அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'இந்தியர்' ஆகின்றனர்! (2)
2

எப்படித் தம்பி! புகழாரம்! எத்துணை பளபளப்பு, பார்த் தனையா!! காஞ்சிபுரமே ஒரு திருத்தலம்!! அங்கு வந்து, பேசுவதே ஒரு புனித காரியம்!!

உன்னாலே முடியுமா இப்படிப் பேச?

உனக்கு உண்ணத் தெரிகிறது - அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க! என்று சொல்லத் தெரிகிறது. இப்போது படித்தனையே, அதுபோன்ற சொல்லடுக்கு முடியுமா உன்னால்? திருத்தலம் - புனித காரியம். . . மாமாங்கம் - ஏ! அப்பா! ஒருநாலு வரிகளிலே, எத்துணை புகழ் உரைகள்!!

அண்ணா, இதுதான் பூஜா மனோபாவம் - கூடாது - கெடுதல் - என்று கூறுகிறார்கள் என்கிறாய்.

ஆமாம்! தம்பி! எனக்கும் புரிகிறது. இப்படிப்பட்ட பூஜா மனோபாவம், எத்துணை போலி என்பதும் - இத்துணை பூஜா மனோபாவம் காட்டுவோர் எவ்வளவு வேகமாக மாறி விடுவார்கள் என்பதும் - புகழ்பாடிய வாயே, வேறோர் வேளை பகைபொழியும் என்பதும் புரிகிறது. நான் அன்று இல்லை, அதைக் கேட்க. இதுவரை உனக்கும் சொன்னதில்லை, இன்று சொல்ல நேரிட்டது.

தம்பி! காஞ்சிபுரத்தைத் திருத்தலமாகவும், அங்குவந்து பேசுவதைப் புனித காரியமென்றும்; சொன்னது யார் தெரியுமோ? இந்த அண்ணாத்துரைக்கு அரசியலே தெரியாது - என்று இன்று பேசும், தோழர் சம்பத் அவர்களேதான். நான் இல்லாத அன்று, காஞ்சிபுரம் வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்து, இந்த திருத்தாண்டகம் பாடிச் சென்றார் - 17-2-57-ல்.

அவர் இன்று என்னைப்பற்றி நாலு கடுமையான வார்த்தை களைச் சொன்னால், கோபம் கொள்ளலாமா? - அவர் அன்று சொன்னவற்றை எண்ணி மகிழக்கூடாதா!

கொடுத்த கைதான்! இன்று இல்லை, கொடுக்கவில்லை - என்று எண்ணிக்கொள்வதுபோல, அண்ணாவை அகமகிழ்ச்சி யுடன் பாராட்டியவர்தான் - அன்பு இருந்தபோது - இன்று அன்பு இல்லை, ஆகவே புகழவில்லை. அதனால் என்ன என்றுதானே எண்ணிக்கொள்ள வேண்டும்.

ஒளிதரும் விளக்குக்கூட - எண்ணெய் இல்லாதபோது, இருளுக்குத் துணை நிற்கிறது.

மேலும், தம்பி! என்னைப் புகழ்ந்துரைப்பதை நிறுத்திக் கொண்டு, இகழ்வாகப் பேசுவதால், மொத்தத்திலே நஷ்டம் இல்லை என்பது புரியவேண்டுமே உனக்கு. என்னைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததால், அவர், பாவம், புகழவேண்டிய எத்தனையோ, "தலைவர்களை'ப் புகழ இயலாது போயிற்று. "யான் பெற்ற இன்பம்' அவர்களுக்கு இப்போது. அவர்களுக்கும் கிடைக்கட்டுமே அந்த மகிழ்ச்சி. காலமெல்லாம் எனக்கேதானா? மற்றவர்களுக்கும் கிட்டட்டும்!!

என்னே அவர்கள் பாராட்டுவதைப் பெற்றுக்கொண்டே இருந்தால், நான் பெரிய கடனாளி அல்லவா ஆகிவிடுகிறேன். இப்போது எனக்கு ஒருவகை ஆறுதல். அவர்கள் தூற்றுவதைப் பொறுத்துக்கொள்வதை, நான் பட்ட கடனைத் திருப்பிக் கொடுத்திடும் வாய்ப்பாகவே கருதி, மன அமைதி பெறுகிறேன்.

தம்பி! எனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும் வாய்ப்பு. ஒரு தடவை கிடைக்குமோ, இரண்டு தடவை கிடைக்குமோ என்று பேசினார். ஒரே தடவைதான்! நான் மேலும் அவருக்குக் "கடன்காரன்' ஆகவேண்டிய நிலை இல்லை. மனதுக்கு அது ஒருவிதமான ஆறுதல் எனக்கு.

ஆனால், தம்பி! நம்முன் உள்ள பிரச்சினை, புகழ்பாடத் தோன்றுவது எப்போது, இகழத் தோன்றுவது எப்போது, எதனால் என்ற இது அல்ல.

நம்மை அவர்கள் புகழ்ந்த கதை இருக்கட்டும் - இப்போது தூற்றும் படலமும் கிடக்கட்டும் - திராவிட நாடு எனும் இலட்சியத்தை அவர்கள் புகழ்ந்தார்கள் முன்பு; இப்போது இகழ்கிறார்கள்; முன்பு முழு மூச்சாக ஆதரித்தார்கள்; இப்போது, வேகமாகத் தாக்குகிறார்கள். நான்கூடக் கெட்டு விட்டேன் என்று வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; பழகப் பழகப் பாலும் புளிக்குமாம் - நான் எம்மாத்திரம் என்னைப் பிடிக்கவில்லை என்று கூறிவிடட்டும் - ஆனால் அந்த இலட்சியம், என்ன குற்றம் இழைத்தது? ஏன் அதனை இகழ வேண்டும் - எதிர்க்கவேண்டும்? - என் மனதை வாட்டுவது அதுதான், தம்பி! மற்றது அல்ல.

அந்த வாட்டத்தை எப்படிப் போக்கிக்கொள்வது?

ஏன்! அவர் மாறிவிட்டதுபோல, நாமும் மனதை மாற்றிக் கொள்வது - என்று சிலர், கருதிவிட்டார்கள்.

ஆனால், நண்பர் புஞ்சைப் புளியம்பட்டி சாமிநாதன் அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசியதுபோல - கோபி என்று நினைவு - "புத்தர் பொதிய மரத்தடி அமர்ந்து ஞானம் பெற்றார் என்கிறார்கள் - அதுபோல என் நண்பர், எப்படி இந்தத் திடீர் ஞானோதயம் பெற்றாரோ தெரியவில்லை'' - என்று அல்லவா கூறத் தோன்றுகிறது.

இதுவரை காணாதது என்ன கண்டுவிட்டார்கள்? கேட்காதது என்ன கேட்டுவிட்டார்கள்? கிடைக்காத விளக்கம் என்ன அதிசயமாகக் கிடைத்துவிட்டது? திடீரென திராவிட நாடு வேண்டாம் என்று கூற. திராவிட இயக்க வரலாறு வெளியீட்டு விழாவன்றுகூட, திராவிடராகக் காட்சி தந்து, "திராவிட நாடு' இலட்சிய முழக்கம் செய்துவிட்டு, எண்ணிப் பத்து நாட்கள் ஆனதுமா, திராவிட நாடு பகற்கனவு ஆகிவிடுவது!!

திராவிட நாடு கூடாது என்பதற்கு, இதற்கு முன்பு எவரெவரோ, எடுத்துச் சொன்ன காரணங்களால், இவர் மனதை மாற்ற முடியவில்லை; அவைகளுக்கெல்லாம் சுடச்சுடப் பதிலளித்தார்; இன்று, அந்தக் காரணங்களைவிட வலிவான, மனதை ஈர்க்கத்தக்க, மகத்தான, காரணம் கிடைத்ததா? என்ன அது? எவர் தந்த போதனை? விளக்கம் கிடைத்ததா?

அப்போது நான் பேசி வந்ததெல்லாம் பொய் - புரட்டு - போலி! என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிட்டதா?

நாற்பது நாளும் நான் கொடுத்து வந்தது சூரணமல்ல, செங்கல்தூள்! மன்னித்துக்கொள். இப்போதுதான் உண்மையான மருந்து தருகிறேன் பெற்றுக்கொள் - என்று மருத்துவன் கூறி ஒரு பொட்டலம் கொடுக்கிறார் - பிரித்துப் பார்த்தால், கருநிறத் தூள் இருக்கிறது என்று வைத்துக்கொள் - எந்த மருத்துவனும் அப்படிச் செய்யமாட்டான்; மக்களை எப்படி வேண்டுமானாலும் படைக்கலாம் என்ற எண்ணம் கொண்ட சில தலைவர்கள் மட்டுமே அப்படிச் செய்வர் - பொட்டலம் பெறுபவர், மருத்துவருக்கு நன்றி கூறிப் புதிய மருந்தையா சாப்பிடுவார் - முன்பு கொடுத்ததை இத்தனை நாள் கழித்துச் செங்கல்தூள் என்கிறார், துணிந்து; இப்படிப்பட்டவர், இப்போது கொடுப்பது மட்டும் மருந்துதான் என்று எப்படி நம்புவது? இது கரித்தூளோ, என்னவோ என்றுதானே எண்ணுவார்கள். அதுபோல்தான் இந்தப் போக்கும். எந்தப் போக்கையும் நம்பிவர நாலுபேர் கிடைப்பார்கள் என்பது தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும், இந்தக் கோலம் கொள்ள?

தம்பி! திராவிட நாடு விஷயமாக, என்னிடம் பேசியவர்கள் பலர்; வாதாடியவர்களும் உண்டு; விளக்கம் கூறி என்னைத் தம்வழி இழுத்துச்செல்ல முயன்றவர்களும் சிலர் உண்டு.

அவர்கள் காட்டிய காரணங்களைவிட, இனி ஒருவரும் எந்தக் காரணத்தையும் காட்ட முடியாது. அப்போது மாறாத மனம் - இப்போது மாறும் என்று எண்ணுவதோ, மாறா விட்டால், மனம்போன போக்கிலே ஏசுவோம் என்று தூற்றித் திரிவதோ, எதைக் காட்டுகிறது என்றால், அவர்கள் என்னையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, பிரச்சினையையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான்.

வினோபா: உங்கள் கழகத்தின் நோக்கம்?

நான்: நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம்; அறிவீர்களே.

வினோபா: உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா - உதாரணமாக, நான் சேர விரும்பினால். . . .?

நான்: நாங்கள் "திராவிட நாடு' சம்பந்தமாகத்தான், கழகம் அமைத்திருக்கிறோம். அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே இயல்பாகவே, திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர்.

வினோபா: திராவிட நாடு என்றால் தனி நாடாகவேவா?

நான்: ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு அவைகளின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது.

வினோபா: மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்?

நான்: மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது. தேவைப்படும்போது, வெளிநாட்டு விவகாரம் குறித்துக் கலந்து பேசலாம், கூடிப் பணியாற்றலாம்.

வினோபா: அப்படி என்றால், தனிநாடு, அதாவது தனி அரசு - சிலோன்போல.

நான்: ஆமாம். வினோபா: பாகிஸ்தான்போல் ஆகிவிடும்.

நான்: நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான் போல்தான் ஆகிவிடும்.

வினோபா: தனிநாடு என்றால் தனி பட்டாளம்கூட இருக்குமா?

நான்: ஆமாம். தனிப்படை இருக்கும்.

வினோபா: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒன்றாக இருக்குமா?

நான்: எங்களுக்கு நம்பிக்கை உண்டு - ஏனெனில், நாலு மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை.

வினோபா: நான் நாலுமாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று கூடி அரசு அமைக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிய வில்லை.

நான்: இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம். தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம், ஆந்திரர்கள் தமிழருடன் ஒரே அரசில் இருந்ததால் தங்கள் வளர்ச்சி தடைப்பட்டது என்று எண்ணிக் கசப்பு அடைந்திருக்கும் நேரமாக இருந்தது; தனியாகி விட்டார்கள். இப்போது அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு, இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழர் அல்ல, மத்திய சர்க்கார்தான் என்று அறிந்து கொள்வார்கள். இப்போதே மைசூர், கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில், ஐந்தாண்டுத் திட்டங்களில், சரியான முறையில் தமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள்.

வினோபா: மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்து கொண்டால்?

நான்: அப்படிப் பார்ப்பதைவிட, இதுபோல் எண்ணக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால் கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று ஒன்று இருந்தால் அநீதிதான் நடக்கும் என்று கொள்ளவேண்டுகிறேன். மேலும், நீதியாக நடக்கக்கூடிய கடைசித் தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்று நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறையில் அதிக அநீதிதான் இருக்கும்.

தம்பி! நிலக்கொடைக்காக இங்கு வந்திருந்த வினோபா அவர்களிடம், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற உரையாடலில், நான் திட்டவட்டமாகத் திராவிட நாடு குறித்துக் கூறியிருப்பதை நினைவுபடுத்துவது, இப்போது யாரோ சிலர் அதைப்பற்றித் திரித்துக் கூறுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தர அல்ல - என் அறிவு, அன்பு, நெறி முதலிய எல்லாவற்றிலுமே சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் கொண்டுவிட்ட அவர்கள், எதையும் பேசுவார்கள்.

சாந்தம் தவழும் முகம் என்னை ஈர்த்தது; பணியிலே தூய்மை இருந்தது கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அவர் உரையிலே கனிவு இருந்தது; நெடுங்காலம் பழகியவர்போல என்னிடம் அவர் பேசிய போக்கு, அவருடைய பெருங் குணத்தைக் காட்டிற்று; நான் வினோபா அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டேன்; ஆனால், திராவிட நாடு பிரச்சினையில் எனக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், ஆர்வமும், குறையவில்லை. வினோபாவின் பேச்சு, கேள்வி, இவை, எனக்கு திராவிட நாடு பிரச்சினை சம்பந்தமாக எந்தவிதமான ஐயப்பாட்டினையும் புகுத்தவில்லை. என் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். கள்ளமில்லா உள்ளம் என்றுகூடக் கூறினார்.

நான், அவருடன் பேசிவிட்டு வந்ததை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஏடுகள், வினோபா, "திராவிட நாடு' திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதின. அப்போது நான் திராவிட நாடு இதழில் வெளியிட்ட விளக்க அறிக்கையை, இங்கு வெளியிடுவது பொருத்தமானது என்பதால், தருகிறேன்.

"திராவிட நாடு'' திட்டம் குறித்து வினோபா ஆவலுடன் பல தகவல்கள் கேட்டதும், நான் அவருடன் அது குறித்து உரையாடியதும் அனைவரும் அறிவர்.

சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு இரையாகிவிடாதா? என்று என்னை வினோபா கேட்டது தவிர, வேறு எதிர்ப்புக்கான காரணம் ஏதும் பேசவில்லை; அவர் கேட்ட அந்தக் கேள்விக்கும் நான் பதில் அளித்தேன்.

சுதந்திரத் திராவிட நாடு கூடாது - என்று வினோபா கூறுவதாகப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

ஆனால் ஆந்திரம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, முழு மாகாண சுயாட்சி அளித்திடவேண்டும் என்றும், அதனை டில்லி தர இசையும் என்றும் வினோபா கூறியதாகச் செய்தி காணப்படுகிறது.

இயல்பாகவே நான் அவரிடம் பேசிவிட்டு வந்ததால், வினோபா, திராவிடத் தனி நாட்டுக்கு ஆதரவு காட்டுகிறாரோ என்ற சந்தேகமும் அச்சமும் காங்கிரஸ் வட்டாரத்திலே எழுந்திருக்கக்கூடும்.

அதைப் போக்கவேண்டி, வினோபா, இந்தச் செய்தியைக் கூறியிருந்திருக்கக்கூடும்.

சிறிதளவு பேசியதன்மூலம் திராவிட நாடு பிரச்சினையை வினோபா ஆதரிக்கும்படி செய்துவிட என்னால் மட்டுமல்ல, யாராலும் ஆகாது.

எனவே வினோபா, திராவிடத் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற செய்தி, எனக்கு அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை.

எனினும், சிறு நாடு காரணம் காட்டிப் பிரச்சினையை எதிர்ப்பதனால், இதனினும் சிறு நாடுகள் பன்னெடுங் காலமாகச் சுதந்திர நாடுகளாகப் பாங்குடன் வாழ்ந்து வருவதைக் காட்டுவதுடன், சிறு நாடு என்று திராவிட நாடு கருதப்படத் தக்க அளவினதல்ல என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ஆந்திரம், கேரளம், தமிழகம், கருநாடகம் என்னும் நான்கு மொழிவழி அரசுகளும், கூட்டாட்சித் திட்டமான திராவிட நாடு அமைத்துக்கொண்டு, வடநாட்டு ஏகாதிபத்யத் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதுதான் நமது திட்டம்.

இந்தக் கூட்டாட்சி சிறியதுமல்ல, "தன்னாட்சிக்கு ஏற்ற தகுதி படைத்ததுமல்ல' என்றும் எவரும் கூறிவிடமுடியாது.

போர்ச்சுகலும் ஸ்பெயினும், பிரான்சும் ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் பெல்ஜியமும், நார்வேயும் ஸ்வீடனும், கிரீசும், இத்தாலியும், அல்பேனியாவும் இஸ்ரேலும், தனி நாடுகள் - திராவிட நாடு இவைகளைக் காட்டிலும் பெரிய அளவு.

தமிழகத்தின் அளவுகூட இல்லாத நாடுகள் பல, தனிக் கொடி பறக்கவிட்டுத் தன்னாட்சி நடத்தித்தான் வருகின்றன.

இந்தியப் பேரரசின் பிடியிலிருக்கும் தமிழகம், தத்தளிக் கிறது பல்வேறு வழிகளில்; ஆனால், தனி நாடாக உள்ள பல சிறு நாடுகள், சீருடன் - சிறப்புடன் வாழ்ந்து வருகின்றன.

போர் நடத்தியேனும் "சுதந்திரம்' பெறவேண்டும் என்று துணிந்து இறங்கியுள்ள அல்ஜீரியா, திராவிட நாட்டைவிட அளவிலும் சிறியதுதான் - வளத்திலும் அவ்விதமே.

எனவே, திராவிட நாடு சிறிய நாடு என்று கூறுவதில் பொருள் இல்லை! சிறிய நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்கவே கூடாது என்று எந்த அரசியல் "தர்மமும்' கட்டளையிடவுமில்லை. வரலாறும், சிறு நாடுகள் அழிந்து போகும் என்பதை எடுத்துக்காட்டும் பாடப் புத்தகமாகவும் இல்லை.

என்னுடன் பேசியதால், திராவிட நாடு பிரச்சினைக்கு வினோபா ஆதரவு அளித்துவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணி ஏக்கமுற்ற காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் கருத்து கண்டு மகிழ்வர்; அவர்களுக்கு அது ஒரு இனிப்புப் பண்டம். நான் ஆதரவு கிடைத்திடும் என்று எதிர்பார்க்கவில்லை; எனவே, ஏமாற்றமுமடையவில்லை.

ஆதரவு - அல்லது எதிர்ப்புக் காட்டும் அளவுக்கு, பிரச்சினையை அலசிப் பார்த்துப் பேச, அந்தச் சந்திப்பு போதுமானதாகவும் அமையவில்லை.

பிரச்சினைபற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வினோபா ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது; பிரச்சினையில் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதை அவர் அறிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

நல்லவர் - மதிக்கத்தக்கவர் என்ற வரிசையினரான வினோபாவினாலேயே, எனக்குத் திராவிடநாடு குறித்து இருக்கும் நம்பிக்கையைக் குறைத்திட இயலவில்லை என்றால், பிறர், என்னையும் உன்னையும் ஏசிப் பேசி வருவதினாலா. திராவிட நாடு பிரச்சினையிலே நமக்கிருக்கும் நம்பிக்கையும் ஆர்வமும், அதற்காகத் தொண்டாற்றும் திறனும் குறையும்; பாழ்படும்! எவ்வளவு ஏமாளித்தனம் இருக்க வேண்டும் இப்படி எண்ணிக்கொள்ள!! ஆனால் இன்று அவர்கள், திராவிட நாடு திட்டத்தைத் தாக்கிப் பேசுவதை, பத்தி பத்தியாகச் சில ஏடுகள் வெளியிடுவதாலேயே, திராவிட நாடு திட்டத்துக்கு ஏதோ புதிய, வலிவான எதிர்ப்பு வந்துவிட்டது என்று எண்ணி ஏமாறுகிறார்கள். திராவிட நாடு எனும் திட்டத்தை, இவர்களைக் கொண்டு தாக்கச்செய்து, வலிவைக் குறைத்துவிட்டு, பிறகு, இவர்கள் தமிழ்நாடு என்று பேச ஆரம்பித்தால், அவ்வளவு பெரிய திராவிட நாடே தனி நாடு ஆகக்கூடாது என்று சொல்லியாகிவிட்டது என்றால், நீங்கள் சொல்லும் தமிழ்நாடு ஒரு நாள் வாழ இயலுமா தனி நாடாக! ஏன் பைத்யக்காரத்தனமான திட்டம். தமிழ் நாடு தனி நாடு ஆக வாழத்தக்க பொருளாதார அமைப்பு அல்ல (Economic Viability) என்று ஒரே அடியாக அடித்து, ஆகவே, பாரதத்தில் ஒரு அங்கமாக இருப்பதுதான் புத்திசாலித் தனம்! அதில் இருந்துகொண்டு, பேதம் பேசாமல், பிளவு ஏற்படுத்தாமல், சுகமாக வாழலாம். பேதமும் பிளவும் இல்லாது இருக்கவேண்டுமானால், பிரிவினை - அதற்கான உரிமை - அந்த முறையில் சட்டத்தில் திருத்தம் பெறுவது - என்ற எண்ணமே எழக்கூடாது. அந்த எண்ணம் எழுந்தாலே, திருப்தியற்ற தன்மை, அருவருப்பு, பகை, எல்லாம் தோன்றிவிடும். அந்த நிலை ஏற்படாமலிருக்க, எப்போது திராவிடர் என்ற "மாயை'யிலிருந்து விடுபட்டீர்களோ, உடனே, "இந்தியர்' ஆகிவிடுங்கள். அதுதான் அறிவுடைமை.

என்று இன்று செய்திகளை மிக்க அக்கறையோடு வெளியிடும், ஏடுகள் எழுதப்போகின்றன.

"திராவிட நாடு' என்று கூறுவதால், தனி நாடு ஆவதற்கான, பொருளாதார வாய்ப்புக் குறிகள் இல்லை என்ற பேச்சுக்குத் துளியும் இடம் கிடைக்கவில்லை; எனவே, மாற்றார்கள், திராவிட நாடு, தனி நாடாக இயங்க முடியாது - இன்னின்ன வளங்கள் இல்லை - என்று சொல்ல முடியவில்லை.

"தமிழ் நாடு' என்று சொல்லும் அளவுக்குத் திட்டத்தை மட்டந்தட்டினால், பிறகு, ஒரு அலட்சியப் புன்னகையுடன், தமிழ் நாடு தனித்து இயங்கமுடியாதே! ஒரு நல்ல வளமான நாடு ஆகத்தக்க, பொருளாதார வாய்ப்புகள் உள்ள "அளவு' கொண்டதாகத் தமிழ்நாடு இல்லையே என்று காரணம் காட்டி விடலாம் என்று கருதுகிறார்கள்; நம்புகிறார்கள்; விலகியோர், விரும்பியோ விருப்பமின்றியோ, மாற்றாருக்கு - மகத்தான வாய்ப்பைத் தேடிக் கொடுக்கிறார்கள்.

இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குலைக்க, விலகியோர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; அந்தக் காரியம் முடியட்டும் என்பதற்காகவே; விலகியோருக்கு நல்ல விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

இதே ஏடுகள், விலகியோரின், மற்றக் கருத்துகளுக்குத் துளி மதிப்பேனும் தருவரா? நிச்சயம் இல்லை.

தமிழர் தனி இனம் - தனி அரசு நடத்தியவர்கள் - தனி அரசு நடத்தத் தகுதி உள்ளவர்கள்; தனி அரசு அமைக்கத்தக்க, வளம் இருக்கிறது; அளவு, குடிவளம், இயற்கைச் செல்வம், எல்லாம் இருக்கிறது; தனி அரசு அமையாததால் வடபுலம் கொழுக்கிறது.

தமிழர் தவிக்கின்றனர் - இங்கும் - எங்கும்.

இதை வடபுலத்தினர் கவனிப்பதுமில்லை.

உடனடியாகத் தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும்.

வடநாட்டுக்குக் கப்பம் கட்டி, கால்பிடித்துக் கிடக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்.

தம்பி! இப்படிப் பேசட்டுமே பார்ப்போம், இன்று காங்கிரஸ் செய்திகளைக்கூடக் குறைத்துக்கொண்டு, இவர்களுக்கு இடம் தரும் ஏடுகள், எவ்வளவு துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார்கள் என்பது பளிச்செனத் தெரிந்துவிடுகிறது.

திராவிட நாடு என்பதுதான் பிடிக்கவில்லை, தமிழ் நாடு என்றால் பிடிக்கும், ஆதரவு கிடைக்கும் என்றால், ஆதித்தனார், பக்கமல்லவா, இந்தப் பத்திரிகைகள் இருந்திருக்கவேண்டும். இருந்தனவா? இல்லையே! ஏன்? ஆதித்தனார் திராவிட நாடு கேட்கவில்லையே தவிர, தமிழ்நாடு கேட்கிறார்; பிரிவினை கேட்கிறார்; நேரு சர்க்காரைத் தாக்குகிறார்; அதுமட்டும் அல்ல,

அண்ணாத்துரை அறிவிலி.

அண்ணாத்துரை சர்வாதிகாரி.

அண்ணாத்துரை கதை எழுதுகிறான், பேசுகிறான்.

அண்ணாத்துரைக்கு அரசியல் தெரியாது.

திராவிட முன்னேற்றக் கழகம், மோசமானவர்கள் முகாம்.

அது காலிகள் கூடாரம்

என்றெல்லாம் பேசவில்லை?

எனவே, அந்த ஏடுகளுக்கு, ஆதித்தனார், ஆதரிக்கப்பட வேண்டியவராகத் தெரியவில்லை. அவரை ஒதுக்கி வைத்தனர்.

உள்ளபடி, தமிழ் நாடு விஷயமாக அன்பும் அக்கறையும் இருக்குமானால், விலகியவர்கள்கூட, நம்மை விட்டதும், நேரே அவருடைய இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டுமேயன்றிப் புதுக்கட்சி எதற்கு?

ஆதித்தனார், திராவிட நாடு வேண்டாம் என்பதற்காகவும், திராவிடர் என்ற கருத்து தீது என்பதற்கும், கூறாத எந்தக் காரணத்தைப் புதியவர்கள் கூறுகிறார்கள் - கூறமுடியும்? ஆயினும், புதியவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், ஆதித்த னாருக்குக் கிடைக்காத காரணம் என்ன?

"அண்ணாத்துரையின் செல்வாக்கை ஒழித்துவிடுகிறேன்,

அவன் தலைமையில் உள்ள தி. மு. கழகத்தை அழித்து விடுகிறேன் - என்று ஆதித்தனாருக்குத் திட்டம் இல்லை. அந்தத் திட்டம் இல்லையென்றால், காங்கிரஸ் ஏடுகளிலே விளம்பரம் இல்லை.''