அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'இந்தியர்' ஆகின்றனர்! (2)
3

தி. மு. கழகத்தை ஒழிப்பேன் என்று கொண்டை கட்டிகளும், கோவிந்தாப் போடுவோரும், பட்டை போட்டோரும், பஜனைக்காரரும் முன்வந்தபோதே, காங்கிரஸ் ஏடுகள், அவர்களுக்கு விளம்பரம் கொடுத்தன என்றால், தி. மு. கழகத்தின் முன்னணி நின்று முழக்கமிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டு, அதனை நடத்திச் செல்லத்தக்க ஆற்றல் படைத்தவர் என்ற விருது பெற்றிருந்தவர், தி. மு. கழகத்தை ஒழிக்கிறேன் என்றால், அடே அப்பா! விளம்பரம் கொடுக்கக் கசக்குமா, காங்கிரஸ் ஏடுகளுக்கு!! பொன்னான வாய்ப்பு என்று அல்லவா, மேலே விழுந்து விளம்பரம் தரும்.

இந்த விளம்பரம் பெரிய செல்வாக்கு என்று எவரேனும் மயங்கினால், இரக்கப்படுவதன்றி வேறென்ன செய்வது?

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சட்டவிரோதமானது என்று அறிவித்து, அடக்குமுறைகொண்டு அதனை அழித்திட, காங்கிரஸ் சர்க்கார் முனைவதற்கு முன்பு நடத்தப்படும், முயற்சி இது - கழகத்தை வேறு சிலரைக்கொண்டு ஒழிக்க முடிகிறதா என்று பார்ப்பது

ஒவ்வொரு முறையும், நப்பாசைதான் காங்கிரஸ் கட்சிக்கு.

"இவர் எதிர்க்கிறார்! எனவே கழகம் அழிந்துபோகும்'' - என்று விபூதியும் சந்தனப்பொட்டும், வில்வமும் துளசியும், பஸ்கியும் தண்டாலும், பயில்வானும் சவாலும் கிளம்பிய ஒவ்வொரு நேரத்திலும் இதே நப்பாசை.

நாற்பதே நாட்கள், ஒழித்துக் காட்டுகிறேன் நமச்சிவாயத்தின் மீது ஆணை என்று கிளம்புவார், மடம்கூட இல்லாத ஒரு காவிகட்டி! உடனே காங்கிரஸ் ஏடுகள், அவரை "மகானாக்கி' - மக்களுக்கு அறிமுகப்படுத்தி - அவர் பேச்சைப் பேருரையாக்கித் தரும் - கடைசியில் பயனில்லை என்பதை உணர்ந்து மூலையில் உட்காருவர்.

அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அடித்தது யோகம், சில காலம்; கழகத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று கிளம்பும், யாருக்கும் கிடைக்கும் அந்த யோகம்.

இந்த "சூட்சமம்' மக்களுக்குத் தெரியாமலுமில்லை, நமது கழகத் தோழர்களும், இதனை நன்கு உணர்ந்து இருப்பதால்தான், எவர் "இந்தியர்'' ஆகிவிடுவது நல்லது என்று சென்றிடினும், நாம் நமது குறிக்கோள் வெற்றிபெற உழைப்போம் என்ற உறுதிபூண்டு, உழைத்தபடி உள்ளனர். என் அளவுக்குக்கூட, அவர்கள் இது குறித்துக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. முன்னிலும் வேகமாகப் பணிபுரிகிறார்கள் - ஒரு விடுதலை இயக்கத்துக்கு, சிறு இழப்பு நேரிடினும், அதனால் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டத்தையும் ஈடுசெய்யத்தக்க விதத்தில் தாங்கள், மேலும் திறமையாகப் பணிபுரியவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும், ஆர்வமும் கொண்டவர்களாகின்றனர்.

எனவேதான், அன்று இருந்ததைவிட அளவினிலும் அதிகமாம் என்றுரைக்கத்தக்க விதமாக, நம் தோழர்கள் திராவிட நாடு திராவிடர்க்கே என்பதனை முழக்கி வருகின்றனர்; மூலை முடுக்குச் சென்று கண்டோம் நம் தோழர்களின், கண்களிலே ஒளி ஆர்வம்; அவர் கருத்தில் குழப்பமில்லை; கவலை கொள்ளற்க! நம்முடன் இருந்த சிலர் இந்தியராய் மாறுகின்றனர்; இந்தியர் என்றுரைக்கும் எண்ணற்றவர்களுக்கிடையில், இவரும் கூடுவதால், இவர்க்கென்று இன்றுள்ள இடமும் நிலை அல்ல; ஏனண்ணா! வீண் கவலை, நேருவையும் அவர் தம்மைக் கண்கண்ட கடவுளெனக் கொண்டவர்கள் தொகையினையும் கண்டதனால், நம் கருத்து கருகியா போயிற்று? இன்று அந்தப் படை நடுவே, நமக்கு இனிப்பளித்து வந்தவர்கள், சென்று இடம் கண்டு, செய்திடப் போவதென்ன? விடும் அண்ணா! விசாரம்! வேலை நடக்கட்டும்!! - என்று கூறுகின்றார்; எழுச்சி தருகின்றார்.

செல்லும் இடமெல்லாம் இந்தச் செந்தேனே தருகின்றார், சென்றுவந்த "சேதி' தன்னைச் செப்புகின்றார், சுவைசொட்ட, எங்கும் இடர் இல்லை. இலட்சிய ஆர்வம் தனக்கு; எவரும் ஒப்பவில்லை, இந்தியராவதற்கு - சென்று கண்டிடண்ணா, செம்மைமிகு கழக வடிவமதை - என்றும் கூறுகின்றார்; நானும் பல இடத்தில், இதனையே கண்டுவந்தேன். நன்று, நன்று, தம்பி! நமக்கு இருப்பது ஒரே செல்வம் - இதயத்தை ஈர்த்துள்ள இலட்சியமே அதுதான். அதற்கு நாம் ஆட்பட்டோம்; ஆணிப்பொன் ஆபரணம், அந்தஸ்து அனைத்தையும் அடியினிலே கொட்டி அழைத்தாலும், நாம் ஏகோம்; இன்று இந்த உறுதியினை நாம் புதுப்பித்துக்கொள்வதற்கே, சென்றனர் போலும் என் தம்பியராய் இருந்தவர்கள்; பரிவுகாட்டி வந்த நம்மைப் பிரிந்து போயினரே, நம்மவர்கள், அந்தத் துக்கம் நம்மை அழுத்தி வாட்டியபோதும், அரும்பணியாற்றிட நாம் துளியேனும் தயங்காமல் சென்று இன்பத் திராவிடம் காண் என்றுரைக்க எழுச்சி ஊட்ட, சென்ற திருத்தலங்கள் பட்டியல் காண்:

செல்லூர் ஆரிமுத்து மோட்டூர்
சங்கராப்பள்ளி காட்டுப்பாடி
காட்டுமன்னார்குடி வேலூர்
அம்மையப்பன் சத்தியவிசயநகரம்
மன்னார்குடி அரூர்
திண்டுக்கல் சிக்களூர்
ஆம்பூர் மத்தூர்
குடந்தை கருங்கல்
வெங்கடநாயக்கன்பட்டி நாகர்கோயில்
காஞ்சிபுரம் மடத்துவாசல்
திருவாரூர் கண்டன்விளை
சென்னை மருங்கூர்
வந்தவாசி ஜோலார்பேட்டை
ஆரணி திருப்பத்தூர்
ஓகளூர் கடியாச்சேரி
மீஞ்சூர் ஊத்தங்கரை
காஞ்சிபுரம் சென்னை
அம்மாசத்திரம் அதிராம்பட்டினம்
சென்னை சேலம்
விருத்தாசலம் ஒடுகத்தூர்
சென்னை வாணியம்பாடி
சென்னை பெருமாள்நாய்க்கன்பாளையம்
ராமாபுரம் சென்னை
சென்னை கீழ்மாரிமங்கலம்
வடக்காளூர் ஆலத்தம்பாடி
பச்சாம்பேட்டை கட்டக்குடி
காஞ்சிபுரம் சிறுபனையூர்
சென்னை ஆத்தூர்
ஆடையூர் பந்தநல்லூர்
சிங்காரப்பேட்டை தருமபுரி
கடுவன்காடு ஈரோடு
மதுராந்தகம் சென்னை
திருவில்லிப்புத்தூர் சென்னை
கோவை இலந்தங்குடி
வெண்ணந்தூர் புலியூர்
காடுவெட்டிவிடுதி இராயநல்லூர்
குணவாசல் செல்லப்பம்பாளையம்
ஒலக்கூர் சோமனூர்
கண்ணுக்கானூர் குருவரெட்டியூர்
மிளகனூர் ஆண்டிப்பாளையும்
பெரும்பண்ணையூர் கிரிசமுத்திரம்
வண்ணமங்கலம் வெள்ளக்கோவில்
குரக்கவாடி பாவட்டக்குடி
சுவாமிமலை கல்லல்
சென்னை குச்சூர்
விளக்கம்பாடி உடன்குடி
முகந்தனூர் குண்டடம்
சின்னமனூர் திருமருகல்
சென்னை சென்னை
கண்ணுக்கானூர்
காட்டூர் மல்லம்பட்டி
சென்னை எட்டியலூர்
சென்னை வாழ்க்கை
பாப்பாம்பாடி தாம்பரம்
அரியலூர் அபிவிருத்தீஸ்வரம்
ஆதனூர் மலையம்பாக்கம்
ஒக்கநத்தம் அணைப்பட்டி
வெள்ளோடு வன்னிக்குடி
மப்பேடு சென்னை
நாகல்கழனி வீரப்பாண்டி
ஊழியபத்து தேவர்கண்டநல்லூர்
வடுகபாளையம் ஆரணி
சாயிநாதபுரம் மேலசன்னாநல்லூர்
பண்டரக்கோட்டை ராமலிங்கப்பட்டி
ஆரணி சென்னை
சென்னை சென்னை
கோவை செங்கற்பட்டு
அலசூர் சென்னை
சென்னை காவேரிப்பாக்கம்
சென்னை தஞ்சை
கடலூர் அருப்புக்கோட்டை
ஜோலார்பேட்டை திண்டிவனம்
மானாமதுரை இரட்டணை
மணப்பாறை காஞ்சீபுரம்
சேடர்பாளையம் சென்னை
உக்கநத்தம் வந்தவாசி
திருவிடைமருதூர் நசரத்பேட்டை
காட்டூர் திருநின்றவூர்
செண்பகச்சேரி மேட்டுப்பாளையம்
வீராநந்தபுரம் காட்டுமன்னார்குடி
தொட்டம்பாளையம் திருவரங்கம்
மாதவரம் அரிசிக்கரை
விருகம்பாக்கம் இரியூர்
ஆலடிக் குமுளை
பெங்களூர் சென்னை
அகத்திலிங்கம்பாளையம் அரியநாச்சிபாளையம்
வில்லிவலம் கொல்லன்பிள்ளையார்
கோயில் மேலகுண்டலபாடி
சவிரியூர் சென்னை
அடியக்கமங்கலம் மன்னார்குடி
மதுரை திருப்புட்குழி
வேப்பனேரி சத்தியவிசயநகரம் தொழுவூர்
அம்மையார்குப்பம் வாணியம்பாடி
களக்காட்டூர் கோவை
சாந்திபுரம் சமுசிகாபுரம்
பல்வாய்க்கண்டன் இடைப்பாடி
குடியாத்தம் சென்னை
மணப்பாறை உட்கோட்டை
மணமேல்குடி பரமாக்கோட்டை
அறந்தாங்கி சரவணபுரம்
திருக்காட்டுப்பள்ளி வைகுந்தன்
பூலாவரி கொடைக்கானல்
பாலையூர் பெரியகுளம்
மன்சுராபாத் (தஞ்சை ஐயன்பேட்டை
சென்னப்பநாய்க்கன் பாவிரெட்டிபட்டி
பாளையம் திருச்செங்கோடு
சென்னை மேட்டூர்
அணை அரையாளம்
அரங்கபாளையம் பம்பாய்
கடலூர் தண்ணீர்ப்பள்ளம்
கோவை தேரழுந்தூர்
தூத்துக்குடி நச்சினார்குடி
உடுமலைப்பேட்டை மேலூர்
வாளாவாடி வில்லிவாக்கம்
பல்லடம் புதுப்பாளையம்
திருப்பூர் திருப்பத்தூர்
கவுந்தப்பாடி கொருக்கை
கோபிச்செட்டிப்பாளையம் கிருட்டினாபுரம்
சத்தியமங்கலம் புதுக்கோட்டை
பவானி ஆலங்கோட்டை
கணக்கன்பாளையம் இளவலூர்
காரை நெய்வேலி
அம்மூர் பந்தல்குடி
இராணிப்பேட்டை பெரியபெத்தானூர்
பேரணாம்பட்டு சோளிங்கபுரம்
குடியாத்தம் கடத்தூர்
காயல்பட்டினம் நாச்சியார்கோயில்

தம்பி! நடைபெற்ற கூட்டங்களின் முழு விவரம் உடனுக்குடன் கிடைப்பதில்லை; கிடைப்பதனை அவ்வப்போது முறையாகப் போடவும் நமக்கு வசதி இல்லை. எனவே நான் திரட்டித் தந்துள்ளது எனக்குக் கிடைத்தவை. என் பார்வைக்குக் கொண்டுவரப்படாமல், நடைபெற்றிருக்கிற கூட்டங்கள் பலப்பல. சில ஊர்களில், குறிப்பாக சென்னையில் பல கூட்டங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன.

இவ்வளவு ஊர்களிலும் கூட்டங்கள், திராவிட நாடு பகற்கனவு என்று கூறிவிட்டுச் சிலர் சென்ற பிறகு; ஒரு திங்களுக்குள்.

இந்தப் பட்டியலில். இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி ஒரே நாளிலே பல ஊர்களிலே நடைபெற்ற கூட்டங்கள் சேர்க்கப்படவில்லை.

பொதுக்கூட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. . . . கொடி ஏற்றுவிழாக் கூட்டங்கள், உறுப்பினர் கூட்டங்கள் இணைக்கப்படவில்லை.

இவ்வளவு கூட்டங்களிலும் திராவிட நாடு இலட்சிய நம்பிக்கை கொண்டவர்கள், அதற்காகப் பணியாற்ற உறுதி கொண்டவர்கள் கலந்துகொண்டனர். எழுச்சிக்கு என்ன குறை! இவ்வளவு கூட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் ஏமாளிகள், விலகிச் சென்றவர்கள் மாமேதைகள் என்று எவரே துணிந்து கூறுவர். விலகியவர்களின் விளக்க அறிக்கைகளைப் படித்தான பிறகுதான், தம்பி! இத்தனை கூட்டங்களில் மக்கள் கூடினர்.

இவ்வளவு தொடர்ச்சியாகவும், பரவலாகவும், கழகக் கூட்டங்கள் நடைபெறுகின்றன; பொது மக்களின் பேராதரவு அத்துணை வளமாக இருக்கிறது என்பது விளக்கமாகிறதல்லவா? நாங்கள் விலகிய பிறகு, நாடே திகைத்துத் திணறி, கழகத்தை உதறி எரிந்துவிட்டது என்று எவரேனும் கூறினால், நம்பத்தான் முடியுமா - சொல்லத்தான் நா கூசாதா? இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு கழகத்தைத்தான், சிலர் கோபத்தைக் கருவியாக்கி அழித்துவிடலாம் என்று காங்கிரசார் எண்ணுகின்றனர். என்னே அவர்தம் நப்பாசை!

இத்துணை ஊர்களிலும் இந்தப் பட்டியலில் சேர்க்கப் படாமல், விடுபட்டுள்ள இன்னும் சில ஊர்களிலும், ஏற்பட்டுள்ள எழுச்சி, "பட்டுப்போ!' என்று நம்மைவிட்டுப் போனவர்கள் கட்டளையிட்டதும், பாழ்பட்டுப்போய் விடவா செய்யும்? மதியிலியும் கூறானே! அங்ஙனமிருக்க, கலகலத்துப்போய் விட்டது, கரைந்துபோய்விட்டது என்று கதைக்கிறார்களே காங்கிரசார் எற்றுக்கு? பீதி கிளப்பவா? இத்தனை ஊர்களிலும், கழகக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள், இவர்தம் கூற்றினைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்கமாட்டார்களோ! ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசித் திரிகிறார்கள்? - நமது ஊரில் நடைபெற்றதே கழகக்கூட்டம்; ஆர்வத்துடன் எழுச்சியுடன்! - என்று பேசாமலா இருப்பர்?