அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
3

உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்படும் "அவரது' மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அது மட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதே நேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாக தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பல முறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடிகூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும் அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத்தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி. நேருவுக்குத் "தோன்றவில்லை, அந்தத் துயர்படும் மக்களைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வுபெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துத் தென்னஞ் சோலைகளினூடே. பின் அது சலித்தபோது மலை மீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானை களையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று, பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருக வந்த வனவிலங்குகளையும், நிலவொளியில் காதல்புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்து, களிப்படைந்து கொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.

இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல சீமையில் பஞ்சம் என்ற போதும், தஞ்சையில், திருச்சியில் புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக - புதுவித இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.

இத்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, "ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ'வாகி விட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.

ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்ட ரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதேயொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை; இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள்தான் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்குத் தலைவர்களைத் தேடுவதும் வீண் வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும் வடவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும், செயல்களும், எல்லாம் திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

அடுத்து நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் "சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டுவிடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.

இன்றைய உலகு "பானிப்பட்', "பிளாசி', "வந்தவாசி' காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில், ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள்ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து, ஒரு பெரிய நாடு போர் தொடுத்துவிட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.

ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ, பொறுத்ததல்ல. "திராவிடம் சிறுநாடு ஆகவே பாதுகாப்பில்லை' என்பது பத்தாம்பசகளி ன் பேதமைக் கூற்றே தவிர வேறில்லை.

நாளுக்கு நாள் திராவிட நாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும், திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலக மகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழ வைக்காது, தானும் வாழாது.''

அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம் போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் - நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா என்று கேட்கப்படுமேல். இதனைக் கூறுவேன், அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959 செப்டம்பர் 12, 13 நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி.மு. கழக மாநாட்டின்போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. "திராவிட நாடு' எனும் இலட்சியத்தைக் குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.

"தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று. அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது.''

1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்?

1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம்.

தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, "நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்'' என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா?

பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று பேசுவதா? நாம் எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழி நடந்து, கஷ்ட நஷ்டம் ஏற்றவர்கள், சரி! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறி விடலாம் என்று வந்துவிட வேண்டுமா? வந்துவிடுவார்களா? முறைதானா அது?

இதற்கு, பெரியார், திராவிட நாடு வெங்காய நாடு என்றாரே, அப்போதே, ஆமாம்! வாடைகூட அடிக்கிறது என்று கூறி விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறி யிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே! "எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க - திராவிட நாடு கேட்டோம் - இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி - மலையாளத்தான் பிரிஞ்சாச்சி - கன்னடத்தானும் போனான் - இப்ப ஏன் திராவிட நாடு, வெங்காய நாடு?'' - என்று பேசினாரே, அப்போது கழகத்தவரைக் கூட்டி, திராவிட நாடு பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார். யார்? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில் - தெளிவாக - அழுத்தந் திருத்தமாக.

"ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக் காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும் - நமக்குக் கவலையில்லை.''

இப்படி பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும்? அதைத்தானே சொல்லத் தோன்றும்.

திராவிட நாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று "பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ தம்பி! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும், என்னால், அதனை, தோழர், சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியது.

"இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுத வேண்டியது உங்கள் கடமை என்று.

"அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள், திராவிட நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் "திராவிட நாடு திராவிடருக்கே'' என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக் கொள்வேன்.''

தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர். இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்தி வைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு. கழகத்தை விட்டு விலகி, 19-4-61-ல் திராவிட நாடு பகற்கனவு; தமிழ்நாடுதான் பலிக்கும் என்று பேசுகிறார்.

உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மன மாற்றம் - திடீர் முடிவு!

மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி, அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை! முதலில் விலகல் - பிறகு விளக்கம் - பிறகு புதுக்கட்சி - புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடிய தல்லவா?

தமிழ்நாடு கூடப் பிரிய வேண்டுமென்பதல்ல அவருடைய கட்சியின் குறிக்கோள்.

தமிழரசு - தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் - இவை அல்ல.

வேண்டும்போது பிரிந்துபோகும் உரிமை, சட்டப்படி, தரப்பட வேண்டும்.

உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் - தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக்கோளாம்.

விளக்கங்கள் தொடரக் கூடும்.

ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை!

பிரிவினை உரிமையை ஒப்புக் கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க, இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளுமே!

எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமை யையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்திய துரைத்தனத்தில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா? அரசியல் அறியாத அப்பாவிகளா? புரியவில்லை!

போகட்டும், தமிழ்நாடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட இன மக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு - இருந்தும் அவர்களுக்கு "பிரிவினை' உடனடியாக வேண்டாம் - பிரிந்து போகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக் கசப்பாக இருப்பதால், கழகத்தைவிட்டு இவர் போகிறார். என்ன நியாயமோ? ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும்? திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லி, கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? இருக்கட்டும் - யார் இந்தக் கலைஞர்கள்? மேடைதோறும், எப்படி எப்படி, படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அரிசி நிலை பற்றி, அங்காடிப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்க ஒட்டாது தடுத்துவிடும், பொல்லாதவர்களோ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல, கழக நிலை பற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும். . . என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது. பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம்.

பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்!

தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ:

"மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந் திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனை யுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான்.