அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
1

பெரியாரின் ஏசல் கணை -
தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் -
சம்பத் பிரிவு -
கழகக் கலைஞர்.

தம்பி!

கூத்தாடிகள்
கூவிக் கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
பணம் தேடிகள்
பதவிப் பித்தர்கள்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்
அன்னக் காவடிகள்
ஆடி அலைபவர்கள்.

இவை, "குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் - அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது.

காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.

வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, "பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.

படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி - அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்கு மேற்குத் தெரியாத ஏமாளி களும்தான் வேறு வேறு கட்சிகளில் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல்போனதுகள் - பட்டம் இழந்ததுகள் - சரிகைக் குல்லாய்கள் - சலாமிட்டு வாழ்ந்ததுகள் - ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர் - இளைஞர்கள் - இளித்துக் கிடக்க வேண்டிய நிலையில்லாதவர்கள் - நிமிர்ந்த நெஞ்சினர் - இவர்களெல்லாம் காங்கிரசில்தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன்! நான் சரிகைக்குல்லாய்க்காரன் அல்ல! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி! சுடச்சுடக் கொடுக்கிறார்! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார். எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு! துடிக்கிறான்! சுருண்டு கீழே விழுகிறான்! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.

பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏசக் கற்றுக் கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.

முதலிலே, பெரியார் என்னை ஏசிப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர் - காது குளிர! பிறகு, தாங்களே பேசலாயினர் - நாமணக்க!!

என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினார்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள், தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.

அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதி சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்தியாகிரகப் பெருமை, இர்வின் - காந்தி ஒப்பந்த அருமை, என்பவை யாவும் அவர் களுக்கு மறந்தே போய்விடும்.

அவர்களுக்கு ஒரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நேரம் கிடைத்தால்.

இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர் எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.

அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டு, கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள்! அவர் நடையையா பழிக்கிறீர்கள்! - என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என் மீது விழும் தூசுகளைத் தன் அன்புக் கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமறுவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்!

எனக்காக அவர் அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக் கூடிய "கைம்மாறு' என்ன இருக்க முடியும்?

உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்தது கண்டு, சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத் தண்ணீர் உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது - இது ஒரு பெரிய விஷயமா!!

கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம் - இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்தி ருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் எடுத்து வைத்துக் கொண்டு, தோழர் சம்பத் பேசுகிறார் - தாங்கிக் கொள்கிறேன் - அதுதான் நான் காட்ட வேண்டிய "கைம்மாறு' என்றும் கொள்கிறேன்.

கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மன நிம்மதி எனக்கு ஏற்படுகிறது.

பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ, அது போலவேதான் இதற்கும்.

குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய் - என்றா கூறுகிறோம் இல்லையல்லவா! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை - அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், "அண்ணன்' என்று ஏற்றுக் கொள்வேன் - அது வரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக் கொண்டிருந்திருப்பேன்.

காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம் - கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம் - மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம் - இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர் சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப்பெற்றாலொழிய, உன்னை என் "அண்ணன்' என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள்? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழ வைத்திடும்.

அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.

அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக் கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித் திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?

முடியாதுதான்!

ஏன்?

காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.

ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு; பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்ததுபோல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.

பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக் கேட்டுமிருக்கிறேன்.

உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.

ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒரு காலத்திலே சுவை தருவதாகக் கருதப் பட்டு வந்த திறமை; பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக்கூடும்.

எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெற முடியும் என்றும் நம்புபவனுமல்ல, திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடிய வனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள்.

தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறைவதுண்டோ?

உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால், அன்பு குறைவதுண்டோ?

இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது.

பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக் காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள, ஒரு வார்த்தை, "ஆமண்ணா! குறைகள்தாம் இவை!'' என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டினார்களா என்றால், இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர்.

சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் - அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!

அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை.

அண்ணன் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே!

தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும் போதெல்லாம், நான் வரவு - செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் - மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக் காட்டத்தான்.

எந்தத் தூற்றலையும்தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.

எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் - நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.

மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டுவிடாதே - நான் அப்படி! - என்ன செய்யலாம்!! கதையைக் கேளேன் - கருத்து இருக்கிறது.

ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம் - ஒரு நாள் காலை, அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு. காலை வெயில், பித்தம் உண்டாக்கும்; இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தானாம். வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய் விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.

தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள், நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.

என் இயல்போ, என்னை எவர் எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப் பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக் கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக் கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல; அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள்தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.

வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒரு முறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.

சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்துகொள் வதில்லை - மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம் - என்று கண்டிக்கிறார்கள்.

திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக் காரத்தனம் - தமிழ்நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.

கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.

இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால் கூறுகிறார்கள்.

மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டு களைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்பு வரையில் கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள், அதை எண்ணி மகிழ்ச்சிப் பெறுகிறேன்.

முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.

ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசி யிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.

கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.

பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும்.

"சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?'' என்று.

தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்ய சபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் - என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், "எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் - அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது.

இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக் கொண்டேன்.

இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில்!

இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி! நீதான் சொல்லேன்.

சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப் பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ் காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்!! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய!! சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியமாவது, சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்தது போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்:

"அன்று ஒரு நாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின்மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல் குடகுநாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங் களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வை யோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார் - இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லி விட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று பெருமூச்சோடு தொடங்கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலேதான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் - ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை.''

எப்படித் தம்பி! பாராட்டுதல்!! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல; இதை "நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப் பற்றி, "சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள்.

அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார், என்றுதானே சொல்லுவார்கள்!!

இந்த விதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ மற்றவர் களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை, மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்

"சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்டதொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்ததில்லை.''

சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.