அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
2

"சட்டமன்றத்தில், தி.மு. கழகத்தினர் எதையும் சாதித்து விடவில்லையெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.''

இப்படிப்பட்ட விளக்கம் - பாராட்டுதல் - பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கி வந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன் - தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்த தி.மு.க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத்தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலைத் தோழர் ப.உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த துணிச்சலையும், பாராட்டிப் பேசியதை; இவ்வளவும் கேட்டான பிறகு, இப்போது, அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது! சிரிக்கத்தான் தோன்றுகிறது!!

சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாகிலும் பெற, முயற்சி எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக் கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம்! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால் பாராட்டுதலை அல்லவா வழங்கிக் கொண்டிருந்தார்!! நாங்கள் சட்டசபையில் சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே, எப்படி என்று, தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன். கேட்டால், இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூட மூட்டாது.

"கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித் திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால், நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக் காரணம், அண்ணாதுரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்.''

தம்பி! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால், அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ் நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மை, தோழர் சம்பத் மகிழச் செய்தார். இப்போது, நாம் சட்ட சபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு, ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்து கொண்டிருப்பது! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! சில காலம். அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை!

தம்பி! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றி பெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா? எழுதிப் படித்ததுண்டா? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது, தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில்.

நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது - இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல - இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல - அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து நடந்துகொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து, அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது.''

தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்து கொண்டிருக் கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும் - இப்போதைக்கு - இந்த அளவில்,

பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற் கனவு என்று கூறுகிறாராமே, அதைப்பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை; சங்கடம் இல்லை.

திராவிட நாடு பகற் கனவு என்று நேரு கூறினார் - ஏற்க மறுத்துவிட்டோம். காமராஜர் கூறினார் - கவைக்குதவாப் பேச்சு என்றோம்.

பெரியார் பேசினார் - போக்கை மாற்றிக்கொண்டார் என்றோம்.

இப்போது தோழர் சம்பத் பேசுகிறார்! அதனால் என்ன?

ஆனால், பலர் கூறியும் நமக்கு, "திராவிட நாடு' பிரச்சினையில், ஏன் அவ்வளவு அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை - ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை. மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலைகொள்ள வில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத் திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது - பேரம் பேசுவது - குறைத்துக் கேட்பது - சாயலைக் கேட்பது - இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு வேண்டுமானால் காரியவாதி, பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும், பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர், இலட்சியவாதிகளாகார் - என்று நான் படித்த ஏடுகள் கூறுகின்றன!

இந்த நம்பிக்கையுடனேதான் தோழர், சம்பத் லால்குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக்கினார்.

அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, "அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன்' என்று பேச வைத்தது.

தோழர் சம்பத், நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்து வைத்திருக்கிறது, அது இது:

"இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது, வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ்.எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்து கொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறை சென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத் தோழர்கள், வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் ஏன் பிரிய வேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுய நிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து "இணைந்து' அமைக்கும், திராவிடக் கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்க வேண்டும் என்பது நமது இலட்சியமாக அமைய வேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். ஒன்று, ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்ற வேண்டுமென்பது, மற்றையது கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர், சர், போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக் கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டு வந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக் கொண்டு, திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல ஜனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம்; உழைத்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம். என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.

அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல், இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவல நிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம் கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச் சாவு - பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறி விட்டதால், வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல், பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், என்னும் துன்பச் சூறாவளி கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர் வாழ்விலே வளம், ஏற்றம், ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.

டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்பிடி நமக்குச் செலவழிக்கப் படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலின், டி.டி.டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடை பெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த்தேக்கத் திட்டங் களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.

நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி வரிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும் பகுதி சுயநலமிகளாய் நாட்டைப்பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருநஷ்டத்தைப் பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய சுமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம், ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக் கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப் படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைக்கிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள், இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம் - வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல். புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குவித்துக் கொள்ளும் டில்லி, நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை. எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைத்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வர வேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்துவிட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம். செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப்பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமய முதல் குமரி வரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும், கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்க வேண்டும்.

ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில், சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண் டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறி கொடுக்கும், கொள்ளை கொடுக்கும், ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும், திராவிட நாட்டு விடுதலையைத்தான் மருந்தாகக் காட்டுகின்றன.

இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ன்ய்ண்ற்) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித் தனி நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்கு பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதேபோல் இந்திய தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை.

வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, ஹைய்தர் அலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்திய தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோதுதான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை, நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில், மொழியில், முன் வரலாற்று நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்றுபடுத்தி ஓரினமாக்கக் கூடியது எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்தச் சர்க்கார் அஞ்சி பஞ்ச நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று, வாய்க்கால் வெட்டுவது, அந்தச் சமயத்தில், நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று, அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல. பீகாரிலே பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது!