அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நாட்டின் நாயகர்கள்
1

பறட்டைத் தலையும், சொறி சிரங்கு பிடித்த உடலும், கண்களிலே அழுக்கேறியும் கிடந்தாள் இந்தக் குட்டி! எருமைக் கன்று தான் விளையாட!! களத்துமேட்டிலே நன் முதன் முதல் கண்டபோது கண்றாவியாக இருந்தது. அப்படிப்பட்டவன், இங்கு மேய்ப்பும் தேய்ப்பும் கிடைத்தால், மேனியிலே மெருகு ஏறி, கண்களிலே ஒளியும் நடையிலே புது ஒயிலும் உடையிலே தனி ஒய்யாரமும் பெற்று, மினுக்கிக்கொண்டு, திரிகிறாள். இவளை அன்று கண்டவர்கள் அவலட்சயம் என்றார்கள்; இன்றோ அலங்காரவல்லியாகக் காட்சி அளிக்கிறாள். இவ்வளவும் எதனால் ஏற்பட்டது? எப்படிக் கிடைத்தது இந்தப் ‘பவிசு?’ எல்லாம் நான் எடுத்துக்கொண்ட முயற்சி, பட்டுபாடு, கொட்டிய பணம், காட்டிய அன்பு, அக்கரை! - என்-று பட்டிக்காட்டுப் பாவையை மருவமகளாகக் கொண்ட பட்டணத்து மாமியார், கூறிக்கொள்வதுண்டு. குழந்தை இங்கு எப்படி இருந்தாள், கொழு கொழுவென்று, மாடு கயிறு அறுத்துக்கொண்டு ஓடினால், தாவிச் சென்று தடுத்து நிறுத்துவாள், களத்துமேடு சென்றால், மான்போலத் துள்ளுவாள், மரத்தில் பழங்களைக் கண்டால், கல் வீசுவாள், கொத்துக்கொத்தாகக் கீழே விழும், கண்மூடிக் கண் திறப்பதற்குள் வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பாள் - அப்படி இருந்த என் தங்கம், இந்தப் பாழாய்ப்போன பட்டணத்துப் பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டு, காய்ந்த தேய்ந்த போய்விட்டாள். கால் கை ஓய்ச்சலாம், கண் பார்வையும் சரியாக இல்லையாம். மூக்குக் கண்ணாடி மாட்டிவிட்டார்கள், சாப்பாடு சரியாகச் சாப்பிடுவதில்லை, என்னமோ ஓவலாம்! டானிக்காம், மருந்தாம், மாத்திரையாம், வெட்கக்கேட்டைக் கேட்காதேயடி அம்மா கேட்காதே, பெற்ற குழந்தையை வைத்துக்கொண்டு சீராட்டக்கூட அவளுக்கு முடியவில்லை, ஆயாவிடம் விட்டு விடுகிறாள். கண்டால் துக்கம் பிய்த்துக்கொண்டு வருகிறது, என்று பட்டிக்காட்டுத் தாய், பட்டினத்துப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்ட, தன்மகளைக் குறித்துப்பேசி, ஆயாசமடைவாள்.
***

இரவு தூக்கம் கிடையாது, ஒரே இருமல்! தெருவிலே உள்ளவர்களெல்லாம் புகார்செய்வார்கள், அப்படி இருக்கும் இருமல்! எது சாப்பிட்டாலும் உள்ளே தங்காது! ஜீரணம் கிடையாது இப்படி இருந்த ஆசாமிக்கு, ஆறு நாள் பஸ்பம், நாலு நாள் கஷாயம், ஒரு பதினைந்து நாள் லேகியம் கொடுத்தேன், இருமல் இருக்குமடம் தெரியவில்லை, பொன்னிறமாகிவிட்டது உடம்பு, முகத்திலே ஆரோக்கியக்களை தாண்டவமாடுகிறது, காலையிலே மணி பத்து அடித்தால், வயிறு ‘கபகப’ என்கிறதாம். கல்லைத் தின்றால்கூட ஜீரணமாகிவிடுகிறதாம்! இவ்வளவும் எதனால், எப்படி? நமது, பஸ்பம் கஷாயம், மாத்திரை, லேகியம் எவ்வளவு கிலாக்கியமானவை. நாலு தலைமுறையாக எங்களிடம் இருக்கும் முறைப்படி தயாரிக்கப்பட்டவை. என் கை ராசியும், ஒரு காரணம்! இவ்வளவு நன்மை கிடைத்திருக்கிறது என்னாலே, அவனோ, ஒரு துளி நன்றிகூடக் காட்டவில்லை. மருந்துச் செலவுக்கென்று ஏதோ அப்போதைக்கப்போது கொஞ்சம் பணம் கொடுத்தான். அது தவிர, சிவனாணையாக, எனக்கென்று ஒரு ரூபாயும் தரவில்லை. நானும், புண்யம் கிடைக்கட்டும், ஆசாமி புழுத்துப்போகிறானே, காப்பாற்றுவோம், அவன் பிள்ளை குட்டிகளுக்கு வேறு யார் திக்கு என்று எண்ணித்தான் வைத்தியம் செய்தேனே தவிர, இவன் என் கைக்குத் தங்கத்தோடா போடுவான், பட்டு பிதாம்பரம் வாங்கித் தருவான் என்ற நினைப்பிலே செய் வில்லை. ஆசாமிக்கு நல்ல மனம் இல்லை, போகட்டும், வாழட்டும் - என்று நோய் தீர்த்துவைத்த நாட்டு வைத்தியர் கூறுவார், வருத்தத்துடன். நோய்போக மருந்துண்டவனோ “தெரியாத்தனமாக, அந்தக் கட்டு மாத்திரைக்காரனிடம் நாலு நாள் இருமல் என்று சொன்னேன், அவ்வளவுதான்; எதை எதையோ கொடுத்து குடலையே வேகவைத்துவிட்டான் - இரண்டு நாளைக்கு ஒரு முறை ஐந்துகொடு, பத்து கொடு; அயம் வாங்கவேணும், பவழம் வாங்கவேணும்; கொத்தமல்லி வேணும், கொடிமுந்திரி வேணும் என்று சொல்லிச்சொல்லிப் பணம்கேட்டான்; கொடுத்தேன்; கடைசியிலே கை கால் அறுந்தே கீழே விழுந்துவிடுவது போலாகிவிட்டது! பிறகுதான் டாக்டரிடம் கைகாட்டினேன்; உடம்பு பழையபடி - நல்லபடியாகி, மனுஷனாக உலாவுகிறேன் - செய்ததெல்லாம் போதாது என்று பணம் மேலும் வேண்டும் என்று கேட்டபடி இருக்கிறான்; எப்படி இருக்கிறது, வைத்தியனுடைய வேலை!! - என்று நொந்து கொள்ளுவான்.
***

இவர்கள் பேசிக்கொள்வதிலே யாரிடம் நியாயம் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எளிதல்ல - அதற்கல்ல இதை எடுத்துக்காட்டுவது. மனக்குறையைக் கொட்டிக் காட்டி, தங்கள் பக்கமே முழு நியாயமும் இருப்பதாகக் கூறிக் குமுறுவது, ஒரு வேடிக்கையான இயல்பு, சுபாவம். விட்டு மருகளைக் காட்டிப் பேசும் மாமியும், மருந்துப் பெட்டியைக் காட்டிப் பேசிடும் மருத்துவனும் கிடக்கட்டும், நாட்டை ஆளும் நாயகர்களே, இதுபோலப் பேசுகிறார்களே, அதற்கென்ன சொல்லுகிறீர்கள்!! பேசாத நாளில்லை, கூறாத தலைவரில்லை! அதிகாரம் அதிகமாக அதிகமாக இந்தக் குறை கூறிக் குமுறும் போக்கு, தங்கள் சாதனைகளைப் பற்றிக் கித்தாப்புப் பேசும் போக்கு வளருகிறது. இந்த ‘வித்தை’யில் நமது நாட்டின் நாயகர்களாகியுள்ள காங்கிரஸ் தலைவர்களை மிஞ்சக்கூடியவர்கள், மேதினியில் எங்கும் இருக்க முடியாது. வானம் பொழிவதும், கடல் வரண்டு போகாதிருப்பதும், காற்று வீசுவதும் கூடத் தமது திருத்தொண்டு கண்டு களித்துத் தேவன் அருளிய வரத்தால் தான் என்று கூசாமற் கூறுகின்றனர். கீர்த்தி கித்தாப்புக்காõக எதையோ பேசிக்
கொள்ளட்டும், பேசுவதால் மனமகிழ்ச்சி கிடைக்-குமானால் அதை நாம் ஏன் தடுக்கவேண்டும், பேசட்டும். ஆனால் நமக்கு உள்ள வருத்தம் இவர்கள் இவ்வண்ணம் பேசுகிறார்களே என்பதால் அல்ல! இவ்விதம் பேசி, உள்ளத்தை மறைக்கிறார்களே, என்பதால்தான். நல்ல காலம் வருகுது! என்று கூவிப் பிழைக்கும், குடுகுடுப்பையிடம் கோபப்படாலாமா - முறையல்ல! ஆனால், அருமையான தூக்கம் கெடும்படியாகவும், குழந்தை கேட்டு அலறி அழும்படியாகவும், குடுகுடுப்பை கூவினால், கோபம் வரத்தானே செய்யும். அதுபோலவே, அடிக்கடி ஆர்ப்பரித்து, ஆளவந்தார்கள் உள்ளதை மறைக்கப் பார்க்கிறார்களே என்பதை அறியும் போதுதான் நமக்குப் கோபம் வருகிறது, வருத்தமும் பிறக்கிறது. இல்லையானால் பட்டணத்து மாமியும், பொட்டலம் தரும் வைத்தியனும் பேசும் முறையில் இவர்களும் ஏதோ பேசட்டும், நமக்கென்ன’ என்று இருந்துவிடலாம். ஆனால், அவர்கள் பேசுவது, வெட்டிப் பேச்சு அல்ல, திட்டமிட்டுப் பேசுகின்றார்கள். மக்களை ஏய்க்க; உள்ளதை மறைக்க! எனவேதான், அந்தப் போக்கைக் கண்டிக்கவேண்டி வருகிறது.

ஏழாண்டுக் காலமாகிறது, நீங்கள் ஆளவந்தார்களாகி; உங்கள் சொல் கேட்டு நடந்தோம்; விரல் காட்டும் வழி நடந்தோம்; அன்பையும், ஆதரவையும், வாழ்த்தையும், வணக்கத்தையும் கொட்டினோம்; இஷ்ட தேவதையைப் பூஜிப்பது போலத் தொழுதோம்; இஷ்ட தேவதையைப் பூஜிப்பது போலத் தொழுதோம்; சோடசோபசாரம் செய்தோம். தேசபக்தரே! தேசோத்தாரகரே! தேச பந்துவே! தீனபந்துவே! ஜோதியே; சடரே! முத்தே! மணியே! வாழ்வளிக்கும் பெம்மானே! என்றெல்லாம் அர்ச்சித்தோம்; இவ்வளவு அன்புமழை பொழிந்தோம்; நீங்கள் அகமகிழ; எனினும் ஏழாண்டுக்காலமாக, மொகலாய மன்னர்கள்போல தில்லியில் துரைத்தனம் நடத்துகிறீர்கள், ஓய்வு ஒழிச்சலின்றி, “சுயராஜ்யம் பெற்றுத்தந்த “சுவிசேஷத்தைக்”க் கூறியபடி இருக்கிறீர், தியாகம் செய்தோம், கவனமிருக்கட்டும் என்று துந்துபிமுழக்கம் செய்கிறீர்-காது குடைச்சல் எடுத்தாலும், பரவாயில்லை, விடுதலைப் போர் நடத்தியவர்களாயிற்றே என்பதற்காகக் கேட்டுக்கொண்டோம்; இவ்வளவுக்கும் பிறகு, வாழ்வளிக்கும் திட்டம் எங்கே, சீரளிக்கும் சட்டம் எங்கே, என்ற கேட்டால், சீறுகிறார்களே, நியாயமா? என்று மக்கள் மனம் குமுறிக் கேட்கும்போதுதான், காங்கிரஸ் தலைவர்கள் பட்டிக்காட்டு மாமிபோலப் பேசுகிறார்கள்.

குலை அறுந்துவிடும் போலிருக்கிறதே அப்பா! வண்டி, என்ன இவ்வளவு மோசமாக இருக்கிறதே, என்று கேட்டால், வண்டியோட்டி, “வண்டி ஒண்ணா நம்பர் வில் வண்டி தாங்க - பாதை அவ்வளவு படுமோசம், குழியும் வெடிப்பும் நிறைய இருக்கிறது, என்றுதானே கூறுகிறேன்.

“மாடு, மட்டம், மகாமட்டம்; அதற்கு வயிறாரத் தீனி வைத்தால்தானே, ஓடும். ஆமைபோல நகருகிறதே” என்று சொன்னால், ஆமாம் என்றா வண்டியோட்டி கூறுகிறான். ‘குதிரை போல ஓடும் நம்மாடு, ஆனா, நீங்க நோயாளியைக் கூட்டிக்கிட்டு வாரிங்களே, என்பதனாலேதான் நான், நிதானமாக ஓட்டுகிறேன்’ என்றுதான் சொல்லுவான். நாட்டை ஆளும் காங்கிரஸ் நாயகர்களும் அதேபோலப் பேசுகிறார்கள். அம்மட்டோடும் விடவில்லை, அதிகாரம் இருக்கிறதல்லவா, அதனாலே, எதிர்த்துக் கேட்பவர்களை இம்சிக்கவே செய்கிறார்கள்; ஏளனம் பேசி எதிர்க்கட்சிகளை ஒழித்திட செய்கிறார்கள்; எங்கள் தகுதியும், திறமையும் அறியாயா! அன்று, தண்டியாத்திரை சென்றபோது, அலிப்பூர் சிறையில் இருந்தபோது, அகமத்கான் அடித்தபோது, என்று பலப் பல ‘பழயதை’க் கொட்டிக் காட்டி, பயமூட்ட எண்ணுகிறார்கள். இவற்றையெல்லாம் விட வேறோர் வகையான “சரடு’ விடுகிறார்கள். ஆண்டு ஏழுதானே ஆகிறது, நாட்டைத் திருத்தி, நல்லாட்சி அமைத்து, வேண்டிய நன்மைகளைச் சமைத்திட நான் வேண்டாமா; சுலபத்திலே ஆகுமா; பத்தோ, இருபதோ, ஐம்பதோ, நூறு ஆண்டுகளோகூட ஆகலாம், வேலை அவ்வளவு இருக்கிறது, அவ்வளவு கடினமானதுங்கூட! என்று பேசுகிறார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் வேலை, பாலை வனத்தைச் சோலை வானமாக்குவது போன்ற, மிக மிகக் கடமையான வேலை போன்றதாகும் என்று, மக்கள் எண்ணி ஏமாற வேண்டாம் என்று இந்தத் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். புயலாலே பூந்தோட்டம் அழிந்தது; கிணற்றிலேயோ இடி விழுந்து தூர்ந்து போய்விட்டது. ஆறு ஆறாவது கல்லில் இருக்கிறது, அங்கிரந்து வாய்க்கால் வெட்டிக்கொண்டு வருவதற்கோ, இடையில் ஒரு சிறு குன்று கிடக்கிறது. நான் அநத்க் குன்றைக் குடைந்து வாய்க்கால் அமைக்கலாமா, அதைச் சுற்றி வளைத்துக்கொண்டு வாய்கக்கால் கொண்டு வருவதா என்பது பற்றி, நிபுணர்களைக் கேட்போமா அல்லது “நின்று தவமிருந்தாள்,” கோயில் பூஜாரியிடம் யோசனை கேட்போமா என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறேன், சிரமப்படுகிறேன், நீயோ மல்லிகைப்பூ மாலை எங்கே, மருக்கொழுந்து கட்டு எங்கே, மனோரஞ்சித மலர் எங்கே? என்று கேட்டுத் தொல்லை தருகிறாயே என்று பேசும் தோரணையில், காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெள்ளைக் காரன் நீங்கியபோது, பிணம் புதைக்கக் குழி வெட்டும் வேலையிலிருந்து இவர்கள் துலக்க வேண்டி வந்ததுபோலவும், அதற்குள் மக்கள் ஏதோ வீணாக அவசரப்பட்டு, ஆத்திரப்படுவது போலவும் கருதிக்கொண்டு, குறைபட்டுக் கொள்கிõறர்கள்.
***

வெள்ளைக்காரன் இந்தியாவைச் சுரண்டினான் - மறுப்பாரில்லை; செல்வத்தைக் கொள்ளை கொண்டான் - மறைப்பாரில்லை; ஆனால், அவன் விட்டுச் சென்ற இந்தியா பாலைவனமல்ல - படுகுழி நிரம்பி, கள்ளி காளான் பூத்துக் கிடக்கும் கடுவெளியுமல்ல என்பதை மக்கள் அறிவார்கள்; இந்த மகானுபாவர்க, மாமிப் பேச்சுப் பேசி அதைத்தான் மறைக்கப் பார்க்கிறார்கள்.

பெரும் போரிலே சிக்கி, கொடுமைக்கும் குண்டு விச்சுக்கும் இலக்காகி, எழில்மிகு நகரங்கள் மண்மேடுகளாயின; வளம்மிகு வயல்களெல்லாம் பிணக்காடுகளாயின; தொழிற்சாலைகளெல்லாம் குப்பை மேடுகயாளின; கடலை இரத்த மயலாயிற்று! குடும்பங்கள் இலட்சக் கணக்கிலே சிதறின! வாழ்வு சிதைந்தது! வீடிழந்து நாடிழந்து, எதிரியிடம் சிக்கிக் சீரழிந்து போன மக்கள் ஆயிரமாயிரம்! நடுநிசியில் விமானம் வரும்; நாசக் குண்டுகளை வீசும்; கட்டிலும் தொட்டிலுமே புதை குழியாகும்; கன்னல் மொழிக் குழவி கண்ணெதிரே கூழாகும்; மனம் குழம்பித் தாய்மடிவாள்; தகப்பனோ, மரமாகி நிற்பான், மனத்துயரால்!

கட்டிடங்கள் இடியும் சத்தமும், குண்டுகள் சீறிடும் சத்தமும், குலை நடுங்கி நடுங்கி மக்கள் கூச்சலிடும் சத்தமும், நித்தியநாதமாக இருந்தது. தலைநகர்களைவிட்டு சர்க்கார் ஓட்டமெடுப்பதும், உயிரைøக் காப்பாற்றிக் கொள்ளக் குழியில் இறங்கிக் குடும்பம் நடாத்துவதும், சர்வசாதாரணமான சம்பவமாக இருந்தது.

நாமெல்லாம் மாண்டுபோனாலும், நாம் பெற்றெடுத்த செல்வங்கள், பிள்ளைகனி அமுதங்கள், இந்தப் பேசும் பொற்சித்திரங்கள் பிழைத்தால் போதும்; குண்டு வீச்சும், பிண நாற்றமும் பிடித்தாட்டும் இந்த நாட்டிலே, இந்த மொட்டுகள் இருந்து கருக வேண்டாம்; கண்காணாச் சீமை சென்றேனும் கண்மணிகள் வாழட்டும்; கண்காணாச் சீமை சென்றேனும் கண்மணிகள் வாழட்டும்; காலமும் நிலைமையும் மீண்டும் ஒன்ற சேர்த்து வைத்தால் உச்சிமோந்து முத்தமிடுவோம்; அன்றி, இங்கேயே மடிய நேரிட்டாலும், நமது “குலக்கொடி’ அழிந்துபடவில்லை - எங்கோ ஓரிடத்தில், போரும் புகையும், சச்சரவும் சாவும் தீண்டாத ஓர் திருநாட்டிலே, நமது உயிரோவியங்கள் வாழ்கின்றன - என்று மனத்திருப்தியுடன் மண்ணில் புதைபடுவோம்; மாணிக்கங்கள் தப்பினால் போதும்; இன்பப் பெருக்குகள் இந்தத் துன்பப்பூமியிலிருந்து வேறிடம் சென்றால் போதும் - என்று எண்ணி, தலைவாரிப் பூ முடித்து, கன்னத்தைத் துடைத்து முத்தமிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “கண்ணே சென்றுவா! மணியே போய்வா! என் உயிரே, உன்னைப் பிரிகிறேன்! கர்த்தன் அருளால் மீண்டும் சேருவோம்!’ - என்று தழதழந்த குரலில் கூறி, ஆயிரக்கணக்கான குழந்தைகளை, பிரிட்டனிலிருந்து, கனடாவுக்கு கப்பலேற்றி அனுப்பிவைத்தனர்.

இவ்விதமான இரண்டுக்கண்களும், பொருள் இழப்பும், உயிர் இழப்பும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் விதமான அளவிலும், வகையிலும் நடைபெற்று, நாடுபல நாசமாயின போரின் காரணமாக!

அன்று அலர்ந்த மலரைக் கண்டு திங்கள் பலவாயினவாம் ஒரு வீரனுக்கு - களத்திலே கடும்போரிலே அவன் நெடுங்காலமாக ஈடுபட்டிருந்த காரணத்தால்! ஓர் நாள் களத்திலே சிறிது ஓய்வு கிடைத்தாம்; அதுபோது அவன், களத்தை விட்டுச் சிறிதுதூரம் சென்று, அழிவுக்கு மத்தியிலே, எப்படியோ தப்பிப் பிழைத்த ஒரு மலரைக் கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, அதைப் பறிக்கச் சென்றானாம்! வேவு பார்த்துக் கொண்டிருந்த எதிரிப்படையினன் ஒருவன், மலர் பறிக்கும்போது, அவனைச் சுட்டுக் கொல்ல, கரத்தின் மலரும், மார்பில் இரத்தமுமாக அந்த வீரன் இறந்துபட்டானாம்!

கண்ணீர் கண்த்தில் புரண்டோடச் செய்யும் காதைகள் பலப்பல, களம் தந்தது.

அத்தகைய கடும் போரிலே, சிக்கிச் சீரழிந்த நாடுகளெல்லாம், மீண்டும் வாழ்வு பெற்றுவிட்டன; அங்கெல்லாம் ஆளவந்த நாயகர்கள், எவ்வளவு அரும்பாடு பட்டிருந்தால், எத்துணைத் திறமையுடன் திட்டம் தீட்டி வெற்றி பெற்றிருந்தால், இவ்வளவு அழிவுக்குப் பிறகு அங்கு மக்களுக்கு வாழ்வுகிடைத்திருக்க இயலும் என்பதை எண்ணிப் பார்த்தால் போதும் - இங்கு ஏதோ மலையைக்குடைபிடித்து மந்தையைக் காத்திடும் போக்கிலே பணி புரிவதாகப் பேசும் காங்கிரஸ் ஆளவந்தாரின் திறமை வெட்ட வெளிச்சமாகிவிடும்.

போர் நம்மைத் தீண்டவில்லை - நினைவில் இருக்கட்டும்! களம், இங்கு இல்லை - கவனமிருக்கட்டும்! நாசக் குண்டுகள், நமது நகர்களைப் பதம் பார்க்கவில்லை; எல்லாவற்றையும் சினிமாப் படத்திலேதான் பார்க்கிறோம்; இதழ்கள் மூலம் “சேதி’ தெரிகிறது.

அணுகுண்டு விழுந்த ஜப்பானும், பிணமலை குவிந்த ஜெர்மனியும், இரத்த ஆறுஓடிய ரஷியாவும். இடிபாடுமயமான இங்கிலாந்தும், சீரழிந்த வேறு பல வேறு நாடுகளும் புயலுக்குப் பிறகு புள்ளினங்கள் கிளம்பிப் பண் இசைத்து, புதுக் கூடு கட்டிக் கொண்டு, பெடையுடனும் குஞ்சுகளுடனும் குதூகலமாக வாழ்வதுபோல, மீண்டும் வாழ்வின் ஒளியைப் பெற்றுவிட்டன!

போரே தீண்டாத இப்பொன்னாடு ஏழாண்டுக் காலமாக ஓர் புனித ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது; மற்ற எந்த நாட்டுத் தலைவர்களுக்கும் கிட்டாத மதிப்பும் செல்வாக்கும், இங்கு காங்கிரஸ் தலைவர்களுக்குக் கிடைத்தது.

போரிலே பெரும் பணியாற்றி, அழிய இருந்த பிரிட்டனைக் காப்பாற்றி, ஹிட்லரை முறியடித்த பெருமைக்கு உரியவராக இருப்பினும், சர்ச்சிலை, வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிடும் துணிவு, பரிட்டிஷ் ஜனநாயகத்துக்கு இருந்தது.

இங்கோ, கல்லை நிறுத்தினாலும் கட்டையைக் காட்டினாலும் காங்கிரஸ் என்றால் தட்டாமல் தயங்காமல், “ஓட்’ அளிக்க வேண்டும் என்றனர் தலைவர்கள; ஆஹா என்றனர் மக்கள்! ஒரு நாட்டு மக்கள் இதைவிட விளக்கமாக கட்சிப் பற்றையும் தலைவைர்களிடம் “பக்தி’யையும் காட்டியிருக்க முடியாது.

இவ்வளவுக்குப் பிறகு, எதிர்ப்போர் எவரும் இன்றி, அழைத்த இடம் வருவதற்கு ஒரு நாட்டு மக்கள் தயாராக இருந்த நிலையில், ஏழாண்டுக் காலத்தில் எதைச் சாதிக்க முடிந்தது? ஏன் வறுமையைத் துடைக்க முடியவில்லை? ஏன் மக்களின் வாட்டத்தைப் போக்க முடியவில்லை?

கேட்டால் மாமிப் பேச்சுப்பேசி, “மற்றநாடுகளிலேயும், மக்கள் சர்க்கார், மக்களுக்கான நன்மைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்க, ஆண்டு பலப்பல ஆயின, தெரியுமா? - என்று பேசுகிறார்கள்.

“நீங்கள் ஆச்சரியத்தால் வாய் பிளந்து நிற்கும் வண்ணம், வர்ணிக்கிறார்களே ரஷியாவைப்பற்றி, அங்கு சோவியத் ஆட்சி சோபிதத்தை ஏற்படுத்த எவ்வளவு ஆண்டு பிடித்தன தெரியுமா?” - என்று பேசி, அதனைத் தமது மேதையின் அறிகுறி என்று வேறு கருதி, தம்மைத் தாமே இத்தலைவர்கள் பாராட்டிக் கொள்கிறார்கள்.

ஜார் கால ரஷியாவுக்கும் - சோவியத் ரஷியாவுக்கும் இடையே வித்தியாசம் சாமானியமானதல்ல!

மலைப்பாம்பின் வாயிலே சிக்கிய குழவி போலத் தத்தளித்த நாடு, ஜார்கால ரஷியா! புலிக்குட்டியுடன் விளையாடிடும் வீரச் சிறுவன் போன்றது சோவித் ரஷியா!

பாலைவனம், ஜார் கால ரஷியா! சோலைவனம், சோவியத்!

இல்லாமையை எடுத்துரைத்து, ஏண் என்று கேட்கவும் துணிவு தோன்றாது, வாயில்லாத் பூச்சிகளாக மக்கள் இருந்தது, ஜார் ரஷியா! இல்லாமையை ஏன் அனுமதிக்கிறீர்கள்; அனைவரும் இன்புற்றிருக்க வழி இருக்கிறதே; ஏன் உங்களுக்குத் தெரியவில்லை - என்று உலகை நோக்கிக்கேட்கும் உன்னத நிலையில் இருக்கிறது சோவித் ரஷியா!

இந்த மகத்தான மாறுதலை, ‘மறு பிறவி’ யைக்காணச் சோவியத் மக்கள் முயன்றகாலை, கவிழ்ந்த ஜார் ஆட்சியை மீண்டும் காண எண்ணி நடத்தப்பட்ட உள்நாட்டுச் சதிகளும், வெளிநாட்டுச் சதிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! இவ்வளவையும் முறியடித்துவிட்டு, சோவியத் ரஷியா இன்று வளமும் வசீகரமும் பெற்று விளங்குகிறது.

இந்தியாவைப் பிரிட்டன், சுரண்டிக் கொழுத்தபோதிலும், விடுதலை தரப்பட்டபோது, இந்தியா இருந்தநிலைமை, புரட்சிக்காரரிடம் தரப்பட்ட ரஷியா போன்றதல்ல!

சட்டமும் சமாதானமும் குலையாமல், நிர்வாக இயந்திரம் பழுதுபடாமல், பொருளாதார அமைப்பு முறிந்து போகாமல், இந்தியா, காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!

படைகள் இருந்தன; பாசறைகள் இருநத்ன; தளவாடங்கள் இருந்தன - எதையும் தகர்த்து விடவில்லை.

சுண்டைக்காய் அளவுள்ள போர்ச்சுகல் கூறுகிறது - கோவா எங்கள் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்படும் கிளர்ச்சி மும்முரமாக்கப்பட்டால், கொளுத்திக்கருக்கி, கோவாவைக் சுடுகாடு ஆக்கியபிறகே, வெளியேறுவோம்’ -? என்று!

வெள்ளைக்காரனோ, விடுதலை விழழ நடத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கூடத்தயாரித்துக் கொடுத்துவிட்டுத்தான் வெளி ஏறினான். - விமானம் கொடுத்தான்; அரசியல் நிர்வாக முறைகளைக் கொடுத்தான் - இவ்வளவு வசதிகளுடன் , ஒரு ஏகாதிபத்யம் தன் பிடியில் சிக்கியிருந்த நாட்டை விட்டுச் சென்றது, உலக அதிசயங்களிலே ஒன்று என்றே வரலாறு கூறும்!

நாட்டைக் காடாக்கிவிட்டுப் போனானில்லை! - திக்குத் தெரியாத காட்டிலே, தீ எப்பக்கமும் கொழுந்துவிட்டு எரியும் போது, எங்கு செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியாமல் திகைக்கும் சிறார் போல, மக்களைவிட்டு விட்டுச் செல்லவில்லை!

வளம், வளரும் முறை - இவை குறைபாடாவண்ணம் தந்து சென்றான். இதைக்கெடாமல் பாதுகாத்துக் கொண்டு, வளத்தை வளரச்செய்து, அதனை மக்கள் அனைவரும் பெற்றிடும் முறைகண்டு, துரைத்தனம் நடத்தும் “வேலை’ மட்டுமே காங்கிரசாருக்கு இருந்தது!

போதுமான திறமையும், தூய்மையான கொள்கையும் இருந்திருந்தால் போதும் - இந்த ஏழாண்டுக் காலத்திலே, எழில் குலுங்கச் செய்திருக்கலாம்! வளம் பெறும் வழி எது என்பதைக் கண்டறிவதிலே தெளிவும், தைரியமும் இருந்திந்தால் போதும் - இந்த ஏழாண்டு காலத்திலே, மக்களுக்கு வாழ்வளித்திருக்கலாம்!!

இப்போதோ, வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு மக்கள், வாய்மூடிக்கிடக்கின்றனரேயொரிய, இந்த ஏழு ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைக்கண்ட மக்கள், வெள்ளைக்காரன் ஆயிரம் மடங்கு மேலான ஆட்சி நடத்தினான் என்று எண்ணி ஏங்கவே செய்கிறார்கள்.

மடமையால் கொடுமைபுரியும் வேறுபல ஏகாதிபத்தியங்கள் போல, பிரிட்டன் நடந்துகொண்டிருந்தால், இந்தியாவை, பல தலைமுறைகள் மக்கள் வாழ்வதற்கு இலாயக்கற்றதாக்கி விட்டிருந்திருக்க முடியும்.

கட்டுப்பாடும், கண்ணியமும், திறமையும், பொது நல வேட்கையும் கொண்ட எந்தக் கட்சியாலும் நடத்திச் செல்லக்கூடிய, நேர்த்தியான தாக்கக்கூடிய, சூழ்நிலைகொண்ட நாடுதான், இந்தத் தலைவாகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஓட்டைப்பண்டம், நனைந்து போன பிறகு, புழுத்துப் போன அரிசி, பொத்தல் கூரை - என்ற நிலையில் அல்ல - அடுத்தவேளைச் சமையலுக்குத் தேவையான பண்டங்களைச் சேகரம் செய்துவைத்துவிட்டு, உப்பு, புளி, காரம் கூட்டும் முறையையும், பதத்தையும் கூடச்சொல்லிவிட்டுச் செல்லும் முறையிலே, இந்தியா காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைக்கப்
பட்டது!

பார்வை பழுதான கிழவி, தள்ளாடித் தள்ளாடிச் சென்று, காய்ந்த விறகின்மீது குளிர்ந்த நீரைக்கொட்டி விட்டு அரிசியைக் கீழே கொட்டிக் குப்பையாக்கிவிட்டு, பாண்டத்தைத் துடைக்கும்போது, ஓட்டையாக்கிவிட்டு, இவ்வளவும் பார்வை பழுதானதால் ஏற்பட்ட விபரீதம் என்பதையும் அறியாமல் - எப்படிச் சமைப்பது, என்ன இருக்கிறது இங்கே; எல்லாம் ஒரே குழப்பம் - என்று பிறர்மீது குறை கூறுவதுபோல இருக்கிறது காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு!
இந்தியா இவர்களிடம் தரப்பட்டபோது எப்படிப் பட்ட நிலைமை இருந்தது என்பதைச் சற்றே எண்ணிப் பார்த்தால், யார் குற்றவாளிகள் என்பது பிளக்கமாகிவிடும்.

1947-ம் ஆண்டு ஜூன் மாதம் 30ந்தேதி, பிரிட்டன் விட்டுச் சென்ற இந்தியாவிலே ரிசர்வ் பாங்கியில், தங்கமாகவும் ரொக்கமாகவும் இருந்த தொகை 1,179,7400,000 ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

மைனர் சொத்தை நிர்வாகம் செய்யும் மானேஜர் எவ்வளவு சுரண்டிக்கொண்டாலும், நஞ்சை புஞ்சையையும், தோட்டம் காட்டையும், மாளிகை வீடுகளையும், ஏதும் செய்ய இயலாமல் மைனருக்கு ஆளும் வயது வந்ததும் அவனிடம் ஒப்படைத்துவிடுவது போல, பிரிட்டன், இந்தியாவை விடுதலை பெறச் செய்தபோது. சுரண்டியதுபோக ரிசர்வ் பாங்கியில் மட்டும், 1,179,74,00,000 ரபாய் வைத்துவிட்டுச் சென்றது.

கோலை உரித்துச் சுளையைச் சாப்பிடச் சொல்வது போல இருக்கிறதல்லவா, நாட்டை ஆளும்படி, காங்கிரசாரிடம் இந்தியாவை, பிரிட்டன் விட்டுச் சென்றது!

பிரிட்டனிலே, இந்தியாவுக்காக சேகரமாகி இருந்த ஸ்டர்லிங்க கடன் 1733 கோடி ரூபாய் இருந்தது! போருக்கு முன்பிருந்த கடன் திரும்பப் பெற்ற வகையில் ஒரு 420 கோடி ரூபாய் இருந்தது; டாலர் சேமிப்புக் குவியலில் 115 கோடி இருந்தது என்றெல்லாம் கணக்கிட்டிருக்கிறார்கள.

இவ்வளவு பணத்தோடு இந்தியாவை, பிரிட்டன், காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றது!

இந்த ஏழாண்டுக்கால ஆட்சியின் பலன், இந்தியா கடந்கார நாடு ஆகி, கண்ட கண்ட நாட்டிடம் பல்லிளித்துக்கொண்டு கிடப்பதுதான்! யார் மறுக்க முடியும் இதனை?

அடுத்த வேளைச் சோற்றுக்கு அன்னபூரணி சத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல, எதற்கும், அமெரிக்காவிடமிருந்து எவ்வளவு கிடைக்கும்’ என்று ஆவலோடு காத்துக்கிடக்கும் நிலைமையே ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

பிரிட்டன், இந்தியாவை காங்கிரஸ் தலைவர்களிடம் விட்டுச் சென்றபோது, பொதிமாடுமீது சரக்கு ஏற்றிச் சென்று வியாபாரம் செய்யும் முறையும், புறாகாலிலே கட்டி கடிதம் அனுப்பும் முறையும் கொண்ட ‘விக்ரமாதிததிய’ ஆட்சி நிலையை அல்ல விட்டச் சென்றது.

8,33,05,00,000 மூலதனம் கொண்டது, 34,002 மைல் அளவுள்ளதுமான 35 ரயில்வே அமைப்புகளைத் தந்து சென்றது என்று கூறுகிறார்கள்.

தண்டவாளத்தை விட்டு ரயில் கவிழாமலும், குறித்த நேரத்தில் ரயில் புறப்படவும் வந்துசேரவும் பார்த்துக் கொண்டால் போதும். வேலையை அடியிலிருந்து துவக்க வேண்டிய தொல்லையைக் காங்கிரஸ் தலைவர்களுக்கு வைத்து விட்டுப் போகவில்லை!

ஒரு முற்போக்கடைந்த, நாகரீக வளர்ச்சி பெற்ற நாடு, எந்த அளவு வசதி பெற்றிருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு ரயில்வே வசதி இருந்தது.

24 பல்கலைக் கழகங்கள், 456 கல்லூரிகள், 197 தொழில் துறைப் பள்ளிகள், 18851 உயர்தரப் பாடசாலைகள் 190,81 ஆரம்பப் பள்ளிகள். 16207 கைத் தொழிற் பள்ளிகள் இருந்தன - பிரிட்டன் ஒப்படைத்த இந்தியாவில்!

ஆற்றோரத்தில், ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு தாடியும் தடியும்கொண்ட குரு ‘சமித்து’ பொறுக்கிவந்த பிறகு, சீடர்களை உட்காரவைத்துக்கொண்டு பொருளைப் பிறகு கவனிக்காலாம்; இப்போது உரத்த குரலில் சுலோகத்தைச் சொல்லுங்கள் என்று பாடம்’ கற்றுக்கொடுத்த நிலை அல்ல - 15,63; 046 மாணவர்களுக்கு புது உலகக் கல்வி முறை தரும் 2;27.013 கல்வி நிலையங்களைத் தந்து விட்டுச் சென்றனர்!

கூட்டுறவு இயக்கம்மட்டும், எப்படி இருந்தது என்று எண்ணுகிறீர்கள்?

1,63875 கூட்டுறவுச் சங்கங்கள் இருந்தன! தொழிற் சங்கங்கள் 16151. மேற்படி சங்கங்களிலே உறுப்பினராக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 16,62,929.

பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் பார்ப்பதுபோல இந்தச் சிறு குறிப்புகளைக் காட்டினோம். விரிவாகக் கவனித்தா, ஏழாண்டுக் காலத்தில், இவர்கள் பாழாக்கியது எவ்வளவு என்பது தெரியும், திகைப்புத் தாக்கும்!

கான்ஸ்டபிளிலிருந்து கவர்னர் வரையில், கார்டு முதற்கொண்டு கம்பியில்லாத் தந்தி வரையில், பஞ்சாயத்து முதற் கொண்டு பார்லிமெண்டு வரையில் இருந்தது - மெருகுகூடக் குலையாமல்!
இவ்வளவு வசதியுடன் தரப்பட்ட நாட்டைத் திறமையுடன் ஆண்டு, மக்களுக்கு நலன்கிடைக்கச் செய்வதற்குத் தவறிவிட்ட நாட்டின் நாயகர்கள், உண்மையை மறைக்கும் மாமிபோலப் பேசுகிறார்கள்.

நாடு சுடுகாடாக்கப்பட்டு இவர்களிடம் தரப்பட்டது போலவும், மலைமலையாகக் குவிந்துபோயிரந்த எலும்புகளை அப்புறப்படுத்தும் வேலையிலிருந்து துவங்கி, இவர்கள் பாடுபடுவதுபோலவும், சட்டம் சரைக்கவும், நிர்வாக இயந்திரம் அமைக்கவும், அதனை, நடாத்திச் செல்லப் பலருக்குப் பயற்சி அளிக்கவும், மெத்தச் சிரமப்படுத்துவது போலவும், இதற்கக் காலம் பிடிக்கும் என்றும் பேசி ஏய்க்கிறார்கள்.

கார்டு அளவு முதற்கொண்டு, கான்ஸ்டபிளுடைய உடை வரையிலே, துளிமாறுதலும் செய்யவேண்டிய வேலைகூட இவர்களுக்கு ஏற்படவில்லை!! நோட்டு அளவிலிருந்து கோர்ட்டு முறை வரையிலே, இருந்ததை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் - எதைப் புதிதாகக் கண்டுபிடித்துப் புகுத்தினார்கள்; எதிலே திறமை தனித்தன்மையுடன் தெரிகிறது; நெஞ்சில் கை வைத்து, நேர்மையாளர்கள் பதிலளிக்கவேண்டும். அமைச்சர்கள் அளிக்கும் பதில்கள் தயாரிக்கப்படும் முறை முதற்கொண்டு ஆகாய விமானம் ஓட்டும் பயிற்சி வரையிலே, “அவன்’ தந்ததைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.