அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

உடன் பிறந்தார் இருவர்
4

வெற்றிகள்மூலமாக அரசுக்குக் கிடைக்கும் பொதுநிலத்தை ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கவேண்டும்.
படைவீரர்களுக்கு உடைகளைப் பொதுச் செலவில் தயாரித்துத் தரவேண்டும்.

பதினேழு வயதாவது நிரம்பப்பெற்றால் மட்டுமே படையில் சேர அழைக்கவேண்டும்.

ரோம் மக்களுக்கு இருப்பதுபோலவே வாக்களிக்கும் உரிமை இத்தாலி மக்கள் அனைவருக்கும் அளிக்கப்படவேண்டும்.

உணவு தானிய விலையை, ஏழைகளுக்குக் குறைத்திட வேண்டும்.

செனட் சபையின் நீதிமன்ற அதிகாரத்தைக் குறைப்பதுடன், அதிலே, ஏழையர்களின் சார்பிலே உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இவை, கேயஸ் கிரேக்கஸ் தீட்டிய திட்டம். அரசிலே நீதி நிலவவேண்டும், நிர்வாகத்திலே நேர்மை இருக்கவேண்டும், சமூகத்திலே தோழமை மலரவேண்டும், பொதுநலம் எனும் மணம் கமழவேண்டும், என்ற நோக்கத்துடன், கேயஸ் கிரேக்கஸ், தன் புதுத்திட்டத்தைத் தீட்டினான். இறந்துபட்டான், இடர் ஒழிந்தது என்று எண்ணினோம்; இதோ டைபீரியஸ் மீண்டும் உலவுகிறான், கேயஸ் வடிவில்! என்று எண்ணினர் செல்வர்.

இந்த அரிய திட்டத்துக்காகப் பணியாற்றிடும் கேயசை, மக்கள், போற்றாதிருப்பரா? நமக்குப் பாதுகாவலன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.

மக்களிடம், கேயஸ் கிரேக்கஸ் மிக நெருக்கமான தொடர்பு கொண்டான்.
முன்பெல்லாம், ரோம் நகரில் பேச்சாளர்கள், செனட்சபைக் கட்டிடத்தை நோக்கித்தான் பேசுவராம் - மக்களைப் பார்த்தல்ல! கேயஸ் கிரேக்கஸ் தான் முதன்முதலாக மக்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தது!

சொல்லவேண்டியது மக்களிடமே ஒழிய செனட் சபையிடமா? என்று கேட்பது போலிருந்தது, கேயசின் புது முறை.

அரசு எவ்வழி செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலும் உரிமையும் படைத்தவர்கள், மக்களேயன்றி, சீமான்கள் கொலுவிருக்கும் செனட்சபை அல்ல, என்ற கருத்தை விளக்குவதாக அமைந்தது அந்தப் புதுமுறை.

மனுசெய்து கொள்வதாக இருந்தது முன்னைய முறை; இது மக்களைப் பரணி பாடிடச்செய்வதாக அமைந்தது.

கோரிக்கையை வெளியிடுவதல்ல கூட்டத்தின் நோக்கம், மக்களின் ஆற்றலை அரசாள்வோருக்கு அறிவிக்கும் செயலாகும், என்று தெரியலாயிற்று.

மக்களுக்குப் புதுநிலை பிறந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் நிகழ்ச்சியாயிற்று, புதுமுறை.

சொல்லில் வல்லவனான் கேயஸ் கிரேக்கஸ், செயலாற்றுவதில் சளைத்தவனல்ல. தானே முன்னின்று எல்லா வேலைகளையும் கவனிப்பான்.

பொதுப்பணிதானே, என்ற எண்ணத்தில் மற்றவர், ஏனோ தானோவென்று இருந்துவிடக்கூடும், கவைக்குதவாத முறையிலே காரியமாற்றக்கூடும், கண்மூடித்தனமாகச் செலவு செய்துவிடக்கூடும், - சிலர் வேண்டுமென்றே துரோகம் செய்யக்கூடும், பலர் அக்கநையின்றிக் காரியத்தைக் கெடுத்துவிடக்கூடும், எனவே, நாமே கவனித்து வேலைகளை முடித்தாக வேண்டும் என்ற தூய நோக்குடன், ஓயாது உழைத்தான், கேயஸ் கிரேக்கஸ்.

மக்கள், கேயஸ் கிரேக்கசை எப்போதும் காணலாம்; ஏதாவதொரு பொதுப்பணியில் ஈடுபட்டிருப்பான்.

பாதகன் செப்பனிடப்படுகின்றனவா, கேயஸ் அங்கு தான் காணப்படுவான். நிலங்களை அளவெடுக்கிறார்களா, கேயஸ் அங்குதான்! வேலை செய்வோர் சூழ, இங்குமங்கு
மாகச் சென்றபடி இருப்பான். இவ்விதம், உழைக்கும் கேயசைக் கண்டு, மக்கள் உள்ளம் பூரித்தனர்.

மக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது - காப்பாளர் பதவி கிட்டிவிட்டது - இனி நமது வாதிடும் திறமையைக் கொண்டு, மேற்பதவிகளைத் தாவிப்பிடிப்போம், என்று எண்ணும் சுயநலமிகளையும், மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி இடம் பிடித்துக்கொண்டு, காரியமானதும், மக்களை ஏறெடுத்தும் பார்க்காத எத்தர்களையும், மக்களை வாழ்த்தி வணங்கி, ‘வாக்கு’ பெற்றுக்கொண்டு, வரம் கிடைத்தான பிறகு, வறண்ட தலையரின் தயவு நமக்கு ஏன் என்று இறுமாந்து, மக்களுக்கு, அறிவுரை கூறுவதாக நடித்து அவர்களின் தன்மானத்தைத் தகர்க்கும் தருக்கர்களையும், மக்களின் ‘காப்பாளர்’ என்ற கெண்டையை வீசி, இலஞ்ச இலாவண்யம், சீமான்களின் நேசம் ஆகிய வரால்களைப்பிடிக்கும் வன்னெஞ்சர்களையும், எதிரிகளுடன் குலவும் துரோகிகளையும், பார்த்துப் பார்த்து வாடிய நெஞ்சினர் மக்கள் - அவர்கள்முன், ஏழைக்காக அல்லும் பகலும் ஆர்வத்துடன் உழைக்கும் கேயஸ் கிரேக்கஸ் உலவியபோது, மக்கள், நமது வாழ்வின் விளக்கு இந்த வீரன், என்ற வாழ்த்தாதிருக்க முடியுமா? மீண்டும் கேயசைக் காப்பாளராகத் தேர்ந்தெடுத்தனர், வலிய இந்த ‘இடம்’ தந்தனர். செல்வாக்கு இந்த அளவு செல்லக் கண்ட செல்வர்கள் கத்தி தீட்டலாயினர்!

இனிக்க இனிக்கப் பேசுகிறான் - இதைச் செய்கிறேன் அதைச் சாதிக்கிறேன் என்று தேன் சிந்துகிறான் - மக்களின் உரிமை பற்றி முழக்கமிடுகிறான் - எனவே மக்கள், அவனைப் பின்பற்றுகிறார்கள். இதைக்குலைக்க, இவனைவிடத் தீவிரமாகப் பேசும் ஆளைத் தயாரிக்க வேண்டும். இவன் குளம் வெட்டுவேன் என்றால், அவன் கடல் தோண்டுவேன் என்றுரைக்க வேண்டும்! இவன் பூமாலை தருகிறேன் என்றுரைத்தால், அவன் பூந்தோட்டமே தருகிறேன் என்று பேச வேண்டும்! இவ்விதம் ஒருவனைக் கிளப்பிவிட்டால், ஏமாளிகள் தானே மக்கள், இவனை விட்டு விடுவர், புதியவனைப் போற்றத் தொடங்குவர், இவன் செல்வாக்கு சரியும்; புதியவனோ நடிகன், நம் சொல்தாண்ட மாட்டான், பார்த்துக் கொள்வோம், என்று ஒரு தந்திரத் திட்டம் வகுத்தனர், தன்னலக்காரர். இந்தப் பாகத்தைத் திறம்பட ஏற்று நடத்த ட்ரூசஸ் என்பான் முன்வந்தான். அவனுக்கும், செனட்சபைச் சீமான்களுக்கும் ஒப்பந்தம். ஊர் அறியாது இரகசியத்தை.

ரோம் நாடு, வெற்றிபெற்று தனதாக்கிக் கொண்ட நாடுகளிலே, ஏழையர்கள் சென்று குடி ஏற இரண்டு வட்டாரங்கள் அமைப்பது என்று, கேயஸ் கிரேக்கஸ் திட்டம் கூறினான்.

“இரண்டே இரண்டு தானா! பன்னிரண்டு வேண்டும்!” என்றான், நடிப்புத் தீவிரவாதி ட்ரூசஸ்.

“ஏழைகள் பெறும் நிலத்துக்காக, அவர்கள் சிறுதொகை வரி செலுத்த வேண்டும்” என்றான் கேயஸ்.

“வரியா? ஏழைகளா! கூடாது, கூடாது! ஏழைகளுக்கு இனாமாகவே நிலம் தர வேண்டும்” என்றான் ட்ரூசஸ்.

கேயஸ் கிரேக்கசைவிட புரட்சிகரமான திட்டங்களைத் தன்னால் புகுத்த முடியும் என்று வீம்பு பேசித்திரியலானான். கேயஸ், செனட் சபையின் விரோதத்தைக் கிளறி விட்டுவிட்டான். எனவே அவன் கூறும் திட்டங்களை சென்ட் ஏற்காது - என் நிலையோ அவ்விதமல்ல, என் திட்டங்களைச் செனட்சபையும் ஏற்றக் கொள்ளும், என்று வேறு பசப்பினான்.

மக்கள் மனத்திலே, குழப்பத்தை மூட்ட இந்தப் போக்கு ஓரளவுக்குப் பயன்பட்டது.

கேயஸ் கிரேக்கஸ், மக்களுக்காக நிறைவேற்றப்படும் எந்தப் பொதுப் பணியையும் தானே முன்னின்று நடத்தி வந்தான். மக்களும் அவனது தொண்டின் மேன்மையைப் பாராட்டினார்கள் - இதையே கூட ட்ரூசஸ் திரித்துக் கூறினான் - கேயஸ் கிரேக்கஸ் எதேச்சாதிகாரி, ஒருவரையும் நம்பமாட்டான், எல்லாம் தனக்குத்தான் தெரியும், தன்னால்தான் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் கொண்டவன், ஒருவரையும் ஒழுங்காக வேலைசெய்ய விடமாட்டான், எல்லாவற்றிலும் தலையிடுவான், தற்பெருமைக்காரன், எல்லா அதிகாரமும் தன்னிடமே வந்து குவிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன், என்று தூற்றித் திரிந்தான்.

ஆப்பிரிக்காவிலே, ஒரு புது மண்டிலம் அமைக்கும் பணியாற்ற கேயஸ் கிரேக்கஸ் அங்குச் சென்றிருந்த சமயத்தில், ட்ரூசஸ், வேகமாக இந்த விபரீதப் பிரசாரத்தை நடத்தி வந்தான். எதிர்ப்பு முளைக்கும் வண்ணம் வதந்திகளைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.

கேயஸ், ரோம் நகரில் இல்லை, இவனது தவறான பேச்சுகளை, மறுத்துரைக்க. எனவே, ட்ரூசஸ் சண்டப் பிரசண்டனானான். புல்வியஸ் எனும் நண்பன், கேயசின் ஏற்பாட்டின்படி, செல்வர்களின் நிலங்களை அளவெடுத்து ஏழைகளுக்காக்கும் காரியத்தைச் செய்து வந்தான். அவன்மீது பழி சுமத்தி, வழக்குத்தொடுத்தான், வஞ்சக ட்ரூசஸ்.

இரண்டு திங்களுக்குப் பிறகு ஊர் திரும்பிய கேயஸ், தன்னை வீழ்த்த வெட்டப்பட்டிருக்கும் நச்சுப் பொய்கையைக் கண்டான்; மக்களை அழைத்தான், தன் புதுத் திட்டங்களுக்கு ஒப்பம் அளிப்பதற்காக. ரோம் நகருக்கு வெளியே இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர்; செனட் அவர்களை உடனே சென்று விடுமாறு கட்டளையிட்டது. அதைக் கவனிக்கவேண்டாம்,- நானிருக்கிறேன் அஞ்சாதீர்கள், என்று கூறினான் கேயஸ். ஆனால் அச்செனட் சபை, காலிகளை ஏவி, வெளியூர்க்காரர்களைத் தாக்கித் துரத்திற்று.

கேயஸ் கிரேக்கசின் ஆற்றல் இவ்வளவுதான்! என்று கைகொட்டிச் சிரித்து, கலகமூட்டும் பேர்வழிகள், மக்கள் மனத்தைக் கலைத்தனர். செல்வர்கள், கேயஸ் மீண்டும் ‘காப்பாளர்’ பதவிபெற முடியாதபடி, தில்லுமுல்லுச் செய்தனர்; வென்றனர்.

ஆப்டிமஸ் என்பான், கான்சல் பதவியில் அமர்ந்தான் - அவன் சீமான்களின் நண்பன். எனவே, அவன், கேயஸ்கிரேக்கஸ் புகுத்திய சட்டங்களை ரத்து செய்யமுனைந்தான்.

அரும்பாடுபட்டுக் கட்டிய அறநெறியை அக்கிரமக்காரன் அழிக்கக் கிளம்பினான். அதனைத் தடுத்திடும் ‘காப்பாளர்’ இல்லை. இரவு பகலாகச் சிந்தித்துச் சிந்தித்துச் சித்தரித்த ஓவியத்தை அழிக்கிறான், புரட்சியில் பூத்தமலரைக் கசக்கிப்போடுகிறான், தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லை. கேயஸ் ‘காப்பாளர்’ பதவியில் இல்லை. எனினும்,கேயஸ், இதைத்தடுக்கும் முயற்சியில் ஈடுபடும்படி மக்களிடம் கூறினான்; பலம் திரண்டு வந்தது. ஆத்திரமுற்ற மக்கள், அக்கிரமம் புரியத் துணிந்த கான்சலின் பணியாள் ஒருவன் பதற்றமாக நடந்து கொண்டதற்காக, அவனைக் கொன்றுவிட்டனர்; கேயஸ் இதைக் கண்டித்தான்.

செல்வர், இறந்தவனைக் காட்டி ஓலமிட்டனர். ஐயகோ! அக்கிரமத்தைக் காணீர்! படுகொலை புரிந்து விட்டனர், ஊழியனே! என்று முகத்திலறைந்து கொண்டு அழுதனர்.

சந்தைச் சதுக்கத்திலே இந்த விந்தைக் காட்சி! எந்தச் சந்தைச் சதுக்கத்திலே டைபீரியசைத் தாக்கிச் சாகடித்தனரோ, நூற்றுக்கணக்கான ஏழை எளியவரைக் கொன்று குவித்தனரோ, எந்த இடத்தில் மனித மிருகங்கள் உத்தமர்களைப் பிய்த்து எறிந்தனவோ, அதே இடத்தில், இந்த மாய்மாலம்!!

அரசுக்குப் பேராபத்து வந்துவிட்டது - இனிக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியது தான் - என்று செனட் அறிவித்துவிட்டது - சமயம் வாய்த்தது என்று கிளம்பினர், செல்வர்கள். படைக்குக் குறைவு என்ன, பணம் இருக்கும்போது! செல்வர்கள் தங்கள் முழு வசதியையும் பயன்படுத்தினர். கேயஸ் கிரேக்கஸ் பலிபீடம் செல்லவேண்டியவனாகிவிட்டான். ஏழையர் அவன் பக்கம்தான் நின்றனர். எனினும் களத்தில் வென்றார்கள், கடும் போரிட்டுப் பயிற்சி பெற்றவர்கள். இரத்தத்தை உறிஞ்சிப் பழக்கப்பட்டவர்கள், ஈரமற்ற நெஞ்சினர், சுகபோகத்தை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தால் வெறியரானவர்கள், கேயசுக்கு எதிராகக் கிளம்பினர். அரசு அவனுக்கு எதிராக! அவன் படைவரிசையிலேயோ, உழைத்து அலுத்த உத்தமர்கள்! ரோம் நகரச் சீமான்களின் முகாமில், குடி, கொண்டாட்டம், வெறிச் செயல்கள்; கேயஸ் முகாமில், உறுதி, வசதிக் குறைவு.

கேயஸ் கிரேக்கசைச் சுற்றிலும் தீயாலான வளையம் - தப்புவது இயலாத காரியம் என்றாகிவிட்டது நிலைமை.

கேயஸ் கலங்கவில்லை! அண்ணனை அடித்து ஒழித்த அதே ‘வெறி’ தன்னைப் பலிகொள்ள வருவதை உணர்ந்தான் - இது பலி தரும் நாட்கள் - வெற்றிக்கு அச்சாரம்! என்று எண்ணிக் கொண்டான்.

எவ்வளவு வேண்டுமானாலும் முழக்கமிடுவார்கள்; ஆனால் உயிருக்கு உலை வருகிறது என்று தெரிந்தால், அடங்கிவிடுவர்; இதுதான், இந்த ஏழைக்காகக் கிளம்பும் வீரர்கள் இயல்பு, என்று கனவான்கள் கேலி செய்ய விடுவானா, டைபீரியசின் இளவல்!

சிறு உடைவாளை எடுத்துச் செருகிக்கொண்டான்; சந்தைச் சதுக்கம் கிளம்பினான்.
கேயசின் துணைவி, நிலைமையை அறிந்தாள்; பதறினாள்.

“ஆருயிரே! செல்லவேண்டாம்! படுகொலை செய்யும் பாதகர்கள் உள்ள இடத்துக்குப் போகாதீர்! பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் அவர்கள்! இன்னுயிரே! களமல்ல, நீர் செல்லும் இடம். களத்திலே, வீரம் இருக்கும், வஞ்சகம் இராது. ஆற்றலைக் காட்டலாம், வெல்ல வழி உண்டு. இல்லையேல், வீரமரணம் கிட்டும். ஆனால், வெறியர்கள், எந்த வஞ்சகமும் செய்யக் கூசாதவர்கள் கூடிக் கொக்கரிக்கும் இடம், இப்போது நீர் போக விரும்பும் சந்தைச் சதுக்கம். அன்பே! அங்குச் சென்றால், உம்மைப் படுகொலை செய்துவிடுவர் - உடலைக்கூடத் தரமாட்டார்கள். ஆற்றிலல்லவா அண்ணன் உடலை வீசினார்கள். வேண்டாம், போகாதீர்!” என்று துணைவி கரைந்துருகிக் கதறுகிறாள்; மகன் அழுதுகொண்டு நிற்கிறான். கேயஸ் என்ன பதில் கூறமுடியும்? துணைவி கூறுவது அவ்வளவும் உண்மை; மறுக்கமுடியாது. ஆனால், போகாமலிருக்க முடியுமா? உயிரா, பெரிது? விழிப்புணர்ச்சி அளித்து விட்டோம். இன்று இல்லாவிட்டால் மற்றோர் நாள், வெற்றி ஏழையருக்குக் கிடைத்தே தீரும். என்னைக் கொல்வர்; எனினும், நான் உயிருடன் இருந்தபோது செய்த தொண்டுக்குச் சிகரமாக அல்லவா, அந்தச் சாவு அமையும். ஏழைக்காகப் பரிந்து பேசமட்டுமல்ல, சாகவும் தயாராகச் சிலர் முன்வந்துவிட்டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் தான்-, விடுதலை கிடைக்கும் மக்களுக்கு - என்று எண்ணினான். துணைவியின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். தரையில் புரண்டழுகிறாள், துணைவி; தளிர் வாடுகிறது; தன்னலமற்றோன், மரணத்தை நாடிச் செல்கிறான்.

அமளி! வெறியாட்டம்! படுகொலை! பயங்கர நிலைமை!

செல்வர் கரமே ஓங்குகிறது கொல்லப்படுகிறார்கள், கொடுமையை எதிர்த்தோர்.

நிலைமை கட்டுக்கு அடங்குவதாக இல்லை. கேயஸ் கிரேக்கஸ், இரத்தவெள்ளம் பெருகக் கண்டான்.

நியாயத்தைப் பெற, இவ்வளவு கடுமையான விலையா? என்று எண்ணி வாடினான்.

கயவர் கரத்தால் மாள்வதைவிட, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று துணிகிறான். நண்பர் சிலர் தடுக்கிறார்கள். இந்தப் பொல்லாத புயல் வீசுமட்டும் வேறோர் புகலிடம் தேடிக்கொள்வது நல்லது; புயலின் வேகம் தணிந்ததும், திருப்பித் தாக்குவது பயன் தரும், என்று கூறினர். கேயஸ், அமளி நடைபெறும் இடத்தைவிட்டு அகன்றான்.

வழிநெடுக, அவனை வாழ்த்துகிறார்கள். “நல்லோனே! இந்த நாசச் சுழலில் சிக்காதே! புகலிடம் செல், பதுங்கிக்கொள், காரிருள் நீங்கும், கதிரவன் என வெளிவருவாய் பிறகு” என்று கூறினர்.

கேயஸ் கிரேக்கசுக்கு, அவர்களின் அன்புகனிந்த சொல் மகிழ்வூட்டிற்று. எனினும் நிலைமையும் தெளிவாகப் புரிந்துவிட்டது. செல்வர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள்; புரட்சியைப் பொசுக்கித் தள்ளிவிட்டார்கள்; வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். இந்தக் கடும் தாக்குதலுக்குப் பிறகு, ஏழையர், உரிமைப் போர்புரியும் ஆற்றலை மீண்டும் பெறுவதென்பது இயலாத காரியம். இந்தச் சித்ரவதைக்குப் பிறகு, சீரிய முயற்சி எது எடுத்தாலும், மக்கள் ஆதரிக்க முன்வரமாட்டார்கள் என்று, எண்ணினான். துக்கம் நெஞ்சைத் துளைத்தது!

“நண்பா!” என்றழைத்தான், தன் உடன் வந்த பணியாளனை.
“என்ன ஐயனே!”

“எனக்கோர் உபகாரம் செய்”

“கட்டளையிடும், ஐயனே! காதகர்மீது பாயவா!”

“வீரம் அல்ல, நண்பனே! நான், உதவி கேட்கிறேன்.”

“மனத்தைக் குழப்புகிறீரே, ஊழியக்காரன் நான்!”

“என்னைக் கொடியவர்கள் கொல்லச் சம்மதிப்பாயா?”

“உயிர் போகும்வரை அவர்களை அழிப்பேன்! ஒரு சொட்டு இரத்தம் என் உடலில் இருக்குமட்டும் உமது பக்கம் நின்று போரிடுவேன்.”

“நன்றி! மிக்க நன்றி! என்னை அக்கொடியவர்கள் கொன்று, வெற்றி வெறி அடையவிடக்கூடாது. கடைசியில் கேயஸ் கிரேக்கஸ், எங்கள் கரத்தால் மாண்டான் என்று செருக்குமிக்கோர் பேச இடமளிக்கக்கூடாது. கடைசிவரையில் கேயஸ் கிரேக்கஸ் நம்மிடம் சிக்கவில்லை, என்று அவர்கள் கூறவேண்டும்.”

“நிச்சயமாக! அந்தக் கொடியவர் கரம், தங்கள் மீதுபட விடமாட்டேன்”

“அவர்களிடம் நான் சிறைப்படுவதும், கேவலம் இழிவு; என் குடும்பத்துக்குக் களங்கம்; நான் கொண்ட கொள்கைக்குக் கேவலம் ஏற்படும்.”

“உண்மைதான்! அந்த உலுத்தர்களிடம் உத்தமராகிய தாங்கள் சிறைப்படுவது, கூடவே கூடாது”
“ஓடிவிடவும் கூடாது! ஓடிவிட்டான் எமக்கு அஞ்சி! கோழை! என்று தூற்றுவர். சகிக்கமுடியாத அவமானம். என் தாய்க்கு நான் துரோகம் செய்தவனாவேன். மாண்டுபோன என் அண்ணன் மீது ஆணை, நான் அத்தகைய இழிவைத் தேடிக் கொள்ளமாட்டேன். ஓடக்கூடாது.”

“ஆமாம்! கோழை என்ற ஏச்சுகூடாது”

“அப்படியானால், நண்பனே! எண்ணிப் பார்! பணிதல் கூடாது, ஓடி ஒளிவது கேவலம், அவர்களால் கொல்லப்படுவதும், இழிவு...”
“ஆமாம்...”

“ஆகையால், நண்பனே! உன் கரத்தால் என்னைக் கொன்றுவிடு!”

“ஐயோ! நான் கொல்வதா! தங்கள் பொருட்டுச் சாக
வேண்டிய நான், தங்களைக் கொல்வதா!”

“இழிகுணம்படைத்த செல்வர் என்னைக் கொல்வது, சரியா, நண்பா! அவர்களிடம் என்னை ஒப்படைக்கலாமா? நண்பன் செய்யும் செயலா? வெட்டுண்ட என் சிரம், அந்தச் செருக்கர் காலடியில் கிடப்பதா? எனக்கு நீ செய்யும் ‘சேவை’ இதுவா? விசாரப்படாதே; நான், இறுதிவரையில் வீரனாகவே இருக்கவேண்டும். என் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்காதே. எடு வாளை! வீசு! நான் சாகவேண்டும், அவர்களால் சாகாமலிருக்க”

“இதென்ன கொடுமை”

“வீரன் தேடும் விடுதலை இது. யோசிக்காதே - எடு, வாளை”

“தங்களைக் கொன்ற மாபாவியாகி நான் வாழ்வதா? நான் இறந்து படுகிறேன்”

“நீயும் வீரன், சந்தேகமில்லை. இருவரும் மரணத்தை தேடிக்கொள்வோம். எத்தரிடம் சிக்கமாட்டோம். உனக்கு நான், எனக்கு நீ! எடு, வீசு! நானும், வீசுகிறேன், எடுத்தேன் வாளை”

வீரன் கேயஸ் கிரேக்கஸ், தன் உடன் வந்த பணியாள் பிலோகிராடிசுக்கு நிலைமையை விளக்கினான், உறுதியை வெளியிட்டான்.

பிலோகிராடிஸ், கேயசைக் குத்திக் கொன்றுவிட்டு, தானும் குத்திக் கொண்டு இறந்தனர்.

டைபீரியஸ் - கேயஸ் - இருசகோதரர்கள். இணையில்லா இடம் பெற்றுவிட்டனர், மக்கள் உள்ளத்தில்.

மலைப்பாம்பிடம் சிக்கி, சிக்கிய நிலையிலேயே, அதன் வலிவைப் போக்கவாவது முயற்சிப்போம் என்று துணிந்து போராடி, அந்த முயற்சியிலேயே உயிரிழந்த பரிதாபம் போன்றது, இரு சகோதரர்களின் கதை.

சீறிவரும் செல்வர்களை எதிர்த்து நின்று தாக்கினர், கொல்லப் பட்டனர், எனினும் அந்த முயற்சியின்போது பூத்த வீரமும், தியாகமும், விழிப்புணர்ச்சியும், மன எழுச்சியும், ஏழையரை வாழ்விக்கத் தயாரிக்கப்பட்ட மாமருந்து ஆயிற்று. பெருநெருப்பில் சிக்கி சிறு குழந்தையைக் காப்பாற்ற, தீச்சுழலுக்கு இடையே புகுந்து, உடல்கருகி, வெந்து சாம்பலாகும் வீரம்போல், இரு சகோதர்கள், அறப்போர் நடத்தினர். அவர்களை அழித்தனர் அக்கிரமக்காரர். எனினும், அக்கிரமத்தை எதிர்க்கும் பண்பு அழிந்து படவில்லை - வளர்ந்தது.

இரண்டு மாணிக்கங்களையும் இழந்த மூதாட்டி கர்னீலியா, தன் துக்கத்தைத் தாங்கிக் கொண்டு, வீரர் இருவர் வாழ்ந்தனர், வீழ்ந்துபடும் வரையில் கொள்கைக்காக உழைத்தனர், என் மக்கள் அவர்கள், என்று பெருமிதத்துடன் கூறிவந்த காட்சி கண்டு ஆறுதல் கூற வந்தோர்களே, அதிசயப்பட்டனர்! அம்மையின் வீர உள்ளம், அவ்விதம் அமைந்திருந்தது.

கொடுமைக்கு ஆளான அந்தத் தூயவர்களை. எண்ணி, எண்ணி, மக்கள் கசிந்துருகினர்.

கிரேக்கஸ் சகோதரர்களுக்கும் அன்னை கர்னீலியாவுக்கும், உருவச் சிலைகள் அமைத்தனர்; வீர வணக்கம் செலுத்தினர்.

ரோம் நாட்டு வரலாற்று ஏட்டிலே மட்டுமன்றி, உலக வரலாற்று ஏட்டிலேயே, உன்னதமான இடம் பெறத்தக்க பெருந்தொண்டாற்றி, தியாகிகளான, இரு சகோதர்களின் காதை இல்லாமையை ஓட்டி, பேதமற்ற சமுதாயத்தைச் சமைக்கும் பெருமுயற்சி வெற்றிபெறப் பாடுபடுபவர்களுக்கெல்லாம், உணர்ச்சி அளிக்கும் காதையாகும்.

(திராவிடநாடு - 1955)