக் கிடக்கிறது என்பது, கேயசுக்கும் புரியமாலிருக்குமா! தன் அண்ணனை நினைவிற் கொண்டு வந்தாலே போதும், ரோம் அவனுக்குப் புரிந்துவிடும். வெதும்பினான், வெகுண்டான். வாலிப உள்ளம், பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே கொள்ளும். என் அண்ணனைச் சாகடித்த மாபாவியைக் கொன்று போடாமுன்னம் ஊணும் உறக்கமும் கொள்ளேன், என்று சூளுரை கூறி, வாள் எடுத்துக்கொண்டு, சந்தைச் சதுக்கத்தில் நின்றோ, மாளிகைகளில் புகுந்து மமதையாளர்களைத் தேடிப் பிடித்தோ பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் கொள்ளக்கூடிய வாலிபப் பருவம்தான். எனினும், கேயஸ், அறிவாளி. பழிதீர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் யார் மீது? நாசிகா மீதா? செச்சே! அவன் மந்தையிலே ஒருவன்!! அவன்மீதுமட்டும் வஞ்சம் தீர்த்துக்கொண்டால், பயன் என்ன? உருவத்தால் வேறு வேறு, எனினும் செல்வர் எல்லாம் உணர்ச்சியால் நாசிகாக்கள் தாமே! எனவே ஒருவனைக் கொன்று என்ன பயன்? முறையை ஒழித்தாக வேண்டும்! உலவுவது ஓர் அரவம் அல்ல; புற்றிலே பல; புற்றோ பலப்பல; அடவியிலே உள்ள புற்றுக்களோ ஏராளம்; எனவே அடவியையே அழித்தாக வேண்டும். அண்ணன் தொடுத்த அறப்போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காணவேண்டும், மாண்புமிக்க முறையிலே பழி தீர்த்துக்கொள்ளும முறை இதுதான், என்ற முடிவுக்கு வந்தான் கேயஸ். அந்தப் பெரும் பணிக்காகத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தான். வீரமும் அறிவும், நிரம்பியவன்; அண்ணன் மாண்ட சம்பவம் அறிவும், நிரம்பியவன்; அண்ணன் மாண்ட சம்பவம் கேயசுக்கு, நல்லாசான் தரும் பாடமாக அமைந்தது.

குறிக்கோளுக்காக அண்ணன் உயிரை இழந்தான் - அந்தத் தியாக உள்ளம் நமக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட வேண்டும். சந்தைச் சதுக்கத்திலே அண்ணனைக் கொன்று போட்டனர்; உடலைக் கூட ஆற்றிலே போட்டனர், இதைக் கண்டு இனி எவர்தான், ஏழைக்காகப் பரிந்து பேச முன்வருவர்! என்று எக்காளமிடுகின்றனர். அந்த எத்தர்கள். இதோ நான் இருக்கிறேன், டைபீரியசின் இளவல், அறப்போர் நடாத்துவேன், டைபீரியசின், தம்பி என்ற நிலைக்கு மாசு ஏற்பட விடமாட்டேன். அண்ணனிடம் கண்ட அதே ஆர்வம், அதே நெஞ்சு உரம், ஆற்றல், தம்பியிடம் இருக்கிறது, என்று நாடு காணவேண்டும். அதே துறையிலே நான் பணியாற்றாது போவேனாகில், நான் டைபீரியசுக்குத் துரோகமிழைத்தவனாவேன், என் குடும்பக் கீர்த்தியைக் கருக்கியவனாவேன்.

சந்தைச் சதுக்கத்திலே அவரைச் சாகடித்த போது, உயிர் பிரியுமுன், என் அண்ணன் என்னென்ன எண்ணினாரோ, அவர் மனக் கண்முன் என்னென்ன காட்சி தெரிந்ததோ! அறப்போர் - முதல் கட்டம் - முதல் பலி! இனி யார் முன்வருவார்கள்? அறப்போர் தொடர்ந்து நடைபெறுமா, அல்லது கொல்வார்களே என்று குலை நடுக்கம் பிறந்த, அனைவரும் ஒடுங்கிவிடுவார்களா? எதிர்காலத்தில் என்ன நடைபெறும்? யார், என் கொள்கையை மேற்கொண்டு, போரிடுவர்? என்றெல்லாம் எண்ணியிருப்பார்! என்னைப்பற்றி எண்ணாமலா இருந்திருப்பார்! என் தம்பி இருக்கிறான் கேயஸ், அவன் வாளா இருக்கமாட்டான். அவனிடம் ஒப்படைக்கிறேன் அறப்போர் நடாத்தும் பெரும் பொறுப்பை, என்று எண்ணியிருப்பாரா! இறந்தபடுமுன்னம் அவர் இதயத்திலே இந்த எண்ணங்கள் எழாமலா இருந்திருக்கும்? நிச்சயம் எண்ணியிருப்பார்? ஒரு கணம், நம்பிக்கைகூடப் பிறந்திருக்கும், நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கத்தான் செய்யும். நான் வேறு எதற்கு இருக்கிறேன். தம்பி! என்று அழைத்தாரோ - “தம்பி இருக்கிறான் தருக்கர்களே! என்னைக் கொன்று போட்டுவிட்டால், போர் ஓய்ந்துவிடும், வெற்றி உங்களுக்குக் கிட்டிவிடும் என்று எண்ணாதீர், ஏமாளிகளே! தம்பி இருக்கிறான், என் வேலையை அவன் தொடர்ந்து செய்து வருவான். உங்களை வீழ்த்த வீரன் இருக்கிறான் - நான் கடைசி அல்ல - நான் துவக்கம் -” என்று முழக்கமிட்டிருப்பாரோ?

கேயஸ் கிரேக்கசின் உள்ளம் இவ்வாறெல்லாம் பேசாமலிருந்திருக்க முடியுமா!

அருமைக் குமாரனைப் பறிகொடுத்த கர்னீலியாவின் மனவேதனை சொல்லுந்தரத்ததாகவா இருந்திருக்கும்? பார்த்துப் பார்த்து மகிழ்ந்துவந்த தாய்! களம்சென்றான், கீர்த்திபெற்றான் மக்களிடம் மதிப்புப் பெற்றான். நாட்டுக் களங்கத்தைத் துடைக்கும் திட்டம் வகுத்தான். சமுதாயத்திலே புதிய திட்டம் புகுத்த அருபாடுபடுகிறான். ஊரெல்லாம் புகழ்கிறது; மக்கள், மண்டிலம் வென்ற மாவீரர்களைப் போற்றுவதைவிட அவனைப் போற்றுகிறார்கள். அவன் உரை கேட்டால் மகிழ்கிறார்கள், அவனைக் கண்டால் களிப்படைகிறார்கள், அவன் சொல்லைச் சட்டமெனக் கொள்கிறார்கள். ‘காப்பாளர்’ பதவியே, புதுமதிப்புப் பெறுகிறது மகனால்! அப்படிப்பட்ட மகனை, மாபாவிகள் கொன்றுவிட்டார்கள். தாய் உள்ளம் எப்படித் தாங்கிக் கொள்ளும்! எவ்வளவு பதைத்திருப்பார்கள்! எவ்வளவு கதறி இருப்பார்கள்? பாவிகளே! பாதகர்காள்! என் பாலகனை, பழி ஏதும் நினைத்தறியாதவனை, பிறருக்காக உழைத்து வந்தவனைக் கொன்றீர்களே! நீங்கள் வாழும் நாடு வாழுமா! - என்றெல்லாம் சபித்திடத்தானே செய்வார்கள். துக்கத்தைத் துடைத்துக் கொள்ளவோ, சம்பவத்தை மறந்துவிடவோ, முடியுமா!

ஆனால் கர்னீலியா, தாங்கிக் கொண்டார்கள்! அறப்போர் நடாத்தினான் நமது அருமை மைந்தன் - அற்பர்களால் கொல்லப்பட்டான் - புறமுதுகு காட்டவில்லை - சாவுக்கு அஞ்சி, கொள்கையைவிடவில்லை - மாவீரனாகவே இறுதிவரை இருந்தான் - அவனைக் கொன்றவர்கள் அவன் பெற்ற புகழைக் கொல்ல முடியாது - அவன் வாழ்கிறான் - என் நினைவில் - ஏழையர் கண்ணீரில் - எளியோரின் பெருமூச்சில் - வரலாற்றிலே அவன் வாழ்வான் - என் மகன் சாகவில்லை - என்மகன் சாகாப் பரம்பரை! - என்றெண்ணினார்கள்.

நான் மகனை இழந்தேன் - பெரும் வேதனை தான் - ஆனால் நாடு, ஒரு நன்மகனை இழந்துவிட்டது, நாடு வேதனையில் கிடக்கிறது. ஏழையர் உலகுக்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டான், என் மகன் - அவன் கொல்லப்பட்டது, எனக்குத் தரும் துக்கத்தைப் போலவே, ஒவ்வோர் ஏழையின் உள்ளத்துக்கும் தரும். அவன் என் மகனாகப் பிறந்தான், நாட்டவரின் மகனானான்! அவன் பொருட்டுத் துக்கிக்கும் உரிமை, எனக்கு மட்டுமல்ல, நாடு முழுவதுக்குமே வந்துவிட்டது! எனவே, அவன் மறைந்ததால் நான் மட்டுமே வேதனை அடைகிறேன் என்று கூறுவதே தவறு! நாட்டுக்கே வேதனை! என் வேதனையைப் பெரிதெனக் கொள்ளல் கூடாது; தாங்கிக் கொள்வேன்! வேதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடத் தெரியாமல், டைபீரியசின் தாயார் இருக்கக்கூடாது! நான், வீரனின் தாய்! அந்த வீரன், உயிர் இழக்கவே அஞ்சவில்லை! அவன் தாய்தான் நான் என்பதைக் காட்டவாகிலும், நான் கண்ணீரை அடக்கிக் கொள்ள வேண்டும்! என் கண்ணீரைக் கண்டால், என் மகனைச் சாகடித்த செருக்குமிக்கோர், கேலியன்றோ செய்வர்! பரிதாபம் காட்டுவர் சிலர், அது, கேலியைவிடக் கொடுமையன்றோ! “பாபம்! கர்னீலியா கதறுகிறாள். என்ன நேரிடும் என்பதறியாது, குதித்தான் கூத்தாடினான் டைபீரியஸ், இறந்துபட்டான், இதோ அவன் தாயார் அழுதபடி இருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டுவர், டைபீரியசுக்குத் துரோகம் செய்வதாகும் இந்த நிலை. “என் மகன் பெரும்பேறு அடைந்தான், பேதைகளே! நான் கண்ணீர் விடமாட்டேன்” என்றல்லவா, டைபீரியசின் தாயார் கூறவேண்டும். அப்போதல்லவா அக்கிரமக்காரர்கள் அஞ்சிச் சாவர்! அவன் சாக அஞ்சவில்லை, அவன் தாயோ, அவனை இழந்ததற்கும் அஞ்சவில்லை! என்று தெரிந்துகொள்ளட்டும், செல்வர்கள்.

கர்னீலியா துக்கத்தைத் தாங்கிக்கொண்டதன் கருத்தை உணரமுடியாதவர்கள், ஆச்சரியமடைந்தனர். ஆனால் வீர உள்ளம் படைத்த அந்த மூதாட்டி, புலம்பிக்கொண்டு மூலையில் கிடக்கவில்லை, ‘ஒரு’ மாணிக்கத்தை நாடு வாழ காணிக்கையாகக் கொடுத்தேன், தெரிந்துகொள்க!” என்று நாட்டுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வாழ்ந்திருந்தாள்.

மற்றும் ஒரு மாணிக்கம் இருக்கிறது - கேயஸ்.

இவனையாவது இழக்காமலிருக்க வேண்டும், என்று எண்ணி, அவனை, அண்ணன் கொண்டிருந்த ஆபத்தான வேலையிலே இறங்காதிருக்கப் பணித்திடுவாள், என்று பலர் எண்ணினர். ஆனால் கர்னீலியா, கேயசைத் தடுக்கவில்லை. குடும்பமே, இலட்சியத்தை அணியாகக் கொண்டு விட்டது!
கேயஸ் கிரேக்கஸ், நாட்டு வழக்கப்படி, களத்திலே பணிபுரியச் சென்றான்; துவக்கமே புகழ் தருவதாக அமைந்தது.

சார்டினியா எனும் இடத்தில் நடைபெற்ற சமரில், கேயஸ் புகழ் பெற்றான் - அதனினும் அதிகமாக, செல்வாக்குப் பெற்றான்.

மாரிக்காலம், கடுங்குளிர். போதுமான உடையின்றிப் படை வீரர்கள் வாடினர். ரோம் நகரிலிருந்தோ உதவி கிடைக்கவில்லை. படைத் தலைவன் ஏதுசெய்வதென்று அறியாதிருந்தான். படைவீரர் படும் அவதிகண்டு, நமக்கென்ன என்று வாளா இருக்க மனம் இடம் தரவில்லை, கேயசுக்கு. ‘நமக்கென்ன’ என்று இருந்திருந்தால் சந்தைச் சதுக்கத்திலா இறந்திருப்பான், டைபீரியஸ். செனட்சபைச் சீமானாகவன்றோ இருந்திருப்பான் அவன் தம்பிதானே இவன்! எனவே அல்லலைத் துடைப்பது நமது கடன் என்று எண்ணினான். அண்டை அயலிடமெங்கும் சென்றான், உடைதிரட்ட, அவன் காட்டிய ஆர்வமும், கொண்ட முறையும் கண்டு, தாராளமாகப் பலரும் உதவினர், கொட்டும் குளிரினின்றும் தப்பிய போர் வீரர்கள் வாழ்த்தினர்.

கேயஸ் கிரேக்கசின் நற்குணத்தைப் பாராட்டி, வெளிநாட்டு வேந்தன், ரோம் நாட்டுப் படைக்கு, உணவு தானியம் அனுப்பி வைத்தான்.

இந்தச் ‘செய்தி’ ரோமுக்கு எட்டிற்று, சீமான்களைக் கொட்டிற்று!

நாட்டுப் படையிலே பணிபுரியும் ஓர் இளைஞன், பிறர் மனத்தைக் கவரும் பண்புடன் இருக்கிறான், அதனால் நாடு பயன் பெறுகிறது என்றால், நாட்டிலே மற்றையோர், அதிலும், வயதாலும் பதவியாலும் பெரியோர் ஆயினோர் மகிழத்தானே வேண்டும். ஆம்! என்போம் தயக்கமின்றி. அப்படி இருந்ததில்லை என்கிறது வரலாறு!! ஒருவன், செல்வாக்கு அடைகிறான் என்ற உடன் பொறாமை, பொச்சரிப்பு, அச்சம், இவையே எழுகின்றன ஆதிக்க உள்ளம் கொண்டோருக்கு. ரோம் அத்தகையோரின் கூடாராமாக இருந்தது. அதிலும் புகழ் பெறுபவன், யார்? அச்சமூட்டிய பெயர், டைபீரியஸ்! அவன் தம்பி, இவன்! இவனும், செல்வாக்குப் பெறுகிறான்! புதிய ஆபத்து!! - என்று சீமான்கள் எண்ணினர்.

கேயஸ் கிரேக்கஸ் செவிக்கு விஷயம் எட்டிற்று. எரிச்சலாயிற்று - ரோம் சென்றான், கேட்போர்க்கு விளக்கம் தரலாம் என்று.

“களத்திலே படைத் தலைவன் இருக்கிறான் - உடன் இருக்க வேண்டியவன் ஊர் திரும்பிவிட்டானே - பெருங்குற்றமல்லவா இது” என்று கண்டனர் கிளம்பிற்று; கட்டிக் கொடுத்த சோறு!

இந்தக் கண்டனம் ஓசை அளவில் போய்விட்டது. “என்மீதா கண்டனம், பெரியவர்களே! படைத்தலைவருடன் ஓராண்டு தங்கியிருந்தால் போதும், ஓய்வெடுக்கலாம் என்பது முறையாயிருக்கிறது. நானோ மூன்றாண்டுகள் ஊழியம் செய்த பிறகே ஊர் திரும்புகிறேன், இது எங்ஙனம் குற்றமாகும்? பலர் களம் சென்றனர், கொள்ளைப்பொருளுடன் வீடு திரும்பினர். நானோ பணம் கொண்டு சென்றேன், வெறுங்கையுடன் வீடு திரும்புகிறேன். மதுக்கிண்ணமும் கையுமாக மாடி வீட்டில் இருந்தவர்களெல்லாம் இப்போது, அந்தக் கோப்பைகளிலே தங்கக் கட்டிகளை நிரப்பிக் கொண்டு வந்துள்ளனர். நான் களம் சென்றேன்; கடும் போரில் ஈடுபட்டேன்; பொருளைக் கொள்ளையிடவில்லை; தாயகத்தின் புகழ் வளர்த்தேன்! இது, இந்நாளில் குற்றமா?” என்று கேயஸ் கேட்டபோது, வம்பர் வாயடைத்து நின்றனர்.

கேயஸ் கிரேக்கஸ், அண்ணன் போன்றே, பெறவேண்டிய பெரு வெற்றி, ரோம் நகரில்தான் இருக்கிறது என்ற கருத்து கொண்டவன். எனவே, மக்களுக்குத் தொண்டாற்ற முற்பட்டான். ‘காப்பாளர்’ பதவி பெறத் தேர்தலில் ஈடுபட்டான். ரோம் நகரில்மட்டுமல்ல, இத்தாலி முழுவதுமே வரவேற்றது. கேயஸ் கிரேக்கசுக்கு வாக்களிக்க, வெளி இடங்களிலிருந்து திரளான கூட்டம் வந்தது. நகரிலே அன்று இடநெருக்கடியே ஏற்பட்டதாம்!

முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் என்று முனைந்து வேலை செய்தனர் செல்வர்கள் - வெற்றி பெற்றான் கேயஸ். ஆனால், முதலிடம் கிடைக்கவில்லை, நாலாவது இடம் கிடைத்தது.
வாக்கெடுப்பிலே தான், செல்வர்களால் சூதுபுரிய முடியுமே தவிர, மக்கள் இதயத்திலே கேயஸ் இடம் பெறுவதை எங்ஙனம் தடுத்திடமுடியும்? டைபீரிசியசின் தம்பி! அவன்போன்றே ஆற்றலுள்ளவன்; ஏழைக்கு இரங்கும் பண்பினன். மக்கள் தங்கள் தலைவனைக் கண்டனர்; டைபீரியஸ் மறைந்ததால் ஏற்பட்ட பெருநஷ்டம் இனி ஈடு செய்யப்படும் என்று பெருமையுடன் பேசினர்.

“மக்கள்! எவ்வளவு பற்றும் பாசமும் காட்டுகிறார்கள். ஆனால், ஆபத்தான சமயத்தில், எவ்வளவு குழப்பமடைந்து விடுகிறார்கள். தங்களுக்காக உழைப்பவனை எப்படிப் பாராட்டு கிறார்கள். ஆனால், எத்தர்கள் ஏதேனும் கலகமூட்டினால், எவ்வளவு ஏமாந்து விடுகிறார்கள். என் அண்ணனைக் கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடினார்கள். ஆனால், அவரைக் காதகர் கொன்றபோது, விரண்டோடிவிட்டார்களே! - என்று எண்ணி கேயஸ் வருந்தினான்.

மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்குகளை நல்கினர்; காப்பாளர் ஆனான் - அண்ணனுடைய நினைவு நெஞ்சிலே வந்தது - மனம் உருகினான்.

“வெளிநாட்டார், ட்ரைப்யூனைப்பற்றி இழிவாகப் பேசியது கேட்டு வெகுண்டெழுந்து காப்பாளரின் கண்ணியத்தைக் காப்போம் என்று போரிட்டனர், மக்கள். மற்றோர் காப்பாளனுக்குச் சதுக்கத்தில் வழிவிட மறுத்தான் என்பதற்காக ஒருவனைக் கொன்று போடும்படி உத்தரவிட்டனர், மக்கள்! அத்தகைய ரோம் நகரில் அன்பர்களே! என் அண்ணன் டைபீரியஸ் கிரேக்கசை, உங்கள் காப்பாளரை’ கொடியவர்கள் கொன்றனர் - உடலை வீதியில் இழுத்துச் சென்றனர் - ஆற்றில் விட்டெறிந்தனர். உங்கள் கண்முன்னால் நடைபெற்றது, இந்தக் கொடுமை கண்டீர்கள்; என் செய்தீர்கள்!” என்று கேயஸ் கேட்டான், நெஞ்சிலே மூண்ட சோகத்தால் உந்தப்பட்டதால், என் சொல்வர்? கண்ணீர் சொரிவதன்றி வேறென்ன பதில் தரமுடியுமா?

இத்தகைய மக்களுக்காக நான் ஏன் வீணாக உழைக்க வேண்டும் என்று கேட்கவில்லை, கேயஸ் கிரேக்கஸ்.

மக்களுடைய நிலை இதுதான் என்றாலும்,அவர்களுக்கே பாடுபடுவேன் - நான் தியாகியின் தம்பி! என்று கூறுவதுபோல, ஆர்வத்துடன் பணியாற்றி வரலானான்.