அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'இந்தியர்' ஆகின்றனர்! (2)
1

திராவிட நாடு -
கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு -
வினோபாவுடன் உரையாடல் -
கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும்

தம்பி!

"இந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காண வில்லை'' என்று - பீவர்லி நிக்கலாஸ் என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் - உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், "பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். . .'' - என்று தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை'' என்று எழுதிய பீவர்லி நிக்கலாஸ், படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில்,

இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்

என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் - ஒரு பெரிய இயக்கத்தவர் பேசிடவே, பல்லைக் கடித்துக்கொண்டு, கேட்டுக்கொள்ள வேண்டி நேரிட்டது - தடுத்திட இயலவில்லை.

"இந்தியா சென்றேன், இந்தியரைக் காணவில்லை'' என்று பீவர்லி நிக்கலாஸ் சொன்னதே பரவாயில்லை போலிருக்கிறதே, நம் கண் எதிரில் எழுந்து நின்று, நம் காதுபட, நாம் இவ்வளவு வலிவுடன் இருக்கும் நாட்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தவரொருவர்.

இந்தியா ஒரு நாடு அல்ல

என்றல்லவா, கூறுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டி நேரிட்டு விட்டது. தவமாய்த் தவமிருந்து நாம் சுயராஜ்யம் பெற்றதும், தரணிபுகழ் எமது தலைவருக்கு என்று முழக்கிக்கொள்வதும், இதைத் தடுக்க முடியவில்லையே! - என்றெல்லாம், பாராளு மன்றத்தில் அமர்ந்திருந்த "பாரத புத்திரர்'கள் எண்ணி ஏங்கி இருந்திருப்பார்கள். நாம், தலை நிமிர்ந்து நடந்தோம். பட்ட கஷ்டமத்தனையையும் மறந்தோம். இது போதும் போ! இவ்வளவு கஷ்டப்பட்டுச் சட்டசபைகளுக்குச் சென்று, எதை வாரிக் கட்டிக்கொள்ளப் போகிறார்கள் - என்று பலரும் கேட்டனர்; ஏளனம் செய்தனர்; பண்டிதரும் பிறரும் வீற்றிருக்கும் மாமன்றத்தில் நின்று, இந்தியா ஒரு நாடு அல்ல என்று கூறியாகி விட்டதல்லவா! இந்த ஒரு நிகழ்ச்சி போதும், நமக்கு எழுச்சியூட்ட என்று எண்ணி மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம், பாராட்டினோம், வாழ்த்தினோம்.

இன்று? அன்று அவ்வளவு அகமகிழ்ந்த நாம், இன்று என்ன காண்கிறோம்?

திராவிட நாடு என்பது கற்பனை

திராவிட நாடு என்பது கனவு

இந்தியாவுடன் இணைந்து வாழலாம்

வடநாடு நரகலோகமல்ல

வடவர் யமகிங்கரருமல்லர்

என்று, "இந்தியா ஒரு நாடு அல்ல' என்று முழக்கமிட்டவரே, பேசிடக் காண்கிறோம். எந்தக் கஷ்டம் வந்தாலும் வரலாம், தாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஒரு நெஞ்சு நோக வைத்திடும் கஷ்டம் மட்டும் எவருக்கும் வரக்கூடாதப்பா என்று பலரும் கூறிக் குமுறுகின்றனர்.

எங்கெங்கோ தேடினோம்! ஏதேதோ ஆதாரங்களைக் கண்டறிய அலைந்தோம்! என்னென்னவோ இனிப்பூட்டும் பேச்சுப் பேசிப் பார்த்தோம்! நெரித்த புருவம் காட்டினோம் - கனலைக் கக்கினோம்! என்ன செய்தாலும், இந்தியா என்பதை இந்திய அரசு என்பதை, இந்தியர் என்பதை ஏற்கமறுத்து, என் இனம்! என் மொழி! என் நாடு! என்று பேசிக்கொண்டிருக் கிறார்களே! அடக்கி அழிப்போம் என்றாலோ, அடக்குமுறை வீசவீச, இவர்களின் எழுச்சி ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும் போல் தெரிகிறதே; கவனிக்காததுபோல இருந்துவிடுவோம், நமது அலட்சியத்தாலேயே சாகடித்துவிடுவோம் என்று நினைத்தாலோ, அவர்களின் கொள்கை, உரம்பெற்று வருகிறது, பரவி வருகிறது; என்ன செய்வதென்றே புரியவில்லையே! - என்று பாரத அரசின் பாதுகாவலர் பதறிக் கிடந்தனர் - இன்று பல்லெல்லாம் வெளியே காட்டி, "குபீர்' சிரிப்பு என்பார்களே அப்படிச் சிரிக்கிறார்கள் - "அட இழவே! இந்தச் சூட்சமம் தெரியாமல், இத்தனைகாலம் மெத்தக் கஷ்டப்பட்டு வந்தோமே. இடுப்பில் சாவிக் கொத்து இருப்பது தெரியாமல், எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது? என்று எல்லா இடமும் தேடிப் பார்த்து அலுத்துப்போனோமே! திராவிடர் என்று மார்தட்டிப் பேசிக்கொண்டு வருபவர்கள் முகாமிலேயே, திராவிடர் என்ற பேச்சை மறுக்க, உணர்ச்சியை அழிக்க, திட்டத்தைத் தாக்க, அமைப்பை உடைக்க "ஒருவர்' கிடைக்கிறாரே! நாம்தான், இதை முன்னதாக அறிந்துகொள்ளாது போனோம். மந்தமதி நமக்கு, இவ்வளவு சொந்தமுடன், வீராவேசமுடன், திராவிட நாடு திராவிடர் என்றெல்லாம் பேசுகிறாரே, மற்றவர்களெல்லாம் மறந்துவிட்டாலும், இவர் இந்த இலட்சியத்தை மறக்கமாட்டார் போலிருக்கிறதே; மற்றவர்கள் மார்தட்டிப் பேசுகிறார்கள், இவரோ, நம் மண்டையில் அடித்தன்றோ ஏசுகிறார். மற்றவர்கள், வாதாடுகிறார்கள்; இவரோ போராடுகிறார்! மற்றவர்கள், மாண்புமிக்கவரே! மரபு அறிந்தோரே! என்று நம்மிடம் கனிவாகப் பேசுகிறார்கள்; இவரோ, மரமண்டைகளே! மமதை மிக்கோரே! என்று அடித்துப் பேசுகிறாரே. திராவிடர், திராவிட நாடு, திராவிட அரசு என்பதை இவர் எக்காலத்திலும் விடமாட்டார்; எல்லோரும் ஓய்ந்தாலும் இவர் ஓயமாட்டார்; பலர் சாய்ந்தாலும், இவர் நிமிர்ந்து நிற்பார்! இவர் பேச்சிலே, இடியும் மின்னலும் இருக்கிறது! கண்களோ வீரத்தையும் உறுதியையும் உமிழ்கின்றன! புயலெனச் சுற்றுகிறார் - போர்க்குரல் எழுப்புகிறார்! அம்மட்டோ! மற்றவர்கள், திராவிட நாடு பெறவேண்டியதற்கான காரணங்களை விளக்குகிறார்கள்; இவரோ காரணம் கூறும் கட்டம் தீர்ந்துவிட்டது; களம் புக வாரீர் - என்று கட்டளை பிறப்பிக்கிறார். ஏதேது, இன்னும் சில ஆண்டுகளில், மற்றவர் களின் மந்தத்தனத்தைப் போக்கி, மாபெரும் கிளர்ச்சி நடாத்தி, இரத்த ஆற்றிலே நீந்தியும், பிணமலைகளைத் தாண்டியுமேனும், திராவிட நாடு பெற்றுவிடுவார்போலிருக்கிறதே, இந்த மாவீரன் - இத்தகைய வீரம் கொப்பளிக்கும், "தலைவன்' தோன்றியான பிறகு, இனித் திராவிடத்தை அடக்கி ஆள எங்ஙனம் இயலும் - இந்த மாவீரர் போன்றார், மனம் தளருவதோ, கொண்ட கொள்கையை விட்டுவிடுவதோ, நடக்கக்கூடிய காரியமா! குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும், இவர் போன்றார், கொள்கையை மாற்றிக்கொள்வதேது! பொன் காட்டி மயக்க முடியுமா! பொறிபறக்கும் கண்ணினர், நாம் காட்டும் எதைக் கண்டுதான் மயக்கமுறப் போகிறார் - என்றெல்லாம் எண்ணிக் கிடந்தோம், "ஏமாளிபோல, இதோ, ஒரே நொடியிலே, கோலத்தை மாற்றிக்கொண்டு, "இந்தியர்' ஆகிக் காட்டுகிறார்; முழக்கத்தை மாற்றிக்கொண்டு முன்பு இருந்த இடத்தைத் தாக்குகிறார்; பொறி பறக்கிறது இப்போதும்; ஆனால் நம்மை நோக்கி அல்ல; திராவிடமாவது அரசாவது என்று கேட்கிறார்; எவனாக இருந்தாலும், என்னிடம் என்ன செய்ய இயலும்? அறிவாயுதம் கொண்டு அழித்துவிடுவேன் என்று பேசுகிறார்! எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது, இவர் பேச்சு! இவர் இப்படிப் பேசவல்லவர் என்று அறிந்துகொள்ள முடியாமலே போயிற்றே நம்மால்! தூக்கிவைத்துக்கொண்டு ஆடினார் திராவிடத்தை; இப்போது தூர வீசி எறிகிறார்!

திறமை என்றால் இஃதல்லவா, திறமை. "நேர்மை நேர்மை' என்று நோஞ்சான்கள் பேசுகின்றன! வீரம் என்றால், இப்படி இருக்க வேண்டும்!

"ஆமாம் அப்படித்தான்! இப்போது அப்படித்தான்! முன்பு திராவிடம் என்று பேசினேனே'' என்று கேட்கிறீர்களா? ஆமாம், பேசினேன் - அப்போது - என் இஷ்டம் - இப்போது இப்படி! அதனால் என்ன? என் இஷ்டம்!!

அப்போதுபோலவே இப்போதும், என் பேச்சிலே வீரம் கொப்பளிக்கிறது அல்லவா? பிறகு என்ன? விழுந்து கும்பிடுங்கள்!! காணிக்கை செலுத்துங்கள். வேறென்ன, செய்யவேண்டியவர்கள், நீங்கள்! ஏன் மாறிவிட்டேன் என்கிறீர்களா? அது என் இஷ்டம்!! - என்றெல்லவா, அடித்துப் பேசுகிறார். இவர் இப்படிப்பட்டவர் என்று அறிந்துகொள்ளாமல், எத்தனை காலத்தை வீணாக்கி விட்டோம்? போனது போகட்டும்! இப்போது நமக்குப் பொற்காலம்? இதைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொண்டு, திராவிடத்தைத் தீர்த்துக் கட்டிவிடவேண்டியதுதான் என்று, இந்தியப் பேரரசுக்குத் துணை நிற்போர், எண்ணித் திட்டமிட்டுப் பணியாற்றுகின்றனர்.

சங்கடமான இந்த நிலைமையை, ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்க்கவேண்டியதும், அதற்குப் பிறகும் உறுதி தளராமல் பணியாற்றவேண்டியதும், தவிர்க்க முடியாத கட்டங்களாகிவிட்டன.

நம்முடன இருந்தவர்களில் சிலர் மாறிவிடுவதால், நாம் கொண்ட கொள்கையின் மாண்பும், நமக்கு அக்கொள்கையிடம் ஏற்பட்டுள்ள உறுதியும் குறையுமென்று எதிர்பார்ப்பவர்கள், தங்கள் ஏமாளித்தனத்தை விரைவில் உணரப்போகிறார்கள்.

விடுதலை ஆர்வம் - எழுச்சி, எந்தத் தனி மனிதருடைய ஆற்றலையும் மட்டுமே நம்பி அமைவதில்லை; அப்படித் தமக்கு ஒரு தனி ஆற்றல் இருப்பதாக எவரேனும் நம்பத் தொடங்கினால், இருக்கும் ஆற்றலும் கெட்டு வருகிறது என்றுதான் பொருள்படும். விடுதலை இயக்கம், எப்படி, மாயம், மந்திரத்தாலே நடைபெறுவது இல்லையோ, அதுபோன்றே, எந்த ஒரு தனிப்பட்டவருடைய அதிசயிக்கத்தக்க திறமையால் மட்டும் நடைபெறுவதும் இல்லை. கடல் நீரில் எப்படி உப்புத்தன்மை ஒருசேரக் கலந்து காணப்படுகிறதோ, காற்றிலே எங்ஙனம் இயங்கவைத்திடும் ஆற்றல் ஒருசேரக் கலந்து இருக்கிறதோ, அஃதேபோல, விடுதலை இயக்கம், அதிலே தங்களை ஒப்படைத்து விட்டுள்ள அனைவருடைய கூட்டுச் சக்தி பரவி, ஒன்றாகிக் கலந்து போயுள்ள நிலை பெற்று விடுகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மருட்சி காரணமாகவோ, மயக்கம் காரணமாகவோ, எவரேனும், தம்மை, அந்த விடுதலை இயக்கத்தினின்றும் துண்டித்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களோடு, அவர்களும் சேர்ந்து ஏற்படுத்தி வைத்த எழுச்சி, போய்விடாது! அவர்களைக் கேலி செய்தபடி, அவர்கள் ஆக்கித் தந்த எழுச்சி அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேதான் இருக்கும்!! அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்லக்கூடியதெல்லாம். மனக்கசப்பு, அருவருப்பு, இவையேயன்றி, இயக்கத்தில் அவர்கள் ஊட்டிய எழுச்சி, தனியாகக் குறிப்பிட்டுக் கண்டுபிடித்துக் கூறப்பட, காட்டப்பட முடியாத முறையில், மற்றவர்கள் ஊட்டிய எழுச்சியுடன் கலந்துபோய் விடுகிறது; பிரித்துக் காட்டவோ, பெயர்த்தெடுத்துக் கொண்டு போய்விடவோ முடிவதில்லை. வைரத்திலுள்ள ஒளியிலே, சில பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச்செல்ல முடிகிறதா - பட்டை தீட்டி ஒளி ஏற்றியவன் வைரத்தை விட்டு விட்டுச் செல்வானாகில், நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அதுபோலத்தான், கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்பட்டுவிடும் எழுச்சியிலிருந்து, எந்த ஒரு அளவையும், எவரும், தனியாக்கி, எடுத்துச் செல்லமுடியாது. உடை, உணவு, பணம், இடம், பழங்கலம், பழைய ஏடு, இப்படிப்பட்டவைகளை எடுத்துச் செல்லலாம்; எழுச்சியை எடுத்துச் சென்றிட முடியாது. எடுத்துச் செல்ல முடியாவிட்டால் என்ன? உடைத்து அழிக்கலாமல்லவா என்று கேட்கத் தோன்றும் - கோபத்தின் விளைவாக ஆனால் கோபம் குறைந்து அல்லது பலனற்றுப்போன நிலை பிறந்து, எண்ணிப் பார்க்கும்போது, அதுவும் நடவாது என்பது விளங்கும். ஏனெனில், எத்துணை ஆற்றலும் பக்கபலமும் தமக்கு இருப்பதாக எண்ணிக் கணக்கிட்டாலும், அது, ஒரு கூட்டுமுயற்சியின் விளைவாக உள்ள ஒரு இயக்கத்தின் எழுச்சியை அழித்திடத்தக்க ஆற்றல் ஆகிவிடாது.

தோகையைத் தனியே எடுத்து, வான்கோழியுடன் இணைத்துவிடுவதால், மயிலாட்டத்தைவிட அழகானதாக இருந்துவிடாது.

காளையின் கொம்பு ஒடிந்துவிடக்கூடும் - ஒடித்து விடவும் கூடும் - ஆயின், அந்தக் கொம்பு, காளையை வீழ்த்திடவா முடியும்? - அதன் காலின் பட்டு, சிதறுண்டு போய்விடக்கூடும்.

மொத்தத்திலிருந்து விடுபட்ட - அல்லது வேறாகிவிட்ட - அல்லது விலகிய - அல்லது பிரிந்த ஒரு பகுதி, மொத்தத்தை அல்லது மிச்சத்தைவிடப் பெரியதாகவோ, வலிவுமிக்கதாகவோ, வீழ்த்தவல்லதாகவோ, ஆகிவிட இயலாது என்பது இயற்கை நியதி.

ஆனால், அந்த ஆசை எழாமலிருக்காது; அது அரிப்பு அளவு ஏற்படத்தான் செய்யும்.

நாமின்றி என்ன செய்ய இயலும் என்ற எண்ணம், நம்மால்தான் எல்லாம் என்ற எண்ணத்திலிருந்து பிறக்கிறது. பிறகோ, நாமில்லாதபோது, எதுதான் இயங்கும் என்று தோன்றும். பிறகு, நாமின்றியும் ஒன்று இயங்குவதா, அதை நாம் விட்டு வைப்பதா என்று தோன்றும். பிறகு, இயங்குவதை ஒழித்தாக வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும், அது இயலாது என்ற ஐயப்பாடு குறுக்கிடும்; குறுக்கிட்டதும். நாம் மட்டும் போதாது, ஒத்த கருத்துடைய மற்றவர்களின் துணையை நாடவேண்டும் என்று எண்ணம் பிறக்கும், அது வளர்ந்திடின், வேறோர் "மொத்தம்' ஏற்படும்; ஏற்பட்டதும், அந்த மொத்தத்தில் நம் நிலை என்ன, பங்கு என்ன என்ற எண்ணம் எழும்! எழுந்ததும், பழைய கதையேதான்; நம்மால் - நம்மாலேதான் - நம்மால் மட்டும்தான் - நாமின்றி என்ன ஆகும் - நாம் நாமாகி விடுவோம் - என்ற இந்தக் கட்டங்கள், வடிவமெடுக்கும் - திரும்பவும் திருப்புகழ், காவடிச் சிந்து பாடுவது கூடாது என்று ஆரம்பித்து, நொண்டிச் சிந்து, பரணி இலாவணி இவைகளில் புகுந்து, பிறகு அறம் பாடி அழித்தொழிப்போம் என்று முழக்கமிடும் கட்டம் தோன்றும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதை உணரச் சிறிது காலம் பிடிக்கலாமே தவிர, இந்தப் பேருண்மையிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டும் முடியாது.

மொத்தத்திலே, தன்னைக் கலந்துவிடச் செய்துகொள்ள இயலாதாருக்கு, இதுதான், எப்போதும் நிலையாகிப்போகும்.

கடலிலே கலக்கும் ஆறுகள்போலத் தனித்தனியாக ஏற்படும் அறிவாற்றல், எழுச்சி பொங்கிடும் நிலைபெற்று, ஒரு இயக்கத்திலே வந்தடைகிறது; வந்தடைந்த பிறகு, இந்த எழுச்சியிலே, இதிலிருந்து இதுவரை, இந்த அளவு வரையில் என்னுடையது, விருப்பம் இல்லையேல், அதனை நான் திரும்ப எடுத்துச் சென்றுவிடுவேன் - அம்மட்டோ! அந்த எழுச்சியைக் கொண்டு எழுச்சியின் இருப்பிடமாகியுள்ள இயக்கத்தையே அழிப்பேன் என்று எண்ணுவது! தோழர் மதியழகன் குறிப்பிடுவதுபோல, ஏமாற்றத்தின் விளைவு; எரிச்சலால் ஏற்படுவது; அஃதன்றி அது வீரமுமாகாது; அறிவுடைமையு மல்ல; பலனும் தராது!! கடலிற் கலந்த காவிரி கோபித்துக் கொண்டு, கடலில் தான் கலந்திட்ட அளவு நீரைத் திருப்பப் பெற்றுக்கொண்டு, வேறிடம் செல்வதுண்டோ? முடியாதே! அதேதான், ஒரு இயக்கத்திற்கு தமது பங்கினைச் செலுத்திய வர்கள், விலகிச் செல்லும்போது, அது தம்முடனேயே எடுத்துச் சென்றுவிடத் தக்கது என்று எண்ணுவதும் - அந்த இயக்கத்தின் எழிலுக்கும் ஏற்றத்துக்கும், வலிவுக்கும் தாம் தந்தது மட்டும் அல்ல காரணம், கணக்குப் பார்க்காத, பலர் அளித்துள்ளனர். கூட்டு முயற்சியின் வடிவம் அது, என்பது அறியாமல், எந்த இயக்கத்துக்கு நான் ஏற்றம் அளித்தேனோ, அதனை நானே அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று முழக்கமிடுவதும் பேதமை - கோபத்தால் விளைவது.

அந்தக் கோபம் குடிகொண்டிருக்கும்போது, தம்பி! வேறு எந்த எண்ணமும், கிட்டே நெருங்கப் பயப்படும். பாசம் என்பது பொருளற்றதாகத் தோன்றும்! நேசம் என்பது சிலந்திக்கூடுக்குச் சமம் என்று பேசச் சொல்லும்! ஒட்டு என்ன? உறவு என்ன? என்று கேட்கத் தோன்றும்! தழதழத்த குரல் இராது; தீ மிதித்த நிலையினர் போலாவர். முன்பு அறிவு இருந்ததாகக் கருதிய இடம், மூடர்களின் முகாமாகத் தோன்றும். இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆத்திரப்படுவது, அறிவுள்ளோர் செயலாகுமா தம்பி!

"பெண்ணா இவள்! எலும்புக் கூடு!'' - என்றானாம் ஒருவன் தன் நண்பனிடம், ஒருவளைப் பார்த்து. முதுகில் ஒரு அறை கொடுத்து, அந்த நண்பன், "முட்டாளே! எலும்புக்கூடு என்று சொல்லாதே; பூங்கொடி என்று சொல்! அவள் அப்பனுக்கு போன மாதம், அத்தையின் சொத்து ஐந்து இலட்சம் கிடைத் திருக்கிறது'' என்றானாம்.

அதுபோலத் தம்பி! நிலைமைக்கு ஏற்றபடி பேசுகிறார்கள் என்பது புரியவில்லையா உனக்கு? புரியும்போது, கோபம் ஏன் பிறக்கவேண்டும்? உன் அலட்சியப் புன்னகையன்றி, அதற்குத் தக்க பதில் வேறு எதுவும் இல்லையே!! ஏன், சிலருக்கு, இன்னமும் இது தெரியவில்லை என்றுதான் நான் ஏக்கப்படுகிறேன். அந்த ஏக்கத்தின் காரணமாக, நான் செய்துவரும் இயக்கத் தொண்டு கூடக் குந்தகப்படுகிறது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும். இதை மறவாதே, தம்பி, என்னைச் சிலர் ஏசுவதால், எனக்கும் சரி, இயக்கத்துக்கும் சரி, ஒரு துளியும் கெடுதல் ஏற்படாது. அவர்கள் பாடிச்சென்ற "போற்றித் திரு அகவல்' அவ்வளவு இருக்கிறது, கைவசம். அப்படிப் பாடினவர்கள், இப்போது இப்படி!! - சரி! அதனால் என்ன? மனித சுபாவம் எத்துணை விதித்திரமானது என்பதை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இவைகளெல்லாம்! வேறென்ன!

தம்பி! உனக்கு என்னிடம் உள்ளன்பு இருக்கிறது, உணருகிறேன்; என் உயிருக்கு அஃதன்றி வேறு ஊதியம் இல்லை; என் வாழ்க்கைக்கு அதனினும் வலிவான ஊன்றுகோல் இல்லை. உனக்கு உள்ளன்பு நிரம்ப இருக்கிறதே தவிர, இன்று என்னைச் சிலர் சுடுசொல் கூறுகிறார்களே, அவர்களைப்போல, "புகழ்ந்திட'த் தெரியுமா!! உன் உள்ளன்பு, என்னைக் கண்டதும், உன் அகத்தையும் முகத்தையும் மலரச்செய்திடும். நான் காணும் காட்சிகளிலேயே, என்னைக் களிப்பில் ஆழ்த்தும் காட்சி அது; அண்ணா! என்கிறாய் தழதழத்த குரலில், - அதனைவிட இனிய இசை வேறு எனக்கு இல்லை; வேண்டேன். அது சரி; ஆனால், புகழுரைபேச, உன்னால் முடியுமா? இன்று ஏசும் அவர்கள் முன்பு பேசியதுபோல ஒருக்காலும் பேசமுடியாது. வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து, வர்ணஜாலங்களிட்டுக் கோர்த்து, கைவண்ணம் தெரியத் தயாரிக்கவேண்டுமே, அப்படிப்பட்ட புகழாரங்களை! உள்ளன்புகொண்ட உன்னால் முடியாதே, அதுபோல; அது சொல்லன்புகொண்டவர்களால் மட்டுமே முடியும் என்பது, அவர்களின் இப்போதைய போக்கினால் விளக்கமாகத் தெரிகிறது. உனக்கு இதயம் வேலை செய்யும் அளவு நேர்த்தியாக உதடு வேலை செய்வதில்லை; அதற்குத் தனித்திறமை வேண்டுமே; நீ, என் தம்பிதானே - எங்கிருந்து உனக்கு அந்தத் திறமை வந்துவிடும்?

சாதாரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடை பெறுகின்ற பொதுக்கூட்டங்கள் என்றாலே எங்களுக் கெல்லாம், எப்படி வைதிகர்களுக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகும்பொழுது ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிறோம் என்ற எண்ணமிருக்குமோ அதேபோல, காஞ்சிபுரத்துக் கூட்டத்திலே பேசுவது என்றால், ஏதோ எங்களுடைய வாழ்நாளில் நாங்கள் செய்கின்ற புனிதமான கடமை என்று கருதுவது வாடிக்கை. அது தவிர, இன்றைய தினம், நம்முடைய அண்ணா அவர்களை ஆதரித்து நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே கலந்துகொள்கிறோம் என்றால், வைதிகர்களுக்கு எப்படி 12 - ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமாங்கத் தீர்த்தத்தில் குளிப்பதில் ஒரு வெறி இருக்கிறதோ, அதைப்போல், எங்களுடைய வாழ்நாளில் இது ஒரு தடவை கிடைக்குமோ அல்லது இரண்டு தடவை கிடைக்குமோ என்று எண்ணக்கூடிய வகையில், இதைப் பெரிய காரியமாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.