அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் இருக்கிறதே!
1

அமைச்சர் வெங்கடராமன் துணிவு -
சம்பத்தின் கருத்துப்படி திராவிட நாடும் வடவரும். . .

தம்பி!

அவரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மந்திரி வெங்கடராமன், திராவிட நாடு கோருபவர் களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.

அவர் திராவிட நாடு பிரச்சினையை முன்வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும், அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10-இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்ட சபையில், தி. மு. க.வினருக்குத் தருவதன் மூலம், வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியி லிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மந்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா?

அப்படி வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினை பிரச்சினைமீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி, மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள தொகுதி மூன்று 331 பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மந்திரி உறுதி கூறுவாரா?

பலே! பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது வாடிக்கையல்லவோ! என்போன்றாருக்குக் கசப்புக்கூட ஏற்படு வதுண்டே அந்தப் போக்கினால். நாடு விழிப்புற்று இருக்க, வீரர் குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல்போல் இருக்க, ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற போக்கையே மேற்கொள்கிறார்? ஒரு கை பார்த்தேவிடுவோம் என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ? ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! ஆமாம் கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக் கிறாரே, அஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்று. பல முறை, என்போன்றார் சலித்துக்கொண்டதுண்டு. இது மிதவாதப் போக்காயிற்றே, நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ள வேண்டும் என்று சில வேளைகளில் கோபித்துக்கொண்டதுகூட உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் - திராவிட நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க தி. மு. க. தயார்! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச் சுடச்சுடப் பதில் அறைந்திருக்கிறீரே! இஃதன்றோ எமக்குக் களிப்பூட்டும் பேச்சு! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது இரத்தத்தில் சூடேற்ற வல்லது - நரம்புகளைப் புடைத்திடச் செய்வது - என்றெல்லாம்தானே, தம்பி! எழுச்சி பொங்கக் கூறுகிறாய், ஆமாம்! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும் உள்ளம் உனக்கு! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்க மிடுகிறாய்! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால் கொதிப்படைகிறாய். களம் காணத் துடிக்கிறாய். எனவேதான், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்! என்ற பேச்சுக் கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய், அண்ணனைப் பாராட்டுகிறாய்! புரிகிறது - ஆனால் கவலைதான் குடைகிறது. ஏன் என்கிறாயா?

வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக் கொண்டு, தேர்தல் களம் வாரீர்! இரண்டிலொன்று பார்த்து விடுவோம்!! என்று தீப்பொறி பறக்கப் பேசியது, தம்பி! நான் அல்ல! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும் தோழர் சம்பத்து!

ஆமாம், தம்பி! என்னால் ஆகுமா, அப்படி அடித்துப் பேச?

அப்படி அடித்துப் பேசத்தான் என்னால் ஆகுமா, அதே வேகத்தில், திராவிடநாடு பகற்கனவு என்று மாறிப் பேசத்தான் முடியுமா?

நான் சாமான்யன்! அசகாய சூரத்தனமாகப் பேசுவ தென்றால் எனக்கு அச்சம்! அதுபோலவே, இவ்வளவு காலம் இலட்சக்கணக்கானவர்களிடம் ஊட்டிய நம்பிக்கையை மறந்து, எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து, கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிட முடியாது! நான் மெத்தக் கூச்சப்பட்டவன்!!

திராவிடநாடு பகற்கனவு என்று இப்போது அவர் கூறுவது கேட்டு, உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ, அதேபோலத் தான், அப்போது வா ஒரு கை பார்ப்போம் என்று அறைகூவல் விடுத்தபோது, காங்கிரஸ்காரர் கோபித்துக்கொண்டனர். இப்போது திராவிடநாடு பகற்கனவு என்று அவர் கூறக் கேட்டுக் காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, "இவரல்லவா அறிவாளி! மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர்! உண்மையை உணர்ந்த மேதை!' என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களோ, அதேபோலத்தான், தேர்தல் களம் புகுந்து, "திராவிடநாடு பிரச்சினைக்கு வெற்றி காண்பேன், அறைகூவலை ஏற்றுக் கொண்டேன், அமைச்சரே! வாரும்!!' என்று அன்று அவர் அறைந்தபோது, நாம் பெருமைப்பட்டோம்; பூரித்தோம்; உச்சிமீது வைத்துக் கொண்டாடினோம்.

ஆக, இதிலே யாருக்கும் நஷ்டம் இல்லை!

ஆணித்தரமான பேச்சு! அடித்துப் பேசும் போக்கு! அஞ்சாநெஞ்சம் காட்டுவது!! - இவை கைவசம் உள்ள சரக்கு - ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது!! கொலைக் குற்றம் செய்தவனையும் தப்பவைக்க வாதத் திறமை பயன்படுகிறது! குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும் சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள். அரசியலிலுமா? என்று கேட்கிறாய்! ஆமாம். பார்க்கிறோமே!

என்றோ ஓர் நாள், என்னமோ நினைப்பில், ஏதோ, சொல்லிவிட்டேன் என்று கூறுவாரோ என்று எண்ணுகிறாய். தம்பி! இந்த அறைகூவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல!!

அமைச்சர் வெங்கடராமன் பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன் - உடனே விடக்கூடாது! அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. தோழர் சம்பத்து. அப்படியா? விடுவாரா? எடுத்தார் பேனா, தொடுத்தார் அறைகூவல். என்ன நடந்தது என்கிறாயா? அமைச்சர் அதைச் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம், அமைச்சர் வெங்கடராமனுக்கு "ஆரூடம்' தெரியுமோ என்னவோ! இவ்வளவு வீரதீரமாகப் பேசும் இந்த இளைஞர், எண்ணி மூன்றே ஆண்டுகளில், திராவிட நாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு; இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ!

தம்பி! இப்படியெல்லாம், அறைகூவல் விடுவது - அடித்துப் பேசுவது - பரணி பாடுவது - முரசொலிப்பது - போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான், மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்! இப்போது, விளங்குகிறதல்லவா, போலி அதிதீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை.

திராவிட நாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு, இல்லை - காங்கிரஸ் மணிமாடம் செல்ல. வழி விடு! வழி விடு! என்று பலரும் கூறுவர்; வரவேற்பர். பித்தம் தெளிந்த நிலை என்றல்லவா கூறிப் போற்று கின்றனர், இன்றைய அவருடைய போக்கை.

தம்பி! அமைச்சர் வெங்கடராமனே பார்க்கிறார் என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை. கண்களிலே ஒரு குறும்புப் பார்வை! உதட்டிலே ஒரு கேலிச் சிரிப்பு! உள்ளம் என்னென்ன எண்ணும்!!

"மிஸ்டர்! நம்மை ஒரு போடுபோட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில்'' என்று!! - அமைச்சர் கூறுவார். இவர்?. . .

"எனக்குத் தெரியும் மிஸ்டர், நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது.'' இதுவும் அமைச்சர். இவர்?. . .

"பகற்கனவு என்று சரியான சூடுகொடுத்தீர்கள், மிஸ்டர். நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய்.

நாங்கள் சொன்னபோது, அடே அப்பா! எப்படியெப்படிக் கண்டிப்பார்கள் - நீங்களும்தான் இலேசாகவா கண்டித்தீர்கள்!'' - இதுவும் அமைச்சர்! இவர்?. . .

தம்பி! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்டசபையில், அமைச்சர் வெங்கடராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும் போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர் வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு, தொழிலாளர் பிரச்சினையாக, அடியார் பாடிடும் அருள் தரும் பாசுரம்போலவா, தலைவர், எப்போது என்ன சொல்வார்; அதை அப்போது நமக்கு உகந்த கொள்கையெனக் கொள்வோம் என்று மக்கள் ஏற்கவேண்டும்? இதுதான், மக்களாட்சிக்கு அச்சாணியா? மாண்புள்ள செயலா? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன், தயக்கம் ஏன்? அவர்களைத் தம்வழி கொண்டு செல்லத்தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண்டிருக்கக் கூடாது? ஏகாதிபத்திய வாதிகூட அல்லவா, நான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான். அந்த அளவுக்குக் கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூணாரமாகக் கொள்ளக் கூடாது! கொண்டனரோ! முதலில் விலகல் - பிறகு விளக்கம் - அடுத்தது திட்டம் - அதற்குப் பிறகு கொள்கை!! - இப்படியா இலக்கணம். எப்படி அறிவுக்கு மதிப்பும், தன்மானத்திலே அக்கறையும் கொள்வோர், இதனை ஏற்கமுடியும்! திகைக்கிறேன், தம்பி திகைக்கிறேன்!

திடீரென, தென்னகம், தெற்கு, திராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன்? பொருளற்ற சொற்கள் இவை என்று புது வியாக்யானம் கூறுவானேன்? வடக்கு - தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள் என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்தபோது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரப்பட்டார்! அரிய பெரிய விளக்கம்தர முற்பட்டார்! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச் "சொத்தை' என்று பேசுவது? காலத்தின் கோலமா? கோபத்தின் விளைவா? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால், கொள்கைக் குழப்பமா? என்ன காரணம் இதற்கு?

தம்பி! நீயும் நானும், வடக்கு - தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, "பாரத புத்திரர்கள்' என்று சொல்வதாகும். சின்னாட்களுக்கு முன்புகூடச் சென்னை மாநகராட்சி மன்றத்திலே "பாரத புத்திரர்கள்' என்று பேசியதை ஏசல் எனக்கொண்டு, சிலர் கோபித்துக்கொண்ட செய்தி, பத்திரிகைகளில் வந்தது; கண்டிருப்பாய். அகில இந்தியா பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போதுகூட, அவர்கள் மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று பலரும் நினைத்துவிடும்படி பேசிடலாகாது என்ற முறையில், பேசி வந்தோம் - பாரத புத்திரர்கள் என்று.

துரோகிகள்

கங்காணிகள்

என்று கூறியிருக்கிறோமோ, அகில இந்தியா பேசுபவர்களை, நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து? அதையுந்தான் கேளேன்! இன்று அவருடைய அறிவாற்றலைப் பத்திபத்தியாக வெளியிடும், அகில இந்தியாக்களும் கேட்கட்டுமே!

"தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால் - பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள். அவர்கள் எங்கேயோ இருக்கிறவர் களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்க முடியும். இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல, - பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும். பரந்த எண்ணம், தத்துவரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள், - அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்!''

இந்த விளக்கத்தின்படி, துரோகிப்பட்டியலில், கங்காணிப் பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப் பாரேன்! காமராஜரும், கனம் சுப்ரமணியமும், கங்காணிகள்! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும் கங்காணிகள்! எவரெவர், இங்கு இருந்துகொண்டு, அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள் - கங்காணிகள்.

நீயும் நானும் இல்லை, அந்தப் பட்டியலில்.

பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில்.

ஆதித்தனார் இல்லை, அந்தப் பட்டியலில்.

ஆனால், வெட்டிக்கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக்கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்! எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல!!

ஆனால், காரணம் காட்டாமல், கண்மூடித்தனமாக, கற்பனையாக, வடக்கு - தெற்கு என்று அவர் பேசிக்கொண் டிருந்தாரா? இல்லை! அழகான ஆதாரங்களுடன். இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம்!! ஆனால், படித்துப் பார்க்கச் சொல், எவரையும். பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத், துணிவு பெற்றுப், பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல.

***

"தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்றும் இருந்து வருகிறது. இந்தத் தனிப்பண்பை எல்லாத் துறைகளிலும் காண முடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக்கொண்டால், தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம். . . கருநாடகத்திலும் காணலாம். . . கேரளத்திலும் காணலாம்; இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு, "திராவிடக் கலை' என்று இன்றும் பெயர் வழங்கி வருகிறது.''

"இன்று தமிழகத்தில் வளர்ந்துள்ளதுபோல, ஆந்திரத்தில் தி. மு. கிளைகள் இல்லாமலிருக்கலாம்; ஆனால் இந்த நான்கு மாநிலங்களிலும் கலையில். . . பண்பாட்டில். . . ஒருமைப் பாட்டினைக் காணலாம்.''

"இசைத்துறையை எடுத்துக்கொண்டாலும், "வடநாட்டு இசை. . . தென்னாட்டு இசை' என இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கின்றது.''

"தென்னாட்டு இசையான கருநாடக இசையில் புகழ் படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம். இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது.''

"இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் அடிப்படை.''

"தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். "வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்து கொள்கிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால், அதில் ஒரு அட்சரம்கூடத் தென்னாட்டினர் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.''

"தென்னாட்டு மொழிகளுக்குள் சிறுசிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ள முடியும். வடநாட்டைச் சேர்ந்தவர் அதைப் புரிந்துகொள்ள முடியாது.''

"இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும் வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரலாம்.''

"இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும், நமக்குக் கவலை இல்லை. இந்தத் திராவிட இனத் தனிப் பண்பை. . . உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக்கூடிய ஓர் சக்தி பிறக்க வேண்டும்.''

"தென்னக அரசியல்' என்ற தலைப்பில் நான் பேசும்போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் கருதக்கூடும். அரசியலில் உல்லாசம் பெறுபவர்கள் சிலர் சொல்வார்கள் - "தென்னாடு' - வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை'. . . என்று!

தெற்கு. . . வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல. இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு - தெற்கு பிரிந்து கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும், இன்னபிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம்.

வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். "ஏக இந்தியா' என்ற இந்தப் பரந்த நிலப்பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளால், இந்தியக் கலாச்சாரம். . . இந்தியப் பண்பாடு. . . இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது.

இந்தியா மட்டுமல்ல - ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது.

"நாம் சொல்வதை ஆந்திர - கேரள - கருநாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டில் இன்று வளர்ந்துள்ளது போல ஆந்திர - கேரள - கருநாடகத்தில் தி. மு. க வளரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன்றிருக்கிறது என்பது.''

"இன்று வடநாட்டுத் தலைவர்கள் எங்கு, எப்பொழுது பேசினாலும், அது பாராளுமன்றக் கூட்டமானாலும் - பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலைப் பற்றித்தான் பேசுகிறார்கள். "தெற்கை நாங்கள் புறக்கணிக்க வில்லை' என்று பேசுகிறார்கள்; "தமிழ் நாட்டைப் புறக்கணிக்க வில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், "மேற்கத்திய பண்பாடு, கிழக்கத்திய பண்பாடு' என்று பேசுவதில்லை. மராட்டியப் பண்பாட்டை மேற்கத்தியப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டை கிழக்கத்தியப் பண்பாடு என்றோ சொல்வதில்லை.''

"பார்லிமெண்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம், "தட்சிண பாரத்' என்றுதான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை.''

"தென்னாடு தனித்தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையில் எண்ணற்ற எண்ண மோதல்கள் - ஆசாபாசங்கள் - முரண்பாடுகள். . . ஏராளமான பேதா பேதங்கள் - அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், "தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது' என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும்.

"தென்னக அரசியல், ஏதோ தி. மு. க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை.''

"டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள், எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம்பெற்றதைக் கண்டு. அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டது. அந்தப் பாராட்டு விழாவில்கூட வடநாட்டுக்காரர்கள் பேசும்போதெல்லாம், "டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி பதவி கிடைத்ததன் விளைவாகத் தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்' என்றுதான் குறிப்பிட் டார்கள். மற்ற வடநாட்டு மாநிலத்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரிப் பதவி பெற்றால், அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டுவார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, "அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்' என்பதாகப் பாராட்ட வில்லை; "தென்னாட்டுக்காரர்' என்ற முறையிலே பாராட்டினார்கள்.''

"மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகிரெட்டி, இந்திப் பிரச்சினைபற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டுவரும் அளவுக்குப் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை.''

"தென்னக அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு, எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும், அவர்களை நான் பாராட்டுவேன்.''

"தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால், பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், "பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதான் பொருள். அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத்தானிருக்க முடியும்! இது குறுகிய புத்தியால் சொல்லுவதல்ல. . . பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில், "வடக்காவது. . . தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். . . அல்லது துரோகமிழைக் கிறார்கள் என்பதுதான் பொருள்!''