அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் இருக்கிறதே!
4

அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன். ஏனென்றால், அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக்கொண்டவர்களைப்போலவும், நாம் ஏதோ "தத்து பித்து' என்று, உணர்ச்சி வேகத்தில், கேட்கக் கூடாதவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் "தப்பிலி'களைப் போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதாக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன். நேரு பேசுகிறார், கேளுங்கள்.

"இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், "வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும் "பிரிந்துதான் செல்லுவோம்' என்று சொன்னால், கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்.''

இது பண்டித நேரு பேசியது - 1945-ல் ஆகஸ்டு 2ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார்.

"காங்கிரஸ் ஏற்கனவே தனித்தனி தேசீய இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது'' - கோபத்தோடு இப்படிப் பேசினாராம், நேரு! ஏன்?

"ஷேக் அப்துல்லா, ஏற்றுக்கொள்ள வேண்டும் ஐயனே!'' என்று சந்தேகத்தோடு கேட்டார்; "வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம்தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோமே! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்' என்று பண்டிதர் நினைத்துக் கூறியிருக்கிறார் அப்படி!

"முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா மிகமிகப் புத்திசாலி! ஆனால், பண்டிதரது பதிலைக் கேட்டதும், சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக் அப்துல்லா, உலகத்திலே இருக்கிற "விடுதலைவிரும்பி'களின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான், அவர், காலவரையின்றிக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார், ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!

"பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட "யூனிட்' - பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம்'' என்று பேசியது 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார் - உன்னுடைய "துரோகி' 1956-வது வருடத்திய நேரு உன்னை மறுக்கிறார்!

"முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவுச் சக்திகளே! பிரிவினை மனங்கொண்டோரே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து, உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது'' என்று பேசுகிறார், 1956வது வருடத்திய நேரு!

"பிரிந்துவிட்ட - சுயநிர்ணய உரிமை பெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்துபோகவேண்டு மென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டுமென்று கர்ஜித்த நேருவே! இதோ பம்பாயை மராட்டியர்கள் வேண்டு மென்று கேட்கிறார்கள்! மராட்டியர்களே பெரும் பகுதியினராக வாழும் பெரும் நகராம் பம்பாய் மராட்டியருக்கே வேண்டு மென்ற கோரிக்கைக்கு, உமது பதில் என்ன?''

"முடியாது; டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்'' என்பதுதானே!

"யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?'' - என்று மாரட்டியர் கேட்கிறார்கள். "நான்தான்; நானேதான்!'' - என்று பதில் சொல்லுகிறார் நேரு!

"நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?'' என்று நாங்கள் கோருகிறோம்.

"மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப்போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி இராசாக்களைப்போல், ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்திபுகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?'' - என்றுதான் நாம் கேட்கிறோம்!

"தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழு கிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும்'' என்று நாம் கோருகிறோம்.

"தமிழர்கள் வாழுவதனாலேயே, அப்பகுதிகள் தமிழகத் துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம், அல்லது செத்து ஒழியலாம்'' என்று ஒருவர் பேசுகிறார்.

"1945 வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா? - என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.''

***

இதே பாணியில், தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், "தம்பி' என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே! 8-4-1961-ல்தான், முதன் முதலாக, "அவர்' என்று அழைத்துப் பேசினேன் - ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால் கோபம் கொப்பளிக்குமே என்று. நான், "அவர்' என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி? அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று, பண்பு கெடாமல் அழைக்கலானார்.

சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று கூறுகிறாய். உள் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி!

"திராவிட நாடுபற்றி முன்பு தவறான கருத்துக் கொண்டிருந்தேன் - அதே கருத்து இப்போதும் இருக்க வேண்டுமா? - என்று கேட்கிறார், மாறியவர். ஆனால், அவரேதான், நேருவை நையப்புடைத்தார் - சொல்லால் எவ்வளவு அழுத்தந் திருத்தமாகப் பேசினார்! என்ன, கிரேதாயுகத்திலா பேசினார்? முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்து விட்டார் என்பதற்கு 1945-ல் பேசினார்! இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கை நொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து, முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா? இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல்.''

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு, இந்தப் பலத்த தாக்குதல் மாறிப் பேசலாம் - ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள், ஒரு கை நொடிப்பொழுது என்கிறார்.

இவர்! தம்பி! பத்து நாட்கள்கூடப் பொறுத்துக்கொள்ள வில்லை. 7-4-61-ல் தி. மு. க. வரலாற்று வெளியீட்டு விழா! 9-4-61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதைவிட்டு விலகி விடுகிறேன் என்று அறிக்கை! இவர்தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவைப் பிய்த்து எறிந்தவர். 9-4-61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார் - 19-4-61-ல் புதுக் கட்சி! அதிலே, திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!! பிரிவினை கிடையாது! தமிழ்நாடு, பாரதப் பிணைப்பில்!

பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப்பொழுது என்றவர்தான், பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் தரவேண்டும்!

இவர், பழைய நேருவை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்திகூறச் சொன்னார். நாம்?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு, நான் தந்திருப்பது.

தம்பி! அப்போது அவர், கழகத்தைவிட்டு வெளியேற்றப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது. அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசிய பேச்சு - ரீங்காரமல்லவா, அது!

அண்ணனை நான் இழந்துவிடுவேன் என்றோ, இழந்துவிட வேண்டும் என்றோ, எவனாவது கருதினால், மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்றுதான் கூற இயலும்.

ஐந்தே ஆண்டுகள்? கழகத்தைவிட்டு விலகி எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டு 12 ஆகிறது - அவருடன் இருந்தபோது அழைத்ததுபோலத்தான், இன்றும் பெரியார் என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும் போது எப்போதும்போல், அவர், "ஐயா!''வாகத்தான் இருக்கிறார்.

ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர் களாக இருப்பார்கள்; தலைவர் ஆனபிறகு, அண்ணனாவது மண்ணாவது - தோழர் அண்ணாத்துரைதான்!!

போகட்டும் - புதுப் பெருமை கிடைக்கட்டும் - நட்டம் என்ன எனக்கு? நான் கூறவந்தது. எவ்வளவு மின்சார வேக மாறுதல் என்பதை, தம்பி! நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

"அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக்கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால் எனக்கு ஒரே ஒரு அண்ணன் தான் உண்டு!''

ஆண்டுகள் ஐந்து - அரை கைநொடிப்பொழுது - அண்ண னாவது ஒண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி!

நமது கழகத்தில் இருந்து விலகிப் புதுக்கட்சி அமைப்பது மட்டும் அல்ல - புதுக்கட்சியின் வளர்ச்சிகூடப் பிறகு; முதலில் தி. மு. கழகத்தை அழிக்கவேண்டுமாம்! ஏனெனில், இவர் வெளியேறிவிட்டாரல்லவா, அதனால்.

இது இவருடைய இப்போதைய எண்ணம். ஆனால், அன்று, 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில், சொன்னது என்ன தெரியுமா, தம்பி! "தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், நான் கூறுகிறேன் - எவருடைய இழப்பினாலேயும் தி. மு. கழகம் பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு, பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்துபோய்விடக் கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல.''

ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழகவளர்ச்சி கண்டே, இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்போது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்துவிடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு கிடைக்காது என்றாவது பேசுவானா?

"தாசிகள்பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம் - தாசி - ஒருவனிடத்தில், பணம் இருக்கும்வரையில்தான், என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லாவிட்டால் நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும். . . .

நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர் - தாசிபோல.

எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது.''

"அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே, எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக் கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாசநடை என்கிறார்கள்'' என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது! பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.

அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்!

இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர்,

துரோகிகள்
கங்காணிகள்
இளிச்சவாயர்
அகப்பட்டதைச் சுருட்டுபவர்

என்று பேசினவரேதான், இன்று திராவிட நாடு கனவு என்கிறார்!

அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பி! அவரையும் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்டவர் களால், தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பதும் விளங்கும்.

தம்பி! இவ்வளவும் நான் எடுத்து எழுதுவது, விலகியவரின் போக்கிலே ஏற்பட்டுவிட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டுவரும்போது, வேதனை பீறிட்டு எழுகிறதே தவிர, பரிகாசம் செய்திடத் தோன்றவில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ்செல்வம், இவ்வளவு கருத்துரைகளைத் தந்தவர், காலக்கோளாறால், இன்று சாய்ந்துகொள்கிறார் என்றால், நாம் கோபிக்கக் கூடாது என்பதற்காகவுந்தான்.

கேட்போரைச் சொக்க வைக்கும் இசைவாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காது குடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர்மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும்படியாக அவர் இருமும்போதுகூட, அவர் நன்றாக இருந்தபோது பாடிய பண்ணின் இனிமையை, எண்ணிக்கொள் கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன். அதுபோலத்தான் இது.

ஆகவே தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே! கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து, மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக்கொண்டு, கடலிடை சென்று ஒளிந்துவிட இயலாது. அதுபோலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை - போய்விட முடியாது - முத்து நம்மிடம் - சிப்பி இடம் மாறிவிட்டிருக்கலாம் - அவ்வளவே.

தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே!

தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக்கொள்.

தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக்கொள்ளவில்லையா? அவர்களைவிட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக, தோழமை இருந்த காரணமாக! எனவே ஏசட்டும். எரிச்ச லூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல் கேட்டும், மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனைவிட, வலிவூட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள்.

மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும். புதுக்கட்சியார் பேசும்போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு; நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக்கொண்டு பேசுகிறார் - மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதேகூட அல்லவா, நமக்குப் புரிகிறது. புரியும்போது, புன்னகை வருமே தவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்!

ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல்கொண்ட மக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில், கலாம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன்; அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன்.

ஒன்று சொல்லுவேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கைவிடச் சிறந்த பண்பு வேறு இல்லை.

நமக்கு, நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை. ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்?

கொள்கைப்பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகிவிடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!

இல்லையே - அது நமது குருதியில் கலந்துவிட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா ஒழித்துவிட முடியும்? கண்டித்து விடுவதனாலா அழித்துவிட முடியும்?

நேரு வீசாத கண்டனமா? கேலிக் கணையா? இனி ஒருவர் வீசப் போகிறார்கள்!

என்ன செய்தோம் அவர் உரை கேட்டு? ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம். நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேருவுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள்.

நமது கொள்கைகளை மறுப்போரின் பேச்சைக் கேட்டு, மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக்குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை நாட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியாயத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையும், வாய்ப்பும் நமக்கு இருக்கும்போது, நாம் ஏன் பதறவேண்டும்? - பேசுவோர்மீது ஏன் ஆத்திரப்பட வேண்டும்? - கலகம் விளையும் நிலை ஏன் பிறக்க வேண்டும்?

வேண்டாம், தம்பி! வேண்டாம். நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுதுபடாதபடி நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், எவர் நமது கொள்கைகளை, கழகத்தவரை, மனம்போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை - அமைதியான மனநிலை, நமக்கு ஏற்பட்டாக வேண்டும், தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை, நினைவினில் இருக்கட்டும்.

புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள், தி. மு. கழகத்தில் இருக்கிறார்கள் - இது போனவர் சொன்னது. இதனை மறவாதே!

என்னைப் பொறுத்தவரையில், இதனைக் கூறுவேன் - என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படாதே; நான் கவலைப்படவில்லை. எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும்போது.

பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும்போதுகூட, அவர்களைப்பற்றிக் கடிந்துரைக்காதே - எனக்கு நிச்சயமாக அது பிடிக்காதது என்பது மட்டுமல்ல - கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ - அது நமது பண்பு எனக் கொள்ளவேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவதுபற்றிக் கோபம் வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி இருக்கிறேன்; என்ன செய்வது, தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!!

அண்ணன்,

30-4-61