அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் இருக்கிறதே!
3

தம்பி! திடீரென்று இப்போது, கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர் எந்த ரகம்? காளை வயது! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன் தராதது கண்டு, மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. உள்ளமே அவ்வளவுதான் - என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இடம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான் பாரேன் - புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால் - ஏன்? முன்பு அந்தக் கொள்கைக்காக எப்படியெப்படி அடித்துப் பேசினேனோ, அதுபோல் இந்தப் புதுக்கொள்கைக்கும் பேசுகிறேன் - மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா - விருப்பம்போல் உருவம் பெறச் செய்ய!!

ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க, நீங்கள் கழகத்துக்கே பயன்பட வேண்டும் என்று யோசனை கூறினாராம் - கலைத் தொடர்பு வேண்டாம் என்றாராம், கேட்கவில்லையாம் - அதுதான் கோபமாம்!

அப்படியா, தம்பி! யோசனை என்ன? புத்திமதியே கூறட்டும்; பரவாயில்லை; நான், இப்போது, கழகக் காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா? மணி மூன்று - விடியற் காலம் எழுதிக்கொண்டிருக்கிறேன்; இது முடிந்ததும், ஆங்கில ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகத் தொடர்பு எனக்கு எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்கலாமா? என்று கேட்டுப்பாரேன் - குறை கூறுவோரை. புதிய வீடு வாங்க - அலங்காரச் சாமான்கள் வாங்க - அனந்தராம தீட்சிதரின் காலட்சேபம் கேட்க - வாடகைப் பணம் முறைப்படி பெற - வழக்கு வேலைகளைக் கவனிக்க - செலவிடும் நேரம், உண்டா? எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்தில், பத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு! நான் தொடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள் - ஒன்று M.G. இராமச்சந்திரன் நடிப்பது - மற்றொன்று K.R. இராமசாமி, S.S. இராசேந்திரன், M.R.இராதா நடிப்பது; இரண்டுக்கும் நான் அல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன்; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவுதான் என் தொடர்பு; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணிநேரம்! எடுத்த படத்தைக் கூடத், தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம் - நான் சரிவரப் பார்க்கக்கூட இல்லை! இது என் தொடர்பு! இது, கழக வேலையை என்ன பாதித்துவிட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை இருந்தால், விளக்கலாமல்லவா? போகட்டும் - இவை தவிர, இனி, என்றென்றும் கலைத்தொடர்பு வேண்டாமென்று, தம்பி! உனக்குத் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு! ஏற்றுக்கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள், ஒரு படத்துக்காவது கதை எழுதுங்கள் அண்ணா! என்று என்னிடம் சொன்னவரா, நாட்டினரைப் பார்த்து, செச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே! - என்று பேசுவது.

அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம், என்றால் தம்பி! ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம் - நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு, என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரை, கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல், பணியாற்றச் சொல்லேன் - பார்ப்போம்.

இந்த அளவு கலைத்தொடர்புகூட, ஏன், எனக்கு? அதன் மூலமாக ஏதேனும், நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழி கிடைக்குமா என்ற ஆவல்தான்! கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை திரும்பிற்று என்று பேசிடக் கேட்டு, மகிழ்ந்து, நம்பி, செய்யத் தொடங்கியதுதான்.

போலி வாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வெ. கி. சம்பத் "எச்சரிக்கை' என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது.

***

"திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா சினிமா கட்சி என்று அந்த "அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றி கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம், மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.''

"இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்தியமூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றிகெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்.''

"கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டவர்கள்தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள் - விதவை, கன்னியைப் பார்த்துக் கேலி செய்வதுபோல!''

"இதையெல்லாம் தெரிந்துகொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், "அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்குக் கௌரவமான தொழில் வைத்திருப்ப வர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் தான், வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர்.''

"எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானது தான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான், காலை முதல் இரவு வரை உண்ணுவதைத்தான் தங்கள் தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழிலையும் தெரிந்துகொள்ளச் சொல்கிறார், காங்கிரஸ் காரர்களை, நேரு பண்டிதர்.''

"திராவிட முன்னேற்றக் கழகம், நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல், பொருளாதாரத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமைமிக்க ஓவியர் களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர் களையும் - இப்படி வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றவர்களையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அரசியலை மட்டும் நம்பித்தான் வாழவேண்டுமென்ற நிலையில் யாரும் இல்லை.

இலங்கைப் பிரதமராயிருக்கும் பண்டார நாயகாவும் கதைகள் எழுதுவார் - அதுவும் மர்மக் கதைகள். மர்மக் கதைகள் என்றால் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் அண்மையில் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி இலண்டனுக்குச் சென்றிருந்தபோது, வெறுங்கையோடு போகவில்லை - தாம் எழுதின 4-மர்மக் கதைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றார்; ஏன்? அங்குள்ள கம்பெனி மூலம் அவைகளைப் பிரசுரம் செய்வதற்காகத்தான். "இவர் என்ன மர்மக் கதைகள் எழுதுகிறாரே, இவர் அரசியலில் இருக்கலாமா?' என்று இலங்கையில் எந்தப் புத்திசாலியும் கேட்கவில்லை; எந்தக் காமராஜரும் கேட்கவில்லை; ஆனால், இங்கே கேட்கிறது அந்தக் குரல்!

இப்படி, சொத்தையான வாதங்களையும், உளுத்துப்போன வாதங்களையும் கூறி, நம்மை ஆபாசப்படுத்திவிட நினைக் கிறார்களே தவிர, அறிவுடனும் நீதியோடும் நேர்மையோடும் தர்க்க ரீதியாக நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் எதிர்த்துப் பேசுவார் யாரையும் காணோம்.''

அது முன்பு! என்பீரேல் இதோ, அவருடைய பாராளு மன்றப் பேச்சு!!

தணிக்கைக் குழுவைப்பற்றிப் பேசுகிறார், டில்லி பாராளு மன்றத்தில்:

"ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ப்பட உலகில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை வழக்கமாகப் படமாக்கப்பட்டு வந்த புராணம், மற்றும் இதிகாசக் கதைகளுக்கு மாறாக, நவீன காலப் பிரச்சினைகள்பற்றிய கதைகள் படமாக்கப் படும் நிலை முகிழ்த்தது.

இந்த மாற்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமது வேலைக்காரி - நல்லதம்பி - போன்ற கதைகள் மூலம் தோற்றுவித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற அமோகமான ஆதரவு, அவரது கட்சிக்கும் ஆதரவையும் வலிவையும் தேடித்தரக்கூடும் என்று சிலர் அஞ்சினர். அப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்காகவோ, என்னவோ, தணிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக் கோலைப் பதப்படுத்திக்கொண்டனர்.''

தம்பி! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு, நான், சரி, கலைத்தொடர்பு அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார் - நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக்கொள்வேன்.

எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப்படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதேகூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து, ஒரு "படம்' கூட வாங்கி, ஓட்டி, நட்டப்பட்டிருக்கிறோம்!

பெரியார், சினிமாக் கட்சி என்று கூறியபோது, இவர்தான் மிகப் பலமாகத் தாக்கினவர்.

சினிமாவை விடு! சிலம்பத்தை எடு! - என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடிஇடியெனச் சிரித்தவர் இவர்.

இவருக்குத் திடீரென்று நான் கலைத்தொடர்பு கொள்ள லாகாது என்று எப்படித் தோன்றிற்று என்பதே புரியவில்லை.

மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா, தம்பி! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று தோன்றும்; நாம் கேட்டு நடக்க வேண்டும்; இவருக்கு திராவிட நாடு கனவு என்று தோன்றும்; தமிழ் நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.

பிரிவதைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார், ஆமாம்! என்று கூறவேண்டும். திடீரென்று பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார் - அப்படியா? அதுவும் சரிதான்! என்று நாம் பின்பற்ற வேண்டும்.

சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார் - சந்தோஷம் என்று கூறவேண்டும்; திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை; நமக்குத் தொழில் வளர வேண்டும், சமதர்மம் அல்ல; - என்பார்! ஆஹா! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.

கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார்; நாடகம் ஆடிடலாம் என்பார்! ஆகட்டும் என்று ஆட வேண்டும், செ! கலைத் தொடர்பு இருக்கலாமா? அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளையிடுவார்! கீழ்ப்படிய வேண்டும்!!

அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக்கொண் டீர்கள்? அவர் ஒரு தனி ஆள் அல்ல! ஒரு ஸ்தாபனம் என்பார்! மகிழ வேண்டும்; பிறகு அண்ணா என்ன அண்ணா? அண்ணாத்துரை என்று சொல்வோம் - பூஜா மனோபாவம் வேண்டாம் - கூடாது என்பார் - உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில் அனைவரும் பேச முற்பட வேண்டும்.

அண்ணா நடையே புதுமை என்பார்; பூரிக்க வேண்டும்; செ! என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுது கிறார்களே, பேசுகிறார்களே, என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல வேண்டும்.

சட்டசபையில், தி. மு. க. சாதனைகள் பாரீர் என்பார்; மகிழ வேண்டும்; சேச்சே; அக்கறையே - இல்லையே! திறமையே - இல்லையே! என்பார். அழ வேண்டும் - பாடம் கேட்க வேண்டும்!

சிவஞானக் கிராமணியார் நடத்துவது ஒரு கட்சியா? என்று கேட்டுக் கேலி செய்வார்; கை தட்ட வேண்டும் களிப்புடன்; சுண்டைக்காய்க் கட்சி நடத்தும் சிவஞானத் தாரிடம் தி. மு. கழகத் தலைவர் போய்ப் பேசலாமா? பேசி, நமது கழகத்தின் தரத்தைக் குறைத்துக்கொள்ளலாமா? என்று கடிந்துரைப்பார்; கை பிசைந்துகொண்டு நிற்க வேண்டும்; பிறகு சிவஞானக் கிராமணியாருடன் கூடிப் பேசுவேன் என்பார்; அதுதான் முறையான "ராஜதந்திரம்'' என்று சொல்லிப் பாராட்ட வேண்டும்.

பத்திரிகை நிருபர்கள் மெத்தக் கெட்டவர்கள், அவர்களைக் கிட்டவே சேர்க்கவே கூடாது என்று சொல்வார்; ஆமாம் போட வேண்டும்; பிறகு ஓர் நாள் பத்திரிகை நிருபர்களை நண்பர்களாகக் கொள்வார். அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை என்பார்; ஆமய்யா, ஆமாம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பார். அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது, கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அணிந்த அண்ணலின் மறுபதிப்பு என்று நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்; அடுத்த சில திங்களில், அழகான மாளிகையில், அலங்காரச் சூழ்நிலையில், ஆடம்பரமான கொலு நடத்துவார்; விருந்துகள், வைபவங்கள் நடை பெறும்; இதுவா ஆடம்பர ஒழிப்பு என்ற எண்ணம் தோன்றினாலும், அடக்கிக்கொண்டு, ஒரு தலைவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பார், பாராட்ட வேண்டும்.

அவருக்கு எவ்வெப்பொழுது, எதெது சரியென்று. முறையென்று படுகிறதோ, அதை நாம் கண்டறிந்து, ஏற்று நடக்கவேண்டும். எது எப்போது அவருக்குப் பிடிக்காது என்று அறிவிக்கப்படுகிறதோ, அப்போதே, நாமும் அவைகளை ஒதுக்கிவிடவேண்டும்.

இவ்வளவையும், அவர் கூடிக் கலந்து பேசமாட்டார் - குறிப்பறிந்து நடந்துகொள்ள வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்குமேல் உறுப்பினராக இருந்தாலொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார் - ஆமாமாம்! என்றுரைக்க வேண்டும் - அடுத்தமுறை, ஐந்தாண்டு வேண்டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார் - ஆமாம்! ஐந்தாண்டு அதிகம் - மூன்று ஆண்டுகளே போதும் என்றுரைக்க வேண்டும்.

கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என்பார் - விலக்கி வைக்கிறோம் என்று கூறவேண்டும் - அடடா! ரொம்ப நல்லவர்! நிரம்பத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரீட்சைக்கும் தயாராக இருப்பவர் - என்பார் - ஆமாம்! என்று சொல்ல வேண்டும்.

நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாகாது என்பார் - ஆமாம்! மதிக்கத்தான் கூடாது என்றுரைக்க வேண்டும். கழகத் தொடர்பு இருந்தாலென்ன இல்லாது போனால் என்ன? கலைஞனை அவனுடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டும் என்பார் - பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும்.

தம்பி! இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்தது. நான் எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் - என் சொந்த விருப்பு வெறுப்புப்பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து.

ஆனால், திராவிட நாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கலாம், சமதர்மம்கூட வேண்டாம் என்பதற்குமா, நான் சம்மதிக்க முடியும்!

கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட்டி னாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும் பொறுத்துக்கொண்டேன்! ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்? - நேர்மையில் நாட்டம் கொண்ட எவர்தான் இணங்க முடியும்?

அப்போது அப்படிச் சொன்னேன்; அதைக் கேட்டு என் பின்னால் வந்தாயல்லவா? இப்போது வேறு ஒன்று; முற்றிலும் மாறானது சொல்கிறேன்; பின்பற்ற வேண்டியதுதானே? யோசனை என்ன? கேள்வி என்ன? - என்றா பேசுவது.

முன்பு சொன்ன சொல்லை மறந்தவர்களைச் சும்மாவா விட்டுவைத்தார் இவர்.

திருச்சி மாநில மாநாடு நினைவிற்கு வருகிறதா? பண்டித நேரு, இவர் நாவில் சிக்கிப் பட்டபாடு தெரியுமல்லவா? எதற்கு? முன்பு அப்படிப் பேசினாயே, இப்போது இப்படிப் பேசுகிறாயே, ஏன் இந்த முரண்பாடு! நீயும் ஒரு தலைவனா! - என்று கேட்டாரே!

1945-ம் வருட நேருவே! 1956-ம் வருட நேருவுக்குப் புத்தி புகட்ட வாராயோ? - என்று பேசினார்; கொள்கைக் குழப்பவாதிகளுக்குத் தெளிவுரை தந்தார்.

***

"இன்று நம்மை மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக் கிறவர், நமது கொள்கைகளுக்கு நேர் எதிரிடையாகப் பயமுறுத்தல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்று சொன்னால், பிரதமர் நேரு ஆவார். அவர் பதவிக்கு வந்தபின் - அந்தப் பதவி நிலைத்தபின், "தன் ஆயுட்காலம் வரை தானே இந்த நாட்டு அரசியல் ஆதிபத்தியத்தில் அமர முடியும்; தனக்கு அடுத்தாற்போல் திரும்பிப் பார்த்தால் எறும்புக் கூட்டங் களும், கரையான் கூட்டங்களும்தான் இருக்கின்றன; வாழுகின்ற வரையில் நம்மைவிட்டால் அவர்களுக்கு வேறு கதி இல்லை' - என்ற கருத்து அவர் உள்ளத்திலே ஊற ஊற, அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பயங்கரமாகவும், 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீரநடை போட்டுக்கொண்டு வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும், அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக்கின்றன.''

"ஆந்திர மாநிலம் வேண்டும்'' - என்ற கிளர்ச்சி நடைபெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்? "முடியாது, முடியாது; யார் அவன் - ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட அப்படி யாரேனும் இருக்கிறார்களா' என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அந்நிலையில். பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்; "அவருடைய நிலை கவலைக்கிடமாயிருக்கிறது' என்ற செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார் - "ஆயிரம் பொட்டி சீராமுலுக்கள் பிணமானாலும் - உயிர் துறந்தாலும், நான் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டுமென்ற கருத்துக் காட்டுமிராண்டித் தனமானது' என்று குறிப்பிட்டார்.

"ஆனால், பழைய பண்டித நேரு 1945-ல் இருந்த நேரு, என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார் - "தனித்தனி மாகாணங்கள் வேண்டுமென்று மட்டுமல்ல; தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை, தனி அரசாக வாழவேண்டுமென்று விரும்பினாலும் வாழலாம்; அதைக் காங்கிரஸ் தடுக்காது - நானிருக்கிற வரையில் தடுக்க விடமாட்டேன்' என்று. அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது, இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.''

"காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்தது அந்தப் பேச்சு; அங்கே இருக்கிற - நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர் கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? தனித்தனி அந்த அந்த தேசீய இனங்கள், தனித்தனி அரசை நிறுவிக்கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்'' - என்றுதான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

அதைக் கேட்ட நேரு, சீறி எழுந்தார்; "அளிக்க வேண்டும் என்று கோருவதிலேயிருந்து, நாங்கள் ஏதோ அதை மறுப்பதைப் போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிற வர்கள்; தனி அரசு மட்டுமல்ல - அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு "குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டுமென்று விரும்பினாலும், அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது' - என்று பண்டித நேரு பேசினார்.