அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் இருக்கிறதே!
2

தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது - ஒப்புக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு, எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடுதத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா, நமக்கு! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் - அகில இந்தியா என்பதுதான் உண்மை, நியாயம், தேவை, சட்டம் என்கின்றனர் - அவர்களை என்னென்பது?

தெளிவற்றவர்கள், பிடிபட்டவர்கள், வாழ்வை
நாடுவோர்

என்று இப்படியெல்லாம்தான் சுற்றிவளைத்துச் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாறினில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது, தீப்பொறி! நாம்தான், எல்லோரும் இசைவு தர வேண்டும், அதற்கான முறையில் கனிவாகப் பேசவேண்டும் என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக்கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு வருவதில்லையே நமக்கு! - நல்லவேளயாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று காமராஜர் பேசுகிறார், கக்கன் பேசுகிறார், சுப்ரமணியம் பேசுகிறார், நவ இந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார், தெரியுமா, தம்பி! நம்மைவிட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள், ஆபாச நடையுடையோன் என்கிறார்கள் - அதுகேட்டு, நீ ஆயாசமடை கிறாய்; காமராஜர் போன்றோரும், அவர் கட்சி ஏடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால், அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா?

அகப்பட்டதைச் சுருட்டுபவன்!

ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராஜராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்ரமணியமாகட்டும், இதுதான், தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்!

இப்போது, "அப்போது அப்படி எல்லாம் பேசியது பாதகம் - பொறுத்தருள்வீர்!' என்றுகூடப் பேசக்கூடும். ஆனால் அதைக் கேட்பவர்கள், இப்போது பேசுவதற்கு, மீண்டும் எப்போது பொறுத்திடுக! கூறுவாரோ என்றுதான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு வந்தது, பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறதுபோலும்! இப்போது பேசுவதும் அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி இருக்க முடியும்? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர், எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப்பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா, இருந்து தொலைக்கவேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக்கொண்டிருப்பது? இப்போது, எப்படி, திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் "தேசீயம்' ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இதுவரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே ஆபத்து - என்றல்லவா மக்கள் கருதுவர் - திகில் ஏற்படும்!

தம்பி! இவர் அகில - இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப்பற்றியும் பேசியிருக்கிறார்.

"தெற்காவது வடக்காவது எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல.

சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறி வித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக்கொண்டேயிருப்பதுபோல, அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக்கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனத்திலும் ஒரு திகில் - எந்த நேரத்தில் எந்தப் பிரச்சினையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்துகொண்டே இருக்கிறது.''

தம்பி! இவை, பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11, 12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணிமொழிகள்! இப்போது, இவை யாவும், குப்பைக் கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார்!

அந்த மாநாட்டிலேதான், இன்று என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது.

"இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லியிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்.

சில இளிச்சவாயர்கள் கையில், 8 கோடி பேர்கள் திராவிடர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர் களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்.''

இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார் - பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக்கொண்டார்; அது அவருடைய விருப்பம் என்று, அவரைப் பூஜைக்குரியவராக - பொன்னான தலைவராகக் கொண்டுவிட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும், அவர் இடம் வைக்கவில்லை.

"எவர் எவர் லேபில் எப்படியெப்படி மாறினாலும் தென்னக உணர்ச்சிமட்டும் மறைந்துவிடப் போவ தில்லை.''

தம்பி! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும், உனக்கும், நம்போன்ற இலட்சக்கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும் - ஆபாச நடையினர் என்று தூற்றட்டும். கவலையில்லை. - தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை - கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரார்மீது கோபித்துக்கொண்டார் - அப்போது.

துரோகிகள்
கங்காணிகள்
இளிச்சவாயர்
தாசர் புத்தியினர்
கர்ணம் அடிப்போர்
அகப்பட்டதைச் சுருட்டுவோர்

என்று ஏசினார். இப்போது நம்மீது கோபம். நாலு வார்த்தை பேசுகிறார்! எப்படிச் சும்மா இருக்க முடியும்! சுறுசுறுப்பான சுபாவம்! விறுவிறுப்பூட்டும் வயது!!

***

"இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மையான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு இடையிலே கொஞ்சம் மங்கியிருக்கலாம்; இருந்தாலும், திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்னும் தங்கியிருக்கிறது.''

"தென்னகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாம் உதய சூரியன்போல்; நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலை யுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை விதிப்படி சில மணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய சூரியன் தோன்றியதும், ஆந்தையும் கோட்டானும் ஓடிப் பதுங்குவதுபோல, இன்று நம்மைப் பார்த்து அலறும் ஆந்தைகளும் கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான், இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக் கிறோம்.''

***

இப்படி விளக்கங்கள்!

சின்னாட்களுக்கு முன்பு, அமைச்சர் சுப்ரமணியம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு நடத்தினார். தோழர் சம்பத் அவர்கள் டில்லிப் பாராளுமன்றம் சென்றபிறகு, பண்டித நேருவின் பெருமையை அறிந்துகொண்டாராம்! இனி எப்படியோ? இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்துகொண்ட தாகவோ, பாராட்டியதாகவோ தெரியவில்லை.

"நேருவை நாங்கள் ஒரு அன்னியராகவே கருதுகிறோம்; அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்.''

"இந்த நாட்டிலே இருக்கிற கோடிக்கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்யத்தை எட்டி உதைத்துவிட்டுச், சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள்.''

பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21-1-58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான்!!

***

"நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று, "திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்கமிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள்.''

நமது கோரிக்கை, நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது! மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்!

இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன?

"இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில்கூட - எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம்கூட, சிற்சில நேரங் களில் வெற்றியைத் தேடித் தரக்கூடும்; ஆனால், உள்நாட்டில், என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணை போய்க்கொண்டிருக்காது'' என்பதை, மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

"நமது கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?''

"நாம், நமது கோரிக்கையின் நியாயத்தை, எந்த மன்றங் களிலும், எவரிடத்திலும், வாதிட்டு நிலைநாட்டத் தயாரா யிருக்கிறோம்''. . . என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லியிருக்கிறோம்.

"உலகத்திலே நீதிமான்கள் - நேர்மையாளர்கள், அறிவுலக மேதைகள் - என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள்; எங்கள் கோரிக்கை நியாயமா இல்லையா என்று கேட்போம் - என்று கூறியிருக்கிறோம்.

"அகில இந்தியா' என்று துவங்குகிற எந்த ஒரு காரிய மானாலும் சரி - அது நாடகக் கழகங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி - அல்லது "அகில இந்திய உளுத்தம் பரப்பு உடைப்போர் சங்கம்' என்றிருப்பதாயினும் சரி - அரசியல் கட்சிகளாயினும் சரி - அவைகள் வடக்கிற்கு வாழ்வும் ஏற்றமும் தரவும், தெற்கிற்குத் தேய்வும் தாழ்வும் தரவும்தான் பயன்பட முடியும்.

"அகில இந்தியா' என்ற ரீதியில் துவங்கும் எந்தப் பொருளாதார நிறுவனமாயினும், அதில் வடவர் ஆதிக்கம்தான் நிலவுகிறது.

பாங்குகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அண்ணா அவர்கள், "பணத்தோட்டம்' என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள்; அதில், வட நாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது - என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வட நாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புப் பெற்றிருப்பதினால் தான், "தெற்குலிகுமரி எங்களுக்குச் சொந்தம்' என்கிறார்கள் - தங்களின் இலாபம் கருதி - பயன் கருதி!

நாம் இந்த வடவரின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தாழ்வுறுகிறோம் - வீழ்கிறோம் - என்று புள்ளி விவரங்களைப் பிரித்துக் காட்டிக் கேட்கிறோம் - "எங்கள் நாடு எங்களுக்காக வேண்டு'மென!

நமது இந்த நியாயமான கோரிக்கையை என்ன காரணங் காட்டி, இவர்கள் "தவறு' என்று கூறுகிறார்கள்?

குறி சொல்வதைப்போல, இங்குள்ள சிலர், "திராவிட நாடாவது - கிடைப்பதாவது? இந்தியாவையாவது - பிரிப்பதாவது? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல்; அது கிடைக்காது; தரமாட்டோம்'. . . என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய் திறப்பதைக் காணோம்!''

சென்னைப் பேச்சு! அறைகூவி அழைத்திருக்கிறார் - திராவிட நாடு காட்டுக் கூச்சல் என்று பேசுவோரை!!

"மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால்கூட விளக்கம் கிடைக்கும், "திராவிட நாடு'பற்றி'' என்றும் பேசினார். அது, இது:-

***

"நாம் நமது இலட்சியத்தை மட்டும், குருட்டுத்தனமாகக் கூறிவிட்டு, அவற்றை விளக்குவதில்லை என்று எவரேனும் கருதுவார்களேயானால், அது வேண்டுமென்றே சொல்லப்படும் பழியாகும்.''

நாம், நமது இலட்சியம், கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை, வேறு எவராலும் முடியாத அளவிற்குத் தொகுத் தெடுத்துச் சொல்லியிருக்கிறோம்; சொல்லி வருகிறோம். என்றாலும், காமராஜர் "திராவிட நாடு என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை' என்கிறார்.

"திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா?' என்று இந்த மாநிலத்திலுள்ளபள்ளிகளில் மூன்றாம். . . நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால், அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள்; வேண்டு மானால், காமராஜர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும்.

தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக்கொண்டு அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாடு அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தருவாயிலிருக்கிறது; இந்த நேரத்தில் போய், காமராஜர், நம்மிடம் விளக்கம் கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது!

***

இப்படியெல்லாம் பேசினவரே, இன்று, திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்கிறார்; வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப் படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு என்ன மதிப்பு தந்தோமோ, அதேதான் இதற்கும்.

"அகிலம் சுற்றி வந்தவன் கூறுகிறேன், கேண்மின், திராவிட நாடு கனவு!'' - என்றார் பண்டித நேரு.

அகிலம் சுற்றுவது தெரியும் - எமது இன இயல்பு அறிய, எங்கெங்கோ சுற்றிப் பயன் என்ன? என்று கேட்டோம் - நேருவின் பேச்சைக் கேட்க மறுத்தோம்.

இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிற போது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதாவிலாசம், அனுபவம், வாதத்திறமை, இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம்.

நேருவாவது, துவக்க முதல், திராவிட நாடு கூடாது, கிடைக்காது என்று பேசி வருகிறார்; அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, 12 ஆண்டுகள், பேசிப் பேசித் தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்தொழிக்க என்று கூறி வந்துவிட்டுத், திடீரென்று, இப்போது, திராவிட நாடு கனவு என்கிறார். அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம்! - என்றா கூறத் தோன்றும்.

கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது - பொதுக்கூட்டங்களிலே பரணி பாடியது - பத்தி பத்தியாக எழுதியது - பார்முழுதும் பார்க்கச் சொல்லிப் பாடம் காட்டியது - எல்லாமே, கனவு! எப்போது? பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு!!

திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை - வெறும் கனவு என்கிறார்கள் சிலர்.

கனவு காண்பதென்பது ஒரு சமுதாயத்துக்கு மிக மிகத் தேவை.

இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு - இப்பொழுது உள்ள சந்திரன் வேறு. பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்துப், பூமியிலிருந்த பொருளைச் சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை "ராக்கெட்டு' எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான். அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள்.

என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய்போலிருக்கிறதே என்று என்னைக் கேட்காதே தம்பி! இது என் பேச்சு அல்ல - தோழர் சம்பத் அவர்களின் பேச்சே தான். நெடுங்காலத்துக்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 17-9-1959-ல். அன்று, என்னைப் பாராட்டிப் பேசினார் அவர்; எனக்கு வயது ஐம்பது என்பதற்காக. அப்போதுதான் திராவிட நாடு பிரச்சினையைச் சில பைத்தியக்காரர்கள் கனவு என்கிறார்களே, அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, "ராக்கட்' கண்டுபிடிப்பு வரையில் அறிவாற்றலைக் கொடுத்தது என்று விளக்கினார். விளக்கிவிட்டு, எனக்கும் சில அன்புரைகள். . .''

"அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கனவைக் காண்கிறார். அந்தக் கனவு நனவாக நாம் மனமார உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்.''

கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே, திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்? சலிப்பு! அலுப்பு! இயற்கையாக எழக் கூடியது! கட்டுப்படுத்தா விட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடிந்துவிடும்.

"சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைத்த அஸ்தி வாரத்தையே உடைத்து வேறு ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின்மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும், தமிழகமும் சேர்ந்தது திராவிட நாடு என்று முழக்கமிட்டவர்கள், இன்று, தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதை மாறி, எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள்.''

அன்று அவர் குறிப்பிட்ட, "பாதை மாறி எங்கோ அலைந்து கொண்டிருக்கும்' நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத்தக்க முறையில் ஏற்படும் என்று, அவர் எண்ணியிருந் திருக்க முடியாது. அன்று இரக்கம் கலந்த குரலில், "பாதை தவறிச் செல்கிறார்களே! அலைந்துகொண்டிருக்கிறார்களே!' என்று யாரை எண்ணிக்கொண்டு, இவர் பேசினார்? பெரியாரை! வெகுவிரைவில், தமக்கும் பாதை தவறி அலையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்!'

"பாதை புதிதாக வகுத்துக்கொண்டேன்' என்று பின்பற்றுவோர் கண்மூடிக் கிடக்கும்வரை பேசலாம். ஆனால், பெரியார் இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்து விட்டு, இன்று இவரே, அதுபோலாகிவிட்டதுடன் - அதற்கு ஒரு சமாதானமும் தேடிக்கொள்கிறாரே என்றுதான் எவரும் கூறுவர் - பரிதாபப்படுவர்! பெரியாராவது, தமிழ் நாடு போதும் என்று அளவை மட்டுமே குறித்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், துரோகிகள், அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் அர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் நாடு அகில இந்தியாவிலேயே இருக்கும் - ஆனால் பிரிந்துபோக விரும்பினால், அதற்கு உரிமை பெற்று இருக்கும் என்று பேசுகிறார் - பெரியார்போலத் திட்டவட்டமாக, வடநாட்டுப் பிடிப்புக் கூடாது என்று கூற அச்சம், கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக் கொண்டதற்கே, பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கேலி பேசினாரே, இவர் கொள்கையையே அல்லவா மாற்றிக்கொண்டார் - ஏன்? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்;

"அரசியலிலே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களில் இரண்டு "ரகம்' உண்டு. அவசரக்காரர் களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தம் கொள்கையை மாற்றிக் கொள்வது ஒரு ரகம். தம் வாழ்நாளில் பெரும் பகுதியும், தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றி கிட்டாத காரணத்தால் கொள்கையை மாற்றிக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்; வேறு சிலர் இருக்கிறார்கள் - அவர்கள் உள்ளமே அவ்வளவுதான்!''