அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
4

இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப் பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும்.

கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் "நாடோடி மன்னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள்.

இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக் கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக் கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.

அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனை, சென்னையில் நடைபெற்ற "நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

"வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக் கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் "நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!''

"வாழ்க மக்கள் கலைஞர்!''

அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

"தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ "சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக் கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும்.

தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றல் தி. மு. க. வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காக குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், "கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா?

ஆரம்ப காலத்தில் "கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ "அமரசிருஷ்டி' என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்?

நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்!

தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார்!

பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா!

நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்μ உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை.

அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில்.

கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!

"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்.''

"அப்படியேதான் பிறரும். . . . பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்.''

"அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.''

"கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.'' "கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர் களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.''

தெளிவான விளக்கம் அல்லவா?

தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட "மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, விலக்கு அளிக்கப் பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்! இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!!

மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது.

"தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில் இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்.''

இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார்.

இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற "உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.

"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் "அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், "நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், "கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சி யிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.''

தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,

கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
காமச்சுவைப் பேசினர்
கதை எழுதிப் பிழைப்போர்

என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.

வைதிகர்கள் சொல்வார்கள் "வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்?

ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்!

அறிவாளிகள்
அடக்க குணமுடையோர்
அழகு நடையுடையோர்
கலைத்தொண்டு புரிவோர்
மாற்றாரும் மகிழப் பேசுவோர்
மாண்பு காத்திடுவோர்

என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய "வழி' ஆகிவிடுகிறது.

இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை.

இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும்.

அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.

அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் - வீணான வெப்பத்தை அல்ல.

வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது.

இது நாடு; காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும்.

எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் - ஏற்படக் காரணம் ஏற்படினும், - அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள், நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், "அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்.

கொள்கை மறவாதீர்!
கோபத்துக்கு ஆளாகாதீர்!
கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!

அண்ணன்,

23-4-61